கொண்டவன் கொடுத்தானடி – 4
கொண்டவன் கொடுத்தானடி – 4
கந்தசாமிக்கும் – மங்கலநாச்சிக்கும் திருமணம் முடிந்து அதோ, இதோ என்று ஆறு மாத காலம் ஓடி விட்டது.மறு வீடு, அங்காளி – பங்காளி, மாமன் – மச்சான் விருந்து என்று புதுமணத் தம்பதிகள் உண்டே சோர்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.நாச்சியின் அக்காள் வீடு, சொக்கப்பன் என்று நாச்சி பக்கமே பத்து வீடுகளுக்கு மேல் விருந்தாடி வந்தனர்.
இவர்களை விடப் பெரிய தலைக்கட்டு கந்தசாமி வீடு அல்லவா எண்ணிக்கையைக் கணக்கிலே வைக்க முடியவில்லை.இதில் அவ்வப்போது பேச்சியின் தொல்லை வேறு.ஒருவழியாக அனைத்தும் முடிந்து வழமைக்குத் திரும்பி இருந்தான் கந்தசாமி. இன்று நேரத்துக்கே வேலைக்குக் கிளம்பி இருக்க, அடுக்கலைக்குள் மாமியாரும், மருமகளும் சமைத்து கொண்டிருந்தனர்.
அப்போது தீடீரென வாசலில் நிழலாட எதார்த்தமாகத் திரும்பி பார்த்த சாந்தா நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து, “ஏண்டி கோட்டி சிறுக்கி இப்படித்தேன் சத்தம் காட்டாம வந்து நிப்பியா?” தங்களை முறைத்துக் கொண்டு நின்று இருந்த பேச்சியைச் சாந்தா கடிந்து கொள்ள.
“ஏன் சொல்ல மாட்ட! நான் கோட்டிதேன், அதேன் அம்புட்டு பேரும் எம்ம சுளுவா ஏமாத்தி புட்டிக, நீ கூட மாறி போயிட்ட அயித்த” என்றவளை பார்த்து இளகி போனால் சாந்தா, என்னதான் இருந்தாலும் சொந்த அண்ணன் மகள் அல்லவா. மனம் கேட்காமல் பேச்சியின் அருகில் சென்று, அவளது கையை ஆறுதலாக பற்றி.
“இங்கன பாரு பேச்சி எமக்கும் ஆசையில்லையா என்ன? என்று பெருமூச்சு விட்ட சாந்தா இது எல்லாத்துக்கும் காரணம் ஆரு? எம்ம அண்ணனும், உம்ம அண்ணனுந்தேன்”
“தப்புதேன் அயித்த! எல்லாமே தப்புதேன்! அதுக்கு மாமா உரிமையா சண்டை கட்டி வைக்காம இப்படித்தேன் உறவை வெட்டி விடுறதா? நீயும் எமக்கு வேண்டி ஒரு வார்த்தை பேசி நிக்கல”
“உன் மாமே குணம் காண்டவ தானே நீ? அவேன் நான் சொன்னா கேட்டுக்கிடுற ஆளாடி. அதுவும் போக உமக்கு வேண்டி நான் பேசாம இருப்பேனா? அய்யாவு கிட்ட அம்புட்டு பேசி வச்சேன், பிடியா நின்னுட்டான்” நாச்சி என்ற ஒருவள் இருப்பதே உணராமல் இருவரும் வழக்காடி கொண்டிருக்க நாச்சியோ கை வேலையைத் தொடர்ந்து கொண்டே இருந்தாள்.
தீடீரென வெளியில் சின்னவன் தூங்கி முழித்து நாச்சி இல்லை என்றதும் அழுக. அதுவரை சமைத்து கொண்டிருந்தவள், சின்னவன் குரல் கேட்டு அவசரமாக அவர்களைத் தாண்டி செல்ல.அதில் ஒரு நொடி பேச்சை நிறுத்திய பேச்சி.மீண்டும் சின்னவனை இடுப்பில் இடுக்கி கொண்டே வேலையைத் தொடர்ந்தவளை வன்மத்தோடு பார்த்து வைத்து.
