arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் ஐம்பத்து ஒன்று
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 51 / 64

அத்தியாயம் ஐம்பத்து ஒன்று

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

வெகு ஆடம்பரமாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அத்தனை மகிழ்ச்சி… அத்தனை குதூகலம்… மூன்று நாட்களை ஒரு திருவிழாவை போல நடத்தி முடித்திருந்தனர் கார்த்திக்கும் ஆத்மநாதனும்! முருகானந்தம் உடல்நிலையை கருத்தில்கொண்டு வேலைகளை செய்யவில்லை. அதற்கு ஈடு செய்வது போல கார்த்திக் சுழன்றடித்து இருந்தான். உடன் பிருந்தாவின் தந்தையும் சேர்ந்து கொள்ள, வீடு களைகட்டி இருந்தது.

அந்த மூன்று நாட்களில் பழையனவற்றை எல்லாம் முற்றிலுமாக மறந்து திருமண வைபவத்தை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தாள் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் எதனோடும் பெரிதாக ஒட்டாமல் தான் இருந்தாள் மஹா. பெரியவர்கள் செய்ய சொன்னதை செய்தாள். உட்கார சொன்னபோது உட்கார்ந்தாள். நில் என்று சொன்னபோது நின்றாள். இவற்றையெல்லாம் வெட்கம் என்று நம்பி அவளை கலாட்டா செய்தது அவளை சுற்றியிருந்த கூட்டம்.

மருத்துமனையில் விஜி ஓரளவு உடல் ரீதியாக தேறி இருந்தான் என்றாலும் மன ரீதியாக அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் அறிய முடியவில்லை. மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே!

இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு பைரவியின் எதிர்ப்பையும் மீறி சென்றிருந்தாள்.

“ஹாய் எப்படி இருக்கீங்க?” எப்போதும் போல ஆரம்பித்தவள், அவனது வைட்டல்ஸ் செக் செய்துவிட்டு, அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.

அவனை அறைக்கு மாற்றியிருந்தனர். காயமெல்லாம் ஆறியிருந்தது. ஆனால் காலில் இரண்டு பெரிய எலும்பு முறிவு என்பதால் இன்னமும் நடை சரியாகவில்லை. எலும்பு கூட எப்படியும் இன்னும் இரண்டு வாரமாவது ஆகி விடும் என்பதால் அவனை ரொம்பவும் நடக்க விடவில்லை.

நடக்காமலிருக்கக் கூடாது என்பதால் காலை மற்றும் மாலை இரு வேளையும் பிசியோதெரபிஸ்ட் லேசாக நடக்க வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தான் என்றாலும், அப்போதும் மௌனம் மட்டும் தான்.

அன்று ஷ்யாமை அழைத்துக் கொண்டு வராமல் தனியாகத்தான் வந்திருந்தாள்.

விஜி பேசவில்லை. தலையும் அசைக்கவில்லை. அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தான்.

“எப்படி இருக்கீங்க?” என்று மீண்டும் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன், லேசாக மட்டும் தலையாட்டினான்.

முற்றிலுமாக மௌனித்து இருந்தான் விஜி. வலித்தால் கூட வாய் திறந்து சொல்லாத நிலையிலிருந்தான். எல்லோரிடமும் அப்படித்தான் என்பது மருத்துவர்கள் கூறும் ஸ்டேட்மெண்ட். தாயும் தம்பியும் வந்தாலும் அவர்களிடமும் அதே முகம் தான். எதுவுமே மாறவில்லை.

அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஏதாவது குடிக்க வேணுமா?” என்று கேட்டாள். அதே மௌனம் தான்!

அறைக்கு வந்திருந்த ஜூஸை, தானெடுத்து அவனிடம் கொடுத்தாள். பதில் பேசாமல் வாங்கி அருந்தினான்.

கொடுத்தால் குடிக்கிறான். ஆனால் கேட்பதும் இல்லை. பேசுவதும் இல்லை.

மருத்துவரிடம் கேட்டதற்கு, இதெல்லாமே போஸ்ட் ட்ராமாட்டிக் டிப்ரஷனின் விளைவுகள் என்றார்.

“அப்படீன்னா பழசு நினைவுக்கு வந்திருக்குமா டாக்டர்?”

“அதை கண்டுபிடிக்க முடியல மேம்… ஆனா அவர் இப்ப உடல்ரீதியா நார்மலாகிட்டார். கண்கள் அலைபாயல. டிஸ்ஓரியண்டட்டா பேசலை. மற்ற ஆக்டிவிடீஸ் நார்மலா இருக்கு… இன்னொரு டூ வீக்ஸ்ல நார்மலா நடக்க ஆரம்பிச்சுவார்…” என்று கூற, அதை தான் விஜயிடமும் கூறிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க நார்மலா நடக்க ஆரம்பிச்சுடுவீங்க விஜி…” என்றவளை அப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“எனக்கும் ஷ்யாமுக்கும் மேரேஜ்…” என்றவள், அழைப்பிதழை எடுத்து, அவனது பெயரை எழுதினாள்.

“உங்க ஃபுல் நேம் என்ன?” என்று அவனைப் பார்த்து கேட்க, நிமிர்ந்து அவளை பார்த்த கண்களில் என்ன இருந்தது என்று மஹாவால் கணிக்க முடியவில்லை.

“பாவா உங்களை விஜின்னு கூப்பிட்டு தான் பார்த்து இருக்கேன். ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ்ல விஜய்ன்னு இருக்கு.. வெறும் விஜய்யா இல்ல ஏதாவது கூட இருக்கான்னு கேட்டேன்…” என்று விளக்கமும் கூற, அவளை வெறித்துப் பார்த்தான்.

“விஜயன்… விஜயன் சுவாமிநாதன்…” அவளை பார்த்தபடி அத்தனை நாட்களில் முதல் தடவையாக பேசினான்.

அவளது கண்கள் ஒளிர்ந்தது.

ஆக இவனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டது… ஏன் அதை காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருக்க வேண்டும்? எப்போது இது நடந்திருக்கக் கூடும்? வேண்டுமென்றே மறைத்து வைத்து இருக்கிறானா? அல்லது பேச சங்கடப்பட்டுக் கொண்டு இருக்கிறானா?

இல்லையென்றால் மீண்டும் எதையாவது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறானா?

அவளுக்கு புரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. குணமாகி விட்டான் என்றதும் மனதுக்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரம் ஏதோ விடுபட்டது போல இருந்தது. ஷ்யாம் இவனை நடத்தியதில் ஏற்பட்ட குற்ற உணர்வு மெல்ல விலகுவது போல உணர்ந்தாள்.

ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அவனது பெயரை எழுதி, பத்திரிக்கையை அவனிடம் கொடுத்தாள். மெளனமாக கையிலிருந்த அழைப்பிதழை வெறித்துப் பார்த்தான்.

வெகு ஆடம்பரமான அழைப்பிதல். சும்மாவா? இரண்டு மொழி சினிமாவை விரல் நுனியில் வைத்துக் கொண்டு ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் ராட்சஷனின் திருமணம். இந்திய அளவில் பெயர் சொல்லக் கூடிய நிறுவனம். அத்தனை அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி தருபவன். அவர்கள் ஒவ்வொருவரின் முதுகெலும்பு! அவனது திருமணம் என்றால் சும்மாவா?!

இன்னும் ஐந்து நாளில் திருமணம் என்பதை பார்த்தவன், என்ன உணர்ந்தான் என்றே தெரியவில்லை. மகாவுடனான உறவு என்பதை இனி நினைத்தும் பார்க்க முடியாத கட்டத்துக்கு எப்போதோ போய்விட்டது. ஆனால் ஷ்யாம்? அவனை நினைக்கும் போதே விஜியின் முகம் இறுகியது.

“ஆல் தி வெரி பெஸ்ட்…” என்றவனை கூர்மையாக பார்த்தாள்.

