arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 12

அத்தியாயம் 12

visibility 505
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (11 மதிப்பீடுகள்)
பகிர்

காலை எட்டு மணிக்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் பெரும் மக்கள் திரளுடன் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது.

கோயம்புத்தூரின் புறநகர்ப் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக நின்ற அந்தப் பன்னடுக்குக் கட்டடத்தின் பிரம்மாண்டம், சாதாரண நாட்களில் கூட வருபவர்களை ஒரு கணம் பிரமிக்க வைக்கும். அறுநூறு படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக், தனியாக இயங்கும் மருத்துவக் கல்லூரி வளாகம், நவீன அவசர சிகிச்சைப் பிரிவு என எப்போதும் இடைவிடாது இயங்கும் மருத்துவமனை அது. மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவமனை என்பதால் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்தும் நகரத்திலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் ஜீவாதாரக் கூடம்.

அன்றைய தினம் அந்தப் பிரம்மாண்டம் இன்னும் இருமடங்காக விரிவடைந்திருந்தது.

கடந்த ஒரு மாதமாகப் பத்திரிகைகளிலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் அறிவிக்கப்பட்டிருந்த “இருதய நலம் – இரு நாள் இலவசப் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்” அன்றுதான் தொடங்கியது. தரைத்தளத்திலிருந்த பிரம்மாண்டமான மல்டிபர்பஸ் ஆடிட்டோரியம் முழுவதுமே இந்த முகாமுக்காகத் தயார் செய்யப்பட்டிருந்தது.

பொதுவாகவே இதுபோன்ற முகாம்களைச் சேர்மன் சக்திவேல் வெறும் விளம்பரத்துக்கான நிகழ்வாகப் பார்ப்பதில்லை.

“இங்க வர்ற ஒவ்வொருத்தருக்கும் நாம பண்ற கார்டியாக் ஸ்கிரீனிங் வெறும் கணக்கு கிடையாது… ஆபத்தான கட்டத்துல இருக்கிறவங்களுக்கு சரியான வழிகாட்டியா இருக்கணும். ரெண்டு நாள் கேம்ப்ல யாருக்கெல்லாம் தீவிரமான மருத்துவ உதவி தேவைப்படுதோ, அவங்களை உடனடியா இன்-பேஷன்ட்டா அட்மிட் பண்ணி அடுத்தகட்ட சிகிச்சைக்குக் கொண்டு போகணும். எந்த இடத்துலயும் ஒரு அலட்சியமும் இருக்கக் கூடாது…” என்பதுதான் அவரது கண்டிப்பான உத்தரவு.

அதனாலேயே, விஷ்வாவும், ஜீவாவும் இந்த முகாமை தீவிரமாக ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தனர்.

கார்டியாலஜி மற்றும் ஜெனரல் மெடிசின் பிரிவுகளைச் சேர்ந்த ஐந்து சீனியர் கன்சல்டன்ட்கள், துறைத் தலைவர்கள், அசிஸ்டன்ட் புரொபசர்கள், ரெசிடென்ட்கள், ஜூனியர் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் எனப் பெரிய மருத்துவக் குழுவே அங்கே களமிறங்கியிருந்தது.

முகாம் மண்டபத்தின் நுழைவாயிலில் டோக்கன் வழங்கும் வரவேற்புப் பகுதி, அடுத்து ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சோதிக்கும் கவுன்ட்டர்கள், அதைத் தொடர்ந்து பன்னிரண்டு லீட் இசிஜி அறைகள், அல்ட்ராசவுண்ட் எக்கோ பகுதி, இறுதியாக மூத்த மருத்துவர்களின் ஆலோசனைக் கூடங்கள் என எல்லாமே மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

காலை ஒன்பது மணிக்கே பதிவேட்டில் எண்ணூறு பேரைத் தாண்டிப் பதிவாகியிருந்தது.

அப்போதுதான் ஆடிட்டோரியத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் மதுபாஷினி.

நீல நிற காட்டன் குர்தியும், மருத்துவர்களுக்கான வெள்ளை அப்ரானும் அவளுக்கு பொருத்தமாக இருந்தது. உள்ளே நுழைந்தவள், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தையும், ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்த டோக்கன் எண்களையும் பார்த்ததும் ஒரு கணம் புருவத்தை உயர்த்தினாள்.

“அப்பாடா… என்னா கூட்டம்! ஊர்ல இருக்கிற எல்லாரும் இன்னைக்கு இங்கதான் வந்திருக்காங்க போல…” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“மது!”

அழைத்த குரல் கேட்டுத் திரும்பியவளின் முகம் மலர்ந்தது. அங்கே இசிஜி அறையின் வாயிலில் ஃபைல்களோடு நின்று கொண்டிருந்தாள் ப்ரவலிகா.

மது அவளை நோக்கி வேகமாய் வந்தாள். “ஹே ப்ரவா… என்னடி இது, கலெக்டர் ஆபீஸ் ரேஷன் கார்டு முகாம் மாதிரி அலைமோதுது? ஜீவா சாரும் விஷ்வா சாரும் விடியற்காலையிலேயே வந்து பந்தல் போட்டுட்டாங்களா?”

ப்ரவா புன்னகைத்தாள். “விளையாடாத மது… காலையில ஏழு மணிக்கே சக்திவேல் சார் வந்து ஒரு ரவுண்ட்ஸ் பாத்துட்டு போயிட்டாரு. ஜீவா சாரும் விஷ்வா சாரும் எட்டு மணிக்கே ஓபிடி ஆரம்பிச்சுட்டாங்க. நீதான் லேட்டு. வீட்டுக்கு போனா ஹாஸ்பிட்டலை மறந்துடுவியா?” ஒரு நாள் லீவ்க்காக காங்கேயத்திலிருக்கும் வீட்டுக்கு சென்றிருந்தாள்.அதைத்தான் ப்ரவா சொல்லி கலாய்த்தாள்.

விடுவாளா மது. “நான் என்ன உங்க வீட்டு மருமகளா, விடியற்காலையிலேயே எழுந்து கோலம் போட வர்றதுக்கு? பஸ் டிராஃபிக்டி!” என்று மது சலித்துக்கொண்டாள்.

“காரை எடுத்துட்டு வரேன்னு சொன்ன?” எப்படியாவது அப்பாவிடமிருந்து ஒரு காரை ஆட்டைய போட்டு கோவைக்கு கொண்டு வர வேண்டுமென்பது மதுவின் வெகுநாளைய சதித் திட்டம். அதை திட்ட வடிவிலேயே வைத்திருந்தார் அவளது தந்தை.

