என் வீட்டு தோட்டத்தில் 18
18
“என்னடீ இது. இப்படி மானத்தை வாங்கிட்ட? ஒன்றும் புரியாமல் மாலதி அதட்ட,
“என்ன சித்தி பண்ணிட்டேன்? உள்ளே ஒரே சிகரெட் நாத்தம். குமட்டிட்டு வந்துருச்சு!” என்றவள் குரலிலும், உடலிலும் மெல்லிய நடுக்கம். அதை அவர்கள் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அப்படியே கண்டு கொண்டிருந்தாலும் எப்படி விசாரிக்க முடியும்?
ஏதாவது நடந்திருந்தாலும் கணவன் மனைவி என ஆனப்பிறகு அவர்களுக்குள் எது நடந்தாலும் அது இருவர் சம்பந்தப்பட்டது. அதில் தலையிடுவது அநாகரீகம் எனும் நாகரீகம் கற்றவர்கள் நாம். அடிச்சாலும் புடிச்சாலும் புருஷன் தானே, அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பாலபாடம் கற்றுக்கொடுத்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவர்கள். பூட்டிய அறைக்குள் கணவன் மனைவிக்குள் எது நடந்தாலும் அங்கு கேள்விக்கே இடமில்லை. தாலி கட்டியவுடன் எல்லா உரிமையும் அவள் மீது அவனுக்கு வந்துவிடுகிறது.
“அதுக்குன்னு இப்படித்தான் வெளியே ஓடி வருவாங்களா? அக்கம் பக்கம் கேட்டா சிரிக்கப்போறாங்க!” சத்தமில்லாமல் வினோதினி பல்லிடுக்கில் கண்டிக்க,
“இந்தக் காலத்துல யார் தான் சிகரெட் பிடிக்கல?” என்றார் மாலதியும்.
“சித்தப்பா எல்லாம் குடிப்பாங்களா?” கண்களை சுருக்கி அசூயையாகக் கேட்டாள். பிள்ளைகளுக்கு எந்தளவிற்கு வீட்டில் கண்டிப்போ அதே அளவுக்குதான் தாங்களும் நடந்து கொள்வார்கள். சித்தப்பாக்களுக்கெல்லாம் அந்தப் பழக்கம் கிடையாது.
“உங்க பெரிய சித்தப்பாவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனா சின்னவர் எப்பையாவது சிகரெட் குடிப்பார் தானே?” என்று மாலதி சொன்னதும்,
“அதுவே நீங்க சொல்லித்தான் சித்தி தெரியுது!” என்றதும் வினோதினி, மாலதியை முறைத்துப் பார்த்தார். தன் கணவன் ஏதோ குடிகாரன் என்பது போல் ஓரகத்தி, குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டாராம். எப்பவாவது சிகரெட் பிடிப்பார் என்றதே அவருக்கு மானக்கேடாகப் போயிற்று.
தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு தேர்ந்தெடுத்து கட்டிவைத்திருக்கும் மாப்பிள்ளை சங்கதி முழுதாகத் தெரியவில்லை.
சித்திகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு படுக்கச் சென்ற இந்துமதியும் பேச்சு சத்தம் கேட்டு எழுந்து வந்தார். பிள்ளைகளுக்கும், சித்தப்பாக்களுக்கும் சீக்கிரமே சாப்பிடக் கொடுத்து மாடிக்கு அனுப்பி விட்டனர்.
ஹாலில் இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க, “என்ன அபி, இன்னும் இங்க நிக்கிற? அவளை அனுப்பலையா மாலதி? நல்ல நேரம் முடியப்போகுது” என்றார் சுவர் கடிகாரத்தைப் பார்த்தவாறே.
“க்க்கும்” இருவரும் ஒரு சேர நொடித்தனர்.
அவர்களது முகபாவனையைப் பார்த்தவர், மகளை திரும்பிப் பார்த்தார். அவளோ முகத்தை அசூயையாக சுழித்து நின்றாள். விரும்பத்தகாத உணர்வு அவளிடம். இவர்கள் நொடிப்பும், மகளது தோரணையும் சரியாகப் படவில்லை.
அதற்குள் அறைக்குள்ளிருந்து சட்டைப் பட்டன்களைப் போட்டவாறே வெளியே வந்தான் சுதாகர். அனைவரையும் கோபமாக பார்த்தவன் பார்வை அபிராமியிடம் நிலைத்தது. அந்தப் பார்வையில் அவளது முதுகுத் தண்டு ஜில்லிட்டது. இப்படி ஒரு குரூரப் பார்வையை அவள் சந்தித்ததில்லை. சித்தப்பாக்கள் இருவரும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் ரகம். முகம் சுழித்துக்கூட பிள்ளைகளிடம் பேச மாட்டார்கள்.
அவன் அப்படி வெளியேறியதைப் பார்த்ததும் இந்துமதி முகத்தில் கலவரம். மகளைப் பார்க்க அவள் முகம் வெளிறிப் போய் நின்றிருந்தாள்.
பெண்கள் மூவரும் அதிர்ந்து நின்றனர். மாலதி வேகமாக கணவனை எழுப்ப மாடிக்கு ஓடினார். வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை முதலிரவு அறையிலிருந்து கோபித்துக் கொண்டு செல்வதென்றால். வெளியே தெரிந்தால் குடும்ப மானம் என்னாவது? குடி முழுகிப்போகுமே.
