arrow_back
மௌனம் பேசும்! மௌனம் பேசும்! – 01
மௌனம் பேசும்! chevron_right பகுதி 2 / 3

மௌனம் பேசும்! – 01

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மௌனம் பேசும்!

 

அத்தியாயம் – 01

 

“இந்த விஷயம் சரியா வரும்னு நெனக்கிறியா கல்யாணி..?அவங்க தான் ஏதோ,வருத்தத்துல பேசுனாங்கன்னா நீயும் அது சரி வரும்னு முடிவு பண்ணிட்டு வந்து இப்டி பேசற..?என்னன்னாலும் அந்த பொண்ணுக்குன்னு எதிர்பார்ப்பு இருக்கும்ல..”

 

பின்பாதியை கூறுகையில்,நடராஜனின் விழிகள் ஒரு சுற்று சுழன்று தம்மருகே,எவரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டது.

 

கணவரின் கேள்வியை,வெறுமனே புறந்தள்ள முடியாது போக,கல்யாணியும் அதைப் பற்றி சிந்திக்கலானார்.எப்படியும்,அவர்களாக கேட்டிருக்கும் பட்சத்தில்,அவ்வாய்ப்பை நழுவ விடவும் மனம் வரவில்லை,அவருக்கு.

“அவங்களா தான கேட்டாங்க..அப்றம்,எதுக்கு நீங்க சும்மா யோசிச்சிட்டு கிட்டு இருக்கீங்க..அதெல்லாம் சரி வரும்..”தன் பிடியில் நின்றார்,அவர்.

 

“அவங்க கேட்டாங்கன்னு தெரியும்..ஆனா,அது அந்த பொண்ணுக்கு தெரியுமான்னு தெரியுமா உனக்கு..?அந்தப் பொண்ணு விருப்பம் இல்லாம தான இந்த பேச்சு வந்துச்சு..”

 

சற்றே அவர் குரலில் கடுமை ஏறியிருக்க,உண்மை அதுவென்றாலும் மனைவியானவர் ஒப்புக் கொள்ள மறுத்தார்.

 

“பொண்ணு விருப்பம்லாம் அவங்க பாத்துக்கறதா சொன்னாங்க..அது அவங்க பாடு..உங்களுக்கு விருப்பத்த சொல்லுங்க..நீங்க தான்,அவன் கிட்ட பேச முடியும்..அப்போ தான்,கொஞ்சமாச்சும் காது கொடுத்து கேப்பான்..”

 

கல்யாணியின் வார்த்தையாடலில்,எரிச்சல் தான் வந்தது,கணவருக்கு.என்னவாயினும்,அவர் தன் காரியத்தை நடத்திக் கொள்ளவே முனைவார் என்பதை அவரின் வார்த்தைகளே,காட்டிக் கொடுத்திட எதற்கு வீண் விளக்கம் என்று அமைதியாகி விட்டார்,அவரும்.

 

“உன் இஷ்டம் என்னவோ போ..ஆனா,நீ பண்றது எல்லாம் சரியில்ல போ..”பெருமூச்செறிந்தவாறு அவர் எழுந்து அறைக்குள் புகுந்து கொள்ள,கல்யாணியோ தமக்கைக்கு அழைத்து,நடந்ததை ஒன்று விடாமல் ஒப்புவிக்க,மறுமுனையும் அவருக்கு ஒத்து ஊதியது.

 

“அவங்களாவே கேட்டு இருக்காங்க..அப்போ,நாம எதுக்கு வீஞ்சிகிட்டு..சரின்னு சொல்ல வேண்டியது தான..”தமக்கையவர்,சாதகமாய் பேசவும் மனதில் இருந்த சிறு துணுக்குறலும்,அகன்று போய் தெளிந்தார்,அவர்.

 

“அப்போ சரிவரும் தானக்கா..?”