“சரி அயித்த மாமனுக்கு என்னை கட்ட மனசு ஒப்பல சரித்தேன் வுடு, ஆனா மாமனுக்கு பொண்ணு பார்த்ததுதேன் பார்த்தீக இப்படி ஒரு குடும்பத்தையா பார்க்கனும்? என்றதும் ஓர் நொடி கை வேலையை நிறுத்திய நாச்சி மீண்டும் தொடர்ந்தாள். என் மாமன் இருக்குற தோரணைக்கும், அவுக இருக்குற ஒசரத்துக்கும் என்ன மாதிரி பொண்ணு பார்த்திருக்கனும்?
இங்கன எதுவுமே நிறைக்க இல்லை எதைக் கொண்டு இந்தப் புள்ளைய எடுத்தீக? அந்த புள்ள என்னத்த கொண்டு வந்து இங்கன நிறைஞ்சு கிடக்கு.இந்த அழகுல இலவச இணைப்பு வேற பேச்சியின் ஆதங்கமும், வன்மமும் நஞ்சு அம்புகளாக மாறி நாச்சியைப் பதம் பார்த்து வைத்தது.
இன்னொன்னு சொல்லுதேன் கேட்டுகிடு அயித்த எங்கப்பன், எம்ம அண்ணன் மேல உள்ள கோபத்துலதேன் மாமா என்னைக் கட்டல. கண்ணாலம் அன்னைக்கி நான் மாமனை இறுக்கிக்கிட்டு கிடக்கும் போது என்ன சொல்லுச்சு தெரியுமா? என்றவள்,
நாச்சியை மெதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘எனக்கும் உம்ம விலக்கி வைக்கிறது வலின்னு சொல்லுச்சு’ இதுக்கு என்ன அர்த்தம்னு கேக்கேன்?” பேச்சியின் பேச்சில் அதிர்ந்த சாந்தா நாச்சியைப் பார்க்க.
அவளோ செய்யும் வேலையே தெய்வம் என்பது போல் குழம்பை கிளறி கொண்டிருந்தாள்.சரியாக முனியசாமியும், கந்தசாமியும் மதிய வேளைக்கு உண்ண வரும் நேரம் பார்த்துப் பேச்சி வம்பு வளர்க்க தவித்துப் போனது என்னவோ சாந்தா தான்.
“பேச்சி தேவை இல்லாம புலம்பி வைக்காத புள்ள நீ இங்கன வந்தது மதனிக்கு தெரிஞ்சுது அம்புட்டுதேன் முதல நீ வூட்டுக்கு போ”
“என்னை விரட்டி விடுறதுலையே இருக்காத அயித்த போறேன், ஆனா தினமும் வருவேன் மாமனுக்கு எம்ம அப்பாரு மேல இருக்குற கோபம் போன உடனே, மாமா என்கிட்டதேன் வரும். அப்போ நான் மாமாவை கட்டிப்பேன் அப்புறம் இருக்கு இந்தப் புள்ளைக்கு, மாமா பேசுனத வச்சு பார்த்தா நான் இல்லாம மாமா இருக்காது” என்றவள் பெரிய குண்டாகச் சாந்தாவின் தலையில் போட்டுவிட்டு போக.
சாந்தா கைகள் உதற நாச்சியைப் பார்க்க, அவளோ சமைத்ததை எடுத்து வெளியில் வைத்து கொண்டிருந்தாள்.அவளது அமைதியை சிறு பயத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் சாந்தா.அண்ணன் மகளைக் கண்டிக்கவும் முடியாமல், மருமகளுக்கு ஆறுதல் சொல்லவும் முடியாமல் ஒரு வித அதிர்ச்சியில் அவள் நிற்கும் வேளை.