அடுத்த ஐந்தாவது நிமிடம் சித்தப்பாக்கள் இருவரும் கீழே இறங்கி வந்தனர். தபதபவென ஓடி வந்தனர் என்றும் சொல்லலாம்.
இந்துமதி, “என்ன அபி நடந்துச்சு?” மகளை அதட்டிக் கொண்டிருக்க,
சுதாரித்த பரந்தாமன், “அண்ணி… உள்ள கூட்டிப் போயி விசாரிங்க!” என்றார். விவஸ்த்தையில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது ஏடாகூடமாக சொல்லிவைத்தால் என்ன செய்வது.
அறைக்குள் மகளைத் தள்ளிக் கொண்டு சென்றார்.
சித்திகளும் போக முற்பட, “நீங்க இருங்க! அண்ணி விசாரிச்சு சொல்லுவாங்க!” அவர்களை தடுத்துவிட்டார் புருஷோத்தமன்.
அறைக்குள் மகளைத் தள்ளிவந்ததும் அவருக்கே அறையில் சிகரெட் நாற்றம் தாங்கவில்லை. அலங்காரப் பூக்களின் வாசனையையும் மீறி நிறைந்திருந்தது. சன்னல்பக்கமாகப் பார்க்க, சுவரோரமாக பல சிகரெட் துண்டுகள். ஒரு மனுஷன் இத்தனை சிகரெட்டா பிடிப்பான். டென்ஷனா இருந்தா சிகரெட் பிடிப்பார்கள் என கேள்விப் பட்டிருக்கிறார். ஒரு வேளை இந்த இரவை நினைத்து வந்த பதட்டமோ என நினைத்தார்.
“என்னடீ ஆச்சு. சித்திக உன்கிட்ட விபரம் சொல்லி விட்டாங்களா இல்லையா?” அவரும் ரகசியம் போல் பல்லிடுக்கில் கேட்க, ஏன் இதை இப்படி கமுக்கமாக கேட்க வேண்டும் என்ற யோசனை தான் அவளுக்குள்.
சுதாகரன் வேறு கோபமாக முறைத்துச் சென்றானே. வெளியே வந்தது அவ்வளவு பெரிய தவறா என்ன? எனக்கு தானே மூச்சு முட்டியது. இன்னும் சிறிது நேரம் இங்கிருந்திருந்தால் குமட்டிக் கொண்டு வந்திருக்கும். ஆனால் மாற்றி மாற்றி எல்லாரும் இவளிடம் ஏன் வெளியே வந்தாய் என்று மட்டும் தான் கேட்கிறார்கள் என்ற யோசனையோடு,
“ம்ம்ம்… சொன்னாங்கம்மா!” என்றாள் நொடிப்பாக.
“என்னடீ சொன்னாங்க?”
“பாலக் கொண்டு போய் மாப்பிள்ளைக்கு கொடு. மத்தத அவர் பாத்துப்பார்னு சொன்னாங்கம்மா!”
“வேறெதுவும் சொல்லலியா?”
“வீட்ல தங்கச்சி, தம்பிங்க இருக்காங்க. சத்தமில்லாம பாத்துக்கோன்னு சொன்னாங்க. தூங்கும் போது எதுக்கு சத்தம் வரப்போகுது. ஒரு வேளை மாப்பிள்ளை குரட்டை விடுவாரோ? அப்ப நான் எப்படி தூங்கறது?” ஆகப் பெரிய சந்தேகம் அவளுக்கு.
“அடியேய்… இப்ப தூக்கமா முக்கியம். எதுக்கு வெளியே ஓடிவந்து மானத்தை வாங்குன?” மீண்டும் பல்லைக் கடித்தார். இப்பொழுது மாப்பிள்ளை வேறு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டானே. நாளை இது எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகப்போகுதோ என்ற கவலை இந்துமதிக்கு.
இவளை உள்ளே அனுப்பிவிட்டு சித்திகள் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இன்று முழுவதும் ஓய்வு ஒழிச்சலில்லாத அலைச்சல். மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்தும், அனைவருக்கும் சாப்பாடு கொடுத்து, மணமக்களை சிறப்பாகக் கவனித்து, இதோ அவர்களை அறைக்குள் அனுப்பும் வரை வேலை ஓயவில்லை. உள்ளே அனுப்பிவிட்டுதான் சற்று ஓய்ந்து அமர்ந்தனர்.
உள்ளே போன பத்தாவது நிமிடம் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். அதுவும் வாயைப் பொத்திக் கொண்டு.
இவர்கள் அதிர்ந்து பார்க்க, பாத்ரூம் சென்று வாய் கொப்பளித்து முகம் கழுவி வந்தாள்.
என்னாயிற்று என்று விசாரிப்பதற்குள் சுதாகரன் கோவித்து சென்றுவிட்டான்.