 

“ஆமாடி ஆமா..இதுல சரி வராம போக என்ன இருக்கு..உன் புள்ள ஏதாச்சும் கிறுக்குத் தனம் பண்ணாம இருந்தா போதும்..எல்லாம் சரியா நடக்கும்..நீ அவன சரி கட்ற வழிய பாரு..முன்ன மாதிரி இதுக்கும் முறுக்கி கிட்டு நிக்கப் போறான்..”

 

பொடுபொடுத்து பேசியவரின்,வார்த்தைகள் அப்பட்டமாய் எரிச்சலை காண்பித்திருக்க,கல்யாணி பதிலேதுமின்றி மௌனம் காத்தார்.

 

“புரிஞ்சுதா இல்லியா நா சொன்னது..?”நிலவிய மௌனத்திற்கு அவர்,அதட்டல் போட”புரிஞ்சுதுக்கா..புரிஞ்சுது..”உடனே ஒப்புக் கொண்டிருந்தார்,தங்கையவர்.

 

“ம்ம்..பாத்து பக்குவமா பேசி உன் பையனுக்கு புரிய வச்சுடு..எப்டியாச்சும் ஒத்துக்க வக்க வேண்டியது உன் பொறுப்பு..”கறாராய் மிரட்டல் விடுத்து விட்டே,இணைப்பு துண்டிக்கப்பட இப்போது,கல்யாணிக்கு மகனை எப்படி சரி கட்டுவதென்கின்ற யோசனை தான்,மனம் முழுவதும்.

 

இளையவள் வந்ததும்,நடராஜன் அவனிடம் மனைவிக்கு தெரியாமல்,விடயத்தை தெரியப்படுத்த கடுகடுத்தவனுக்கு,ஏகத்திற்கும் சினம் ஏறியது.

 

“என்னப்பா,அம்மாவுக்கு அறிவில்லயா என்ன..?அந்தப் பொண்ணப் போய்..?அந்தப் பொண்ணு..”ஏதோ கூற வந்தவன்,வார்த்தைகளுக்கு வேலியிட்டான்,மனம் உறுத்தவே.

 

“ப்ச்ச்..அந்தப் பொண்ணு எப்டி பா அண்ணனுக்கு சரி வரும்..?நீங்க அந்தப் பொண்ண பாத்து தான இருக்கீங்க..நம்ம அண்ணனுக்கு கொஞ்சங் கூட அவ பொருத்தமா இருக்க மாட்டா..ப்ளேக் அன்ட் வைட் ஃபோட்டோ மாதிரி..”தந்தை என்றும் பாராமல்,முழு ஆதங்கத்தையும் அவரிடம் கொட்டித் தீர்க்கும் முடிவில் இருந்தான்,போலும்.

 

“அந்தப் பொண்ணுக்கு சிரிக்க கூட வராது பா..எப்ப பாரு அழுத்தமா உர்ருன்னு மூஞ்ச வச்சி கிட்டு இருக்கும்..அம்மாவுக்கு புத்தி எங்க போச்சு..?அவங்க கேட்டதும் சரின்னு சொல்லனுமா நாம..?அவ்ளோ எளக்காரமா போச்சா அண்ணன..?

 

சீறிப் பாய்ந்தவனின் எந்த கேள்விக்கும்,தந்தையிடம் பதிலின்றிப் போக,அதில் இன்னும் அவனுக்கு எரிச்சல் மண்டியது.

 

தாயின் பேச்சுக்கு அப்படியே செவி சாய்த்திடும்,தந்தையின் குணத்தை இந்த நொடி அவன் அறவே வெறுத்திட,விழிகளில் அத்தனை முறைப்பு தேங்கி கிடந்தது.

 

“என்ன என்னடா பண்ண சொல்ற..?உங்கம்மா நா சொல்லி கேப்பாளான்னு நீயே சொல்லு..”

