arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் பதினெட்டு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 18 / 64

அத்தியாயம் பதினெட்டு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

தயக்கமாக வீட்டினுள் நுழைந்தாள் பிருந்தா. இரவு கார்த்திக் அழைத்தது முதலே அவளால் வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளும் கடந்த மூன்று நாட்களாக மஹாவின் எண்ணுக்கு அழைத்தவண்ணம் இருந்தாள். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமலே போக, அவளுக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது.

இப்படி எப்போதுமே செய்தவள் இல்லை மகாலட்சுமி. பிசி என்றால் கூட அதையும் சொல்லிவிட்டு பின்னர் அழைத்துப் பேசும் பழக்கம் கொண்டவள்.

அவர்களுக்குள் அது ஒரு பெரிய விஷயமும் அல்ல. ஆனால் இந்த மூன்று நாட்களில், ஒரு முறை கூட அழைப்பை அட்டென்ட் செய்யாமல் இருக்கும் போதே ஏதோ பிரச்சனை என்று உணர முடிந்தது.

ஆனால் என்னவெனத் தெரியவில்லை. பைரவியுடன் நல்ல பழக்கம் இருக்கிறது தான் என்றாலும், அவர் அளவாகத்தான் பேசுவார். எப்போதுமே அளவை தாண்டிப் பழகிவிடக் கூடியவர் இல்லை. கிருஷ்ணம்மாள் அதற்கு நேர் எதிர்.

பிருந்தா அவருக்கு இன்னொரு பேத்திதான் என்ற அளவில் அவரது பாசமான அணுகுமுறை இருக்கும். அதற்காகப் பைரவியைக் குறைத்து சொல்லிவிட முடியாது. திருமணமாகாத மகன் இருக்கும்போது மகளது தோழியை அளவாகத்தான் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.

அவரைப் புரிந்து கொண்டு, பிருந்தாவும் ரொம்பவும் குறைவாகத்தான் வீட்டிற்கு வருவதும். பைரவியின் முன் கார்த்திக்கை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பார்க்கும் ரகசிய பார்வை மட்டுமே. அதிலும் பார்வை மாறுபாட்டைக் காட்டிவிட மாட்டாள்.

அதிலெல்லாம் வெகுகெட்டி இவள்!

கார்த்திக்கை பிடித்ததற்கும் கூட ஒருவகையில் மஹா தான் காரணமும்!

மஹாவின் அண்ணன் என்பதுதான் முதல். அதற்குப் பின் வந்தது தான் அவன்மேல் கொண்ட ஈர்ப்பெல்லாம். மஹா எப்படிப் பிருந்தாவை பிரிய முடியாமல் மருத்துவம் படிக்க முடிவு செய்தாளோ, அதுபோலத்தான் பிருந்தாவும்.

கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டால் மஹாவை பிரிய நேரிடாது தானே என்ற சிறு பிள்ளைத் தனம் மட்டுமே அவளது பதின்ம வயதில். அவளது எண்ணத்தைத் தோழியிடம் கூறவில்லை என்றாலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவளது மனதுக்குள் செழித்து வேர்விட்டு வளர்ந்தது இவ்வெண்ணம்!

ஆனால் கார்த்திக் எப்போதும் அவளை நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. எப்போதாவது பிருந்தா வந்தாலும் கூட, அந்த இடத்தில் அவன் இருந்ததில்லை. பைரவியின் பார்வை வேறுபாட்டை அறிந்தவன், சப்தம் இல்லாமல் நகர்ந்து விடுவான். பைரவி இல்லாத சந்தர்ப்பத்தில் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.

எப்போதாவது பாட்டியிடம் ஏதாவது கதையடித்துக் கொண்டிருக்கும் போதும், மஹாவும் பிருந்தாவுமாகச் சேர்ந்து இருக்கும் சந்தர்ப்பத்தில், கார்த்திக்கும் மஹாவும் அடித்துக் கொள்வதைப் பார்க்கும் போதும் அவளையும் அறியாமல் கார்த்திக்கை சுவாரசியமாகப் பார்த்து வைப்பதை ஓரிரு முறை அவனும் கண்டிருக்கிறான்.

ஆனால் அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டுவிடும் பிருந்தா, வெகு இயல்பாகப் பேச்சுக்குள் நுழைந்து விடுவாள், தான் கண்டது பொய்யோவென கார்த்திக் எண்ணுமளவு!

ஆனால் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருந்த அவளைச் சட்டென வேறு மாதிரியாக கார்த்திக்கால் நினைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை!

அதையும் பிருந்தா புரிந்து வைத்திருந்தாள். ஆனாலும் செழித்து வளர்ந்த காதல் பயிரின் வேரில் அவளே வெந்நீரை ஊற்றுவாளா? அவளால் முடியவில்லை. எப்போதும் முடியாது!

அவனாகப் புரிந்து கொள்ளட்டும்… இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள், மஹா அவளது மனதை கண்டுகொள்ளும் வரை!

எப்போது தோழியே அவளது மனதை கண்டுகொண்டாளோ, அன்றைக்கு ஏனோ மனம் விசித்திரமாக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. மறைத்து மறைத்து அழகு பார்த்த காதல், தோழியின் வாய்வழி அங்கீகாரத்தால் அவளை விண்ணில் பறக்கச் செய்தது.

அதற்குப் பின் அவ்வப்போது இவளைக் கலாய்த்துக் கொண்டுதான் இருப்பாள் மஹா. அதுவரை பதிலுக்குப் பதில் பேசும் பிருந்தா, கார்த்திக்கின் பேச்சை எடுத்து விட்டால் வெட்க சிரிப்போடு மௌனமாகி விடுவாள். அதைப் பார்க்கும் மஹாவுக்கு மேலும் அவளைக் கலாய்க்கும் மூட் வந்துவிடும்.

மஹாவின் அந்தச் சிரிப்பும், பேச்சும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாகப் பிருந்தாவால் சரியாக உண்ண கூட முடியவில்லை. ஏனென்று யாரையும் கேட்க முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு கார்த்திக்கின் அழைப்பு பாலைவனச் சோலையாகியது.

செல்பேசியில் ஒளிர்ந்த கார்த்திக்கின் பெயரைப் பார்த்தபடியே இருந்தவளுக்கு, அவன் அழைக்கிறான் என்பதே சில நொடிகள் கழித்துத் தான் மண்டையில் உறைத்தது.

‘கார்த்திக்கா? தனக்கா? அவனா? அழைப்பது அவனா?’ நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கத்தான் தோன்றியது. தனக்குத் தானே கொட்டிக் கொண்டு அவனது அழைப்பை ஏற்றவள், அவனது சோர்ந்த குரலில் துணுக்குற்றாள்.

“பிருந்தா?” அவனது குரலில் ஏதோ ஒன்று காணமல் போயிருந்ததை அடுத்த நொடியே உணர்ந்து கொண்டவளுக்கு மனம் படபடத்தது.

“ம்ம்… சொல்லுங்க…”அந்தப் படபடப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவள் கேட்க,

“நான் கார்த்திக்… மஹா அண்ணன்…” என்று விளக்கத்தை வேறு அவன் கூறியது அவளுக்குள் புன்னகையை விதைத்தது.

அவனிடம் அவளது எண் எப்படி வந்தது என்று அவள் அப்போது யோசிக்கவில்லை. அவனது எண் எப்படி அவளுக்குத் தெரியும் என்று அவனும் யோசிக்கவில்லை. ஏனென்றால் கார்த்திக் அதுவரை எதற்கும் அவளைச் செல்பேசியில் அழைத்ததில்லை. அவளும் எதற்காகவும் கார்த்திக்கை அழைத்ததுமில்லை. நின்று பேசியதும் கூட இல்லையெனும்போது மற்றதெல்லாம் எங்கே?!

“தெரியுங்…” என்பதோடு நிறுத்தினாள். அண்ணாவென்று அழைக்க வேண்டுமா என்று போராடியது மனம். முடியாது என்றவள், அதைக் காட்டிக் கொள்ளாமல் கேட்க,

“அப்பா இருக்காரா?”

“ஏன்? என்னாச்சுங்?” அவளால் சட்டென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. எதற்காகத் தந்தையைக் கேட்கிறான் இவன்?

“அவர் கிட்ட பேசணும்… கொஞ்சம் கொடுக்கறியா பிருந்தா?”

“அப்பா அவுட் ஆஃப் கண்ட்ரி… கான்பரென்ஸ்காக ஜெனீவா போயிருக்காங்க…” என்று சிறிய குரலில் கூற,

“ஓஓ…” என்று ஏமாற்றமாக ஒலித்த அவனது குரல், அவளது மனதைப் பிசைந்தது.

“என்னாச்சுங்? மகாவும் மூணு நாளா என்னோட போனை அட்டென்ட் பண்ணலை… ஏதாவது பிரச்சனையா?” தயங்கியவாறே கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வான்? கார்த்திக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடமாவது தன்னுடைய துக்கத்தைச் சொல்லி வெடித்து அழ வேண்டும் போலத் தோன்றியது!

ஆனால் யாரிடம் அழ?

