மௌனம் பேசும்! – 02
மௌனம் பேசும்!
அத்தியாயம் – 02
இரைச்சல்களும் ஓசைகளும்,மெல்ல மெல்ல விலகிப் போய்,காற்றில் இலைகள் உரசிக் கொள்ளும் சப்தங்களை,ஆழ்ந்துணர்ந்து இலயித்திடும் அளவு,நிசப்தமான இடம்.
திசையெல்லாம் விரிந்து கிளை பரப்பியிருக்கும்,உயர்ந்த விருட்சங்களின் நிழல் தரும் குளிர்மைக்கு மத்தியில்,மௌனமாய் அந்த சிறிய சிவன் கோயில்.
ஊரின் எல்லையில் இருந்து,தொடரும் மண்பாதையின் இருபுறமும்,செம்பருத்திச் செடிகள் இடம் கொண்டிருக்க,அதன் முடிவில் ஏறத்தாழ,நூறு படிக்கட்டுக்கள்.
படிக்கட்டுக்களின் முடிவின் துவக்கமாய்,கோயில் அது அமையப் பெற்றிருந்தது.
படிக்கட்டின் இருபுறமும் எழுந்திருக்கும் தடுப்புச் சுவரில்,பாதியை மறைத்தவாறு கொடிப் பந்தல்கள் படர்ந்து பற்றியிருக்க,அவற்றின் சில வண்ணப் பூக்கள்,படிக்கட்டுக்களில் ஆங்காங்கே உதிர்ந்து விழுந்து கிடந்தன.
பழமையின் சாயலை துளியும் அகல விடாமல்,பாசி படிந்து புராதனத் தடங்களுடன் கோயிலின் கருங்கற் சுவர்கள் காட்சி தர,விடை பெறும் கதிரவனின் கரங்களில் தழுவலில்,கோயில் மண்டபமும் கொஞ்சமாய் ஜொலித்தது.
கோயில் வாசலில்,இளஞ்சிவப்பு நிற பூக்களை சொறியும் பெருமரமொன்லு.அதற்கு எதிரில் இருக்கும்,ஆல மரத்தின் கிளைகளில் ஒன்றுக்கு இரண்டென,சிறு சிறு மணிகள் கட்டப்பட்டிருக்க,மெல்லிய காற்றில் அவற்றின் அசைவும்,அதன் ஓசையும் சந்தம் தப்பிடா,சங்கீதமாய் ஒலித்தன,மெல்லியதாய்.
அவற்றின் ஓசைகள்,கூட அத்தனை மென்மையைச் சுமந்திருக்க,அதுவும் தனித்ததோர் அழகியல்.
கருவறை பூட்டப்டடிருக்க,சில நிமிடங்களுக்கு முன் நிறைவுற்றிருந்த பூஜையினால் உண்டான கற்பூர மணம்,பூக்களின் வாசத்துடன் கலந்து கொஞ்சமாய் பரவி இருந்தது.நான்கு மூலைகளிலும்,ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளின் ஒன்று மட்டுமே,எரிந்து கொண்டிருக்க அதன் சுவாலையும் காற்றோடு இசைந்து அசைந்தது.
“தம்பி கோயில பூட்டப்போறோம்..”பிரகாரத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்து இருந்தவனிடம் வந்து தன்மையாய் உரைத்தார்,பூசாரி.
இருளும் கவிழத் துவங்கி இருக்க,அவன் சென்று விட்டால் அவருக்கும் கோயிலை பூட்டிக் கொண்டு கிளம்பி விட முடியும்.
அவரின் குரலில் இமை பிரித்தவனுக்கு,ஒரு வித சலிப்பாய் இருந்தது,அவ்விடத்தை விட்டுச் செல்ல.அலைபாயும் அவன் மனதின் தவிப்பு,கொஞ்சமாய் அடங்கி அமிழ்ந்திடும் இடம் இப்போதைக்கு,இது ஒன்று மட்டுமே.
