arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பதின்மூன்று
தித்திக்குதே chevron_right பகுதி 13 / 26

அத்தியாயம் பதின்மூன்று

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அடுத்த நாள் எழுந்தபோதே தலைவலித்தது நந்தினிக்கு. சோர்வாக இருந்தது. இரவு அவளது கணவனிடம் செய்த தர்க்கமும் அவனது வார்த்தைகளும் அவளை வெகுவாகக் காயப்படுத்தியிருக்க, இனி அவனைத் தானாக அழைக்கப்போவதில்லை என்ற அவளது தீர்மானமும் அவளது கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது.

அன்று முழுநாளும் பரிசோதனைக் கூடத்தில் இருக்க வேண்டியிருக்கும். ஐந்து மணி நேரச் செய்முறை வேறு அவளை மிரட்டியது. ஓய்வுக்காகவும் வெளியே வர முடியாது. முடிவைக் காட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையே பார்க்க வேண்டியிருக்கும்.

சலசலத்துக் கொண்டிருந்த பார்கவிக்குப் பதிலைக் கூறிக்கொண்டே கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்தவளை மைதிலி அவசரமாக அழைத்தாள்.

“நந்து…” சத்தமாக அழைத்துக்கொண்டே வந்தவளைக் கேள்வியாக நந்தினி பார்க்க,

“ஏன்டி எருமை இப்படி கத்திகிட்டே வர?” பார்கவி மைதிலியைத் திட்ட,

“ஏய் லூசு… ஒரு நிமிஷம் இரு… மூச்சை வாங்கிக்கறேன்…” என்றவாறு ஆசுவாசப்படுத்திக்கொண்ட மைதிலி, இருவரையும் பார்த்து,

“சித்ரா வந்திருக்காடி…”

அவளது அந்த ஒற்றை வரி பார்கவிக்கு முகத்தை மலர வைக்க, நந்தினிக்கு பேய் ஒன்று வந்து முகத்தில் அறைந்தது போலிருந்தது.

சித்ராவின் வருகை அவளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்னொரு பக்கம் குற்ற உணர்ச்சியைத் கொடுத்தது. சித்ரா எந்தளவு சக்திவேலைக் காதலித்தாள் என்பது அவள் அறிந்ததுதான். அதையும் அவள் வெளிப்படையாகவே நந்தினியிடமும் வளர்மதியிடமும் கூறியிருந்தாள். ‘அதைத் தானும் எதிர்த்துப் பேசியிருந்தோம்’ என்பது நினைவுக்கு வந்து அவளுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. அப்படிப் பேசிவிட்டு அவனையே திருமணமும் செய்திருந்ததைச் சித்ரா எப்படி எடுத்துக்கொள்வாள் என்பது அவள் முன் நின்ற மிகப்பெரிய கேள்வி.

எப்படி இருந்தாலும் அவளுக்குத்தான் திருமணம் நிச்சயமாகிவிட்டதே என்பது நந்தினியின் மனதின் ஓரத்தில் ஆறுதலைத் தந்தாலும், ஒன்றை நினைத்தால் அந்த ஒன்றிலேயே நிற்பதில் தன்னைக் கொண்டிருந்த சித்ராவை நினைத்து மனதின் ஓரத்தில் அவளுக்குப் பயம் இல்லாமல் இல்லை.

நந்தினியை இழுத்துக்கொண்டு முகம் முழுக்கச் சிரிப்பாக அலுவலக அறையை நோக்கிச் சென்றாள் பார்கவி. கால்கள் பின்ன அவளிடம் வர மறுக்கவும் முடியாமல், அதே சமயம் சித்ராவை எதிர்நோக்கவும் முடியாமல் தடுமாறினாள் நந்தினி.

“ஹேய் சித்து…” புன்னகையோடு அவள் முன் சென்ற பார்கவி, “எப்படிடி இருக்க? டிசி வாங்க வந்தியா?” இயல்பாக அவளை விசாரிக்க, சிறு புன்னகையோடு,

“ஆமா கவி…”

குரலில் இருந்த சோகத்தைக் கண்டுகொண்ட பார்கவி, “சித்து… ஆல் தி பெஸ்ட் டி… கவலைப்படாத… நல்லதே நடக்கும்ன்னு நம்புடா…” சித்ராவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்த பார்கவியை மட்டும் பார்த்த சித்ரா, எதேச்சையாகத் தலையைத் திருப்ப, அலுவலக அறை வாசலில் நின்றுகொண்டிருந்த நந்தினியைப் பார்த்தாள். முகம் கறுத்தது. ரணமாகிவிட்ட காயத்தைத் திரும்பக் கீறியது போன்ற உணர்வில் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பி கொண்டாள் சித்ரா.