தந்தையின் உடல்நிலை இருக்கும் நிலையில் அவரிடம் எப்படிச் சொல்ல? பைரவி எப்படியோ விஷயத்தை வாங்கிவிட்டார் தான்… ஆனால் அவருக்கே தான் அல்லவா தைரியத்தைக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். பாட்டி, சொல்லவே தேவையில்லை. தனக்கு முன் அவர் கரைந்து விடுவார்.

அவனது தைரியம் அனைத்தும் மஹா மட்டுமே! சந்தோஷமோ துக்கமோ, தங்கையிடம் பகிர்ந்து மட்டுமே பழக்கம் அவனுக்கு!

இப்போது துக்கமே அவள் இல்லாதது தான் எனும்போது யார் தோளில் சாய?

ஒரு நிமிடம் மௌனமாகவே லைனில் இருக்க, அந்த நீண்ட நொடிகள் பிருந்தாவின் மனதை ரணப்படுத்தியது, காரணம் என்னவெனத் தெரியாமல்!

“கார்த்திக்…” மென்மையான அவளது அழைப்பு, கார்த்திக்கை ஏதோவொரு வகையில் உயிர்க்க செய்தது… ரணத்தை மயிலிறகு கொண்டு தடவியது போலிருந்தது.

அவளது பார்வைகளையும், அதன் அர்த்தத்தையும் அவன் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவர்களுக்குள் அதுவரை காதலை உரைத்துக் கொள்ளவும் இல்லை. உறுதிப்படுத்திக் கொள்ளவும் இல்லை.

நடுவில் இருந்த அந்த மெல்லிய இழையை உணர்ந்து இருந்தாலும், கூட்டை உடைத்து வெளியே வர இருவருமே முயலவில்லை.

ஆனால் அந்த நொடியில், அவளது ஒற்றை அழைப்பில் அவன் உணர்ந்த உணர்வும் உண்மையும் வேறு! யுகம் யுகமாகச் சேர்ந்து பயணித்த ஆன்மாவின் அழைப்பாக உணர்ந்தான். கண்களை மூடி, அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டவனுக்கு ஏதோ ஒருவகை இளைப்பாறுதல் கிடைத்தது போலிருந்தது.

ஆனாலும் மௌனத் திரையை விலக்க முயலவில்லை அவன்!

“ம்ம்ம்…”

“என்னாச்சு?”

“வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்…” என்று தயக்கத்தோடு அவன் கூற, அவளுக்கோ பதற்றம். பிரச்சனை என்றால் தன்னுடைய போனை மஹா எடுக்க முடியாத அளவுக்கா?

தலை சுற்றுவது போலிருந்தது. ஆனாலும் முயன்று கால்களை இறுக்கமாகத் தரையில் அழுத்தினாள். இப்போது பதட்டமடைவது எந்த வகையிலும் சரியாகாது, எதையும் சரிப்படுத்தாது என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள்,

“பிரச்சனை மஹாவுக்கா?”

“ம்ம்ம்…”

“நான் இப்ப கிளம்பி வரட்டா?” இரவு நேரம் தான். ஆனால் மஹாவுக்குப் பிரச்சனை என்றபோது அவளால் அங்கே நிற்க முடியவில்லை. மனம் பதறியது. அதோடு கார்த்திக்கின் சோர்ந்த குரல் வேறு அவளை அலைகழித்தது.

“ம்ஹூம்… வேண்டாம்… வீட்ல யாரும் இல்ல… எல்லாரையும் கொடைக்கானல் அனுப்பியிருக்கேன்…” அவசரமாக மறுத்தான்.

“அப்படீன்னா அம்மாவுக்கு நான் கால் பண்ணட்டா? மஹா கிட்ட பேசணும்…”

“இல்ல… முடியாது…” கார்த்திக்கு குரல் உடையும் போல இருந்தது. பெரிதும் முயன்று தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றான்.

“ஏன்?” அவளும் விடாமல் கேட்க, பதில் கூற திணறினான்.

“பிருந்தா… அப்பா எப்ப வருவாங்க? அதை மட்டும் சொல்லு…”

“நீங்கச் சொல்லுங்க கார்த்திக்… அப்பாவை அப்புறம் பார்க்கலாம்… நீங்கப் பேசறது சம்திங் என்னமோ சரியா இல்லாதது மாதிரி இருக்கு…” குரல் அனிச்சையாக நடுங்கியது அவளுக்கு.

“இல்ல… சொல்றதை புரிஞ்சுக்க…” பெயர் தெரியாத ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து வயிற்றுக்குள் உருண்டது அவனுக்கு!

“ப்ளீஸ்… என்ன விஷயம் சொல்லுங்க… நீங்க இந்தளவு உடைஞ்சு போய்ப் பேசி நான் கேட்டதில்லை…” கண்களில் நீர் திரளக் கேட்டாள் பிருந்தா.

“காலைல வீட்டுக்கு வர்றியா?” பெரும் தயக்கத்தோடு எல்லையைக் கடந்து கொண்டிருந்தான். ஏனென்றால் அனைத்தையும் தாண்டிச் சுமைதாங்கியாக அவள் அப்போது அவனுக்குத் தேவைப்பட்டாள்.

ஒரு ஆண் எவ்வளவு பாரத்தை வேண்டுமானாலும் சுமப்பான், அவனது குடும்பத்திற்காக, பின்னணியில் அவனுக்கு ஒரு சுமைதாங்கி இருக்கும் பட்சத்தில்! அங்கே பெண் சுமைதாங்கியாகிறாள்… அவனுக்கு இளைப்பாறுதலை கொடுக்கிறாள்.

அதற்காக யாரோ ஒருவரிடம் அந்த இளைப்பாறுதலை அவன் எதிர்பார்க்க முடியாது. இவள் தான் நமக்கு யாதுமாகியவள் என்று மனம் உணர்கின்ற அந்தத் தருணத்தில் அது நிகழக்கூடும்.

கார்த்திக்கு அது நிகழ்ந்து கொண்டிருந்தது. பிருந்தா அதை நிகழ்த்திக்கொண்டிருந்தாள். கண் பாராமல், கதை பேசாமல், தொட்டு உணராமல் வெறும் உணர்வுகளால் அதை நிகழ்த்திக்கொண்டிருந்தாள்.

எப்போது விடியுமெனக் காத்திருந்து மஹாவின் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள் பிருந்தா.

கதவு திறந்தே கிடந்தது. அவ்வளவு காலையிலேயேவா கார்த்திக் எழுந்துவிட்டான் என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் அறியவில்லை. உறங்கினால் தானே எழுவதற்கு?

விடிய விடிய உறங்காமல் சோபாவில் தவம் கிடந்தவனுக்கும் தெரிந்திருந்தது. தான் உறங்காமல் இருப்பதாலோ, உண்ணாமலிருப்பதாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்று.

மெல்லிய கொலுசு சப்தத்தைக் கேட்டு நிமிர்ந்தவனின் கண்கள் ரத்தமெனச் சிவந்திருக்க, பிருந்தாவுக்குச் சகலமும் ஆட்டம் கண்டது.

கண்களில் நீர் திரள அவனிடம் சென்றவள், அருகில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

“தூங்கவே இல்லையா?”

“ம்ம்ம்… தூக்கம் வரலை…”

“சாப்பிட்டீங்களா?”

“ம்ஹூம்… பசிக்கல”

“ஏன் இப்படிப் பண்றீங்க கார்த்திக்? இப்படி நீங்க இருந்தா பிரச்சனை சால்வ் ஆகிடுமா?” என்று கேட்டவளுக்குத் தெரியாது என்ன பிரச்சனை என்று! ஆனாலும் கார்த்திக் உறங்காமலிருப்பதும் உண்ணாமலிருப்பதும் அவளுக்குப் பெரும் வலியைக் கொடுத்தது.

“மஹா எங்க இருக்கா… எப்படி இருக்கான்னு தெரியாம எப்படி என்னால நிம்மதியா தூங்க முடியும்?” அதுவரை பொறுமையாக இருந்தவன், அவளிடம் வெடிக்க, அதைக் கேட்டு ஷாக்கடித்தது போல அவனைப் பார்த்தாள் பிருந்தா.

“என்ன சொல்றீங்க?” குரல் வெளியே வர முடியாமல் சண்டித்தனம் செய்தது.

“நம்ம படத்துக்குப் பைனான்ஸ் பண்ணவனுக்கு நாம இன்னும் பணத்தைச் செட்டில் பண்ணலை… அதுக்காக…” ஒவ்வொரு வார்த்தையாகத் தயங்கியபடி ஆரம்பித்தவன், நிறுத்திவிட்டு அவளது முகத்தை நோக்கினான்.

“அதுக்காக?” அவளது குரல் வெகுவாக உள்ளே சென்றிருந்தது. அதிர்வைச் சமாளிக்கத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.

“மஹாவை கஸ்டடி எடுத்துட்டான்…”

அவளுக்குப் புரியவில்லை. கஸ்டடி என்பதன் அர்த்தத்தை அவள் எப்படி அறிவாள்?

