arrow_back
தித்திக்குதே அத்தியாயம் எட்டு
தித்திக்குதே chevron_right பகுதி 8 / 26

அத்தியாயம் எட்டு

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சக்திவேல் அதிர்ந்து நின்றது ஒரு சில நொடிகள் தான். ஆனாலும், அவனது வாழ்நாளில் இப்படியொரு அதிர்வை அவன் சந்திக்கவில்லை. இத்தனை காலமாகக் கௌரவமாகத் தங்கள் வீட்டுப் பெண்களைச் சக்தியை நம்பி வேனில் அனுப்பி வைக்கலாம் என்று அந்தச் சுற்றுவட்டாரத்தில் நம்பிக்கையைச் சம்பாதித்தவனை, ஒரே நொடியில் தலைகீழாக நினைக்க வைத்துவிட்டாளே என்ற கோபம் அவனது மனதில் சுனாமியாய் எழுந்தது. ஆனால், நந்தினி அவன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தையே கொடுக்கவில்லை.

“ஒரு நிமிஷம் இரும்மா…” அவளைப் பேசுவதிலிருந்து தடுக்க முற்பட, அதற்கு அவள் செவிசாய்க்கவே இல்லை. மீண்டும் அவளைக் கோபமாக இடையிட,

“ப்ளீஸ் சக்தி… இன்னும் இந்த விஷயத்தை எல்லாம் நாம மறைச்சு வெச்சுப் பேசக் கூடாது…” என்று தயங்காமல் கூறியவளை முறைத்தான் சக்திவேல்.

அப்படி என்ன இருக்கிறது இருவரிடையில் என்று அவனுக்கு இன்னமும் புரியவில்லை. எதைச் சொல்ல வருகிறாள் என்பது கூடச் சக்திவேலுடைய சிறிய மூளைக்கு எட்டவில்லை. ஆனால் அவளோ தன் தந்தையை நோக்கி,

“அப்பா… இவங்களைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது…” முதன்முறையாகத் தந்தைக்கு எதிராக அவரை எதிர்த்து வாதாடிக்கொண்டிருந்தாள். அதுவரையில் அதிர்ச்சியில் பேச முடியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வேலுச்சாமி, ரௌத்திரமாக முன்னே வந்தார்.

“என்ன சொன்ன? இந்த அநாதைப் பயலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவியா? சனியனே… முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ளே ஆம்பிளையைத் தனியா தேடிக்கிறியா?” பளாரென அவளை அறைய, நிலைகுலைந்து சுழற்றியடித்துக் கீழே விழுந்தாள்.

கால்கள் வேரோடிப் போன சக்திவேலுக்கு நடப்பதைப் பார்க்க முடிந்தாலும், அவன் வார்த்தைகளுக்குத் தவித்துக்கொண்டிருந்தான். மூளை அந்த அளவு வேலைநிறுத்தம் செய்திருந்தது. கீழே விழுந்தவளோ சற்றும் அசராமல்,

“ஆமா, நீங்க எவ்வளவு அடிச்சாலும் என்னோட பதில் ஒன்னு தான். இவங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்… இவங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்…” தீவிரமாகக் கூறியவளை, வெறி பிடித்தார் போலப் பார்த்தார் வேலுச்சாமி. அவளது முடியைக் கொத்தாகப் பற்றியவர் அப்படியே இழுத்துத் தூக்கினார். நந்தினிக்கு வலி உயிர் போகும் போல இருந்தது. அவளது அன்னை செல்வி பதறியடித்துக் கொண்டு வந்தார்.

