arrow_back
மௌனம் பேசும்! மௌனம் பேசும்! – 03
மௌனம் பேசும்! chevron_right பகுதி 4 / 7

மௌனம் பேசும்! – 03

visibility 95
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மௌனம் பேசும்!

 

அத்தியாயம் – 03

 

“மைல்ட் அட்டாக் மா!”கூறியவரை,நம்பாமல் தான் பார்த்தாள்,அவள்.

 

அவளுக்கு நன்கு தெரியும்,இது தந்தையின் நாடகமென்று.அதற்கு துணை நிற்கும்,அவரின் நண்பரை என்ன செய்வதென்று தெரியவில்லை.

 

சுபத்ராவும்,ஒரு நிமிடம் கணவரின் செயலில் கலங்கியிருக்க,மகளவளின் ஆறுதலில் தேறி வந்த போதிலும்,முழுதாய் தெளியவில்லை,இன்னும்.

 

அவளுமே,அவருக்கு ஒன்றுமில்லை என்று மட்டுமே,அன்னையிடம் தெரிவித்திருந்தாள்.

 

“ஈவ்னிங் அப்பாவ வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்” என்றதுடன் அவர் நடையைக் கட்ட,அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்து உண்மையைக கண்டறிய முடியும் என்றாலும்,அவள் அதைச் செய்ய எண்ணவில்லை.

 

எதற்கான அடித்தளம்,இந்த நாடகம் என்று புரிய,ஏன் தான் இப்படியோ என நொந்து போனாள்.இதில் தந்தையின் திட்டத்தில்,எரிச்சலுடன் சிரிப்பும் வந்தது.

 

அவர் தன் போக்குக்கு விடுகையிலேயே,சுதாரித்திருக்க வேண்டும் என்று,தன்னையே திட்டிக் கொள்ள,சுபத்ராவின் கரம் மகளின் தோளில் படிந்தது.

 

“அப்பாவுக்கு ஒன்னும் இல்ல தான..?”என்னவோ,கலக்கம் அவருக்கு.மருத்துவமனை வாசம் என்பதே,அவரை சுழற்றிப் போட்டிருக்க,எண்ணங்கள் யாவும் கணவனையே வட்டமிட்டன.

 

அவர் முகத்தில் தெரிந்த தவிப்பில்,மகளவளுக்குமே பாவமாய்ப் போனது.”அம்மா,அப்பாக்கு ஒன்னுல்ல மா..சும்மா தான்..நம்மள ஏமாத்த தான்..”என்றதும்,சுபத்ராவின் கரம்,அவளை நோக்கி நீண்டி,அந்தரத்தில் நின்றது.

 

தாயவரின் செயலில்,அவள் விக்கித்துப் போய் பார்த்திட,அவரின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.”உங்கப்பா பொய் சொல்லுவாரு தான்..ஆனா,இப்டி உசுரு போற விஷயத்துல நாடகமாட மாட்டாரு..”கையை பின்னிழுத்தவாறு மொழிந்தவருக்கு,மகளின் வார்த்தைகளை ஏற்கவே இயலாதிருந்தது.

 

ஏற்கனவே,கணவரின் நிலையில் கலங்கிப் போயிருப்பவருக்கு,கட்டியவர் இப்படிப்பட்ட விடயங்களில் ஏமாற்றுவார்,என்கின்ற எண்ணம் சுத்தமாய் கிடையாது.அவ்வப்போது ஏதாவது செய்தாலும்,மருத்துவமனை இழுத்து வரும் அளவு,அவரின் நாடகம் இருக்காது என்று உறுதியாய் நம்பினார்,கணவரை.

 

“ம்மா!” அவள் பேச வர,வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்.

 

“இதுல எல்லாம் மனுஷன் பொய் சொல்லுவானா டி..எனக்கும் உங்கப்பா மேல சந்தேகம் வரும் தான்..ஆனா,இந்த விஷயத்துல எல்லாம் நாடகமாடுவாருன்னு எப்டி உன்னால சந்தேகப் பட முடிஞ்சுது..”குற்றக் கணைகளை தன் மீது தொடுத்தவரை,இயலாமையுடன் அவள் ஏறிட்டாள்.

