arrow_back
நெஞ்சமெல்லாம் காதல்…… அத்தியாயம் – 3

அத்தியாயம் – 3

visibility 97
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்
  • அத்தியாயம் – 3

இரவு முழுவதும் சக்திக்கு உறக்கமே வரவில்லை. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். கல்லூரியில் தாரணியும், நித்யாவும் அவளிடம் கூறியதையே நினைத்துக் கொண்டிருந்தாள். கவின் தன் வகுப்புத் தோழிகளுடன் கூட வழிந்து கொண்டு பேசி திரிந்ததில்லை. பெண்களுடன் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாருடனும் வம்பளக்க மாட்டான். அப்படியிருக்கும் போது இந்த தேஜஸ்வினி மேட்டர் எப்படி வந்தது. ஒருவேளை தாரணியும், நித்யாவும் நம்மிடம் விளையாடியிருப்பார்களோ என்று நினைத்தாள். 

 

தேஜஸ்வினியைப் பற்றி நினைத்து பார்த்தாள். தேஜஸ்வினி ஹோம் சயின்ஸ் படிப்பவள். அவள் வெள்ளை வெளேரென்ற மாவு போன்ற நிற மேனியை உடையவள். நன்றாக நடனம் ஆடக் கூடியவள். ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் கல்லூரியில் கலைத் திருவிழா என்ற பெயரில் நுண்கலைப் போட்டிகள் நடைபெறும். அப்போதெல்லாம் தேஜஸ்வினி இல்லாத நடனப் போட்டிகளே இருக்காது. கிராமிய நடனமாய் இருந்தாலும், வெஸ்டர்ன் டான்ஸ் ஆக இருந்தாலும் நல்ல பெர்பாமன்ஸ் கொடுப்பாள். அவள் மேடையில் ஏறி விட்டாலே மாணவர்கள் மத்தியில் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடும். விசில் சத்தத்தில் அரங்கமே அதிரும். அனைத்தும் அவளது வசீகரமானத் தோற்றத்திற்குத் தான் என்றும் நினைத்தாள். 

 

தேஜஸ்வினி பின்னாடி கவின் சுத்தறான் என்று நித்யா கூறிய வார்த்தைகள் இன்னும் சக்தியின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளின் கசப்புணர்வு தொண்டையை அடைப்பதாய் உணர்ந்தாள். படுக்கையில் இருந்து எழுந்து அடுப்படிக்குப் போய் தண்ணீர் குடித்து விட்டு வந்து படுத்தாள். அவள் குடித்த தண்ணீர் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், மனத்தில் ஏற்பட்ட கசப்புணர்வு நீங்காமல் இருந்தது. 

 

கவின் மீது தான் வைத்திருக்கும் உண்மையான அன்பை புரிந்து கொள்வான் என்று நினைத்தாள். தான் கவினைச் சுற்றி சுற்றி வருவதை தாரணி எப்படி கண்டுபிடித்தாள்? என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஆனால் தாரணி கூறியது உண்மை தான். என் மனத்தில் உள்ளதை வெளிப்படையாக கவினிடம் கூறி விடுவதுதான் சிறந்த வேலையாக இருக்கும் என்று நினைத்தாள். இப்படி பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினோம் என்று தெரியாமலேயே உறங்கிப் போனாள்.

 

அடுத்தடுத்து வந்த தினங்களில் மூவரும் கவினை கவனிக்கத் துவங்கினர். ஆனால் அவனிடம் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த மாற்றமும் இருக்கவில்லை. வழக்கம் போல் அரட்டை அடிப்பதும், நண்பர்களுடன் திரிவதுமாகவே இருந்தான். 

 

சக்தி “ஏன்டி, நித்யா, நீ கவின் இந்த தேஜஸ்வினி பின்னாடியே அலையறான்னு சொன்ன, ஆனா அவன் நார்மலா தானடி இருக்கான்” என்று கேட்டாள்.

 

நித்யா “அடியேய், நா எங்கடி அவன் அலையறான்னு சொன்னேன். அவ பின்னாடி சுத்தறான்னு தான சொன்னேன்” என்றாள். 

 

சக்தி “எல்லாம் ஒன்னு தான் டி, ஆனா கவின் கிட்ட எந்த ஒரு மாற்றத்தையும் நான் பார்க்கலயே” என்றாள்.

 

தாரணி “சரியாத்தான் சொல்ற. ஒரு வேளை நாம கவனிக்கல யோ, என்னவோ” என்றாள்.

