arrow_back
நெஞ்சமெல்லாம் காதல்…… அத்தியாயம் 1

அத்தியாயம் 1

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

நெஞ்சமெல்லாம் காதல்

 

அத்தியாயம் – 1

 

 

 

உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவன் உதிக்கத் துவங்கி சில மணி நேரங்களாகி விட்டிருந்தது. வாகனங்கள் எழுப்பும் ஒலியும், பேச்சுக் குரல்களும் ஜனசந்தடியைக் காட்டிக் கொண்டிருந்தன.

 

சக்தி மிக அவசரமாக கல்லூரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். நேற்றிரவு எழுதி முடித்து வைத்த அசெண்ட்மெண்ட் பேப்பர்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து எடுத்துக் கொண்டாள். அவளுக்கான மதிய உணவை டிபன்பாக்ஸில் கட்டி வைத்திருந்தாள் தனலெட்சுமி. சக்தியின் அம்மா. வீட்டில் ஒரு பழைய தையல் மிஷின் வாங்கிப் போட்டு அக்கம்பக்கத்தினருக்கு துணிகள் தைத்துக் கொடுப்பாள். அதில் வருகின்ற வருமானத்தை அன்றாட செலவிற்கு பயன்படுத்திக் கொள்வாள். சக்தியின் தந்தை வேணுகோபால் ஒரு ஸ்பின்னிங் மில்லில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கைப்பாட்டை நகர்த்துவதற்கே சிரமப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் மகள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள். ரொம்பவே சிக்கனமாய் குடும்பம் நடத்தினாலும் மாத கடைசியில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எது எப்படியாகிலும் மகளிற்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் வேணுகோபால்.

 

நகரத்திலேயே கொஞ்சம் பெரிய கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்த போது மனத்திற்குள் மகளைப் பற்றி பெருமையாக நினைத்தாலும் கல்லூரியின் கட்டணத் தொகையை நினைத்து கலங்கினார். ஆனாலும் தன் சேமிப்புகளைத் திரட்டி கல்லூரி கட்டணம் முழுவதையும் செலுத்தினார்.

 

அப்படி சேர்ந்த கல்லூரிக்குத் தான் சக்தி புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முழுப்பெயர் சக்தி காமாட்சி. இருபாலரும் படிக்கும் கல்லூரியில் பி.பி.ஏ (B.B.A) படித்துக் கொண்டிருந்தாள். தற்போது தான் இரண்டாம் வருடத்தின் இரண்டாம் பருவம் துவங்கி இருந்தது. அதாவது செகண்ட் இயரின் செகண்ட் செமஸ்டர் ஆரம்பம் ஆகி இருந்தது. சக்தி தன் டிபன்பாக்ஸை எடுத்து பையில் வைத்துக்கொண்டு “அம்மா, நான் காலேஜீக்கு கிளம்பிட்டேன், போயிட்டு வரேன்” என்றாள். தனலெட்சுமி காலையிலேயே தன் தையல் வேலைய துவங்கி இருந்தாள்.

 

சுழன்று கொண்டிருந்த தையல் மிஷினை கையால் நிறுத்தி விட்டு, நிமிர்ந்து “பாப்பா, எல்லாத்தையும் எடுத்துகிட்டியா? டிபன்பாக்ஸை எடுத்துகிட்டியா?” என்று கேட்டாள். சக்தி சற்றே எரிச்சலுடன் “அய்யோ மா, அதெல்லாம் எடுத்துக்கிட்டேன் மா, நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு தன் அழகிய மென்மையான பாதங்களை காலணிகளுக்குள் திணித்துக் கொண்டு தெருவில் இறங்கி விடுவிடுவென நடக்கத் துவங்கினாள்.

 

சக்தியின் வீட்டிலிருந்து கல்லூரியின் தூரம் சுமார் 1.5 கிமீ இருக்கும். பேருந்து கட்டணத்திற்கு கூட அவளிடம் பணம் இருக்காது. அதனால் தினமும் நடந்தே கல்லூரிக்குச் செல்வாள். மாதவிலக்கு ஆகும் நாட்களில் கால்களும், இடுப்பும் மிகவும் வலிக்கும். அப்போது இலவச பேருந்திற்காக காத்திருந்து அதில் செல்வாள். கல்லூரி பேருந்தில் செல்வதைப் பற்றி அவளால் நினைத்தே பார்க்க முடியாது.

 

சக்தி வேகமாக நடக்கத் துவங்கினாள். காலையில் பர்ஸ்ட் ஹவர் ஆரம்பிக்கும் முன்பே போய் விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓட்டமும் நடையுமாய் போய் கொண்டிருந்தாள். வகுப்பு துவங்குவதற்கு முன்பே சென்றால் தான் கவினுக்காக அவள் எழுதி வைத்திருக்கும் அசெண்ட்மெண்ட்டை அவனிடம் கொடுத்து சரி பார்க்கச் சொல்ல முடியும் என்று நினைத்தாள்.

