arrow_back
ஸ்தம்பித்தேனடி உன் கண்களால் அத்தியாயம் 1

அத்தியாயம் 1

visibility 8
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

01

***** விஞ்ஞான மற்றும் கலைக்கல்லூரி  

***** விஞ்ஞான மற்றும் கலைக்கல்லூரி வளாகம் வழமைக்கு மாறாக அன்றைய பொழுது மிகவும் பரபரப்பாகவும், ஆரவாரமாகவும் காணப்பட்டது, அதற்கான காரணம் அன்றைய நாளில் அந்தக் கல்லூரியில் முதல் வருடத்திற்காக ஒவ்வொரு பிரிவிலும் புதிய மாணவர்களை இணைத்துக் கொண்டது தான்.

 

   இதுநாள் வரையிலும் பள்ளிக்கூடத்தை மாத்திரமே பார்த்திருந்து விட்டு இப்போது புதிதாக ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்கிற பூரிப்போடு ஒரு சில மாணவர்களும், பெற்றோரின் கட்டாயத்திற்காக கடமைக்கென படிக்க வந்திருக்கும் ஒரு சில மாணவர்களும், இன்னும் பல மேற்படிப்புகளை முடித்து என்னுடைய வாழ்க்கையில் உச்சம் தொட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஒரு சில மாணவர்களுமென அந்தக் கல்லூரி வளாகம் பல வகையான எண்ணங்களை கொண்ட மாணவர்களை அன்றைய பொழுதில் தனது வளாகத்திற்குள் நிறைத்து வைத்திருந்தது.  

 

ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு விதமான எண்ணங்களுடன் அந்தக் கல்லூரிக்குள் நடமாடிக் கொண்டிருந்த தருணம், தன்னுடைய புல்லட் பைக்கில் அந்த கல்லூரிக்குள் வந்து சேர்ந்திருந்தான் கௌதம்.

 

  கௌதம் இயல்பாகவே படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவன், அந்தக் கல்லூரியில் உயிரியலுக்கான விஞ்ஞான இளமானிக் கற்கை நெறியில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறான்.  

 

அவனுக்கு சிறு வயது முதலே தன்னைச் சுற்றி இருக்கும் சூழல் மற்றும் அது சார்பான விடயங்களை தேடிப் படிப்பதற்கு மிகவும் பிடிக்கும், அதனாலேயே பிளஸ் டூவில் அதற்கேற்ப பாடங்களைத் தெரிவு செய்தவன் தனது மேல் படிப்பிலும் அது தொடர்பான பாடங்களையே கற்க எண்ணியிருந்தான்‌.

 

  கௌதமின் தந்தை ஈஸ்வர் சொந்தமாக ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து நடத்தி வர, அவரது மனைவி வள்ளி வீட்டுப் பொறுப்புக்களையும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது கணவனுக்கு துணையாக அவரது கடை வேலைகளில் தன்னாலான உதவிகளையும் செய்து வருவார்.  

 

கௌதமிற்கு கூடப் பிறந்தவர்கள் இருவர், ஒருவன் கிருஷ்ணா மற்றையது சுந்தரி.   கிருஷ்ணா இந்த வருடம் தான் பிளஸ் டூவில் இணைந்திருக்க, கௌதமின் தங்கை சுந்தரி இப்போது தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

  நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேலான நிலையில் கௌதமின் குடும்பத்தின் நிலைமை இருந்தாலும் அவன் தனது குடும்பத்தை தானே எப்போதும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், அதற்காக நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று எப்போதும் எண்ணிக் கொள்வதுண்டு.

 

  இன்றும் அப்படியே புதிய மாணவர்களை அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்த்ததும் தான் முதல் நாள் இந்தக் கல்லூரிக்குள் நுழையும் போது இவர்களைப் போலத்தான் பல எதிர்பார்ப்புகளுடன் நுழைந்து இன்று அவற்றை சரியாக நிறைவேற்றி வருகிறோம் என்கிற மன நிறைவான எண்ணத்துடன் நடந்து சென்று கொண்டிருந்த தருணம், “ஏய் ஜுனியர் தம்பி, இங்கே வா” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.  