இவளுக்கு ஏதாவது தெரியுமா தெரியாதா? எப்படி வெளிப்படையாகக் கேட்பது என்ற சங்கோஜம் அவருக்குள்ளும். எல்லா அம்மாக்களைப்போலவே பிள்ளைகள் வயதுக்கு வந்ததும், குனிந்த தலை நிமிராமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும். ஆண்களிடம் இருந்து எப்படி எட்டி நிற்க வேண்டும் என்று மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதுவும் வயதிற்கு வந்த பிறகான குறிப்புகள் தான் கொடுக்கப்பட்டது. வருவதற்கு முன்னான எந்த அறிவுரையும் கொடுக்கப்படவில்லை. அவளுடன் படிக்கும் பெண்கள் வாரக்கணக்கில் விடுப்பு எடுப்பது கொண்டு தன்னால் அறிந்து கொண்டது. வயதுக்கு வந்தால் தன்னால் தெரிந்து விடும் என்று நினைத்துவிட்டார். இயற்கை சொல்லிக் கொடுக்கும் என்பது அவரது எண்ணம். அவளுக்கு இதைப் பற்றியெல்லாம் மறைமுகமாகக் கூட பேசிக்கொள்ளும் நட்பு வட்டமும் இல்லை.
அபிராமிக்குள் அந்தளவுக்கு ரசாயான மாற்றம் உருவாகவில்லை போலும். உருவாகும் அளவிற்கு எந்த ஆண் மீதும் ஈர்ப்பும் உருவாகவில்லை.
ஒருத்தன் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்தும் அது வீட்டுக்குத் தெரிந்த பிறகுதான் அவளுக்கே தெரிந்தது. ஒரு வேளை அதை அவள் தனியாகப் படித்திருந்து, அவளுக்குள்ளும் லேசுபாசாக பட்டாம்பூச்சி பறந்திருந்தால் சில பல எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். கடிதத்தைப் பார்த்தவுடன் குடும்பத்தார் இவளைக் குற்றவாளி கூண்டில் ஏற்ற இவளுக்கு அதைப் பார்த்ததும் எரிச்சல் தான் வந்தது. கிழித்து அடுப்பில் போட்டதுதான் மிச்சம். லேட் பூமர் போல அவளுக்கும் லேட் பிக்கப் போல. பச்சை மண்ணுதான். கைதேர்ந்த சிற்பியின் கையில் கிடைத்தால் அவளுக்குள் உறங்கும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உயிர்ப்பான சிலையாக வடிக்கலாம். ஆனால் அவளுக்கு வாய்த்தவன் சிற்பியா, சூளைக்காரனா என்பது போகபோகத்தான் தெரியும்.
“உள்ள சிகரெட் நாத்தம்மா. அப்பறம் நம்ம தோட்டத்துல வேலை பாக்குற மயில்சாமி அண்ணே மேல ஒரு நாத்தம் வருமே. அது மாதிரி ஒரு நாத்தம். கிட்ட வந்ததும் ஒமட்டிட்டு வந்துருச்சு.”
அவள் யாரைச் சொல்கிறாள் என ஒரு கணம் யோசித்தவர், “சாராயா நாத்தமா?” என்றார் படபடப்பாக.
“ஆமாம்மா… அப்படித்தான் இருந்துச்சு” என்றதும் மாப்பிள்ளை குடிப்பாரா என்ற அடுத்த அதிர்ச்சி அவருக்கு. அதுவும் திருமணமான அன்றே மணமகள் வீட்டிற்கே யாராவது குடித்துவிட்டு வருவார்களா? வயதுதான் அதிகம் என்றால் குடிகாரன் வேறயா?
அவன் குடிப்பது சித்தப்பாக்களுக்குத் தெரியுமா? தெரிந்துமா பெண் கொடுத்தார்கள் என்ற கோபம்.
வேகமாக வெளியே வந்தவர் நடந்ததைக் கூற, அவன் குடிப்பான் என்பது சித்தப்பாக்களுக்கும் அதிர்ச்சியே.
“என்ன தம்பி? வயசுதான் முன்னபின்னன்னா மாப்பிள்ளை குடிப்பார் போலயே?” என்று கேட்க, பரந்தாமனுக்கு குடிப்பார் என்றது கருத்தில் படவில்லை. மீண்டும் வயதைப் பற்றியே பேசுவாதாகப் பட்டது. அல்லது அதை மட்டுமே அவர் வசதிக்காக பிடித்துக் கொண்டார்.
“என்ன அண்ணி சும்மா வயசப் பத்தியே பேசுறீங்க? வயசு மட்டும் வச்சு என்ன பண்ண முடியும். என்னமோ அரைக் கிழவனுக்கு கட்டிவச்ச மாதிரி பேசுறீங்க? முப்பது தானே? இப்ப சொத்து இருக்கப் போயிதான் அண்ணன் போன பின்னாடியும் பிள்ளைகள வச்சுக்கிட்டு கஷ்டட்படாம உங்களால சொகுசா இருக்க முடியுது. நாளைக்கு ஏதாவது ஒன்னுன்னா சொத்துதான் அபியக் காப்பாத்தும். வயசா வந்து காப்பாத்தப் போகுது?” என்றதும் உண்மையிலேயே பொங்கி விட்டார்.
வயது ஒருபக்கம், குடிகாரன் என்பது ஒரு பக்கம் அவரை உழட்டி எடுக்க, இதையெல்லாம் விடுத்து ஒரு வேளை உங்ளைப்போல ஒருநாள் அவளும் தனித்து நிற்க வேண்டி வந்தால் சொத்துதானே காப்பாற்றும் என்றதும் தாளமுடியவில்லை.