“மனசுல இருந்து வாழ்த்தனும்… வெறும் மேம்போக்கான வாழ்த்து எனக்கு வேண்டாம்…” அவனை பார்த்தபடியே கூறியவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“நான் விஷ் பண்றது உங்களுக்காக மேம்… உங்களுக்காக மட்டும் தான்… உங்க விஷயத்துல நான் எதையுமே மேம்போக்கா செய்யக் கூடாதுங்கற பாடத்தை எப்பவோ கத்துகிட்டேன்…” மெல்லிய குரலில் கூறினாலும் அழுத்தமாக கூறியவனை சிறு மனத்தாங்கலோடு பார்த்தாள். அதிலும் அவனது ‘மேம்’ என்ற அழைப்பு, அவனது மனம் அவள் விஷயத்தில் தெளிவாகிவிட்டதை உணர்த்த, சிறு புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.

“உங்களை புரிஞ்சுக்கவே முடியல… ஏன் இவ்வளவு வஞ்சம்? ஏன் இவ்வளவு பெரிய துரோகம்? ஷ்யாம் என்ன பண்ணிட்டார்? இத்தனை நாளா உங்க மேல அவ்வளவு பெரிய நம்பிக்கை வெச்சு இருந்தாரே அதுக்கு நீங்க காட்ற பிரதிபலிப்பு இதுதானா? உங்களை என்னைக்காவது வேலைக்காரரா நடத்தியிருப்பாரா? ஒரு ப்ரென்ட் மாதிரி ட்ரீட் பண்ணவருக்கு நீங்க செஞ்ச பிரதியுபகாரம் என்ன?”

அவளது மனதுக்குள் வைத்தபடி குமைந்த கேள்வியெல்லாம் மூச்சு விடாமல் கேட்க, அவன் மௌனமாய் தலை குனிந்தான். அவள் ஷ்யாமை வறுத்தெடுப்பாள். ஆனால் வேறு யாரும் அதை செய்ய விட முடிவதில்லை. இப்போதுமே அவன் மேல் இருக்கும் கோபம் எல்லாம் மாறவில்லை. ஆனால் விஜியை கேள்வி கேட்காமலும் இருக்க முடியவில்லை.

“ரீசன் நீங்கதான்…” தலைகுனிந்தபடியே கூற, அவளது முகத்தில் கோபம் தெறித்தது. அவனது அந்த வார்த்தைகள் அவளை கொதிக்க செய்தது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘நீதான்’ என்றால் தான் ஒப்புக்கொள்ள வேண்டுமா? ஷ்யாமிடம் வேண்டுமானால் அவன் இப்படி பேசி அவனை எரிச்சல்படுத்த முயலலாம். ஆனால் தன்னிடம் அந்த வேலையை காட்டக் கூடாதே. அதுவரை அவன் மேல் இருந்த பெரிய பரிதாபம் எல்லாம் காணாமல் போனது.

“பொய் சொல்றீங்க… நான் தான் ரீசன்ன்னா அந்த வீடியோஸ் எப்படி வந்தது? போட்டோஸ் எப்படி வந்தது? எப்ப எடுத்தீங்க? கண்டிப்பா அது எனக்கு நீங்க ரெண்டு பேருமே அறிமுகமாகறதுக்கு முன்னாடி எடுக்கப்பட்டதா தான் இருக்கணும்… அப்ப என் மேல உங்களுக்கு என்னங்க அட்ராக்ஷன் இருந்துது? பொய்ய திரும்ப திரும்ப சொன்னா அது உண்மையாகிடாது…” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள். அத்தனையும் அவள் மனதுக்குள் வைத்துக்கொண்டு, கோபத்தையும் தேக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தாள்.

“ஆனா அந்த போட்டோஸ் எல்லாம் உண்மைதானே மேம்?” சிறு குரலில் விஜி கூறியதை கேட்டவளுக்கு இன்னுமே கோபம் வந்தது. இவன் திருந்த மாட்டானா என்ற எரிச்சல்.

“அது உண்மையோ பொய்யோ? அவரோட பர்சனல் உங்களுக்கு எதுக்கு? அதுவும் அதை டாக்குமென்ட் பண்ற அளவுக்கு ஏன் போகணும்? அவரை பத்தி நான் தான் கவலைப்படணும்… என் பேரை வெச்சு பொய் சொல்லாதீங்கன்னு சொல்றேன்…” கொஞ்சமும் தயங்காமல் முகத்துக்கு நேராக அவள் கூறிய வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது முக மாறுதலே தெரிவித்தது.

“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல மேம்… அப்படிப்பட்ட ஒருத்தர் உங்களுக்கு தேவையான்னு தான் அப்ப யோசிச்சேன்…” உண்மையில் அவனது எண்ணமும் முதலில் அதுவாகத்தான் இருந்தது. ‘மஹா’ போன்ற பெண்ணுக்கு ஷ்யாம் தேவையா? என்ற எண்ணம்! அவனை போன்ற ஸ்த்ரீலோலனுக்கு இப்படிப்பட்ட ஒழுக்கமான பெண் தேவையா என்று தான் நினைத்தான். ஆனால் அவனுமே அப்படித்தான் என்பதை மறந்து போயிருந்தான்.

“அதை நான் தான் டிஸைட் பண்ணனும்… நீங்க இல்ல விஜி… பாழுங்கிணத்துல விழறதுன்ன்னு கூட நான் டிஸைட் பண்ணிட்டா, நான் விழுவேன்… அதை பற்றி நீங்க கவலைப்பட தேவையில்லை… அது என் இஷ்டம்…” அவளது பிடிவாதத்தின் முழு சொருபத்தினை கண்டவன் மலைத்தான். இந்தளவுக்கு இந்த பெண் பேசுமா என்ற ஆச்சரியம் வேறு!

“நீங்க நல்லா இருக்கனும்ன்னு நினைச்சேன்…” எங்கோ பார்த்துக் கொண்டு அவன் கூற,

“இப்ப நான் என்ன நாசமா போயிட்டேனா? ரொம்ப நல்லா இருக்கேனே…” வெகு தீர்க்கமான வார்த்தைகள்… உண்மைதானே!

“ஆனா அத்தனை போட்டோசையும் பார்த்துட்டு எப்படி மேம் உங்களால தில்லா நிற்க முடியுது?” ஆதங்கமாக அவன் கேட்க, அவனை உறுத்து பார்த்தவள்,

“மத்தவங்களுக்கு எப்படியோ, என்னை பொறுத்தவரை அவர் நேர்மையானவர்… எனக்கு உண்மையா இருக்காங்க, இனிமேலும் இருப்பாங்க… ஆமான்னா ஆமான்னு தான் சொல்லுவாங்க… மறைச்சு வெச்சு இல்லைன்னு சொல்லவே மாட்டாங்க… ஆனா இதையெல்லாம் நான் யார்கிட்டவும் விளக்க வேண்டிய அவசியம் இல்ல…”

யாரிடம் விளக்க வேண்டும். இது குறித்தான விளக்கத்தை கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது? ஷ்யாமை பற்றி தான் அறியாமலா திருமணம் வரை சம்மதித்து இருக்கிறோம் என்ற எரிச்சல் வேறு. ஆனால் உள்ளுக்குள் ஷ்யாமின் மீதான கோபம் கொஞ்சமும் குறையவில்லை. இப்படியெல்லாம் தன்னை விளக்கம் கூறுமளவு வைத்து விட்டானே அவனது செயல்களால் என்ற எரிச்சல்! எதற்ககெல்லாம் சப்போர்ட் செய்ய வேண்டியிருக்கிறது என்ற கோபம். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள். விட்டுக் கொடுக்க மாட்டாள். ஆனால் இப்போது அவன் சிக்கினால் சிக்கன் 65 போடும் வெப்பத்தில் இருந்ததை விஜி அறியவில்லை.