அப்படி இருக்கையில்,அவ்விடம் இருந்து அகன்று செல்ல,அவனின் மனம் இடம் தருமா என்ன..?
நெடுமூச்சுடன் எழுந்து கொண்டவனோ,பெருவிரலால் கற்றை மீசையின் நுனியை இரு தடவைகள் அழுத்தமாய் நீவிக் கொடுத்து விட்டு நடக்கத் துவங்கிட,முன்னுச்சி சிகையை பின்னே தள்ளி சிகை கோதி மீண்டன,நீண்ட விரல்கள்.
வாசலுக்கு வந்தவனின் பாதங்கள்,மலர் சொறியும் மரத்தின் அருகே தேங்கின.அண்ணாந்து பார்த்தவனின் விழிகளில்,சொல்லாண்ணா உணர்வுகள் கிடக்க,இமைகளை இறுக்கிடவும்,வீசிச் சென்ற தென்றலின் தயவில் உதிர்ந்து விழுந்த சில மலர்கள்,அவன் தேகம் தழுவிட,அவனை மீறி மென் புன்னகையொன்று அவனிதழ்களில்.
சில நொடிகள்,அந்த தீண்டலில் அது கொடுத்த மென் இதத்தில்,தன்னை முழுவதுமாக மறந்து நின்றிருந்தவன்,அலைபேசியின் ஓசையில் தான் நிகழ்வுக்கு வந்ததே.
குறுஞ்செய்திக்கான நோட்டிபிகேஷன்,லாக் ஸ்க்ரீனில் பரபரவென வந்து விழ,திரையில் குவிந்திருந்த அவன் விழிகள், கொஞ்சமாய் இடுங்கின.
●●●●●●●●●
அப்போது தான்,அறைக்குள் நுழைந்து குளித்துக் கொண்டு பாவையவள்,கூடத்துக்கு வந்ததே.இரு நிமிடங்கள் கடந்து இருக்காது.அதற்குள்,தந்தையவரின் வரவு.
வாசலில் வைத்தே கூறி விட்டார்,மகளிடம்.அவருக்கு அவளுடன் பேச வேண்டி இருப்பதாய்.
“நா உன் கூட கொஞ்சம் பேசனும்..ராத்திரி போக வேண்டியது இல்ல தான..?”தந்தையின் கேள்வியில் அவளுக்குள்ளுமே,ஆயிரம் கேள்விகள் முளை விட,அவற்றை அப்படியே வெட்டி சாய்த்தவள்,குளித்து விட்டு வருவதாக மொழிந்து விட்டு,தன்னறையை நாடியிருந்தாள்.
நீர்த்திவலைகளின் குளிர்மை தேகம் தழுவிய போதிலும்,அதில் முழுவதுமாக ஒன்ற முடியாமல் போனது,மனதை நிறைத்திருந்த குழப்பத்தால்.
அவளின் தந்தை இப்படி ஏதேனும் உரைத்தவாறு,தன்னிடம் வருவதெல்லாம்,தனக்கு பிடித்தமின்றியதொன்றை பற்றிக் கொண்டே,என்பது இத்தனை வருடங்களில் அவளுக்கு அத்துப்படி.
சில பொழுதுகளில் கோபம் வருவதுண்டு.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எரிச்சலே கிளம்ப,அதை அடக்கிக் கொண்டு அவருக்கு விளக்கம் அளித்திடுவாள்.ஆயினும்,அவள் முகவதனம் அதை காட்டிக் கொடுத்து விடும்,பாரபட்சமின்றி.
இப்படி,ஏதேனும் விடயங்களை இழுத்து வருகையில் வாக்குவாதங்கள் நேர்ந்து,தந்தையும் மகளும் சில நாட்கள் முகம் பார்க்க தவிர்த்து நடமாடியதெல்லாம்,வேறு கதைகள்.