 

“கேக்க மாட்டாங்கன்னு தெரியும்..ஆனா,இவ்ளோ தூரம் அத கொண்டு விட்டது நீங்க தான..அவங்க எது சொன்னாலும்,தலய தலய ஆட்டு கிட்டு சம்மதம் சொன்னதால தான,அவங்க இப்போ இப்டி இருக்காங்க..”

 

மகனின் நேரிடையான குற்றச்சாட்டில்,மனம் பிசைய அதன் உண்மையை சுவீகரிக்க முடியாமல்,அவர் தள்ளாடினார்.

 

அவன் சொல்வது யாவும்,நூறு சதவிகித உண்மை.அதை துளியும்,அவரால் மறுக்கவே இயலாது.

 

“சரிப்பா,இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு..”

 

“அண்ணன் காதுக்கு இந்த விஷயம் போனா,இப்டிபட்ட பொண்ண பாத்து இருக்காங்கன்னு அவன் கவல பட மாட்டானாப்பா..?என்ன தான் இருந்தாலும்,அவனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண தானப்பா,நாம கட்டி வக்கனும்..”

கூறியவனுக்கு,மனம் ஆறவேயில்லை.

 

“வர்ரது தானா தட்டிப் போகுது..இல்லன்னா,அவங்களே வேணாம்னு சொல்றாங்க..என்னடா பண்ண சொல்ற..?கடைசியா கூட,ஒரு நல்ல எடம் வந்துச்சு..அந்த பொண்ணு பேரேன்ன..காயத்ரி..பொண்ணுக்கு கூட சம்மதம்னு சொன்னாங்க..ஆனா,அதுக்கப்றம் அந்த பொண்ணே வேணாம்னுருச்சு..”

 

“……………………”

 

“அவனுக்கேத்த மாதிரி சம்பந்தம் வந்தா,அது சரியா வர மாட்டேங்குது..சரியா வர்ர வரன் அவனுக்கு பொருத்தமா இருக்க மாட்டேங்குது..உங்கம்மாவுக்கு வேற அவசரம்..என்னடா பண்றது..?”

 

தந்தையின் கேள்வி,வாஸ்தவம் தான்.அதில் பொதிந்திருந்த உண்மையை,அவனுமே உணரத் தான் செய்தான்,இக்கணம்.

 

வரும் வரன்கள் யாவும் எப்படியே,தட்டிக்கழிய நிச்சயம் வரை பேச்சு வந்து,நின்று போன சம்பவங்களும் உண்டு.மகளுக்கு பிடிக்கவில்லை,என்று பெண்ணின் தந்தை,சங்கடத்துடன் கூறும் சந்தர்ப்பங்களில் இவன் தான் பல்லைக் கடிப்பான்,உச்ச பட்ச கோபத்தில்.

 

“எனக்கு என்ன பண்றதுன்னே தெரில அருள்..முடியும்னா உங்கம்மா கிட்ட பேசிப் பாரு..நீ சொன்னா அவ கொஞ்சம் காது கொடுத்து கேப்பா..”

 

தளர்ந்த வார்த்தைகளில்,தானும் தந்தையை காயப்படுத்தி விட்டது புரிய,நெற்றியை நீவிக் கொண்டான்.

 

“சாரிப்பா..நா வேணும்னே அப்டி சொல்லல..ஒரு வேகத்துல பேசிட்டேன்..”மன்னிப்பை வேண்ட,சிறு தலையசைப்பு மட்டுமே,அவனுக்கு பதிலாகக் கிடைத்தது.

 

தந்தையின் உருவம்,விழிகளில் இருந்து மறைந்ததும் தன்னைத் தானே திட்டிக் கொண்டவனுக்கு,தன் மீதே கோபமாக வந்தது.”அவரசப்பட்டு வார்த்தய விடாத அருள்..”தனக்குள் சொல்லிக் கொண்டவனோ,அடுத்தடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலானான்,தீவிரமாய்.

