அத்தியாயம் – 2
02
அரண்மனையின் தோற்றத்தை ஒத்திருந்த அந்த பிரமாண்டமான வீட்டின் வாயிலில் செந்நிறமும், வெந்நிறமும் கலந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் இரு பாரிய அலரி மரங்கள் காவல்கரர்களை போன்று வீற்றிருக்க, அந்த மரங்களைத் தாண்டி உள்ளே செல்கையில் திரும்பும் பக்கமெல்லாம் வெவ்வேறு வகையான மரங்கள், செடிகள், கொடிகள், மூலிகைத் தாவரங்கள் என ஒரு சிறு நந்தவனத்தை போலக் காணப்பட்டது அந்த நந்தவன இல்லம்.
அந்த இல்லத்தின் அவ்வளவு அழகிய தோற்றத்திற்கு காரணமானவன் வேறு யாரும் அல்ல கௌதம் தான்.
கௌதமிற்கு இயல்பாகவே சூழல் மற்றும் சூழல் சார்ந்த விடயங்களில் ஆர்வம் அதிகமாதலால் தன் எம்.எஸ்.சி படிப்பை முடித்த கையோடு அந்த ஊரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் துணை பரிசோதகராக இணைந்து கொண்டவன் நாளடைவில் தனது சூழலியலுக்கான பி.எச்.டி படிப்பு முடிந்த கையோடு அதே நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மேனேஜராக பதவியாற்றி வருகிறான்.
சூழல் மீதான கௌதமின் ஆர்வமும் ஈடுபாடும் தான் இந்த சிறு வயதில் அவனுக்கு இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்க, அவனும் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது மட்டுமின்றி அதை முழு மனதோடும் செய்து வந்து கொண்டிருக்கிறான்.
அவன் தனது வேலை தொடர்பாக பல்வேறு விதமான இடங்களுக்கு செல்வதுண்டு, அவ்வாறு செல்லும் போதெல்லாம் அங்கே அவனது கவனத்தை ஈர்க்கும் ஏதாவதொரு மரத்தை பார்த்து விட்டால் அடுத்த நாள் அதே மரத்தை தன் வீட்டுத் தோட்டத்தில் நட்டு விட்டு தான் அவன் மறுவேலையே பார்ப்பான்.
ஆரம்பத்தில் அதை ஒரு பொழுதுபோக்காக செய்து வந்தவன் நாட்கள் செல்லச் செல்ல அந்த வேலையில் கிடைக்கும் அமைதியை விரும்பி அதை தனக்கு மனது ஆறுதலோ, அல்லது ஏதாவது பிரச்சினைக்கான தீர்வோ தேவைப்படும் போது செய்ய ஆரம்பித்து விடுவான்.
இப்போதும் அப்படியே சிறிது நேரத்திற்கு முன் அவனது வாழ்க்கையில் நடந்திருந்த அந்த சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலும், தான் பார்த்த நிகழ்வுகள் கொடுத்த தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும் அந்த தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன் ஒரு நிலைக்கு மேல் தாளாமல் மனம் சோர்ந்து போனவனாக அங்கே நின்று கொண்டிருந்த பூவரச மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான்.
அவனது அத்தகைய மனச் சோர்வுக்கான காரணம் சிறிது நேரத்திற்கு முன்னர் அவன் சந்தித்த அந்த பெண் மட்டுமே தான்.
