arrow_back
நெஞ்சமெல்லாம் காதல்…… அத்தியாயம் – 2

அத்தியாயம் – 2

visibility 162
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் – 2

 

காலை நேரம் முழுவதும் வகுப்புகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. காமர்ஸ் (Commerce) க்ளாஸ் கொஞ்சம் கலகலப்பாக இருந்தது. காமர்ஸ் எடுக்கும் எழில்வேந்தன் சார் எப்போதும் எதையாவது பேசி சிரிக்க வைத்து விடுவார். ஆனால் அவர் கொடுக்கும் அசெண்ட்மெண்ட் வேலைகளை முடிக்காமல் வைத்திருந்தால் நிச்சயமாய் மார்க் போட மாட்டார். எக்ஸாமிலும் கேள்விகளுக்கு சரியான பதில் எழுதியிருந்தால் மட்டுமே மார்க் போடுவார். எதாவது கதை எழுதி பேப்பரை நிரப்புவது எல்லாம் அவரிடம் வேலைக்காகாது. அதனாலேயே வகுப்பில் எல்லோரும் காமர்ஸ்லில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் சக்தி மிகவும் சிரமப்படுவது இங்கிலீஷ் (English) எனப்படும் ஆங்கில மொழி வகுப்பிற்குத் தான். 

 

சக்தி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் தமிழ் வழித் கல்வியிலேயே பயின்றவள். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், பிசினஸ் மேனேஜ்மெண்ட் போன்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பது என்பது முதலில் அவ்வளவு எளிதாக இல்லை சக்திக்கு. கல்லூரிக்கு வந்த புதிதில் பேராசிரியர்கள் நடத்தும் விதத்தில் ஒன்றுமே அவளுக்குப் புரியாது. ஆனால் சக்தி பெரும் முயற்சி எடுத்து படித்தாள். பாடத்தின் புரியாத பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்ப்பாள். அப்படி கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சியடைந்தாள். ஆனால் ஆங்கில மொழித் தேர்விற்கு அவள் எவ்வளவு மெனக்கெட்டாலும் கிடைப்பதோ வெறும் பாஸ் மார்க் மட்டுமே. சக்தி ஆங்கில வகுப்பிற்கு மட்டுமே பதட்டமடைவாள்.

 

கவின் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பான். எந்த வகுப்பிற்கும் அவன் பதட்டமடைந்து சக்தி பார்த்ததே இல்லை. கவின் பள்ளி பருவத்தில் இருந்தே ஆங்கில மொழிக் கல்வியில் படித்தவன். அதனால் அருமையாக ஆங்கிலம் பேசும் திறன் பெற்றிருந்தான். கவினின் ஆங்கில மொழிப் புலமை கண்டு வியந்திருக்கிறாள் சக்தி.

 

அன்று மதிய உணவு இடைவேளை முடிந்து சக்தி வகுப்பில் ஓய்வாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நித்யா மற்றும் தாரணியுடன் பேசிக் கொண்டிருந்தாள். நித்யாவும், தாரணியும் பள்ளி பருவத் தோழிகள். அவர்களோடு சக்தி இணைந்து கொண்டாள். நித்யாவும், தாரணியும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். வகுப்பில் உள்ள மற்ற மாணவிகளை விடவும் நித்யாவும், தாரணியும் கொஞ்சம் நட்பாக பழகக் கூடியவர்கள். அப்போது தான் அந்த தகவல் வந்தது. 

 

ஆபிஸ் ப்யூன் இவர்களது டிபார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்து ஹெச். ஓ. டி (H.O.D) யைப் பார்த்து ஒரு பெரிய காக்கிநிற கவரை கொடுத்து விட்டுச் சென்றதை அனைவரும் ஜன்னலின் வழியே பார்த்தார்கள். அனைவருக்கும் புரிந்து விட்டது. கடந்த செமஸ்டர் முடிகள் வந்து விட்டது. வகுப்பில் பேச்சு சத்தம் கேட்கத் துவங்கியது. 