“மார்க்கு இப்பவும் கவுத்தி விட்டுட்டாப்ளடி…” சோகமாக சொன்னாள் மது. மார்க் என்பது அவளது தந்தை மார்கண்டேயன்.

“ச்சூ பாவம் பாப்பா…”

“இன்னும் என்னை நம்பவே மாட்டேங்கறாங்க…” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் மது.

“என்னைக்காச்சும் அவங்களுக்கு தைரியத்தை நீ குடுத்து இருக்கியா? காரை எடுக்கும் போதெல்லாம் எதாவது வம்பு பண்ணி வச்சா எப்டி குடுப்பாங்க…”

“ஆயிரம் பேரை கொன்னாத்தான் அரை வைத்தியனாம் செல்லகுட்டி…” கண்ணடித்தாள் மது.

“நீ டிரைவ் பண்றதுக்காக ஆயிரம் பேரை கொல்லுவியா பக்கி?” சிரித்தாள் ப்ரவா.

அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்து மென்மையான, நாகரிகமான ஒரு குரல் ஒலித்தது:

“எக்ஸ்கியூஸ் மீ… டாக்டர்ஸ்…”

இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே நேர்த்தியான லாவெண்டர் நிற சல்வார் அணிந்து வந்து நின்றாள் மதிமலர். கையில் ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் சீனியர் மருத்துவர்களுக்கான தண்ணீர் பாட்டில்களையும், அடுத்த ரவுண்டுக்கான இசிஜி பிரின்ட் தாள்களையும் அடுக்கி வைத்திருந்தாள். மென்மையான புன்னகை, நாகரிகமான உடல்மொழியென உயர்தனி செம்மொழியாக நின்றாள்.

மதியைப் பார்த்த அடுத்த நொடி, ப்ரவாவின் நெஞ்சுக்குள் மின்னல் பாய்ந்தது போலிருந்தது.

கால்கள் தன்னையறியாமல் ஒரு நொடி அதிர்ந்தன. பல வருடங்களுக்குப் பிறகு, தன் தங்கை… தன் கண்முன்னே இத்தனை உயரமாக, இத்தனை அழகாக வளர்ந்து நிற்கிறாள்!

சின்ன வயதில் தோப்பில், “அக்கா… என்னைத் தூக்கு…” என்று இடுப்பில் ஏறிக்கொண்டு கொஞ்சிய அதே சின்னஞ்சிறு முகம். அதே பெரிய விழிகள், அதே வளைந்த புருவங்கள். குடும்பப் பிரிவின் கசப்பில் சுப்பிரமணியின் நிழலின்றி, தாய்மாமன் சக்திவேலின் அரவணைப்பில் வளர்ந்த தன் தங்கை.

ப்ரவாவின் தொண்டைக்குள் பெரும் பாரம் வந்து அடைத்தது. கண்களின் ஓரத்தில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. ஓடிப் போய்க் கட்டியணைத்து, “மதிக்குட்டி… நான்தான் உன் பாப்பி அக்கா!” என்று கதறி அழுதுவிட வேண்டும் போல அவளது இதயம் ஏங்கியது.

ஆனால்… எதிரே நிற்கும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்த மக்கள் கூட்டம், இன்னும் இறுகிக் கிடக்கும் அண்ணன் விஷ்வாவின் மனம்… எல்லாவற்றையும் எண்ணித் தன் உணர்வுகளை அசாத்தியக் கட்டுப்பாட்டுடன் உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள் ப்ரவா. உதடுகளை அழுத்தமாக மடித்து, கண்களில் வழிந்த ஈரத்தை ஒரு விநாடி இமை மூடி மறைத்தாள்.

“எஸ்… நீங்க?” மது அவளைப் பார்த்துப் புன்னகையோடு கேட்டாள்.

“ஹலோ டாக்டர்… என் பேரு மதிமலர். விஷ்வாவோட சிஸ்டர்,” மதிமலர் மெல்லிய புன்னகையோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். “காலேஜ் லீவ் இன்னைக்கு. பெரிய மாமா சொன்னாங்க, ‘இன்னைக்கு கேம்ப்ல பயங்கர ரஷ் இருக்கும், போனா ஹெல்ப்பா இருக்கும்ன்னாங்க. அதான் சும்மா ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்.”

“ஓ! விஷ்வா சாரோட தங்கச்சியா நீங்க?” மதுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“எஸ்…” அதே புன்னகையோடு!

“அண்ணன் எப்பவுமே சூடா இருப்பாரு, ஆனா தங்கச்சி இவ்வளவு கூலா இருக்கீங்களே!”

மதிமலர் லேசாகச் சிரித்தாள். “அண்ணன் எப்போதுமே வொர்க்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்…” பிறகு ப்ரவாவைப் பார்த்து, “ஹலோ டாக்டர்… நீங்க டாக்டர் ப்ரவலிகா தான? எமர்ஜென்சில நீங்க ரொம்ப போல்டா வொர்க் பண்ணீங்கன்னு ஜீவா மாமா வீட்ல சொன்னாரு.”

தன் சொந்தத் தங்கை தன்னை ‘டாக்டர்’ என்று அழைத்து, ஜீவாவை ‘மாமா’ என்று உரிமையோடு சொல்லும்போது, ப்ரவாவின் இதயம் ஒரு கணம் விம்மி அடங்கியது. ஆனாலும் முகத்தில் ஒரு கனிவான புன்னகையை வரவழைத்துக்கொண்டாள்.

“தேங்க்யூ மதிமலர்… மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டீங்களா?” ப்ரவாவின் குரலில் இயல்பான அக்கறை வெளிப்பட்டது.

“எஸ் டாக்டர்… வீட்ல சாப்பிட்டுதான் கிளம்பினேன். தேங்க்யூ,” என்று மதிமலர் தன் இயல்பாக பதிலளித்தாள்.

“சரி வாங்க… இங்க நூத்துக்கணக்குல ஃபைல்ஸ் நிக்குது. நாம மூணு பேரும் இதை செக்ஷன் வாரியா பிரிச்சுட்டா சீனியர்ஸ்க்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்,” என்றாள் மது.

மூவருமாக இசிஜி அறைக்கும் பரிசோதனைப் பகுதிக்கும் இடையே ஃபைல்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இறங்கினர்.

அங்கே வேலைகள் வேகம் பிடித்தன.

