அத்தியாயம் பதினான்கு
நம்ப முடியாமல் தலையை உதறிக்கொண்டு மீண்டும் பார்த்தாள் நந்தினி.
“என்ன… இப்படியொரு ரியாக்ஷன்? என்னாச்சு?” அதே கடின முகம்; வார்த்தைகளில் மட்டும் சிறிது மென்மை.
“வ… வரமாட்டேன்னு சொன்னீங்க…” அவளது குறும்பையெல்லாம் அவளது குழப்பங்கள் தின்று கொண்டிருக்க, சக்தியின் பார்வை அவளைக் கூர்மையாக அளவெடுத்துக் கொண்டிருந்தது.
“ஒரு வேலை… அதான் வந்தேன்…” அப்போதும் ‘உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று ஒரு வார்த்தையாவது சொல்வானா என்ற அவளது ஏக்கம் நிறைவேறாமல் போக, மனம் தவித்தது.
“என்ன வேலை?” ஏமாற்றத்தினை மறைத்துக்கொண்டு அவள் கேட்க, சக்திவேல் ஒரு கவரை எடுத்து அவள் முன் நீட்டினான். அவனைத் கேள்வியாகப் பார்த்துக்கொண்டு வாங்கியவள், பிரித்துப் பார்க்க, உள்ளே இருந்தது சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவம்.
முகம் மலரப் படிவத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவளுக்கு மகிழ்ச்சி அலையாகப் பொங்கியது. அதுவரை இருந்த பிரச்சினைகளெல்லாம் கண்காணாத தூரத்திற்குப் போய்விட்டது போன்ற பிரமை. அவளது ஆசை, கனவு, லட்சியம் தன் கண்முன்னே உயிர்பெற்றுவிட்டது போலத் தோன்றியது நந்தினிக்கு.
“Call for பண்ணிட்டாங்களா? நான் பார்க்கவே இல்லையே…” சந்தோஷமாகக் கேட்க,
“Call for பண்ணி ஒரு வாரமாச்சு. ஜூன் டுவென்டியத் லாஸ்ட் டேட்… அதான் இப்போ அப்ளை பண்ணிடலாம்ன்னு வாங்கிட்டு வந்தேன்…” அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயத்தைக் கூறிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில் சக்தியின் முகமும் மென்மையைத்தத்தெடுத்தது.
“தேங்க்ஸ்… ரொம்ப தேங்க்ஸ்…” மகிழ்ச்சியாகக் கூறியவள் முகம் சட்டென இருண்டது.
“நான் ஒண்ணுமே படிக்கலையே… எப்படி எக்ஸாம் அட்டெண்ட் பண்ணுவேன்? எதைப்படிக்கிறதுன்னு கூடத் தெரியலையே…” முகம் வாடி அவள் மனதைக்கூற,
“அதனால என்ன? இனிமே படிச்சா போதும். அப்ளை பண்ணிட்டு இப்போ இருந்து படிக்க ஆரம்பிச்சுடு. லைப்ரரி இருக்கு, உங்க லெக்சரர்ஸ் இருக்காங்க. ஜஸ்ட் இப்போ ஒரு ட்ரை… எக்ஸாம் எப்படி இருக்குன்னு மட்டும் பார்த்துட்டு வந்துடு… ஓகேவா?” அவளது மனதைப் புரிந்த தோழனாக அறிவுரை கூற, செல்பேசியில் அவ்வளவு கடினமாகப் பேசியவன் இவன்தானா என்ற சந்தேகம் வந்தது நந்தினிக்கு!
“எக்ஸாம் பேட்டர்ன் கூட எனக்குத் தெரியாது… நான் எப்படி?” முகம் முழுக்கப் பதட்டமாக அவளது உண்மை நிலையைக் கூற, சக்திவேலுக்கோ அவளது அப்பாவித்தனத்தை நினைத்து வருத்தமாக இருந்தது. ஒன்றும் கூறாமல் அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க,
“ப்ளீஸ்… அப்படிப் பார்க்காதீங்க. எனக்கு ஐஏஎஸ் பாஸ் பண்ணணும்ன்னு ரொம்பவே ஆசை இருக்கு. ஆனா அதுக்கு என்ன பண்ணணும்ன்னு இன்னும் எனக்குச் சரியாத் தெரியல…” என்று கூறி நிறுத்தியவள், “சொல்லிக்கொடுக்க யாருமில்லை. அதுக்குத்தான் சென்னைல இன்ஸ்டிடியூட்ல சேரணும்ன்னு நினைச்சேன்…” குரல் தேய்ந்து நிறுத்தினாள்.