“அப்படீன்னா எப்படி இருந்தாலும் நீங்க அக்செப்ட் பண்ணிடுவீங்க… இல்லையா?” என்றதும் எரிச்சலின் உச்சிக்கு போனாள். இவன் என்ன சொல்வது இதை என்ற எரிச்சல்!

“அக்செப்ட் பண்றேன் பண்ணலைங்கறது என்னோட முடிவு… அதை பற்றி மத்தவங்க எதுக்கு கவலைப்படணும்?” என்று முகத்தை சுருக்கியவள், “ஆனா அந்த மியுசிக் கான்செர்ட்க்கு முன்னாடி இருந்த ஷ்யாம் வேற, இப்ப இருக்க ஷ்யாம் வேற… ஹீ இஸ் ட்ரூலி கமிட்டெட்… மத்தவங்க மாதிரி கிடையாது…”

“அதை எப்படி அவ்வளவு ஷ்யுரா சொல்றீங்க?”

“ஏன்னா அது எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்… அதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது… மோர் பர்சனல்…” என்று அவனை தள்ளி நிறுத்த, அவனது முகம் இறுகியது.

அவனது கண்களில் தான் ஆழ்ந்து போனதையும், அவன் தன்னுடைய குரலில் கரைந்து போனதையும் யாரிடம் சொல்ல தேவை இருக்கிறது? அது தன்னுடைய மனதுக்கும் ஷ்யாமுக்கும் மட்டுமேயான, இருவருக்கு மட்டும் உரிமையான தனிப்பட்ட உணர்வல்லவா! மனம் மென்மையானது… அந்த நாளின் தாக்கத்தில் ஆழ்ந்து போனது. உலகம் தலகுப்பாவோடு முடிந்து இருக்கக் கூடாதா என்று ஏங்கியது!

அவன் மெளனமாக அவளை பார்க்க, “அந்த மியுசிக் கான்சர்ட்க்கு அப்புறம் தான் உங்களுக்கும் என்னை தெரிஞ்சு இருக்கனும்… ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க இப்படிப்பட்ட துரோகம் பண்ணிருக்கீங்க…” நிதானமாக, அமைதியாக அவள் கூறியதை அவனும் அமைதியாகவே அங்கீகரித்தான்.

அவள் மேல் அவன் கொண்ட காதல் உண்மை. அது கொடுக்கும் வலியும் உண்மை. ஆனால் ஆரம்பம் முதலே தனக்கு தைரியமும் இல்லாமல், சந்தர்ப்பவாதியாக இருந்து விட்டதால் மட்டுமே அவளிடம் காதலை உரைக்க முடியவில்லை என்பதும் உண்மை.

“பணத்துல கை வெச்சப்ப, பாஸ் கண்டுபிடிச்சுட்டா யூஸ் பண்ண இந்த மாதிரி கொஞ்சம் கலெக்ட் பண்ணி வெச்சுருந்தேன்… அதை உங்க விஷயம் வந்தப்ப யூஸ் பண்ணினேன்…” தெளிவாக கூறிய விஜியை புழுவைப் பார்ப்பது போல பார்த்தாள்.

“உங்களுக்கே அசிங்கமா இல்லையா? பணத்துல கை வெச்சதே பெரிய துரோகம்… அதோட அவரோட பர்சனல்ல மூக்கை நுழைச்சு இப்படியொரு கேவலமான காரியத்தை செய்தேன்னு சொல்ல எப்படிங்க உங்களுக்கெல்லாம் மனசு வருது?”

“உங்களுக்கு இன்னும் பாஸ் பற்றி முழுசா தெரியல மேம்…” என்றவனை இன்னமுமே கேவலமாக பார்த்தாள்.

“என்ன தெரியனும் விஜி…” நிமிர்ந்து நின்று அவள் கேட்க,

“அவரால ஒரு இடத்துல நிற்க முடியாது…” அவனுமே கைகளைக் கட்டிக்கொண்டு தெளிவாக கூற,

“அது என்னோட கவலை… அதைப் பத்தி கவலைப்பட வேண்டியது நான் மட்டும் தான்… உங்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” அவனை கூர்மையாக பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு கேட்க,

“ஆரம்பத்துல பாஸ் என்கிட்டே உனக்கு மஹா மேல இன்ட்ரஸ்ட் இருக்கான்னு கேட்டார்… அப்ப ஆமான்னு சொல்லிருந்தா அவர் கண்டிப்பா உங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணியிருக்க மாட்டார்… நான் அப்ப கொஞ்சம் பயந்துட்டேன்… இல்லைன்னு சொல்லிட்டேன்…” என்றவனை உறுத்து விழித்தாள். இவனுக்கு என்ன தைர்யம் இருந்தால் இப்படியொரு வார்த்தையை கூறுவான். தான் என்ன அவ்வளவு சுலபமா?!

“அதெப்படி? அவங்க இல்லைன்னா நீங்கன்னு நான் ஒத்துட்டு இருந்து இருப்பேனா? உங்களுக்கு நான்னா என்ன அவ்வளவு ஈசியா போச்சா? ” என்றவள்,

“நான் மஹாவேங்கடலக்ஷ்மி… மைன்ட் இட்…” என்று எச்சரிக்கும் குரலில் கூறியவள்,

“அவங்களே என்கிட்ட பார்த்து தான் பேசுவாங்க… வார்த்தையை விட யோசிப்பாங்க… அவரை பத்தி நீங்க என்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்… யாரும் சொல்லி நான் அவங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டாம்… எனக்கு தெரியும்… அவங்க எப்படின்னு…” என்று நிறுத்தியவள்,

“உங்க மேல எனக்கு பரிதாபம் இருக்கு… ஷ்யாம் இப்படி பண்ணிட்டாரேன்னு நினைச்சு நான் பாவம் பார்க்கறேன்… ஆனா அதை யூஸ் பண்ணிக்கணும்ன்னு நினைக்காதீங்க… ஐ ம் நாட் தி கேம்…” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே பிசியோதெரபிஸ்ட் உள்ளே வர பேச்சு தடைப்பட்டது.

“ஹாய் விஜய்… என்ன ரெடியா? ஒரு ரவுன்ட் போயிட்டு வரலாமா?” என்று அவர் அருகில் வர, இவன் மெதுவாக எழ முயற்சிக்க, சட்டென அருகில் வந்த மஹா, அவனது தோளைப் பிடித்தாள்.

“மேம்… நான் பார்த்துக்கறேன்…” பிசியோதெரபிஸ்ட் அவசரமாக அருகில் வர, “இட்ஸ் ஓகே…” என்று தானே பிடித்துக் கொண்டாள். அவள் எப்போதும் செய்வதுதான். இத்தனை நாட்களில் விஜியும் கவனித்து இருக்கிறான். அத்தனை பொறுமையாக, நிதானமாக ஒவ்வொரு சிகிச்சையின் போதும் கூடவே இருந்த மஹாவை முன்னெப்போதை காட்டிலும் அவனுக்கு இன்னும் மிக பிடித்தது.

அவள் தனக்கு இல்லை என்று ஆகி விட்டாள் என்பதை அவனால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அந்த ஆற்றாமையிலும், ஷ்யாம் மேலிருந்த கோபம் குறையாமலும் தான் அவன் அப்படியெல்லாம் பேசியதும். ஆனால் அவள் மஹா அல்ல… திருமதி ஷ்யாம் ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டதை அவள் பேசும் போது தான் உணர்ந்தான்.

அந்த தொனி அப்படியே ஷ்யாமை பிரதிபலித்தது. அவள் பேசும் போது விஜிக்கு மஹா தெரியவில்லை. ஷ்யாம் தான் தெரிந்தான்.

இப்போது மருத்துவம் பார்க்கும் மஹா தான் உண்மை! அது ஷ்யாம்!

சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவன், இடுப்பில் அணிய வேண்டிய பெல்ட்டை எடுக்க கையை நீட்டினான். மஹா எடுத்து அவனிடம் நீட்ட, இடுப்பை சுற்றி அணிந்தவன், பெல்ட்டை கொஞ்சம் இறுக்கமுடியாமல் திணற, மஹா அவன் புறம் குனிந்து பெல்ட்டை இறுக்கமாக அணிவித்தாள்.