 

அவள் நினைத்தது போலவே வகுப்புகள் துவங்கப்படுவதற்கு முன்பேயே கல்லூரியை அடைந்து வகுப்பறைக்குச் சென்றாள். ஒரு சில மாணவிகளும், மாணவர்களும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். கவினையோ, அவனது தோழர்களையோ காணவில்லை. இவனுக்காக நாம வேகமாக வந்தா, இவன ஆளையே காணோமே என்று நினைத்தபடியே அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களிலேயே கவினும், அவனது தோழர்களும் சிரித்தபடியே வகுப்பறைக்குள் நுழைந்தனர். வேலையெல்லாம் நம்ம தலையில கட்டிட்டு கேன்டீனுக்குப் போயி அரட்டை அடிச்சிருக்கு நாயி என்று மனத்திற்குள் திட்டிக் கொண்டே அசெண்ட்மெண்ட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 

கவின் அடர்நீல நிற சட்டையும், அதற்கு மேட்ச்சாக வெளிர் நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். மெல்லிய கோடு போன்ற மீசையும், ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் அவன் அழகிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. நிமிர்ந்த நடையோடு வருபவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

 

வசீகரிக்கும் புன்னகையோடு அவள் அருகில் வந்து “ஹாய், குட்மார்னிங், அசெண்ட்மெண்ட்ட முடிச்சிட்டியா, வெரி குட்” என்ற படியே அவள் நீட்டிய பேப்பர்களை எல்லாம் வாங்கிக் கொண்டான். சக்தி மெதுவாய் “நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். ஆனா நீ ஒரு தடவை செக் பண்ணிக்கோ” என்றாள். கவின் இல்லாதபோது அவனிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்திருப்பாள். ஆனால் அவனைப் பார்த்ததும் யோசித்து வைத்திருந்தவை எல்லாம் மறந்து விடும்.

 

இப்போதும் அப்படியே தடுமாறினாள். ஆனால் அவனை கண்டதும் தான் பதற்றமடைவது வெளியில் தெரிந்து விடக் கூடாது என நினைத்ததால் தலையை குனிந்து அக்கவுண்ட்ஸ் புக்கை விரித்தாள். கவின் “சகி, சூப்பரா எழுதியிருக்க, தேங்க் யூ” என்றான். எல்லோரும் அவளை சக்தி என்று அழைத்தாலும், கவின் மட்டும் எப்போதும் சகி என்றே அழைப்பான். கவின் அவளை சகி என்று அழைப்பது சக்திக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.

 

கவின் மீது சக்திக்கு காதல் இருந்தாலும் அதை மனத்திற்குள்ளேயே வைத்திருந்தாள். கவின் வகுப்புத் தோழிகளுடனோ அல்லது வேறு டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த பெண்களுடனோ பேசி சிரிக்கும் போது அவன் அழகை மிகவும் ரசிப்பாள். கவினுக்கு தேவையான நோட்ஸ் அனைத்தையும் இவளே எழுதி கொடுப்பாள். அசெண்ட்மெண்ட் எழுதுவதன்றால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டாபிக் கொடுப்பார்கள். சக்தி தனக்கு கொடுக்கப்பட்ட டாபிக்கிற்கும் எழுதி முடித்து விட்டு, கவினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டாபிக்கிற்கும் நோட்ஸ் எடுத்து எழுதுவாள். அவள் கவினை நேசிப்பது அவளை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

 

சக்திக்கு பெரியதாக நட்பு வட்டம் எதுவும் கல்லூரியில் இருக்கவில்லை. அவளிடம் இனிமையாக பழகும் ஒரே தோழன் கவின் மட்டுமே. கவின் இதுவரையிலும் ஒரு முறை கூட சக்தியிடம் கோபமாக பேசியதேயில்லை. அதனால் கவின் மீது எப்போதும் சக்திக்கு நம்பிக்கை இருந்தது.

 

சக்திக்கு அவளின் அம்மா எப்போதும் எளிமையான உணவுகளையே மதிய உணவாக கொடுத்து அனுப்புவாள். அதை தனியாக டைனிங் ரூமில் அமர்ந்து சாப்பிடுவாள் சக்தி. எப்போதும் கல்லூரி நூலகத்தில் இருந்து ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பாள். நெருங்கிய நண்பர்கள் குழு இல்லாததால் தன் தனிமையைப் போக்கிக் கொள்ள புத்தக வாசிப்பைப் பிடித்துக் கொண்டாள்.

 

கல்லூரி கேன்டீனில் தான் தினமும் கவினும் அவன் தோழர்களும் மதிய உணவை சாப்பிடுவார்கள். கவினுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதை பலமுறை சக்தி நேரிலேயே பார்த்திருக்கிறாள். ஆனால் அது பற்றி அவனிடம் எதுவும் கேட்டதில்லை.

 

மதிய உணவிற்குப் பிறகு பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் க்ளாஸ் நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் அமருவார்கள். திடீரென்று மாணவர்கள் பக்கம் சிரிப்பும், சிறிய சலசலப்பும் கேட்டது. சக்தி திரும்பிப் பார்த்தாள்.