சுடச் சுட டீயை கொண்டு வந்து தாயவர்,கையில் கொடுத்திட அதை வாங்கி எடுத்தவளின் பார்வை தந்தையவரின் முகத்தில் நிலைத்திட,தொண்டையைச் செருமிக் கொண்டார்,மனிதர்.
“உனக்கு ஒரு வரன் வந்து இருக்கு..நல்ல எடம் பையன எனக்கு பிடிச்சு இருக்கு..நீ தான் யோசிக்கனும்..”வார்த்தைகள் ஓர் அர்த்தம் காட்டிய போதிலும்,அதன் மறைமுகம் யாவும் “நீ ஒத்துக் கொள்ள வேண்டும்”என்கின்ற கட்டளையே.
திருமணப் பேச்சு,என்றதுமே அவள் விழிகள் அப்பட்டமான அதிருப்தியை காண்பித்திட,மெல்லமாய் கோபமும் மனதினுள் சேரத் துவங்கியது.
“இப்போ எனக்கு கல்யாணம் வேணாம் பா!”டீயை ஒரு மிடறு உறிஞ்சியவள்,தன்மையாய் அவரிடம் உரைத்திட,மனிதருக்கு கடுப்பேறியது.
“ஏன் வேணாம்..?” அவர் தன் பிடியை விடுவதாய் இல்லை.எப்போதுமே,அவரின் உறுதி மகளவளின் அழுத்தத்தின் முன்பு,தீயிலிட்ட சருகென கருகிப் போக,இம்முறை அப்படி நடக்க விடுவதில்லை என்கின்ற சங்கல்பத்தை அவர் தீர்க்கமாய் கொண்டிருந்தார்.
“இப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்ல..”அலட்டலின்றி மறுமொழி உதிர்த்தாலும்,அவளின் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தது.
“அப்போ எப்போ பண்ணிக்கப் போற..?கூன் விழுந்ததுக்கு அப்றமாவா..?” எகிறியவரின் வார்த்தைகளில்,அவ்வளவு சீறல்.மகளானவள்,தன் வார்த்தைகளை மதியாமல் இருப்பை,ஜீரணித்துக் கொள்ளவே முடிவதில்லை,மனிதரால்.
“இப்போ வேணாம் பா..இந்த கதய விடுங்க..”வாக்கு வாதம் முற்றி வாத விவாதமாகி,எங்கே சண்டைக்கு கொண்டு விடுமோ என்கின்ற யோசனையில்,அவள் முற்றுப் புள்ளி வைக்க முயன்றிட்டாள்.தன்னிலை விளக்கம் அளித்திடும் தெம்பு தற்சமயம்,அவளுக்கு சுத்தமாய் இல்லையும் கூட.
அகம் ஒரு புறம் தள்ளாட,தேகமும் நித்திரையைக் கேட்டு கெஞ்சியது.
“ஒவ்வொரு தடவயும் இப்டி கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்..உனக்கு பின்னாடி தங்கச்சி ஒருத்தி இருக்கா..அவளுக்கு என்ன பண்றது..?அக்காவ வச்சிட்டு,தங்கச்ச கட்டிக் கொடுக்க முடியுமா..?”
“கட்டிக் கொடுங்கப்பா,எனக்காக பாக்காதீங்க!”தன்னால்,தங்கையின் திருமணம் தடைப்பட்டு விடக் கூடாது,என்கின்ற எண்ணம் அவளுக்குள் முன்பிருந்தே இருக்க,எப்போதே பெற்றவர்களிடம் அதை தெரியப்படுத்தியும் இருந்தாள்.
ராஜமாணிக்கத்துக்கு,சினம் ஏறியது.எதற்குமே,மகளவள் ஒப்புக் கொள்ள மாட்டாள் என்பதை,அவள் பேச்சை கோடிட்டுக் காட்ட,ஏதோ பேச வந்தவர் தீவிரமாய் யோசிக்கலானார்.