“ஏங்க புள்ளையை விட்டுடுங்க. நான் சொல்ற விதமா சொல்லி அவளை வழிக்குக் கொண்டு வந்துடறேன். வேணாங்க… இத்தனை பேரையும் வெச்சுக்கிட்டு, மாப்பிள்ளை வீட்டையும் வெச்சுக்கிட்டு இப்படி அசிங்கப்படுத்தாதீங்க…” வேலுச்சாமியின் காலில் விழாத குறையாகக் கெஞ்ச,

“இவளை இப்படி எல்லார் முன்னாடியும் வெச்சுத் தோலை உரிச்சாத்தான் இவளுக்கு அறிவு வரும். ஊருக்கெல்லாம் நியாயம் சொன்னவன்டி நான். என் முன்னாடியே இந்தளவுக்குப் பேச எவ்வளவு துணிச்சல் இருக்கணும் இந்த நாயிக்கு…” கண்கள் சிவக்க நந்தினியைப் பார்த்துக் கொண்டு பேச,

“நந்தினி… வேணாம் நந்தினி. அந்தப் பையனை வேணாம்ன்னு சொல்லிடு. உன்னைக் கெஞ்சி கேட்கறேண்டி… எனக்கு நீ ஒத்தை புள்ளைடி…” அவளிடம் கெஞ்சினார் செல்வி.

“அம்மா… இல்லம்மா… என்னால முடியாது. நான் அவங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்…” அவளது தலைமுடி தந்தையிடம் இருக்க, தலையைப் பிடித்துக் கொண்டு வலியில் ஹீனமாகக் கூறியவளை இன்னும் வெறியோடு பார்த்தார் வேலுச்சாமி.

அவளது முடியைக் கொத்தாகப் பற்றியவாறே இழுத்துக் கொண்டு கல் சுவரை நோக்கிப் போனவரின் நோக்கம் புரிந்து செல்வி ஐயோவெனக் கத்த, பதறிய சக்திவேல், வேலுச்சாமியை நோக்கி ஓடினான்.

அந்தக் கல் சுவற்றில் வேகமாக அவளது தலையை மோதப் போனவரைப் பிடித்துத் தள்ள, நந்தினியை விட்டுச் சற்றுத் தள்ளிப் போய் விழுந்தார். நிலைதடுமாறிக் கீழே விழப் போன நந்தினியை இறுக்கிப் பிடித்தான்.

திரும்பிச் சக்திவேலைப் பார்த்த அவள் கண்கள் கலங்கி இருந்தன. உனக்கு இது தேவையா என்று அவன் கண்களால் கேட்க, அவளது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது.

“வேலுச்சாமி… எதுக்குய்யா பொண்ணை அடிக்கற? இதோ இந்த அநாதைப் பயலை அடிச்சுக் கொல்லணும். பொண்ணு மனசைக் கலைச்சு இந்தளவு பேசச் சொல்லிக் கொடுத்தது இவனாத்தான் இருப்பான்…” அங்கிருந்த இன்னொருவர் சவுண்டு விட, அவளை நிலைநிறுத்திய சக்திவேல், ரௌத்திரமாகத் திரும்பினான்.

“வாங்கய்யா வாங்க. எவனுக்கு என் மேல கைய வைக்கிற துணிச்சல் இருக்கோ என் முன்னாடி வாங்க. நீங்களா நானான்னு ஒரு கை பார்த்துடலாம்…” என்று கூட்டத்தினரைப் பார்த்து முஷ்டியை மடக்கியவன், திரும்பி நிலைதடுமாறிக் கீழே விழுந்து கிடந்த வேலுச்சாமியைப் பார்த்து,

“யோவ்… இன்னும் ஒரு தடவை அந்தப் பொண்ணு மேல கைய வெச்ச, அப்புறம் உனக்குக் கை இருக்காது சொல்லிட்டேன். உங்களுக்குத் தான் அருவாளத் தூக்கத் தெரியும்ன்னு நினைக்காதீங்க, எனக்கும் தெரியும். காதலிச்சுத் திருமணம் பண்ணிட்டு வந்த பொண்ணை விஷம் வெச்சுக் கொன்ன பேடிப் பசங்க தானேய்யா நீங்கள்லாம்! உனக்கே இந்த வெறி இருக்கும்போது, எவனோட காசுலையும் உடம்பை வளர்த்தாத எனக்கு எவ்வளவு இருக்கும்? இன்னொரு அடி அந்தப் பொண்ணு மேல விழுந்துது, ஒரு பய வீடு போய்ச் சேர மாட்டீங்க…” ருத்ர தாண்டவம் ஆடியவனைப் பார்த்து விக்கித்து நின்றது அந்தக்கூட்டம்.