அவனிடம் கோபமாக பேசினாளே தவிர, அவனுக்கு உதவி செய்யாமல் போக நினைக்கவில்லை. பிசியோதெரபிஸ்ட் பயிற்சிகளை கொடுத்துவிட்டு போகும் வரை கூடவே இருந்து உதவி செய்தவள், அவர் சென்றவுடன்,

“நான் உங்க கிட்ட தப்பா பேசிருந்தா சாரி விஜி… என்னால ஷ்யாமை எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கவே முடியாது. அதே மாதிரி அவங்க உங்களை ஹர்ட் பண்ணிருந்தா அதுக்கும் சாரி… இதைத்தான் நான் சொல்லனும்ன்னு ரொம்ப வெய்ட் பண்ணேன்…” என்று முடிக்க, அவளது முகத்தை ஆச்சரியமாக பார்த்தான்.

அத்தனை பிழைகளையும், அத்தனை பாவங்களையும், அத்தனை வேதனைகளையும் இப்படி நிர்விகல்ப மனதோடு ஏற்று கொள்ள முடியுமா? இவளை போன்றவளை மீண்டும் சந்திக்க முடியுமா? இவள் ஏன் தன் மேல் காதல் வயப்படவில்லை என்று யோசித்தான். யோசிக்க யோசிக்க இழப்பு பூதாகரமாக தெரிந்தது.

இவளுக்காக தானே… இவளை இழக்க முடியாமல் தானே ஷ்யாம் தன்னை நிர்வாணமாக ஓட விட்டு அடித்தது. செயல்பட முடியாமல் இருக்கும் தன் நிலையை வெறுத்தான்.

கண்ணை மூடினாலும், கண்கள் திறந்து இருந்தாலும் அவனது நினைவிலிருந்து அந்த சம்பவம் மறைய மாட்டேன் என்கிறதே.

எத்தனையோ மருந்துகளும் மாத்திரைகளும் கொடுத்து இருந்தாலும், மனதில் பதிந்த காதலை அழிக்கவும் முடியாமல், பழி வாங்கிய ஷ்யாமின் செயலை மறக்கவும் முடியாமல் சோர்வாக கண்களை மூடிக் கொண்டான்.

“சாரி… ம்ம்ம்ம்…” என்று கசப்பாக புன்னகைத்தான். “நான் அப்லோட் பண்ண போட்டோஸ அழிக்கலாம்… ஆனா பாஸ் செய்ததை அழிக்க முடியாதுங்க…” என்று கசப்பாகவே கூற, மெளனமாக பார்த்தாள்.

அதுவும் உண்மைதானே!

“நான் பண்ணதெல்லாம் தப்புத்தான்… ஸ்பை கேமரா வெச்சு ஷூட் பண்ணது… அதை டாக்குமென்ட் பண்ணது… உங்களை மறக்க முடியாம அதை யூஸ் பண்ண நினைச்சது… சொத்தையெல்லாம் எழுதி வாங்கின அவரை பழிவாங்க இந்த மெத்தடை யூஸ் பண்ண நினைச்சது… எல்லாமே தப்புதான்… ஆனா அதுக்கெல்லாம் இப்படியொரு ரிவீட் அடிச்சாரு பாருங்க…” என்றவன், அவள் மறுத்து பேச முயல, அவளை கை காட்டி நிறுத்தி,

“உங்க மேல இன்னும் எனக்கு நல்ல அபிப்ராயம் இருக்குங்க… உங்களை என்னால் மறக்க முடியாது… அவரை நீங்க லவ் பண்றதை விட என்னை வேற எந்த பொண்ணாச்சும் லவ் பண்ணா இந்த நினைப்பு மாறலாம்… ஆனா பர்ஸ்ட் லவ் இஸ் ஆல்வேஸ் எ ஸ்பெஷல் ஒன்… கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் மாறாது… நான் கொஞ்சம் உண்மையா இருந்து இருக்கலாம்… தைரியமா, சந்தர்ப்பவாதியா இல்லாம இருந்து இருக்கலாம்… ஆனா ஒரு அட்டெம்ப்ட்ல பண்ண தப்பை எல்லாம் சரி பண்ணிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்லையே… வாழ்க்கை… ஒன்ஸ் போனது… போனதுதான்…” என்றவன், தொண்டையடைக்க மௌனமானான்.

“வெரி சாரி விஜி… நீங்க அவர் மேல இவ்வளவு பழியுணர்ச்சியோட இருக்கீங்க… ஆனா இன்னமும் அவர் உங்களை அவரோட விஜியாத்தான் பார்க்கறாங்க… நீங்க டிஸ்ஓரியன்ட்டட் ஸ்டேட்ல இருந்தப்ப தான் அப்படியொரு ஷ்யாமை நான் பாத்தேன்… முழுசா உடைஞ்சு போய்… யார்கிட்டவும் பேசாம, அதை வெளிக்காட்டிக்கவும் முடியாம, உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு உங்களையே பார்த்துட்டு இருப்பாங்க… வேற யார் அவருக்கு துரோகம் பண்ணியிருந்தாலும் அதை அவங்களால தாங்கியிருக்க முடியும்… ஆனா நீங்க பண்ணதை அவங்களால தாங்கவே முடியல… நான் ரொம்ப நம்பறவங்க தான் எனக்கு துரோகம் பண்ணிட்டு போறாங்கன்னு அவங்க சொன்னப்ப என்னாலேயே தாங்க முடியல…” என்ற மஹாவை ஆழமாக பார்த்தான்.

உண்மைதான் அல்லவா!

ஷ்யாம் தன்னை எந்தளவு நம்பினான் என்பதை அவனும் அறிவானே!

அப்படிப்பட்டவனுக்கு தான் கொடுத்தது என்ன?

துரோகத்தை தவிர!

முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டவன், “நம்பிக்கைங்கறது கண்ணாடி பாத்திரம் மாதிரி தாங்க… உடைச்சுட்டேன்… இனிமே அதை ஒட்ட வைக்க முடியாதுங்க…” என்றவன், சிறிது இடைவெளி விட்டு, “ஆல் தி பெஸ்ட் மேம்… நீங்க கிளம்புங்க… இனிமே வர வேண்டாம்…” என்று தீர்மானமாக கூறினான்.

“ஏன்?” அவனை அழுத்தமாக பார்த்தவள் கேட்க,

“எங்க ரெண்டு பேர் நடுவுல வராதீங்க மேம்… இது எங்க சச்சரவு… நடுவுல நீங்க வந்து, உங்க லைப்ல பிரச்சனை வர வேண்டாம்…” என்றவனின் குரலில் அத்தனை நிதானமிருந்தது.

“மறுபடியும் இன்னொரு தடவை ரெண்டு பேருமே அசிங்கமா அடிச்சுக்க போறீங்களா?” வெறுப்பாக அவள் கேட்க,

“உங்க மேல ப்ராமிஸ் பண்றேன் மேம்… இனிமே அந்த டாக்குமெண்ட்ஸ் யூஸ் பண்ண மாட்டேன்… எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் தான்…” தீர்மானமாக கூறியவனை கூர்மையாகப் பார்த்தாள்.

அவனது வார்த்தைகளில் உண்மையை உணர்ந்தாள். ஆனால் எத்தனை நாளைக்கு?

“நம்ப முடியல…”

“நம்புவீங்க…”

அவள் பேச்சற்றுதான் போனாள்.

“ஆனா பாஸ் கூட என்னால சமரசமா போகவே முடியாது… அவரை பார்க்கும் போதெல்லாம் என்னால என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல…” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது? அவளுக்கு புரியவில்லை.

