arrow_back
நெஞ்சமெல்லாம் காதல்…… அத்தியாயம் – 4

அத்தியாயம் – 4

visibility 97
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் – 4

 

காலேஜ் காரிடாரில் கேட்ட சத்தம் கவினுடையது என்று நித்யா கூறியதைக் கேட்ட சக்தியின் இதயம் உறைந்தது. தனக்கு முன்னால் இருந்த டேபிளை அசையாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

சற்று நேரத்திற்கு முன்பு தான் என் இதயத்தை உடைத்தான். ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு உணர்வுமின்றி வேறு ஒரு பெண்ணுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறான் என்று நினைத்தாள். 

 

சக்தியின் மன ஓட்டத்தை அறிந்திருந்த தாரணி நிதானமாய் “விடுடி, அவன் மனசில அந்த தேஜு தானடி இருக்கறா. அவனுக்கு அவளத்தான் புடிச்சிருக்கு” என்றாள். நித்யா “நான் தான் அப்பவே சொன்னேன்ல, அவன் அந்த தேஜஸ்வினி பின்னாடி தான் சுத்துறான்னு. நீ தான் நான் சொன்னதை நம்பல. ரொம்ப நாளாவே அவங்க ரெண்டு பேருக்குள்ள ‘எல்’ மேட்டர் ஓடிட்டு இருக்குன்னு டிபார்ட்மெண்ட்டுக்கே தெரியும்” என்றாள்.

தாரணி “நித்யா, சும்மாயிருடி, நீ வேற. இங்க பாரு சக்தி, மனச போட்டு குழப்பிக்காத. விட்ரு. கொஞ்ச நாள்ல மனசு சரியாகும். இப்ப க்ளாஸீக்குப் போலாம் வாங்கடி” என்றாள்.

 

நித்யா “வெயிட் பண்ணுங்கடி, இந்த ஹவர் முடியட்டும். அடுத்த ஹவருக்குப் போய் ஜாயின் பண்ணிக்கலாம்” என்றாள்.

 

தாரணி “அல்ரெடி டைம் முடியப்போகுதுடி, இப்ப கிளம்புனாதான் சரியா இருக்கும், வாங்கடி” என்று கூறிவிட்டு இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.

 

மூவரும் வகுப்பறையை அடைவதற்குள் முதல் ஒரு மணி நேரம் முடிந்து பேராசிரியர் வகுப்பை விட்டு வெளியேறியிருந்தார். இவர்கள் மூவரும் மெதுவாய் வகுப்பறைக்குள் நுழைந்து தங்களது வழக்கமான இடங்களில் அமர்ந்து கொண்டார்கள். 

 

இவர்களது வகுப்பில் தன்னைத் தானே பேரழகியாய் நினைத்துக் கொள்ளும் மாலதி பின்பக்கம் திரும்பி “எங்கடி போயிட்டு வரீங்க?” என்றாள்.

 

தாரணி சிரித்த படியே “நித்யா காலையிலேயே எதுவும் சாப்பிடாம வந்துட்டா. அதன் கேன்டீன் போய் அவள சாப்புட வைச்சு கூட்டிட்டு வந்தோம்” என்று கூறிய படியே மாலதியை பொருட்படுத்தாமல் தன் வேலைகளைத் துவக்கினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தி ஆச்சரியமடைந்தாள்.

 

இயல்பாகவே சின்ன, சின்ன பொய்களைக் கூட சொல்லாத தாரணி, முகத்தில் எந்தவித சலனமுமின்றி மிகச் சாதாரணம சாதாரணம் பொய்கள் விக் கொண்டிருந்தாள். தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் நேரத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள பொய்யும் பேச வேண்டும் என்பதை அன்று சக்தி தெரிந்து கொண்டாள். 

 

ஒரு இயந்திரம் போல் வகுப்பில் அமர்ந்து கரும்பலகையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு நேர்மாறாக மாணவர்களின் பக்கம் உற்சாக வெள்ளம் கரை புரண்டுக் கொண்டிருந்தது. கவினின் தோழர்கள் அவனிடம் ட்ரீட் கேட்டு கொண்டிருந்தது சக்தியின் காதில் விழுந்தது. அப்படியானால் நித்யா கூறியது அனைத்தும் உண்மையே. அவனுக்கு தேவையான காரியங்களுக்கு மட்டும் நம்மை பயன்படுத்தி இருக்கிறான் என்று தெரிந்த போது ரொம்பவே மனம் உடைந்து போனாள். 