 

“ஜுனியரா, ஒருவேளை என்னைத்தான் கூப்பிட்டாங்களோ? சேச்சே, இருக்காது நான் தான் தர்ட் இயர்ன்னு இந்த காலேஜில் எல்லோருக்கும் தெரியுமே” அந்தக் குரலுக்கான அழைப்பு தனக்கில்லை என தனக்குள்ளேயே பேசிக் கொண்டபடி கௌதம் தங்கள் வகுப்பை நோக்கிச் செல்ல முயன்ற வேளை,   

தீடீரென ஒரு பையன் அவன் எதிரில் மூச்சு வாங்க வந்து நின்றவாறே, “ஏம்பா தம்பி, உன்னைத் தான் அங்கே கூப்பிடுறாங்க, கொஞ்சம் சீக்கிரமா வாப்பா, நீ வந்தால் தான் எங்களுக்கு அந்த பொண்ணுங்க கிட்ட இருந்து விடுதலை கிடைக்கும்” என்று கூற,   

அவனோ, “பொண்ணுங்களா?” என்றவாறே அந்தப் பையன் கை காண்பித்த புறமாகத் திரும்பிப் பார்க்க, அங்கே இரண்டு பெண்கள் தங்கள் முன்னே காற்றில் சைக்கிள் ஓட்டுவது போல் பாவனை செய்தபடி நின்று கொண்டிருந்த இரு பையன்களை மிரட்டுவது போல ஏதோ பேசிக் கொண்டு நின்றனர்.

 

  ‘இந்தப் பொண்ணுங்களை இதற்கு முன்னாடி இந்தக் காலேஜில் நான் பார்த்ததே இல்லையே, யாரு இவங்க?’ கௌதம் அந்தப் புதிய பெண்கள் இருவரையும் சற்றே ஆராய்ச்சியாகப் பார்த்த வண்ணம் அவர்கள் எதிரில் சென்று நிற்க,

  அவர்களில் ஒருத்தி அவனது கையிலிருந்த நோட்டை வாங்கி புரட்டிப் பார்த்தபடியே, “உனக்கு ஒரு தடவை கூப்பிட்டா காதில் கேட்காதா? உனக்கு தனியாக இன்விடேஷன் வைச்சாத்தான் வருவீங்களோ?” என்று கேட்க, அவனோ அவளது கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவளது முகத்தையே குழப்பமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.  

 

“ஏய் மிஸ்டர், என்ன ஒரு சீனியர் கேள்வி கேட்கிறேன், பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே மரம் மாதிரி நிற்கிற, உனக்குப் பேச வராதா?” அந்தப் பெண்ணவளின் கேள்விக்கு சிறு புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்தவன்,

    “எனக்குப் பேச்சு எல்லாம் ரொம்ப நல்லாவே வரும், ஆனா நீங்கதான் யாருன்னு தெரிய மாட்டேங்குது, கொஞ்சம் உங்க பேரு அன்ட் நீங்க எந்த டிபார்ட்மெண்ட்ன்னு சொல்ல முடியுமா?” என்று வினவ,   

அவளோ அவனை முறைத்துப் பார்த்தபடியே, “ஒரு சீனியர் கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று கேட்டிருந்தாள்.  

 

“சீனியரா? ஆனா நான் கடந்த இரண்டு வருஷமாக உங்களை இந்தக் காலேஜில் பார்த்ததே இல்லையே, இல்லை ஏன் அப்படி சொல்லுறேன்னா நான் தர்ட் இயர் ஸ்டூடண்ட், என்னோட பேட்ச்மேட்ஸ் எல்லோரையும் எனக்குத் தெரியும், அது மட்டுமில்லாமல் எங்க ஜுனியர் பேட்ச் ஆளுங்களையும் எனக்குத் தெரியும், இது இரண்டையும் தவிர்த்து இந்தக் காலேஜில் புதிதாக ஆளு வந்தாங்கன்னா அது பர்ஸ்ட் இயராகத் தான் இருக்கணும், ஆனா நீங்க ஆல்ரெடி பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸை வைச்சு செஞ்சிட்டு இருக்கீங்களே, அதுதான் ஒரு சின்ன சந்தேகம்” என்று கௌதம் கூறி முடித்த அடுத்த கணமே தனது கையிலிருந்த அவனது நோட்டின் முன்பக்கத்தை எடுத்துப் பார்த்தவள் அதில் ‘கௌதம், தர்ட் இயர்’ என்று எழுதியிருந்ததைப் பார்த்ததுமே தனது அருகில் நின்று கொண்டிருந்தவளின் தோளில் இடித்து அந்த நோட்டைப் பார்க்கும் படி அவளை ஜாடை காட்ட, அவளும் அந்த நோட்டைத் திரும்பிப் பார்த்து விட்டு தன் அதிர்ச்சியான முக பாவனையை மறைத்துக் கொண்டே அவளை அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி அழைத்துக்கொண்டு ஒரு மரத்தின் பின்னால் சென்றிருந்தாள்.  