நந்தினியைக் குறை கூறி என்ன ஆகப்போகிறது? இருப்பது சிறிய கிராமம்; படிப்பின் அருமை உணராத பெற்றோர்; பெரிய அளவில் இதுபோன்ற தேர்வுகளில் புரிதல் இல்லாத கல்லூரி. அவளது நிலை அதுதானே என்று நினைத்துக்கொண்டவன்,
“பிரிலிம்ஸுக்கு புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். உன்னோட பைனல் எக்ஸாம்க்குப் படிக்கிற மாதிரிப் படி. ஏதாவது டவுட்னா கேளு. ஜஸ்ட் ஒரு அட்டெம்ப்ட் பண்றதுல தப்பில்லை. ஒரு வார்ம் அப் மாதிரி நினைச்சுக்கோ… ஓகேவா?” பொறுமையாக அவளிடம் எடுத்துக்கூற, அவளது முகமோ தெளியாமலிருந்தது.
“என்னாச்சு? இந்த பயம் பயந்துட்டுத்தான் நான் ஐஏஎஸ் ஆகணும்ன்னு அன்னைக்கு பினாத்திட்டு இருந்தியா?” அவனது நக்கல் அவளது தன்மானத்தைத் தாக்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை…” சிலிர்த்துக்கொண்டு, “படிக்கணும்ன்னு நினைச்சா நானெல்லாம் எவ்வளவு வேணும்னாலும் படிப்பேன். ஆனா புக்ஸ் எல்லாம் ரொம்ப காஸ்ட்லியாச்சே…” என்று கூறிவிட்டு அவனது முகத்தைப் பார்க்காமல், “என்கிட்ட பணம் இல்லை…” மெல்லிய குரலில் முடிக்க, சக்தியின் முகத்தில் வெப்பம் ஏறுமுகம் கண்டது.
“உன்கிட்ட இல்லையா? நம்மகிட்ட இல்லையா?” கோபமான குரலில் அவன் வினவினான்.
“என்கிட்டத்தான்…” இன்னமும் மெலிதான குரலில் அவள் கூற,
“இப்போ உனக்குத் தேவையான புக்ஸ் நான் வாங்கிட்டு வந்துட்டேன். இன்னமும் ஏதாவது தேவைன்னா… பிடி இந்தப் பணத்தை வெச்சுக்கோ…” என்று பர்ஸிலிருந்து எடுத்து அவளிடம் பணக்கற்றையை அவன் கொடுக்க, அவள் பதறினாள்.
“ஐயோ பணமெல்லாம் வேணாம்…” அவளது பதட்டம் அவனைக் குழப்பியது. அவளது மனமோ சித்ரா கூறிய வார்த்தைகளில் நிலைகொண்டிருந்தது என்பதை அவளே உணராதபோது அவன் எப்படி உணர்வான்? ‘அந்த நேரத்தில் சித்ரா இருந்திருந்தால்? சக்தி அவளை மணம் செய்திருக்கக்கூடுமோ?’ தனது ஆழ்மனதின் போராட்டம் அவனது பணத்தை மறுக்கச் சொன்னது.
“ஏன் வேணாம்?”
“இல்லை… வேணாம்…” அவளது பதட்டம் சற்றும் குறையவில்லை. அவளது தயக்கம் அவனுக்கும் ஏதோ புரிந்தது. சற்று யோசித்தவன்,
“சரி அதை விடு… கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா. உன்னை வெளியே அழைச்சுட்டுப் போக பர்மிஷன் வாங்கியிருக்கேன்…” என்று அவன் கூறியபோது ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள். ‘இதென்ன அதிசயம்? இவனை மோகினிப் பேய் எதுவும் அடித்துவிட்டதா?’ என்று ஒரு மாதிரியாகப் பார்த்து வைக்க,
“என்ன… பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்? சீக்கிரம் கிளம்பி வா…” அவளைச் சற்று வேகமாக விரட்டியவுடன் அடித்துப் பிடித்துக்கொண்டு அறையை நோக்கி ஓடினாள். மின்னல் வேகத்தில் குளித்துச் சேலை மாற்றிக்கொண்டு அவனோடு கிளம்பினாள்.