“என்ன தம்பி? நல்ல நாளும் பொழுதுமா என்ன பேசுறீங்க? சொத்து இருக்குங்கறதுக்காக என் பிள்ளையும் என்னை மாதிரி வந்து நிக்கணுமா? சொத்து இருந்தா மட்டும் போதுமா? அதை வச்சு என்னத்த வாழ்ந்துட்டேன்? நல்லதா நாலு எடத்துக்கு போக முடியுதா? பிள்ளை விசேஷத்துல கூட ஒதுங்கித்தானே நிக்க வேண்டியிருக்கு!” கண்கள் கலங்கி படபடத்து விட்டது இந்துமதிக்கு.
இன்றுதான் மகள் கழுத்தில் தாலி ஏறியிருக்கிறது. அதற்குள் அச்சாணியமாக இப்படியொரு பேச்சு. கோபத்தில் குரலை உயர்த்தினார் இந்துமதி. அவர் குரல் உயர்ந்தது சரியாகப் படவில்லை பரந்தாமனுக்கு. பொங்கும் பாலில் தண்ணீர் தெளிக்கும் விதமாக சட்டென நயந்து வந்தார்.
“அதில்ல அண்ணி! நல்ல குடும்பம். எனக்கு பொம்பளப் பிள்ள இருந்திருந்தா நானே கொடுத்திருப்பேன். அபியும் எங்க பிள்ளைதானே அண்ணி. நாங்களே கெடுதல் நினைப்போமா. நாங்க விசாரிச்ச வரைக்கும் மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஒரு வேளை கல்யாணம்னு ஃப்ரென்ட்ஸ்க கூட குடிச்சிருக்கலாம். அதையும் விசாரிப்போம். இப்ப மாப்பிள்ளை கோவிச்சுட்டு போயிட்டாரே. அது என்னானு மொதல்ல பாப்போம்!” குரல் குழைந்து வந்தது.
ஆனால் மாப்பிள்ளைக்கு நட்பு வட்டம் என சொல்லிக் கொண்டு யாரும் திருமணத்திற்கு வந்தது போலவும் தெரியவில்லை. சொந்தபந்தங்கள் மட்டுமே. சித்தப்பாக்கள் என வந்த சுகுமாரன் குடும்பத்தாரு ஒதுங்கித்தான் இருந்தனர்.
மாப்பிள்ளை கோவித்துச் சென்றதை முன்னுக்கு கொண்டு வர வயதுப் பிரச்சினையும், குடிப்பழக்கமும் பின்னுக்கு சென்றுவிட்டது. எது எப்படி போனாலும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை இரவில் வெளியேறியதுதானே இப்போதைக்கு பெரிய பிரச்சினை. ஒரே நாளில் மகள் தனித்து நிற்கிறாளே!
“நம்ம பிள்ளை இன்னும் சின்னப் பிளளையாவே இருக்கு அண்ணி. இதெல்லாம் ஒரு பிரச்சினைனு வெளியே வந்துருச்சு. உள்ளே கூட்டிப் போயி பக்குவமா எடுத்து சொல்லுங்க! பன்னெண்டாவது படிச்ச பிள்ளைக்கு இன்ஜினியர் படிச்ச மாப்பிள்ளை கிடைக்கறதுனா சும்மாவா?”
‘பதினேழு வயசுல பன்னென்டாவது தானேடா படிக்க முடியும். என்னமோ இவங்க படிக்க வச்சு நான் படிக்காமப் போன மாதிரில பேசுறாங்க. இப்ப இந்த மாப்பிள்ளை எதுக்கு வெளியே போயி எல்லார்கிட்டயும் நமக்கு பேச்சு வாங்கிக் கொடுக்குறார்னு தெரியலையே?’ தனக்குள்ளே புலம்பித் தள்ளினாள்.
சித்திகள் சொன்னதுபோல் உள்ளே வந்ததும் பாலைக் கொடுக்க அவனைத் தான் தேடினாள். சன்னல் பக்கமாக நின்றிருந்தான். அவளுக்கு அறைக்குள் வந்ததுமே அந்த வாடை ஒவ்வவில்லை. அவன் நின்ற இடத்தில் அவன் காலைச்சுற்றி பல சிகரெட் துண்டுகள்.
சத்தம் கேட்டு திரும்பினான். கையில் மீதியிருந்த சிகரெட் துண்டை முழுதாக உள்ளிழுத்துவிட்டே கீழே போட்டு காலால் நசுக்கினான்.
அவளிடம் வர, கையிலிருந்த பால் செம்பை அவளிடம் நீட்டினாள். வாங்கி அருகில் வைத்தவன், கையோடு கட்டியணைத்து சட்டென இதழ் பதிக்க, விதிர்விதிர்த்துப் போனாள் பெண். என்னவென்று புரியாத நிலை.
அவள் தான் அவனை கண்டு கொள்ளவில்லையே ஒழிய, முந்தின நாள் இரவு மண்டபத்தில் அவள் சுகுமாரனோடு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததில் இருந்து அவனுக்குள் இவள் நினைப்புதான். மிகவும் இளசாக கண்ணுக்கு குளிர்ச்சியாகத் தெரிந்தவள் அவனது சிந்தையை நிரைத்திருந்தாள். அவளுடனான தனிமைக்காக காத்திருந்தான்.