  

                          ●●●●●●●●●●

 

“ஹேய்,வன் ஸ்னேப்!”காதலனுடன் முகத்தில் வெட்கம் மின்ன,பேசிக் கொண்டிருந்த தோழியை அவள் படம் பிடிக்க,அவளோ ஒற்றைக் கையால் முகத்தை மூடிக் கொண்டாள்,நாணம் மீதூற.

 

“இப்டியே கண்ட கண்டதயும் ஃபோட்டோ வீடியோ எடுத்து ஒரு நாளக்கி வாங்கி கட்டிக்கப் போற பாரு..”பக்கத்தில் இருந்தவள் கூறியதெல்லாவற்றையும்,காற்றோடு கலக்க விட்டிருந்தாள்.

 

கையில் அலைபேசியுடன்,அறைக்குள் வந்தவளுக்கு தாயிடம் இருந்து அழைப்பு வர,யோசனையுடன் தான் ஏற்றிருந்தாள்,புருவங்கள் சுருங்கிட.

 

“‌என்னம்மா..?வேல நேரத்துல ஃபோன் பண்ணி இருக்கீங்க..என்ன விஷயம்..?”

 

“உனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு டி..வீட்டு லேன் லைன்கு தான்..உன் ஃப்ரெண்டாம்..பேரு கூட ஏதோ ஜோதின்னு சொல்லிச்சு..நா உன் நம்பர குடுத்து விட்டேன்..ஃபோன் பண்ணா அட்டன்ட் பண்ணு..தெரியாத நம்பர்னு பொசுக்குன்னு கட் பண்ணாம..”

 

“ம்ம் சரிம்மா..நா பாக்கறேன்..”படக்கென்று அழைப்பை துண்டித்தவளுக்கு,சத்தியமாய் ஜோதி என்கின்ற பெயரைக் கூட,தனக்கு தெரிந்தவர்களுக்குள் கேட்டதாய் நினைவில் இல்லை.

 

நினைவடுக்குகளை முழுவதும்,அலசிப் பார்த்தவளுக்கு தோல்வியே கிட்ட,ஏன் வீண் யோசனை என்று புறந்தள்ளி விட்டு,கோப்பொன்றில் ஆழ்ந்து போக, கதவு திறக்கப்படும் சத்தம்.

 

வந்திருந்தது,அவள் தோழி.

 

வியர்க்க விறுவிறுக்க நடந்து வந்திருப்பாள்,போலும்.முகமெங்கும் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளை புறங்கையால் ஒற்றி எடுத்துக் கொண்டு,இருக்கையில் அமர்ந்திட தேன்மொழிக்கு அவளின் பதட்டத்தில் சிரிப்பு வந்தது.

 

“அஞ்சு நிமிஷம் லேட் ஆச்சுன்னு எதுக்கு இவ்ளோ டென்ஷன்..?”என்றிட,பதிலேதும் சொல்லாமல் இதழ் குவித்து ஊதிக் கொண்டாள்,மற்றையவள்.

 

“இருந்தாலும்,என்னன்னு இல்லாம ஓவரா டென்ஷன் ஆவம்மா நீயி..”அவளை வாரி விட,அதற்கு அனல் பார்வையே அவளின் பதிலாக இருந்தது.

 

“சரி சரி கண்ணால மொறக்காதம்மா கண்ணகி..உன் வாய விட கண்ணு தான் அதிகமா பேசுது..எங்க இருந்து தான் பழகி கிட்டியோ,இப்டி கண்ணால டாக் விட..பட் இதுவும் நல்லா தான் இருக்கு..”எனும் போதே,கையில் இருந்து பேபர் வெயிட்டை அவளை நோக்கி எறிவது போன்று சைகை செய்தவளின் பாவனையில்,சட்டென்று சிரித்து விட்டாள்.

 

“க்யூட் டீ நீயி..இப்போ தான் நானே நோட் பண்றேன்னா பாரேன்..”அதற்கும் சீண்டிட,மற்றையவளின் இதழ்களிலுமே வந்தமர்ந்தது,மெல்லிய முறுவலொன்று.