 

அவரின் மனநிலையும்,முகத்தில் தெரிந்த சீற்றமும் எப்படியும்,தன் சொல்வதை நம்பப் போவதில்லை என்பதை அவளுக்கு பறைசாற்றிட,வார்த்தைகளை விழுங்கியவளுக்கு,மனதில் சொல்லொண்ணா அழுத்தம்.

 

அன்னையாவது தன்னிலையை புரிந்து கொள்வார்,என்று நினைத்ததில் சிறு விரிசல் உண்டாகிட,தாயவரின் மனநிலை அவளுக்கு தெளிவாகப் புரியத் தான்,செய்தது.

 

ஆராய்ந்தறியும் தன்மை மழுங்கிப் போய்,கணவர் மீதான நேசமே பூதாகரமாய் விரிந்து நிற்க,அதைத் தாண்டி அவர் எதையும் யோசித்திட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தவளின் இதழ்களில்,அந்நிலையிலும் சிறு புன்னகை தவழ்ந்தது.

 

அவரின் பேரன்பு,அப்படிப்பட்டதே.ஆழமான நேசமும் கூட.அவளுக்குமே காதல் உண்டு.ஆயினும்,தாயைப் போன்று,குறைநிறைகளோடு காதலித்திட முடியுமா என்பது,அவளைப் பொருத்தவரையில் சந்தேகமே.

 

தான் விரும்பிடா குணநலன்களை கொண்டிருப்பவரை,எப்படித் தான் நேசிக்க முடிகிறதோ,என அடிக்கடி யோசித்து அதனுள் ஆராய்வும் நடந்தேறும்.

 

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர,அடுத்து என்ன செய்வதென்று சரிவர யோசிக்கவே முடியாதிருந்தது.வீட்டுக்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு மனதை சமப்படுத்திக் கொண்டாள்.

 

ஆனால்,நடந்ததோ வேறு.வார்த்தைக்கு வார்த்தை,அவளைத் தான் திட்டினர்.

 

“நீ மட்டும் ஒழுங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருந்தா,அவனுக்கு இப்டி ஒரு நெலம வந்து இருக்குமா..உன்ன பத்தி யோசிச்சு யோசிச்சு தான்,அவனுக்கு இப்டி ஆகி இருக்கு..”

 

சகோதரங்கள் முதற் கொண்டு,தந்தையவரின் உடன் பிறப்புக்களும் அவளை நோக்கி விரல் நீட்ட,அதன் தாக்குதலில் அவளும் வெகுவாய் துவண்டு விட்டாள்.

 

இதில்,அவளை அதிகமாய் வதைத்தது,திருநீலகண்டத்தின் வார்த்தைகள்.தம்பி மீதிருந்த பாசத்தில்,வார்த்தைகளை கொட்டி விட்டிருந்தார்.

 

இதில்,தாயவரின் அமைதியும் அவளை குத்திக் கிழிக்க,மனதில் அத்தனை வெறுமை.”உன்னால தான் கா எல்லாம்..”தங்கையவளின் வார்த்தைகள்,முழுவதுமாய் நிலைகுழைந்தவளோ,”நா கல்யாணம் பண்ணிக்கறேன் போதுமா..?” என வெடித்திருந்தாள்,தன்னை மீறி.

 

துணைக்கு வந்திருந்த பார்கவி அவளை,சமாதானப்படுத்த அதுவெல்லாம் அவளிடத்தில்,எடுபடவேயில்லை.

 

கண்ணீரை உள்ளிழுத்தவளின் கத்தல்,அவளின் உள் மனதின் கதறலே என இரு மனங்களை வேறெதற்கும் புரியவேயில்லை.

 

அவள் மனம்,வழியின்றி மௌனம் சுமந்தது.மறு மனமோ,மொழியின்றி கனத்து நின்றது.

 

மறுநாள்,

 

“பொண்ணு வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்க..”முகம் நிறைந்த மகிழ்வுடன் தாயார் உரைத்திட,அருளின் முகமே சட்டென்று திகைப்பை காட்டியது.

 

மறுப்பு மட்டுமே பதில் என்று,அவன் உறுதியாய் நினைத்திருக்க இப்படியோர் திருப்பத்தை அவன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

 

“நெஜமாவாமா..?”அதிர்வில் இருந்து மீளாமலே கேட்டான்.