பேசிப் பேசி மகளை சரி கட்டி,தன் வழிக்கு கொண்டு வர முடியாதென்பதை,அவளின் பிடிவாதம்,அவருக்கு சொல்லிக் காட்ட,மனதில் உண்டாகிட்ட சிந்தனையுடன்,”சரி உன் விருப்பம்!”என்று அமைதியாகி விட்டிருக்க,பாவையவளுக்கு மட்டுமல்ல,அவளின் தாயவருக்கும் சந்தேகமே.
நடந்து செல்லும்,தந்தையின் முதுகை வெறித்தவளுக்குள்,சில வித எண்ணங்கள் எழுந்தாலும்,அதை அப்படியே புறந்தள்ளி விட்டு தாயாரைப் பார்த்திட,அவரின் முகத்தில் நிம்மதியின் சாயல்.
“எப்பவுமே,நா கல்யாணம் வேணாம்னுட்டு வம்பு பண்ணா,அப்பாவுக்கு ஒத்து ஊதி சப்போர்ட் பண்ணுவீங்க..இன்னிக்கி என்னம்மா ஆச்சு..?அதிசயமா இருக்கு..”நக்கலாய் வினவியவளுக்கு,பதிலாய் அவர் முறைப்பை அள்ளி வீசினார்.
“எனக்கே இந்த சம்பந்தம் பிடிக்கல..இப்போ உங்கப்பா அமைதியா போறத பாக்கவும் நிம்மதியா இருக்கு..”நிஜத்திற்குமே,அவருக்கு அந்த வரனைப் பிடிக்கவேயில்லை.
பையன் நல்லவன் என்ற போதிலும்,அவன் விடயத்தில் அவளுக்கு தாயாக மட்டுமே நின்று உழன்றது,அவரின் மன எண்ணங்கள்.
“அப்போ சரி தான்..”முடித்துக் கொண்டவள்,ஏனென்று எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.மறுப்புச் சொல்லும் முடிவில் உறுதியாக இருப்பவளுக்கு,அதைக் குறித்த விளக்கங்கள் எதுவும் தேவைப்படவில்லை.
அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தவளின்,எண்ணங்கள் யாவும் அவனில் நிலைத்திட,இதழில் முறுவல் உறைந்திட,இமைகளும் பூட்டிக் கொண்டது.
மறுநாள்,
“உன் விருப்பம் தெரியாம,நா அங்க பையன்ன பாத்து பேசறதுக்கு சம்மதம் சொல்லிட்டேன்..இப்போ,திடீர்னு ஒன்னும் பண்ண முடியாது..பையன் வந்தா,விருப்பம் இல்லன்னு சொல்லி அனுப்பிரு..திரும்ப,உன் சம்மதம் இல்லாம தான் நா சரின்னு சொன்னேன்னு,அவங்க வீட்ல சொல்லி,என்னால அவமானப்பட முடியாது..”
அதட்டலாய் வந்து விழுந்த வார்த்தைகளில்,தலைவலி வரும் போல் இருக்க,”சரி”என்பதுடன் அழைப்பை துண்டித்தவளின் முகத்தில் இருந்த யோசனை,பார்கவிக்கும் புரியவே செய்தது.
“என்ன சொல்றாரு உங்கப்பா..?”
“பையன்ன பாத்து பேசி,பிடிக்கலன்னு சொல்லி அனுப்பி விட்ரட்டுமாம்..முடில பங்கு..எரிச்சலா வருது..”அத்தனை எரிச்சல்,அவள் வார்த்தைகளில்.
“ஏதோ,வழம மாதிரி கன்வின்ஸ் பண்ண வராம,இவ்ளோவோட உங்கப்பா சம்மதிச்சு விட்டதுக்கே,நீ சந்தோஷப்படனும்..”