“அப்படீன்னா?” புருவத்தை நெரித்துக் கொண்டு அவள் கேட்ட தோரணையில் அவனுக்கே சொல்லத் தயக்கமாகத் தானிருந்தது. தவறு அவன் பக்கமும் உள்ளதே! அந்த ராட்சசன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் சற்று ஏமாந்து தான் விட்டான் அல்லவா. ஆரம்பத்திலேயே இறுக்கி பிடித்துப் படப்பிடிப்பை முடித்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காதோ என்ற குற்ற உணர்வும் ஆட்டிப்படைத்தது.

அதோடு கார்த்திக் செய்த மன்னிக்க முடியாத தவறு அந்த ராட்சசனிடம் பணத்தைப் பெற்றது.

அந்த ஒரு காரணம் தான் அவனது தங்கையை இப்படியொரு நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது அல்லவா!

“பணத்தைக் கொடுத்தாத்தான் மஹாவ விடுவானாம்…” தலைக்குக் கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு அவன் கூற, அந்த அதிர்ச்சியைப் பிருந்தாவால் தாளவியலவில்லை.

“என்னது?” என்றபடி சட்டென எழுந்து கொண்டாள்.

இரத்தம் ஜிவ்வென முகத்துக்குப் பாய, உள்ளுக்குள் நடுங்க தொடங்கியது. யாருக்கும் சிறு கஷ்டத்தைக் கூடத் தரக் கூடாது என்று எண்ணுபவளாயிற்றே அவளது மகாலக்ஷ்மி.

“மூணு நாளாச்சு பிருந்தா… எல்லாப் பக்கமும் பணத்துக்கு நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்… அப்பா கிட்ட ரொம்பச் சொல்ல முடியல… ஹார்ட் வீக்… அம்மாக்கு மட்டும் தான் நேத்து சொன்னேன்… சொன்னதுல இருந்து அழுது கரைஞ்சுட்டு இருக்காங்க… நான் என்ன பண்ணன்னே தெரியல…”

தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தது. கண்ணீர் உடைப்பெடுக்கக் காத்திருக்க, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவின் நிலையைச் சொல்ல முடியவில்லை.

அவளது ஒரே தோழி. ஒரு நாள் கூடப் பேசாமல் இருந்ததில்லை, கிட்டத்தட்ட பதினெட்டு வருடமாக!

கிண்டர்கார்டனிலிருந்து ஒரே வகுப்பு. ஒற்றுமை மாறாத நட்பு. கார்த்திக்கை மணந்து கொண்டால் கூடவே இருக்கலாம் என்று எண்ணுமளவான நட்பு!

அவளையும் அறியாமல் கண்கள் உடைப்பெடுத்தது.

ஆனால் அவையெல்லாம் ஒரு சில நொடிகள் தான். அடுத்த நொடியே தன்னைச் சுதாரித்துக் கொண்டாள் பிருந்தா. அவளது இயல்பான தெளிவான மனதிடத்துக்கு வந்து விட்டாள்.

கண்களைத் துடைத்துக் கொண்டு கார்த்திக்கை பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தபடி இருந்தான்.

“டோன்ட் வொர்ரி கார்த்திக்… தைரியமா இருங்க… கண்டிப்பா மஹா பயந்துட்டு இருக்க மாட்டா… அப்படிப்பட்ட ஆளும் இல்ல அவ… யாரா இருந்தாலும் ஓட ஓட விரட்டற ஆள் அந்தப் பக்கி… உங்க தங்கச்சி கிட்ட சிக்கின ஜீவனை நினைச்சு பாவப்படுங்க…” தன்னுடைய நடுக்கத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு புன்னகைத்தபடி நகைச்சுவையாகப் பேசி அவனது மனதை மாற்ற முயன்றாள்.

“எனக்கும் தெரியும்… ஆனா மஹா இன்னமும் எனக்குச் சின்னக் குழந்தை தான் பிருந்தா…”

“தெரியுமே… அவ வந்ததுக்கு அப்புறம் அவளைத் தொட்டில்ல போட்டுத் தாலாட்டுங்க… பப்பு புவா ஊட்டுங்க… ஆனா இப்ப போய்க் குளிச்சுட்டு சாப்பிட வாங்க… நான் கிட்சன்ல என்ன இருக்குன்னு பார்க்கறேன்…” என்றபடி அவனது கையைப் பற்றி எழுப்பி விட, அவளையே பார்த்தபடி இருந்தான் கார்த்திக்.

“என்னப்பா?” ஆதூரமாகக் கேட்டவளை விட்டுப் பார்வையை நகர்த்தாமலிருந்தான்.

இருவரும் அதுவரையுமே காதலை சொல்லிக் கொள்ளவில்லையே. ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தித் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன?

“ப்ச்… ஒண்ணுமில்ல…”

“ஹேய்… இதெல்லாம் சின்ன மேட்டர் மா… இன்னும் லைப் முழுக்க எவ்வளவோ சவால்களை நாம பார்க்கணும்… உடைஞ்சு உக்கார்ந்துட்டா என்னாகறது? இப்படிச் சாப்பிடாம தூங்காம வீட்டைக் காவக்காத்துட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு போயிருமா என்ன? என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்… இப்ப எந்திரிங்க…”

மிகத் தெளிவாக உரைத்தபடி அவனை எழுப்பி விட்டவளின் கண்களைப் பார்த்தவனுக்கு ஏதோ ஒரு வகையில் இளைப்பாறுதல் கிடைத்தது. அவனை அனுப்பிவிட்டு விட்டாளே தவிர, மஹாவுக்காக மனம் துடித்தது. கார்த்திக் இந்தளவு உடைந்து போயிருக்கிறான் என்றால் விஷயம் எந்தளவு மோசமாக இருக்க வேண்டும் என்றும் புரிந்தது. அதோடு தோழியின் நேர்மையான இயல்பையும் துடுக்கான குணத்தையும் அறிந்தவளுக்கு அவள் இன்னமும் வம்பை வாங்கி வந்துவிடக் கூடாதே என்றும் இருந்தது.

மகா சட்டெனப் பேசிவிடுவாளே தவிர, எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாதவள் அல்ல என்பது இவளுக்கு உறுதி தான். ஆனாலும் தான் எப்போதும் உடனிருந்து பார்த்துவிட்டு, இப்போது அவள் தனியாக எதையாவது செய்து வைத்து விடுவாளோ என்ற பயம் தான்… வேறென்ன?

காதலெனப்படுவதும் நட்பெனப்படுவதும் யாதெனில் அது நம்பிக்கை… துணை… உறுதி… நேர்மை… துணிவு!

அதன் செயல் வெறும் இன்பத்தில் பங்கெடுப்பது மட்டுமல்ல… உற்றவரின் துன்பத்தையும் தனதாக நினைத்து அதில் பங்கு கொள்வது. நானிருக்கிறேன் உனக்காக என்ற நம்பிக்கையைக் கொடுப்பது. உன்னை நானறிவேன் என்று இணையின் நேர்மையைத் தான் பறைசாற்றுவது. உனக்காக எதையும் செய்வேன் என்று எப்போதும் துணையிருப்பது. எந்தச் சூழ்நிலையாக இருப்பினும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியை கொடுப்பது. வாழ்க்கையின் கடைசி நொடிகளையும் இருவரும் கைப்பிடித்தவாறு அழகான புன்னகையோடு கடக்க முடியும் என்ற துணிவை கொடுப்பது காதல் மட்டுமல்ல நட்பும் கூடத்தான்!

குளித்துவிட்டு தயாராகி இவன் வர, இவள் அவசரமாகக் கோதுமை தோசையோடு தேங்காய் சட்னி மட்டும் செய்திருந்தாள். சமையலறையில் அவளின் அவசரத்துக்குக் கிடைத்தது அதுதான் என்பதோடு கார்த்திக்கின் பேவரைட் அதுவென்று இவளுக்குத் தெரியும்.

“தேங்க்ஸ்…” என்று சிறுபுன்னகையோடு அங்கேயே அமர்ந்துகொண்டு உண்டவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள்.

“இப்ப என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?” வார்த்த தோசையை அவனது தட்டுக்கு இடம் மாற்றியபடியே இவள் கேட்க,

“தியேட்டரைக் கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிருக்கு… அவனுக்குக் கொடுக்க வேண்டியதுக்கு விடவே அதிகமா போகும்… லட்டோட யோசனைதான்… ஆனா இன்னும் சரியா அமைய மாட்டேங்குது…”

“ஏன்?”

“கடைசி நிமிஷத்துல பின் வாங்கறாங்க… அதான் உன் அப்பா ரியல் எஸ்டேட்ல கொஞ்சம் தரோவானவங்கன்னு லட்டு சொன்னா… அதான் அவர் கிட்ட பேசலாம்ன்னு…” என்று அவன் நிறுத்த,

“அப்பா ஜெனீவால இருக்காங்களே…” என்று யோசனையாகப் பார்த்தாள். அவர் இல்லாதபோது மருத்துவமனையில் வேண்டுமானால் அவள் முடிவெடுக்க முடியும். ஒற்றை மகளாகவும், அதோடு பதினோரு வயதில் தாயை இழந்த காரணத்தாலும் சுப்பிரமணியம், அதாவது பிருந்தாவின் தந்தை, அவரது மருத்துவமனையில் அத்தனை வேலைகளையும் பழக்கி விட்டிருந்தார். அதோடு எந்த நேராமாக இருந்தாலும் தெளிவோடும் புத்திசாலித்தனத்தோடும் தேவையான அளவு துணிச்சலோடும் இருக்க வேண்டும் என்பது அவரது ட்ரைனிங். அந்த இயல்பு பிருந்தாவிடம் வெகுவாகப் பிரதிபலிக்கும்.