வெளியில் வீல் என்று முத்து காளை அதாவது பொடியன் மீண்டும் கத்தி வைக்க வேகமாகக் கூடத்துக்கு விரைந்தாள்.அங்கே வழமை போல் கந்தசாமி நாச்சியிடம் இருந்து சிறுவனை வாங்கி இறுக்கமாக இறுக்கி கொண்டு பல் பதியாமல் பொடியனின் கன்னத்தைக் கவ்வி, தனது மீசையை வைத்து தேய்த்து வைக்க, அவன் பயந்து அலறிக் கொண்டிருந்தான்.
“இந்தாருங்க புள்ளையைக் குடுங்க! இது என்ன எப்ப அவனைக் கண்டாலும் வம்பு செஞ்சுக்கிட்டே கிடகீக, புள்ளைக்கு தொண்டை வத்தி போகும் குடுக” கந்தசாமியின் உயரத்துக்குப் பிள்ளையைத் தூக்கி பிடித்திருக்க நாச்சி அவனிடம் முத்துவை வாங்க போராடி கொண்டிருந்தாள்.
முனியசாமி மகனின் சேட்டையை ரசித்துக் கொண்டே,”அய்யாவு புள்ள பாவம்முய எப்போ பாரு அவேன் டிரௌசரை இழுத்து விடுறதும், பயம் காட்டுறதும்னு முரட்டுத் தனம் பண்ணி வைக்கிற, புள்ள பயந்து கிடுது பாரு, கொடு சாமி “ என்றதும் மீண்டும் சின்னவன் கன்னத்தைக் கடித்து வைத்து இறக்கி விட.
விட்ட வேகத்தில் நாச்சியின் சேலைக்குள் ஒழிந்து கொண்டான் சிறுவன்.ஏற்கனவே பேச்சியின் பேச்சில் இருந்த கொதிப்பில் நாச்சிக்கு சின்னவன் அழுகையும் சேர, கந்தசாமியை முறைத்து வைத்தாள்.அவளது பார்வையைத் தாங்கி கொண்டே புழக்கடைக்குச் சென்றவன் தன்னைச் சுத்த படுத்திக் கொண்டு அமர.இருவருக்கும் உணவை பரிமாறினாள் சாந்தா.
உண்ணும் வரை அமைதியாக இருந்த நாச்சி தனது மாமனாரை பார்த்து, “மாமா செத்த நான் பேசனும்” என்றதும் சிறு ஓய்வுக்காக திண்ணைக்கு செல்ல இருந்தவர் புருவம் சுருக்கி யோசனையுடன், மீண்டும் வந்து கூடத்தில் அமர்ந்து கொண்டார்
அடுக்கலைக்குள் பாத்திரத்தை எடுத்து வைத்து கொண்டிருந்த சாந்தா, நாச்சியின் பேச்சில் அதிர்ந்து அடித்து, பிடித்து கூடத்திற்கு வந்தாள்.அவள் வந்த வேகத்தை ஆண்கள் இருவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர். முனியசாமி,” என்ன புள்ள இம்புட்டு வேகம்? விழுந்து வாரி வைக்கவா?” மனைவியை கடிந்து கொண்டவர்.
மருமகளிடம் திரும்பி, “என்னத்தா சங்கதி? சொல்லு சாமி”
கந்தசாமிய நோக்கி கை காட்டியவள், “இவுகளுக்கு அவுக தாய் மாமன் பொண்ணைத்தேன் கண்ணாலம் கட்ட முடிவு செஞ்சீகளா?” என்றதும் முனியசாமி மனைவியை ஒருமுறை பார்த்து விட்டு, மகனையும் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.திருமணம் முடிந்த இரவே நாச்சியிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்த்தார்,
ஆனால் நாச்சி அப்போது எதுவும் பேசவில்லை.அவளது மௌனம் அன்றே சிறு கலக்கத்தைக் கொடுத்தது முனியசாமிக்கு.இதோ அந்தக் கலக்கத்தின் வெளிப்பாடாக இன்று கேள்வி கேட்க தொடங்கி விட்டாள் நாச்சி.