ஒரு முதியவரின் இசிஜி அறிக்கையை மிகக் கவனமாகப் பரிசோதித்த மதுபாஷினி, “பெரியவரே… பிபி கொஞ்சம் அதிகமா இருக்கு. இசிஜியில சின்னதா வேரியேஷன் தெரியுது. பதட்டப்பட ஒண்ணுமில்ல… இந்த ஃபைலை எடுத்துட்டு நேரா மூணாவது ரூமுக்கு போங்க. அங்க கார்டியாலஜிஸ்ட் டாக்டர் விஷ்வா இருப்பாரு. ஃபைலைக் குடுத்துட்டு அவர் சொல்ற அட்வைஸைக் கேட்டுக்கோங்க சரியா?” என்று மிகக் கனிவாக வழிநடத்தி அனுப்பினாள்.

அந்தப் பெரியவர் கைகூப்பி நன்றி கூறிவிட்டு நகர்ந்ததும், தன் கழுத்தில் கிடந்த ஸ்டெதாஸ்கோப்பைச் சரிசெய்தபடி ப்ரவாவின் பக்கம் திரும்பிய மது, “இன்னைக்கு என்னவோ தெரியல… வர்ற கேஸ் எல்லாம் விஷ்வா சார் ரூமுக்கே போகுது. மனுஷன் ஏற்கெனவே மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருப்பாரு… இதுல இவ்வளவு ஃபைல்ஸை பார்த்தா இன்னும் உர்ருன்னு ஆயிடுவாரு!” என்று குரலைத் தாழ்த்தி முனகினாள்.

அவளது மெல்லிய அங்கலாய்ப்பைக் கேட்டு மதிமலர் உதட்டோரம் மெலிதாகச் சிரித்தாள்.

“மது… அண்ணன் எப்போதுமே கேஸ் விஷயத்துல ரொம்ப சீரியஸ். நீங்க சொல்ற மாதிரி அவர் எதுவும் நினைக்க மாட்டாரு,” என்று தன் அண்ணனின் சுபாவத்திற்குப் பரிந்து பேசினாள் மதிமலர்.

“அவரு சீரியஸா இருக்குறதுல தப்பில்ல மதி… ஆனா எப்ப பார்த்தாலும் முகத்துல எந்த எக்ஸ்பிரஷனும் காட்டாம இரும்பு மனிதன் மாதிரியே சுத்திட்டு இருந்தா எப்படி? உங்க அண்ணனை முதல்ல கொஞ்சம் சிரிக்க வைக்கிறதுக்கு தனியா ஏதாச்சும் தெரபி பண்ணனும்!” மது சளைக்காமல் கிண்டலாக சொல்ல,

“தெரப்பியா? அதுவும் எங்க அண்ணனுக்கா? அவருக்கு தெரப்பி குடுக்கணும்னா அதுக்கு எக்குத் தப்பான தைரியம் வேணும். இதுவரைக்கும் அப்படி ஒரு தைரியசாலியை நான் பாத்ததே இல்ல…” என்று சொல்லிவிட்டு மதுவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துத் தன் புருவங்களை மெல்ல உயர்த்தி இறக்கினாள்.

இடுப்பில் கை வைத்து முறைப்பது போல பாவனை செய்து, “ஆனாலும் அண்ணனுக்கு இப்படி ஜால்ரா தட்ட கூடாது மதி…” என்று போலியாகச் சலித்துக்கொண்டாள் மது.

கையில் இருந்த இசிஜி தாள்களைத் தட்டி நேராக்கியபடி, “எங்கண்ணனுக்கு நான் ஜால்ரா தட்டாம வேற யார் தட்டுவாங்க…” என்று குறும்பாகச் சிரித்தாள் மதி. விடாமல் வம்பிழுத்தாள். பேச்சுவாக்கில் மூவருமே வெகுவாக நெருங்கி விட்டனர்.

ப்ரவா அவர்களின் பேச்சைக் கேட்டு லேசாகச் சிரித்துக் கொண்டாலும், அவளது பார்வை அடிக்கடி மதியின் மீதே விழுந்தது.

மதி ஃபைல்களை அடுக்கும் விதம், தலையை லேசாக அசைத்துப் பேசும் நளினம் எல்லாவற்றிலும் கார்த்தியாயினி அத்தையின் வளர்ப்பும், விஷ்வாவின் சாயலும் மிளிர்வதை ப்ரவா ரசித்துப் பார்த்தாள். ‘எத்தனை வருஷத்துப் பிரிவு… என் தங்கை சமத்தா வளர்ந்திருக்கா’ என்று அவளது மனம் பாசத்தில் நெகிழ்ந்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கார்டியாலஜி எக்கோ அறையிலிருந்து வெளியே வந்தான் ஜீவா. அவனது கையில் ஒரு இசிஜி ஸ்ட்ரிப் இருந்தது. முகத்தில் ஒரு தீவிரம். அவனுக்குப் பின்னாலேயே இரண்டு ஜூனியர் மருத்துவர்கள் குறிப்பேடுகளோடு வந்தனர்.

“நர்ஸ்… டோக்கன் நம்பர் 142 பேஷன்ட்டை உடனே அப்சர்வேஷன் பெட்டுக்கு ஷிஃப்ட் பண்ணுங்க. எஸ்டி எலிவேஷன் தெரியுது. விஷ்வாகிட்ட இன்ஃபார்ம் பண்ணியாச்சா?” ஜீவாவின் குரல் கணீரென ஒலித்தது.

“சொல்லிட்டோம் சார், விஷ்வா சார் பேஷன்ட்டை பார்க்க உள்ள போயிருக்காரு,” நர்ஸ் அவசரமாகப் பதிலளித்தாள்.

ஜீவாவின் பார்வை அடுத்த நொடி ஃபைல்களை அடுக்கிக் கொண்டிருந்த மூவர் பக்கமும் திரும்பியது. அங்கே நின்றிருந்த ப்ரவாவையும், அவளுக்குப் பக்கத்தில் ஃபைல்களை எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்த மதியையும், மதுவையும் பார்த்ததும் அவனது கண்களில் ஒரு நொடி லேசாக மின்னியது.

அவன் நேராக அவர்கள் நின்ற மேஜையை நோக்கி வந்தான்.

“என்ன டாக்டர் மதுபாஷினி… கேம்ப்புக்கு வந்து அரை மணி நேரமாச்சு, இன்னும் டிரையாஜ் போர்டு க்ளியர் ஆகலையா? இங்க என்ன பேச்சு?” ஜீவா குரலில் போலி கண்டிப்பை ஏற்றி வினவினான்.

