arrow_back
தித்திக்குதே அத்தியாயம் ஒன்று
தித்திக்குதே chevron_right பகுதி 1 / 26

அத்தியாயம் ஒன்று

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

புலராத அதிகாலை பொழுது, சில்லென்ற மார்கழி குளிர் ஊசி போல் துளைத்துக் கொண்டிருக்க, வெகு அதிகாலையில் அந்த கிராமத்து சாலையில் மக்கள் நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டது! தமிழகத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கும் பண்டைய சேரர்களின் தலைநகராம் வஞ்சியை அடுத்த அழகான கிராமம்!

நெரூர்!

காவிரித்தாயின் கருணையில் விவசாயம் செழித்து, திரும்பியபுறம் எல்லாம் பழமையான கோவில்களைக் கொண்டு, நாற்புறங்களிலும் பசுமை பாய்ந்து கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகான ஊர்!

சில்லென்று ஓடிய காவிரியின் கரையில் கால் வைத்தான் சக்தி.

சக்திவேல்!

பெயருக்கேற்ற உரமேறிய உடல், தீட்சண்யமான விழிகள். அவை கண்ணியத்தை மட்டுமே வெளிப்படுத்த தெரிந்தவை. அநியாயத்தை கண்டால் பொங்கி விடும் இயல்பினன். யாராக இருந்தாலும் துணிந்து இறங்கி விடுவான். துணிச்சலும் பண்படுத்தப்பட்ட கோபமும் இருந்தாலும் எப்போதும் கண்ணியம் என்பதை மட்டும் கை விட்டதில்லை. பல்வேறு குணவேறுபாடுகளின் கலவை. காரணம் இவனொரு சுயம்பு! யாரும் பாதை சொல்லி தராமல் பண்படுத்தாமல் சிறு வயது முதலே தனக்கு தானே முடிவெடுத்து வளர்ந்த சுயம்பு இவன்.

வேலைக்கு வந்த இடத்தில் நடந்த விபத்தில் பெற்றோர் இருவரும் விட்டு போக, அந்த ஒரே நாளில் அனாதையான சிறுவனை அங்கிருந்த அனாதை விடுதியில் சேர்த்தனர் உடன் வேலை செய்தவர்கள்! அப்போதிருந்து உலகமே அவனது வீடானது. அவனை சுற்றியிருந்தவர்களே உறவினராயினர்!

வளர்ந்தான். பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி இலவசமென்பதாலும் ஆஸ்ரமத்திற்கு வரும் அதிகப்படியான நன்கொடைகளாலும் அவனது கல்விக்கும் பங்கமில்லாமல் இருந்தது. காரணம் என்னவென்றால் அந்த ஆஸ்ரமம் சற்று மாறுபாடானது.

வரும் நன்கொடைகளில் நிர்வாகி அவரது வசதியை பெருக்கி கொள்ள, தனக்கு மிஞ்சியதை ஆஸ்ரம பிள்ளைகளுக்கு கொடுத்து பழக்கப்பட்ட உத்தமசீலர் அவர்! நன்கொடைகள் குறையும் போது பிள்ளைகளை பிச்சைக்கார வேடமிட வைத்து பிச்சை எடுக்க வைக்கவும் தயங்காதவர். மறுக்கும் குழந்தைகளுக்கு அடியும் உதையும் சூடும் மட்டுமே மிஞ்சும். அதற்கு பயந்து பிச்சை எடுக்க ஒத்துழைக்கும் குழந்தைகளை வைத்து அவரது வாழ்க்கை முறை வெகு ஆடம்பரமாகவே இருந்து வந்திருக்கிறது.

அரசாங்க அதிகாரிகள் இன்ஸ்பெக்ஷனுக்காக வரும் போது மட்டும் குழந்தைகளை சுத்தமாக குளிக்க வைத்து அழகாக காட்டி ஒப்புதலை வாங்கி விடுவார். வளரும் வரை இந்த விஷயங்கள் புரியாமல் வளர்ந்தாலும் வளர்ந்த பின் சக்திவேலின் மனம் கொதித்தது.

பன்னிரண்டாம் வயதில் முதன் முறையாக எதிர்த்து நின்றவனுக்கு பிரம்படியும் இரண்டு நாட்கள் பட்டினியுமாக தண்டனை கிடைக்க, உடன் நின்றவர்கள் அடங்கி விட்டனர். ஆனால் அந்த தண்டனைகளை கண்டு பயப்படாத சக்திவேல் அடுத்தடுத்து எதிர்க்க அந்த நிர்வாகிக்கு நிரந்தர தலைவலியாக மாறி போனான்.