 

“ஆமாடா..எவ்ளோ சந்தோஷமான விஷயம் சொல்றேன்..நீ எதுக்கு பேயறஞ்ச மாதிரி இருக்க..?”மகனை திட்டியவர்,கணவரிடமும் தன் மகிழ்வை பகிர்ந்திட,அருளுக்கு திக்கென்றது.

 

அண்ணன் அவனுக்கு பூரண சம்மதம் என்று தான்,பொய்யுரைத்தது கண்முன்னே வந்து போக,தலை சுற்றியது.அண்ணன் அவனுக்குமே,இந்த விடயம் தெரியாது என்றிருக்க,அமிழ்ந்து போய் தடயம் மறையும் என்று எண்ணியது,மறுபடியும் இன்னும் ஆழமாய் தடம் பதித்ததில்,சத்தியமாய் அலமலந்து போனான்.

 

“தமிழ் ஒத்து கிட்டானா..? உன் கிட்ட சொன்னானா..?”

 

“அவன் எப்போங்க என் கூட பேசி இருக்கான்..?தோ இவன் கிட்ட தான் சொல்லி இருக்கான்..விஷ்ணு கூட அவனுக்கு சம்மதம்னு சொன்னதா சொன்னானே..அப்டி தானேடா..”

 

அருளிடம் வினாவைத் திருப்பிட,குழப்ப மனநிலையில் நாலாப்புறமும் தலையாட்டி வைத்திட,அதிலேயே நடராஜனுக்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து போக,என்னவோ என அத்தனை யோசனை அவருக்குள்.

 

கல்யாணி,தமக்கையிடம் வெகு சந்தோஷமாய் விடயத்தை அலைபேசி வாயிலாக,தெரிவித்து பூரிக்க,இங்கு மகனை தனியே கூட்டி வந்தார்,அவர்.

 

“உங்க அண்ணன் சம்மதம் சொன்னானாடா..?நீ முழிக்கிற பாத்தா பயமா இருக்குடா..? என்னடா பண்ணி வச்ச..சொல்லுடா..”அவனைப் பிடித்துலுக்க,சுற்றும் முற்றும் பார்த்தவனின் குரலோசை தாழ்ந்தது.

 

“அண்ணனுக்கு விஷயமே தெரியாதுப்பா..அம்மா அவன திட்டுவாங்கன்னு தான்,நா அப்டி சொன்னேன்..”மெதுவாய் கூறியவன்,பாவையவளை சந்திக்கச் சென்றதை பற்றி,மூச்சுக் கூட விடவில்லை.

 

“என்னடா பண்ணி வச்சிருக்க..?”அடிக்குரலில் அதட்டியவரோ,நெற்றியை நீவிக் கொண்டு என்ன செய்வதென்று யோசித்திட,எதுவுமே பிடிபடவில்லை,அச்சமயம்.

 

இதற்குள் கல்யாணி,உடன் பிறப்புக்கள் யாவருக்கும் மகன் சம்மதித்து விட்டதை அறிவிப்பு செய்திருக்க,நடராஜனோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

 

அருள் விஷ்ணுவிடம் அழைத்து நடந்ததை,சுருக்கமாக விவரித்திருக்க அவனுக்குமே,படபடவென்று இருந்தது.”தெரியாம உன் பேச்ச கேட்டுட்டேனே..”நொந்தவாறு அவனிடம் புலம்ப,அருளிடம் அமைதி.

 

இருள் கவிழத் துவங்கியிருக்க,சட்டைக் கையை மடித்து விட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு,நிறைந்திருந்த சொந்தங்களை கண்டு புருவங்கள் இடுங்கின.

 

“வா தமிழ்!”கல்யாணி வாசலுக்கே வர,அவன் புருவங்கள் ஒரு கணம் உயர்ந்தன.

 

“இந்தம்மா வேற..”அருளோ,தாயின் நடத்தையில் மனதுக்குள் பொருமினான்.

 

“ரொம்ப சந்தோஷம் பா!”தமிழவனின் கன்னம் வழித்திட,அவனின் சிந்தனைகள் எங்கெங்கோ,அலைந்தன.என்னவென்று தம்பியவனிடம் பார்வையால் கேட்க,அவனோ விழிகளை விலத்திக் கொண்டான்,பட்டென்று.