ஏனோ அவள் சுகுமாரனோடு சிரித்துப் பேசி நின்றது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. திருமண மேடையிலும் ஃபோட்டோ எடுக்க அவனது சித்தப்பா குடும்பம் மேடையேறிய போது, சுகுமாரன் அபியிடம் நின்று பேசி, வாழ்த்திவிட்டே சென்றான்.
“அண்ணா, அண்ணி என்னோட க்ளாஸ்மேட்” சிரித்தபடி அவன் செய்துவைத்த அறிமுகம் வேறு பொறாமையை இன்னும் விசிறிவிட்டது. தன்னவள் என்ற உரிமையை உடனே எடுத்துக் கொள்ளச் சொன்னது. அறைக்குள் தனித்து விடப்பட்டதும் அவள்மீதான அவன் உரிமையைக் காட்ட, திடீரென்ற அணைப்பும், ஒவ்வாத நாற்றமும் அவளை அனிச்சையாகவே சட்டென தள்ள வைத்தது.
நம் முகத்துக்கு நேரே ஏதோ ஒன்று தாக்க வருவது தெரிந்தால் அதை மூளை உணரும் முன் கண்கள் சட்டென மூடி, முகத்திற்கு முன் கையை கேடயமாக்கித் தடுக்கும் தானே. அதே நிலை தான் அவளுக்கும். அவன் ஏன் கட்டியணைத்தான், இதழ் பதித்தான் என்பதை அவள் உணரும் முன் அவனது செயலும், அவனிடமிருந்து வந்த ஒவ்வாமையும் அவளை சட்டென விலக்கித் தள்ளவைத்தது. அவளிடம் எதிர்ப்பை எதிர்பாராததாலோ என்னவோ அவள் முழு பலத்தை உபயோகிக்க, தள்ளாடி கட்டிலில் விழுந்திருந்தான். மிதமான போதையும் கூட அவள் தள்ளியதும் விழ காரணமாக இருக்கலாம்.
“ச்சீய்ய்ய்ய்..” என சிணுங்க வேண்டியவள், “ச்ச்சை” என முகம் சுழித்து வாய் துடைத்ததில் சட்டென அவன் முகம் கருத்துவிட்டது. அவள் முகம் அசூயை காட்ட அது அவனுக்கு அவமானமாகப் பட்டது.
அவளுக்கும் அருவருப்பான உணர்வு அவன் இதழ் பதித்ததில். அதெல்லாம் அவள் நினைத்தே பார்த்திராதது. மீண்டும் அதை நினைத்த மாத்திரத்தில் மனதைப் பிரட்ட, வாயை மூடிக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள். தன்னை தள்ளி விட்டதைவிட அவளது செயல் முகத்தில் அடித்தது போல் உணர, கோபமாக வெளியேறிவிட்டான்.
புதுமணத் தம்பதிகளுக்குத்தான் தூங்கா இரவாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் குடும்பமே தூங்காமல் விடியட்டும் என காத்துக்கிடந்தது
சிகரெட் நாற்றமெல்லாம் ஒரு பிரச்சினையா என்று கேட்கத் தெரிந்தவர்களுக்கு, முப்பது வயதான, பக்குவப்பட்ட எந்தவொரு ஆண்மகனும், சிறு வயதுப் பெண் ஏதோ அறியாமையில் தள்ளிவிட்டு வெளியே சென்றதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு அதுவும் மறுவீடு வந்தவன், சிறுபெண் மீது பழி வருமாறு வெளியே செல்வானா? அது அவனுக்கும் அசிங்கம் எனத் தெரியாதா என்று யாரும் யோசிக்கவில்லை. பெரியவர்கள் பக்குவமாக சொல்லி அனுப்புவார்கள். இல்லை என்றாலும் பார்த்துக் கொள்ளலாம். சிறு பெண்தானே, விடியும் வரை பொறுத்திருக்கலாம் என்று கூடவா தோன்றாது.
ஒரு வேளை இந்த மாதிரி சந்தர்ப்பத்தைத்தான் அவனும் எதிர் பார்த்திருந்தானோ. முதலிரவு அறையை விட்டு வெளியேற.
அதற்கு அபிராமியும் அவளது அறியாமையால் வழி வகுத்து கொடுத்துவிட்டாள் போல.
*****
“உங்கள யாரு இந்த ஏற்பாடெல்லாம் இப்பவே செய்யச் சொன்னது. எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா?”
சமாதானம் பேச வந்த சித்தி, சித்தப்பா மற்றும் இந்துமதி முன் தயாளன் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார். இவர்கள் தான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் உட்கார்ந்திருந்தனர்.
“என்னக்கா, இந்த ஆளு என்ன லூஸா? கல்யாண முடிச்சவங்களுக்கு அடுத்த ஆக வேண்டிய சாங்கியம் பண்ணாம பூசையா பண்ண முடியும்?” வினோதினி பக்கத்தில் இருந்த மாலதி காதைக் கடித்தாள்.
