arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 13

அத்தியாயம் 13

visibility 459
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (10 மதிப்பீடுகள்)
பகிர்

விஷ்வா எவரையும் திரும்பிப் பாராமல் நீண்ட காலடிகளோடு வெளியேறிய அந்தப் பாதையையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் ப்ரவலிகா.

சுவரோரம் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியின் தோள்கள் குலுங்கிக் கொண்டிருந்தன. தந்தை என்று தெரிந்த அந்த நொடியிலேயே நெஞ்சில் பூத்த நேசம், அண்ணனின் ஆத்திரத்தால் மீண்டும் ரத்தக் களறியாக்கப்பட்ட அதிர்ச்சியில் மதிமலரின் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.

மதுபாஷினி மதியின் கையை என்ன செய்வதென்று தெரியாமல் பற்றிக்கொண்டிருக்க, அவசரப் பிரிவின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே விரைந்து உள்ளே நுழைந்தான் ஜீவா.

அவனது முகத்தில் அத்தனை பதற்றம். தாழ்வாரத்தில் மக்கள் ஆங்காங்கே தயங்கி நின்று வேடிக்கை பார்ப்பதையும், சுவரோரம் முடங்கிக் கிடக்கும் சுப்பிரமணியையும், கண்ணீருடன் நிற்கும் ப்ரவாவையும் கண்ட அடுத்த நொடி திகைத்து நின்றான்.

“என்ன… என்னாச்சு இங்க?” ஜீவாவின் குரலில் படபடப்பு.

அவன் ப்ரவாவின் அருகே ஓடிவந்து அவளது தோளைத் தொட்டான். அவளது விழிகள் சிவந்திருந்தன.

“என்னாச்சு ப்ரவா? சின்ன மாமா எப்படி இங்க…?”

மது மெதுவாக அவனருகே நகர்ந்து, குரலைத் தாழ்த்திச் சொன்னாள். “ஜீவா சர்… விஷ்வா சர் இவரைப் பாத்துட்டாரு. பயங்கரமா கத்திட்டாரு. ப்ரவாவும் யாருன்னு அவருக்குத் தெரிஞ்சு போச்சு. ‘நீ என் தங்கச்சி, ஆனா இவரை என் வாழ்நாள்ல அப்பாவா ஏத்துக்க மாட்டேன்’னு சொல்லிட்டு போயிட்டாரு…”

அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடியில் ஜீவாவுக்கு நெஞ்சில் சுரீரென்றது. தலையில் கையை வைத்துக்கொண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவன், ‘ஹய்யோ…’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

விஷ்வாவை இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவது அவனது திட்டமே அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, ப்ரவாவை அவனருகே கொண்டுபோய், தங்கையின் அன்பால் அவனது இறுகிய மனதை மெல்லக் கரைத்து, அதன்பின்னர் சுப்பிரமணியை அவன் முன்னால் நிறுத்த வேண்டும் என்றுதான் எத்தனை யோசனைகள் வைத்திருந்தான்! ஆனால் விதி, சுப்பிரமணியை இப்படி அப்பட்டமாக இழுத்து வந்து, விஷ்வாவின் தீராத காயத்தில் ஒரே நொடியில் நெருப்பை அள்ளி வீசிவிட்டதே!

இப்போது அந்தப் பாறையை எப்படி உருட்டுவது? அவனது கோபமும் வெறுப்பும் இன்னும் எத்தனை மடங்காக இறுகிப்போயிருக்கும்?

சுற்றிலுமிருந்த நோயாளிகளும் சில ஊழியர்களும் தங்களுக்குள் மெல்லிய குரலில் கிசுகிசுக்கத் தொடங்குவதை ஜீவா கவனித்தான். இது மருத்துவமனை; விஷ்வா ஆத்திரத்தில் வெடித்துச் சிதறிய இடம் பொதுமக்களின் பார்வை படும் தாழ்வாரம். இதற்கு மேலும் இங்கே நின்றால் விஷயம் இன்னும் விபரீதமாகும்.

ஜீவா உடனடியாகச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

தரையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியின் தோள்களைப் பற்றி ஆதரவாகத் தூக்கினான். “சின்ன மாமா… எழுந்திருங்க. முதல்ல எந்திரிங்க மாமா… இங்க நிக்க வேண்டாம். வாங்க…”

சுப்பிரமணி கண்களைத் துடைக்கக் கூடத் திராணியற்று, நடுங்கும் கால்களோடு எழுந்தார். மகனின் ஆங்கார வார்த்தைகள் அவரது நெஞ்சை அத்தனை தூரம் பிளந்து போட்டிருந்தன.

“பாப்பி, மதிக்குட்டி… மது, எல்லாரும் வாங்க. இங்க நிக்காதீங்க…” ஜீவா சுப்பிரமணியைத் தன் தோளோடு தாங்கிப் பிடித்தபடி, பிரதான தாழ்வாரத்தைக் கடந்து, நான்காம் தளத்திலிருந்த தனது தனி நிர்வாக அறைக்கு அழைத்துச் சென்றான்.

தேக்கு மரக் கதவு சாத்தப்பட்டு, சென்ட்ரல் ஏசியின் சன்னமான இரைச்சல் அறையை நிரப்பியபோதுதான், வெளியே நிலவிய அந்த அனல் சற்றே அடங்கியது போலிருந்தது. ஆனால் உள்ளுக்குள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு அடங்கவே இல்லை.

சோபாவில் சுப்பிரமணியை அமர வைத்தான் ஜீவா. அவர் தலையைக் கைகளில் தாங்கியபடி அப்படியே முடங்கிப்போனார். அவரது கதர்ச் சட்டையின் விளிம்பில் கண்ணீர்த் துளிகள் விழுந்து கறைபடிந்தன.

மதிமலர் சோபாவின் மறுமுனையில் அமர்ந்திருந்தாள். அவளது முகம் வெளிறிப் போயிருந்தது. பார்வையிலின்னும் அந்த அதிர்ச்சி அகலவில்லை. ப்ரவலிகா அவளருகே அமர்ந்து, மதியின் சில்லிட்ட விரல்களைத் தன் கைகளுக்குள் பொதிந்து பிடித்திருந்தாள்.

ஜீவா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, மேஜையிலிருந்த இன்டர்காம் போனை எடுத்தான். “எம்.டி ரூமுக்கு உடனே அஞ்சு கப் காபி, சூடா என்ன இருக்கோ எடுத்துட்டு வரச் சொல்லுங்க. உடனே…”

போனை வைத்துவிட்டுத் தன் நெற்றியை விரல்களால் அழுத்தமாகத் தேய்த்துக் கொண்டான். பிறகு சுப்பிரமணியின் முன்னால் வந்து நின்றான்.

“எதுக்கு மாமா இப்படி அவசரப்பட்டீங்க? நான் உங்ககிட்ட பேசுவேன் தான? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? விஷ்வாவோட குணம் உங்களுக்குத் தெரியாதா?” ஜீவாவின் குரலில் மெல்லிய ஆதங்கமும், அடக்க முடியாத வேதனையும் கலந்திருந்தது.

அந்த நேரத்திலும் ப்ரவா அதிர்ந்து ஜீவாவை பார்த்தாள். அந்த பார்வையில், ‘இவன் பேசுவானா?’ என்ற கேள்வி இருந்தது.

சுப்பிரமணி தலைநிமிர்த்தினார். அவரது உதடுகள் நடுங்கின. “ஜீவா… எனக்கு வேற வழி தெரியலடா… கேம்ப் பத்தி சக்திவேல் சொன்னான். புள்ளைங்க ரெண்டு பேரும் இருப்பாங்கன்னு நெனச்சப்ப… என்னால வீட்ல உக்காந்திருக்க முடியல. பாப்பிகிட்ட சொன்னா பயந்து தடுத்துடுவான்னு யார்கிட்டயும் சொல்லாம கெளம்பி வந்தேன் ஜீவா… அவனைப் பாத்து ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை பேசிட்டா என் மனசு ஆறிடும்னு நெனச்சேன்…!”

சுப்பிரமணி தன் தலையிலடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்.

“அழாதீங்க மாமா…” ஜீவா சமாதானம் செய்ய முயன்றான்.