“நேருக்கு நேரா அவங்களோட போட்டி போட்டு உங்களால வின் பண்ண முடிஞ்சா பண்ணுங்க விஜி… கோழை மாதிரி பின்னாடி இருந்து குத்த வேண்டாம்…” என்றவள், “நீங்க என்னை வரவேண்டம்ன்னு சொல்ல வேண்டாம்… நான் வருவேன்… கண்டிப்பா வருவேன்… அதை நீங்களும் சரி, அவங்களும் சரி தடுக்க முடியாது…” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.

மௌனித்தான்!

வேறெதுவும் பேசாமல் விடைபெற்று வந்தவளை திருமண கேளிக்கைகள் சூழ்ந்து கொண்டது. அவள் தனியாக சென்று விஜியை பார்த்தாள் என்பதை அறிந்திருந்த ஷ்யாம், கேள்வி எதையும் கேட்கவில்லை. அதற்கான பதில்கள் தான் அவன் அறிந்ததாயிற்றே!

அதிலும் இந்த நேரத்தில் எந்த பிரச்னையும் வேண்டாமென்று பொறுமை காத்தான்!

அதிலும் ஒவ்வொருவரும் திருவிழாவை எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த திருமணத்தில் எந்தவிதமான கசப்பும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

திருமண ஏற்பாடுகளை கவனிக்கவென்றே ஒரு பெரிய குழுவையே இறக்கி விட்டிருந்தார் ஆத்மநாதன், அவருக்கு உதவியாக தன்னுடைய படையை இறக்கி விட்டிருந்தான் ஷ்யாம். நாதனை பொறுத்தவரை இந்த திருமணம் அவரது ஆளுமையை பறைசாற்றவும் வேண்டும், பாக்கியவதி பைனான்ஸின் ஆளுமையை கட்டியம் கூறவும் வேண்டும். கார்த்திக்கை பொறுத்தவரை லக்ஷ்மி மூவீஸ் மற்றும் லக்ஷ்மி ஜெம்ஸ் இனி அவ்வளவுதான் என்று பேசியவர்களின் முகத்தில் கரியை பூச வேண்டும். தான் மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பதை காட்ட வேண்டும். அதிலும் விநாயகமூர்த்தி போன்றோர் முன்னிலையில்!

வடஇந்திய திருமணங்களை போல, ஹல்டியில் ஆரம்பித்து மெஹந்தி, சங்கீத் என்று ஒரு பக்கம் இளையவர்கள் கொண்டாட, மாப்பிள்ளை அழைப்பு, நிச்சய தாம்பூலம், பெண்ணுக்கு சடங்கு சுற்றுதல், திருமணம் என்று பெரியவர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அத்தனை கோலாகலமாக பட்டாசான கொண்டாட்டமாக இருந்தது ஷ்யாம், மஹாவின் திருமணம்.

ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த கார்த்திக்கை தான் அவ்வப்போது பிருந்தா பிடித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. மெளனமாக, ரொம்பவும் பேசாமல் இருந்த மகாவின் மாற்றத்தை பிருந்தாவின் காதல் கண் மறைத்து இருந்தது.

திருமணத்திற்கு பர்சேஸ் செய்ய வேண்டும் என்று வம்படியாக கார்த்திக்கை உடன் அழைத்து சென்று அவ்வப்போது அவனை டென்ஷனாக்கி கொண்டிருந்தாள் பிருந்தா.

“நாம எப்பங்க இப்படி கல்யாணம் பண்ணிக்கறது?” ஹல்டியின் தீம் உடையான மஞ்சள் ஜார்ஜெட் லெஹான்காவில் இருந்தவள், கார்த்திக்கை மறித்து அருகிலிருந்த அறைக்கு இழுத்துக் கொண்டு போய் கொஞ்சலாக கேட்க, அவனுக்கு புரையேறியது.

“ஏன்டி? நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா?” தனது தலையில் தானே தட்டிக் கொண்டு இவன் கேட்க,

“ஹலோ… என்ன கொழுப்பா? கேட்டா பதில் சொல்லணும்…” என்று அவனது சட்டையை இழுத்தவளை பார்த்து சிரித்தவன், அவளது மண்டையில் கொட்டி,

“முதல்ல எம்பிபிஎஸ் முடி… அப்புறமா பார்க்கலாம்…” எனவும்,

“யோவ்… நீயென்ன உன் கம்பெனிக்கு ஆளா எடுக்கற? எம்பிபிஎஸ் முடிச்சாத்தான் வேக்கன்சி பில் பண்ணுவேன்னு சொல்றதுக்கு?” எரிச்சலில் மரியாதையை காற்றில் பறக்க விட்டவள், கடுப்பாக கேட்க, அவன் சிரித்தான்.

“ஒழுங்கா படிப்ப முடிடி… இப்பவே கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போற?” என்று கண்ணடிக்க,

“நான் என்னவோ பண்றேன்… அது எதுக்கு உங்களுக்கு?” என்று கேட்க,

“நான் கேக்காம, ரோட்டுல போறவனா கேப்பான்?” குறும்பாக அவன் கேட்க,

“பேச்சை மாத்தாதீங்க… எப்ப அப்பாகிட்ட பேசப் போறீங்க?” சட்டை பட்டனை திருகியபடி கொஞ்சலாக கேட்டவளை,

“அல்ரெடி பேசி ஓகே வாங்கியாச்சுல்ல…” என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.

“பர்மிஷன் வாங்கியாச்சு… கல்யாணம் எப்ப? ச்சே… ஷ்யாம் அண்ணன் அன்னைக்கே பேசறேன்னு சொன்னார்… அப்படியாச்சும் பேச சொல்லிருக்கணும்…” என்று குறைபட,

“ம்ம்ம்… சொல்ல வேண்டியதுதானே?”

“எனக்கு வாச்ச அடிமை அதை செய்யும்ன்னு நினைச்சேன் மாமா…” ஹஸ்கியாக அவள் கூறிய தொனியில் ஜெர்க் ஆனவன், சற்று தள்ளி நின்று கொண்டான்.

“என்னடி இப்படியொரு ஹஸ்கி வாய்ஸ்ல பேசற?” சுற்றிலும் பார்த்தபடியே கேட்க, அவள் தலையிலடித்துக் கொண்டாள்.

“எப்படி பேசினாலும் உங்களுக்கு செல்ப் எடுக்கறது கஷ்டம் மாமா…” என்றவள், அவனை இடித்தவாறு போக முயல, குறும்பாக சிரித்தபடி அவளை இழுத்து சுவற்றில் சாற்றி, கதவை தாளிட்டான்.

“அட… கதவையெல்லாம் சாத்தறீங்க…” கலாய்த்தவளை, சுவற்றோடு அழுத்திப் பிடித்து,

“டீசன்ட்டா ப்ரொபோஸ் பண்ணா விட மாட்ட போல… இன்டீசன்ட்டா ஒரு ப்ரோபோசல் பண்ணட்டா?” என்று கண்களில் குறும்பு வழிய கேட்க,

“ம்க்கூம்… பண்ணிட்டாலும்…” என்றவள், அவனை அனாயசமாக தள்ளி விட்டு போக முயல,

“ஏய்… என்னை ஏத்தி விடாதடி…” என்றவன், அவளது கையை இறுக்கமாக பிடிக்க,

“ஏத்தி விட்டா மட்டும்? என்ன ஆகிட போகுது? அடேய் கார்த்திக், நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட…” என்று சிரிக்க,

“இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு இருக்குடி உனக்கு…” என்றவன், அவளை இடையோடு சேர்த்துப் பிடிக்க, அவளது புன்னகை இன்னும் விரிந்தது.

“இப்பவும் சொல்றேன் மாமா… நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட…” என்று கூறும் போதே,

“வைஷாலி, கார்த்திக் அண்ணாவ பார்த்தியா?” என்ற வெளியே பைரவியின் குரல் கேட்க, பேசிக் கொண்டிருந்த பிருந்தாவின் வாயை கையால், “உஷ்ஷ்ஷ்…” என்றபடி மூடினான்.