“எங்க குடும்பத்துல குலசாமி கோவிலுக்கு பொங்கல் வச்சுட்டுதான் மத்த ஏற்பாடெல்லாம் நடக்கும். நேத்து நீங்க மண்டபத்துல வச்சு சீர்வரிசையெல்லாம் லிஸ்ட் எடுத்ததே எங்க ஆளுகளுக்கு ஒப்பல.” என்றதும் அண்ணன் தம்பி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
முன்தினம் மண்டபத்தில் வைத்து சீர்வரிசைகளை வண்டியில் ஏற்றுமுன், மளிகைக்கடையில் சாமான்களை பார்சல் செய்யும் முன் லிஸ்ட்டை ஒரு தடவை சரிபார்ப்பது போல் ஒவ்வொன்றாக கையிலிருந்த பட்டியலில் சரிபார்த்து டிக் செய்து ஏற்றினர்.
அப்போதே மாப்பிள்ளை வீட்டார் முகம் சுழித்தனர். எங்குமில்லாத பழக்கமாக இருக்கிறதே என. பாத்திரங்களில் பிள்ளை பெயர் போட்டு கொடுப்பார்கள் பாத்திருக்கோம். இது என்ன பட்டியலிட்டுக் கொண்டு சீர் கொடுப்பதென சிலர் முணுமுணுத்தனர். அது தயாளனுக்கு கௌரவக் குறைச்சலாகப் பட்டது.
சித்தப்பாக்கள் தங்கள் பெருமையைக் காட்டத்தான் லிஸ்ட் போட்டு அவர்களிடம் கொடுத்ததே. வெள்ளி, வெண்கலம், மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டீவி என அத்தனையும் அதில் அடக்கம். என்னமோ ஊர் உலகத்துல இல்லாத சீர் செஞ்சுட்ட மாதிரி, எழுதிக் கொடுப்பதாக சடைத்தார். சபையில் வைத்து எதுவும் பேச முடியவில்லை.
“அது என்னென்ன கொடுத்திருக்கோம்னு எழுதி வச்சுக்கறதுதானே. அப்பதான் அதே மாதிரி அடுத்த பிள்ளைக்கும் செய்ய முடியும். ஒரே வீட்ல வளந்த பிள்ளைகளுக்கு கூடக்குறைய செஞ்சுறக் கூடாதுல்ல?”
“அதொன்னும் அப்படித் தெரியல. அதை உங்க வீட்ல வச்சே லிஸ்ட் எடுத்திருக்கணும். சபைல வச்சு நாங்க இவ்வளவு செய்றோம்னு சொல்லிக்காட்டுற மாதிரி இருந்துச்சு. நாளப்பின்ன பிள்ள வாழாமப் போனா லிஸ்ட்ல இருக்கறதெல்லாம் விட்டுப்போகாம எடுத்துட்டுப் போக வசதியா எழுதி வச்சுக்கிட்ட மாதிரியும் இருந்துச்சு!” என்றதும்,
“ஐயோ… என்னங்க இது. கல்யாணம் முடிச்ச மறுநாளே இப்படி பேசுறீங்க?” இந்துமதி நெஞ்சம் பதறியது தயாளனின் தாட்சண்யமில்லா பேச்சில். முன்தினம் சித்தப்பா. இன்று மாமனார்.
“இப்ப மட்டும் என்ன வாழுது. மறுவீடு அனுப்புன பையன் மொதமொதன்னு வீட்டுக்குத் தனியா வர்றான். அதுவும் கோவத்துல அர்த்தராத்திரியில. விபரம் ஒன்னும் சொல்லவும் மாட்டேங்குறான். கதவச் சாத்தினவன் தான் இன்னும் திறக்கல” என்றார் இவர்கள் முகம் பார்க்க விரும்பாதவர் போல எங்கோ பார்த்து.
ஏதோ பெரிய மனிதன். இவரிடம் சொன்னால் மகனுக்கு எடுத்துச் சொல்வார் என இவரிடம் பேச வந்தால் இவரோ ஆகாதவர்களைப் பார்ப்பது போல் முகட்டைப் பார்த்து பேசினார். வீட்டிற்கு வந்தவர்களை கடமைக்கென வரவேற்றார். அவர் பார்த்த பிறகுதான் அன்னபாக்கியமே வந்தவர்களுக்கு காஃபி போட அடுக்களை சென்றார்.
“மன்னிச்சிறுங்க அண்ணே! சின்னஞ்சிறுசுக. விபரமில்லாம ஏதோ பண்ணிட்டா.” இந்துமதி நயந்து பேச, சித்தப்பாக்கள் இருவரும் அமைதி காத்தனர்.
தயாளன் பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது இருவருக்கும். இதுவரை இவர்கள் பார்த்த தயாளன் இல்லை. மாப்பிள்ளை பார்க்க வந்தபோதும், விசாரிக்கும் போதும் தெரிந்த தயாளன் வேறு. ஏன், திருமணத்திற்கு முந்தின நாள் இரவு கூட புருஷோத்தமன் மாப்பிள்ளை தேவையைக் கவனிக்கச் சென்ற போது, மகனிடமும், மனைவியிடமும் அந்தளவிற்கு கோபத்தில் கத்திவிட்டு வெளியே வந்தவர், புருஷோத்தமனைப் பார்த்ததும் சடுதியில் பவ்யம் காட்டியவர் தானே. ஆனால், திருமணம் முடிந்ததும் அவரது பேச்சும் தோரணையுமே மாறிப்போயிற்று.