 

அவர்கள் இருவரும் சிறு பதட்டத்துடன் அங்கிருந்து செல்வதைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் அறியாவண்ணம் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றவன் அவர்கள் சென்று நின்ற மரத்தின் மற்றைய புறமாக நின்று கொண்டு அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனிக்கலானான்.  

 

“ஏன்டீ மித்ரா என்னடி இப்படி பண்ணீட்ட? நான்தான் அப்போவே இதெல்லாம் வேணாம்னு சொன்னேனே நீ கேட்டியா? இப்போ பாரு இரண்டு பேரும் வசமாக மாட்டிக்கிட்டோம்,  அந்தப் பையன் நம்ம சீனியருக்கும் சீனியர், ஆனா நம்ம இப்போ தான் இந்தக் காலேஜில் ஜாயின் பண்ணி இருக்கோம், இப்போ நம்ம மட்டும் பர்ஸ்ட் இயர்ன்னு அங்கே நிற்கிற எல்லோருக்கும் தெரிஞ்சதுன்னு வை, நம்ம இரண்டு பேரையும் அப்படியே நிற்க வைச்சு சமாதி கட்டிடுவானுங்க, அது மட்டுமில்லாமல் அந்த சீனியர் எச்ஓடி கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணால் அவ்வளவுதான் மொத்தமாக ஜோலி முடிஞ்சு”   

“அய்யய்யே! கொஞ்ச நேரம் அமைதியாக இருடி கத்திரிக்கா, சாரி சாரி கௌரி, கொஞ்சம் விட்டால் நீயே எல்லாத்தையும் அவங்க கிட்ட உளறிடுவ போல இருக்கே, இப்போ என்ன நான் மட்டும் இதையெல்லாம் தெரிஞ்சா பண்ணேன்?  ஏதோ காலேஜில் பர்ஸ்ட் டே ஒரு மாதிரி ஜாலியாக இருக்கட்டும்ன்னு இப்படி எல்லாம் பண்ணேன், ஆனா என் நேரம் பார்க்க அப்பாவி மாதிரி இருக்கான்னு கலாட்டா பண்ண நினைச்ச ஆளு நம்ம சீனியர் ஆகிட்டான், அதனால இப்போ என்ன ஆயிடுச்சு? நான் எப்படி இந்த பிரச்சினையை ஈஸியாக சமாளிக்கிறேன் பாரு” என்றவாறே தனது தோழியின் தலையில் தட்டி விட்டு அந்த இடத்தை விட்டு மித்ரா என்றழைக்கப்பட்டவள் வெளியே வருவதைப் பார்த்ததும் சட்டென்று மீண்டும் தான் நின்று கொண்டிருந்த பழைய இடத்தில் சென்று நின்று கொண்ட கௌதம் தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல நின்று கொண்டிருக்க, 

  இது எதையும் அறியாமல் தனது கையிலிருந்த நோட்டை அவனிடம் மீண்டும் கொடுத்தவள், “சரி சரி, இன்னைக்கு காலேஜ் பர்ஸ்ட் டே அதனால உங்க எல்லோரையும் இதோட விட்டுட்டேன், இப்போ நீங்க கிளாஸுக்கு போகலாம், ஆனா இன்னொரு வாட்டி தனியாக என்கிட்ட மாட்டீக்காதீங்க, போங்க” என்று சற்று அதட்டலாக கூறி முடித்த கணமே, அங்கே விட்டால் அழுது விடுவேன் என்கிற நிலையில் நின்று கொண்டிருந்த மூன்று பையன்களும் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஓடியிருந்தனர்.  

 

அவர்கள் மூவரும் ஓடிச் செல்வதைப் பார்த்து சிரித்தபடியே திரும்பிய மித்ரா தன் முன்னால் தன் கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்த கௌதமைப் பார்த்து தனக்குள் எழுந்த பதட்டத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சிறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “என்ன தம்பி நீ இன்னும் போகலையா? அதுதான் இன்னைக்கு இவ்வளவும் போதும் போன்னு சொன்னேன்லே, போப்பா போய் நல்லாப்படி” என்றவாறே அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, அதற்குள் அவன் அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.  