 

“எப்டியோ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டல..அது போதும் பா..”என்க,நொடிக்கும் குறைவான அவகாசத்துக்கு திகைப்பை காண்பித்திட அவன் வதனம்,அடுத்து கடுமை பூசிக் கொள்ள,தாடை இறுகியது.

 

விழிகள் சிவந்து அனல் வீச,அதை உணராது தன் பாட்டுக்கு பேச்சை தொடர்ந்தார்,கல்யாணி.”விஷ்ணு கிட்டவும் அருள் கிட்டவும் சொன்னியே அதுவே போதும் எனக்கு..”அவர் காரணமானவர்களை,அறியாமலே போட்டுடைத்திட,நெடுமூச்செறிந்தவனோ அனல் தெறிக்கப் பார்த்தான்,தம்பியவனை.

 

அருளுக்கோ,பையனின் பார்வையிலேயே உள்ளுக்குள் குளிர் பரவிற்று.”சாரிண்ணா!”இதழசைத்து மன்னிப்பை யாசித்தவனுக்கு,எப்படியேனும் தன் காரியத்தின் பிண்ணனியை,அண்ணன் அவளிடம் தெளிவுபடுத்தி விட வேண்டும்,என்கின்ற வேகம்.

 

கல்யாணியின் முகம் பார்த்து,மறுப்பாய் தலையசைத்திட,அவர் விழிகளில் கலவரம்.”என்ன சொல்ற நீ..?கல்யாணத்துல இஷ்டம் இல்லயா..?”காட்டமாய் வினவியவருக்கு,ஆமென்பது போல் சிரசாட்டியவனை ஆதங்கம் பொங்கப் பார்த்தார்,அவர்.

 

“என்னடா விளயாட்றியா நீ..? முன்ன சரின்னு சொல்லிட்டு இப்..இப்போ என்னடா..?மாத்தி மாத்தி பேசிட்டு..என்னடா..?” அவர் வசை மாரி பொழிந்திட,பக்கத்தில் இருந்த பூச்சாடியை நிலத்தில் தூக்கி அடித்தவன்,முறைப்பை காண்பித்து விட்டு மாடியேற,நிலைகுத்து நின்று விட்ட விழிகளுடன் அப்படியே சோபாவில் தொப்பென அமர்ந்து விட்டார்,கல்யாணி.

 

மகனின் மறுப்பை விட,உறவுகளின் முன்னிலையில் அவன் அதை வெளிக்காட்டியதில்,முகம் கன்றிப் போனது.

 

“அம்மா!” என்று அருள் தோள் தொட,வெடுக்கென தட்டி விட்டவர்,வேகவகேமாய் படிக்கட்டுக்களை கடந்து சென்று,மகனின் அறைக்கதவை தட்ட சலிப்புடன்,கதவைத் திறந்து தலையை நீட்டினான்,பையன்.

 

“உனக்கு கல்யாணத்துல சம்மதம் இல்லியா..?”அவர் சீற்றமாய் பேச,அலட்டலின்றிய இல்லையென்கின்ற பதில் கிடைத்திட,ஆத்திரத்தில் அவரது சித்தம் மழுங்கியது.

 

“எல்லார் கிட்டவும் சொல்லிட்டேன் டா..எதுக்கு இப்டி மாத்தி மாத்தி பேசற..?நீ மட்டும் சம்மதிக்கலன்னா நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”

 

அவர் மிரட்ட,வழமையாக நிகழ்பவை என்பதால்,எவ்வித எதிர்வினைகளுமின்றி இயல்பாகத் தான் நின்றான்,மகனானவன்.

 

“என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்..” என்பது போல்,அவன் கதவடைத்திட,நீர் கோடிட்ட விழிகளுடன் விடுவிடுவென்று நடந்து வந்து தன்னறைக்குள் நுழைந்திட்ட கல்யாணியை அலுப்பாய் பார்த்திருந்தனர்,கணவரும் பெற்ற பிள்ளையும்.