மது உடனே நிமிர்ந்து நின்று, “நாங்க ரொம்ப சின்சியராத்தான் ஃபைல்ஸ் மூவ் பண்ணிட்டு இருக்கோம் சார். உங்க கசின் எங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க,” என்றாள்.

மதிமலர் லேசாகப் புன்னகைத்தாள். “ஜீவா மாமா… கார்டியோ ஓபிடிக்கு தேவையான இசிஜி ஷீட்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன்.”

“குட் மதி… நீ இங்க இவங்களுக்கு ஹெல்ப் பண்ணு,” என்ற ஜீவா, அமைதியாக நின்றிருந்த ப்ரவாவின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

ப்ரவா அவனைப் பார்த்ததும் அனிச்சையாகத் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

ஜீவா அவளது முக மாற்றத்தை மிகத் துல்லியமாகக் கவனித்தான். அவனது உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

“டாக்டர் ப்ரவலிகா…” அவன் அதிகாரமாக அழைத்தான்.

“எஸ் சார்…”

“இசிஜி ரூம் 4-ல மிஷின்ல சின்ன எர்ரர் வருதாம். நீங்க போய் அங்க என்னன்னு பாருங்க. அப்புறம்… விஷ்வா சார் ரூம்ல அடுத்த பேட்ச் ஃபைல்ஸ் போகணும். மதி, நீ விஷ்வாகிட்ட அந்த ஃபைல்ஸை கொண்டு போய் குடு.”

“ஓகே மாமா…” மதிமலர் அந்த ஃபைல்களை எடுத்துக்கொண்டு கார்டியாலஜி அறையை நோக்கி நேர்த்தியான நடையுடன் நகர்ந்தாள்.

மதி நகர்ந்ததும், அவளது காலடிகளையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்த ப்ரவாவின் அருகே சற்று நெருங்கி வந்தான் ஜீவா. மற்றவர்களுக்குக் கேட்காதபடி குரலைத் தணித்தான்.

“என்ன மேடம்… தங்கச்சியைப் பாத்து மெல்ட் ஆயிட்ட போல?”

ப்ரவா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். ஜீவா அவளது கண்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“ஜீவா சார்… யாராவது பாக்கப் போறாங்க,” அவள் சுற்றும் முற்றும் பார்த்து மெல்லிய குரலில் சொன்னாள்.

“பாத்தா பாத்துட்டுப் போறாங்க. என் ஜூனியர்கிட்ட கேஸ் பத்தி பேசுற மாதிரிதான் நிக்கறேன்,” அவன் முகம் மாறாமல் சொன்னான்.

“மதி கிட்ட பேசினியா?”

ப்ரவாவின் கண்கள் சட்டென்று கனிந்தன. “ம்ம்ம்… ரொம்ப சந்தோஷமா இருக்கு… ஆனா அவ என்னை ‘டாக்டர்’னு கூப்பிடும்போது தான் கஷ்டமா இருக்கு. நான்தான் உன் அக்கான்ணு கட்டிப்பிடிச்சு சொல்லிடலாமான்னு தோணுது.”

“அவசரப்படாத…” ஜீவாவின் குரலில் எச்சரிக்கை இருந்தது. “விஷ்வாவை நாம இன்னும் தயார்படுத்தல. இப்ப போய் உடைச்சா, மொத்தமா கெட்டுப் போய்டும். அப்பறம் நாம நினைச்ச காரியம் நடக்காமலே போயிடும். சரியான நேரம் வர்ற வரைக்கும் கொஞ்சம் நிதானமா இரு, சரியா?”

அவனது வார்த்தைகளில் இருந்த நியாயம் அவளுக்குப் புரிந்தது. “ம்ம் சரி…” என்றாள் மெல்லிய குரலில். அவனது சப்போர்ட் அவளுக்கு வெகு ஆறுதலாக இருந்தது, எப்படியும் இவன் செய்து விடுவான் என்பது உறுதி.

“குட்… இப்ப போய் அந்த இசிஜி ரூமை கவனிங்க டாக்டர் ப்ரவலிகா. வேலை நிறைய இருக்கு,” என்று சொல்லிவிட்டு அவன் நீண்ட காலடிகளுடன் அப்சர்வேஷன் வார்டு நோக்கி நடந்தான்.

அவன் போவதையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரவா.

அருகிலிருந்த மது கனைத்தாள். ப்ரவா திடுக்கிட்டு தன்னை மீட்டுக் கொண்டாள்.

“கண்ட்ரோல்… கண்ட்ரோல்…” சொன்னவளை பார்த்து புன்னகைத்தாள் ப்ரவா.

ஆடிட்டோரியத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த எக்கோ கார்டியோகிராம் அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் விஷ்வா.

அவனது முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை. இறுக்கம். கண்களில் அசாத்தியமான கூர்மை. கழுத்தில் கிடந்த ஸ்டெதாஸ்கோப்பும், நேர்த்தியாக அயர்ன் செய்யப்பட்ட நீல நிற அரைக் கை சட்டையும் அவனது தோற்றத்திற்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தன.

அவன் வெளியே வந்ததும் அங்கிருந்த பயிற்சி மருத்துவர்கள் அனிச்சையாகத் தங்களது பேச்சுகளை நிறுத்திக்கொண்டனர்.

“டாக்டர் மதுபாஷினி…” விஷ்வா கணீரென அழைத்தான்.

மது உடனே ஃபைலை மேஜை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தாள். “எஸ் சார்…”

“ரூம் நம்பர் 2-ல ஒரு அறுபத்தஞ்சு வயசுப் பெரியவர் உட்கார்ந்திருக்காரு. சிவியர் அயோர்டிக் ஸ்டெனோசிஸ் வித் கன்ஜெஸ்டிவ் ஹார்ட் ஃபெய்லியர். எக்கோல இஜெக்ஷன் ஃப்ராக்ஷன் வெறும் இருபத்தஞ்சு பர்சன்ட்தான் காட்டுது. இம்மீடியட்டா கார்டியாக் ஐசியூல பெட் பிளாக் பண்ணுங்க. அட்மிஷன் ஃபார்ம்ல என் சைன் வாங்கிக்கங்க. எந்த டிலேவும் இருக்கக் கூடாது.”

அவன் சொன்ன வேகமும், அந்த நோயாளிக்கான ஆபத்தை நொடியில் கணித்துத் தீர்மானித்த தொழில்முறை நேர்த்தியும் மதுவை ஒரு கணம் அசர வைத்தது.

“எஸ் சார், இதோ அரேஞ்ச் பண்றேன்,” மது உடனடியாக ஃபைலை வாங்கிக்கொண்டு சுறுசுறுப்பாக நகர்ந்தாள்.