இவர்களிடம் என்ன குற்றம் என முதலில் கண்டு, இவர்கள் வாயடைக்கலாம் என்பதில் தான் கவனமாக இருந்தார். திருமணம் முடியும் வரை எல்லாமே உங்கள் விருப்பம் என்றவர் இப்பொழுது ஏன் அப்படி செய்தீர்கள் என ஒவ்வொன்றாக கேள்வி கேட்கிறார். ஆரம்பத்திலேயே முடிந்தளவிற்கு பெண் வீட்டார் குடுமியை தன் கைப்பிடிக்குள் வைக்க திட்டமிட்டார்.
அதுக்கு தோதாக அமைந்தது மண்டபத்தில் சித்தப்பாக்கள் செய்த செயலும், இரவு அபியின் அறியாமையும்.
அவருக்கு மகனை வைத்துக் கொண்டு எந்த வில்லங்கமும் வராமல் திருமணம் முடித்ததே போதும் என்றிருந்தது.
அபிராமி, மணமேடையில் வைத்து தான் சுதாகரனைப் பார்த்தாள். அதுவும் கூட சரியாகப் பார்க்க முடியவில்லை. மணமக்களைச் சுற்றி சொந்த பந்தங்கள் நிற்க, அதைச் செய், இதைச் செய் என அய்யர் சொல்லும் சாங்கியங்களைச் செய்ய, முகூர்த்த புடவை மாற்ற, உடனே தாலிகட்ட என பரபரவென காரியம் நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் இருப்பவனையா நிமிர்ந்து பார்க்க முடியும்? அதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் பின்ணனி இசையோடு இரண்டு நிமிடத்திற்கு இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையை அகற்றாமல் பார்த்துக் கொண்டே இருப்பதெல்லாம்.
ஆனால், நிஜத்தில் முகூர்த்தம் முடியப் போகுது பொண்ணக் கூட்டியாங்கோ, முகூர்த்தம் முடியப் போகுது சீக்கிரம் பட்டு கட்டி கூட்டியாங்கோ, முகூர்த்தம் முடியப் போகுது தாலியக் கட்டுங்கோ. பதிவு பண்ணி வைத்த ரெக்கார்ட் போல் ஐயர் குரல் தான் திரும்பத் திரும்ப கேட்கும். அபிராமியும் சாவி கொடுத்த பொம்மை போல் சொன்னதைச் செய்தாள். அவனும் அப்படியே. ஆயிரங்காலத்துப் பயிர். இப்படித்தான் விதைக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் இனி இவனோடு தான். அதாவது அவளுக்கு தோன்றியதா… தெரியாது.
வழக்கம் போல் அடுத்து மாப்பிள்ளை வீடு சென்று விளக்கேற்றி கும்பிட்டு, பெண் வீட்டிற்கு மறுவீடு வர பொழுது சாய்ந்துவிட்டது. அவர்கள் வழக்கம் முதலிரவு பெண்வீட்டில் தான்.
அப்போதெல்லாம் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்த பிறகு தான் அடுத்த சாங்கியம் நடக்க வேண்டும் என தயாளன் ஒரு வார்த்தை கூட இவர்களிடம் சொல்லவில்லை. திருமணம் முடிந்ததும் அடுத்து அதுதான் எனத் தெரியாதா?
ஏதோ பொங்கல் சம்பிரதாயத்தையே இப்பொழுது தான் உருவாக்கியிருப்பார் போல. மாப்பிள்ளையை சமாதானம் பேச வந்தவர்களிடம் எகிறிக் கொண்டிருந்தார்.
அன்னபாக்கியம் வந்தவர்களுக்கு காஃபி கொடுத்து உபசரித்ததோடு சரி. ஒதுங்கி நின்று கொண்டார். இங்கு எல்லாமே தயாளன் வைத்ததுதான் என்பது அவர் வாய் திறக்காமல் இருப்பதிலேயே தெரிந்தது.
“இப்ப என்னங்க… குலசாமிக்கு பொங்க வச்சுட்டே அடுத்து என்னானு பாப்போம். நீங்களே நாள் பாத்து சொல்லுங்க!” பதவிசாக பெண் வீட்டாராக பொறுப்பை தயாளனிடமே கொடுத்தனர்.
சற்று நேரம் யோசித்தவர், மனைவியிடம் பஞ்சாங்கம் எடுத்து வரச் சொன்னார். அன்னபாக்கியம் எடுத்து வந்து கொடுக்க, “உங்க வீட்டு பிள்ளைக்கு எப்ப தோதுப்படும்னு சொல்லுங்க. மறுபடியும் நாள் குறிச்சு தடைபடக் கூடாது பாருங்க!” என்றதும் பெண்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொண்டனர்.
“அக்கா… அபிக்கு எப்ப தேதின்னு கேக்குறார் போல?” என்றார் மாலதி ரகசியக் குரலில்.
“அது தெரியாதே… அவளுக்குதான் தள்ளித் தள்ளி வருமே. எப்ப வரும்னு கரெக்டா சொல்ல முடியாதே!”