மாலையாகிவிட்டதால் வெளியே பேருந்து நிறுத்துமிடத்தில் சத்தங்கள் இல்லாமல் அமைதியாக இருக்க, வெளியே வந்தவள் வேனைத் தேடினாள். சக்திவேலுக்கோ பொறுமை வேகமாகக் கரைய, சற்றுச் சத்தமாக அழைத்தான்.
“நந்தினி… என்ன பண்ணிட்டு இருக்க?”
“இல்லை… வேன் எங்கன்னு பார்த்துட்டு இருந்தேன்…” சுற்றும் பார்த்தபடி அவள் கூற,
“நான் வேன் எடுக்கமாட்டேன். ஒரு தடவை சொன்னா சொன்னதுதான்… வண்டியில ஏறு…” என்று அவனது ஸ்பிளெண்டரைக் காட்ட,
“இது யாரு வண்டி?”
“ம்ம்ம் ஊரான் வண்டி… இப்போ ஏறப்போறியா இல்லையா?” கடுப்பாகப் பதில் வர, திரும்பப் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
“நல்லா பிடிச்சியா?” எங்கே விழுந்து வைத்துவிடப் போகிறாளோ என்று நினைத்துக்கொண்டு அவன் கேட்க,
“ம்ம்ம்…” என்று மறுமொழி உரைத்தாள். எதை நினைத்து இந்தளவு சோர்வாக இருக்கிறாள் என்பது சக்திக்குப் புரியவில்லை. தான் இரவு சற்று அதிகமாகத்தான் பேசிவிட்டோமோ என்று பாவமாக இருந்தது. இந்தச் சிறு பெண்ணை இனி அதுபோலப் பேசக் கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.
நேராக அவன் அழைத்துச் சென்றது இருவருக்கும் திருமணமான பசுபதீஸ்வரர் திருக்கோயில். சன்னதிக்குள் செல்லாமல் பக்கவாட்டில் இருந்த கருவூரார் சமாதி சன்னதிக்குச் சென்று மௌனமாக அமரும் வரை வார்த்தைகள் ஏதுமில்லாமல் கரைய, சற்று அதிகமாகவே இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
“என்ன கலெக்டரம்மா மூட் அவுட்டா இருக்காங்க போல இருக்கு… என்னாச்சு?” சிறு புன்னகையோடு அவன் கேட்க, ஆச்சரியமாகத் தலையை உயர்த்தினாள். இவன் எப்போது சிரிப்பான் எப்போது முறைப்பான் என்று புரியவே புரியாத நிலையில் என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை…”
“சரி… அப்ளிகேஷனை ஃபில் பண்ணிடலாமா?” இயல்பாக அவன் கேட்க, நந்தினிக்கு உள்ளூரச் சற்றுப் பயமாகவே இருந்தது. தன்னால் தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்கிற பயம்.
ஆனாலும், சக்தி கூறுவது போல ஒரு வார்ம் அப் போல இருக்கட்டுமே என்ற முடிவுக்கு வந்து, அப்ளிகேஷனை நிரப்ப ஆரம்பிக்க, ‘பெயர்’ என்ற இடத்திலேயே குழப்பம் வந்தது.
“என்ன இனிஷியல் போடறது?”
“உங்க அப்பா பேர் என்ன?” என்று சக்தி கேட்க,
“வேலுச்சாமி…” என்றாள் சற்று வெறுப்பாக.
“அப்போ வி. நந்தினி போடு. அதுதானே உன் சர்டிபிகேட்ஸ்ல இருக்கும்?”
“ம்ம்ம் ஆமா…” என்று கூறிவிட்டுப் பெயரை நிரப்பிவிட்டு கோடிங் ஷேட் செய்தாள். மிகவும் எச்சரிக்கையாக… அதன் பின்,
“அப்பா இல்லைன்னா ஹஸ்பண்ட் நேம் கேட்டிருக்காங்க…” அவனை நிமிர்ந்து பார்க்காமல் மெல்லிய குரலில் கேட்க, அவன் இயல்பாக,
“உனக்கு என்ன விருப்பமோ அந்தப் பேரைப் போட்டுக்க…” என்று கூற,
“உ… உங்க ஃபுல் நேம்…” மிகுந்த தயக்கத்துக்கிடையில் அவள் கேட்டு முடிக்க, ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன்,
“சக்திவேல் அருணாச்சலம்…” என்று கூறிவிட்டு அவளை உற்று நோக்கி, “என் அஞ்சு வயசு வரைக்கும் என் பேரண்ட்ஸ் இருந்தாங்க. அதனால எங்க அப்பா பேர் தெரியும் நந்தினி… நீ இவ்வளவு தயங்கத் தேவையில்லை…” என்று முடிக்க,
“அய்யோ அப்படியெல்லாம் நான் நினைக்கல…” அவசரமாக அவனை மறுத்துக் கூற,
“நானும் தப்பா சொல்லலைம்மா… நீ ஃபில் பண்ணு…”
அப்ளிகேஷனை நிரப்பிக்கொண்டிருந்தவள் அடுத்துக் கேட்கப்பட்ட தகவலைப் பார்த்துப் பெரிதும் தயங்கி, கையில் இருந்த அப்ளிகேஷனையும் சக்தியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“என்னம்மா?”