நன்மை நடந்து விடாதா என்ற ஏக்கத்தில் வரும் அதிகாரிகளிடம் நிர்வாக சீர்கேடுகளை பற்றி கூற அந்த அதிகாரிகளுக்கு கையூட்டு அதிகமாக வாங்கி கொள்ள அதுவொரு காரணமாகிப் போனது.

“நீங்க ஆஸ்ரமத்துக்கு வர்ற நன்கொடை எல்லாத்தையும் அமுக்கிடறீங்க. பொறுத்து போறோம். எங்க யாருக்குமே சரியான சாப்பாடு கூட போடறதில்லை. பொறுத்துட்டு தான் போறோம். ஆனா ஏன் எங்களை பிச்சை எடுக்க அனுப்பறீங்க? உங்களுக்கு பணமா வராம இருக்கு. வெளிநாட்டுகாரங்க அனுப்பறாங்க, அரசாங்கம் தருது, மக்கள் தராங்க. ஆனாலும் எங்களை பிச்சை எடுக்க சொல்றீங்களே? உங்களுக்கு இந்த மனசாட்சின்னு ஒன்னு இல்லவே இல்லையா?”

பதினைந்து வயதில் பாயிண்ட் பாயிண்டாக அடித்தவனிடம் அதற்கு மேலும் பேசி கொண்டிருக்க அந்த நிர்வாகிக்கு முடியவில்லை. விட்டால் தனது ஆஸ்ரம வியாபாரத்தை கெடுத்து விடுவான் என்றெண்ணி கொண்டு சப்தமில்லாமல் அவனை வெளியேற்றி விட்டார். ஆக பன்னிரண்டாம் வகுப்போடு அவனது கல்விக்கு சுபம் போடப்பட, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு நின்றபோது நினைவுக்கு வந்தவர் வெற்றிவேந்தன்!

ஆஸ்ரமத்திற்கு வாகனங்கள் தேவைப்படும் போது அந்த நிர்வாகி அழைப்பது வெற்றியைத்தான். ஏனெனில் அவர் மட்டுமே பணம் வாங்கி கொள்ளாமல் வேலைகளை செய்து கொடுப்பார். புண்ணிய கணக்குகளை பார்ப்பவர்களே இது போன்ற நிர்வாகிகளின் இலக்கல்லவா!

அப்போது பழக்கமானவர் வெற்றி. அவரிடம் போய் நின்றான் சக்திவேல். ஆஸ்ரமத்தில் நடக்கும் அநியாயங்களை பற்றி கேட்டபோது அவருக்கும் கொதிக்கத்தான் செய்தது. ஆனால் இது போல கொதிப்பதும் அடங்குவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளே. நாம் கொதித்தால் மட்டும் என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று அவனுக்கு அறிவுரை கூறி அவனை தன்னோடு வைத்து கொண்டார்.

அவரது டிராவல்ஸில் இருந்த பஸ்ஸில் கிளீனர் வேலை செய்ய ஆரம்பித்தான் சக்திவேல். எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கும் அவனது சுறுசுறுப்பும் எப்போதும் நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற அவனது குணவியல்பும் வெற்றிக்கு மிகவும் பிடித்துவிட, அதே டிராவல்ஸில் வேன் டிரைவராக தனது பணியை ஆரம்பித்த போது வயது பதினெட்டு. அப்போதே நெடுநெடுவென்ற அவனது உயரமும் முக இறுக்கமும் அவனிடம் பேச ஆரம்பிப்பவர்களை ஒரு நிமிடம் தயங்க செய்து விடும்.

மனிதர்களை மிகச்சரியாக எடை போடுவதில் கெட்டிக்காரனாக இருந்தான் சக்தி. அந்த திறமை எளிதில் வந்துவிடவில்லையே! பதினெட்டு வருட வாழ்க்கை வலிக்க வலிக்கவல்லவா அவனுக்கு சொல்லி தந்திருக்கிறது.

வேன் ஒன்று லீசுக்கு வருகிறது என்பதை அறிந்து தன்னிடம் இருந்த சேமிப்பை எல்லாம் வெற்றியிடம் கொடுத்து அந்த வேனை லீசுக்கு எடுத்து தருமாறு கூறிய போது வயது இருபது. ஐந்து வருடமாக அவனை சார்ந்தே இருக்க பழகி கொண்ட வெற்றிக்கோ அவனை விட்டு தருவதில் மனம் சங்கடபட்டாலும் அவனது முன்னேற்றத்தை தடுக்க முயலவில்லை!