“எங்கப்பாவ பத்தி எனக்கு தெரியாதா..?பையன மீட் பண்ணா,எனக்கு ஒரு தாட் வரும்னு நெனச்சி கிட்டு தான் இந்த ஏற்பாடே..”தந்தையவரின் செயலை சரியாக நூல் பிடித்து சொன்னாள்,அவள்.
உண்மைக்குமே,ராஜ மாணிக்கத்தின் எண்ணம்,அத்திசையில் தான் பயணித்து இருந்தது.மணமகனை பார்த்த பின்,மகளின் முடிவில் மாற்றம் வரக் கூடும் என்றொரு மனம் வாதிட,அதற்கே இந்த ஏற்பாடு.
“சரி இப்போ,வந்தூ இருக்காரா என்ன..?”பார்கவிக்கு,கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம்.
“டூ தர்டிக்கு கேன்டீன்கு வர சொன்னேன்..பத்து நிமிஷத்துல வந்துருவேன்..அது வர நீ பாத்துக்கோ”என்று விட்டு,தன் வேலையில் ஆழ்ந்து போக,நேரமாகும் முன்பே அவளைக் கிளப்பி விட்டது,சாட்சாத் தோழியவளே தான்.
“நீயும் இருக்கியே..”இதழ்களுக்குள் அர்ச்சித்தவாறு சிற்றுண்டிச்சாலைக்கு வந்திட,ஓரிரு நபர்கள் மட்டுமே,அவ்விடத்தில்.
நேரத்தைப் பார்க்கையில்,இரண்டு மணி இருபத்தைந்து நிமிடம் எனக் காட்டிட,கதிரையொன்றில் அமர்ந்து கொண்டவள் அலைபேசியில் மூழ்கிட,சில நிமிடங்கள் கழித்து தன் முன்னே நிறைந்த நிழலில் நிமிர்ந்தன,அவள் விழிகள்.
நுண்ணியதோர் அதிர்வலையொன்று,அவள் விழிகளில் வந்து போக,அதை காண்பித்திடாமல் லாவகமாய் மறைத்தவளோ,யாரென்றே தெரியாதது போல் ஒரு பாவனைக் காட்டி வைத்திட,அவளின் முகத்தில் தெரிந்த நிர்மலத்தில் முன்னிருந்தவனும்,கொஞ்சமாய் நிதானித்தான்.
“நீங்க..?” என ஏதோ கேட்க வந்தவள்,ஆய மூச்சிழுத்து அவனை அமரச் சொல்ல,முகத்தை அழுந்தத் தேய்த்தவாறு,உட்கார்ந்தவனின் பார்வை சுற்றுப் புறத்தை அலசியது.
“டீ ஆர் காஃபி..?” அவன் கேட்க,எதுவும் வேண்டாமென்றாள்,சைகையால்.அவனுக்கு அதில் கோபம் வர,அதை அவன் விழிகளும் காட்டிக் கொடுத்திட,அலட்டலின்றிய அமைதி பாவையவளிடம்.
அவனைக் கண்டதும்,அவளின் முடிவு இன்னும் பல மடங்கு உறுதியாகி இருந்தது.என்ன நடந்திட்டாலும்,முன்னிருப்பவனை ஒரு போதும் கட்ட முடியாது என கதறியது,மனசாட்சி.
“நா பேச வேண்டிய விஷயத்த டைரெக்டா சொல்லிர்ரேன்..சத்தியமா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல..வீட்ல ஃபோர்ஸ் பண்ணாங்கன்னு மீட் பண்ணவே ஒத்துகிட்டேன்..”
விரல் நகங்களை ஆராய்ச்சி செய்தவாறு குரல் தாழ்த்த பேசியவளுக்கு,தன்னை இப்படி கொண்டு விட்ட தந்தையின் மீது கோபமாய் வந்தது.