“போஸ்டல் அட்ரஸ் கேட்டிருக்காங்க…”
அதைக்கூறும்போது அவளது நெஞ்சுக்குள் ஒரு பந்து உருண்டது. இருக்க ஒரு வீடும் இல்லாத நிலையில் அப்ளிகேஷனைக் கூடக் கோயிலில் அமர்ந்து நிரப்புகிறோமே என்று நினைத்தவளுக்கு எதிர்காலத்தை நினைத்துப் பயமிருந்தாலும், சக்தி கண்டிப்பாகப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை மட்டும் மலையளவு இருந்தது. அவனது பொறுப்பு அவளறிந்த ஒன்றானதால் அவன்மேல் இருந்த நம்பிக்கையில் பயத்தைப் புறம் தள்ளி வைத்தாள்.
“அதை விட்டுட்டு மத்ததை ஃபில் பண்ணு நந்தினி… அதை நான் பார்த்துக்கறேன்…”
அவன் கூறியவாறே நிரப்பி முடித்தவளிடமிருந்து வாங்கி கவரில் போட்டுப் பத்திரமாக வைத்தவன், கருவூராரைப் பார்த்து ஒரு வணக்கம் கூறிவிட்டு நந்தினியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். நேராக அழைத்துச் சென்றது அவனது வாகனத்தை நிறுத்தி வைக்கும் ஷெட். அங்கிருந்த அந்தச் சிறிய அறைதான் இதுவரை அவனது புகலிடமாக இருந்தது என்பதால் வலது காலை எடுத்து வைத்தே உள்ளே வந்தாள்.
“கேட்டியே நீ… வீடு வீடுன்னு… பிடிச்சிருக்கா?” நக்கலாக அவன் கேட்டது அவளுக்கும் புரிந்தது. ஆனாலும், அவனை அதற்காக விட்டுக்கொடுத்துவிட முடியுமா? பதில் பேசாமல் அவள் அங்கிருந்த கடவுள் படத்திற்கு விளக்கேற்றி வைத்து வணங்க, அவளது மௌனம் அவனைச் சுட்டது. அவளிடம் ஈர்த்த விஷயமே அவளது குறும்பான பேச்சுத்தான் எனும்போது, அவளது சோர்ந்த முகம் அவனை வருத்தியது.
“ஏன் ஒரு மாதிரியா இருக்கம்மா? அம்மாவைப் பார்க்கணுமா?” மென்மையாக அவன் கேட்க, இவன்தானா நேற்று இரவு பேசியது என்று நந்தினிக்குத் தலை சுற்றியது. அவனை அதிசயமாகப் பார்த்துக்கொண்டே, இல்லையென்று தலையாட்டினாள்.
“நான் நேத்து திட்டினதுதானே ரீசன்?” அவனுக்குத் தெரிந்ததைக் கேட்க, அவன் திட்டினான் என்றாலும் அவளுக்கு வருத்தமாக இருந்தது என்றாலும், அதைப்பொதுவாகப் பெரியதாக எடுத்துக்கொள்பவளில்லையே. இல்லையென்று தலையாட்டிவிட்டு,
“சித்ரா வந்திருந்தா…” மொட்டையாகக் கூறிவிட்டு அவனது முகத்தை ஆராய, அவள் எதிர்பார்த்த பதிலை அவனது முகத்தில் தேடினாள்.
“வந்து? அந்தப் பொண்ணு என்ன சொல்லுச்சு?” அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதே, என்ன கூறியிருக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை.