 

“சரி என்ன சாப்டு தான் வந்தியா..?”

 

“ம்ம்!இப்போ தான் சாப்டு வந்தேன்..நீ இன்னும் சாப்டலயா..?”அவள் கேட்கும் முன்னமே,”டொன்டடொயிங்”என பையில் இருந்த உணவுப் பொதியை எடுத்துப் பிரிக்க,அதன் வாசத்திலேயே தோழியின் விழிகளில் மின்னல்.

 

“பிரியாணியா..?”கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் வர,”ம்ம்..அம்மா தான் செஞ்சு உனக்கும் சேத்து கொடுத்து விட்டாங்க. “உரைத்தவளோ,அதற்குள் எழுந்து சென்று கைகளையும் கழுவிக் கொண்டு வந்தமர்ந்திருந்தாள்.

 

பிரியாணியின் மணத்தை இழுத்து,சுவாசவறையெங்கும் நிரப்பியவளும் உணவில் கவனமாகிட,அடுத்து வந்த பத்து நிமிடங்களில் மொத்தமும் காலியாகி இருந்தது,இருவரின் வேகத்திலும்.

 

“உனக்கெல்லாம் நல்லா பிரியாணி செஞ்சு தர்ர புருஷன் வரனும்னு வேண்டிக் கோடி..”தோழியின் பிரியாணி மீதான ப்ரியத்தை அறிந்தவள் கூற,அவளோ கையெடுத்து கும்பிட்டாள்.

 

“நானெல்லாம் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்லாதவ..எனக்காக இப்டிலாம் வேண்டி கிட்டு சும்மா எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதப்பா!”இல்லாத சட்டைக் காலரை தூக்கி விட்டவாறு,மிதப்பாய் சொன்னாள்,அவள்.

 

“ம்க்கும்..இப்டி சொல்லி கிட்டு திரியுறவங்க தான்,அப்டியே மொத்தமா தலக்குப்புற விழுந்து ஷேமமா லவ் பண்ணுவாங்களாம்..”உதடு பிதுக்கி அவள் கூறிட,அசட்டையாய் பார்த்து விட்டு கைகளை கழுவிக் கொண்டு வந்தாள்,எந்த வித எதிர்வினையுமின்றி.

 

“நெஜமாலுமே உனக்கு யார் மேலயும் க்ரஷ் ஆச்சும் வந்தது கெடயாதா டி..?யாரயும் சைட் அடிக்க மாட்டேங்குற..நாங்க தான் சைட் அடிச்சு,பாரு பாருன்னாலும் பாக்க மாட்டேங்குற..மனுஷன்னா ஃபீலிங்க்ஸ் இருக்கனும்..ஆனா,வந்த நாள்ல இருந்து உன் கிட்ட சின்ன சேஞ்ச கூட நா பாத்தது இல்ல..அது எப்டி பாய்..?உன்னால மட்டும் இப்டி இருக்க முடியுது..?”

 

“இவ ஒருத்தி!”அலட்டலின்றி அவளை திட்டினாள்,அவள்.

 

“பட்,நீ பொய் சொல்ற மாதிரி தோணுது பாய்..இதுவர யார் மேலயாச்சும் சின்ன ஸ்பார்க் கூடவா வந்தது இல்ல..?அட்லீஸ்ட் க்ரஷ் ஆச்சும்..”அவள் கேட்டு முடிக்கும் முன்னமே,வேலை வந்திட அப்போதும் எந்த வித பதிலுமின்றி,மெதுவாய் அவள் நழுவிச் சென்றதை உணரவில்லை,பார்கவி.

 

வெளியே வந்தவளுக்கு,தோழியின் கேள்வியில் படபடவென்றிருந்தது.