“அப்போ எதுக்கு மீட் பண்ண வர சொன்னீங்க..?”அவள் பேசியதை கிரகித்துவனுக்கு கோபம் எல்லை கடந்திட,காட்டமாக கேட்டவனின் முகமோ,சிவந்து போனது.
“ஃபர்ஸ்ட் ஓகே தான்..பட்,அம்மா விவரம் சொன்னதும் பிடிக்கல..ரெண்டு பேருக்கும் கொஞ்சமும் மேட்ச் இல்ல..கல்யாணம் நடக்க கூடாதுன்னு இருந்தத விட,இப்போ இந்த கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு ஹன்ட்ரட் பர்சன்ட் ஸ்ட்ராங்கா இருக்கேன்..”
தந்தையவரின் தவறை சுட்டிக் காட்ட விருப்பமின்றி,யாவற்றையும் தன் மேல் போட்டுக் கொள்ளும் விதமாய் அவள் பேச,முன்னிருந்தவனின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.
“இடியட்ட்ட்..அப்போ என்ன டேஷுக்கு ஓகே சொன்னீங்க..?”வார்த்தைகள் தாறுமாறாய் வரப் பார்த்திட,அதைக் கட்டுப்படுத்திக் கொண்டே,அவன் பேச அவளுக்கும், அவனின் வார்த்தைகளில் கோபம் வந்தது.
ஆயினும்,தற்சமயம் அவள் மீதே தவறிருக்க,தொண்டைக்குழிக்குள் வார்த்தைகளை அடைத்துக் கொண்டாள்.
அவள் மறுத்த போது கூட,அவனுக்கு அவ்வளவு கோபம் வரவில்லை.காரணம் உரைத்ததிலேயே,அவ்வளவு கோபம்.
“சாரி!”
“சாரி கேட்டா சரியாய்டுமா..?மத்தவங்கள ஹர்ட் பண்றது ரொம்ப ஈஸில..நீங்கெல்லாம்..ச்சே..”நெற்றியை நீவியவனுக்கு,அவள் மீதிருந்த சிறு மதிப்பும் அகன்றோடியது தான்,மிச்சம்.
“நீங்க என்ன ரிஜெக்ட் பண்றது..?இன்னொருத்தர லவ் பண்ண நீங்க எங்க வீட்டுக்கு பொருத்தமானவங்க இல்ல..”அவன் சீற,அவள் முகம் தான் நொடியில் அதிர்வுகளை உள்வாங்கி,திகைத்துப் போயிருந்தது.
“இடியட்ட்ட்ட்..யூ டோன்ட் டிசர்வ்!”எரிச்சலுடன் வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு,அவன் எழுந்து செல்ல அவன் வீசிய,அதிர்வுக்கணைகளில் இருந்து வெளிவர இயலாமல் தனக்குள் மூழ்கி இருந்தாள்,அவள்.
காதல் விடயம் தெரியும் என்பது,அதிர்வென்றால் அது யாருக்கானது என்பது தெரிந்து இருக்குமா..?என்பதும் அத்தனை பதபதைப்பாய்.
தலையில் கை வைத்தவளுக்கு,பதட்டத்தில் இதயம் சந்தம் தப்பிட,ஆழமாய் மூச்சு வேறு வாங்க,முகத்தில் வியர்வைத் துளிகளும் பூத்தன.
“இல்ல அப்டிலாம் எதுவும் தெரிஞ்சு இருக்காது..”தனக்குத் தானே,ஆறுதல் கூறிய போதிலும்,மனம் அடங்க மறுத்தது.
சுற்றம் மறந்து அவளிருக்க,இத்தனை நேரம் பின்னமர்ந்து அவளை கண்காணித்திருந்தவனின்,நிழலும் மெல்ல மெல்ல நகரத் துவங்கியது.
●●●●●●●●●●
“அது தான் வேணாம்னு சொல்லியாச்சுல..அப்றம் என்ன..?” காட்டுக்கத்தல் கத்தினான்,அருள்.