அந்த ஒரு நொடியில் நூறு முறை இறந்து பிறந்தாள் நந்தினி. உதடு துடிக்க, கண்கள் கலங்க,

“சி… சித்து…” தடுமாறி அழைக்க, நிமிர்ந்து வெறுமையான பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பினாள். பதில் பேசாமல் மௌனமாக அலுவலக அறையைக் கடந்து கல்லூரிப் பூங்காவை நோக்கிப் போக,

“சித்து ப்ளீஸ்… என்கிட்ட பேசுடி…” உணர்வுகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவளை மீண்டும் கெஞ்சினாள் நந்தினி.

“என்ன பேசச் சொல்ற? நான் ஏமாந்து போன கதையைப் பேசச் சொல்றியா? இல்லை பிரண்டுங்கற பேர்ல ஒரு துரோகியை நம்பிட்டு இருந்தேனே அதைப்பேசச் சொல்றியா?”

வார்த்தைகள் விஷமாய் அவளைத் தீண்ட, அதன் உள்ளே பொதிந்த அர்த்தத்தில் துவண்டு போனாள்.

“சித்து ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேசாத… மனசுக்குக் கஷ்டமா இருக்கு!”

“எனக்கும்தான்டி கஷ்டமா இருக்கு… மனசெல்லாம் எரியுது… காந்துது… இத்தனை நாளா மனசுக்குள்ள வெச்சு அழகு பார்த்துட்டு இருந்த என்னோட காதலை இப்படி நீ கேலிக்கூத்தாக்கிட்டியே… என்னால முடியல…” சித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய,

“சித்து… உனக்கு நிச்சயமாகிருச்சே… மறந்துட்டுப் பேசறியா?” அதிர்ச்சியாகக் கேட்க,

“நிச்சயமானா… நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேனா? என்கிட்டே கேட்டியா? அப்படின்னாலும் எப்படிடி உன்னால முடிந்தது? உனக்கெல்லாம் அடுத்தவ லவ் பண்றவன் தான் கிடைச்சானா? இல்லை முன்னாடியே நடந்துட்டு இருந்த அசிங்கமா இது?” அவளது கோபத்தை வெளிப்படுத்த வழி தெரியாது நந்தினியை வார்த்தைகளால் குதறிக் கொண்டிருந்தாள் சித்ரா.

“சித்ரா… அசிங்கம் அது இதுன்னெல்லாம் பேசாத… வார்த்தையை அடக்கு…” நந்தினியின் காதலைக் குறைவாகப் பேசத் துவங்கிய சித்ராவைப் பார்த்து முறைத்தபடி அவள் கூற,

“அசிங்கம் இல்லாம வேற என்ன? மூணு மாசம்ன்னு வேற சொல்லிருக்க…” சித்ராவின் குரல் உடைய, வார்த்தைகள் வெளிவர யோசித்தது. நந்தினியை நோக்கித் திரும்பிய சித்ரா, “சத்தியமா சொல்லு நந்தினி… நிஜமாவே நீ சக்தியை லவ் பண்ணியா?” ஏக்கமாக அவள் கேட்டது நந்தினியின் மனதை வாள் கொண்டு அறுத்தது. தலையைக் குனிந்துகொண்டு மெல்லிய குரலில் கூறினாள்.

“ஆமா சித்து… லவ் பண்ணேன்… பண்றேன்… இனிமேலும் பண்ணுவேன்…”

“அப்போ அன்னைக்கெல்லாம் அவனைக் கேவலமா பேசினது வேற வாயா?” முகத்தில் கோபம் கொந்தளிக்கச் சித்ரா கேட்க, நந்தினியும் கோபமாக நிமிர்ந்தாள்.

“இங்க பார் சித்து… நீ என்னைய என்ன வேணும்னாலும் பேசு. ஆனா என் புருஷனைப் பற்றி பேசும்போது யோசிச்சுப் பேசு. அவன் இவன்னு பேசின, மரியாதை இல்லை சொல்லிட்டேன்…” சக்திவேலின் மனைவியாகச் சிலிர்த்துக்கொண்டு நின்றவளைக் கூர்மையாகப் பார்த்த சித்ரா, சிறிது நேரம் மௌனமாகினாள்.

“நிச்சயம் பேசினாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை நந்தினி… அதாவது உன் கல்யாணம் நடக்கற வரைக்கும். சாப்பிடாம இருந்து பார்த்தேன்… விஷம் குடிச்சுடுவேன்னு மிரட்டிக் கூடப் பார்த்தேன் எங்க அம்மா கிட்ட… அவங்களுக்குத்தான் அது பழக்கமாகிடுச்சே… சரி குடிச்சுக்கோன்னு சொன்னாங்கடி…” என்று கூறிவிட்டு மடிந்து அமர்ந்து சத்தத்தை அடக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நந்தினியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிய, அவளும் அவளுடன் மடிந்து அமர்ந்தாள்.