“ம்ம்ம்… வேற என்ன பண்றதுன்னு பாக்கறேன்…” கார்த்திக்கின் குரலில் அவனையும் அறியாமல் சோர்வு வந்து சேர்ந்தது.

“சியர் அப் கார்த்திக்… ஏதாவது வழி கிடைக்காம போகாது… அப்பா கிட்ட பேசிட்டு நானே ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கறேன்…” என்றவள், தோசைக் கரண்டியை அடுப்பு மேடையில் வைத்து விட்டுத் தனது செல்பேசியை எடுத்துத் தந்தைக்கு அழைப்பு விடுத்தாள்.

ரிங் போய்க்கொண்டே இருக்க, அழைப்பு எடுக்கப்படவில்லை.

இரண்டாவது, மூன்றாவது முறை என்று முயன்று கொண்டே இருந்தாள். கூடவே மெல்லிய பதட்டம். அவளது தந்தையும் இப்படிச் செய்யக் கூடியவர் இல்லையே. தனது அழைப்பைப் பார்த்தால் எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும் எடுத்துப் பேசாமல் விட்டதில்லையே. என்னவாயிற்றோ என்ற பயம் லேசாக ஆட்கொண்டது.

சட்டெனத் தோன்ற மணியைப் பார்த்தாள். ஏழரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் யோசனையாய் கைவைத்துக் கொண்டாள். இப்போது ஜெனீவாவில் அதிகாலை மூன்று மணியிருக்குமா? தனக்குத்தான் கார்த்திக் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றால், அவரும் இந்த நேரத்தில் காலை அட்டென்ட் செய்ய முடியுமா என்ன? அதுவும் இல்லாமல் உறங்கும்போது சைலென்ட்டில் போட்டு விடுவாரே!

“ப்ச்… அப்பா தூங்கிட்டு இருப்பாங்க போல இருக்கு…” என்று சொன்னவள், “மஹா கிட்ட பேசினீங்களா?” என்று கார்த்திக்கை கேட்க,

“ம்ம்ம்… அது தைரியமா தான் இருக்கு… எனக்குத்தான் நெருப்பு மேல உட்கார்ந்து இருக்க மாதிரி இருக்கு…” என்று கூற, மெலிதாகப் புன்னகைத்தாள் அவள்.

“நான் தான் சொன்னேனே… உங்களைவிட அவளை எனக்கு நல்லா தெரியும்… அந்த அராத்து கிட்ட சிக்கினவன் தான் தொலைஞ்சான்…” என்று சிரித்தவள், “டோன்ட் ஒர்ரி…” என்று கூறியவள், “அவ வந்தவுடனே நான் உங்களுக்குக் கோதுமை தோசை செஞ்சு தந்தேன்னு தான் முதல்ல சொல்வேன்…” என்று கேலியாக முடிக்க, அவனும் மெலிதாகப் புன்னகைத்தான்.

“அதுக்காவது சீக்கிரமா லட்டை கூட்டிட்டு வரணும்…” சிறு கசப்போடு கூறியவனின் கண்கள் அவனறியாமல் கலங்கின.

“அடடா… சிவாஜி… கண்ணைத் துடைங்க… இப்ப இமோஷனலா அனுகினா கண்டிப்பா சரி வராது… நீங்க முதல்ல தெளிவாகுங்க சிவாஜி…” குரலில் கிண்டலிருந்தாலும், உள்ளுக்குள் மனம் வெகுவாக வருந்திக் கொண்டிருந்தது.

“ஆனாலும் உங்க ரெண்டு பேருக்குமே இந்த வாய்க்கொழுப்பு அதிகம் தான்…” என்று தங்கையையும் சேர்த்து கார்த்திக் பேச, “உங்க தங்கச்சி கூட இத்தனை வருஷமா குப்பை கொட்றேன் இல்லையா…” என்றவளின் உதட்டில் மில்லிமீட்டர் சிரிப்பு.

“மஹா தப்பா நினைக்கமாட்டாளா பிருந்தா…?”

“என்ன தப்பா?” என்று யோசனையாய் இவள் கேட்க,

“ம்ம்ம்… இல்ல நாம இப்படிப் பேசினது தெரிஞ்சா…” என்று கார்த்திக் இழுக்க,

“இப்படியொரு இளிச்சவாய் தான் அண்ணியா வரணும்ன்னு விதி இருந்தா அதை மாத்தவா முடியும்ன்னு அவ எப்பவோ சொல்லிட்டா…” என்று சொல்லும்போதே முகம் சிவக்க, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் பிருந்தா.

“அடப்பாவிகளா… எல்லாம் கூட்டு களவாணிகளா?” என்று சிரித்தான்.

“ம்ம்ம்… ரொம்ப முக்கியம்…” என்று உதட்டைச் சுளித்தவள், “இந்த விஷயத்தை அப்புறம் பாருங்க… இப்ப உங்க தங்கச்சி பக்கிட்ட இருந்து அந்த ஆளைக் காப்பாத்துங்க…” என்று சிரிக்க,

“எல்லாம் நேரம் தான்…” என்று அவளது மண்டையில் தட்டியவன், “இப்ப ரொம்பவே தெளிவா இருக்கு பிருந்தா. தேங்க்ஸ் ஃபார் கம்மிங்…” என்று ஆழ்ந்த குரலில் கூற,

“அம்மாவை முதல்ல இங்க வரச் சொல்லுங்க… அவங்க இருந்தா உங்களுக்கு இவ்வளவு குழப்பம் இருக்காது. அதுவுமில்லாம இது மாதிரி டைம்ல அப்பாவை அங்க இருக்க வைக்கறது சரியில்லை. எதுவா இருந்தாலும் நாம இருந்தா சமாளிக்கலாம்…” என்று கூறியவளை பார்த்து,

“அம்மா ரொம்ப அழறாங்க. என்ன பண்ண? அவங்களைச் சமாதானப்படுத்தவா? இல்ல பிரச்சனைய பாக்கவா?”

“அழாம என்ன பண்ணுவாங்க? பெத்தவங்க இல்லையா?! இந்த நேரத்துல தான் நம்ம தோள் அவங்களுக்குத் தேவை. அழறாங்கன்னு சொல்லி நாம அதை மறுக்கக் கூடாது…”

“அவங்க அப்படிதான் அழுவாங்கன்னு தெரியும்… ஆனா அம்மா அழுதா என்னால எதையும் யோசிக்கக் கூட முடியாது. எல்லாமே ஃப்ரீஸ்ஸான மாதிரி ஆகிடும்…”

“இது தப்பு. அவங்க மனக்கஷ்டத்தை வேற யார் கிட்ட சொல்ல முடியும்? பொதுவாவே ஜென்ட்ஸ் வெளிய எங்க வேண்ணாலும் போவீங்க… ஸ்ட்ரெஸ் பஸ்டர் அதிகம்… வீட்ல இருக்க லேடீஸ் என்ன பண்ணுவாங்க? எதையாவது சொல்ல வந்தா நீ இப்படித்தான்னு முடிக்க வேண்டியது… அவங்க சொல்றதை எதையும் காது கொடுத்துக் கேட்கறது இல்ல. அப்புறம் அவங்க டிப்ரஸாகாம எப்படி இருப்பாங்க?”

“நான் அப்படில்லாம் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா? இந்த விஷயத்துல அம்மா அழுதா என்னால யோசிக்க முடியலன்னு தான் சொல்றேன். ஆம்பிளைங்களும் பாவம் தான். நாங்களும் குடும்பத்துக்காக எத்தனையோ விஷயம் பண்றோம்…” என்று வெளிப்படையாகக் கூறியவனைக் கண்களில் சிரிப்போடு பார்த்தாள்.

“நீங்க நல்லவங்க தான் ஒத்துக்கறோம்… இல்லைன்னு சொல்லலை… ஆனா அம்மா ஏதாவது சொல்ல வந்தா காது கொடுத்துக் கேளுங்க…” என்று கூறியவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“இந்தப் பொண்ணுங்க எல்லாம் சீக்கிரமா மெச்சூர்ட்டா ஆகிடறாங்க. நாங்க பார்த்து வளர்ந்த குட்டீஸ் நீங்க ரெண்டு பேரும்… ஆனா லட்டும் அவ்வளவு தெளிவா பேசறா, நீயும் அப்படித்தான்…”

“உங்களுக்கும் சேர்த்து நாங்க யோசிச்சுக்கறோம்… கவலைய விடுங்க…” என்று அவள் சிரிக்க, “அடிங்…” என்று அவளை மிரட்டியவன்,

விஜய்யிடம் பேசுவதற்காகச் செல்பேசியை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றான். முன்தினம் ஷ்யாமுடைய அப்பாவுடன் பேசியதற்கு என்ன பிரதிபலிப்பு இருக்கக்கூடும் என்று யோசனையாக இருந்தது. அதோடு பிருந்தாவின் அப்பாவும் ஜெனீவாவில் இருப்பதால் என்ன செய்யலாம் என்று அவனுக்கு யோசிக்க வேண்டும்.