ப்ரவலிகா எழுந்து வந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டாள். “அவன் கோபத்துல பேசறான் சித்தா… அவனுக்கு நடந்த எதுவும் இன்னும் மறக்கல. அதை எப்படி அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியும்?”

அப்போது கதவு மெல்லத் தட்டப்பட்டு, கேன்டீன் ஊழியர் உள்ளே நுழைந்தார். ட்ரேயில் ஆவி பறக்கும் காபிக் குவளைகளையும், தட்டுகளில் தின்பண்டங்களையும் மேஜை மீது வைத்துவிட்டு, பவ்யமாக வெளியேறினார்.

மது எழுந்து சென்று ஒவ்வொருவருக்கும் குவளையை எடுத்துக் கொடுத்தாள்.

“சர்… முதல்ல கொஞ்சம் சூடா குடிங்க. உடம்பு ரொம்ப நடுங்குது…” சுப்பிரமணியிடம் நீட்டினாள். கைகள் நடுங்க அவர் அதை வாங்கிக் கொண்டார்.

மதிமலரின் கையில் காபியைக் கொடுத்த மது, அவளது தோளை ஆதரவாகத் தட்டினாள். “மதி… குடிடா…”

மதி குவளையைக் கையில் பிடித்தபடி, சோபாவில் அமர்ந்திருந்த சுப்பிரமணியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியை பொறுத்தவரை, அப்பா என்றொருவர் இருக்கிறாரென்பது தெரியாததல்ல. சுப்பிரமணி என்கிற பெயர் தெரியும், சொந்த ஊர் ஜமீன் ஊத்துக்குளி என்பது தெரியும். அங்கே பெரியப்பா குடும்பம், அக்கா பாப்பி எல்லாரும் இருக்கிறார்கள் என்பதும் தெரியும். ஏதோ ஒரு பெரிய பூசல், ஒரு கசப்பான விபரீதம் குடும்பத்தில் நடந்துவிட்டதால்தான் தானும் அண்ணனும் மாமா வீட்டோடு தங்கிவிட்டோம் என்பதும் புரிந்த விஷயம்தான்.

ஆனால், அதைப்பற்றி அவள் துருவித் துருவி யோசிக்கவோ, அழுது அடம் பிடித்துக் கேட்கவோ வேண்டிய தேவை அவளது வாழ்க்கையில் ஒருநாளும் வந்ததில்லை. ஒரு உறவு இல்லை என்கிற ஏக்கம் எப்போது எழும்? அந்த உறவுக்கான வெற்றிடத்தை உலகம் குத்திக் காட்டும்போதும், அன்புக்குப் பஞ்சம் வரும்போதும் மட்டும்தானே?

அப்படி ஒரு இடைவெளியை சக்திவேல் மாமாவும் கார்த்தியாயினி அத்தையும் அவளது வாழ்க்கையில் ஒரு நொடி கூட விட்டதே இல்லை!

சொந்தக் கருவில் சுமந்த ஜீவாவை விடவும் ஒருபடி மேலாகவே அவளைத் தலையில் வைத்துக் கொண்டாடியவர்கள் அவர்கள். பள்ளி ஆண்டு விழாவானாலும் சரி, கல்லூரியில் முதல் நாள் சேர்க்கையானாலும் சரி… சக்திவேல் மாமாவின் விரல் அவளது கையை விடாமல் பிடித்திருக்கும். கொஞ்சம் காய்ச்சல் என்றாலும் கார்த்தியாயினி அத்தை விடிய விடிய மடியில் போட்டு விசிறிக் கொண்டிருப்பாள். விஷ்வா அவளை கெட்டது எதுவும் தீண்டாதவாறு நெஞ்சுக் கூட்டுக்குள் வைத்துப் பூட்டி வளர்த்தான்.

இப்படி பேரன்பின் அரவணைப்பில் குறையேயின்றி வளர்ந்த பெண்ணுக்கு, அப்பா என்கிற அந்தப் பழைய அத்தியாயம் ஒரு மங்கிய நிழல் போலத்தான் உள்ளுக்குள் எங்கோ ஒரு மூலையில் உறைந்து கிடந்தது. அந்த நிழல் அவளை உறுத்தியதும் இல்லை; அவளாக அதைத் தொட்டுப் பார்த்ததும் இல்லை. வீட்டில் எப்போதாவது அந்தப் பேச்சு தப்பித்தவறி எட்டிப் பார்த்தாலும், பெரியவர்கள் அந்த பேச்சை லாவகமாக மாற்றி அவளது கவனத்தைத் திசைதிருப்பி விடுவார்கள்.

ஆனால்… இன்று, அந்த அப்பா தன் கண்முன்னே வந்து நிற்கும்போதுதான்…

அந்த நிழல் மெல்ல அசைந்து உருவம் பெற்றது போல, நெஞ்சின் அடியாழத்தில் இத்தனை காலமாய் உணராமலேயே மூடி வைக்கப்பட்டிருந்த அந்த ரகசிய வெற்றிடம் சட்டென்று கண்விழித்தது!

அவளது பார்வையில் அந்தத் தவிப்பை ஜீவா கவனித்தான். ஒரு காபிக் குவளையைக் கையில் எடுத்தபடி, மதியின் அருகே வந்து அமர்ந்தான். அவளது தலையை மென்மையாக வருடினான்.

“மதிக்குட்டி…”

மதி மெல்ல ஜீவாவின் முகத்தைப் பார்த்தாள். “ஜீவா மாமா…” அவளது குரல் அடைத்தது. அவளது விழிகள் சுப்பிரமணியை நோக்கித் திரும்பின.

“அப்… அப்பா… இவர்தானே மாமா?”

அவள் கேட்ட விதம், ‘இவர்தான் அப்பாவா?’ என்கிற அதிர்ச்சி அல்ல; ‘இத்தனை காலமும் நான் தூரத்துச் சித்திரமாக மட்டுமே கேள்விப்பட்ட என் அப்பா… இவர்தானே?’ என்கிற அந்த இரத்தப் பிணைப்பு!

ஜீவா மதியின் கண்களை நேராகப் பார்த்து ஆமோதிப்பாகத் தலையசைத்தான். “ஆமா மதி… உங்க அப்பா. சுப்பிரமணி மாமா.”

மதியின் இமைகள் லேசாக அதிர்ந்தன. “ஆனா… அண்ணன் ஏன் மாமா இவரைப் பாத்து இவ்வளவு தூரம் கோபப்படறான்? வீட்ல நாம இதைப்பத்திப் பேச மாட்டோம் தான்… ஆனா அண்ணன் மனசுல இவ்வளவு பெரிய கோபம் இருக்கும்னு நான் நினைக்கலையே மாமா… அப்பா நம்மள அன்னைக்கே விட்டுட்டுப் போயிட்டாருன்னு அண்ணன் சொல்றாரே… உண்மையாவா மாமா?”

அவளது குரலில் ஆத்திரமில்லை; குழந்தை தனக்கான விடையைத் தேடும் மெல்லிய ஆதங்கம் மட்டுமே இழைந்தோடியது.

சுப்பிரமணியால் அந்த வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை. குவளையை டீபாயில் வைத்துவிட்டு, சோபாவிலிருந்து மெல்ல இறங்கி மதியின் காலடியில் தரையில் அமர்ந்தார்.

“மயிலம்மா… என் தங்கம்… நான் உங்களை வேணாம்னு நினைப்பேனா கண்ணு…?” சுப்பிரமணி அவளது கைகளைத் தன் இரு கரங்களுக்குள் எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். “ஆனா நான் பண்ணினது தப்புதான்டா சாமீ… அன்னைக்கு உங்க அம்மா பண்ணிட்டுப் போன காரியம்… ஊர் சனம் என்னைய காறித் துப்புனது… அது என் புத்தியை மொத்தமா அழிச்சிருச்சுடா. உங்க அம்மாவோட முகமே என் கண்ணு முன்னாடி வந்து நின்னு என்னை பைத்தியக்காரனா ஆக்கிருச்சுடா… அந்த ஆத்திரத்துலதான், நீங்களும் அவளோட ரத்தம்தானேன்னு அந்த நொடியில யோசிச்சு… என் புள்ளைங்களையே தள்ளி வச்சுட்டேன்டா…”

அவரது கண்ணீர் அவளது கைகளை நனைத்துக் கதறியது.