“அதோ கயல்விழி வந்துட்டா” என்கிற குரல் கேட்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தவன் கையில் டீ டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் தன்னை நோக்கி நடந்து வந்தவளைப் பார்த்து அதிர்ச்சியாகி எழுந்து நிற்க, அவனது அந்த செயலைச் பார்த்து வள்ளியும், ஈஸ்வரும் சங்கோஜத்துடன் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துக் கொள்ள, கௌதமோ அதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
அவனது விழிகள் இரண்டும் தன்னை நோக்கி நடந்து வருபவள் மீதே நிலைத்து நிற்க, அவனது அந்த தோற்றத்தைப் பார்த்து அங்கே கூடியிருந்த நபர்களில் ஒரு வயதான பெண்மணி, “அட என்ன தம்பி நீங்க, கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டியைப் பார்த்ததும் இப்படி அலறியடிச்சுட்டு எழுந்து நிற்குறீங்க? இப்போவே பொண்டாட்டிக்கு இவ்வளவு மரியாதைன்னா கல்யாணத்துக்கு அப்புறம் எங்க கயல்விழியை அப்படியே உள்ளங்கையிலேயே வைச்சுத் தாங்குவீங்க போல இருக்கே” என்று விட்டு சிரிக்க ஆரம்பிக்க,
அவரருகில் அமர்ந்திருந்த மற்றுமொரு பெண்மணியோ, “அப்படின்னா மாப்பிள்ளை நம்ம கயலோட பேச்சுக்கு அப்படியே தலையாட்டிக்கிட்டே இருப்பாருன்னு சொல்லுங்க” என்றவாறே அனைவருடனும் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு தன் சங்கடத்தை மறைத்துக் கொண்டவராக அவர்களைப் பார்த்து புன்னகைத்த வள்ளியோ தன் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, ‘இந்தப் பையன் பார்த்த வேலையைப் பார்த்து ஊரே சிரிக்குது, இவன் என்னடான்னா குத்துக் கல்லாட்டம் அப்படியே வாயைப் பிளந்துட்டு நிற்கிறான், இவனுக்கு வீட்டுக்கு போனதும் இருக்கு’ என தனக்குள்ளேயே பேசிக் கொண்டபடி கௌதமை வலுக்கட்டாயமாக இழுத்து அவனது இருக்கையில் அமரச் செய்திருக்க, அவனது விழிகளோ அந்தப் பெண்ணின் முகத்தை விட்டு அசைய மாட்டேன் என்பது போல அப்படியே நிலைகுத்தி நின்றது.
“ஏன்டா போன வாரம் இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்ன்னு சொன்னதற்கு அப்படியே தையா தக்கான்னு குதிச்சு பொண்ணு பார்க்குற அன்னைக்கு அங்கே வைத்தே அந்தப் பொண்ணு எனக்கு வேணாம்ன்னு சொல்லுவேன், அங்கே வைத்து நான் உங்க யாரு பேச்சையும் கேட்க மாட்டேன், அப்படி இப்படின்னு ஓவரா வாய் பேசுன, ஆனா இப்போ என்னடான்னா அப்படியே அந்தப் பொண்ணைப் பார்த்ததும் வாயைப் பிளந்துட்டு நிற்கிற, இதுதான் நீ வாய்பேசுன அழகா?” என வள்ளி சிறு கோபத்துடன் கௌதமிற்கு மாத்திரம் கேட்கும் வகையில் அவனது காதருகில் குனிந்து வினவ, அவனோ அவரது கேள்விக்கு பதில் சொல்லவும் மறந்து போனவனாக தன்னெதிரே டீ டம்ளர்களை நிறைந்த தட்டை நீட்டியபடி நின்றவளையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவன் எதிரில் நின்று கொண்டிருந்தவளோ வெகு நேரமாக அவன் தனது முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிறு சங்கடத்துடன் வள்ளியின் புறம் திரும்பி பார்க்க, அவரோ அவளைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகைத்தபடியே கௌதமின் தொடையில் பட்டென்று அடித்து வைத்திருந்தார்.
தன் அன்னை அடித்த அடியில், “ஐயோ அம்மா!” என்றவாறே தனது சிந்தனைகளில் இருந்து வெளி வந்தவன் அந்த இடத்தில் ஒன்று கூடியிருந்த நபர்கள் அனைவரும் தன்னையே விசித்திரமாகப் பார்ப்பதை உணர்ந்து தன் செய்த செயலை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவனாக அவர்கள் எல்லோரையும் பார்த்து இயல்பாக சிரித்துக் கொண்டே டீ டம்ளரை எடுத்துக் கொண்டு சட்டென்று தன் தலையைக் குனிந்து கொள்ள, அவனெதிரில் நின்று கொண்டிருந்தவளோ அவனது செயலைப் பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள்.