சக்திக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. “தாரு, என்னடி சொல்ல வர” 

“சக்தி, நீ சும்மா ஏதாவது பேசி நாளை கடத்தாம உன் மனசுல என்ன இருக்கோ அதை கவின் கிட்ட சொல்லிடு, நா அவ்வளவு தான் சொல்வேன்”

 

தாரணி பட்டென்று கூறி விட்டு, தக்காளி சாதத்தையும், உருளைக்கிழங்கு மசாலா வறுவலையும் காலி செய்யத் துவங்கினாள். இப்போதெல்லாம் நித்யாவுடனும், தாரணியுடனும் நெருங்கி பழகிக் கொண்டிருந்தாள் சக்தி. அதனால் மூவரும் சேர்ந்தே மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

 

நித்யாவும், தாரணியும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருக்க சக்தியின் மனது மட்டும் தேஜஸ்வினியைச் சுற்றத் துவங்கியது. அவள் என் கவினை தனதாக்கிக் கொண்டு விடுவாளோ என்று நினைத்தாள்.

 

கிட்டதட்ட இரண்டு வாரங்களாக சக்தியின் மண்டைக்குள் கவின் என்ற வண்டு குடையத் துவங்கியிருந்தது. வேறு எதிலும் நாட்டமில்லாமல் இருந்தாள். சில நேரங்களில் நாம தான் ஓவர் திங்கிங்(overthinking) பண்ணிக்கிறோமோ என்று நினைப்பாள். சக்தியின் மனம் இந்த விஷயத்தில் உழன்று கொண்டிருந்தால், கல்லூரியில் நடந்த பொங்கல் செலிபிரேஷனில் உற்சாகமாக கலந்து கொள்ள முடியாமல் இருந்தாள். அவள் மனது எப்போதும் சிந்தனையில் இருப்பதை சக்தியின் முகம் உறுதிபடுத்தியது. அதன் பிறகு நீண்ட யோசனைக்குப் பின்பு கவினிடம் தன் காதலை வெளிப்படுத்தும் முடிவை எடுத்தாள் சக்தி. தான் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி தாரணியிடமும், நித்யாவிடமும் கூறினாள். 

 

நித்யா “அப்பாடா, இப்போவாவது உன் மனசில இருக்கிறத சொல்லனும்னு தோனிச்சே, அதுவரைக்கும் சூப்பர் டி” என்றாள். 

 

தாரணியோ “சக்தி, நா ஒரு யோசனை சொல்றேன். இன்னும் டென் டேஸ்ல லவ்வர்ஸ் டே வருதுடி. அன்னிக்கு நீ கவின் கிட்ட உன் மேட்டரை ஓபன் பண்ணு. அப்பதான்டி சூப்பரா இருக்கும்” என்றாள்.

 

நித்யா “பரவாயில்லயே தாரு, நீ கூட இப்டி விஷயத்துக்கெல்லாம் ஐடியா கொடுக்கற. ம்ம், ரொம்பவே தேறிட்ட போல” என்று கூறி விட்டு தாரணியைப் பார்த்து கண்ணடித்தாள்.

 

நித்யாவின் செய்கையை ரசித்த படியே சக்தி ஒப்புக் கொண்டாள். அவள் நினைத்து வைத்திருந்த லவ்வர்ஸ் டேவும் வந்தது. ஆனால் நடுவில் இருந்த பத்து நாளும் சக்தி பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. 

 

அன்றைய தினம் காலை முதலே பரபரப்பாக இருந்தாள். வழக்கமாக கல்லூரிக்குப் புறப்படும் நேரத்திற்கு முன்னதாகவே தயாராகினாள். சக்தி கவினுக்கு மிகவும் பிடித்தமான அடர் நீல நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்.

 கல்லூரிக்குச் செல்லும் வழியில் பூக்கார அக்காவிடம் கொஞ்சம் மல்லிகைப்பூ வாங்கி தலையில் சூடிக் கொண்டாள். பிறகு நீண்ட காம்பு இருக்கும் சிவப்பு ரோஜா ஒன்று வாங்கிக் கொண்டாள். அருகில் இருந்த மளிகை கடைக்குச் சென்று டெய்ரி மில்க் சில்க் வாங்கிக் கொண்டாள். பின்பு கல்லூரிக்கு நடக்கத் துவங்கினாள். அவளுக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. அதனால் வேகமாக நடக்காமல் மெதுவாகவே நடந்தாள். 

 

கல்லூரியை அடைந்ததும் தான் கவனித்தாள். ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் சாதாரணமான தோற்றத்தில் தான் இருந்தனர். ஆனால் சக்திக்கு இது ஒரு முக்கியமான நாளாக இருந்ததால் தன் சிறப்பு தோற்றத்தைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.