 

அன்றைய தினம் வகுப்புகள் முடிந்ததும் கவின் அரக்கபரக்க புறப்பட்டு ஓடியதை கவனித்தாள். தாரணியும், நித்யாவும் சக்தியை கேன்டீனுக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்பட வைத்து விட்டு பின்பே கிளம்பினார்கள். 

 

சக்திக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டதால் வழக்கமாக உடன் வரும் தோழிகளைப் போகும் படி சைகை காட்டி விட்டு சாவகாசமாய் கிளம்பினாள். அடுத்தடுத்து வந்த தினங்களில் மிகவும் சோர்வாய் இருந்தாள். இயந்திர கதியில் கல்லூரிக்கு வருவதும், போவதுமாய் இருந்தாள். 

 

சில தினங்களுக்குப் பிறகு மெளனமாய் கவினை கவனிக்கத் துவங்கினாள். அவன் வாரத்தில் மூன்று நாட்களாவது வெளிர்மஞ்சள் நிற சட்டை அணிந்து வந்து கொண்டிருந்தான். அப்போது தான் அவளுக்கு நினைவிற்கு வந்தது. அவன் சில மாதங்களாகவே மஞ்சள் நிறத்திற்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான். 

 

சக்தியிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்த நாட்களில் அவருக்குப் பிடித்த கலர் அடர் நீலம் என்பதை அவனே கூறியிருக்கிறான். இப்போது மஞ்சள் நிறத்திற்கு மாறியிருக்கிறான் என்றால் தேஜஸ்வினிக்காக மாறியிருப்பான் என்பதை வெகு சுலபமாகவே யூகித்தாள். அவனுடைய மொபைல் எண்ணிற்கு எப்போதாவது அழைப்பாள் சக்தி. ஆனால் அப்போது கூட அவனிடமிருந்து குறுஞ்செய்தி மட்டுமே வரும். அவன் எப்போதும் தேஜஸ்வினியிடம் உரையாடுவதிலேயே கவனமாய் இருந்திருக்கிறான் என்பதை நினைத்த போது, தான் எவ்வளவு ஒரு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று வருந்தினாள்.

 

தாரணியும், நித்யாவும் சக்தியை தனியாக இருக்க விடவே மாட்டார்கள். சக்தியை சிரிக்க வைக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள் இருவரும். தாரணியிடமும், நித்யாவிடமுமாவது கலகலப்பாக பேசிக் கொண்டிந்தவள் இப்போதெல்லாம் ரொம்பவே மெளனமாக மாறி விட்டாள்.

 

ஒரு நாள் மாலை வீடு திரும்பிய போது, வீட்டு வாசலில் பல செருப்புகள் கிடப்பதைப் பார்த்தாள். என்னவாக இருக்கும் என்று நினைத்தபடியே விட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் சக்தியின் தந்தை சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அருகில் அவருடன் வேலை பார்ப்பவர்கள் சிலர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். 

 

சக்தி வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்டதும், அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு “சரிண்ணே, அப்ப நாங்க கிளம்புறோம். உடம்ப பாத்துக்கோங்க” என்று அனைவரும் கூறிக் கொண்டிருந்தனர். பின்பு சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். 

 

சக்தி தன் தாயையும், தந்தையையும் பார்த்தாள். அவர் ரொம்பவே சோர்வாக இருந்தார். தனலெட்சுமியின் முகத்தில் கவலை அப்பட்டமாகவே தெரிந்தது. 

 

சக்தி “என்னாச்சுப்பா?” என்றாள். வேணுகோபால் மெதுவாக “ஒன்னுயில்லம்மா, நீ இப்டி வந்து உட்காரு” என்றார். 

 

தனலெட்சுமி “உங்கப்பாவுக்கு மில்லில் வேலை செய்துட்டு இருக்கும் போதே தலைசுற்றல் வந்துடுச்சாம். அதான் கூட வேலை செய்யறவங்க கொண்டு வந்து வீட்ல விட்டுட்டு போறாங்க” என்றாள்.

 

உடனே வேணுகோபால் “ஏய், சும்மாயிரு, படிக்கிற புள்ளகிட்ட அதையும், இதையும் சொல்லி கஷ்டப்படுத்தாத. அவளை ஃப்ரீயா இருக்க விடு” என்றார். 

 

சக்தி அவரிடம் ‘”ஏன்ப்பா, திடீர்ன்னு உங்களுக்கு உடம்புக்கு வந்துட்டுது?” என்றாள்.