“டேய்… என்ன சவுண்டு ஓவரா இருக்கு? நாங்க நினைச்சா ஒரே நிமிஷத்துல உன் சோலியை முடிச்சுக் காவேரியில வீசிட்டுப் போயிருவோம். அடிச்சுப் போட்டா கேட்க யாருமில்லாத அநாதை நாயி நீ. இவ்வளவு பேசும்போது, ஒரு ஆத்தா அப்பனுக்குப் பொறந்த எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?” அந்த மனிதன் சக்திவேலை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்த, சக்திவேல் கோபத்தில் அவனை நோக்கிப் பாயப் போக, நந்தினி அவசரமாகத் தடுத்து நிறுத்தினாள்.

“ஒரு நிமிஷம் இருங்க…” என்று தனது முடியை முடிந்தவள், பேசிய அந்த மனிதனை நோக்கி, “யாருங்க ஆத்தா அப்பன் தெரியாதவங்க? நீங்க ஒரு ஆத்தா அப்பனுக்குப் பொறந்திருப்பீங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா, தெருவுக்கு நாலு வப்பாட்டி வெச்சுருக்க நீங்கள்லாம் ஒசந்தவங்க, இன்னொரு பொண்ணு முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காத சக்தி உங்களுக்குத் தாழ்ந்தவங்களா? இருந்துட்டுப் போகுது… அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது நான் தான், நீங்க இல்லை…” நிமிர்ந்து நின்று தெளிவாகக் கூறியவள், மாப்பிள்ளை வீட்டினரை நோக்கிப் போனவள்,

“சரிங்க… நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி அவங்க வேண்டாம்ன்னு வந்துடறேன்…” என்று கூறி நிறுத்தியவள், சக்திவேலைத் திரும்பிப் பார்த்தாள். ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டித் துணைக்கழைத்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து, மனதில் சக்தியிடம் மன்னிப்பை வேண்டி,

“ஆனா, நான் இப்போ மூணு மாசம்… என்னைக் கட்டிக்க நீங்க ரெடியா?” அந்த மாப்பிள்ளையைப் பார்த்துக் கேட்க, அங்கிருந்த அனைவரும் அரண்டு நின்றனர்.

சக்திவேலோ லட்சம் பகுதியாக உடைந்து விழுந்தான். ஆயிரம் முறை இறந்து பிறந்தான். இது என்ன மாதிரியான வார்த்தை என்றாவது இந்தப் பெண் உணர்ந்து பேசுகிறதா? விளையாட்டுத்தனம் இதிலுமா? இதைவிட ஒரு அசிங்கம் தனக்கு இருக்க முடியுமா? தன்னை நம்பிக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த பெண்ணிடம் வரம்பு மீறுபவனா இந்தச் சக்திவேல்?

அந்த மனிதன் பேசிய வார்த்தைகள் செய்த காயத்தைவிட, அந்தக் காயத்திற்கு மருந்திட முனைந்தவள் செய்த காயம் அவனது உயிர்வரை சூறையாடியது. ஒரே நிமிடத்தில் அவளது பேச்சை இல்லையென்று மறுத்து விட முடியும். ஆனால் அவனுக்காகத் தன்னைப் பணயம் வைத்து அந்தக் கௌரவர்களின் சபையில் சூதாடிக்கொண்டிருந்தவளின் தன்மை அவனை இழுத்துப் பிடித்தது. அவளின் நோக்கம் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது தான்.

அவளது படிப்பு… அவளது கனவு!