“ஆனா அந்த வெறி அடங்கினதுக்கப்புறம் தான் மயிலா … நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்னு புரிஞ்சுது. என் குட்டிப் பொண்ணை… என் பையனை விட்டுட்டேனே நான் துடிச்ச துடிப்பு… இந்த உலகத்துல யாருக்குமே அந்த நரகம் வரக் கூடாது சாமீ! என் மகனையும் மகளையும் நான் இத்தனை வருஷமா பார்க்கக் கூட முடியாம தவிச்சுட்டு இருக்கேன் …”

மதிமலர் அந்தக் கசங்கிய சொற்களை உள்வாங்கினாள்.

சுப்பிரமணி தனது சட்டைக் பையிலிருந்த, ஓரங்கள் நைந்துபோயிருந்த ஒரு புகைப்படத்தை நடுக்கத்தோடு எடுத்து மதியிடம் நீட்டினார்.

அதில், ஒன்றரை வயது மதிமலர் சுப்பிரமணியின் தோளில் அமர்ந்து அவரது மீசையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்க, அருகில் பத்து வயது விஷ்வா தன் தங்கையின் காலைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தான். கூடவே மறுபுறம் பாப்பி, ‘ஈஈ’ யென்று சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இதைத்தான்டா… இத்தனை வருஷமா என் உசுரா நெஞ்சுல வச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்…” சுப்பிரமணி விம்மினார். “சக்தியும் கார்த்திம்மாவும் உன்னை ராணி மாதிரி தாங்குறாங்கன்னு தெரியும் சாமீ… இருந்தாலும், இந்த பாவி அப்பன் இல்லாம நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களேங்கற அந்த உறுத்தல்… என்னை ஒவ்வொரு நாளும் கொன்னுட்டே இருக்கு கண்ணு…”

மதிமலர் அந்தக் கசங்கிய புகைப்படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

அந்தப் படத்தில் இருக்கும் குழந்தை தான்தான்! தன் அப்பாவின் தோளில், அவரது மீசையைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சு தான்தான்!

இத்தனை காலமும் மாமாவின் மடியிலும், அத்தையின் அணைப்பிலும், அண்ணனின் பாதுகாப்பிலும் எந்தக் குறையுமின்றி வாழ்ந்திருந்தாலும்… அந்த வாழ்க்கை முழுமைக்கும் அடியில் ஒரு மெல்லிய இடைவெளி ஒளிந்திருந்ததை அவள் அப்போதுதான் உணர்ந்தாள். தாகமே எடுக்காமல் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு, திடீரென அமிர்தம் நாவில் பட்டதும் உண்டாகும் அந்தப் பரவசம் போல… இத்தனை வருடங்களாக அறியாமலேயே நெஞ்சில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ‘அப்பா’ என்கிற அறை, ஒரே நொடியில் கதவுகள் திறந்து வெளிச்சத்தால் நிரம்பியது!

அவளால் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக சோபாவிலிருந்து கீழே இறங்கி, தரையில் அமர்ந்திருந்த தந்தையின் தோள்களைத் தன் விரல்களால் பற்றினாள்.

“அப்பா…”

அந்த ஒற்றையழைப்பு சுப்பிரமணியின் உடலெங்கும் பெருமழையெனப் பொழிந்தது.

அவள் அவரது மார்பில் முகம் புதைத்து அழுதாள். சுப்பிரமணி அவளைத் தன் இரு கரங்களாலும் வாரி அணைத்துக்கொண்டு, உலகத்தின் அத்தனை செல்வங்களையும் மீட்டெடுத்தவரைப் போல அவளது தலையை, முதுகைத் தடவிக் கொடுத்துக் கதறி அழுதார்.

பிரிவின் சுவடுகள், அண்ணன் விஷ்வாவின் தீராத வன்மம் எல்லாவற்றையும் தாண்டி, தந்தைக்கும் மகளுக்குமான அந்த ஆழமான நேசம் அங்கே மௌனமாய் மலர்ந்து நின்றது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மதுபாஷினி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சுப்பிரமணியின் தோளிலிருந்து மெல்ல விலகிய மதிமலர், மெதுவாக எழுந்து தங்களையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரவாவினருகே வந்தாள்.

“அப்போ… நீங்க…” மதியின் குரல் உடைந்து கசிந்தது. “பெரியப்பா பொண்ணு… என் பாப்பி அக்கா… நீங்கதானா?”

பெரியப்பா மகள் என்று ஒரு அக்கா இருக்கிறாள் என்பது மதிக்குத் தெரியும். ஆனால், அவளது முகமோ, குரலோ எதுவும் மதியின் நினைவிலில்லை.

“ம்ம்ம்…” ப்ரவா விம்மினாள். “உன் பாப்பி அக்காதான்…”

மதியின் கண்கள் கலங்கின.

“என்னை முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?”

“எப்படித் தெரியாம போகும் மதிக்குட்டி?” ப்ரவா அவளது கன்னங்களைத் தன் இரு கைகளாலும் ஏந்தி, கண்ணீரைத் துடைத்துவிட்டாள். “எவ்வளவு அழகா வளர்ந்து நிக்கிற நீ… உன்னை பார்த்தப்பவே ஓடிவந்து கட்டிக்கணும் போல இருந்துச்சு… ஆனா அண்ணனோட கோபம் தெரிஞ்சு… எதையும் அவசரப்பட்டு கெடுத்துடக் கூடாதுன்னுதான் மனசை கல்லாக்கிட்டு ஒதுங்கி நின்னேன்…”

மதி ப்ரவாவின் தோளில் சாய்ந்து அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு உடன்பிறந்த சகோதரி என்று யாருமில்லை. ஜீவா மாமாவும் விஷ்வா அண்ணனும் அவளைக் கண் கலங்காமல் பார்த்துக்கொண்டாலும், ஒரு பெண்ணுக்குத் தன் சொந்த ரத்தமான தமக்கை என்கிற உறவு தரும் அந்த அலாதியான கதகதப்பும் பலமும் தனித்துவமானது. இத்தனை காலமும் அந்தத் தமக்கையின் அன்பை அறியாமலேயே வளர்ந்த மதிக்கு, ப்ரவாவின் இந்த அணைப்பு தாயின் பரிவைப்போல நெஞ்சில் இறங்கிப் பரவியது.

“பாப்பி அக்கா…” மதி விம்மினாள்.

“அன்னைக்கு நம்ம குடும்பம் பிரிஞ்சப்ப… அண்ணன் உன்னையும் கூட்டிட்டுப் போயிட்டான். அப்பாயியும் சித்தப்பாவும் ஊத்துக்குளில நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருந்தாங்க. அந்த வீட்டுல சிரிப்பே இல்லாமப் போச்சு மதி. உங்க ரெண்டு பேரையும் திரும்பவும் நம்ம வீட்டுக்கு எப்படியாவது கூட்டிட்டு போகனும்ங்கறது என்னோட பல வருஷ கனவு… ஆனா இங்க யார் யார் எப்படின்னு தெரியல. அதான் நானும் என்னை காட்டிக்கல…”

அவளது பேச்சைக் கேட்ட சுப்பிரமணிக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. “பாப்பிமா…” என்று அவர் தழுதழுத்தார். “உன்ர அப்பனும் நீயும் மட்டும் இல்லன்னா… இந்த பாவி இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் தங்கம். என்னை தாங்கி தலைபுடிச்சது நீதான்டா கண்ணு…”

ப்ரவா அவரிடம் வந்து அவரது கரங்களைப் பற்றினாள். “சித்தா… பழசையெல்லாம் பேசாதீங்க. நீங்க பண்ணினது தப்புதான், இல்லைன்னு சொல்லல. ஆனா அதுக்காக இத்தனை வருஷமா நீங்க பட்ட வேதனை போதும் சித்தா. உங்க கண்ணு முன்னாடி விஷ்வா அண்ணனை கொண்டு வந்து நிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. அது நடக்கும் சித்தா… கண்டிப்பா நடக்கும்.”

அவள் சொன்ன அந்த வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

ஜீவா கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உதட்டோரம் மெல்லிய திருப்தியான புன்னகை அரும்பியது.

அவன் மெதுவாக அவர்கள் அருகே வந்தான்.

“கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே… அது இதுதான் போல!” ஜீவாவின் குரல் அந்த அறையின் இறுக்கத்தை மெல்ல உடைத்தது.

ஜீவா மதியைப் பார்த்து சிரித்தான். “மதிக்குட்டிக்கு அப்பா கிடைச்சாச்சு.”

மதி சிரித்தாலும், ஜீவாவின் கையைப் பற்றிக்கொண்டாள். “ஜீவா மாமா… அப்போ அண்ணன்? அவர் அப்பாவை ஏத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரே மாமா…” அவளது குரலில் மீண்டும் கவலை எட்டிப்பார்த்தது.

ஜீவாவின் பார்வை தீவிரமடைந்தது. அவன் சோபாவில் சாய்ந்து நின்றான்.

“மதி… விஷ்வா உன்னை மாதிரி இல்லடா. உனக்கு அப்ப ரெண்டு வயசு. உலகமே புரியாத வயசு. ஆனா விஷ்வாவுக்கு பதினொரு வயசு! அந்த வயசுல ஒரு பையன் தன் தாயோட துரோகத்தை நேரடியா பாக்குறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அதுவும் அவன் தன் கண்ணால பார்த்த அந்தக் காட்சியை, பாப்பி பாத்துடக் கூடாதுன்னு கதவை அடைச்சுட்டு, இவளை கட்டிட்டு நின்னு அழுதுட்டு இருந்தானே… அது கொடுமை. அந்த விநாடில அவனோட குழந்தைப்பருவம் மொத்தமா செத்துப் போச்சு மதி!”

ஜீவாவின் வார்த்தைகள் ப்ரவாவின் நெஞ்சில் முள்ளாகத் தைத்தன. அவள் தலைகுனிந்து விம்மினாள்.

ஜீவா தொடர்ந்தான். “அன்னைக்கு அவனுக்குள்ள விழுந்த அந்தப் பெரும் காயம்… அது சாதாரணமானது இல்ல. அப்பா மேல அவனுக்கு இருக்கிற கோபம் வெறும் கோபம் இல்ல… ஏமாற்றம்! ‘என் அப்பன் எனக்காக நின்னிருக்கலாம்ல? ஏன் எங்களை விட்டாரு?’ங்கிற அந்த ஏமாற்றம்தான் இன்னைக்கு வரைக்கும் அவனுக்குள்ள விஷமா உறஞ்சு கிடக்கு. அந்த விஷத்தை ஒரே நாள்ல எடுத்துட முடியாது.”

“அப்போ என்னதான் மாமா பண்றது?” மதி தவிப்போடு கேட்டாள்.

ஜீவா ப்ரவலிகாவைப் பார்த்தான். அவனது கண்களில் திட்டமும், உறுதியும் மின்னின.

“விஷ்வா கிட்ட இப்போதைக்கு மாமாவை பத்தி நாம யாரும் பேசக் கூடாது. அவனைப் பொறுத்தவரைக்கும், இன்னைக்கு அவன் பாப்பியைப் பார்த்திருக்கான். அதுவே அவனுக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தனை வருஷமா அவன் தனக்குள்ள கட்டி வச்சிருந்த இரும்புக்கோட்டைல முதல் விரிசல் விழுந்துடுச்சு. இனி அந்த விரிசலை மெல்ல மெல்ல பெரிசாக்க வேண்டியது நம்ம வேலை!”

ப்ரவா ஜீவாவின் கண்களை ஏறிட்டாள். அவனது யோசனையில் இருந்த நிதானமும் தெளிவும் அவளுக்குப் புரிந்தது.

“ஜீவா மாமா சொல்றதுதான் சரி சித்தா…” ப்ரவா சுப்பிரமணியைப் பார்த்துச் சொன்னாள். “இப்போதைக்கு நீங்க ஊருக்குக் கிளம்புங்க சித்தா. நீங்க இங்க இருக்கிறது தெரிஞ்சா அவன் இன்னும் கோபப்படுவான். நான் பாத்துக்குறேன். மதியும் இங்கதான் இருப்பா… ஜீவா மாமா இருக்காங்க. நாங்க அண்ணனை மாத்துவோம் சித்தா.”

சுப்பிரமணி கண்களைத் துடைத்துக் கொண்டார். மகனின் நிராகரிப்பு நெஞ்சை அறுத்தாலும், மகள்களின் அணைப்பும், உறுதியும் தளர்ந்த அவருக்கு புதிய பலத்தைக் கொடுத்திருந்தன.

“சரி கண்ணு…” சுப்பிரமணி எழுந்து நின்றார். அவர் மதியின் தலையை வாஞ்சையோடு தொட்டுத் தடவினார். “மயிலம்மா… அப்பன் போயிட்டு வரேண்டா சாமீ…”

மதியின் கண்கள் கலங்கின. “பத்திரமா போயிட்டு வாங்கப்பா… நாங்க பார்த்துக்கறோம்…” என்றாள்.

சுப்பிரமணி தன் மகளை ஒருமுறை நெஞ்சாரப் பார்த்துவிட்டு, ஜீவாவின் தோளைத் தட்டினார். “பார்த்துக்க ஜீவா…”

“கவலைப்படாதீங்க மாமா…” ஜீவா சொன்னான்.

அவர் சென்றதும், அறைக்குள் அமைதி நிலவியது.

சோபாவில் வந்து அமர்ந்த மதி, ப்ரவாவின் தோளில் உரிமையோடு தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

அருகில் நின்ற மதுபாஷினி, மெதுவாக ஜீவாவின் அருகே வந்து குரலைத் தாழ்த்திக் கிசுகிசுத்தாள்.

“ஜீவா சர்… இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாச்சு ஓகே… ஆனா அந்த அசால்ட் ஆறுமுகம்… சாரி, உங்க மச்சான் விஷ்வா சர்… இப்போ ஹாஸ்பிடல்ல எந்த மூலையில நின்னுகிட்டு யாரைக் கடிச்சுட்டு இருக்காரோ தெரியலையே சர்?”

ஜீவா அவளைப் பார்த்து உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தான்.

“அவன் வேற எங்க போவான்? அதான் கேம்ப் போயிட்டு இருக்குல்ல. சரி என்ன எல்லாம் இங்கயே செட்டில் ஆகிடலாம்ன்னு முடிவு பண்ணீட்டீங்களா? அங்க அவ்வளவு வேலை இருக்கு… கமான்… கெட் அப்! ஓடுங்க… க்விக்…”

மூவரையும் விரட்டினாலும் அவனது உதடுகளில் புன்னகை.

***

இரண்டு நாட்களாக ஆடிட்டோரியத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த மருத்துவ முகாமின் அத்தனை பரபரப்புகளும் இரவு எட்டு மணியளவில் ஒருவழியாக ஓய்வுக்கு வந்தன. கடைசிப் பயனாளிகளும் தங்களுக்கான பரிந்துரைச் சீட்டுகளோடு விடைபெற, முகாம் அரங்கத்தின் பிரதான விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன.

மருத்துவப் பணியின் தீவிரமும், இடைவிடாத ஆலோசனைகளும் தந்த அயர்ச்சி அனைவரது முகங்களிலும் படிந்திருக்க, ஐவரும் தரைத்தளத்திலிருந்த பிரத்யேக மருத்துவர் உணவகத்தை நோக்கி நடந்தனர்.

பொதுக் கேன்டீனைப் போன்ற இரைச்சலின்றி, மிதமான விளக்கொளியும், மெல்லிய ஏசி காற்றும் சூழ்ந்திருந்த அந்த அமைதியான சூழல் இதமாக இருந்தது. மூலையிலிருந்த வட்ட மேஜையைச் சுற்றி அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.

ஆவி பறக்கும் இட்லி, நெய் ரோஸ்ட், சட்னி வகைகள் மேஜையில் வைக்கப்பட்டன.

விஷ்வா தனது வழக்கமான அமைதியோடு அமர்ந்திருந்தான். தட்டிலிருந்த உணவை மிக நிதானமாக, எந்த அவசரமுமின்றி அவன் அணுகிய விதம், அவனது மனதிற்குள் ஏதோ தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை உணர்த்தியது. முந்தைய நாள் அவனது நெஞ்சில் மூண்ட அந்தப் புயல் இன்னும் முழுமையாக வடியவில்லை; ஆனால் அதை அநாவசியமாக வெளியில் வெளிப்படுத்தாமல், அவன் நிதானத்தைக் கைக்கொண்டிருந்தான்.