 

கண்ணீர்ப் போராட்டத்தை எப்படி சமாளிக்கவென்று,அவர்கள் சிந்திருக்க அரை மணி நேரம் கடந்தும் எவ்வித சத்தமும் வராது போக,கொஞ்சமாய் பயம் வந்தது.

 

என்னவோ என்கின்ற பதட்டம் கவ்வ,அறைக்குள் எட்டிப் பார்த்திட,அசையாது கட்டிலில் அமர்ந்திருந்த கல்யாணியும் அவரின் கரத்தில் இருந்த காலி மாத்திரைக் குப்பியும்,அனைவரையும் கலவரப்படுத்தியது.

 

மருத்துவமனையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்,அருள்.தாயின் செயவை ஜீரணிக்க முடியாதிருக்க,உணர்வற்று போய் அமர்ந்திருந்த பையனைப் பார்க்கவும்,இன்னும் மனம் கசந்தது.

 

யாருமே நினைத்திடவில்லை,எதைப் பற்றியும் கிஞ்சிற்றும் எண்ணாமல்,மாத்திரைகைளை விழுங்குவார் என்று.அதிலும்,மருத்துவமனை வரவே மாட்டேன் என்று அடம் பிடித்து அமர்ந்திருவரை,அழைத்து வர அவர்கள் பட்டபாடு.

 

“சரி!”என்று பையன் சம்மதம் அளித்த பின்னர் தானே,அவர் மருத்துவமனை வரவே சம்மதித்தது.இதில்,சிகிச்சை வழங்கும் முன்பு,மறுபடி ஒரு வாக்குறுதி.

 

“உங்க விருப்பத்துக்கு உங்க மகன ஆட்டாதீங்கமா..”பக்கத்தில் இருந்த மருத்துவருமே,அவரின் செயலில் சினமேற்று உரைத்திட,அவற்றை பொருட்படுத்துபவரில்லையே,கல்யாணி.

 

பையனுக்கு தலைவலிக்கும் உணர்வு.கத்தி முனையில் நிற்க வைப்பது போல்,இக்கட்டான சூழ்நிலையில் தன்னை கொண்டு நிறுத்தி,தன் காரியத்தை சாதித்திருந்த தாயவரின் மீது கோபம் வந்த போதிலும்,அதை அவரிடம் காட்டி விடும் நிலையில் அவன் இல்லை.ஏன்,அவரும் அதை தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லையும் கூட.

 

“அண்ணா!நா வேணும்னே”அருள் பேச வர,அவன் விழிகளில் தெரிந்த இறைஞ்சுதலில் மென்மையாய் புன்னகைத்தான்,பையன்.எனக்கு புரிகிறது என்பது போல்,அவன் விழிகள் செய்தி சொல்ல,அதில் தான் அருளின் மனம் கொஞ்சமேனும் சமப்பட்டது.

 

அடுத்தடுத்த கட்டத்தில் திருமண பேச்சு நகர்ந்து செல்ல,தடுக்கும் வழியைத் தேடியே,இருவரினும் பாதை நகர்ந்தது.

 

பார்கவியுமே,பாவையவளின் அவசரத்தை பலமுறை சுட்டிக் காட்டி,சாடியிருக்க அவளுக்குமே கொஞ்சம் நிதானம் காத்திருக்கலாமோ என்று எண்ணாமல் இருக்க இயலவேயில்லை.

 

“கொஞ்சம்..கொஞ்சம் அமைதியா இருந்து இருக்கலாம் டி..இப்போ பாரு நாம யார் கிட்டவெல்லாம் கெஞ்ச வேண்டி இருக்குன்னு..”என பொருமியவாறு அருளின் அலுவலகத்தின் முன்னர் வண்டியை நிறுத்திட,தான் மட்டும் உள்ளே சென்றாள்,பாவையவள்.

 

அவளின் நேரம் போலும்,அருள் அந்நேரம் அலுவலகத்தில் இருக்கவில்லை.பையனுமே,பல வழிகளில் முயன்ற போதும்,திருமணத்தை நிறுத்த எந்த வித திட்டமும் கை வசம் சிக்காமல் தான் போனது.