ஆனால் சொல்லி வைத்தார் போல ஒவ்வொருவரும் கடைசி நேரத்தில் கைவிடுவது தொடர்கதையாகி இருந்தது. இதற்குப் பின்னணியில் ஷ்யாம் இருக்கக்கூடும் என்று கார்த்திக்கால் நினைக்க முடியவில்லை.

அவனுக்குத் தேவை பணம். அதைத் தடுக்க முயல்வானா என்ன?

தந்தையின் அழைப்புக்காகப் பிருந்தா காத்திருக்க, கார்த்திக் தனக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் அழைத்துத் தியேட்டரை விற்க விலை சொல்லிக்கொண்டிருந்தான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிருந்தாவுக்குத் தான் மனம் கனத்துப் போனது. அதிலும் காரியமாகாமல் போனை ஆப் செய்யும் போதெல்லாம் அவனது எரிச்சல் வேறு வெளிப்படையாகத் தெரிந்தது.

எப்படிப்பட்ட பாரம்பரியமான குடும்பம் இது? எத்தனை பெருமைகளைக் கொண்டது? எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்தவர்கள் இவர்கள்? தலைமுறை தலைமுறையாகப் பெருமையைக் கட்டிக் காத்து வந்த குடும்பமல்லவா!

அதிலும் முத்து முத்தாக இரண்டு வாரிசுகள்!

அவ்வளவு பொறுப்பான கார்த்திக்கும் அறிவான மகாவும். அதிலும் குற்றம் எதுவுமே சொல்ல முடியாதவன் கார்த்திக். இவர்களுக்காக இந்த நிலை என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

அவன் எதிரில் சென்று அமர்ந்தவள், அவனது மனநிலையைச் சற்று மாற்றும் பொருட்டு,

“பேசாம உங்க மாமனார் கிட்ட இப்பவே வரதட்சணைய வசூல் பண்ணிடலாமா?” கண்ணடித்தபடி கேட்டவளை முதலில் புரியாத பார்வை பார்த்தவன், புரிந்தபின் சிவந்த முகத்தோடு,

“அடிங்க… வரதட்சணையா? ஓடிடு… ஆனாலும் உனக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது… ட்வென்டி குரோர்ஸ் கேக்குதா உனக்கு?” என்று அவன் சிரிக்க,

“இருக்கட்டும்… ஹாஸ்பிட்டல்ல தான் பணத்தை மூட்டைக் கட்டறாங்கல்ல… கொடுத்தா ஒன்னும் குறைஞ்சு போய்ட மாட்டார்…” என்று கிண்டலாக இவள் கூற, அவளை நேருக்கு நேராகப் பார்த்தான் கார்த்திக்.

“தயவு செஞ்சு உனக்கும் இந்தப் பிரச்சனைக்கும் இப்படிக் கனெக்ட் பண்ணிக்காத பிருந்தா. எப்படியாவது நான் சுதாரிச்சுடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உன் அப்பா கிட்ட என்னைப் பத்தின இம்ப்ரஷன் நல்லபடியா இருக்கணும்… தியேட்டரை அவர் சேல் பண்ணி கொடுக்கட்டும். அது போதும். மற்றபடி வேற மாதிரி அவர் கிட்ட இப்ப தயவு செஞ்சு பேசிடாத… ப்ளீஸ்…”

அவனது இயல்பறிந்த பிருந்தாவுக்கு அவன் கூறியது புதிதாகவே இல்லை. இப்படித்தான் சொல்வான் என்பதும் தெரியும். பெருமையாக அவனைப் பார்த்தபடி தலையாட்டினாள். கார்த்திக் வெறுமனே சொன்னாலே தலையாட்டலை தவிர வேறெதுவும் செய்யாதவள், இப்போது என்ன செய்யப் போகிறாளாம்?!

ஹைதராபாத்திலும் இதே டென்ஷன், வேறு வடிவத்தில்!

ஷ்யாமின் தந்தையும் தாயும் விஜய்யை ஒரு வழியாக்கி இருந்தனர்.

“அவன் ரொம்பக் கெட்டுப் போனது உன்னால தான் விஜி… எல்லாம் தெரிஞ்சு இருந்தாலும் வேற வழியில்லாம பேசாம இருந்தேன்… உன்னைச் சொன்னா ஷ்யாம் கோபப்படுவான்னு…” நேரடியாக ஜோதி குற்றம் சாட்ட, விஜய்யால் எதுவும் பேச முடியவில்லை.

“அப்படியென்ன வெறி உங்க ரெண்டு பேருக்கும்? ஒரு குடும்பத்தைக் குலைக்கறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?”

“தெரியும் மேடம்… நான் நாய் வேஷம் போட்டுட்டேன்… குறைச்சு தான் ஆகணும்…” சிறிய குரலில் கூறியவனை அப்படியே வறுத்து எடுத்தால் என்னவென்று தோன்றியது ஜோதிக்கு.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விஷயம் மொத்தத்தையும் சொன்னது கார்த்திக். அதற்குப் பின்னாலிருந்து தூண்டியது மட்டுமே விஜய்.

இவர்களைப் பொறுத்தவரை இன்னமும் விஜய் ஷ்யாமின் கைத்தடி தான். ஜோதியாகக் கேட்டதால் விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஏனென்றால் விஜய் அந்த வட்டத்திலிருந்து வெளியே வர விரும்பவில்லை.

பரமசிவன் கழுத்திலிருக்கும் வரை மட்டுமே இந்தப் பாம்பிற்கு மதிப்பு என்பதும், வெளியே வந்தால் தன்னை மிதித்துத் தூக்கி எறிய எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர் என்பதும் அறிந்தவன் விஜய்.

மஹாவின் மேல் உள்ள காதலை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளவும் வேண்டும்… அதே சமயத்தில் ஷ்யாமை பகைத்துக் கொள்ளவும் கூடாது என்பதுதான் அவனது வியூகம். தானே சொன்னால் எப்படியும் ஷ்யாமுக்கு தெரிந்து விடும். அதே சமயத்தில் ஹைதராபாத்துக்குத் தெரியாமலும் இப்போது மறைத்து வைக்கவும் முடியாது என்று பல வழிகளில் யோசித்து, தன்னால் எப்படி விலாங்கு மீனாக நழுவ முடியும் என்று ஆலோசித்துத் தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.

அனைத்தையும் தாண்டி ஷ்யாமை பழி தீர்க்க வேண்டும் அவனுக்கு!

தீர்ப்பானா? தீர்க்கப்படுவானா?

****

மெல்லிய வெளிச்சம் முகத்தில் படர மெல்ல கண் விழித்தாள் மஹா. அந்த அதிகாலை நேரத்தின் குளுமையும் பறவைகளின் கீச் கீச் சப்தத்தையும் கேட்டபடி கண் விழிப்பது சொர்கமாக இருந்தது.

கைகளைத் தேய்த்தபடி எழுந்து அமர்ந்தவள் முதலில் கண்டது ஷ்யாமை தான். அந்த மலை முகட்டில் நின்று கொண்டு சூர்யோதயத்தைப் பார்த்தபடி நின்றது அவனா என்ற சந்தேகம் தான் தோன்றியது முதலில்.

கண்களைத் தேய்த்து விட்டுப் பார்த்தாள். தங்கமயமாக ஜொலித்த சூரியனை ஆழ்ந்து பார்த்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு பாறைமேல் சாய்ந்தபடி நின்றிருந்தது அவனே தான்!

எப்போது எழுந்தான் இவன்?!

இரவு அவள் விழித்திருந்த வரை அவனும் தான் விழித்திருந்தான்.

கஸ்டடி எடுத்ததற்கான காரணம் என அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தவளுக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது… கூடவே நடுக்கமும்! காரணம் புரியவில்லை. ஆனால் அந்த இரவும் தனிமையும் அதுவரை இல்லாத பயத்தை அவளுக்குள் அவளறியாமல் விதைத்து இருந்தது.

அவனது இயல்பையும் பழக்கங்களையும் அவன் வாயாலேயே கேட்ட பின்பும் அவனுடன் ட்ரெக்கிங் கிளம்பி வந்தது தவறோ என்று முதன் முறையாக மனதுக்குள் கிலி!

மனம் கடிவாளமற்ற குதிரையாக எட்டு திக்கும் பறந்தது, முந்தைய இரவை நோக்கி!

அவளது கண்கள் அவனது கண்ணில் தெரிந்த நேர்மையை ஆழ்ந்து நோக்கியது. அவன் மற்றவர்களுக்கு எப்படியோ, தனக்கு அவன் நேர்மையாளன் தானே என்று அவனுக்கு ஆதரவாகக் கூறியது.

என்னதான் ஆதரவைக் கொடுத்தாலும், சற்று எச்சரிக்கையாகவும் இருக்கச் சொன்னது மனது!

அவளும் எதற்கும் தயாராக இருந்தாள். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“ஏன் என்ன காரணம்?” குரல் அவளறியாமல் நடுங்கியதோ எனத் தோன்றியது.