“சித்து…”

“அதெல்லாம் எதுக்காக? படிக்கவா? இல்லையே… சக்திக்காகத்தானே… இப்படி ஒரே நாள்ல நீ தட்டிக்கிட்டுப் போகவா நான் அப்படி போராடினேன்? சத்தியமா நீ கல்யாணம் செய்ததை விட, அதுக்குச் சொன்ன காரணத்தைக் கேள்விப்பட்டுச் செத்துட்டேன்டி… விஷம் கூடப் பெட்டர் நந்தினி…”

அழுகையை நிறுத்தாமல் அவளது உள்ளக் குமுறலைக் கொட்டிக்கொண்டிருக்க, நந்தினிக்குத் தலை சுற்றியது. எதையும் யோசிக்காமல் சக்திவேல்மேல் கொண்ட திடீர் காதலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தாள் அந்தப் பேதை.

“சத்தியமா சொல்லு நந்தினி… சக்தி உன்கிட்ட அப்படி பழகியிருக்காரா?” குமுறிக்கொண்டு அவளது முகத்தைச் சித்ரா ஏக்கமாகப் பார்க்க, நந்தினிக்கு அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தெம்பும் அற்றுவிட்டிருந்தது.

“கண்டிப்பா எனக்குத் தெரியும் நந்தினி… நீ சொன்னது பொய்தான். ஏதோ ஒரு கம்பல்ஷன்லதான் சக்தி உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கார்…” சித்ராவின் கண்களில் ஒளி தெரிய, நந்தினியின் முகமோ இருண்ட நிலவானது.

“அந்த இடத்துல நீ இருந்ததால இப்போ சக்தியோட மனைவியா இருக்க… இதே நான் இருந்திருந்தா…”

சித்ராவின் முகத்தில் ஒரு நொடியில் காதலைத் தவறவிட்ட வலி தெரிய, நந்தினி அதிர்ந்து போயிருந்தாள். இதை மறுக்க முடியுமா? வழியே இல்லையே! உண்மையும் அதுவாகத்தானே இருக்கிறது. அந்த இடத்தில் தான் இல்லையென்றால்… அதன் விளைவைச் சிந்தித்துப் பார்க்கவும் நந்தினியின் மூளை வேலைநிறுத்தம் செய்திருக்க, வார்த்தைகள் சிறைபிடிக்கப்பட்டிருந்தன. மௌனமாகத் தன்னிலையையும் சக்தியிடம் தனக்கான இடத்தையும் ஆராய்ந்துகொண்டிருந்தவள், ஒரு முடிவாகச் சித்ராவைப் பார்த்தாள்.

“சித்ரா… நீ முடிஞ்சு போன விஷயத்தைப் பேசிட்டு இருக்க. அவர் என்னோட சக்தி… என் ஹஸ்பண்ட்… அதை நினைப்புல வெச்சுக்கோ… அவங்களை மறந்துடு…” உணர்ச்சியைத் துடைத்துக்கொண்டு அவள் கூற, ஏளனமாகப் பார்த்த சித்ரா,

“மறந்துட்டு…” கேலியாகக் கேட்க,

“என்ன மறந்துட்டு? வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்க… என் புருஷனைப் பற்றி நினைக்காத…” கடுப்படித்தாள் நந்தினி.

“கல்யாணம் செய்துக்கத்தான் போறேன் நந்தினி… உன்னாலதான் எங்கப்பா சொன்னவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்…” என்று கூறிவிட்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, “என்னை இரட்டை வாழ்க்கை வாழத் தயார் பண்ணிட்டடி…” எங்கோ பார்த்தபடி கூறியவளை வெறித்துப் பார்த்தாள் நந்தினி.

***

கண்களைக் கட்டிவிட்டது போலப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் நந்தினி. காதுகளில் சித்ரா பேசியவை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தன. என்னவெல்லாம் பேசிவிட்டாள்? இவள் ஒரு காலத்தில் சக்தியைக் காதலித்திருக்கலாம்; ஆனால், அது கடந்த காலம் என்பதேன் அவளுக்குப் புரியவில்லை?