விஷ்வா திரும்பிப் பார்த்தபோது, சற்றுத் தொலைவில் நின்று தன்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரவாவையும், அவளுக்குப் பக்கத்தில் நின்று ஃபைல்களை அடுக்கிக் கொண்டிருந்த மதிமலரையும் கண்டான்.

அவனது கண்கள் ப்ரவாவின் மீது ஒரு விநாடி நிலைத்தன. எமர்ஜென்சியில் அவள் காட்டிய அந்தத் துணிச்சலும், சமயோசிதமும் இன்னும் அவனது நினைவில் இருந்தது. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “டாக்டர் ப்ரவலிகா… இசிஜி ரிப்போர்ட்ஸ்ல சஸ்பெக்டட் இஸ்கிமியா கேஸஸ் எதுவா இருந்தாலும் நேரா என் ரூமுக்கு வரணும். ஜெனரல் மெடிசினுக்கு அனுப்ப வேண்டாம், புரிஞ்சதா?” என்று கறாராகச் சொன்னான்.

“ஓகே சர்…” ப்ரவா தலையசைத்தாள்.

விஷ்வா எதையும் வெளிக்காட்டாமல் மீண்டும் தனது அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்.

அவன் சொன்ன வேலையை முடித்துவிட்டு வந்த மது,

” உங்க அண்ணன் ஒரு மெஷின்னு சொன்னா பரிஞ்சுட்டு வர்ற? இப்ப பாக்கறல்ல…” மது பக்கத்தில் வந்து பெருமூச்சு விட்டபடி நின்றாள். “மனுஷனா இவரு? காலையில இருந்து தொடர்ந்து கேஸ் பாத்துட்டே இருக்கார். ஒரு நிமிஷம் கூட உட்காரல…! இப்படியெல்லாம் லாக் டேபிள் லாவகுசாவா இருக்க வேண்டியது, அப்புறம் நான் வேலை பார்க்கலைன்னு என்னை திட்ட வேண்டியது. பாப்பா பாவமில்லையா?”

அவளது புலம்பலைக் கேட்டு, அருகிலிருந்த மதிமலரும் ப்ரவாவும் தங்களையறியாமல் மெல்லியதாகச் சிரித்துவிட்டனர்.

“எந்த பாப்பாவ சொல்ற?”

“வேற யாரு? நான் தான்…” அவள் சொன்ன தோரணையை கண்டு வாய்விட்டு சிரித்தாள் மதி.

“யூ ஆர் வெரி ஸ்வீட் மது. ஐ லைக் யூ…” என்றவளை பார்த்து,

‘இதே மாதிரி உங்க அண்ணனை சொல்ல வைக்கணும். அதுதான் என்னோட டார்கெட்டே…’ என்று நினைத்துக் கொண்டாள். அவளது அந்த எண்ணத்தை புரிந்து கொண்ட ப்ரவா அடக்க முடியாமல் சிரித்தாள்.

அடுத்து வரவிருக்கும் புயலை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.

***

முகாமின் முதல் பகுதிப் பரிசோதனைகள் முடிந்து, தீவிர பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்கள் அடுத்தகட்ட ஸ்கேன்களுக்காகவும் அட்மிஷனுக்காகவும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் இன்னமும் குறையவில்லை; ஆனால் சுழற்சி முறையில் மருத்துவர்கள் சிறிய இடைவேளைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

கார்டியாலஜி ஓபிடி அறையிலிருந்து தன் குறிப்பேட்டைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்தான் விஷ்வா. அவனது கண்களில் தளர்ச்சி தெரியவில்லை; வழக்கமான அந்த மிடுக்கான நடையுடன் எதிரே இருந்த நர்ஸிங் கவுன்ட்டரை நோக்கி வந்தான்.

அதே விநாடியில், பிரதான நுழைவாயிலின் தானியங்கிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார் சுப்பிரமணி.

அவரது கால்களில் பெரும் தயக்கம். ‘இன்று என்னாகுமோ?’ என்ற தவிப்பு அவர் கண்களில் தெரிந்தது. ப்ரவாவுக்கு தெரியாமல் வேறு வந்த பயம் வேறு. அவள் எதுவும் சொல்ல மாட்டாள், ஆனால் அவளது சித்தாவை யாரேனும் தவறாக பேசிவிட்டால், அவர்கள் கதி அவ்வளவுதான். அப்பாயியை மொத்தமாக அடக்கி வைத்தது அவரது ஆருயிர் ப்ரவா தான்.

எளிய வெள்ளை கதர் வேஷ்டி சட்டை, அவரது மெலிந்த தேகத்திற்குப் பொருந்தாமல் தொங்கின. ஆஜானுபாகுவான தோற்றத்தோடு இருந்தவர் தான். காலம் அவரை இப்படி ஆக்கிவிட்டிருக்கிறது. நரைத்த தலைமுடி, தாடையில் முளைத்திருந்த இரண்டு நாள் வெள்ளை தாடி, எதையோ இழந்த குற்ற உணர்ச்சி வழியும் கண்கள்… எல்லாவற்றையும் விட, தன் மகனைக் மீட்க வேண்டும் என்கிற ஏக்கம் அவரது நெஞ்சில் அனலாகத் தகித்துக் கொண்டிருந்தது.

நர்ஸிங் கவுன்ட்டரில் நின்றிருந்த விஷ்வாவின் கண்கள், கூட்டத்தின் வழியே தடுமாறியபடி நடந்து வந்து கொண்டிருந்த சுப்பிரமணியின் மீது சட்டென்று நிலைத்தன.

அடுத்த கணமே, விஷ்வாவின் முகம் விறைத்தது. அவனது தாடை இறுகியது. விழிகள் ஆத்திரத்தில் அனலாக மாறியது.

சுப்பிரமணி அவனைக் கண்டுவிட்டார். அவரது கால்கள் வேகம் பிடித்தன. முகத்தில் ஆசுவாசம் மின்னி மறைந்தது.

“விஷ்வா…” என்று நடுக்கத்தோடு உதடுகள் முணுமுணுக்க, அவர் அவனை நோக்கி வேகமாக வந்தார்.

விஷ்வா அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆனால் அவனது பார்வையில் கொஞ்சமும் ஈரமில்லை.