“ம்ம்ம்… அவ லவ் பண்ண ஒரு முசுட்டு முத்தண்ணனை நான் ஆட்டையைப் போட்டுட்டேனாம்…” கடுப்பாக அவள் கூறியது முதலில் புரியவில்லை சக்திக்கு. புரிந்தபோதோ சிரிக்க ஆரம்பித்தவனால் அதை நிறுத்த முடியவில்லை. நந்தினியோ கடுப்பில் அமர்ந்திருக்க, அவனது சிரிப்பு அவளை மேலும் கடுப்பாக்க,
“என்ன? என்ன ஓவரா சிரிப்பு வேண்டியிருக்கு?”
“ஹஹா… ஆக மொத்தம் காலேஜ்ல படிக்கிற வேலையை விட்டுட்டுச் சக்களத்தி சண்டை போட்டுட்டு வந்திருக்க…” அவன் கிண்டலடிக்க,
“வாட்… சக்களத்தியா?” அதிர்ச்சியாக அவள் கேட்க,
“பின்ன… அதுக்குப் பேர் என்ன?” இன்னமும் அவன் சிரித்துக்கொண்டிருக்க, சுற்றியும் பார்த்தவள், யாருமில்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு, சட்டென்று அவனது கழுத்தில் கை வைத்தாள்… நெரிப்பதற்காக.
“மவனே… இன்னொரு தடவை அந்த வார்த்தையைச் சொன்ன, கொன்னுடுவேன்…” அவனது கழுத்திலிருந்து கையை எடுத்தவள், சரமாரியாக அவனது நெஞ்சில் அடிக்க ஆரம்பித்தாள்.
“சக்களத்தியாம் சக்களத்தி… அவதான் அறிவில்லாம லூசு மாதிரி பேசுனா, அதுக்கு நீ சிரிப்பியா? உனக்கு என்னன்னு நினைப்பு இருக்கு? கிருஷ்ண பரமாத்மான்னா… தொலைச்சுப் போடுவேன் தொலைச்சு… இனிமே எவளாவது உன்னைப் பார்த்தாக்கூட, உனக்குத்தான் அடி விழும்…”
சரமாரியாக அவள் வெடித்துத் தள்ள, பதிலே பேசாமல் வெளிகாட்டிக்கொள்ளாத புன்னகையோடு சக்தி அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பார்வையை உள்வாங்கிக்கொள்ளாமல் நந்தினி குமுறிக்கொண்டிருந்தாள்.
“அன்னைக்கு என் இடத்துல அவ இருந்திருந்தா, அவளைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பியாம். என்கிட்டவே சொல்றா… சொல்லுடா… நீ என்ன பண்ணிருப்ப… சொல்லு…” கோபத்தில் மரியாதை காற்றில் பறக்க அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
“ஷ்ஷ்… நந்தினி… என்னதிது…” அவளை அமைதிப்படுத்த முயல,
“எனக்குத் தேவை உன்னோட பதில். ஒழுங்கா சொல்லப்போறியா இல்லையா? எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு…”
கண்மண் தெரியாமல் அவனை அடிக்க, அந்தக்கோபம் அவனை வசீகரிப்பது போலத் தோன்றியது. இதழில் புன்னகை மலர்ந்தது.
“ஏய்… அது என்னமோ சொல்லுச்சுன்னு என்னை ஏன் அடிக்கற?”
“உன்னை அடிக்காம… அவ எப்படி உன்னை நினைச்சுட்டு இருக்கலாம்?”
“ஏய் லூசு… அந்தப் பொண்ணு நினைக்கறதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” என்று நிறுத்தியவன், சிரித்துக்கொண்டே, “அந்தப் பொண்ணுக்காக நீ என்கிட்ட பேசுனதானே, அதைக்கல்யாணம் பண்ணிக்கோன்னு…”
“அன்னைக்கு நான் அப்படிச் சொன்னா? இன்னைக்கு உனக்கு அவமேல சாஃப்ட் கார்னர் பொத்துகிட்டு வருதா? அப்படீன்னா என்னை என்ன நினைச்சுட்டு இருக்க? கேனச்சின்னா?”