“சக்தி, உன்னை இங்கிருந்து அனுப்பவே மனசில்லடா. பேசாம நீ இங்கயே இருந்துடேன். எனக்கப்புறம் நீதானே இங்க எல்லாம். ஏன் வெளிய போகணும்ன்னு நினைக்கற?”

வெற்றி டிராவல்ஸின் உரிமையாளராக வெற்றி உரிமையாக கேட்க, அவரை சங்கடமாக பார்த்தான் சக்திவேல்! அவனும் தான் அவரை பற்றி அறிவானே! எப்போதும் மூக்கின் மேல் கோபம் நர்த்தனமாடி கொண்டிருந்தாலும் நல்ல மனிதரென்று!

“அண்ணா, என்னோட ரொம்ப நாள் கனவு இது. நான் மொத்தமா போறதா நினைச்சுக்காதீங்க. நீங்க எப்போ சவாரி போக ஆளில்லைன்னு கூப்பிட்டாலும் வந்துடுவேண்ணா. நான் நீங்க வளர்த்த பிள்ளை. நீங்களும் தெய்வா அக்காவும் தான் எனக்கு இருக்க ஒரே சொந்தம். நீங்களும் அக்காவும் ஆசிர்வாதம் பண்ணி என்னை அனுப்புங்கண்ணா. என்னைக்கிருந்தாலும் நீங்கதான் என் முதலாளிண்ணா.”

வெற்றிக்கு தெரிந்து அவன் அதிகபட்சமாக அவரிடம் பேசியதும் அன்றுதான். கண்ணீர் மல்க அவரது காலில் விழுந்தவனை வாஞ்சையோடு தன்னோடு சேர்த்து கொண்டார். அவரது கண்களும் கலங்கி விட்டன!

“டேய் சக்தி, நீயென்னடா கூறுகெட்டவனாயிருக்க? இனிமே நீ மொதலாளிடா. என் தம்பி நீ. எதுக்கு என் கால்ல விழற? எதுக்கெடுத்தாலும் சக்தின்னு கூப்பிட்டே பழகிடுச்சுடா இந்த நாக்கு. நீ போய்ட்டா நான் யாரை கூப்பிடுவேன்ற ஆத்தாமை தான். உன்னோட உழைப்ப அறியாதவனா இந்த வெற்றி? நல்லா வருவடா தம்பி நீ. நல்லா வருவ. எப்போ என்ன உதவி வேணும்னாலும் கேளு. நான் இருக்கேன் உனக்கு!”

அணைத்து கொண்டு நா தழுதழுத்தவரை நன்றியோடு பார்த்தவன், இன்று வரை அந்த நன்றி மறவாமல் சனிக்கிழமையானால் கரூரிலுருக்கும் வெற்றியின் வீட்டிற்கு சென்று விடுவான். அந்த வார கலெக்ஷனை வெற்றியின் மனைவி தேவசேனாவிடம் கொடுத்து பெற்றால் தான் அவனுக்கு நிம்மதி!

“சக்தி, இதென்ன அழும்பாயிருக்கு? பணம் வந்தா சாமிகிட்ட வெச்சு கும்பிடு. அதை விட்டுட்டு என்கிட்டே தான் வந்து குடுப்பேன்னு அடம் பிடிக்காதடா.” தேவசேனா ஒரு அக்காவாக அவனை பெருமையோடு நொந்து கொள்ள,

“தெய்வாக்கா, நீங்களும் அண்ணனும் தான் எனக்கு தெய்வமும் கோயிலும். சும்மா சும்மா இதையே சொல்லாதீங்கக்கா.”

தெய்வாவை பொறுத்தவரை தன் இரு தம்பிகளோடு சேர்ந்து சக்திவேல் மூன்றாவது தம்பியாகி போனான்!

இதுதான் சக்திவேல்!

ரெகுலராக லோடுகளும் வெளியூர் டிரிப்புகளும் இருந்தாலும் அவனது தினசரி தேவைகளை குறைவில்லாமல் பார்த்து கொண்டது காலேஜ் டிரிப்புகள் தான். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கல்லூரி போகும் மாணவிகளை ஏற்றி கொண்டு கரூர் கல்லூரிகளில் விடுவதும் அவனது தினசரி வாடிக்கை. கிராமங்களில் இவனை மட்டுமே நம்பி பெண்களை வேனில் அனுப்புவேன் என்று கறாராக இருக்கும் பெற்றோர்களும் உண்டு!