மெளனமாக வானத்தை வெறித்தபடி படுத்திருந்தவன், டெண்டுக்குள் இருந்த அவளை நோக்கித் திரும்பிப் படுத்தபடி,

“ஹே ஷிவர் ஆகற மிர்ச்சி…” என்று சிரித்தான், அவன் சொல்ல வந்ததை மறந்து விட்டு!

“வாட்… நான் ஷிவர் ஆகறேனா? நோ… நோ சான்ஸ்…” சற்று திக்கியபடி கூறியது, குப்புற விழுந்தபின் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலத்தான் இருந்தது.

அதைக் கேட்டவனுக்கு இன்னமும் புன்னகை விரிந்தது. அவனது குறும்புப் புன்னகையைக் கண்டவளுக்குக் குட்டி கிருஷ்ணன் தான் நினைவுக்கு வந்தான். அவனைப் போலவே இவனும் சிரித்தே மயக்கும் கள்வன் போல… இந்தப் புன்னகையில் வீழ்பவர்கள் மீள்வது கடினமென்று தன தோன்றியது.

“ம்ம்ம்… ஓகே… ஷிவர் ஆகல… கொஞ்சம் நெருப்புக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்துக்க…” என்று அவன் அழைக்க,

“எனக்கு இங்கேயே கன்வீனியன்ட்டா இருக்கு…” என்று கைகளை உரசி கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

“உன்னை என்ன என் பக்கத்திலயா வந்து உட்கார சொன்னேன்? இன்னும் கொஞ்ச நேரத்துல குளிர் ஜாஸ்தியாகிடும்… அப்புறம் உன் இஷ்டம்…” என்றவன், அங்கேயே பெட்ஷீட்டை விரித்து விட, அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

“ஏன் உனக்குக் குளிராதா?” என்று அப்பாவியாகக் கேட்டவளை இதழில் வளைந்த குறுஞ்சிரிப்போடு,

“ஏன் மிர்ச்சி? நீ எதாவது தெர்மல் எனர்ஜி ப்ரோவைட் பண்ணலாம்ன்னு இருக்கியா?” என்று கேட்க, முதலில் புரியாத பார்வை பார்த்த மஹா, புரிந்தப்பின், கோபத்தில் முகம் சிவந்து, கையில் கிடைத்த கல்லை எடுத்து அவன்மேல் எறிந்தாள்.

“இப்பவும் ஜஸ்ட் மிஸ் மிர்ச்சி…” என்று அவளை மீண்டும் வம்பிழுக்க,

“டேய்… வேண்டாம்… முழுசா ஊர் போய்ச் சேரனும்ன்னு ஆசையில்லையா?”

“ஹேய் அதை நான் சொல்லணும்…” என்று அதற்கும் சிரித்தவனைப் பார்த்து எதுவும் சொல்லாமல் முறைத்தவள்,

“எக்கேடோ கெட்டுத் தொலை… நீ எப்படிப் போய்த் தொலைஞ்சா எனக்கென்ன?” என்றவள், டெண்ட்டின் திரையை இழுத்து ஸிப்’பை மூடிக் கொண்டு படுத்த போதுதான் அவன் ஆரம்பித்த கேள்விக்கு அவன் பதில் கூறாமல் பேச்சை மாற்றியது புலப்பட்டது.

மெல்ல தலையை நீட்டி வெளியே பார்த்தாள். கையில் சிகரெட்டோடு நிலவை வெறித்தபடி ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தான். விரல் நுனியில் தீக்கங்கு பளபளவெனயிருந்தது.

“ஷ்யாம்…” மெல்லிய குரலில் அவனை அழைக்க,

அவனோ திரும்பாமல், “ம்ம்ம்…” என்றான், சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தபடி.

“டேய்… ஷ்யாம்…” இவள் வேண்டுமென்றே அழைக்க,

“என்னடி?” அவளது ‘டா’ வுக்கு அவனது பதில் எப்போதும் ‘டி’ யாகத்தானே இருக்கிறது. பல்லைக் கடித்துக் கொண்டாள்.

“ஒரு நிமிஷம் இந்தப் பக்கம் திரும்பு…”

“சொல்லு… எனக்குக் காது நல்லாவே கேக்கும்…”

அவனது இது போன்ற பதில்களெல்லாம் அவளை இன்னுமே எரிச்சல் மோடுக்கு தாவச் செய்து விடும். இப்போதும் அதுபோல எரிச்சலானவள், டெண்ட்டை விட்டு எழுந்து, அவன் முன்னே சென்று நின்றாள்.

சிகரெட் நெடியை அவளால் தாள முடியவில்லை. இருமிக் கொண்டே,

“சரி… ஒரு பைவ் மினிட்ஸ் அங்க இருக்கேன்… இதை முடிச்சுட்டு வா…” என்றபடி சற்று தள்ளிப் போக முயல, அவன் கையிலிருந்த சிகரெட்டை அணைத்து விட்டு, எழுந்து கொண்டான்.

“உனக்கு ஸ்மோக் வரவேண்டாம்ன்னுதான் இவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்தேன்… இங்கயும் வந்து…” என்று முறைத்தவன், “இப்ப சொல்லு…” என்று கூற, அவனை யோசனையாகப் பார்த்தாள்.

“இந்தப் பழக்கம் உனக்கு எதுக்கு ஷ்யாம்? அதுவும் ரொம்பப் பிடிக்கற போல… உன் ரூம்ல அவ்வளவு கிடந்துச்சு…” என்று நிறுத்த,

“இது உனக்குத் தேவையில்லாதது மஹா… உன் வேலைய மட்டும் நீ பார்…” வார்த்தைகளில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அலட்சியம் தெறித்தது.

“ஆஸ் எ டாக்டரா சொல்றேன் ஷ்யாம்…”

“எனக்கும் எல்லா ஆணியும் தெரியும்… ஈவன் கஞ்சா கூட ஒரு தடவை ட்ரை பண்ணிருக்கேன்… எல்லாமே என் இஷ்டம் மட்டும் தான்… யாருக்கும் விளக்கம் சொல்லமாட்டேன்… இப்ப நீ கேட்க வந்ததை மட்டும் கேளு…” ‘கஞ்சா’ என்றதும் திக்கென்று நிமிர்ந்தவளால் அவனுக்குப் புரிய வைக்க முடியுமா? அவனாக வழிக்கு வந்தால் தானே உண்டு. ‘லூசு… எருமை…’ என்று விதம் விதமாக மனதுக்குள் திட்டிவிட்டு, தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டவளுக்குக் கேட்க வந்ததே மறந்து போனது.

“ஒன்னுமில்ல… நான் போறேன்…” என்றவளை, அவனது, “மஹா…” என்ற அழைப்புத் தடுத்தது. திரும்பி அவனைப் பார்த்தாள்.

“என்ன?”

“என்ன கேட்க வந்த?”

“ப்ச்… ஒண்ணுமில்ல…”

“சொல்லு…”

“ம்ம்ம்… பேசற மூட் போய்டுச்சு…” எங்கோ பார்த்தபடி கூறினாள். அவனும் சற்று இளக்கமாகப் பேசினால் கூடத் தேவலாம்… பதிலுக்குப் பதில் கடித்து வைத்தால்? என்ன பேசுவது?

“ஆனா எனக்குக் கேட்கற மூட் வந்துடுச்சு… சொல்லு…” குரலில் மீண்டும் குறும்பு எட்டிப் பார்த்தது.

“உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கேட்க முடியாது… எனக்கா தோணும் போதுதான் கேட்க முடியும்…” சற்று இறுக்கமாகக் கூறினாள்.

“உன்னோட இஷ்டத்துக்கு நானும் பதில் சொல்ல முடியாது… என் இஷ்டத்துக்குத் தான் பதில் சொல்ல முடியும்…” என்று அவனும் பதிலுக்குப் பதில் பேசினாலும் அவனது குரலில் கிண்டல் வழிந்தது.

“சரி… தனியா உட்கார்ந்து பேசிக்க…” என்று அவள் மீண்டும் போக முயல, அவளது கையைப் பிடித்து இழுத்துத் தனக்கருகில் நிறுத்தி வைத்தான்.

“ஏய் கையை விடு…” அவள் கையை உதற முயல, அவளது கையை விடுவித்துவிட்டு அங்கிருந்த பாறைமேல் வசதியாகச் சாய்ந்து கொண்டவன்,

“சொல்லிட்டு போ மிர்ச்சி…” என்று அமர்த்தலாகக் கூற, அவனை முறைத்தாள். ஆனாலும் சொல்லாமல் அவன் விடமாட்டான் என்பதும் புரிந்தது. அவன் நினைத்ததை மட்டுமே செய்ய வேண்டுமா என்ற எரிச்சல் எட்டி பார்த்தது. இதென்ன அதிகாரம் என்ற கோபமும் எழ அவள் கைகளைக் கட்டிக்கொண்டு மெளனமாகத் தூரத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள்.

சற்று நேரம் மௌனமாகவே கழிய, அவளது கையை விடுவித்தவன், அவளது இடது கையைப் பிடித்துத் தன்னுடனே கீழே புல்லில் அமர்ந்தான், கால்களை நீட்டிக் கொண்டு. அவளுக்கும் மறுத்து பேசத் தோன்றவில்லை.