 

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் எந்தவொரு பதிலுமே சொல்லலையே சீனியர் மேடம்”   

“அதுதான் நான் சீனியர்ன்னு நீங்களே ஒத்துக்கிட்டீங்க தானே, அப்புறம் இன்னும் என்ன உங்களுக்கு வேணும்?”  

“என்ன‌ சீனியர் மேடம் நீங்க? நான் இந்த காலேஜில் ஜாயின் பண்ணி மூணு வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் உங்களை இங்கே முதன்முதலாக பார்க்கிறேன், அப்போ உங்களைப் பற்றி தெரிஞ்சுகிட்டா தானே இந்த காலேஜ் முடிந்து நம்ம எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் போனாலும் நம்ம எப்போதும் நல்ல ஃபிரண்ட்ஸாக இருக்க முடியும், இல்லையா சைட் சீனியர் மேடம்?” என்று கௌதம் அவளது அருகில் நின்று கொண்டிருந்த மற்றையவளைப் பார்த்து வினவ, அவளோ சிறு தயக்கத்துடன் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு மித்ராவின் கோபப் பார்வையில் சட்டென்று தன் தலையை மறுப்பாக அசைத்திருந்தாள்.

 

  “இப்போ என்ன, நான் எந்த டிபார்ட்மெண்ட்ன்னு தெரியணும் அவ்வளவுதானே?” சிறு கோபத்துடன் அவனைப் பார்த்து வினவிய மித்ரா அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை சட்டென்று அலச விட்டவாறே,  

சிறு புன்னகையுடன் அவனைத் திரும்பப் பார்த்து, “நான் மேத்ஸ் டிபார்ட்மெண்ட் போதுமா?” என்று விட்டு அவனைக் கடந்து செல்லப் பார்க்க, அவனோ மீண்டும் அவளை நகர விடாமல் வந்து நின்று கொண்டான்.  

 

“அட கொஞ்ச நேரம் இருங்க சீனியர் மேடம், மேத்ஸ் டிபார்ட்மெண்டில் என்ன கோர்ஸ் பண்ணுறீங்க?”  

“ஆஹ் முட்டைக்கோஸ் போதுமா? போனாப்போகுது ஜுனியர் ஆச்சேன்னு சும்மா விட்டால் ஓவராக கேள்வி மேல் கேள்வி கேட்குற, நான் பார்க்கத்தான் அப்பாவி, ஆனா எங்க ஊரில் நான் தான் பெரிய ரவுடி தெரியுமா? அதனால இனிமேல் மறுபடியும் நான் இருக்கும் பக்கம் வந்துடாதே” என்று கூறிய மித்ரா அவளைப் பார்த்து வாய் பிளந்து நின்ற கௌரியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாகச் சென்று விட, கௌதமோ அவளது பதட்டத்தையும், தடுமாற்றத்தையும் ரசித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.  

 

அவன் இந்தக் கல்லூரியில் இணைந்து மூன்று வருடங்கள் கடந்திருந்த நிலையில் அவன் பல்வேறு பெண்களை தன் வாழ்நாளில் கடந்து வந்திருக்கிறான், ஆனால் இன்று அவன் வாழ்க்கையில் நுழைந்திருந்த மித்ரா ஏதோ ஓர் புதுவிதமான உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியிருக்க, அவள் சென்ற வழியையே அவன் பார்த்துக் கொண்டிருந்த தருணம் திடீரென ஒரு ஹார்ன் ஒலி அவன் காதுகள் இரண்டையும் அடைப்பது ஒலித்திருந்தது.  

 

அந்த ஹார்ன் சத்தம் கேட்டு தன் கண்களை மூடிக் கொண்டவன் சிறிது நேரம் கழித்து தன் கண்களைத் திறந்து பார்க்க, சற்று நேரத்திற்கு முன் அவன் நின்று கொண்டிருந்த அந்த கல்லூரி வளாகம் மறைந்து ஒரு பாரிய சாலையில் அவன் அமர்ந்திருந்த கார் இயல்பாக சென்று கொண்டிருந்தது.