இந்தச் சந்தர்ப்பத்தை அதற்காக உபயோகப்படுத்திக் கொண்டாள் என்பது அவன் அறிந்தது தான். ஆனாலும் அதற்காக இந்த அளவுப் பொய் சொல்ல முடியுமா? அதுவும் ஒரு பெண்ணால் இந்தளவு தன்னைக் கேவலப்படுத்திக் கொள்ள முடியுமா?

உறைந்து நின்றவனின் மனதில் சூறாவளி அடிக்க, வேலுச்சாமி தலையில் கையை வைத்து அமர்ந்திருந்தார். செல்வியோ வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார்.

நந்தினியைப் பொறுத்தவரையில் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அவளுக்கு அவளது படிப்பும் வேண்டும், அதோடு சக்தியும் வேண்டும். சக்தியைத் திருமணம் செய்து கொண்டால் தனது படிப்பிற்கு இடையூறு வராது என்று மட்டுமே நம்பினாள் அந்தப் பேதை. அதைவிட அவள் கண்ட அவனது பல்வேறு புதிய முகங்கள் அவளைப் பேதலிக்கச் செய்ய, அவளால் சக்தியை விட்டுக்கொடுக்க முடியாமல் போனது.

அந்தச் சூழ்நிலையை அவளும் எதிர்பார்க்கவில்லை. நேற்று வரையில் அவளுக்கு அவன்மேல் காதல் வரவில்லை. நாள் பார்த்துக் கோள் பார்த்து வருவதல்ல காதல். அன்று தோன்றிய அந்த உணர்வு, அவனை விட்டுவிடாமல் பற்றிக் கொள்ளச் சொன்ன மனம்… வேறு வழி இல்லாமல் அந்த முரட்டு மனிதர்களின் வாயை அடைக்க அவள் அப்படியொரு பொய்யைக் கூறினாள். பின்விளைவுகளைப் பற்றிப் பெரிதாக உணர்ந்தறியாத, கவலைப்படாத சிறு பெண் என்று அவனுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தினாள்.

வெகுமௌனமாக இருந்தது அந்தக் கூட்டம். சற்று நேரம் தீவிர யோசனையில் இருந்த அவளது தந்தை அமைதியாக எழுந்து, தனது மகளைப் பார்த்து,

“சரிம்மா… இந்த அளவு ஆனதுக்கு அப்புறம் எனக்கும் வேற வழி தெரியலை. உனக்கும் இந்தப் பயலுக்குமே கல்யாணத்தை முடிச்சு வெச்சுடறேன்…” என்று அவர் கூறியபோது, பளீரென மலர்ந்தது நந்தினியின் முகம். சக்தி அதிர்ந்தாலும் நம்பாத தன்மையோடு அவரைப் பார்க்க,

“அப்பா…” கண்ணீரோடு அவளது அன்னைக்கு அருகில் சென்றவள் அன்னையை அணைத்துக் கொண்டாள். வேலுச்சாமியை வெறித்துப் பார்த்த செல்வி தன் மகளை இறுக்கி அணைத்துக் கொண்டார். சக்திவேலையும் நந்தினியையும் பார்த்து,

“ஆமா, நல்ல நாள் பார்த்து நானே கல்யாணம் முடிச்சு அனுப்பி வைக்கிறேன். அதுவரைக்கும் பொறுமையா இருப்பியா நந்தினி?” அவளைப் பார்த்துக் கைகளைக் குவித்துத் தொழுதவரை குற்ற உணர்ச்சியோடு பார்த்தாள் நந்தினி.

“என்னப்பா இப்படிப் பேசறீங்க? நான் உங்க பொண்ணுப்பா…” நா தழுதழுத்தவளைப் பார்த்து,

“இல்லைம்மா, நீ என் பொண்ணு இல்லை, இவனோட பொண்டாட்டி. என்னோட பொண்ணு இப்படிச் செஞ்சிருக்க மாட்டா. அவனை நம்பி அனுப்பி வெச்சதுக்கு எனக்கு என்னோட பொண்ணை இல்லாம பண்ணிட்டானே…” தலையில் கை வைத்து அழுதவரைப் பார்க்க அவளால் முடியவில்லை. இந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு எங்கோ இடறியது.