“மாப்பிள்ளைகிட்ட இதற்கு மேலேயும் பொண்ணை பிடிச்சு இருக்கான்னு கேட்கவே தேவையில்லை போல முருகா, இவ்வளவு நேரமாக அவரு நடந்துக்கிட்ட விதத்தை வைச்சே அவருக்கு நம்ம கயலை எவ்வளவு பிடித்துப் போயிடுச்சுன்னு தெரிஞ்சுடுச்சு” என கயல்விழியின் அருகே நின்று கொண்டிருந்த பெண் அவளது தோளில் மெல்ல இடித்தவாறு சிரித்துக் கொண்டே கூற,
பதிலுக்கு அவரைப் பார்த்து சிரித்துக் கொண்ட ஈஸ்வர், “என்னதான் பார்த்த உடனே இரண்டு பேருக்கும் எல்லாம் பிடித்துப் போனாலும் அவங்க மனசு ஒத்துப் போகணும் இல்லையா? அதனால பொண்ணுக்கு மாப்பிள்ளை கிட்ட ஏதாவது பேச இருந்தால் பேசிக்கட்டுமே” என்று கூற, அவரெதிரில் அமர்ந்திருந்த நபரோ சிறு தயக்கத்துடன் கயல்விழியை திரும்பிப் பார்த்தார்.
அவளும் அவரது தயக்கத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டது போல அவரது அருகே வந்து அவருக்கு மாத்திரம் கேட்கும் வகையில் எதையோ சொல்லி விட்டு உள்ளே சென்று விட, கௌதமின் குடும்பத்தினர் அங்கே என்ன நடக்கிறது என்பது போல அவரது முகத்தையே குழப்பமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“அது வந்து சம்பந்தி நீங்க தப்பாக நினைக்கலேன்னா நான் ஒரு விஷயம் சொல்லலாமா?”
“அட என்னப்பா முருகா நீ, எதற்காக இவ்வளவு தயக்கமாக பேசுற? இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பிக்க முன்னாடி நீயும், நானும் சின்ன வயசு நண்பர்கள் தானே? அதனால இந்த தயக்கம், அது இது எல்லாம் ஒரு ஓரமாக மூட்டை கட்டி வைச்சுட்டு எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லு, நாங்க எதுவும் நினைக்க மாட்டோம்”
“அது வந்து என்னன்னா எங்க குடும்ப வழக்கப்படி நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தான் பொண்ணும், பையனும் பேசிக்கணும்னு ஒரு நடைமுறை இருக்கு, இந்தக் காலத்தில் இப்படி எல்லாம் நடைமுறையான்னு நீங்க நினைக்கலாம், ஆனா இது எங்களோட குடும்ப நடைமுறை அதுதான்” என்றவாறே சிறு தயக்கத்துடன் கயல்விழியின் தந்தை முருகவேல் ஈஸ்வரைப் பார்க்க,
அவரோ சிறு புன்னகையுடன், “அட இவ்வளவு தானா? நான் கூட எதுவும் பெரிதாக சொல்லப் போறியோன்னு பயத்துட்டேன், இன்னைக்கு பேசலேன்னா என்ன நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இரண்டு பேரும் பேசிக்கட்டுமே,
அது மட்டுமில்லாமல் கயல்விழி தான் எங்க வீட்டு மருமகள்ன்னு முடிவு பண்ண பிறகுதான் நாங்க பொண்ணு பார்க்கவே வர்றோம்ன்னு சொன்னோம், ஏன்னா பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்லி அவங்க வீட்டு ஆளுங்களை எல்லா ஏற்பாடும் பண்ண வைத்து அதற்கப்புறம் அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டு போறதில் எனக்கும் சரி, என் பையனுக்கும் உடன்பாடு கிடையாது,
அவன்கிட்டயும் எல்லாம் தெளிவாகப் பேசி இந்தப் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ண பூரண சம்மதம் தானேன்னு கேட்ட பிறகு தான் இங்க வர்றதுக்கே நான் முடிவு பண்ணினேன், அதனால நீ எதுவும் கவலைப்பட தேவையில்லை முருகா, கௌதமும், கயலும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே பேசிக்கட்டும், நான் ஏதோ கயலுக்கு பேச இருந்தால் பேசிக்கட்டுமேன்னுதான் அப்படி கேட்டேனே தவிர வேறு எதுவும் கிடையாது” என்று விட்டு சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக,
“அது சரி கயல் ஏதோ உன்கிட்ட ரகசியமாக சொல்லிட்டு போனாளே, அது என்ன?” என்று கேட்டிருந்தார்.