சொல்லி முடிப்பதற்குள்ளாக தான் இதற்கு சரிப்பட மாட்டோம் என்று அவனாகவே ப்ரூவ் செய்தவனை பார்த்து பிருந்தாவுக்கு சிரிப்பு பீறிட்டது.

“இல்ல பெரிம்மா… நான் இப்பத்தான் வந்தேன்…” என்ற அந்த வைஷாலியிடம்,

“அட பொண்ணே, எல்லா பொண்ணுங்களும் கொரியோகிராபர் கிட்ட காலைலருந்து ஸ்டெப்ஸ் கத்துட்டு இருக்காங்க… நீ என்ன கண்ணா இப்பத்தான் வர்ற?” என்ற பைரவியிடம், அந்த வைஷாலி,

“அதை உங்க தொங்கச்சி கிட்ட கேளுங்க… கிளம்ப இத்தனை லேட் பண்றாங்க… நான் பேசாம மஹா அக்கா கூடவே இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன்…” என்று கோபித்துக் கொண்ட வைஷாலியிடம்,

“நீ இன்னைக்கு அக்கா கூடவே இருந்துக்க வைஷு… நைட் மெஹந்தி முடிச்சுட்டு, நாளைக்கு சங்கீத்க்கு டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணு…” என்று சமாதானம் செய்ய,

“அம்மா ஒத்துக்க மாட்டேங்கறாங்க…” என்று செல்லம் கொஞ்சினாள் அவனது சித்திப் பெண்.

“அவளை நான் பார்த்துறேன் கண்ணா… நீ அக்கா கிட்ட போ… கொரியோகிராபர் அங்க தான் இருக்காங்க…” என்று அவளை அனுப்பி விட்டு, “இந்த கார்த்திக் எங்க போனான்? தலைக்கு மேல வேலை கிடக்குது… இந்த பையன் எங்க போனான்னு தெரியலையே…” என்று புலம்பியபடி அவரது குரல் தேய்ந்து மறைய, இழுத்துப் பிடித்து வைத்த மூச்சை வெளியே விட்டான் கார்த்திக்.

கதவை மெதுவாக திறந்தவன், இரண்டு பக்கமும் பார்க்க, யாரும் இல்லை.

அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தியவன், “அம்மா தாயே… பரதேவதை… இந்த கல்யாணம் முடியற வரைக்கும் பக்கத்துல வராத…” என்றவனை பார்த்து சிரித்தாள்.

“அதான் சொன்னேன்ல… நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க…” என்று கண்ணடிக்க,

“என்னை ரொம்ப ரேக்கிட்டு இருக்க… ஒரு நாள் இல்ல ஒருநாள் உனக்கு இருக்குடி…” என்றவன், “நான் முன்னாடி போறேன்… நீ ஒரு டூ மினிட்ஸ் கழிச்சு வா…” என்றவன், அவளை சட்டென இழுத்து உதட்டில் சின்னதாக மின்னல் முத்தம் வைத்து விட்டு, கண்ணை சிமிட்டி சிரித்தபடி வெளியேறினான்.

அவனை அதுவரை கிண்டல் செய்தவள், அவன் உண்மையிலேயே முத்தமிட்டானா என்ற அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அறையை கடக்கும் போது பிருந்தா ‘பே’ வென நிற்பதை கண்ட வைஷாலி,

“இங்க என்ன அண்ணி பண்ணிட்டு இருக்கீங்க? அங்க உங்களை மஹாக்கா தேடறாங்க…” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு போனாலும், ஒருவித கனவுலகில் சஞ்சரித்தபடியே தான் அதன் பின் சடங்குகளில் கலந்து கொண்டாள்.

அவளது அந்த பார்வையை அவ்வப்போது கண்ட கார்த்திக், கண்ணை சிமிட்டி சிரித்து வேறு வைக்க, அவளது முகம் சிவந்து செங்கொழுந்தானது.

ஏதோவொரு வேலையாக அவளருகில் வந்த கார்த்திக்,

“ஒய்… என்னடி இப்படி பே’ன்னு முழிக்கற? இன்னொரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கனுமா?” என்று கிண்டலாக கேட்க,

“தெய்வமே… ஆளை விடுங்க…” என்று அவள் ஓட, அருகில் வந்த ஷ்யாம்,

“டேய் மச்சான்… உன் பார்வையே சரியில்லையே… என்னடா நடக்குது இங்க?” என்று கலாய்க்க,

“என்ன நடக்குது? ஆடு மாடு கோழி… எல்லாம் தான்…” என்று பதிலுக்கு அவன் கடிக்க,

“ம்ஹூம்… எலி ஹாப் பேன்ட் போட்டுட்டு போகுது… சம்திங் சம்திங்…” அருகிலிருந்த இன்னொரு நண்பன் ஷ்யாமுக்கு எடுத்துக் கொடுக்க,

“ஹரஹர மகாதேவகி…” என்றான் ஷ்யாம் குறும்பாக கண்ணடித்து! அவனது அந்த ஹரஹர மகாதேவகிக்கான அர்த்தம் அவனது நண்பர்களுக்கு நன்றாகவே தெரியுமாதலால் அனைவருமே வாய்விட்டு சிரித்தனர்.

“ஓஹோஓஓ…”

“சுவாமிஜி…” கோரசாக கத்தியவர்கள், “அப்படீன்னா அப்படியா சுவாமிஜி?”

“அப்படிதான்னு சுவாமிஜியோட ஞான திருஷ்டி சொல்லுது பக்தா…” என்றவன், “அப்படியான்னு இந்த பக்தா கிட்ட கேட்டுடு பக்தா…” என்று சில்மிஷமாக சிரிக்க, கார்த்திக் புறம் திரும்பியது அந்த கூட்டம்.

“அப்போ அப்படிதானா கார்த்திக்?” என்று அவர்கள் சிரிக்க,

“யோவ்… என்னய்யா? அப்படியா இப்படியான்னு? ஒண்ணுமே புரியல…”

“அப்படிதானான்னு தானே கேட்டோம்… இப்படியான்னு கேக்கவே இல்லையே சின்ன குருஜி?” என்று பாஸ்கர் கிண்டலடித்தான். பாஸ்கர் நண்பர் குழுவில் ஒருவன்.

“பாஸ்… லைட்டை ஏன்யா என் பக்கம் திருப்பறீங்க? இப்ப மச்சானை மட்டும் டார்கெட் பண்ணுங்கய்யா…” என்றவன், அந்த கூட்டத்திலிருந்து தப்பித்தான்.

அவனை எல்லோருடைய சிரிப்பும் தொடர்ந்தது.

ஷ்யாமின் கல்லூரி நண்பர்கள், பள்ளி நண்பர்கள் என சுற்றிலுமிருக்க, கார்த்திக்கின் நண்பர்களும் இருக்க, இருவருமே எந்த தளைகளுமில்லாமல் அந்த நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளுக்குள் எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், திருமண வைபவமும், நண்பர்கள் அருகாமையும் ஷ்யாமை வெகுவாக உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அதிலும் முதல் நாள் பார்ட்டியிலிருந்தே முழுவதுமாக சந்தோஷத்தில் ஆழ்ந்து விட்டிருந்தான். உடன் ஒவ்வொன்றிலும் கார்த்திக். இயல்பாகவே ஷ்யாம் அதிகபட்சமாக போய்விட மாட்டான் என்றாலும் உடனிருந்த கார்த்திக் அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டே இருந்தான். கார்த்திக் எதையும் மிஸ் பண்ண மாட்டான் என்றாலும் அளவு தான்.

அப்போதிலிருந்தே கார்த்திக்கின் எச்சரிக்கை பார்வையை புன்னகையோடு அங்கீகரித்துக் கொண்டான் ஷ்யாம்.

அதே மனநிலையோடு அத்தனை கலாட்டாக்களிலும் பங்கேற்றவன், சங்கீத்தில் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு டான்ஸிலும் கலக்கினான்.