 

பலமுறை இதே கேள்வியை,அவள் இயல்பாக கேட்டாலும்,பதிலாக கிடக்கும் நிஜத்தை உள்வாங்கிக் கொண்டு,அதை மறைக்கத் தெரியாமல்,திணறி திண்டாடிப் போய்,முகவதனத்தில் உணர்வுகளை பிரதிபலிக்காமல் சமாளிப்பதற்குள் அவளுக்குள் பூகம்பமே வெடித்து விடும்.

 

இதோ,இப்போதும் ஒரு கணம் நெஞ்சத்தில் மின்னலாய் வெட்டிச் சென்ற,அவன் முகத்தில் அவள் இதயத் துடிப்பு சீரின்றிப் போனது.மூச்சின் வேகம் கூடிப் போக,ஆழமாய் நெடுமூச்சு இழுத்தவளின் இதழ்களில்,தன்னையறியாமல் சிறுகோட்டுப் புன்னகை வேறு.

 

“என்னடி தனியா ஸ்மைலிங்..?”இன்னொருத்தி தோளில் தட்டி வினாவெய்திட,சட்டென கலைந்தவளோ,மறுப்பாய் தலையசைத்தாள்.

 

பணி முடிவடைய,கைப்பையை மாட்டிக் கொண்டே பேரூந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள்,பார்கவியிடம் சொல்லி விட்டு.

 

மெல்லியதாய் மழை தூறிக் கொண்டிருக்க,குடையை விரித்துப் பிடித்த போதும்,காற்றின் தயவில் திசை மாறிய சாரல் அவள் தேகத்தை தழுவிட,நினைவலைகளின் தாக்கத்தில் அவள் எண்ணங்களும்,நிலையின்றி அலைபாய்ந்தன.

 

குடையை மடித்து கையில் பிடித்துக் கொண்டே,ஒற்றைக் கையை நீட்டி மழைத் துளிகளை ஏந்தி இரசித்தாள்.அதன் ஈரத்தில்,அவளுக்குள் மெல்லிய சிலிர்ப்பிழைகள்.

 

மழையென்றாலே,அவன் முகம் தான் நிழலாடும்.கருக்கும் மேகங்கள்,பொழியும் கண்ணீர் மண்ணை முத்தமிட முன்பே,சடசடவென அவன் நினைவுகள் அவள் நெஞ்சை துளி மிச்சமின்றி நனைத்து விட,அதன் ஈரம் அவள் அகத்தை அழகாய் அள்ளிக் கொள்ளும்.

 

அவளைத் தவிர,அவ்விடம் வேறு எவரும் இல்லாதிருக்க,கைக்கடிகாரத்தில் அடிக்கடி கவனத்தை திருப்பி,பேரூந்துக்கென பாதையில் பார்வையை வைத்திருக்க,ஆமை வேகத்தில் ஊர்ந்து வந்தது,பேரூந்து.

 

“நம்ம நடந்தே போகலாம்..இது ஸ்பீடுக்கு..”உள்ளுக்குள் கருவியவாறு காத்திருக்க,அவளருகில் பேரூந்து வந்து நிற்க,மேலும் சில நிமிடங்கள் கடந்திருக்க அவளுக்கு அத்தனை சலிப்பு.

 

துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டே,ஏறியவளின் நேரம் போலும்,பெருமளவு இருக்கைகள் காலியாகி இருக்க,பின்னிருக்கை ஒன்றின் யன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

 

“எங்கம்மா போனும்..?”

 

“கோவில் சந்தி!”என நடத்துனரிடம் காசை நீட்டி விட்டு,திரும்புகையில் மீளவும் பேரூந்து நின்றது.நிறுத்தம் இல்லை என்றாலும்,அதுவும் ஆட்கள் ஏறும் இடம் தான்,என்பதால் பேரூந்து நிறுத்தப்படுவது வழமை.