 

வேணுகோபால் “அட, எனக்கு ஒன்னும் இல்லம்மா, எல்லாம் வயசாகிருச்சுல்ல, அதான். இதுக்கெல்லாம் பயப்படாதம்மா” என்றார். 

சக்தி அன்றைய தினம் அம்மாவுடன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டாள். தந்தை வேணுகோபாலை அருகில் இருந்த சிறிய கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர் சக்தியும், தனலெட்சுமியும்.

 

மருத்துவர் பரிசோதித்து விட்டு, உயர் இரத்த அழுத்தம் இருப்பதை உறுதி செய்தார். வேணுகோபாலையும், தனலெட்சுமியையும் கிளினிக்கிலேயே உட்கார வைத்து விட்டு, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை மெடிக்கல் ஷாப்பில் காத்திருந்து வாங்கி வந்தாள். பிறகு இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். 

 

பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமதி அக்கா வெளியே வந்து நலம் விசாரித்தாள். அவளிடம் “நல்ல வேளை மா, பொண்ணு வீட்ல இருந்துச்சு, உடனே என்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சு போய் டாக்டர்கிட்ட காட்டிட்டு, மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வந்துருச்சு. பாவம், காலேஜுக்கு போயிட்டு வந்ததோட அலைஞ்சுச்சு, அதுக்குத் தான் சிரமம்” என்றார்.

 

வேணுகோபாலின் பேச்சில் தன் மகளைப் பற்றிய பெருமிதம் தெரிந்தது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சக்தியின் மனம் குற்ற உணர்வில் தவித்தது. தன் மீது இத்தனை பாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கும் பெற்றோர்களை ஒரு நாளும் தான் கண்டு கொண்டதேயில்லை. 

 

ஆனால் இவளின் அருமை புரியாத ஒருவனுக்காக இத்தனை நாளும் முட்டாள் மாதிரி வாழ்ந்திருக்கோமேன்னு நினைத்து வருந்தினாள். 

 

தனலெட்சுமி தினமும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு தையல் வேலையும் செய்வார். ஆனால் ஒரு நாள் கூட சக்தி தன் தாய்க்கு எந்த உதவியும் செய்ததில்லை. 

 

இந்த நினைவுகளெல்லாம் சக்தியின் மனத்தை வாட்டியது. அன்று இரவு சக்திக்கு உறக்கமே வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். 

 

நிறைய சிந்தித்துக் கொண்டிருந்தாள். இனி தன் பாதையை மாற்றிக் கொள்ள முடிவு செய்தாள். முதலில் தனக்காக வாழும் பெற்றோருக்காக வாழ முடிவு செய்தாள். 

 

சக்தி தன் காதலை கவினிடம் கூறிய போது கவினின் கண்களில் தெரிந்த வெறுப்பைக் கூட அவளால் ஜீரணிக்க முடிந்தது. ஆனால் அவன் முகத்தில் தெரிந்த அருவருப்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனை அருவருப்பு கொள்ளச் செய்தது எது? என்னுடைய எளிமையான தோற்றம் தானே. 

 

நான் முதலில் வெல்ல வேண்டியது காதலை அல்ல. என்னுடைய வறுமையை. செல்வ சீமானுக்கு மகளாக பிறக்காமல், ஒரு சாதாரண மில் தொழிலாளிக்கு மகளாக பிறந்தது என்னுடைய தப்பு அல்ல. ஆனால் கடைசி வரையில் மில் தொழிலாளியின் மகளாகவே இருந்து விட நினைத்தது தான் என்னுடைய தவறு. தவறை உணர்ந்து விட்டேன். இனி என் தப்பை திருத்திக் கொள்வேன். இனி வாழ்வில் ஒரு நாளும் அந்த தப்பை திரும்ப செய்ய மாட்டேன். இப்படி பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தவள், உறுதியான சில முடிவுகளை தன் மனத்திற்குள் எடுத்தாள்.

 

 

உறங்காமல் சிந்தித்துக் கொண்டே இருந்த அவள் மனமும், உடலும் சோர்ந்து போய் நள்ளிரவு தாண்டிய பிறகே உறங்கினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5 காலையில் தன்னால் முடிந்த வரையில் சீக்கிரமே எழுந்து விட்டாள் சக்தி. அடுப்படி வேலைகளில் தனலெட்சுமிக்கு சில வேலைகளை செய்து கொடுத்தாள். வேணுகோபால் காலையில் சாப்பிட்டு முடித்ததும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை சக்தியே எடுத்துக் கொடுத்தாள். நேற்றை விடவும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்