“சரி உள்ள போ… மிச்சத்தைக் காலைல பார்த்துக்கலாம். செல்வி… புள்ளையை உள்ள கூட்டிட்டுப் போ…” என்று செல்வியிடம் கூறிவிட்டு, அவரது உறவினர்களைப் பார்த்து, “சரிப்பா எல்லாரும் கிளம்புங்க… நாளைக்கு மிச்சத்தைப் பேசிக்கலாம்…” என்று முடித்துவிட்டு எழ,

“ஒரு நிமிஷம்…” சக்திவேல் அவர் முன்னே வந்தான்.

“என்ன…” அவனை நேராகப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி கேட்டவரை,

“நந்தினியை உங்ககிட்ட விட்டுட்டுப் போக முடியாது…” ஒரே வரியில் கறாராக முடித்தான். அருகில் நின்று கொண்டிருந்த நந்தினியின் அன்னை நிம்மதிப் பெருமூச்சோடு அவனை நன்றியாகப் பார்க்க, வேலுச்சாமியோ கோபம் கொப்பளிக்க அவனைப் பார்த்தார்.

“இப்போ வரைக்கும் அவ என் பொண்ணுதான்… அதைப் புரிஞ்சுக்கோ…” கோபத்தில் வார்த்தைகளை மென்று துப்பியவரைப் பார்த்து,

“இப்போதான் உங்க பொண்ணே இல்லை, என் பொண்டாட்டீன்னு சொன்னீங்க…”

“சொன்னான்… அதுக்காக இப்போவே வாடா மருமகனேன்னு உன்னையும் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா?” இருவரது பேச்சும் நந்தினியின் மனதில் கிலியைப் பரவச் செய்தது. தந்தை ஒப்புக்கொண்டாரே, ஏன் சக்தி பிரச்சினை செய்கிறான் என்று கோபம்கூட வந்தது.

“நீங்க என்னை அழைக்க வேணாம். நானும் உங்க வீட்டுல எந்தக் காலத்துலையும் விருந்தாட வரமாட்டேன். ஆனா இப்போ உங்ககிட்ட நந்தினியை விட முடியாது…”

“என் பொண்ணை நான் வீட்டுல வெச்சுக்க உன்கிட்ட எதுக்கு அனுமதி கேட்கணும்…?”

“சரி என்கிட்ட கேட்க வேணாம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல போலீஸ் வந்துடும். அவங்ககிட்ட கேட்டுக்கங்க…” என்று வேண்டுமென்றே அவர்களை மிரட்டுவதற்குக் கூற, வேலுச்சாமியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“நீங்க உங்க பொண்ணை ஏமாத்த முடியும், என்னை முடியாது. அந்தப் புனிதா பொண்ணு விஷயம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா? இப்போ நந்தினியை விட்டுட்டுப் போனா நாளைக்கு அவளும் வயித்து வலியால விஷத்தைக் குடிச்சதா ஒரு கதையைச் சொல்வீங்க. என்கிட்டே குத்தாதீங்க… காது!” படு கோபமாகக் கூறினாலும் அதுதான் உண்மை என்பதால் வேலுச்சாமிக்கு ரத்தம் கொதித்தது.