“மாமா !” யோசனையாக இருந்தவரை கலைத்தாள் நாச்சி.
“அம்மாடி உறவு, உருத்துல மாமே பொண்ணு, அயித்த பொண்ணை கண்ணாலம் கட்டுறது சகஜம் தானே சாமி. அது போலதேன் அய்யாவுக்கு இவ அண்ணன் மவளை பேசி வச்சோம்.பரிசம் வரைக்கும் போயி, சின்னப் பேச்சு வார்த்தை தொடங்கி வம்புல முடிஞ்சு போச்சு, எல்லை கடந்து போன பேச்சுல கண்ணாலம் நின்னு போச்சு”
“இதெல்லாம் வழக்குல நடக்குற சங்கதித்தேன் மாமா, ஆனா இங்கன அது போல இல்லையே ” என்றதும் தனது பார்வையைக் கூர்மையாக்கி மனைவியை பார்த்தான் கந்தசாமி, நாச்சியின் பேச்சில் மனைவியை ஆழ்ந்து பார்த்தார் முனியசாமி அதில் சாந்தா அரண்டு விழிக்க, பின்பு மருமகளிடம் திரும்பி
“அம்மாடி உம்ம மனசுல என்ன கிடக்கு? எம்ம உன் அப்பன் கணக்கா எண்ணிவை சாமி, எதுவா இருந்தாலும் கொட்டி புடு”
“சரித்தேன் மாமா எமக்கு உள்ளுக்கு ஒன்னு வச்சுக்கிட்டு வெளியில வேற பேச புடிக்காது என்றவள் எடுத்த உடனே பேச்சுக்கு வந்தாள், பெரியவுக சண்டையில ஏன் மாமா இவீங்க கண்ணாலத்தை நிறுத்தி வச்சீக?” எதிர்பார்த்த ஒன்று தான் என்று எண்ணிய முனியசாமி.
“நான் நிறுத்தல சாமி, எம்ம மவேனுக்கு வேண்டி நான் எதிர்ப்பு வைக்கல, கண்ணாலத்தை நிறுத்தி வச்சது அய்யாவுதேன்.இப்போ என்ன தாயி உமக்கு சங்கடம்”
“சங்கடம் ஒன்னும் இல்லங்க மாமா, சங்கதி கண்டுக்கிட வேணாமா அதேன் கேட்டேன். ஏன்னா இவுக மாமே மவ பேச்செல்லாம் ஒரு தினுசா கிடந்துச்சு, இவுக கோபம் தனிஞ்ச பிற்பாடு ரெண்டாந்தாரமா கட்டிக்கிடுவாங்கனு அந்த புள்ள அம்புட்டு உறுதியா சொல்லுது. அப்போ எதோ இவுக கொடுத்த பிடிப்பை வச்சுக்கிட்டுதேன் பேசுது.
இல்லன்னா எம்ம குடும்பத்தை இறக்கி பேசுற அளவுக்கு அந்த புள்ளைக்கு இம்புட்டு தைரியம் இருக்குமா? அதேன் என்ன சங்கத்தினு கண்டுக்கிட்டேன்.அப்படி எதுவும் இவுகளுக்கு எண்ணமிருந்தா சொல்லிப்புட சொல்லுக மாமா.நான் எம்ம பொழைப்ப பார்த்துகிட தோது பண்ணிகிடுவேன்.