“விஷ்வா…” சுப்பிரமணி அவனுக்கு இரண்டு அடி தூரத்தில் நின்று அழைத்தார். அவரது குரல் உடைந்து கரகரத்தது. “ஒரு பத்து நிமிஷம் பேசணும்டா… என் பேச்சை ஒரு தடவை கேளுப்பா…”

“முடியாது…”

விஷ்வாவின் குரல் உயரவில்லை. ஆனால், தாழ்வாரத்தில் அத்தனை இரைச்சல்களையும் கிழித்துக் கொண்டு, கூர்மையோடு பாய்ந்தது.

“இது நான் வேலை செய்ற இடம். இங்க வந்து என்கிட்ட கெஞ்சுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. உங்க முகத்தைப் பார்க்கவோ, உங்க கதையைக் கேட்கவோ எனக்கு எந்த அவசியமும் இல்லை.”

சுப்பிரமணியின் முகம் சுருங்கியது. “தம்பி… அன்னைக்கு நடந்தது என்னன்னு நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறடா… நானா உங்களை விடலடா… என் நிலைமை அன்னைக்கு அப்படி…”

“போதும்!” விஷ்வா கையை நீட்டி அவரைத் தடுத்தான். அவனது விரல்கள் ஆத்திரத்தில் லேசாக நடுங்கின. “அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியும். சொந்தக் குழந்தைகளை நடுத்தெருவுல நிப்பாட்டிட்டு ஒதுங்கிப் போன உங்க யோக்கியதை எனக்கு நல்லாவே தெரியும். உங்களை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு.”

அவனது ஆத்திரக் குரலும், அந்தப் பேச்சின் கடுமையான தொனியும் தாழ்வாரத்தில் யாருமில்லையென்றாலும் இருந்த ஓரிருவரை திரும்ப செய்தது.

அப்போதுதான், இசிஜி அறையிலிருந்து ஃபைல்களை எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்த மதிமலர், தன் அண்ணனின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். எப்போதும் இறுக்கமாக இருக்கும் விஷ்வா, ஒருவரிடம் இத்தனை ஆவேசமாகப் பேசுவதை அவள் பார்த்ததே இல்லை. யாரிடமும் நெருங்கி பழகுபவனில்லை என்றாலும் இப்படி வெட்டிவிடுபவனுமில்லையே.

பதற்றத்துடன் ஓடிவந்தாள் மதிமலர். “அண்ணா… என்னாச்சு…?” என்று விஷ்வாவை சமாதானப்படுத்த முயன்றாள்.

அவளது குரல் கேட்ட அடுத்த கணம், சுப்பிரமணி மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.

பார்த்த அடுத்த நொடி… சுப்பிரமணியின் மூச்சே நின்றுவிட்டது போலிருந்தது!

அச்சு அசலாக அதே முகம். அதே கூர்மையான மூக்கு, அதே அகன்ற கண்கள், அதே எடுப்பான தாடை… தன் தாய் மகாலட்சுமியை அப்படியே வாரியெடுத்துப் பூசிக்கொண்டு எதிரே நின்றாள் பெண்!

சுப்பிரமணியின் உதடுகள் அதிர்ச்சியிலும், விவரிக்க முடியாதவொரு பேரன்பிலும் நடுங்கின. அவளது கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பும், விஷ்வாவை ‘அண்ணா’ என்று அழைத்த அந்த உரிமையும் அவரது இதயத்திற்கு உண்மையைச் சுடரென உணர்த்தின.

“ம… மதி…?”

அவரது குரல் ஒரு மெல்லிய விசும்பலாகக் காற்றில் மிதந்தது.

மதிமலர் திகைத்து நின்றாள். யாரோ ஒரு அந்நியர், அதுவும் அண்ணனால் விரட்டப்படுபவர், தன் பெயரை இத்தனை பாசத்தோடு அழைப்பதைக் கேட்டு அவளது புருவங்கள் சுருங்கின.

“நீங்க… நீங்க யாரு?”

சுப்பிரமணிக்கு உலகமே தலைகீழாகச் சுழன்றது. தன் கால்கள் தரையில் நிற்கவில்லை என்பது போல அவர் தடுமாறி முன்னே வந்தார். இரண்டு கைகளையும் விரித்து, எங்கே தொட்டால் மறைந்து விடுவாளோ என்ற பயத்தோடு அவளது முகத்தருகே நீட்டினார்.

“என் மதியாடா இது… என் கண்ணு… என்ன பெத்த தாயி…” அவரது குரல் கதறலாக வெடித்தது.

“அம்மா… நான்தான் சாமீ உன் அப்பன்!” சுப்பிரமணி சொன்ன அந்த வார்த்தைகள் மதிமலரின் தலையில் பேரிடியாக இறங்கின.

‘அப்பாவா?!’

மதிமலரின் உடல் சில்லிட்டுப் போனது. இத்தனை வருடங்களாகப் புகைப்படங்களில் கூடப் பார்க்கக் கிடைக்காத முகம்; அத்தை கார்த்தியாயினியும் மாமா சக்திவேலும் எத்தனையோ அன்பைப் பொழிந்து வளர்த்தாலும், அவளது உள்ளுக்குள் ஒரு வெற்றிடமாகவே தங்கிவிட்ட அந்தத் தந்தை!

அவள் அதிர்ச்சியில் விஷ்வாவைப் பார்த்தாள். விஷ்வாவின் கண்கள் சுப்பிரமணியை ஆத்திரத்தோடு எரித்துக் கொண்டிருந்த விதம், எதிரே நிற்பவர் தன் தந்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.

“அ… அப்பா…?” மதியின் வாயிலிருந்து அந்த வார்த்தை தன் கட்டுப்பாட்டை மீறி உதிர்ந்தது.

“சாமீ… தங்கம்…” சுப்பிரமணி அவளது கைகளைப் பற்றிக் கதறி அழுதார். இருபது வருடங்களாக நெஞ்சுக்குள் அடைத்து வைத்திருந்த ஒரு பெரு வெள்ளம் உடைப்பெடுத்து ஓடுவது போல, நடுங்கும் கைகளால் அவளது தலையை, கன்னங்களைத் தொட்டுத் தடவினார்.

“உங்களை விடறதுக்கு எனக்கு மனசே இல்லடா மதி… உங்க அம்மா செஞ்ச துரோகம், அன்னைக்கு ஊர் உலகம் பேசுன பழிச்சொல்லு எல்லாம் சேர்ந்து என் புத்தியை மழுங்கடிச்சிருச்சுடா. ஆரம்பத்துல அவ மேல இருந்த ஆத்திரத்துல, உங்களைப் பாக்கும்போதெல்லாம் அவ ஞாபகம் வந்து என் கண்ணை மறைச்சுதுடா… நான்தான் தப்பு பண்ணிட்டேன். ஆனா அந்த கோபமெல்லாம் வடிஞ்ச பிறகு, உங்களை நெனச்சு நெனச்சு இந்த பாவி உருகிப் போயிட்டேன்டா…”

சுப்பிரமணியின் கண்ணீர் அவளது கையை நனைத்தது.