அவனை விடாமல் உலுக்க, அவளது கையைப் பிடித்து விலக்க முடியாமல் அவனையும் அறியாமல் அவளது இடையில் கை வைத்துத் தள்ளி நிறுத்தப் பார்க்க, சட்டென்று பேச்சை நிறுத்திய நந்தினி இனிய அதிர்வோடு அவனை ஏறிட, அப்போதுதான் அவனது கையுள்ள இடத்தை உணர்ந்தான் சக்தி. சேலை மறைக்க மறந்த வழவழப்பான மெல்லிடையில் இருந்த தன் கையைச் சட்டென விலக்கிய சக்தி,
“சாரி… ஐ ஆம் சாரி…” அவளைப் பாராமல் உரைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான். மனதில் உணர்வுகள் கொந்தளிக்க, அதை அடக்கும் விதமாக அங்கிருந்த பைப்பைத் திறந்துவிட்டு முகத்தில் நீரை அடித்துக்கொண்டான். தலைக்கும் லேசாக நீரைத் தெளித்துக் கோதிக்கொண்டவனுக்கு மனம் அமைதியாக,
“கிளம்பும்மா…” உணர்வுகளைத் துடைத்த குரலில் கூறியபோதுதான் நந்தினியைப் பார்த்தான். நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் உடலில் நடுக்கம் இன்னும் குறையவில்லை. அவனைப் போல் உணர்வுகளைத் துடைக்கும் கலை இன்னும் கைவரப் பெற்றிராத நந்தினி மெதுவாக நடந்து வந்து தலையைக் குனிந்துகொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
மௌனமாகவே அவளை உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று இருவருமாக இரவு உணவை முடித்துவிட்டு மீண்டும் அவளைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது மனம் நிறைந்து இருந்தது. இதுவரை தனக்கென்று உறவாக யாரும் இல்லாமல் தனியனாகவே நாட்களைக் கடந்து வந்திருந்தான். இப்போதோ மனைவியாக நந்தினியைப் பார்த்தவனுக்கு உள்ளூரப் பெருமிதமாக இருந்தாலும், அதை அவளிடம் கூறி அவளது படிப்பைக் கெடுக்க நினைக்கவில்லை.
ஆனால், அவனது இந்த உணர்வுகளைப் பதின்ம வயதைக் கடந்து இரு வருடமேயான நிலையில் நந்தினியால் புரிந்துகொள்ள முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டான்.
“பொங்கலுக்கு நான் சபரி மலைக்குப் போறேன் நந்தினி. நாளன்னைக்கு மறுபடியும் மாலை போட்டுடுவேன்…” கல்லூரியில் இறக்கிவிட்டு அவளிடம் தகவலாகக் கூற,
“இருமுடி கட்டும்போது நானும் வரட்டுமா?”
“எதுக்கு பாத பூஜை செய்யவா?” அவனது குறும்பு மீண்டிருக்க,
“பின்ன… வேற யாரு செய்வாங்களாம்?” சிலிர்த்துக்கொண்டு பதில் கூறியவளின் தொனியில் அவன் சிரிக்க,
“சரி… உங்க பிரின்சி பர்மிஷன் கொடுக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்…” என்று கூறி நிறுத்தியவன், “ஆல் தி பெஸ்ட் கலெக்டரம்மா…” புன்னகை மன்னனாக வாழ்த்தியவன் கையை நீட்ட, மனதில் சிலுசிலுவெனக் குளிரடிக்க அந்தக் கையைப் பற்றினாள் நந்தினி.
அந்த இறுக்கம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுள் அதிர்வினைப் பரவச் செய்த அந்த கைகளுக்குள்ளாகத் தொலைந்து போக விரும்பினாள்.
சக்தியை அந்த நிமிடங்கள் மிகவும் வசீகரித்தது. அவளது மென்மையோ அவனை வசியம் செய்ய ஆரம்பித்தது. இருவருக்குமே கைகளை விலக்கிக் கொள்ளத் தோன்றவில்லை என்றாலும், மென்மையாக முதலில் கைகளை விலக்கியது சக்தி!
‘கட்டாயத்துக்காகக் கல்யாணம் பண்ணிடுவாங்களா நந்து?’ அவள் கேட்ட கேள்விகளுக்கு மனதிற்குள்ளாகப் பதில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான் அவளது கணவன்.
சக்தியைப் பார்த்துக் கண்களால் நிரப்பிக்கொண்டு மனமே இல்லாமல் அறையை நோக்கிப் போனாள் நந்தினி. உள்ளம் நிறைந்து தன்னுடைய ஒரே உறவாகிவிட்டவளை நினைத்து மனம் இனிக்க வண்டியை ஸ்டார்ட் செய்தான் சக்தி.