 

கவினும் அவன் நண்பர்களும் சிறிய பேப்பரில் ஏதோ எழுதி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கவினின் முகம் மட்டும் பிரகாசமாய் இருந்தது. சக்தி லேசாய் தலையைத் திருப்பி என்ன? என்று சைகையில் கேட்டாள். கண்களை சிமிட்டி ஒன்றுமில்லை என்று பதில் கூறியவனை மிகவும் இரசித்தாள். நெற்றியில் விழுந்த முன் உச்சி முடிகளை விரல்களால் கோதியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

 

சக்திக்கு கல்லூரியில் சில தோழிகள் இருந்தார்கள். அவர்கள் வேறு வேறு துறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் சக்தியின் வீடு இருக்கும் பகுதியில் தான் அவர்களும் வசித்து வந்தார்கள். அதனால் தினமும் மாலை வேளையில் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டே வீடு திரும்புவாள். அன்றைக்கு வீடு திரும்பிய பிறகு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். சக்தி சிறிய டப்பாக்களில் மண்ணும், தேங்காய் நார் துகள்களும் சேர்த்துப் போட்டு அதில் சிறுகீரை, கொத்தமல்லி, அரைக் கீரை முதலியவைகளை வளர்த்துக் கொண்டிருந்தாள். உரிய பருவம் வந்ததும் அவைகளை அறுவடை செய்து தனலெட்சுமி சமையலுக்குப் பயன்படுத்துவாள். மாலையில் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது தான் வகுப்பில் கவின் சிரித்ததை நினைத்துப் பார்த்தாள். அவன் எப்போதும் இப்படி குறும்பு செய்து மாட்டிக்கொள்ளும் ரகமில்லை. இன்றைக்கு அவன் சிரிப்பும், நடந்து கொள்ளும் விதமும் முற்றுமாய் வேறாய் இருந்தது என்பதை உணர்ந்தாள்.

 

என்றும் இல்லாமல் இன்று மட்டும் கவினின் முகம் ஏன் இவ்வளவு பிரகாசமாய் இருந்தது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். எப்படி சிந்தித்தாலும் சக்திக்கு கவினின் சந்தோஷத்திற்கான காரணம் மட்டும் தெரியவேயில்லை. அந்நேரத்தில் சக்தியின் அத்தை பூமாரி இவர்களின் வீட்டிற்கு வந்தாள்.

 

பூமாரி தனக்கான ப்ளவுஸ்களை எல்லாம் தனலெட்சுமியிடம் தான் தைக்கக் கொடுப்பாள். அந்த காரணத்தைக் கூறிக் கொண்டு அவள் அடிக்கடி சக்தியின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். ஆனால் உண்மையிலேயே பூமாரியின் மனத்தில் தன் மகன் செல்வத்திற்கு சக்தியை திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இருந்தது. தன் தங்கை இந்த எண்ணத்தோடு தான் வீட்டிற்கு அடிக்கடி வருகிறாள் என்று சக்தியின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால் சக்தியின் மனத்தில் கவின் வந்த பிறகு அத்தையின் பேச்சு அவளுக்கு அறவேப் பிடிக்கவில்லை.

 

முன்பெல்லாம் அத்தை வந்ததும் ஓடிச் சென்று அருகில் அமர்ந்து கொண்டு வம்பலப்பவள், இப்போதெல்லாம் அத்தையைக் கண்டால் படிப்பது போல் புத்தகத்தை வைத்துக் கொள்ளத் துவங்கி விட்டாள். அத்தையை ஏதாவது விசேஷ வீடுகளில் பார்த்து விட்டால் நைசாக நழுவி விடுவாள்.

 

இன்று எதிர்பாராமல் அத்தையின் வரவு இருந்ததால் சக்தி சற்றே தடுமாறினாள். ஏதாவது எழுதுவதைப் போல் அமர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தவளை “சக்தி” என்ற அவள் அம்மாவின் குரல் தடுத்தது. சற்று எரிச்சலோடு “என்னம்மா?” என்றாள். அவள் அம்மா “போயி அத்தைக்கு டீ போட்டு கொண்டு வா” என்று கூறி விட்டு “வாங்க அண்ணி, ப்ளவுஸை தைச்சு வைச்சுட்டேன். வாங்கிக்கலாம். முதல்ல உட்காருங்க” என்று அளவளாவத் துவங்கினாள். பூமாரியோ “இருக்கட்டும், தனம். எங்க என் மருமகள காணோம்?” என்று கேட்க, சக்திக்கு கோபம் வந்தது. மருமகளாம், மருமகள். நான் ஏன் இவங்களுக்கு மருமகளாகிறேன். நான் என் கவினை கட்டிக்கிட்டு அவங்கம்மாவுக்கு மருமகளாவேன் என்று மனத்திற்குள் நினைத்தபடியே டீ போட்டுக் கொண்டிருந்தாள்.

காலம் அனைவருக்கும் வேறு கணக்கு வைத்திருப்பதை அறியாமல் சிரிப்பு சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்கும் படி பேசிக் கொண்டிருந்தனர்.