ஏன்னா எமக்கு மூலையில் மூக்கை சிந்திக்கிட்டு, முந்திய பங்கு போடுற அளவுக்கு அம்புட்டு பெரிய மனசு இல்லங்க மாமா ” என்றதும் முனியசாமி அதிர்ந்து நிற்க
“ஆத்தா என்ன சங்கதி? பேச்சி புள்ள வந்துச்சா?” மனைவியின் பேச்சை கொண்டு சரியாக நாடி பிடித்தான் கந்தசாமி
சாந்தா வெகுவாக தயங்கி, “ஆமா அய்யாவு வந்தவ வழக்கம் போல வம்பு பேசிப்புட்டா”
அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்த முனியசாமி “அவள பேசவுட்டு நீ வேடிக்கை பார்த்தியாக்கும்” அடிப்பது போல் சாந்தாவை நெருங்க, அதற்குள் அவரது கையை பிடித்து தடுத்து விட்டான் கந்தசாமி.
“மாமா! அயித்த என்ன செய்வாக? இப்போ கண்ட உறவுக்கு வேண்டி பிறந்த வூட்டை வுட்டு கொடுக்க முடியுமா? என்றவள் மாமியாரை கூர்ந்து பார்த்துவிட்டு, வுடுக மாமா மனசுல கண்டதை சொல்லி வச்சேன் அம்புட்டுதேன். எம்ம வாழ்க்கைக்கு உறுதி வேணும், உங்களுக்குள்ள பேசி முடிவு கண்டு சொல்லுக.
அதுவரை நான் எம்ம ஆயி, அப்பன் வூட்டுல இருந்துபுட்டு வாரேன்” பேச்சி இதை தான் பேசினால் என்பதை வெளிப்படையாக சொல்லாமல்.பேச்சியின் எண்ணத்தை கொடி காட்டி விட்டு நாச்சி செல்ல போக, அங்கு என்ன விதமான பேச்சுக்கள் நடந்திருக்கும் என்று இரு ஆண்களுக்கும் விளங்கியது.
“ஆத்தி! என்னத்த சொல்லுத” சாந்தா பதறி போயி நாச்சியை வேகமாக நெருங்க. அவளை கருத்தில் கொள்ளாமல் தனது முடிவை அத்தனை உறுதியாக பேசி வைத்தாள் நாச்சி.
“மாமா! நான் அங்கன போயி சின்னவனை அங்கை புள்ளைகிட்ட பழக்கிவிடுறேன், இன்னும் எம்புட்டு காலந்தேன் அவனை இங்கன வச்சுக்கிடுறது. நாளைக்கு பொண்ணு கட்டுனா மச்சான் இலவசமான்னு ஆரும் நாக்குல பல்லை போட்டு பேசிட கூடாதுல அதுக்குத்தேன்”
“அம்மாடி பெத்த ஆத்தா கணக்கா இருந்து பழக்கிவுட்டு புள்ளைய அங்கன கொண்டு போயி வுடுறேன்னு சொல்லுத? இத்தினி நாள் இல்லாத ஓசனை இப்போ என்னத்துக்கு? ஆரு என்ன சொன்னாலும் உமக்கு உரிமை கிடக்கு” என்றவர் மனைவியைத் தான் முறைத்து வைத்தார்.
“மாமா அம்புட்டு சுளுவா இந்த உறவை வுட்டு கொடுக்க மாட்டேன். அதுவும் அவுக கூட வாழ்ந்த பிற்பாடு சுத்தமா என்னால முடியாது, எமக்கு மனசு கொஞ்சம் அல்லாடி கிடக்கு. நான் செத்த ஆத்தா வூட்டுக்கு போயிட்டு சுருக்கா வந்துபுடுறேன்.அங்கன ஊருல சீலைகாரி அம்மாளுக்கு வேற கூழ் ஊத்துறாக வச்ச நேர்ச்சையக் கையோட முடிச்சுப்புட்டு வாரேன்”
கந்தசாமியை பார்க்காமல் அத்தனையும் பேசி வைத்த நாச்சி பின்புறம் செல்ல.முனியசாமி சாந்தாவிடம் ஆடி தீர்த்து விட்டார்.ஓர், இரு நொடிகள் நாச்சி சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமி வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு சடாரென வெளியில் சென்று விட்டான்.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!