 

கல்யாணியின் பார்வை தன் பின் தொடர்வது ஒரு புறம் என்றால்,தாயவரின் கட்டளைப்படி நொடி அகலாமல் தன்னுடன் இருக்கும் தாய்மாமன் பூபாலனின், கண்ணில் மண்ணைத் தூவி விடுவதற்குள் அலமலந்து போனான்.

 

பூபாலனுமே,கல்யாணியின் பேச்சை கேட்டு பின்பற்றி நடப்பவரல்ல.அது என்னவோ,அவருக்கு பாவையவளை பிடித்துப் போயிருக்க,இத்திருமணம் எப்படியேனும் நடந்து விட வேண்டும் என்கின்ற வேண்டுதல்.அதுவே,அவரை தமக்கையின் பேச்சை கேட்க வைத்தது.

 

“எதுக்கு மாமா,என்னக்கும் இல்லாம அம்மா பேச்ச கேட்டுகிட்டு ஆட்றீங்க..?”அருளுமே கடிந்து கொண்டான்,அவரின் அலப்பறை தாளாமல்.

 

“எனக்கு இந்த கல்யாணம் நடக்கனும்டா மாப்ள!ஏன்னு தெரில,அப்டி தோணுது..”நிஜத்திற்குமே அவர் மனதில் இருந்தது,அவ்வெண்ணமே.

 

இதற்குள்,மணமகனுமே தாயின் கட்டாயத்தின் பேரில் தான்,திருமணத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாய் பாவையவளுக்கு செய்தி வந்து சேர,மனதின் சோர்வு கூடிப் போனது தான் மிச்சம்.

 

தனக்கும் விருப்பமில்லை.அவனுக்கும் பிடித்தமில்லை.அப்படியிருக்கையில்,ஏன் இந்த பந்தம் என்று வீட்டினரை பிடித்து உலுக்கத் தோன்றியது.

 

மகள் திருமணத்துக்கு சரியென்றாலும்,சுபத்ராவிற்கு மனம் கேட்கவில்லை.அவருக்கு வரன் பிடிக்காதிருக்க,அதை மகளிடம் சொல்ல அவள் காய்ந்து விட்டாள்,அவரிடம்.

 

“புடிக்கலன்னு சொன்னேன்..எல்லாரும் சேர்ந்து கார்னர் பண்ணாங்க..சரின்னு சம்மதம் சொன்னேன்..இப்போ,திரும்பவும் வேணாம்னு சொல்லனுமா..ஆள விடுங்க..”

 

அழுகையை அடக்கியவாறு அவரிடம் கத்தி விட்டு வந்தவளுக்கு,தலை வெடிக்காத குறை தான்.பார்கவியுமே தேற்ற முயன்று விட்டாள்.அது எதுவுமே,பலனளிக்கவில்லை.

 

இதோ,விடிந்தால் திருமணம்.

 

பிள்ளைகளின் விருப்பமின்மையை மறைத்திட,எளிமை என்ற பெயரில் கோயிலிலேயே சொந்த பந்தங்களுக்கு மட்டும் சொல்லிக் கொண்டு திருமணத்தை ஏற்பாடு செய்திருக்க,ஐந்தரை மணி முகூர்த்தத்தில் திருமணம்.

 

மூன்றரை மணி போல் கோயிலுக்கு கிளம்ப வேண்டும் என்று,திருநீலகண்டம் கட்டளை விடுத்திருக்க அனைவரும் சீக்கிரமாகவே உறங்கச் சென்றிருந்தனர்.பாவையவளுடன் தங்க பார்கவியும் வந்திருக்க,உறங்காமல் விழித்திருந்தவளை கனிவாய்ப் பார்த்தாள்,அவள்.

 

“இன்னுமே,இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு நம்பறியா டி நீ..?”

 

“தெரில..”உதடு பிதுக்கியவளுக்கு,கண்ணீர் கோடிட்டது.ஆனால்,அவளால் அவனைத் தவிர வேறு எவரின் நினைப்பைக் கூட,ஏற்க முடியாதென்பது மட்டும் உறுதியாய்த் தெரியும்.

 

“நா ஓடிப் போகட்டுமா..?”தீவிரமாய் ஆலோசனை கேட்டவளின் வாயைப் பொத்தினாள்,தோழி.”என்னடி பேசற..?”இத்தகையே கேள்வி அவளை பயமுறுத்தியது.