ஹல்டியும் மெஹந்தியும் மஹாவின் வீட்டில் நடக்க, சங்கீத் உத்தண்டியிலிருந்த பீச் ரிசார்ட்ஸில் நடந்தது. அங்கேயே மிக ஆடம்பரமான அரண்மனையை போன்ற செட்டை வடிவமைத்து இருந்தனர்.

அதிலும் ஒரு பாடலுக்கு ஷ்யாமும் மஹாவும் மட்டும் ஆடுமாறு கொரியோக்ராபர் வடிவமைத்து இருக்க, மஹா முடியவே முடியாதென மறுக்க, விடாப்பிடியாக, வம்படியாக அவளை ஆட வைத்தான் ஷ்யாம்.

‘ஒரே ஓர் ஊரில், ஒரே ஓர் ராஜா…’ பாதி தமிழும் பாதி தெலுங்குமாக ஒலிக்க, விசில் பறந்தது.

பாடலை பயிற்சி செய்யும் போதே அவளை வம்பிழுத்து கொண்டு தானிருந்தான்.

“குல்ஃபி… பாட்டுல ஒரு பிரெஞ்ச் ஐட்டம் வருமே… அதையும் ப்ராக்டிஸ் பண்ணலாமா?” என்று அவளது காதில் கிசுகிசுக்க, அவனை முறைத்தபடிதான் ப்ராக்டிஸ் செய்தாள்.

“இப்படியே பேசிட்டு இரு… உன் மண்டைல நறுக்குன்னு கொட்டி வைக்கறேன்…” பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

“நீ ரொம்ப லொள்ளு பண்ற குல்ஃபி… இதுக்காகவே அங்க வெச்சு அந்த சீனையும் செஞ்சு காட்ட போறேன்…” என்று கிண்டலாக கூற, கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்து இருந்தது.

இவன் சொன்னால் செய்து காட்டி விடுபவனாயிற்றே… அத்தனை பேருக்கு முன்னும் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் கண்கள் கலங்க, அதை பார்த்தவன், தலையிலடித்துக் கொண்டான்.

“இப்படியே அழுமூஞ்சியா இரு… உன் பேரன் பேத்தி நம்ம கல்யாண ஆல்பம் பார்க்கும் போது, இந்த கிழவி ஏன் அழுகறான்னு தான் கேக்க போறாங்க…” என்று சிரிக்க,

“அதெல்லாம் கேக்க மாட்டாங்க…” என்று உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“சப்போஸ் கேட்டாங்கன்னா?”

“அதான் கேக்க மாட்டாங்கன்னு சொல்றேன்ல…”

“நானே சொல்லிக் கொடுப்பேன்டி…” என்று ஷ்யாம் சிரிக்க,

“நீ இப்படியே வம்பிழு… நைட்டோட நைட்டா நான் கல்யாணமே வேண்டாம்ன்னு ஓடிர போறேன்…” என்று கடுப்பாக கூற,

“நீ எங்க போனாலும் என் கண்லருந்து தப்பிக்க முடியாது குல்ஃபி… ஈவன் எனக்கு தெரியாம நீ விஜியை பார்க்கனும்ன்னு நினைச்சாலும்…” என்றவனை வெறித்துப் பார்த்தாள். அவனது முகத்திலிருந்த புன்னகை வாடவில்லை. ஆனால் அது செயற்கையான புன்னகை என்பதை மஹா கண்டுகொண்டாள்.

ஆனால் ஷ்யாமுக்கு தெரியாமல் அவனை பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லையே! அவன் இல்லாமல் பார்த்தாள் அவ்வளவுதானே… அதிலும் ஒரு நன்மையாக விஜி குணமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்ததை விட எத்தனையோ பேசியும் இருக்கிறானே! அதையெல்லாம் விஸ்ராந்தையாக அமர்ந்து இருவருமாக பேச வேண்டும் என்று நினைத்தாள், ஆனால் அதற்குள்ளாக திருமண கொண்டாட்டங்கள் இழுத்து கொண்டதல்லவா!

“இல்ல ஷ்யாம்… அது என்னன்னா…” என்று அவள் விளக்க முயல, அவன், அதே புன்னகையோடு,

“வேண்டாம் மஹா… எனக்கு தெரியக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட… அது எனக்கு தெரியாமையே இருக்கட்டும்…” என்று கூறினாலும் அதில் தெறித்த விசாரத்தை அவனால் மறைக்க முடியவில்லை, முயலவுமில்லை.

அவளது செயலால் தான் காயம் பட்டு இருக்கிறோம் என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அவன் கூறியதையே நினைத்துக் கொண்டு சங்கீத்தில் அவனது முகத்தை தன்னையும் மீறி ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தவளை கலைத்தது சுற்றியிருந்தவர்களின் ஆரவாரம், டிஜேவின் தெறிக்கும் இசையை மீறி! சிம்மாசனம் போன்ற ஆசனத்தில் இருவருமாக அமர்ந்திருக்க, கடற்காற்று முகத்தை மோதியது. கொண்டாட்டம் தூள் பறந்து கொண்டிருந்தது.

“மஹாக்கா… ஒரு பாட்டு பாடு…” வைஷாலி கொளுத்திப் போட,

“ஆமாக்கா மாமாவுக்கு பிடிச்ச பாட்டு பாடு…” என்றாள் இன்னொரு கசின், யாமினி.

“எஸ்… பாடு…” என்று அனைவரும் சேர்ந்து கொண்டு கத்த, வைஷாலி காம்பியரிங் செய்து கொண்டிருந்த பெண்ணின் கைகளிலிருந்து மைக்கை பிடிங்கிக் கொண்டு வந்து மஹாவின் கையில் கொடுத்தாள்.

மஹாவின் வகுப்புத் தோழன், “மாமா… உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்க…” என்று கத்த,

“ஆமா சொல்லுங்க…” என்று மீதமிருக்கும் இளைய பட்டாளமும் கத்தியது.

சிரிப்போடு மைக்கை கையில் வாங்கியவன், “மதுரமே ஓகே வா?” என்று சுற்றியிருந்தவர்களை பார்த்து கேட்க, நண்பர்கள் பட்டாளமும் கசின்ஸ் பட்டாளமும், “ஓஓஹோஓஓஓ…” என்று கத்தியது.

அவனாக பாட்டு பாட சொன்னால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் அவளிடம் எதுவும் தேறாது ஆனால் இப்போது என்ன செய்ய போகிறாய்? என்ற குறும்பான கேள்வியோடு அவளை பார்த்து,

“என்ன மேடம் ஓகே வா?” என்று மைக்கில் கேட்க, அவனை கீழ்பார்வையாக முறைத்தாள்.

“ஏன் தெலுங்கு தேறாதா?” என்று அவளை பார்த்து கிண்டலாக கேள்வி கேட்டவன், “பசங்களா இந்த பொண்ணுக்கு தெலுங்கு தெரியாதாம்…” என்று சுற்றியிருந்த கசின்சை பார்த்து போட்டுக் கொடுக்க,

“அண்ணா… தெலுங்கே தெரியலைன்னா எப்படி குடும்பம் நடத்துவீங்க? சோ பொண்ணு ரிஜக்டட்…” ஷ்யாமுடைய கசின் ஒருவன் தெலுங்கில் கொளுத்திப் போட,

“ஏன்? மாமாவுக்கு தான் தமிழ் நல்லா தெரியும்ல… அப்புறம் எதுக்கு தெலுங்கு?” வைஷாலி விடுவேனா என்று களமிறங்க,

“புருஷனோட லாங்குவேஜ் கூட தெரியாம ஒரு கல்யாணப் பொண்ணா?” என்று அவனும் சரிக்கு சரியாக நிற்க,

“லாங்குவேஜ் தெரிஞ்சாத்தான் லவ் பண்ணனுமா? அப்படீன்னா எங்களுக்கு உங்க மாப்பிள்ளை வேண்டாம்…” என்று இந்த பக்கமாக விளையாட்டுக்கு வம்புக்கு நிற்க,

“அக்கா பாடிடு… இல்லைன்னா இதை சாக்கா வெச்சே மாமாவ வானப்ரஸ்தம் வாங்க வெச்சுடுவாங்க போல இருக்கே…” கூட்டத்தில் அவனை கவனித்தபடி வைஷாலி குறும்பாக கூற,

“ஓகே ஓகே… அண்ணி இப்ப பாட போறாங்க… சைலன்ஸ்…” என்றவன், அனைவரையும் அமைதிபடுத்தினான், சிரித்துக் கொண்டே!