 

சக்தி வகுப்பிற்குச் செல்லாமல் கல்லூரியின் வளாகத்திலேயே காத்திருந்தாள். வகுப்புகள் துவங்கும் நேரம் நெருங்க, நெருங்க மாணவர்கள் கல்லூரியின் மெயின் கேட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். சக்தி காத்திருக்கத் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே கவின் ராயல் என்பீல்டு புல்லட்டை ஒட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

கவின் நேராக பார்க்கிங் ஏரியாவிற்குச் சென்று விட, அதை பார்த்து கொண்டிருந்த சக்திக்கு அருகில் சத்தம் கேட்டு திரும்பினாள். அங்கே நித்யாவும், தாரணியும் நின்று கொண்டிருந்தார்கள். 

“ஏன்டி நித்து, என்ன க்ளாஸ்ரூம்மெல்லாம் இப்ப என் ட்ரென்ஸ்க்கே மாத்திட்டாங்களா?”

 

“அப்டித்தான் போலயே டி. நம்ம சக்தி இங்கதான் இருக்கா, பாரு”

 

அய்யய்யோ, இந்த ரெண்டு நரிகளையும் பார்க்காமயே இந்த காரியத்தை முடிக்கணும்னு நெனைச்சோமே. மாட்டிக்கிட்டோமே என்று நினைத்தவாறே லேசாக தலையைத் திருப்பினாள். 

 

“ஏய் சும்மாயிருங்கடி, இன்னிக்கி கவின் கிட்ட பேசணும்னு ப்ளான் பண்ணோம்ல, அதுக்குத்தான் டி வெயிட் பண்ணிட்டிருக்கேன்”

“மேடம் ஒன்னும் வெயிட் பண்ற மாதிரி தெரியலயே. இங்கேயே குடியிருக்குற மாதிரில்ல இருக்குது”

 

“ஒய், விடுங்கடி, ரொம்ப கலாய்க்காதீங்க. மொதல்ல இங்கிருந்து கிளம்புங்க டி”

 

“நாங்க கிளம்புறது இருக்கட்டும். நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? அவன் தான் பார்க்கில் ஏரியாவுக்கு போயிட்டான் ல. திரும்பி இங்கியா வரப்போறான். அங்க போயேன் டி”

 

நித்யா சொல்வதை நான் கொண்ட சக்தி காம காலேஜ் பார்க்கிங் ஏரியாவிற்கு புறப்பட்டாள். தோழிகள் இருவரும் ஆல் தி பெஸ்ட் கூற அவர்களிடம் அவசரமாய் விடை பெற்றுக் கொண்டு ஓட்டமும், நடையுமாய் நடந்தாள்.

 

பார்க்கிங் ஏரியாவை அடைந்ததும் கவினைத் தேடினாள். சக்தி கவினைப் பார்ப்பதற்கும், அவன் புல்லட்டை நிறுத்தி விட்டு திரும்புவதற்கும் சரியாய் இருந்தது. 

 

வெளிர் மஞ்சள் நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். காற்றில் புரளும் தலைமுடியை விரலால் கோதியபடி நடந்து வந்து கொண்டிருந்தான். சக்தி கொஞ்சம் வேகமாக நடந்து அவன் முன்னால் சென்று நின்றாள்.

 

“ஹாய் சக்தி, குட் மார்னிங்”

சக்தியின் இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்டு விடுமோ என்ற அளவிற்கு வேகமாக துடித்தது. பதைபதைக்கும் இதயத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, ‘”குட் மார்னிங் கவின்” என்றாள்.

 

“சொல்லு, என்ன விஷயம்?”

 

பரவாயில்லையே, புரிந்து கொண்டு விட்டானே என்று நினைத்தாள். பின்பு “உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள். அவனோ “ம்ம், சொல்லு, வேகமா சொல்லு, நான் போகணும்” என்றான்.

 

சக்தி சற்று தயக்கத்துடன் “கவின், ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லனும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்” என்று ஆரம்பித்ததும் இடைமறித்தான் கவின் “வேகமா சொல்லு, எனக்கு வேலை இருக்கு” என்றான். 

 

சக்தி “கவின், எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உன் மேல நிறைய அன்பு வச்சிருக்கேன். ஐ லவ் யூ கவின்” என்று கூறியபடியே சிவப்பு ரோஜாவை அவனிடம் நீட்ட, கவினோ அவளை எரிச்சல் பார்வைப் பார்த்தான். பின்பு “என்ன? லவ்வா? ஹா ஹா, என்ன விளையாடுறீயா?” என்றான்?