 

  சிறிது நேரம் அங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தவன் அப்போதுதான் தான் இத்தனை நேரமாக தனது பழைய நினைவுகளில் மூழ்கியிருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டான்.   ஆம், அது அவனது பழைய நினைவுகள் தான், சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு அவனது சீரான வாழ்க்கைப் பயணத்தை ஒரு அழகான பாதையில் மாற்றிக் கொண்டு சென்ற நினைவுகள், அவனை விட்டு எப்போதும் நீங்காத நினைவுகள், அவன் தன்னை விட்டு விலக்க மறுக்கும் நினைவுகள்.  

 

அந்த நினைவுகள் எப்போதும் போல புன்னகையை அவனுக்கு பரிசாக கொடுத்திருக்க, தன் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்த கௌதம் சிறிது நேரம் கழித்து தனது கார் சென்று நின்ற இடத்தைப் பார்த்ததும் அந்தப் புன்னகையை மீண்டும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான்.  

 

அவனது அந்த மனமாற்றத்திற்கான காரணம் அவன் அந்தப் பொழுதில் வந்திருந்த அந்த மாளிகை போன்ற பழங்காலத்து இல்லமும், அங்கே அவன் வந்திருப்பதற்கான காரணமும் தான்.  

 

எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த ஒரு தருணம் நிச்சயமாக வரக்கூடும் என்பது அவனுக்குத் தெரியும், அந்தத் தருணம் வரும் பொழுது நிச்சயமாக ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்கவே எண்ணுவர், ஆனால் அவனால் அவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியவில்லை.  

 

அத்தனை நேரமும் அவன் மனதிற்குள் இருந்த இலேசான உணர்வு மறைந்து இறுக்கமான உணர்வு அவனை முற்று முழுதாக ஆட்கொள்ள அந்த இடத்தை விட்டு திரும்பி சென்று விடலாமா என்று அவன் நினைத்திருக்கும் போதே, “டேய் கௌதம், ஏன்டா அங்கேயே நிற்கிற? சீக்கிரமாக உள்ளே வா, உனக்காகத்தான் எல்லோரும் காத்துட்டு இருக்காங்க” என்றவாறே அவனது அவனது அன்னை வள்ளி அந்த வீட்டில் இருந்து வெளியேறி வந்து அவனது கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு செல்ல, அவனும் தன் அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டது போல அமைதியாக அவரைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.  

 

கௌதமும், வள்ளியும் அந்த வீட்டிற்குள் உள் நுழைந்ததும் அந்த வீட்டின் விசாலமான ஹாலில் கூடியிருந்த ஆட்கள் எல்லோரும் அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவனோ அதைக் கண்டும் காணாதது போல தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.  

 

“என்னப்பா பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா?” தன் தந்தையின் கேள்விக்கு முயன்று வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் அவன் ஆமோதிப்பாக தலையசைக்க,  

அவர்கள் இருவரையும் புன்னகை முகமாக பார்த்தபடி அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த அவனது தந்தையின் வயதை ஒத்த நபர் ஒருவர், “அதுதான் மாப்பிள்ளை வந்துட்டாரே, பொண்ணை அழைச்சிட்டு வர சொல்லவா?” என்று வினவ, 

  ஈஸ்வர் முகம் கொள்ளாப் புன்னகையுடன், “என்ன சம்பந்தி இப்படி கேட்குறீங்க? இவ்வளவு நேரமாக நாங்க அதற்காகத்தானே காத்துட்டு இருக்கோம், சீக்கிரமா எங்க வீட்டு மருமகளை அழைச்சிட்டு வாங்க, இல்லையா கௌதம்?” என்றவாறே கௌதமின் தோளில் தட்டிக் கொடுத்தவாறே அவருக்கு பதிலளித்திருந்தார்.  

 

கௌதம் அங்கே நடக்கும் நிகழ்வுகளை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தன் மனப்போக்கை கட்டுப்படுத்தவும் முடியாமல் ஒருவிதமான திண்டாட்டத்தோடு அமர்ந்திருந்த தருணம் அங்கே கூடியிருந்த நபர்களில் ஒருவர், “அதோ கயல்விழி வந்துட்டா” என்று கூற, அந்தப் பெயரைக் கேட்டதுமே ஏதோ ஒரு மன உந்துதலில் நிமிர்ந்து பார்த்தவன் கையில் டீ டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் தன்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து தூக்கி வாரிப்போட அதிர்ச்சியாகி எழுந்து நின்றான்……