“என் பிள்ளைகளை நானே கூட்டிட்டு வந்து வளர்க்கணும்னுதான் சக்திவேல் வீட்டுக்கு வந்தேன். ஆனா அன்னைக்கு நீ வீட்ல இல்ல… விஷ்வாவும் ஜீவாவும் மட்டும்தான் இருந்தாங்க. விஷ்வாவுக்கு என்னை பிடிக்கல. அதுக்கப்புறமும் எத்தனையோ தடவை அவனை பார்த்தேன்…”

சுப்பிரமணி தன் தலையிலடித்துக்கொண்டு குமைந்தார்.

“ஆனா உன்னை வந்து பார்த்திருக்கணும். இத்தனை வருஷமா அவன் பின்னாலேயே போய் கெஞ்சினேனே தவிர… உன்னைத் தேடி வந்து ஒரு வார்த்தை பேசத் தோணாமப் போச்சே சாமீ எனக்கு! என் பொண்ணு அப்பாவோட ஒரு சொல்லுக்காக ஏங்கிட்டு நிப்பான்னு நான் புரிஞ்சுக்காம போயிட்டேனே தங்கம்… மயிலம்மா இத்தனை வருஷத்தை வீணாக்கிட்டு இன்னைக்கு வந்து நிக்கிறேனே…”

சுப்பிரமணியின் ஒவ்வொரு வார்த்தையிலும் தவறிப்போன காலத்தின் மீதான ஒரு தந்தையின் தீராத குற்ற உணர்ச்சி வெளிப்பட்டது.

மதியின் கண்களிலிருந்து கண்ணீர் உடைத்துக் கொண்டு கொட்டியது.

தன் அண்ணன் விஷ்வாவை விட மதி இளையவள். அவளுக்குக் குடும்பப் பிரிவின் கசப்பான வன்மங்கள் எதுவும் நினைவில் பதியவில்லை; அவளது மனதில் இருந்தது அப்பா இல்லாத ஒரு வெற்றிடம் மட்டுமே. தன் பிள்ளைகளுக்காகத் தன் வாழ்க்கையையே துறந்துவிட்டு, இத்தனை வருடங்களாக அண்ணனின் பிடிவாதத்திற்குப் பயந்து தூரத்திலேயே நின்று தவித்த தந்தையின் இந்த உடைந்த கோலம் அவளது நெஞ்சை உருக்கியது.

கையிலிருந்த ஃபைல்கள் நழுவித் தரையில் சிதறின.

“அப்பா…” என்று அழுதபடி, சுப்பிரமணியின் தோள்களில் முகம் புதைத்து அவரை இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள் மதிமலர்.

இருபது வருடப் பிரிவு அந்த ஒற்றை அணைப்பில் சுக்குநூறாக உடைந்து கரைந்தது.

ஆனால்… இதை ஒரு விநாடி கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத விஷ்வாவின் முகத்தில் ஆத்திரம் படர்ந்தது. அவனது கண்கள் சிவந்து போயின.

புயலெனப் பாய்ந்து வந்தான் விஷ்வா. இரக்கமற்ற ஒரு வேகத்துடன், சுப்பிரமணியின் தோளைப் பிடித்துப் பலமாகப் பின்னுக்கு இழுத்துத் தள்ளினான்!

சுப்பிரமணி நிலைதடுமாறிச் சுவரில் மோதி நின்றார்.

“விஷ்வா அண்ணா!” மதிமலர் அலறிக்கொண்டு விஷ்வாவின் கையைப் பிடித்தாள். “அப்பாணா… என்ன பண்றீங்க?!”

“கையை எடு மதி!” விஷ்வா மதியை நோக்கி உறுமினான். அவனது குரல் சீற்றத்தின் உச்சத்தில் இருந்தது. சுப்பிரமணியைத் திரும்பிப் பார்த்தான். அவனது விழிகளில் அனல் கக்கியது.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல? இங்க வந்து பாச நாடகம் போட்டா, நாங்க உங்களை அள்ளி மடியில வச்சிக்குவோம்னு நினைச்சீங்களா? இங்க வந்து ட்ராமா பண்ணிட்டு இருக்காதீங்க! வெளிய போங்க!”

அவன் சுப்பிரமணியைத் தாண்டி, தள்ளிவிட்டு, அந்த இடத்தை விட்டே அகன்று வெளியேறிவிட வேண்டும் என்கிற ஆவேசத்தோடு பிரதான வாசலை நோக்கித் திரும்பினான்.

அவசரமாக அங்கு வந்த ப்ரவா தன் சித்தப்பாவை பிடித்துக் கொண்டாள்.

“அண்ணா… ப்ளீஸ் நில்லுணா!”

பின்னாலிருந்து வந்த அந்தக் குரலைக் கேட்டு விஷ்வாவின் கால்கள் ஒரு கணம் நின்றன.

அந்தக் குரலில் இருந்த ஏக்கம்… அந்தப் பதற்றம்… அவனை தடுத்து நிறுத்தியது.

அங்கே மூச்சிரைக்க, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் ப்ரவலிகா. முகமெல்லாம் கண்ணீர் மயமாகி, உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

விஷ்வாவின் முகம் மேலும் இறுகியது. “டாக்டர் ப்ரவலிகா… இது எங்க பெர்சனல் மேட்டர்… ஜஸ்ட் கெட் லாஸ்ட்…”

விஷ்வாவின் அந்த வார்த்தைகள் ப்ரவாவின் நெஞ்சில் சம்மட்டியாக இறங்கின.

இனி எதையும் மறைக்க முடியாது; மறைக்கவும் கூடாது!

ப்ரவா ஒரு அடி முன்னே எடுத்து வைத்தாள். அவளது கைகள் விஷ்வாவின் அப்ரானை அனிச்சையாகப் பற்றின. அவளது கண்கள் நேராக அவனது கண்களைத் துளைத்தன.

“நான் பாப்பி… இது சித்தா…!” அமைதியாக அழுத்தமாக சுப்ரமணியை காட்டிக் கூற,

பேரிரைச்சலை அடக்கியது நிசப்தம்!

விஷ்வாவின் உடல் சில்லிட்டுப் போனது.