பெண்கள் தங்களுக்குள் சன்னக் குரலில் பேசிக் கொள்ள என்ன என்பது போல் தயாளன் பார்க்க, “இவரென்ன நடுக்கூடத்துல வச்சு இதெல்லாம் கேக்குறாரு. அந்தம்மா கேட்டாக்கூட சொல்லலாம்.” என்று மூவரும் அன்னபாக்கியத்தைப் பார்க்க,
“கேட்டு சொல்லு!” என்றார் அவரும். அதுவரை சுதாகர் வெளியே வரவில்லை. அவனும் வருவான், அவனிடமும் ஒரு வார்த்தை பேசிவிடலாம் என பாத்திருக்க அவன் வரும் வழியைக் காணோம்.
அன்னபாக்கியத்திடம் விபரத்தை பெண்கள் சொல்ல, அது தயாளனுக்கு சொல்லப்பட்டது.
“அப்போ உங்க பொண்ணு உங்க வீட்லயே இருக்கட்டும். டாக்டர்கிட்ட காமிச்சு அந்தப் பிரச்சினைய சரிபண்ணிட்டு சொல்லுங்க. அப்பறம் எல்லாத்துக்கும் நாள் குறிக்கலாம்! என்றதும் அதிர்ந்து பார்த்தனர் அனைவரும்.
வந்ததிலிருந்து தயாளனே பேச, இவர்கள் பேச வந்தது கூட மறந்து போயிற்று.
“அக்கா… இன்னும் நம்ம அபிக்கு வாரண்டி முடியல. அதனால நம்மலே சர்வீஸ் பண்ணி கொடுக்கச் சொல்றாரு போல?”
“ஆமாமா… சீல் கூட உடைக்கல. ரிட்டர்ன் போடாம சர்வீஸ் தானே பண்ணித் தரச்சொல்றாங்க. இவரப் பாத்தா மலைமுழுங்கி மகாதேவன் தான் ஞாபகத்துக்கு வருது!”
மகன் இரவு வரும் பொழுதே அவனைக் கண்டு கொண்டார். விடிந்ததும் இவர்கள் வந்து நிற்க, நேற்று மண்டபத்தில் வைத்து இவர்கள் சீர் லிஸ்ட் போட்டுக் கொடுத்ததை முன்னெடுத்து குற்றத்தை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டார்.
சுதாகர், அப்பொழுது தான் வெளியே வந்தான். இப்போதான் எழுந்திருப்பான் போல. அதே வேட்டியில் தான் இருந்தான். மேலுக்கு பனியன் மட்டும். சுதாகரும் இவர்களைப் பார்த்து விட்டு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
அன்னபாக்கியமும் மகனைப் பார்த்ததும் அவனுக்கு காஃபி போடச் சென்றுவிட்டார்.
இவர்கள்தான், வாங்க என்று கூட கேட்காதவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பார்த்திருந்தனர்.
சித்தப்பாக்களுக்கு கோபம் கண்ணைக் கட்டியது. ஏதோ நம்ப வைத்து ஏமாற்றியது போல் தோன்றியது இருவரது செய்கையும். இனி என்ன செய்வது. பெண்ணை வாழ வைக்கும் வழியைத்தான் பார்க்க வேண்டும். அதற்காக இவர் சொல்லும் வரை வீட்டில் வைத்திருக்க முடியாது. கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும். இன்றே மறுவிருந்து போட வேண்டும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒன்றுமில்லாத விஷயத்திற்காக இங்கு வந்து உட்கார வேண்டிய நிலமை.
இரவு குடித்திருக்கிறான். அதைப்பற்றி வாய் திறந்து கேட்க முடியவில்லை. ஏதோ இவர்கள் தவறிழைத்தவர்கள் போல, அவன் சட்டமாக அமர்ந்திருந்தான்.
எப்பவும் தவறு யார் பக்கம் என்று பார்ப்பதை விட, முறுக்கிக் கொண்டு நிற்பவர்களைத்தானே முதலில் மலையிறக்க முயற்சி செய்வோம். அதே தான் இங்கேயும்.
முதலில் பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதுதான் இப்போதைக்கி இவர்களுக்கு ஆகப்பெரிய காரியமாக இருந்தது.





Yarai kutham solrathu...pona petha neraiya veetla idhu than nelama.epavum ellathukum thanzhndu poganum,,nama Pakkam thappu ilatiyum nama than vitu koduthu poganum ..porumaiya poganum ..ponuku idhuku mela.... Adi paninju poganum...but ipa ellam payan veetukaranga than pavam.ipa ponnu veetukaranga alumbu thanga mudiyala....yanaiku oru kalamna....
பூனைக்கு ஒரு காலம் வந்துதானே ஆகணும். எத்தனை காலத்துக்குதான் பெண்களே பணிஞ்சு போறது. ஆனா இப்ப மட்டும் எல்லாம் சரிசமம்னு பேசுறாங்க...
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Very nice
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
அடப்பாவிங்களா ஒரு பொண்ணோட வாழ்க்கையை உங்க சுயநலத்துக்காக அழித்துவிட்டீங்களே,
எத்தனை பேர் தான் இப்படி கிளம்பி இருக்கீங்க.
சித்தப்பா குடும்பம். தயாளன் குடும்பம் மட்டும் தான் கிளம்பிருக்காங்க...
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