அதுவரை அவர் காப்பாற்றி வந்த கௌரவத்தை, தனது சாதி சனத்தின் முன் நியாயம் பேசுபவராக இருந்து வந்த தன் பிம்பத்தை உடைக்க வந்தவனாகத் தெரிந்த அவனை முழுவதுமாக வெறுத்தார். எரித்து விடுவதைப் போலப் பார்த்து,

“அவ என் பொண்ணு. வீட்டுல வெச்சிருப்பேன் இல்லை உயிரோட வெட்டிப் போடுவேன். அது என் இஷ்டம். உனக்கென்ன? உன்னை விட்டு வெச்சுருக்க திமிர்ல பேசறியா? உன்னையெல்லாம் வெட்டிப் பலி போட்டாதான்டா என் ஆத்திரம் அடங்கும்…”

கடுங்கோபத்தில் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் பேச, நந்தினி தன் அன்னையை ஆற்றாமையோடு பார்த்தாள். அவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவளுக்கு மட்டுமே கேட்பது போல,

“எனக்கு நீ ஒத்தைப் பொண்ணுடி… பேசாம அவன் கூட இப்போ போயிடு…” கண்ணீரோடு கூறிய அன்னையை கசப்பாகப் பார்த்தாள் நந்தினி. அவர் கூறிய அந்த ஒற்றைப் பெண் என்கிற வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு அப்போது விளங்கியது.

“அம்மா… உன்னோட ஆசீர்வாதம் மட்டும் எனக்குப் போதும்மா…” என்று அவரிடம் மெல்லிய குரலில் அவள் கூற, “எங்க இருந்தாலும் நீ உசுரோட இருந்தாப் போதும் நந்து…” என்று அவர் கண்ணீர் விட, நந்தினிக்கு அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது.

“உங்களுக்கு மட்டும் தான் வெட்டத் தெரியுமா? ஏன் எனக்குத் தெரியாதா? போலீஸ் வந்துட்டு இருக்கு. அவங்ககிட்ட எழுதிக் கொடுத்துடுங்க. நந்தினிக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கு முழு காரணமும் அவளுடைய தகப்பனாராகிய நானேன்னு எழுதிக் கொடுங்க… நான் பேசாம போயிடுறேன். அதை விட்டுட்டு என்கிட்ட பூச்சி காட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா நானும் சும்மா இருக்க மாட்டேன்…”

தன் எதிரில் நின்று சிறிதும் பயமில்லாமல் அவரையே மிரட்டிக் கொண்டிருந்த சக்தி அவருக்கு மிகப்பெரிய எதிரியாகத் தோன்றினான்! ஆனால் போலீஸ் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவரைச் சூழ்ந்தது. புனிதாவின் பெயரை இழுத்து, போலீஸ் வருகிறது என்றதும் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவராகத் தாங்கள் அதில் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து ஜகா வாங்கிக்கொள்ள, அவரது குரலுக்கு ஆதரவு தெரிவிக்க ஆட்களும் குறைவாக இருக்க, ஆதரவற்றவராகத் தரையில் பொத்தென அமர்ந்தார்.

தனது தந்தையை வெறித்துப் பார்த்த நந்தினி எதுவும் பேசாமல் மௌனமாக சக்திவேலின் வேனில் ஏற, அங்கிருந்தவர்களை வெறுப்பாகப் பார்த்தவன், வேனில் அமர்ந்து ஒரு கணம் சிந்தித்து, தீர்க்கமான முடிவை எடுத்தவன், வாகனத்தை உயிர்ப்பித்தான்!

நந்தினியின் மேல் மலையளவு கோபமிருக்க, அவளது உயிரைக் காப்பாற்ற வேண்டி மட்டும் அவளை அழைத்துக் கொண்டு பயணத்தைத் துவங்கினான்! வாழ்க்கைப்பயணத்தையும்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஒன்பது

மௌனமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் சக்திவேல். உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும், அதை அந்தப் பெண்ணிடம் காட்டப் பிரியமில்லை. கோபம்கூடக் காதலைப் போன்றதுதான்... உரிமையான கோபத்தை உரியவர்களிடம் மட்டுமே காட்ட முடியும்! நந்தினிக்கு அந்தத் தகுதி கூட இருப்பதாகப் படவில்லை சக்திவேலுக்கு!எவ்வளவு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்