“அதுவா, அவளும் நான் சொன்ன அதே விஷயத்தை தான் சொன்னா, நான் அவங்க கூட நம்ம குடும்ப வழக்கப்படி நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே பேசிக்கிறேன்ப்பான்னு சொல்லி அவளுக்கும் இந்தக் கல்யாணத்தில் பூரண சம்மதம்ன்னு சொல்லாமல் சொல்லிட்டா” என்ற முருகவேல் கௌதமின் புறம் திரும்பி,
“தம்பி கௌதம், என்னதான் உங்க அப்பா இந்தக் கல்யாணத்தில் உங்க எல்லோருக்கும் பூரண சம்மதம்ன்னு சொல்லி இருந்தாலும், நீங்க என் பொண்ணைப் பார்த்து நடந்துக்கிட்ட விதத்தை வைத்து அவளை உங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்குன்னு எல்லோரும் சொன்னாலும் உங்க வாயால நீங்க உங்க சம்மதத்தை சொல்லிட்டீங்கன்னா எனக்கு அந்த வார்த்தைகள் கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கும்” என்று கூற,
அவனோ சிறு புன்னகையுடன் அவரை நிமிர்ந்து பார்த்து, “நானும் அவங்க கூட நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே பேசிக்கிறேன் மாமா” என்று விட்டு தன் அன்னையின் புறம் திரும்பிப் பார்க்க, அவரோ அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானது போல தனது வாயில் கையை வைத்துக் கொண்டார்.
தன் அன்னையின் செயலைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரைப் பார்த்து கண்ணடித்தவன் ஈஸ்வரின் புறம் திரும்பி, “சரிப்பா அப்போ கிளம்பலாம், நிச்சயதார்த்தத்திற்கு தேவையான வேலைகளை எல்லாம் நீங்க பார்க்க ஆரம்பிங்க” என்றவன் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது காரில் ஏறி அமர்ந்து கொள்ள,
ஈஸ்வரிடம் தான் கௌதமோடு இணைந்து வருவதாக சொல்லி விட்டு அவனது பின்னாலேயே நடந்து வந்து அவனது அருகில் அமர்ந்து கொண்ட வள்ளி டிரைவரின் தோளில் தட்டி, “டிரைவர் வண்டியை எடுப்பா” என்று விட்டு சட்டென்று எட்டி கௌதமின் காதை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“ஏன்டா கேடிப் பையா, இன்னைக்கு காலையில வரைக்கும் எனக்கு கல்யாணம் வேண்டாம், வேண்டாம்னு அப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுன, இப்போ என்னடான்னா இங்கே வந்த பின்னாடி அவங்க முன்னாடி அப்படியே தலைகீழாக நடந்துக்கிற, உண்மையை சொல்லுடா என்கிட்ட சொல்லாமல் ஏதாவது எடக்குமடக்காக திட்டம் போட்டு வைச்சிருக்கியா?”