பெருநகரங்களை போல சுதந்திரமாக பெண்களை அனுப்பாமல் கட்டுப்பாடாகத்தான் கல்லூரி போய் வர வேண்டும் என்று கறாராக இருக்கும் பெற்றோர்களே கிராமங்களில் அதிகம். அதிகமாக ஒரு பார்வை கூட பார்க்காத, பேசவே பேசாத, கல்லை விடவும் இறுக்கமான, கண்ணியமான சக்திவேல் அவர்களுக்கு பிரியமானவன்! எட்டு வருடங்களை எந்தவிதமான கெட்ட பெயரும் இல்லாமல் கடந்து விட்டவன்!

“சுவாமியே சரணம் ஐயப்பா!” அந்த குளிரில் காவிரியில் சில்லென்ற நீரில் மூழ்கி எழுந்தவனின் வாய் தானாக ஐயப்ப பாடல்களை இயந்திர கதியில் முணுமுணுத்தது!

“அண்ணே, இந்த நாலு மணிக்கு மார்கழி குளிர்ல நீங்க தான் ஆத்தங்கரைய குத்தகைக்கு எடுப்பீங்க. ஆத்துல ஒரு சனத்த காணலை. ஏன்னே, ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு? என்னையும் இழுத்துட்டு வந்து கொடுமை பண்றீங்க?”

அவனிடம் உதவியாக இருக்கும் செந்தில் அழாத குறையாக கேட்க, அவனுக்கு பதில் ஏதும் தராமல் முறைத்தவனை பார்த்தபோது அவனுக்கு தோன்றியது.

“ஆஹா இன்னைக்கு துருவாசர் காலைலேயே பார்முக்கு வந்துட்டாரா? ஆல் மை டைம்…” தனக்குள்ளாக புலம்ப,

“சீக்கிரம் குளிச்சுட்டு கரையேறுடா.” தந்தி பாஷையில் பதிலளித்து விட்டு துண்டை பிழிந்து தன் மேல் போட்டு கொண்டு கோயிலை நோக்கி சக்தி போக,

“க்கும்… இவர் சொல்லிடுவாரு. இந்த குளிர்ல மனுஷன் குளிப்பானா? இதுவே சூடா தண்ணி காயவெச்சு குளிச்சா எவ்ளோ சுகமா இருக்கும். மனுஷனுக்கு அதெல்லாம் தெரியாது.”

நொந்து கொண்டு குளித்து விட்டு வந்தான் செந்தில். கார்த்திகை துவங்கி ஒரு மண்டலம் மாலையிட்டு சபரி மலைக்கு வெற்றியோடு செல்வது அப்போதிருந்தே பழக்கம். அந்த பழக்கம் இன்றும் விடாமல் தொடர்ந்தது!

“சுவாமியே சரணம் ஐயப்பா…” என்று வணங்கிவிட்டு ஷெட்டிலிருந்து அவனது மினி லாரியை எடுத்தான். அவனிடம் தற்போது கல்லூரி டிரிப்புகளுக்கு, வெளியூர் பயண டிரிப்புகளுக்கும் டெம்போ டிராவலரும், காய்கறி மற்றும் லோடுகளை ஏற்றிச் செல்ல மினி லாரியும் இருந்தது. அவற்றை நிறுத்தி வைக்கும் ஷெட்டில் அவர்கள் இருவரின் ஜாகையும் இருக்க, வாழ்க்கை தடையில்லாமல் சென்றது. நாலரை மணிக்கு காய்கறி லோடுகளையும், தேங்காய் லோடுகளையும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தே எடுத்துச் செல்வதால், அவனது வாகனங்களை நெரூரிலேயே நிறுத்தி வைத்து கொள்வான்.

“டேய் சீக்கிரம் ஏறு, ஏழு மணிக்கு காலேஜ் ட்ரிப் எடுக்கணும்!” என்று செந்திலை அவசரப்படுத்தி, தனது மினி லாரியை அந்த கிராமத்துச் சாலைகளில் பறக்க விட்டான்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் இரண்டு

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்ஐயனை காணலாம் சபரியில் ஐயனை காணலாம்ஐயப்பா சுவாமி ஐயப்பாஐயப்பா சரணம் ஐயப்பாபக்தி மனத்தோடு பத்தி மனமும் கமழ, சக்திவேலின் வாகனம் கல்லூரி மாணவிகளை ஏற்றச் சென்று கொண்டிருந்தது. அதில் அமர்ந்திருந்தவர்கள் அழாத குறையாக ஒருவரையொருவர் பார்க்க,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்