அனைத்தையும் கார்த்திக்கும் பிருந்தாவும் பார்த்து சிரித்தபடி இருந்தனர். ஒருவரை ஒருவர் கண்களால் மென்று தின்றபடி!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த அழகான லெஹாங்காவில் தேவதையாக ஷ்யாம் அருகில் அமர்ந்திருந்தவள், மைக்கை வாங்கி, குரலை செருமிக் கொண்டாள்.

ஷ்யாமை மேல் பார்வையாக பார்த்தவள், மதுரமே பாடலின் ஹம்மிங்கை ஆரம்பிக்க, கூட்டம் மொத்தமும் நிசப்தமானது! டிஜே அந்த பாடலின் கரோகேவை ஒலிக்க விட, ஆர்பாட்டமாக ஆரம்பித்த பாடல், அமைதியான நதியாக தவழ ஆரம்பித்தது.

மதுரமே ஈக்ஷணமே ஓ செல்லி

மதுரமே ஈக்ஷணமே

மதுரமே வீக்ஷணமே ஓ செல்லி

மதுரமே வீக்ஷணமே

மதுரமே லாலசையே

மதுரம் லாலநயே

மதுரமே லாஹிரிலே

மதுரம் லாலிதமே

மதுபவனம் வீச்சி மதுபவனம் வீச்சி

பருவமே மைமரசிந்திலே…

அவள் புறம் மொத்தமாக திரும்பி அமர்ந்தவன், அவளது குரலோடு, அவளையும் ரசிக்க ஆரம்பித்து, தலகுப்பாவில் அவள் பாடலை கேட்டபோது இருந்த மனநிலைக்கு அப்போது சென்றிருந்தான். பாடிக்கொண்டே அவன் புறம் திரும்பியவள், காந்தமென ஈர்த்த அவனது விழிகளில் தொலைந்து போனாள். அதன் பின் வேறு எங்கேயும் அவளும் பார்க்கவில்லை, அவனும் பார்க்கவில்லை. அவளது குரலில் கரைந்து உருகி மயங்கி கண் மூடினான், சுற்றி இருந்தவர்களையும் மறந்து!

அவனது அந்த மயக்கம் அடுத்த நாள் வரைக்குமே நீடிக்க, வானகரம் ஸ்ரீவாரு விஐபிகளின் கூட்டத்தால் திணறியது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று சிவப்பு சைரன் வைத்த கார்களின் அணிவகுப்பு ஒருபுறம் என்றால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படத் துறையின் முக்கியஸ்தர்கள், நடிகர்கள் என களை கட்டியது.

சேனல்களின் முற்றுகை, போலீஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் செக்கியுரிட்டி அதிகாரிகளின் பாதுகாப்பு என மண்டபம் திணறியது.

வாரண மாயிரம் சூழ வலம்செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

சிவப்பு நிற காஞ்சிப் பட்டில், சர்வ அலங்கார பூஷிதையாக அருகே வந்தமர்ந்த மகாவை திரும்பிப் பார்த்தான். திருமண மனையில் இருவருமாக அமர்ந்து இருக்க, ஒரு பக்கம் சமுதாய பெரியவர்கள் இருவர் அவர்களது சமுதாய வழக்கப்படி செய்முறைகளை செய்ய, உடனிருந்த குருக்கள், மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருப்பது வெளிப்படையாக தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரை வேறு!

மெல்லிய புன்னகையோடு கங்கணம் கட்டியிருந்த கைகளால் அவளது கையை பற்றியவன், “ரிலாக்ஸ் மஹா…” என்று மென்மையாக கூற, நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர்!

இனி இது ஒருவழி பாதை!

தைரியமாக அந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்தாயிற்று… இனி திரும்பவே முடியாது… நல்லதோ கெட்டதோ, அது இனி இவனுடன் மட்டும் தான் என்று எண்ணும் போதே வயிற்றில் பயப்பந்து உருண்டது. அவளது பயம் கண்களில் தெரிய, அவளது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

இனி வாழ்க்கை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது… இவனுக்கு தான் சலிக்காமல் இருப்போமா என்றும் சொல்ல முடியாது… பழைய வாழ்க்கையின் எச்சங்கள் மீண்டுமாய் பூதாகரமாகுமா? தெரியாது… இப்போதைக்கு பாதை தெரிகிறது… பயணம் இவனுடன்… கடைசி வரை பயணிக்க முடியுமா என்பதை சொல்ல முடியாத நிலை தான்… ஆனாலும் பயணத்தை துவக்கியாக வேண்டும்.

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் பாடிய திருப்பாவை, நினைவுக்கு வந்தது. ஏழ் பிறவிக்கும் பற்றாவானா? மெல்லிய புன்னகை… கசப்பாக மலர்ந்தாள்… தனக்கு மட்டுமா என்று நினைத்துக் கொண்டு!

“அண்ணா… அப்புறமா உங்க ரொமான்ஸ கண்டினியு பண்ணுங்க… இப்போதைக்கு கொஞ்சம் தாலியை மட்டும் கட்டுங்க…” பிருந்தா கிண்டலாக கூற, சுய உணர்வுக்கு வந்தவன், சிரித்துக் கொண்டே அவளது கையை விட்டான்.

“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்ற யாரோ சப்தமாக கூற, அவனிடம் இரு பெற்றோர்களும் கொடுத்த தாலியை கையில் ஏந்தினான், கண்களை மூடி மனதார, ‘இனி ஏழு பிறவிக்கும் பிரிவென்பதே கூடாது…’ என்று நினைத்துக் கொண்டு!

அவனது கண்களிலும் மெல்லிய கண்ணீர் படலம்… எத்தனை இடர்களை கடந்து வந்து, திருமணத்தில் இணையும் இந்த தருணம், அவனுக்கும் உணர்ச்சி பூர்வமாய்!

மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவளது கழுத்தில் பொன் தாலியை கட்டியவன், அவளது முகத்தைப் பார்த்தான். அவளும் அவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள், கண்களில் கண்ணீர்! அவளது கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல தோன்றியது… தாங்கள் இருப்பது ஆயிரம் பேர் முன்னிலையில் என்பதை நினைவுக்கு கொண்டு வந்தவன், அவளது கண்களிலிருந்த கண்ணீரை சுண்டி விட்டான்.

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்

விண்ணை மேகம் பிரிந்தாலும்

கண்ணை மணிகள் பிரிந்தாலும்

உனை நான் பிரியேனே!

சங்கம் தமிழைப் பிரிந்தாலும்

சந்தம் இசையைப் பிரிந்தாலும்

தாளம் சுருதியைப் பிரிந்தாலும்

உனை நான் பிரியேனே!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஐம்பத்து இரண்டு

திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே மீண்டுமாய் இண்டர்ன்ஷிப்பை தொடர்ந்தாள் மஹா. ஒரு வார விடுமுறையில் விருந்து கேளிக்கைகள் என கழிய, ஷ்யாமும் வீட்டை போயஸ் கார்டனுக்கு மாற்றுவதில் பிசியாக இருந்தான்.உத்தண்டி பார்ம் ஹவுஸ் கல்லூரியிலிருந்து வெகு தூரம் என்பதோடு, அந்த வீட்டில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்