 

சக்தி “இல்ல கவின், என் மனசுல இருக்குறதத்தான் உன்கிட்ட சொன்னேன்” என்றாள்.

 

கவின் நக்கலாக சிரித்தான். பின்பு “ஏய், நீ சீரியஸாவா சொல்ற? நான் உன்ன அப்படியெல்லாம் பாக்கல. ஏதோ நீயா என்கிட்ட பேசுனீயேன்னு பேசுனேன். மத்தபடி என் மனசுல ஒன்னும் இல்ல. என் மனசுல தேஜு தான் இருக்கா. இப்ப நீ இங்க நின்னு எங்கிட்ட பேசிட்டு இருக்குறத பாத்தா அவ கோபப்படுவா, நீ சீக்கிரம் கிளம்பு” என்றான்.

 

கவின் கூறிய எதையும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவள் முழிப்பதைப் பார்த்து சிரித்த கவின் “நீ எனக்கு ஜோடியா? சிரிப்பு தான் வருது. உன்ன பாத்தா பரிதாபமா இருக்கு. மொதல்ல க்ளாஸ்க்குப் போ” என்று விரட்டினான். அப்போது கவினின் கண்களையும், முகத்தையும் பார்த்தாள் சக்தி. கண்களில் ஒரு வெறுப்பும், முகத்தில் ஒரு வித அருவருப்பும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாள். இவன் நம்மை இந்த இடத்தில் தான் வைத்திருக்கிறானா என்று உணர்ந்த போது அவள் மனம் உடைந்து போனது. 

 

சக்தி அதிர்ச்சி விலகாமல் நின்று கொண்டிருக்க, இவள் பதிலுக்கு காத்திராமல் கவின் இவளை தாண்டி நடக்கத் துவங்கினான்.

 

மனம் கலங்கினாலும், கண்கள் கலங்காமல் தளர்ந்த நடையுடன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள். தளர்ந்த நடையுடனும், இறுகிய முகத்துடனும் சக்தி காரிடாரில் நடந்து வருவதைப் பார்த்த நித்யாவும், தாரணியும் அமைதியாக இருந்தனர். சக்தி வகுப்பில் வந்து அமரவும், தாரணி அருகில் அமர்ந்தபடி “என்னாச்சுடி, சொல்லிட்டியா” என்ற கேட்டதும் உடைந்தாள் சக்தி. ஆனால் நித்யா அவசரப்படாமல் “ஏய், வுமன்ஸ் ரெஸ்ட்டிங் ரூம்க்கு போயிடலாம். இங்க எல்லாரும் பாப்பாங்க” என்றாள். தாரணியும் ஒப்புக் கொள்ளவே மூவரும் வகுப்பை விட்டு வெளியே கிளம்பினர். இன்னும் தாமதித்தால் பேராசிரியர்கள் வரத் துவங்கி விடுவர் என்று நினைத்து வேகமாக வகுப்பை விட்டு வெளியேறினர்.

 

வுமன்ஸ் ரெஸ்ட்டிங் ரூமில் மூவரும் அமர சக்தியைப் பார்த்து தாரணி “இப்ப சொல்லு, என்னாச்சு” என்று கேட்டவுடன் கண் கலங்கினாள் சக்தி. நடந்ததை சுருக்கமாகக் கூறினாள். தாரணி சக்தியின் கையைப் பிடித்தபடி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். நித்யா தன் கையை சக்தியின் தோளைச் சுற்றிப் போட்டு அவளை அணைத்துக் கொண்டாள். 

 

அந்த நேரத்தில் வெளியே சலசலப்பு சத்தம் கேட்டது. தாரணி எட்டிப் பார்த்து விட்டு, “கவினும், அவன் ப்ரெண்ட்ஸீம், அப்புறம் அந்த தேஜஸ்வினியும், அவ ப்ரெண்ட்ஸீம் தான்” என்றாள்.

 சக்திக்கு தன் காதல் நிராகரிக்கப் பட்டது ஒரு புறம் வலியென்றால், கவினின் கண்களில் தெரிந்த செறுப்பும், அவன் முகத்தில் காட்டிய அருவருப்பும் அவளை சுக்கு நூறாக உடைத்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 4

அத்தியாயம் – 4 காலேஜ் காரிடாரில் கேட்ட சத்தம் கவினுடையது என்று நித்யா கூறியதைக் கேட்ட சக்தியின் இதயம் உறைந்தது. தனக்கு முன்னால் இருந்த டேபிளை அசையாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.  சற்று நேரத்திற்கு முன்பு தான் என் இதயத்தை உடைத்தான். ஆனால் அதைப்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்