ஜீவா ஒரு மிடறு வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டுத் தனது வாட்சைக் கழற்றி மேஜை மீது வைத்தான். அவனது தோரணையில் எப்போதும் தென்படும் மிடுக்கு குறையவில்லை. விஷ்வாவின் இந்த அதீத மௌனம் சுற்றியிருப்பவர்களையும் சேர்த்து அழுத்தக்கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான். அந்த அமைதியை உடைத்து, விஷ்வாவையும் உரையாடலுக்குள் கொண்டுவர அவன் திட்டமிட்டான்.

தனது போர்க்கை எடுத்துத் தட்டிலிருந்த உணவை ஒழுங்குபடுத்தியபடியே, இயல்பான முகபாவனையுடன் பேச்சைத் தொடங்கினான் ஜீவா.

“மதி… நேத்து நைட் நாம வீட்டுக்குப் போனதும் அப்பா, அம்மா என்ன சொன்னாங்கன்னு ப்ரவாகிட்ட ஷேர் பண்ணியா?”

எதிரே அமர்ந்திருந்த ப்ரவலிகாவை ஒரு மெல்லிய புன்னகையோடு ஏறிட்டாள் மதிமலர்.

“இன்னும் டீட்டெய்லா சொல்லல ஜீவா மாமா…” என்றவள், தன் பார்வையை ப்ரவாவின் பக்கம் திருப்பி,

“கார்த்தி அத்தைக்கு அப்பாவோட நிலைமையைக் கேட்டதும் ரொம்பக் கஷ்டமாயிடுச்சுக்கா. ‘அவர் அன்னைக்கு ஒதுங்கிப் போனது தப்புதான், இல்லைன்னு சொல்லல. ஆனா புள்ளைங்களை நினைச்சு அவர் இத்தனை வருஷமா உருகிப் போனதை நெனச்சா பாவமா இருக்கு’ன்னு கலங்கிட்டாங்க. அப்புறம்… பெரிய மாமாதான் ரொம்ப நேரம் அமைதியா யோசிச்சுட்டு இருந்தாரு…”

அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக்கொண்டிருந்த ப்ரவா, தனது தண்ணீர்க் குவளையை மேஜை மீது வைத்துவிட்டு, மெல்லிய குரலில் வினவினாள்.

“பெரிய மாமா என்ன சொன்னாங்க ஜீவா?”

ஜீவா நாற்காலியில் சற்றே நிமிர்ந்து அமர்ந்து, உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையோடு,

“அப்பாவோட கன்சர்ன் எப்போதுமே ரொம்ப பிராக்டிகல் ப்ரவா. அதோட அவருக்கும் மாமாவுக்கும் எப்பவுமே பேச்சுவார்த்தை இருந்துட்டு தானே இருக்கு. ‘விஷ்வாவை யாரும் இப்போதைக்கு கட்டாயப்படுத்த வேண்டாம். அவனுக்கான காலம் வரும்போது அவனே எல்லாத்தையும் புரிஞ்சுப்பான்’னு தெளிவா சொல்லிட்டாரு.”

ஜீவா அதைச் சொல்லும்போது விஷ்வாவின் புறம் பார்வையைத் திருப்பவில்லை; ஆனால் அந்த வார்த்தைகளின் ஒவ்வொரு அழுத்தமும் விஷ்வாவைச் சென்றடைந்தது என்பதை அவனது கை அசைவுகளின் நிதானம் உணர்த்தியது.

பேச்சின் திசையை லேசான நகைச்சுவைக்கு மாற்ற எண்ணி, உதட்டோரம் குறும்பு மின்ன மதியை வம்பிழுக்கத் தயாரானான் ஜீவா.

“அதைவிட அப்பா இன்னொரு விஷயம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா சொன்னார் தெரியுமா மதிக்குட்டி…”

அவன் குரலில் தெரிந்த அந்த நமுட்டுத் தோரணையைப் பார்த்ததுமே, இவன் எதையோ கொளுத்திப் போடப் போகிறான் என்பதைப் புரிந்துகொண்ட மதி, தன் புருவங்களைச் சுருக்கிக் கேட்டாள்.

“என்ன?”

ஜீவா தன் இரு கைகளையும் மேஜை மீது பரப்பி வைத்துக்கொண்டு, ப்ரவாவையும் மதியையும் மாறி மாறிப் பார்த்துப் புருவங்களை லேசாக ஏற்றி இறக்கினான்.

“பொண்ணுங்க ரெண்டு பேருமே ரொம்ப பொறுப்பா வளர்ந்து நிக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் சீக்கிரமே ஒரு நல்ல குடும்பத்துல பொருத்தமான வரனைப் பார்த்து முடிக்கணும்’னு அம்மாகிட்ட பேசிட்டு இருந்தாரு…”

தன்னைத் தான் வம்பிழுக்கப் பார்க்கிறான் என்பதை உணர்ந்த மதி, சற்றும் அசராமல் அவனை முறைத்துப் பார்த்தபடி சலித்துக் கொண்டாள்.

“சரி அதுக்கென்ன?”

ஜீவா விடாமல் தன் அப்பாவியான பாவனையை முகத்தில் அப்பிக்கொண்டு, அவளை மேலும் சீண்டினான்.

“ரெண்டு முறைப் பொண்ணுங்களும் என் எதிரிலேயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க… எனக்கும் கொஞ்சம் அக்கறை இருக்கத்தானே செய்யும் மதிக்குட்டி?”

அவனது அந்தப் போலி அக்கறையைக் கண்டதும் மதியின் பொறுமை பறந்தது. கையில் இருந்த கரண்டியைத் தட்டில் லேசாகத் தட்டி, காரசாரமாக வெடித்தாள்.

“உனக்கு அந்த அக்கறையும் வேணாம், சக்கரையும் வேணாம்… முப்பது வயசான எருமையும், முப்பத்தியொரு வயசான காண்டாமிருகமுமே சும்மா இருக்குதுங்களாமாம். இதுல எனக்கு நீ கல்யாணம் பேசறியா? இந்த பக்கத்து இலைக்கு பாயசம் கேக்கற வேலையெல்லாம் இங்க வேணாம். உனக்கென்ன வேணுமோ அதை நீ பார்த்துக்க, எனக்கு நானே பார்த்துக்க தெரியும்…”

சாப்பிட்டுக் கொண்டிருந்த விஷ்வாவின் தொண்டையில் அந்த வார்த்தை சுள்ளென்று உறைத்தது. எதிரில் மது அமர்ந்திருக்கும் நேரத்தில் மதி இப்படிப் பட்டவர்த்தனமாகப் பொரிந்து தள்ளுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தட்டிலிருந்து தலையை நிமிர்த்தியவன், அதிர்ச்சியும் பதற்றமும் கலந்த குரலில் மதியை அடக்க முயன்றான்.

“ஏன்டி? அவன் சொன்னா அவனை மட்டும் கொதறு. நடுவுல எதுக்கு என்னையும் காண்டாமிருகம்ன்னு கடிக்கற?”

இத்தனை நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுவுக்கு, இந்த வாய்ப்பை நழுவவிட மனம் வரவில்லை. தன் முகத்தில் ஒன்றுமறியாத ஒரு குழந்தைத் தனமான அப்பாவிக் களையை வரவழைத்துக்கொண்டு, உதட்டைக் குவித்து வினவினாள்.

“மதி… இந்த காண்டாமிருகம்ன்னு நீ சொன்னது விஷ்வா சாரை தானா?”

விஷ்வா சட்டென்று தன் கூரிய பார்வையை மதுவின் பக்கம் திருப்பி எச்சரிக்கையாய் முறைத்தான். ஆனால் அவனது மிரட்டலுக்கு அஞ்சும் ஆளா மதிமலர்? அவள் தன் அண்ணனைத் திரும்பிப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள்.

“பின்ன வேற யாரையாம் மதுக்கா? தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான். இவன் கல்யாணத்த பண்ணாதான, ஜீவா பண்ணுவான்? எல்லாத்துக்கும் முன்னாடி பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்…”

இவள் விடுவதாக இல்லை என்று உணர்ந்த மது, நேற்றைய ஓபிடி உரையாடலை நினைவுகூர்ந்து, விஷ்வாவை மேலும் இக்கட்டில் மாட்டிவிடும் விதமாகப் பேச்சைத் தொடங்கினாள்.

“அவரைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்ங்கறது…”

அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட விஷ்வாவின் முகம் ஒரு நொடியில் கருகிப் போனது. எங்கே நேற்றைய ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’, ‘இன்ஸ்டிடியூஷனலைஸ்ட் ப்ராஸ்டிடியூஷன்’ விவகாரங்களை இந்த இடத்தில் அத்தனை பேர் முன்னிலையிலும் உடைத்துவிடுவாளோ என்கிற அச்சம் அவனைத் தொற்றிக்கொள்ள, அவன் அவசரமாகப் பல்லைக் கடித்தான்.

“மது…”

அந்த ஒற்றை அதட்டலிலேயே அங்கே ஏதோ ரகசியம் புதைந்திருக்கிறது என்பதை மோப்பம் பிடித்த ஜீவா, ஆர்வத்தோடு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தான். ப்ரவாவின் முகத்திலும் ஒரு குறும்புப் பிரகாசம் பளீரென மின்னியது.

ஜீவா கைகளைத் தட்டிச் சிரித்தபடி மதுவை நோக்கித் தூண்டினான்.

“மது… கண்டிப்பா நீ சொல்லியே ஆகணும். என்ன சொன்னான் விஸ்வாமித்திரன்?”

அனைவரது பார்வையும் தன் மீது படிந்ததும், மது சட்டென்று தன் திருட்டுப் பார்வையை விஷ்வாவின் பக்கம் திருப்பினாள்.

“இல்ல… அது வந்து…” என்று அவள் இழுக்க, விஷ்வாவின் முகமோ நெருப்பின் மேல் அமர்ந்திருப்பவனைப் போலத் தவித்துக் கொண்டிருந்தது.

தன் அண்ணன் அந்தப் பெண்ணின் பேச்சால் இந்த அளவுக்குத் திணறுவதைப் பார்த்த ப்ரவா, அவனை அந்த இக்கட்டிலிருந்து மீட்க நினைத்தாள். விஷ்வாவுக்கு ஆதரவாகப் பேசி, மதுவின் கூற்றை சாதாரணமாக மழுங்கடிக்க முயன்றாள்.

“ஏய் சும்மா உளறிட்டு இருக்காத… விஷ்வாண்ணா என்ன பெருசா சொல்லிருக்க போறாங்க? நீ எப்பவும் போல வம்பிழுத்திருப்ப… உன்னை திட்டியிருப்பாங்க…. அவ்வளவுதான?”

ப்ரவா இப்படித் தன் அண்ணனுக்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்குவதைப் பார்த்த மது, கண்களை விரித்து வியப்பாய் அவளைப் பார்த்தாள்.

“அடிப்பாவி… ஜால்ரா தட்ட வேண்டியதுதான். அதுக்காக இப்படியா?”

ப்ரவாவும் சளைக்காமல் தன் தலையை உயர்த்தி, தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று அவளை மடக்கினாள்.

“ஆமா… இப்ப என்னாங்கற?”

இவளது இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு திகைத்த மது, தன் ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்டு நாடகத்தனமாக அதிர்ந்து நின்றாள். அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட மதி, மதுவின் பக்கம் சாய்ந்து அவளுக்கு ஆதரவளித்தாள்.

“இரு ப்ரவாக்கா… மதுக்கா என்னவோ சொல்ல வர்றாங்க…”

மதி சொன்னதைக் கேட்டு உற்சாகமான மது, மேஜையின் குறுக்கே கையை நீட்டி அவளுக்கு ஒரு பலமான ‘ஹை-ஃபை’ கொடுத்தாள்.

விஷயம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்த விஷ்வா, இதற்கு மேல் மதுவை பேசவிட்டால் எதையாவது உளறி வைப்பாள் என்று பயந்து, தானே களத்தில் இறங்கினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லைன்னு கொஞ்சம் ஹார்ஷா சொல்லிட்டேன். அதுக்கென்ன? எப்ப பார்த்தாலும் வம்பு பண்ணிட்டே இருந்தா, எனக்கும் எரிச்சல் வராதா?”

விஷ்வாவே இத்தனை தூரம் இறங்கி வந்து விளக்கம் கொடுப்பதைக் கண்டதும், மதுவின் முகத்தில் ஒரு வெற்றியின் புன்னகை படர்ந்தது. அதை உடனே கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் ப்ரவா.

“பாரு… நீ பண்ண வம்புல தான் அண்ணா அப்படி சொல்லியிருக்காங்க. நீ என்னென்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும்டி…”

தன் மீது பழி விழுவதை ஏற்க முடியாத மது, விஷ்வாவை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி மேலும் தகராறை வளர்த்தாள்.

“அது மட்டும் தான் சொன்னாரான்னு உங்கண்ணன கேட்டு சொல்லு தாயே… சப்போர்ட் பண்ண வந்துட்டா…”

இருவருக்கும் நடுவே ஏதோ பெரிய விவகாரமே நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்ட ஜீவா, “சம்திங் ஃபிஷி… என்னமோ இருக்கு…” தன் சந்தேகமாகக் கூறினான்.

 

அவனது கணிப்பை அப்படியே ஆமோதிப்பது போல மதியும் வேகமாகத் தலையாட்டினாள். ஆனால் ப்ரவா அவர்களை மேலும் பேச விடாமல், தன் தோழியின் குறும்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தோரணையில், “அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்த லூஸு எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணும்ன்னு எனக்கு தெரியும். ஒரேடியா விஷ்வாண்ணாவ கலாய்க்காதீங்க…” ஒரே அடியாக அடித்து முடித்தாள்.

தன் ஆருயிர் தோழியே தன்னை விட்டுவிட்டு அண்ணனுக்கு ஆதரவாகப் பேசுவதைக் கண்ட மது, “இத்தனை வருஷ நட்பை இப்படி கலங்கபடுத்திட்டியே குல்பி!” என்று போலியாக கண்ணீர் விட,

அவர்களின் அந்தச் செல்லச் சண்டையை ரசித்த ஜீவா, மேலும் சுருதி கூட்டி ப்ரவாவை வம்பிழுக்கும் தொனியில் பேசினான்.

“ப்ரெண்டு முக்கியமா அண்ணன் முக்கியமான்னு கேட்டா அண்ணன் தான் முக்கியம்ன்னு சொல்லுவா பாப்பி… இல்லையா பாப்பி?”

அவன் தன்னை மீண்டும் ‘பாப்பி’ என்று அழைத்து சீண்டுவதைப் பார்த்த ப்ரவா, தனது கூரிய விழிகளால் அவனைச் சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

“ம்ம்ம்…”

அவளது முறைப்பைக் கண்டு ஜீவா சற்றும் பின்வாங்கவில்லை; மாறாகக் குரலில் சிரிப்பைத் தேக்கி மேலும் தொடர்ந்தான்.

“முறைக்காதீங்க மேடம்… நிஜத்த தான சொல்றேன். இங்க சீனியர் கன்சல்டன்ட்ஸ் முன்னாடி ரொம்ப அமைதியா, பெர்ஃபெக்ட் டாக்டரா போஸ் குடுத்துட்டு இருக்கீங்க. ஆனா சின்ன வயசுல எல்லாரும் ஒண்ணா இருந்தப்போ நீங்க பண்ணின கலாட்டாவும் உங்க பிடிவாதமும் எனக்கு மட்டும்தானே தெரியும்? இப்ப என்னடான்னா, எல்லார் முன்னாடியும் அவ்வளவு ப்ரொஃபெஷனலிசம்!”

அவனது பேச்சில் தெரிந்த அந்த கேலியைத் தாள முடியாமல், “ஜீவா… வேணும்னே வம்பிழுக்கறீங்களா?” என்று முறைத்தாள் ப்ரவா.

ஜீவா தன் தோள்களைச் சாவதானமாகக் குலுக்கி, உதட்டை வளைத்தான்.

“வம்பிழுக்கல பாப்பி… ஜஸ்ட் எ ஃபேக்ட்!”