 

யன்னல் கம்பியில் தலையை சாய்த்து,வெளியே பார்வையை பரவ விட்டவளின் விழிகள்,நில்லாமல் சுழன்றன,இதயம் நிறைத்திருக்கும் தேடலின் சான்றாய்.

 

முன்பெல்லாம்,அவன் இவ்விடத்தில் இருந்தே பேரூந்தில் ஏறுவது தெரிந்திருக்க,அது என்னவோ தெரியாது,இவ்விடத்துக்கு வந்தாலே அவள் விழிகளை அவளின் இசைவின்றியே,அசைந்து அவனைத் தேடும்.

 

தூரத்தே புள்ளியான உருவமாய்..

கை தொட இயலா நிழலாய்..

ஒரு க்ஷணமென்றாலும்,பொதிந்திடும் விம்பமாய்..

அவனை,இல்லையெனில் அவனின் சாயலையேனும்,அவள் மனம் யாசித்திடும்.

 

அவன் இருக்க மாட்டான் என்று,நன்றாகவே உணர்ந்திருந்தாலும்,மனம் அது ஒரு போதும்,அவளின் பேச்சுக்கு கிஞ்சிற்றும் செவி சாய்ப்பதில்லை.

 

காலையிலும்,இப்படித் தான்.அவனைப் போன்ற சாயலைக் கண்டு,அதில் பதறி பிரித்தறியும் வரை தரித்து நின்று,என என்னவெல்லாமோ ஆகி,அவளை பதட்டத்தில் தள்ளியிருந்தது.ஆயினும்,மனம் அது துணை நிற்க வேண்டுமே.

 

சுற்றிச் சுழன்ற விழிகள்,தவிப்புடன் தோல்வியை சூடிக் கொள்ள,இமை சாற்றிக் கொண்டவளுக்கு,அதிலும் சிறு நிம்மதி.

 

ஆம்.அவனைக் காணாவிடின் அவளுக்கு சற்று நிம்மதியாக இருக்கும்.

 

காணா பொழுதுகள் தரும் ஏக்கம்,காணுமிடத்தில் உண்டாகும் தவிப்பின் பெருவெள்ளத்திற்கு எவ்வளவோ மேல் என்பதில்,அவளுக்கு நிஜத்திற்குமே அத்தனை அனுபவங்கள்.

 

ஒரு நொடி விம்பம் கண்டு,அதை உயிரில் சேர்த்திட்டு,மறுமுறை தேடுகையில் நிஜம் தொலைந்திருக்க,கோர்த்துக் கொண்ட நிழலில் அவள் இளைப்பாறினாலும்,உயிரை கொல்லும் தவிப்பு ஆட் கொண்டு,அவள் நிகழைக் கொன்றிட,அதைக் காட்டிலும் இந்த ஏக்கம்,அது அவளுக்கு பரவாயில்லை.

 

இறங்குமிடம் வரும் வரை,விழிகளை திறக்கவேயில்லை.அகமும் தேகமும் பூசிக் கொண்ட,சோர்வுடன் வீடு வந்து சேர,அங்கு அவளுக்கென வாசலிலேயே காத்திருந்தார்,தந்தையானவர்.

 

தொடரும்.

2026.10.08

அடுத்த அத்தியாயம்

மௌனம் பேசும்! – 02

மௌனம் பேசும்! அத்தியாயம் - 02 இரைச்சல்களும் ஓசைகளும்,மெல்ல மெல்ல விலகிப் போய்,காற்றில் இலைகள் உரசிக் கொள்ளும் சப்தங்களை,ஆழ்ந்துணர்ந்து இலயித்திடும் அளவு,நிசப்தமான இடம். திசையெல்லாம் விரிந்து கிளை பரப்பியிருக்கும்,உயர்ந்த விருட்சங்களின் நிழல் தரும் குளிர்மைக்கு மத்தியில்,மௌனமாய் அந்த சிறிய சிவன் கோயில். ஊரின் எல்லையில் இருந்து,தொடரும் மண்பாதையின்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்