அவனது கால்கள் தரையோடு வேரோடிப் போயின. அவனது கண்கள் இமைக்க மறந்து, எதிரே நின்று கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகத்தையே வெறித்தன.

‘பாப்பி…?’

அவனது நினைவலைகள் இருபது வருடங்களுக்குப் பின்னோக்கிச் சுழன்றடித்தன.

தன்னை விட்டு ஒரு விநாடி கூடப் பிரியாமல் தன் சட்டையைப் பிடித்துக் கொண்டே சுற்றிய அந்தச் சின்னஞ்சிறு தங்கை! தன் மடியில் அமர்ந்து சிரித்த அதே முகம். காலத்தின் சூறாவளியில் பிரிந்துபோய், நினைவுகளில் மட்டுமே வாழ்ந்த தன் செல்லப் பாப்பி!

இத்தனை நாட்களாகத் தன் கண்முன்னே நின்று வேலை செய்துகொண்டிருக்கும் இந்த டாக்டர் ப்ரவலிகாவா… தன் சொந்தத் தங்கை பாப்பி?

விஷ்வாவின் உதடுகள் நடுங்கின. அவனது அசைக்க முடியாத அந்த இரும்பு முகமூடி, அந்த ஒற்றை நொடியில் சுக்குநூறாக உடைந்து சிதறியது. அவனது விழிகளில் மெல்ல மெல்ல ஈரம் கசிந்து, பிறகு பெருங்கண்ணீராக வழிந்தோடியது.

“பா… பாப்பியா…?” அவனது குரல் அவனுக்கே கேட்காத அளவுக்கு உடைந்திருந்தது.

“ஆமாண்ணா…” ப்ரவாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “உன் கூட இருக்கணும்னுதான்… உன்னை நம்ம குடும்பத்துல சேர்க்கணும்னுதான்ணா நான் இங்க வந்தேன்… என்னை அடையாளம் தெரியலையா?”

விஷ்வாவால் அதற்கு மேல் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் கௌரவம், அதிகாரம், கம்பீரம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, ப்ரவாவைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்துக் கொண்டான்.

அவனது தோள்கள் குலுங்கின. இத்தனை வருடங்களாக எந்த மனிதனின் முன்னாலும் தலைகுனியாத, ஒரு துளிக் கண்ணீர் கூடச் சிந்தாத அந்த எஃகு மனிதன், தன் தங்கையின் தோளில் முகம் புதைத்துக் அழுதான்.

சற்றுத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மதுவையும், மதியையும் கூட அந்த காட்சி உலுக்கிப் போட்டது. மதுவின் கண்களில் கண்ணீர் வழிய, அவள் வாயைப் பொத்திக்கொண்டு நின்றாள்.

சுப்பிரமணியின் கண்களிலும் கண்ணீர்.

ஆனால்… அடுத்த கணமே விஷ்வாவின் உடம்பு மெல்ல விறைப்படைந்தது.

அவன் ப்ரவாவின் தோள்களைப் பிடித்து மெதுவாகத் தன்னை விட்டு விலக்கினான். அவனது கண்களில் பாசம்; ஆனால், அதே கணத்தில் அவனது பார்வை சற்றுத் தள்ளி நின்ற சுப்பிரமணியின் மீது விழுந்தது.

அந்த ஒரு நொடியில்… விஷ்வாவின் விழிகளில் இருந்த கனிவு மீண்டும் மறையத் தொடங்கியது. அவனது உதடுகள் இறுகின. பழைய வன்மமும் கசப்பும் மீண்டும் அவனது நெஞ்சுக்குள் எட்டிப்பார்த்தன.

அவன் ப்ரவாவின் முகத்தைப் பார்த்துத் தீர்க்கமாகச் சொன்னான். அவனது குரல் கரகரப்பாக இருந்தாலும், அதில் ஒரு துளி கூடத் தயக்கம் இல்லை.

“நீ என் தங்கச்சி… உன்னை நான் ஏத்துக்குவேன்.”

அவன் சுப்பிரமணியை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினான். அவனது கண்கள் மீண்டும் தீக்கங்குகளைப் போல மாறின.

“ஆனா… அன்னைக்கு எங்களை ஆதரவில்லாம நடுத்தெருவுல விட்டுட்டுப் போன இந்த மனுஷனை என் வாழ்நாள்ல நான் அப்பாவா ஏத்துக்க முடியாது! என்னால மன்னிக்க முடியாது… என்னைக்குமே மன்னிக்க முடியாது!”

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த இடத்தில் நின்ற அத்தனை பேரின் நெஞ்சிலும் ஈட்டியாகப் பாய்ந்தது.

சுப்பிரமணி நெஞ்சைப் பிடித்தபடி அப்படியே சுவரோடு சரிந்து உட்கார்ந்தார்.

“அண்ணா… ப்ளீஸ்ணா…” என்று ப்ரவா அவனது கையைப் பிடித்து இழுக்க முயன்றாள்.

ஆனால் விஷ்வா அவளது பிடியை மென்மையாக விடுவித்தான். முகத்தில் ஒரு துளி சலனத்தையும் காட்டாமல், தன் கல்நெஞ்சை மீண்டும் இரும்புத் திரையிட்டு மூடிக்கொண்டு, வாசலை நோக்கி விறுவிறுவென நடந்து சென்று மறைந்தான்.

நடு தாழ்வாரத்தில் அழுதுகொண்டிருந்த மதியும், உறைந்துபோய் நின்ற ப்ரவாவும், தரையில் நெஞ்சடைக்க அமர்ந்துகொண்டிருந்த சுப்பிரமணியும் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மதுவுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்றே புரியவில்லை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 13

விஷ்வா எவரையும் திரும்பிப் பாராமல் நீண்ட காலடிகளோடு வெளியேறிய அந்தப் பாதையையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் ப்ரவலிகா.சுவரோரம் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியின் தோள்கள் குலுங்கிக் கொண்டிருந்தன. தந்தை என்று தெரிந்த அந்த நொடியிலேயே நெஞ்சில் பூத்த நேசம், அண்ணனின்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 3

  1. Vinna Vinnaபொதுக் கருத்துVinna Vinna

    சூப்பர் எபி.. சோகமா போகுதே.. ஆனா உண்மை வெளிய வந்துடுச்சி மீ ஹாப்பி 🥰💫... ஏம்ப்பா விஷ்வா உன் வலி புரியுது நடுதெருவுல விடல ராசா.. மாமா கிட்ட தானே விட்டு இருந்தாரு... கொஞ்சம் அந்த மனிஷன் பக்கமும் யோசியேன்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்