ஆனாலும், அவள் முழுவதுமாக நியாயமற்று நடக்கவில்லை. ‘அன்று அவளிடம் நீ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை’ என்று மனம் இடித்துரைக்க, ‘பேச என்ன இருக்கிறது’ என்று இன்னொரு மனம் வாதாடியது. ‘அவள் காதலித்தது உனக்கும் தெரிந்திருக்க, அப்படியிருந்தும் சக்தியை நீ மணந்திருக்கிறாய்’ என்று மனம் மீண்டும் இடிக்க, ‘அவள் தான் காதலித்தாளே தவிர சக்தி? அவன் அதற்கு உடன்பட்டானா?’

பரிசோதனைக் கூடத்திற்கு வந்தால் வேறு எந்தச் சிந்தனையும் செய்யாத நந்தினி, அன்றோ குழப்பங்களின் பிடியில் தன்னைத் தொலைத்திருந்தாள்.

“கேர்ல்ஸ்… இன்னைக்கு ஆர்கானிக்ல மெத்தில் சாலிசிலேட் பிரிபரேஷன் அண்ட் பிசிக்கல்ல மெல்டிங் பாயிண்ட் ஆஃப் வேக்ஸ்… லேப் அசிஸ்டண்ட் கிட்ட உங்களுக்குத் தேவையான கெமிக்கல்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்ட் செட் வாங்கிக்கங்க…”

விரிவுரையாளர் கொடுத்துக் கொண்டிருந்த அறிவுரை காதில் விழாமல், தன் முன் இருந்த பியூரட்டையே பார்த்துக் கொண்டிருந்தவளைச் சற்றுச் சத்தமாக அழைத்தார் அந்த விரிவுரையாளர்.

“நந்தினி… வாட் ஹேப்பன்ட்? நான் சொன்னதைக் காதில் வாங்கினாயா இல்லையா?” சற்றுக்கோபமான அந்த உத்தரவு அவளைச் சட்டென்று செயல்பட வைக்க, அதற்குப் பின் தனது பிரச்சினைகளை மறந்து பரிசோதனைகளில் ஆழ்ந்தாள்.

முழுநாளும் அங்கேயே கழிய, உணவு உண்பதற்காக மற்றவர்களெல்லாம் போனபோதும் நந்தினி அசையாமல் அங்கேயே இருந்தாள். பசி என்ற உணர்வே அவளை ஆட்கொள்ளவில்லை. தனக்கே தனக்கான தன் கணவனை இன்னொருத்தி நினைத்துக் கொண்டிருப்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

ஒரு வழியாகச் செய்முறைகளை முடித்துவிட்டு விடுதிக்கு யாரிடமும் பேசாமல் தளர்ச்சியாகச் சென்று கொண்டிருக்க, அலுவலக உதவிக்கு இருக்கும் அந்தப் பெண் அவசரமாக நந்தினியை நோக்கி வந்தாள்.

“நந்தினி அக்கா…” சற்றுச் சத்தமாக அழைத்துக்கொண்டு அவளை நோக்கி வந்தவளைக் கேள்வியாகப் பார்த்தாள் நந்தினி.

“என்ன வாசு?” வாசுகி என்பதின் சுருக்கமே வாசு.

“அக்கா… உங்களுக்கு விசிட்டர் வந்திருக்காங்க…” என்று அந்தப் பெண் கூறியவுடன், ‘தன்னைப் பார்க்க விசிட்டரா’ என்று ஜிவ்வென்று உயரத்தில் பறந்த அவளது உணர்வுகள், சட்டென்று தரையில் விழுந்தன. தன்னைப் பார்க்க யார் வருவார்கள்? பெற்றவர்கள் விட்டிருக்க, கை பற்றியவனோ ‘வரவே மாட்டேன்’ என்றல்லவா கூறிவிட்டான் என்ற சுயபச்சாதாபம் அவளை ஆட்டிப்படைத்தது. அதோடு சித்ரா வந்து பேசிவிட்டுச் சென்றதும் அவளது மனதைக் கனக்கச் செய்ய, ஆர்வமே இல்லாமல் விசிட்டர் அறையை நோக்கிச் சென்றாள்.

நந்தினி சோர்வாக உள்ளே வருவதைக் கண்டவுடன், முகம் சுருக்கி அவளை வரவேற்றது சாட்சாத் சக்திவேலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினான்கு

நம்ப முடியாமல் தலையை உதறிக்கொண்டு மீண்டும் பார்த்தாள் நந்தினி.“என்ன... இப்படியொரு ரியாக்ஷன்? என்னாச்சு?” அதே கடின முகம்; வார்த்தைகளில் மட்டும் சிறிது மென்மை.“வ... வரமாட்டேன்னு சொன்னீங்க...” அவளது குறும்பையெல்லாம் அவளது குழப்பங்கள் தின்று கொண்டிருக்க, சக்தியின் பார்வை அவளைக் கூர்மையாக அளவெடுத்துக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்