எதிரே நெருப்பு ஜுவாலைகள்! அதன் வெப்பம் அவர்கள் வரையுமே பரவியிருந்தது, ஊசிபோலக் குத்திய குளிரையும் தாண்டி!

“மஹா…” என்ற அவனது அழைப்புக்கு, அவள் பதில் கொடுக்கவில்லை. மெளனமாக நெருப்பைப் பார்த்தபடி இருந்தாள்.

“ஏய் லூசு…” என்று வேண்டுமென்றே அவன் வம்பிழுக்க, திரும்பி அவனை முறைத்தாள்.

“செம சிச்சுவேஷன்ல?” என்று குறும்பாகக் கேட்டவனை இன்னமுமே முறைத்தாள். இன்னமும் அவள் கோபத்தில் தான் இருந்தாள், அவன் எடுத்தெறிந்து பேசியதில்!

‘பேசுவதெல்லாம் பேசிவிடுவானாம், ஆனால் ஒன்றுமே பேசாதது போலத் திரும்ப அவன் பேசினால் தானும் பேசிவிட வேண்டுமா என்ன?’ மனதுக்குள் அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள்.

“செம ரொமாண்டிக் சிச்சுவேஷன்… சில்லுன்னு கிளைமேட்… யாருமே இல்லாத ஒரு வனாந்திரம்… டென்ட்… கேம்ப் ஃபயர்…” என்று ரசனையாகச் சொல்லிக்கொண்டே வந்து நிறுத்தியவன், “ஒரு நல்ல ஃபிகரை தள்ளிட்டு வந்திருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்…” என்று இதழோரம் சிரிப்பை அதக்கியபடி கூறியவனைத் திரும்பிப் பார்த்து எரித்தாள், பார்வையால்!

“ஏன்… நல்ல ஃபிகரை இழுத்துட்டு வர வேண்டியதுதானே?” கடுப்பாக இவள் கேட்க, அவனது முகத்தில் சிரிப்பு பரவியது.

“என்ன பண்றது? என் நேரம்… உன்னை மாதிரி ஒரு சப்பை ஃபிகரோட வரணும்ன்னு இருக்கு…” என்று அலுத்துக் கொண்டவனைக் கொலைவெறியோடு பார்த்தவள், அதற்கும் மேல் பேசாமல் எழ முயல, திரும்பவும் அவளது கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தான்.

“எப்பருந்து இப்படித் தொட்டாசிணுங்கியான மிர்ச்சி?” என்று புன்னகையோடு கேட்டவன், “உன்கிட்ட பிடிச்சதே பதிலுக்குப் பதில் நீ கொடுக்கற பன்ச் டைலாக் தான்…” என்று விரிந்த புன்னகையோடு கூறியவனை எரிச்சலாகப் பார்த்தாள்.

“உன் இஷ்டத்துக்குப் பேசுவ… அப்புறம் ஒண்ணுமே நடக்காத மாதிரியும் பேசுவ… என்னால அப்படி இருக்க முடியாது…” இறுக்கமாகக் கூறியவளை புன்னகை மாறாமல் பார்த்தவன்,

“சரி… என்ன சொல்ல வந்த… இப்ப சொல்லு…”

“அதெல்லாம் சொல்ல முடியாது… எனக்கு மூட் இல்ல…” முகத்தை அவள் திருப்பிக் கொள்ள, ‘ஷப்பா… மிடில…’ என்று நினைத்துக் கொண்டவன்,

“சரி… உன் முன்னால நான் சிகரெட் பிடிக்கறதை குறைச்சுக்கறேன்… போதுமா?” என்று வழிக்கு வந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். “இப்ப சொல்லு…” என்று கேட்டவனை மலர்ந்த சிறு புன்னகையோடு பார்த்தவள், உண்மையிலேயே வியப்பாகத் தானிருந்தது.

“என்னை எதுக்காக கஸ்டடி எடுத்த ஷ்யாம்?” அவனது கண்களை நேராகப் பார்த்துக் கேட்க, அந்த இரவு நேரத்தில் அவளது கண்களை நேர்கொண்டு பார்ப்பது பெரும்பாடாக இருந்தது அவனுக்கு! ஏனென்று புரியவில்லை!

ஆனாலும் நேராகவே பார்த்தான்!

“ம்ம்ம்… சொல்றேன்… ஆனா ஒரு கண்டிஷன்…” என்று நிறுத்தியவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“இந்தக் கண்டிஷன் போடறதை விட மாட்டியா?”

“ஏன் விடனும்?”

“உன் கல்யாணத்துக்கும் மணல் கயிறு கிட்டுமணி மாதிரி கண்டிஷன் போடாம இருந்தா சரி…” என்று அவள் புன்னகைக்க, அதைக் கேட்டவன் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். ‘இது அவ்வளவு பெரிய ஜோக் இல்லையே’ என்று யோசித்தவள் அதையே சொல்ல,

“மேரேஜே ஒரு ஜோக்… ப்ராக்டிகல் ஜோக்… இன்னும் சொல்லப் போனா நம்மை நாமே ஏமாத்திக்கற ஒரு பிரான்க்…” சிரிப்பை அடக்கிக்கொண்டு வெகு இயல்பாக இவன் சொல்லியதை கேட்டவளுக்கு ஐயோவென்றிருந்தது.

“ஏன் ஷ்யாம்? உனக்கு ஏதாவது லவ் ஃபெய்லியரா?” சற்று ஆதரவாக இவள் கேட்க,

“லவ்வா? ஓ மை காட்…” என்று இன்னும் பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

“ஏன்டா லூசு இப்படிச் சிரிச்சு தொலைக்கற? இந்த இடத்துக்கும் அதுவுமா ரொம்பப் பயமா இருக்கு…” கண்களில் பயத்தோடு அவள் கூறியதை கேட்டவனுக்கு இன்னமுமே சிரிப்பு வந்தாலும், அடக்கிக் கொண்டான்.

“ஓகே… ஓகே…” என்று சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன், “நான் ஓபனா சொல்லிடுவேன் மிர்ச்சி… ஆனா நீ பொண்ணா போய்ட்ட…” என்று நிறுத்த,

“சொல்லித்தொலை… எத்தனையோ கேட்டாச்சு… இதைக் கேட்க மாட்டேனா?” என்று கூறியவளின் முகத்தில் மெல்லிய எரிச்சல்.

“ஒரு கப் காபிக்காக ஒரு மாட்டையே வாங்கிக் கட்ற அளவு நான் முட்டாளில்லை…” என்றவனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு முகம் கசப்பாகக் கசங்கியது.

“இது ரொம்பத் தப்பு… மேரேஜ்ங்கற இன்ஸ்டிஷனையும் நீ மதிக்கல… அதோட பொண்ணுங்களையும் நீ மதிக்கலை… உனக்கு எல்லாம் ஈசியா கிடைச்சுட்டதால இப்படி இருக்க ஷ்யாம்…” அவளது கசப்பு மாறவில்லை.

“எஸ்… பொண்ணுங்க மேல பெருசா ஒன்னும் மதிப்பெல்லாம் கிடையாது… ஜஸ்ட் ஒரு ஸ்பீசிஸ்… அவ்வளவுதான்… எனக்கு யூஸ் ஆகும்போது யூஸ் பண்ணிக்கறேன்… அதுல என்ன தப்பு?” என்று அவனது மனதை மறைக்காமல் அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கூறுவாள்? உள்ளுக்குள் நடுக்கம் பரவியதை போல உணர்ந்தாள்.

“ரொம்பப் பேட் தாட் ப்ராசஸ் ஷ்யாம்…” அதே கசப்போடு அவள் கூற,

“எஸ்… அப்கோர்ஸ்… ஐ நோ… பட் திஸ் இஸ் ஷ்யாம்…” என்று நிறுத்தியவன், “மேரேஜ்னா ஒரே பொண்ணு கூட இருக்கணும் மிர்ச்சி… அது எனக்கு ஒத்து வராது…” என்று முடித்தவனுக்கு என்ன பதில் கூறுவாள்? இது போன்ற கருத்துரையாடல்கள் எல்லாம் அவளுக்குப் புதிது.

மெளனமாக நிலத்தைப் பார்த்தாள்.

“என்னை நீ கேசனோவான்னு கூட நினைக்கலாம்… எனக்குத் தெரியல… எப்படி டிஃபைன் பண்றதுன்னு… எந்த விஷயமா இருந்தாலும் ஒரு தடவை பார்த்துட்டா எனக்கு இன்ட்ரெஸ்ட் போய்டுது… எந்த அட்வென்ச்சரா இருந்தாலுமே எனக்கு அப்படித்தான்… ஸ்கை டைவிங் துபாய்ல ஒரு தடவை போனேன்… இவ்வளவுதானா இதுன்னு ஆகிடுச்சு… இன்ட்ரெஸ்ட் போய்டுச்சு… அப்படித்தான் கேர்ல்சும்… யூஸ் ஒன்ஸ் ரகம் தான்… இப்படி இருக்கப்ப மேரேஜ்னா…” என்று சிரித்தவன், “சாத்தியமே இல்ல…” என்று முடித்தவனை வெறித்துப் பார்த்தாள்.