 

“ஏய், எக்ஸாம் ரிசல்ட் வந்துருச்சிடி”

“ஏய், நீ வேற திரும்ப திரும்ப அதையே சொல்லாதடி. வயிறே கலங்குதுடி எனக்கு”

“வனி மச்சி, நீ எல்லாத்துலயும் பாஸ் ஆகிட்டா எனக்கு ட்ரீட் குடு மாமா”

“சும்மாயிரு மச்சி, நானே அக்கவுண்ட்ஸ் பேப்பர நெனைச்சு வயிறு கலங்கி இருக்கேன்”

“ஓ, உனக்கு அக்கவுண்ட்ஸ்ஸா? எனக்கு இங்கிலீஷ் நெனைச்சா தாண்டி ஒரு மாதிரி இருக்கு”

 

“மாலு, ஏய் மாலு”

“என்னடா, தொன தொனங்கிற?”

“ரிசல்ட் வந்ததும் நான் தான் உனக்கு பர்ஸ்ட் ட்ரீட் தருவேன்”

“டேய், மாலு என்னோட ட்ரீட்டுக்காகத்தான் வெயிட் பண்ணுவா டா”

“ரெண்டு பேரும் வாய மூடுங்கடா, இருக்குற டென்சன்ல இவனுங்க வேற”

 

இப்படி பல விதமான பேச்சு சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. சக்தியும் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தாள். இங்கிலீஷ் பேப்பரை நினைத்து பதட்டப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் தலையைத் திருப்பி கவினைப் பார்த்தாள். அவன் முகம் மிகவும் அமைதியாக இருந்தது. அவனிடம் எந்தவொரு பதட்டமும் இருந்த மாதிரி தெரியவில்லை. சக்திக்கு கவினைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருந்தது. வகுப்பை விட்டு வெளியே வந்து குளிர்ந்த தண்ணீர் கொஞ்சம் பிடித்து குடித்தாள். குளிர்ந்த தண்ணீர் தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.

 

ஆபிஸ் ப்யூன் ஹெச்.ஓ.டி ரூமில் இருந்து வெளியே வந்து நோட்டீஸ் போர்டில் மார்க் ஷீட்டை ஒட்டத் துவங்கினார். சக்தி வகுப்பிற்குள் நுழைந்து தாரணியைப் பார்த்து “ஏய், மார்க்ஸ் டிஸ்பிளே பண்றாங்கடி” என்றாள்.

 

முதலில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் வேகமாக சென்று ஆர்வமாய் மார்க்கை பார்க்கத் துவங்கினார்கள். சக்தியும் மற்றவர்களும் கூட்டத்தில் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர். நித்யா ஒல்லியான தேகம் உடையவள். அதனால் ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு கூட்டத்தினுள் நுழைந்தாள். கொஞ்ச நேரம் கழித்து நித்யா கூட்டத்தில் இருந்து வெளியில் வந்தாள். அவளது சிரித்த முகமே அவர்களின் ரிசல்ட்டைக் காட்டிக் கொடுத்தது. முதலில் “என்னாச்சுடி?” என்று கேட்டபடியே தாரணிதான் நித்யா மீது முதலில் பாய்ந்தாள்.

 

“ஏய், தாரணி, எல்லாம் நல்ல ரிசல்ட் தான் டி, அவசரபடாதே” 

 

“நித்து, நல்ல மார்க் வாங்கலன்னா எங்கம்மா என் உசுர வாங்கிடும்”

நித்யா சிரித்துக் கொண்டே “எல்லாம் நல்ல மார்க் தான் டி, அவசரப்படாத” என்றாள். நித்யா நோட்டில் எழுதியிருந்த மார்க்ஸ் எல்லாத்தையும் சக்தி தீவிரமாகப் பார்த்தாள். மூன்று பேருமே நல்ல மார்க்ஸ் தான் வாங்கியிருந்தார்கள்.