விஷ்ணுவுக்கு தான்,அவனின் கோபத்தில் விழி பிதுங்கியது.மலையளவு கோபத்தை தற்போதே,அவள் மீது கொட்டித் தீர்த்திடும் அளவு ஆவேசம்,அவன் விழிகளில்.
“அம்மாவுக்கு படிச்சு படிச்சு சொன்னேன்..ஒரு வார்த்த கேட்டாங்களா..?எல்லாம் அவங்க இஷ்டம்..அந்த பொண்ணு தான் வேணும்னு,யாரு இங்க தவம் கெடந்தா..?எங்க அப்பாவும்ம்ம்ம்” பல்லைக் கடித்தவனுக்கு,பெற்றவர்களின் மீதும் அவ்வளவு கோபம்.
“பெரிய உலக அழகியா அந்தப் பொண்ணு..?”திட்டப் பார்த்தவனின்,கரம் பற்றி அழுத்தி சமாதானப்படுத்தினான்,விஷ்ணு.
“அது தான் இவ்ளோ நேரம் திட்டிட்ட இல்ல..அப்றம் எதுக்கு திரும்ப தொடங்குற..விடுடா..”என்றவனின் பார்வை,வாசலை அடிக்கடி தொட்டு மீண்டு கொண்டிருந்ததை,அருள் கவனித்திட மறந்து போயிருந்தான்.
“நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க!”எரிந்து விழுந்தான்,விஷ்ணுவிடமும்.
அவன் திட்ட வந்தால்,அதை மறுத்து விடுவதில்,என்னவோ விஷ்ணு அவள் பக்கம் நிற்பது போலொரு விம்பம்,அவன் மனதில்.
“இல்லடா!”
“அவ்ளோ கோவம் வருதுண்ணா..எப்டி அப்டி ஒரு ரீசன சொல்லலாம்..இவங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இல்லயா..?ஒருத்தங்கள பிடிக்கலன்னா,அத சரியா சொல்லாம இப்டி..ச்சை..”
“டேய் விட்றா!”விஷ்ணு கெஞ்ச,கல்யாணியிடம் இருந்து அருளுக்கு அழைப்பு வந்தது.
இன்னுமே,பாவையவள் திருமணத்தை மறுத்த செய்தி,அவர் செவி சென்று சேராதிருக்க,முதலில் அதைப் போட்டுடைத்திடும் எண்ணத்தில் தான்,அவன் அழைப்பை ஏற்றதே.
ஆனால்,அண்ணன் மறுத்தால் தாயவரை சமாளித்திட முடியாதென்று புரிந்து போக,எப்படியும் திருமணத்தை பாவையவள் நிறுத்தக் கூடும் என்கின்ற எண்ணத்தில்,அண்ணன் அவனை காப்பாற்ற விழைந்தான்,தம்பியவன்.
“அண்ணனுக்கு முழு சம்மதம்மா!பொண்ணு வீட்ல கேளுங்க!” பேசியவனை அதிர்ந்து பார்த்தான்,விஷ்ணு.
“டேய் என்னடா சொல்ற..?அவன் எங்க சம்மதம் சொன்னான்..?”
“எப்டியும் அண்ணன் விருப்பம் இல்லன்னு தான் சொல்லும்..அம்மா திட்டுவாங்க..இப்போ எதுக்கு சும்மா திட்டு வாங்கனும்..?பொண்ணு பாத்துக்கும்..அது தான் அப்டி சொன்னேன்..”தோளைக் குலுக்கிக் கொண்டான்,அசட்டையாய்.
அவள் நிறுத்திடக் கூடும் என்கின்ற யோசனையில்,அவன் பொய் சொல்ல,இங்கு பாவையவளோ தந்தை நெஞ்சு வலி என தரையில் சரிந்ததில்,விக்கித்துப் போயிருந்தாள்.
தொடரும்.
2026.10.13
forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!