“ஐயோ அம்மா! முதல்ல என் காதை விடும்மா வலிக்குது” என்றவாறே அவரது பிடியில் இருந்து விலகி அமர்ந்து கொண்டவன்,
“நானும் ஆரம்பத்தில் அப்பாவுக்காகத் தான் இங்கே வர்றதுக்கு சம்மதம் சொல்லி இருந்தேன் ம்மா, அவங்க இதுவரைக்கும் என்கிட்ட எதுவுமே ஆசைப்பட்டு கேட்டதில்லை, அவங்க வாழ்நாளில் முதல் தடவையாக என் கிட்ட ஒரே விஷயம் இதுதான், அதையும் நான் வேண்டாம்ன்னு சொன்னால் அவங்க ஒண்ணும் நினைச்சு இருக்க மாட்டாங்க தான், ஆனா அதை மறுத்துப் பேச எனக்கு மனசு வரல, அதனால்தான் இங்கே வந்து அந்த பொண்ணு கிட்ட பேசி ஸ்மூத்தாக இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்தலாம்ன்னு இருந்தேன், ஆனா இங்கே வந்து அந்தப் பொண்ணைப் பார்த்த அப்புறம் நான் என் முடிவை மாற்றிக்கிட்டேன், அதனால்தான் நான் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணால் மித்ராவைத் தான் பண்ணிப்பேன்னு முடிவு பண்ணிட்டேன்” என்று கூற,
வள்ளியோ அதிர்ச்சியாக, “மித்ராவா? அது யாருடா?” என்று அவனைப் பார்த்து வினவியிருந்தார்.
“அம்மா விளையாடதம்மா, நம்ம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்த பொண்ணோட பேரு மித்ரா தானே?” என்று கௌதம் வினவ,
தன் தலையில் அடித்துக் கொண்ட வள்ளி, “அட ராமா! கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட பேரைக் கூட சரியா கேட்க மாட்டியாடா நீ? நீ யாரு ஞாபகத்தில் தான் இருக்கியோ எனக்குத் தெரியலைப்பா, இப்போ நம்ம பார்த்துட்டு வந்த அந்த பொண்ணோட பேரு மித்ரா இல்லை கயல்விழி” என்று கூற,
அவனோ, “என்னது கயல்விழியா? அப்போ அவ மித்ரா இல்லையா?” என்றவாறே அதிர்ச்சியில் அமைதியாகி அமர்ந்து விட, அவரோ அங்கே என்ன நடக்கிறது என்று புரியாதவராக அவனது முகத்தையே குழப்பமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அன்று காலையில் இருந்து கௌதம் நடந்து கொண்ட விதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதைப் பார்த்து அவனது மனதிற்குள் நிச்சயமாக ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட வள்ளி இதைப் பற்றி தனது கணவரிடம் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் கௌதம் எண்ணிலடங்கா யோசனைகளில் லயித்துப் போனவனாக அந்தக் காரின் இருக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான்.
தங்கள் வீடு வந்து சேர்ந்ததைக் கூட உணராதவனாக கண்மூடி அமர்ந்திருந்த தனது மகனின் தோளில் தட்டிய வள்ளி அவனை உள்ளே வரும்படி அழைத்திருக்க, அவனோ தான் சிறிது நேரம் தோட்டத்தில் அமர்ந்து விட்டு வருவதாக சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டு இப்போது வரை அந்தத் தோட்டத்தில் உலா வந்து கொண்டிருந்தான்.
தன் அன்னை சொன்ன விடயங்களையும், தான் பார்த்த விடயங்களையும் பல்வேறு விதமான கோணங்களில் சிந்தித்துப் பார்த்தவன் மனதோ அதில் எதை ஏற்றுக்கொள்ளுவது என்று தெரியாமல் வெகுவாக திண்டாடிக் கொண்டிருந்தது.