ப்ரவா அவனுக்குப் பதில் கொடுத்து அடக்க வாயெடுத்த அந்த கணத்தில், அதுவரை அமைதியாகத் தன் உணவை முடித்திருந்த விஷ்வா, கரண்டியைத் தட்டில் வைத்துவிட்டு நேராக நிமிர்ந்தான். ஜீவாவை நோக்கி அவனது குரல் கனிவாகவும், அதே நேரம் மறுக்க முடியாத அதிகாரத்தோடும் ஒலித்தது.

“ஜீவா… மார்னிங்ல இருந்து ஓபிடில நின்னவ இப்பதான் ரிலாக்ஸ்டா உட்கார்ந்து சாப்பிடுறா. அவளை தேவையில்லாம ஏன் டீஸ் பண்ணிட்டு இருக்க? உன் டின்னரை கவனி.”

ப்ரவாவின் முகத்தில் பெருமிதப் புன்னகை விரிந்தது.

ஜீவா சளைக்காமல் விஷ்வாவைப் பார்த்துத் தனது இதழ்களை வளைத்து நக்கலாகச் சிரித்தான்.

“இத்தனை வருஷமா என் கூட நின்ன ஆளு… இன்னைக்கு ப்ரவா பக்கம் சாஞ்சாச்சு! என்னதான் இருந்தாலும் ப்ளட் இஸ் திக்கர் தன் வாட்டர்ன்னு ப்ரூவ் பண்ணிட்ட டா…”

ஜீவாவின் அந்தப் போலி அங்கலாய்ப்பைக் கண்டு விஷ்வாவின் உதடுகளிலும் ஒரு மெல்லிய புன்னகை எட்டிப்பார்த்தது.

“ஏன் நீயும் என்னோட ப்ளட் ரிலேஷன் தான். ரொம்ப பண்ணாதடா…”

அந்தச் சூழலின் இறுக்கம் மெல்லத் தளர்ந்து இயல்புக்குத் திரும்புவதை நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருந்த மதுபாஷினி, காபி கப்பை விரல்களால் லேசாகச் சுழற்றியபடி, விஷ்வாவின் முகத்தை நேருக்கு நேர் கூர்மையாகப் பார்த்தாள்.

“சர்… எனக்கு ஒரு சின்ன டவுட்…”

அவளது அந்தக் குரலில் அத்தனை பணிவும், உள்ளுக்குள் அடக்கி வைக்கப்பட்ட ஒரு குறும்பான சீண்டலும் ஒருங்கே இருப்பதை விஷ்வா உணர்ந்து கொண்டான். அவன் அவளை நிதானமாக ஏறிட்டு, எச்சரிக்கையோடு கேட்டான்.

“எஸ், டாக்டர் மதுபாஷினி?”

மது தனது உதட்டோரம் புன்னகையை நெளியவிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாகப் பேசினாள்.

“ஹாஸ்பிட்டல்ல மத்த ஜூனியர்ஸ் யாராச்சும் இசிஜி ஸ்ட்ரிப்ல சின்ன இன்டெர்பிரெட்டேஷன் மிஸ்டேக் பண்ணினா கூட, உங்க ரியாக்ஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா, சுளீர்னு இருக்கும். ஆனா இப்ப… உங்க சொந்தத் தங்கை ப்ரவா ஏதாவது சின்ன கிளினிக்கல் எர்ரர் பண்ணினா… அவங்ககிட்டயும் இதே மாதிரி ஸ்ட்ரிக்டா இருப்பீங்களா? இல்ல, ‘இட்ஸ் ஓகே பாப்பி, கத்துக்கலாம்’னு சாஃப்ட்டா போயிடுவீங்களா?”

அந்தக் கேள்வி மேஜையில் இருந்த அனைவரையும் ஒரு கணம் விஷ்வாவின் முகத்தையே உற்றுப் பார்க்க வைத்தது.

விஷ்வா அவளை உற்றுப் பார்த்தான். அவளது துடுக்குத்தனமும், தன்னை இயல்புக்குக் கொண்டுவரத் துடிக்கும் அந்த விடாப்பிடியான பிடிவாதமும் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், அவனது தொழில் தர்மம் எப்போதுமே சமரசங்களுக்கு அப்பாற்பட்டது.

அவன் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, தனது இரு கரங்களையும் மேஜை மீது விரல் கோர்த்துக் கொண்டான். அவனது குரல் எந்தவிதத் தடுமாற்றமுமின்றி, கம்பீரமாகவும் ஆழமாகவும் அந்த அறையில் ஒலித்தது.

“டாக்டர் மதுபாஷினி… ப்ரவா என் தங்கைங்கிறது என்னோட பர்சனல். அது ஹாஸ்பிட்டல் வாசலுக்கு வெளியில மட்டும்தான். ஆனா இந்த கேம்பஸுக்குள்ள, அப்ரானை மாட்டிக்கிட்டு அவ நிக்கிற வரைக்கும்… ஷி இஸ் ஜஸ்ட் அனதர் ஜூனியர் ரெசிடென்ட்!”

அவன் ப்ரவாவை ஒரு நொடி வாஞ்சையோடு பார்த்துவிட்டு, மீண்டும் மதுவின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

“மருத்துவத்துல எமோஷன்ஸ்க்கு இடமே இல்ல. இங்க நாம பண்ற ஒரு சின்னத் தவறு கூட ஒரு உயிரோட சம்பந்தப்பட்டது. அந்த இடத்துல ப்ரவா தப்பு பண்ணினாலும், நீங்க தப்பு பண்ணினாலும் என்னோட அணுகுமுறை ஒண்ணாவேதான் இருக்கும். தங்கைங்கிறதுக்காக அவளுக்கு இங்க எந்தவிதமான சலுகையும் கிடைக்காது. அப்படி நான் அவளுக்குச் சலுகை காட்டினா, அவளை ஒரு சிறந்த மருத்துவரா உருவாக்குறதுல எனக்கு நானே துரோகம் பண்ணிக்கிற மாதிரி. இதுல ப்ரவாவும் ஒண்ணுதான், பியுச்சர்ல மதியும் ஒண்ணுதான். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்.”

விஷ்வாவின் அந்த அழுத்தமான, தெளிவான வார்த்தைகளில் ஒரு தலைமை மருத்துவனுக்கே உரிய நேர்மையும் கண்ணியமும் சுடர்விட்டன.

தன் அண்ணனின் இந்தத் தொழில்முறை முதிர்ச்சியை எண்ணிப் ப்ரவாவின் உள்ளம் பெருமிதத்தில் நெகிழ்ந்தது.

மது புன்னகைத்தாள். “அண்டர்ஸ்டுட் சர்… வெரி வெல் அண்டர்ஸ்டுட்.”

அதே கணத்தில் விஷ்வாவின் உதட்டோரத்திலும் ஒரு மிக மெல்லிய, பிறர் எளிதில் கண்டுகொள்ள முடியாத புன்னகை அரும்பி மறைந்ததை எதிரே அமர்ந்திருந்த ப்ரவா நுட்பமாகக் கவனித்தாள். அவன் இப்போது தனிமைச் சுவரை உடைத்து, இயல்பாக உள்வாங்க ஆரம்பித்துவிட்டான் என்பது புரிந்தது.

விஷ்வா தனது நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்து நின்றான்.

“சரி… கிளம்பலாம். நேரம் ஆச்சு… நாளைக்கு மார்னிங் எட்டு மணிக்கே வார்டு ரவுண்ட்ஸ் இருக்கு. யாரும் லேட்டா வரக் கூடாது… இன்க்ளூடிங் யூ, ப்ரவா.”

அவன் சொல்லிவிட்டுத் தனது கைகளைக் கழுவுவதற்காக வாஷ்பேசினை நோக்கி நகர, ஜீவா அவனது முதுகைப் பார்த்தபடி புன்னகைத்தான். ஆனால் மது சும்மா இருக்கவில்லை; விஷ்வாவை மேலும் வம்பிழுக்கும் நோக்கோடு அவனுக்குப் பின்னாலேயே நைசாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.

வாஷ்பேசினில் கைகளைக் கழுவிக்கொண்டிருந்த விஷ்வாவின் மிக அருகே சென்று, தன் குரலைத் தணித்து நக்கலாகக் கேட்டாள் மது.

“விஷ்வா சர் பயந்துட்டார் போல?”