 

சக்தி தன்னுடைய மதிப்பெண் பட்டியலை சரியாக வாசித்துப் பார்த்தாள். ஆங்கில மொழிப் பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் வாங்கியிருந்தாள். மற்ற அனைத்து பாடங்களிலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். மூவரில் தாரணி அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். நித்யா “தாரு, இன்னிக்கு கேன்டீனுக்குப் போகலாம் டி” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த வகுப்பிற்கான பேராசிரியர் வந்து விட அனைவரும் வகுப்பிற்கு விரைந்தனர். சக்திக்கு கவினின் நினைவு வந்தவளாக திரும்பிப் பார்த்தாள். கவின் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான். 

 

சக்தி கவினிடம் சைகையில் என்னாச்சு எனக் கேட்டாள். கவின் சிரித்துக் கொண்டே சிறிய பேப்பரை அவளிடம் நீட்டினான். அவன் கொடுத்த பேப்பரில் கவினின் மதிப்பெண் பட்டியல் இருந்தது. அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ஆங்கில மொழிப் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். சக்தி அந்த பேப்பரை புன்னகைத்தபடியே கவினிடம் திருப்பிக் கொடுத்தாள்.

 

அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் அனைவரும் காலேஜ் கேன்டீனிற்குச் சென்றார்கள். எல்லோரும் அவரவருக்குப் பிடித்தமானவற்றை வாங்கத் துவங்கினர். ஆனால் சக்தி மட்டும் ஒன்றும் வாங்காமல் பேசிக் கொண்டிருந்தாள். 

 

சூடான இரண்டு உருளைக்கிழங்கு சமோசாக்கள் இருக்கும் ஒரு தட்டைக் கொண்டு வந்து சக்தியின் முன் வைத்தான் கவின். சக்தி நிமிர்ந்து கவினை புரியாத ஒரு பார்வை பார்த்தாள். 

 

கவின் சிறிய புன்னகையோடு “நல்ல ரிசல்ட் வந்ததுக்கு என்னோட ட்ரீட் உனக்கு, சாப்பிடு” என்று கூறிவிட்டு, கையில் இருந்த சாஸ் பாட்டிலை டேபிள் மீது வைத்து விட்டு சென்றான். சில நிமிடங்களுக்கு கவினையே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு மெதுவாய் தலைகுனிந்து சமோசாக்களை சாப்பிடத் துவங்கினாள்.

 

இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தாள் தாரணி. கவின் தன் கையில் காபி கப்பை ஏந்திக் கொண்டு அவர்களுக்கு அருகில் இருந்த டேபிளில் நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்தான். அவர்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டார்கள்.

 

 சக்தி ஓரக்கண்ணால் கவினைப் பார்த்தாள். காபியை உறிஞ்சும் போது அவனது உதடுகள் இரத்தம் போல் சிவப்பதைக் கண்டாள். கவின் சிவந்த மேனியை உடையவன். அதனால் இயல்பாகவே அவன் வசீகரமானவனாக தோற்றமளித்தான். சக்தி சமோசாவையும், கவினையும் மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள். 

 

நாட்கள் சென்றதே தெரியாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. இரண்டாம் வருடத்தின் இரண்டாவது செமஸ்டர் தேர்வும் நெருங்கி விட்டது. இந்த முறை தேர்வு நெருங்குவதற்குள்ளாகவே அனைத்து பாடங்களுக்கும் நோட்ஸ் எடுத்து தயாராக இருந்தாள் சக்தி. வகுப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சக்தியின் கண்கள் தாமாகவே கவினை தேடின. தாரணி மிக இயல்பாக “என்ன சக்தி, கவினை தேடுறீயா?” என்று கேட்க, சங்கடத்தில் நெளிந்தாள் சக்தி. நித்யா “கவினு அந்த ஹோம் சயின்ஸ் படிக்கிற தேஜஸ்வினி பின்னாடி சுத்துராண்டி. இப்பக்கூட அவள பாக்கத் தான் போயிருப்பான்னு நினைக்கிறேன்” என்று கூறவும், சக்தி பட்டென்று நிமிர்ந்து நித்யாவைப் பார்த்தாள். 