‘அப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நான் பார்த்த பொண்ணு மித்ரா கிடையாதா? ஆனால் அது எப்படி சாத்தியம் ஆகும், அந்தப் பொண்ணு பார்க்க அப்படியே என்னோட மித்ரா மாதிரி இல்லையா இருந்தா? எனக்கு என்னோட மித்ராவை அவ்வளவு எளிதில் மறந்து போக முடியுமா என்ன?’ என அவனது ஒருபுற மனது அவனது குழப்பத்திற்கு சாதகமாக பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த தருணம்,
அவனது மறுபுற மனதோ, ‘அந்தப் பொண்ணு எப்படி மித்ராவாக இருக்க முடியும் கௌதம்? மித்ரா தான் இந்த உலகத்தை விட்டுப் போய் ஐந்து வருஷம் ஆகுதே, அப்படி இருக்கும் போது அந்தப் பொண்ணு எப்படி மித்ராவாக இருக்க முடியும்? ஆனால் அவளோட அந்தக் கண்கள் அதை எப்படி என்னால் மறக்க முடியும்? இன்னைக்கு நான் மித்ராவாக நினைச்சுப் பார்த்த அந்தப் பொண்ணோட கண்கள் என்னோட மித்ரா மாதிரியே தானே இருந்தது? ஒருவேளை அம்மா சொல்லுற மாதிரி அந்தப் பொண்ணு வேறு யாரோவாகத்தான் இருக்குமோ? ஏன்னா என்னோட மித்ரா என்னை அடையாளம் கண்டு கொண்டால் இப்படி இருக்க மாட்டாளே’ என்று அவனை இன்னமும் வெகுவாக குழப்பம் கொள்ளச் செய்திருந்தது.
‘நான் அந்த இடத்தில் வைத்தே எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவளைப் பார்த்த கணத்தில் இருந்து மெய் மறந்து போய் நின்றது எவ்வளவு பெரிய தவறாக முடிந்து விட்டது’ என அவளது வீட்டில் இருந்து வந்ததில் இருந்து நூறாவது முறையாக தான் செய்த தவற்றை எண்ணி தன்னைத்தானே கடிந்து கொண்டவன் இந்தக் குழப்பத்திற்கு எல்லாம் ஒரே தீர்வு அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துப் பேசுவது தான் என்று எண்ணிக் கொள்ள, அப்போதுதான் அவனுக்கு நிச்சயதார்த்தம் வரை அவளைத் தனியாக சந்திக்க முடியாது என்று சொல்லியிருந்த விடயமே நினைவுக்கு வந்தது.
“அட கடவுளே! நான் வேறு பெரிய இவனாட்டம் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அவங்களோடு பேசிக்கிறேன் மாமான்னு சொல்லிட்டு வந்திருக்கேன், ஆனா இப்போ நான் அந்தப் பொண்ணு கிட்ட பேசலேன்னா எல்லாம் காலி ஆகிடுமே, இப்போ நான் என்ன பண்ணுறது? யாரு கிட்ட உதவி கேட்கிறது?” கௌதம் எப்படியாவது தன் குழப்பங்களுக்கு தீர்வு கண்டு விட வேண்டும் என்கிற யோசனையுடன் தங்கள் வீட்டுக்கும் வாயிலுக்குமாக விடாமல் நடந்து கொண்டிருந்த வேளை, அவர்களது வாயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த நபரைப் பார்த்ததும் அத்தனை நேரமும் சோகத்தில் வாடிப் போயிருந்த அவனது முகம் நொடிப்பொழுதில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாக மாறிப் போனது.
தான் ஒரு பிரச்சினையில் இருக்கிறோம் என்று தெரிந்ததுமே தனக்கு உதவி செய்வதற்கு என்றே அந்தக் கடவுளால் அனுப்பி வைத்தாற் போல அங்கே வந்து சேர்ந்திருந்த அந்த நபரைப் பார்த்ததுமே கௌதம் சந்தோஷம் தாளாமல் தன் கவலைகளை எல்லாம் மறந்து போனவனாக, “என் மச்சான் மாதவன் வந்துட்டான் டா” என்றவாறே ஒரே எட்டில் பாய்ந்து சென்று அவனை அணைத்துக் கொள்ள, அவனெதிரில் நின்று கொண்டிருந்தவனோ அவனது திடீர் அணைப்பில் பேச வார்த்தைகள் மறந்து போனவனாக அதிர்ச்சியாகிப் போய் நின்றான்……..






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!