தண்ணீரை உதறிவிட்டுத் துண்டால் கைகளைத் துடைத்த விஷ்வா, தன் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நானா? நெவர்…”

மது அவனது கண்களை ஊடுருவிப் பார்த்து, உதட்டோரம் வஞ்சகச் சிரிப்பை உதிர்த்தாள்.

“அப்படீன்னா முழுசா சொல்ல விட்டிருக்கலாம்ல. நீங்க ஒன் நைட் ஸ்டேன்ட் கேட்டதையும் சொல்லிருப்பேன்ல…”

அவளது அந்தக் குசும்புப் பேச்சைக் கேட்டதும் விஷ்வாவின் நாடி நரம்பெல்லாம் சட்டென்று பதறியது. சுற்றிலும் ஆட்கள் இருக்கும் இடத்தில் இவள் எந்தத் தயக்கமுமின்றி இதை அவிழ்த்து விடுகிறாளே என்று அவன் அதிர்ந்து போனான்.

“ஏய்… ஸ்டுபிட் மாதிரி பேசாத. சும்மா உன்னை பயப்படுத்த தான் சொன்னேன். ஐம் நாட் ஆப் தட் கைன்ட்…”

அவனது படபடப்பை ரசித்த மது, ஒரு படி முன்னால் நகர்ந்து, அவனது காதோரத்தில் மெல்லிய ஹஸ்கி குரலில் கிசுகிசுத்தாள்.

“பட் ஐ லைக் இட் விஷ்வா… எப்ப வெச்சுக்கலாம்?”

அந்தக் கேள்வி விஷ்வாவின் நரம்புகளில் தீயைப் பற்ற வைத்தது. கோபம் தலைக்கேற, தன் உதடுகளைக் கடித்துக் கொண்டு அவளை முறைத்தான்.

“யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்ஸ் மது…” ‘டாக்டர் மதுபாஷினி’ அவன், அறியாமலேயே ‘மது’வாகி இருந்தாள்… அவளது முகம் மேலும் மலர்ந்தது.

“ஐ நோ… ஐ நோ…”

விஷ்வா அவளது முகத்திற்கு நேராக விரலை நீட்டி, எச்சரிக்கும் தொனியில் பல்லைக் கடித்தான்.

“என்னைப் பத்தி தெரியாம விளையாடிகிட்டு இருக்க மது…”

அவனது கண்டிப்பைத் துளியும் சட்டை செய்யாமல், ஒரு நளினமான புன்னகையோடு அவனை ஏறிட்டாள் மது.

“இனிமே தான் விளையாடப் போறேன் விச்சு…”

சொல்லிவிட்டு அவள் கண்ணடித்த அந்த விநாடியில், விஷ்வாவின் இதயம் ஒரு கணம் லயத்தை இழந்து துடித்தது. அதற்கு மேல் அங்கே நின்றால் தன் நிலை குலைந்துவிடும் என்பதை உணர்ந்தவன் போல, அவளைக் கோபமாக முறைத்தபடி விறுவிறுவென அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

அவன் சீற்றத்தோடு நடந்து மறைவதைப் பார்த்த மதுவின் உதடுகளில் ஒரு பூரண திருப்தி பரவியது. ‘மவனே எப்படி தப்பிக்கறன்னு பார்க்கறேன்…’ என்று தனக்குள் கருவிக் கொண்டாள்.

ஜீவா, இருவரையும் ஆழமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். விஷ்வா வெளியேறியதும், அவன் ப்ரவாவின் அருகில் மெதுவாக நகர்ந்து வந்து, அவளது காதருகே குனிந்து ரகசியக் குரலில் கேட்டான்.

“ப்ரவா… உங்கண்ணன் பழைய ஃபார்முக்கு வந்துட்டான்! எனக்கு என்ன ட்ரீட் தர போற?”

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், பார்வையைத் தழைத்துக்கொண்டு முணுமுணுத்தாள்.

“இதுல நீங்க என்ன பண்ணீங்க?”

அவளது பதிலை எதிர்பார்க்காத ஜீவா, தன் தலையை லேசாகச் சாய்த்து கிசுகிசுத்தான்.

“அடிப்பாவி… கஷ்டப்பட்டு என்னென்னவோ பண்ணி எப்படியெப்படியோ மேக் அப் பண்ணா என்ன பண்ணணு கேக்கற?”

அவனது பாவனையைக் கண்டு ப்ரவாவின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை தானாக அரும்பியது.

“சரி என்ன வேணும்? சொல்லுங்க…”

ஜீவா அவளது கண்களையே கூர்மையாகப் பார்த்தபடி, விஷமத்தனமாக, “என்ன கொடுப்ப? அதை சொல்லு…” என்று இழுத்தான்

அவன் தன்னை எங்கே கொண்டுபோய் நிறுத்தப் பார்க்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், ப்ரவா தடுமாற்றத்துடன் குரலைத் தாழ்த்தினாள்.

“நீங்க சொன்னாதான மாமா தெரியும்…”

 ‘மாமா’ என்ற அந்த ஒற்றைச் சொல், ஜீவாவின் நெஞ்சுக்குள் மின்சாரம் பாய்ச்சியது. பரவசத்தில் மனம் ஜிவ்வென்று பறந்தது. அவன் அவளை நேருக்கு நேர் பார்த்தான்.

“ஓகே… என்ன கேட்டாலும் குடுப்பன்னு சொல்லு…”

அவனது அந்த அழுத்தமான பார்வை அவளது கன்னங்களில் மெல்லிய செம்மையைப் படர வைத்தது. அவள் லேசாக முகம் சுளிப்பது போல நடித்து அவனை எச்சரித்தாள்.

“ம்ம்ம்… நீங்களா ட்விஸ்ட் பண்ணாதீங்க மாமா…”

ஜீவா அந்த வெட்கத்தை ரசித்தபடியே, தனது நிபந்தனையை மிக இயல்பாக முன்வைத்தான்.

“ஓகே நாளைக்கு மத்தியானம் ஆஃப் எடுத்துக்க. வெளிய போகலாம்…”

ப்ரவா உடனே அதிர்ந்து போய் அவனை ஏறிட்டாள்.

“ஹலோ…”

அவள் பேச்சைத் தொடங்குவதற்குள், ஜீவா தனது கைவிரலை உயர்த்தி அவளை அமைதிப்படுத்தினான். அவனது கண்களில் குறும்பு சிரிப்பு.

“நீயும் நானும் மட்டும்…”

அவளது இதயம் தடதடவெனத் துடிக்கத் தொடங்கியது. சற்று தள்ளி செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்த மதிமலர் நின்றிருக்க, இவன் என்ன இப்படி பேசுகிறான்?

“ஹலோ ஹலோ…” திணறினாள்.

ஜீவா மெல்லிய குரலில் அவளை மடக்கும் விதமாக, “பார்ட்னர்ஷிப் டீல் போட்டிருக்க…” என்று சொல்ல, ப்ரவா அவனுக்கு நேராக ஒரு விரலைக் காட்டி எச்சரிக்கும் தொனியில் அதட்டப் பார்த்தாள்.

“மாமா…”

ஆனால் ஜீவா அவளது ஆட்சேபங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; தனது இறுதி உத்தரவை மிக அழுத்தமாகப் பிறப்பித்தான்.

“நாளைக்கு… ட்வெல்வ் ஓ கிளாக்…”

ப்ரவா தன் தலையை இடமும் வலமும் அசைத்து மறுத்தாள்.

“நோ…”

ஜீவா அவளது கண்களைப் பார்த்து மெலிதாகச் சிரித்தபடி உறுதியாகச் சொன்னான்.

“எஸ்…”

அவன் கைகாட்டிவிட்டு நீண்ட காலடிகளோடு வெளியேற, ப்ரவா நெஞ்சில் ஏறிய படபடப்பை அடக்க முடியாமல் அவன் செல்லும் திசையையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 3

  1. Vinna Vinnaபொதுக் கருத்துVinna Vinna

    விஷ்வா.. மது காதல் செம... ப்ச் இன்னு காதலாகல இல்ல ஆனாலும் மாஸ தெறிக்க விடுறா மச்சி... ஜீவா ப்ரவா எப்போதான் பிக்கப் ஆவிங்க ஐம் வைட்டிங் 🥰❤️

உங்கள் கருத்தைப் பகிருங்கள்