 

சக்தியின் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாய் தாரணி “அவ சொல்றது உண்மை தான் டி” என்றாள். இருவரின் வார்த்தைகளும் சக்திக்கு கசப்பாய் இருந்தன. இந்த முறை எரிச்சல் பார்வைப் பார்த்தாள். ஆனாலும் நித்யா விடவில்லை. 

 

“சக்தி, கவினைப் பத்தி நீ உன் மனசில ஏதாச்சும் அபிப்பிராயத்தை வச்சிருக்கியா டி?”

 

“சக்தி, நித்து தான் கேக்குறால்ல, வாய தொறந்துதான் சொல்லேன்டி. உன் மனசுல என்ன தான் இருக்குன்னு”

 

“அய்யோ, தாரு, அப்டியெல்லாம் ஒன்னுமில்லடி”

 

“சும்மா சொல்லாத சக்தி, எதுவும் இல்லன்னா ஏன் இப்டி அதிர்ச்சியாகுற?’”

 

“ஏய், ரெண்டு பேரும் கொஞ்சம் மூடிட்டு இருக்கீங்களா?”

 

“ஏன்டி, ஒன்னுமில்லாமலா அன்னிக்கு கேன்டீன்ல கவினை முழுங்குற மாதிரி பாத்த”

 

சக்தி மனத்திற்குள் அய்யோ, இவளுங்களுக்கு எல்லாம் தெரியுற மாதிரி அப்பட்டமாவா கவினைப் பாத்து தொலைச்சோம் என்று நினைத்துக் கொண்டாள்.

 

“அடியேய், உண்மைய சொல்றீ”

 

நித்யா அதட்டி கேட்கவும், சக்தி தலைகுனிந்தாள். சக்தி மெளனமாய் இருப்பதைப் பார்த்ததும் தாரணி புரிந்தது போல் தலையசைத்தாள். 

 

நித்யா “சக்தி, நீ அவனை விரும்புறது அவனுக்கு தெரியுமா? இல்ல, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறீங்களா?” என்று நிதானமாய் கேட்க, அப்போது தான் சக்திக்கே புரிந்தது. தான் விரும்புவதை இன்னும் அவனிடம் வெளிப்படையாக கூறவில்லையே என்று.

 

சக்தி “நான் இன்னும் எதுவும் கவின் கிட்ட சொல்லல, ஆனா அவனுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்” என்றாள்.

 

நித்யா “எத வச்சு அப்டி சொல்ற? நீ சொல்லாமலே அவனுக்கு தெரியும்னா அவன் ஏன் அந்த ஹோம் சயின்ஸ்காரி பின்னாடி சுத்தறான்?” என்று கேட்டாள்.

 

நித்யாவின் வார்த்தைகளைக் கேட்ட சக்திக்கு யாரோ நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போல் ஆகி விட்டது. அவளிடம் “சும்மாயிருடி, அப்டில்லாம் இருக்காது” என்றாள்.

 

தாரணி “எதுக்குடி இப்ப இவ்ளோ சீனு? பேசாம உன் மனசுல இருக்குறத அவன்கிட்ட ஓப்பனா சொல்லிடு. அதுக்கப்புறம் அவனே முடிவு எடுத்துக்கட்டும், சரிதானே” என்றாள்.

 

சக்தி “ஏய், கவின் அப்படிப்பட்டவன் இல்லடி. என் மனசு அவனுக்கு நல்லாவே புரியும்” என்றாள்.

 

சக்தி கவின் மேல் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பதாகத் தோன்றினாலும், நித்யாவும் தாரணியும் எதுவும் சொல்லாமல் மெளனமாய் இருந்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 3

அத்தியாயம் – 3இரவு முழுவதும் சக்திக்கு உறக்கமே வரவில்லை. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். கல்லூரியில் தாரணியும், நித்யாவும் அவளிடம் கூறியதையே நினைத்துக் கொண்டிருந்தாள். கவின் தன் வகுப்புத் தோழிகளுடன் கூட வழிந்து கொண்டு பேசி திரிந்ததில்லை. பெண்களுடன் பேச…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 2

உங்கள் கருத்தைப் பகிருங்கள்