 

பார்கவி கெஞ்சக் கெஞ்ச அவளை கிளப்பிக் கொண்டு,வீட்டினரை வெகு பிரயத்தனப்பட்டு ஏமாற்றி விட்டு,பையனின் வீட்டுக்கு சுவரேறி குதிக்கும் திட்டத்துடன் வந்தவள்,வீடு முழுக்க நிறைந்திருந்த சொந்தங்களை கண்டு பின்னடைந்தாள்.

 

கோயிலுக்கும் வந்ததாயிற்று.

 

இருவரும் மனம் முழுவதும் நிறைந்த சஞ்சலத்துடன்,தயாராகிக் கொண்டிருக்க எப்படியோ விஷ்ணுவிடம் மன்றாடி மணமகன் அறைக்குள் யாரும் காணாமல் புகுந்து விட்டிருந்தாள்,பாவையவள்.

 

“சத்தியமா எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இல்லங்க..எங்கப்பா,ட்ராமா பண்ணதால தான்,நா இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்..நா இன்னொருத்தர விரும்பறேன்..அப்பா அன்னிக்கி உங்க ஃபோட்டோ காட்னப்போ கூட பாக்கலங்க நா..நீங்க மீட் பண்ண வந்து..அப்றம் தான்..ப்ச்..அதெல்லாம் எதுக்கு..”

 

“சத்தியமா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லங்க..ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணி இந்தக் கல்யாணத்த நிறுத்துங்க..ப்ளீஸ்ங்க..ப்ளீஸ்..நா நிம்மதியா இருக்கனும்..அவரு நெனப்போட இன்னொருத்தர் நெழல்ல என்னால சத்தியமா இருக்க முடியாதுங்க..”

 

இப்படி ஒரு நிலையில்,அவனிடம் உதவி கேட்கிறோமே என்கின்ற தயக்கம் தாக்க,சங்கடத்துடன் அவன் முகம் பாராமல் தரையில் பதிந்த பார்வையுடன் அவள் பேசி விட்டு,பாராமலே நகர்ந்து செல்ல,இங்கு பையனின் முகவதனம் தான்,உணர்வுகளை தொலைத்து இறுகிப் போயிற்று.

 

“பொண்ண அழச்சிண்டு வாங்கோ!” என ஐயர் குரல் கொடுத்திட,மெல்ல நடந்து வந்து பையனின் பக்கத்தில் அமர்ந்தாள்,அவள்.

 

“கெட்டி மேளம்..கெட்டி மேளம்..”மங்கல வாத்தியங்கள் முழங்கிட,அட்சதை தூவலுடன் தன் கையில்,இருந்த மாங்கல்யத்தை அவளின் கழுத்தில் பூட்டினான்,பையன்.

 

நெற்றி வகுட்டில் குங்குமமிடச் செல்லும் போது,நான்கு விழிகளும் மோதிக் கொள்ள,அவன் விழிகளில் வெறுமை.அவள் விழிகளிலோ,சஞ்சலம்.

 

சட்டென்று பார்வையை சுழல விட்டவன்,மெதுவாய் குங்குமம் வைத்தான்.

 

வலியோடு,அவள் பார்வை..

வழியின்றி,அவன் செய்கை..

கட்டுடையுமோ,மனங்கள் சுமக்கும் மௌனங்கள்..?!

தொடரும்.

2026.10.16

அடுத்த அத்தியாயம்

மௌனம் பேசும்! – 04

மௌனம் பேசும்! அத்தியாயம் - 04 மூன்று முடிச்சையும்,பையனே போட்டிருக்க அதில்,தாட்சாயிணி முகம் சுருங்கியது.கல்யாணி தான்,மகளை விழிகளால் தேற்றியது. அடுத்தடுத்து இருவரின் விழிகளும் உரசிக் கொள்ள மறுத்தன.அவள் தவிக்க,அவன் தவிர்க்க என,உணர்வுகளின் போராட்டத்தில் அல்லாடின,இரு மனங்களும். "பாத்துக்கவே மாட்டாங்களா..?"நினைத்த பார்கவிக்கு அத்தனை கவலை,தோழியின் வாழ்க்கையை எண்ணுகையில்.பார்வை இருவரையும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்