இவ்வளவு வெளிப்படைத்தன்மை சாத்தியமா? இவன் எப்போதுமே இப்படித்தானா? இல்லையென்றால் இப்போதுதான் இப்படியா?

“மோர் ஓவர் மேரேஜ் அண்ட் லவ்ங்கற கான்செப்ட்டே ஓவர்லி ஹைப்ட்… அதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை… ஏதோ ஒரு தேவை… அதை எப்படி வேண்ணா தீர்த்துக்கலாம்ங்கறபோது, அந்தக் கான்செப்ட்க்கே அர்த்தம் இல்ல…”

“அப்படீன்னா குடும்பம், பாசம், தியாகம் இதுக்கெல்லாமும் அர்த்தம் இல்லையா?” இறுக்கமாகவே கேட்டாள்.

“வி ஹியுமன்ஸ் ஆர் சோஷியல் அனிமல்ஸ்… ஜஸ்ட் சோஷியல் அனிமல்ஸ்… அதாவது பதப்படுத்தப்பட்ட, ஒரு விஷயத்துக்குப் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினம்… அதைப் புரிஞ்சுகிட்டா இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லைன்னு நீயே சொல்லிடுவ…”

“நான் கண்டிப்பா சொல்லமாட்டேன்… எனக்கு என்னோட குடும்பம் வேணும்… பியுச்சர்ல அமைதியான நிம்மதியான குடும்ப வாழ்க்கை வேணும்… ரொம்பச் சிம்பிளா என்னை மட்டும் லவ் பண்ற ஹஸ்பன்ட், அழகான குழந்தைங்க… தேவைக்கு ஒரு வேலை… அம்மா அப்பாவோட அன்பு… அண்ணாவோட செல்லம்… பாட்டியோட தொல்லையில்லாம என்னால என்னோட லைப்பை கற்பனை கூடப் பண்ணி பார்க்க முடியல…” சற்று உணர்ச்சிவசப்பட்டுத்தான் கூறினாள்.

அதைக் கேட்டவனுக்குத் தான் சிரிப்புப் பொங்கியது.

“இதுதான் நார்மல் பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு மஹா… தப்பில்ல… கோ அஹெட்… உனக்கு ஒரு ஏமாளி கிடைக்காமலா போய்டுவான்?!” என்றவனை உக்கிரமாக முறைத்தாள்.

“நீயொண்ணும் எனக்குச் சொல்லத் தேவையில்லை… உன் வேலைய பாரு…” என்று கடுப்படித்தவளை பார்க்கையில் இன்னுமே சிரிப்புப் பொங்கியது.

“உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கு, ‘நீ ரொம்ப அழகா இருக்க’ன்னு தினம் பத்து தடவை சொல்ற பொய் சொல்ற ஹாஃ பேக்ட் பாய் ஃப்ரென்ட் இல்லைன்னா ஹஸ்பன்ட் வேணும்… லவ்ங்கற பேர்ல கண்டதையும் உளறிட்டு பப்ளிக்ல பாதியும் ப்ரைவேட்ல மீதியும் முடிக்கற சின்சியர் சில்லி ஃபெல்லோஸ் வேணும்… கேட்டா இதுதான் கல்ச்சர், கலாசாரம்ங்க வேண்டியது… அவனோட இருந்து, பிடிக்குதோ பிடிக்கலையோ குழந்தைங்களைப் பெத்து, அதுங்களையும் உங்களை மாதிரியே ஒரு கல்ச்சர கட்டி காப்பாத்தற மெஷினரியா பழக்கப்படுத்தனும்… ரைட்?” என்றவன், “சென்டிமென்டல் ஃபூல்ஸ்…” என முடிக்க,

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

“எஸ் ரைட்… யு வார் சென்ட் பர்சன்ட் ரைட்… சோ வாட்? அதனால உனக்கென்ன கஷ்டம் வந்தது… நாங்க அப்படி இருக்க மெஷினரி தான்… சென்டிமென்டல் ஃபூல்ஸ் தான்…” என்று கோபமாக ஆரம்பித்தவள், “ரொம்பக் கஷ்டம் ஷ்யாம்… ரொம்பவே தப்பும் கூட…” கசப்பாக முடித்தாள்.

அவளது வார்த்தைகளில் கசப்பை தாண்டி ஏதோ இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகக் கூறுபவனை அவளால் வெறுக்க முடியவில்லை. ஆனால் அவன் கூறுவதையெல்லாம் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.

“எஸ்… தப்புதான்… ஆனா நான் பண்ற ஒவ்வொரு தப்போட பின்விளைவும் எனக்கு நல்லாவே தெரியும்… உன்னை கஸ்டடி எடுத்ததும் கூட அப்படித்தான்…” என்று கூறியவன், “ஆனா அதுக்கான காரணம்…” என்று நிறுத்தியவன், அவளது முகத்தைப் பார்க்க, அவள் அதற்கான பதிலை கேட்க விசாரமாகக் காத்திருந்தாள், எதுவும் எக்குதப்பாக இவன் கூறிவிடக் கூடாதே என்ற வேண்டுதலோடு!

“சொல்றேன்…” என்றான் புன்னகையோடு! “ஆனா ஒரு பாட்டு பாடு… நான் சொல்றேன்…” என்று முடிக்க, அவளுக்குச் சப்பென்றானது.

“லூசா நீ?” வெளிப்படையாகத் தனது எரிச்சலை காட்டினாள்.

“அட நிஜமாவே தான் மிர்ச்சி… ஒரே ஒரு பாட்டு பாடு… கண்டிப்பா சொல்வேன்…”

“நீ நினைச்சப்ப எல்லாம் என்னால பாட முடியாது ஷ்யாம்…” நிர்தாட்சண்யமாக இவள் மறுக்க,

“ஏன் பாட முடியாது… எவ்வளவு அமைதியான சிச்சுவேஷன்… கவிதையா இருக்கு… இங்க பாட வராதா உனக்கு?”

“வராது… அதுவும் உன் முன்னாடி வராது…”

“அதான் ஏன்னு கேக்கறேன்?”

“கை காலை கட்டி போட்டுட்டு ஆடுன்னு சொன்னா ஆட முடியுமா? அதுக்கெல்லாம் ஃபீல் வேணும்… எனக்கா தோணனும்… நீ பாடுன்னு சொன்னவுடனே பாட நான் ஒன்னும் ரோபோ கிடையாது… ரத்தமும் சதையுமா இருக்க மனுஷி… இன் ஷார்ட், ஐ ஆம் எ சென்டிமென்டல் ஃபூல்…”

ஷ்யாம் எதுவும் பேசாமல் எதிரே கனன்று கொண்டிருந்த நெருப்பு கங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். மௌனத் திரை கனமாக இருந்தது.

பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்க, நேரம் தேய்ந்து கொண்டிருக்க, அந்த நிலவை ரசிக்கத்தான் இருவருக்குமே மனம் இல்லை.

மெல்ல தன் நிலைக்கு வந்தாள் மஹா.

மௌனத்தைக் கட்டுடைக்காமல் அவனது முகத்தை ஏறிட்டாள். அவளால் எந்த உணர்வையும் பிரித்தறிய முடியவில்லை. இவன் என்ன நினைக்கிறான் என்பதையும், ஏன் செய்கிறான் என்பதையும் கணித்து விட்டால் அவன் தான் கடவுள் போல என்று நினைத்துக் கொண்டாள்.

தன்னைச் சுற்றி பார்த்தாள். எரிந்து கொண்டிருந்த பெருநெருப்பு இப்பொது வெறும் கங்குகளாக இருக்க, நெருப்பு அணைந்ததால் நெடி வீசியது.

காற்று சற்றுப் பலமாக வீச, குளிரில் அவளுக்கு வெடவெடத்தது. அவனோ எந்தவிதமான உணர்வும் இல்லாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தான்.

கொஞ்சம் அதிகமாகத்தான் விவாதம் போய்விட்டது போல என்பதுதான் இருவரது மனதிலும்!

“எனக்குத் தூக்கம் வருது ஷ்யாம்…” என்று அவள் எழுந்து கொள்ளப் பார்க்க, அவன் அவளது கையைப் பிடித்து எழாமல் அமர வைத்தான். ஆனால் அவளது முகத்தைப் பார்க்கவில்லை.

எரிந்து முடிந்த கங்குகளைப் பார்த்தபடி, “யுவர் வாய்ஸ் ஹான்டட் மீ… இட் மெஸ்மெரைஸ்ட் மீ…”

அவள் எதுவும் புரியாமல் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பத்தொன்பது

‘உனது குரல் என்னை வேட்டையாடிவிட்டது’ என்று கூறியவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.‘இவன் என்ன சொல்கிறான்?’அவனது முகத்தைக் கொண்டு எதையும் கண்டுக்கொள்ள முடியவில்லை. கங்குகளின் வெளிச்சம் பட்டு அந்த இடமே சிவந்து கிடந்தது. அதே சிவப்பு அவனது இறுக்கமான முகத்திலும் பிரதிபலித்து, அவளது மனதுக்குள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்