arrow_back
கொண்டவன் கொடுத்தானடி அத்தியாயம் – 3

அத்தியாயம் – 3

visibility 178
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கொண்டவன் கொடுத்தானடி – 3

இன்று புதுமையான விடியல் போலும், விடியலில் என்ன புதுமை ? விடியலே புதுமை தானே! ஆம் இன்றைய நாள் கொஞ்சம் புதுமை தான் கந்தசாமிக்கும், மங்கலநாச்சிக்கும் இன்னும் சில மணி நேரங்களில் திருமணம்.அன்று பெண்ணைப் பார்த்து, பேசி விட்டு சென்று ஒரு வாரம் இருக்கும்.மீண்டும் சொக்கப்பன் மருதுவை அழைத்துக் கொண்டு திருமண சங்கதிகளைப் பேச முனியசாமி வீட்டுக்கு வந்து விட்டார்.

அதன் பின் முழு மூச்சாகச் செயல் பட்டது சொக்கப்பன் தான்.முனியசாமியின் குலதெய்வ கோவிலில் தான் திருமணம் என்று உறுதி செய்யபட அனைத்தும் வெகு விரைவாக நடந்தேறியது.இடையில் பேச்சி வீட்டுக்கே வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்ய.

கந்தசாமி நேருக்கு நேராகப் பேசி விட்டான்.பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் பேச்சின் இறுதியில் ‘உன்னை மறக்க எனக்கும் சங்கடந்தேன்’ இந்த வார்த்தையில் கொஞ்சம் அமைதியானவள், மனசை கல்லாக்கி கொண்டு கிளம்பி விட்டாள்.அவனது மனதை அவன் இயல்பாகப் பேசி வைக்க. அவன் பேசிய வார்த்தை பின் நாளில் எத்தகைய சிக்கலை கொண்டு வர போகிறது என்பதை அவன் அறியவில்லை பாவம்.

இதோ எல்லாம் முடிந்து திருமண நாளும் வந்து விட்டது.இன்னும் சில மணி நேரத்தில் எல்லாரும் கொப்பம்பட்டி கருப்பன் கோவிலில் இருக்க வேண்டும்.மருது வள்ளியின் நான்கு மகள்களும் தங்கள் கணவன் பிள்ளையுடன் வந்தாயிற்று இனி கிளம்ப வேண்டியது தான் என்ற நிலையில் வள்ளி கலவரமாக நின்று கொண்டிருந்தாள்.

“ஏய்! வள்ளி என்னபுள்ள பண்ணிக்கிட்டு கிடக்க? நேரம் போகுது வண்டியில ஏறு“

“ப்ச்! மாமா இங்கன வா!” வள்ளியின் முகத்தைப் பார்த்து விட்டு வேகமாக அவளை நெருங்கினான் மருது.

“என்ன புள்ள?”

“மாமா சொக்கப்பன் மச்சானும், அக்காளும் வர மாட்டேன்னு போனகிட்டு போயிட்டாக“

“ஏன்? என்னாச்சு?”

“சங்கதி பிடிபடல நாச்சித்தேன் நானே போயி கூட்டிகிட்டு வாரேன்னு போயிருக்கு மாமா“

“சரி நீ இங்கன பாரு நான் அங்கன என்னான்னு பார்த்துப்புட்டு வாரேன்” என்றவன் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு சொக்கப்பன் வீட்டை நோக்கி விரைந்தான் அங்கே மருது வாசலை கடந்து உள்ளே செல்கையில் சொக்கப்பன் குரல் உரக்க கேட்டது.

“இந்தாரு சொர்ணம் நம்பத்தேன் நாச்சிய பிள்ளையா நினைக்கிறோம் அது நம்பல பிரத்தியாதேன் பார்த்து வைக்குது. இனி நீயும் ஒதுங்கிக்கிடு மேல விழுந்து பாசத்தைக் கொட்டி வச்சா நம்பத்தேன் கண்ணைக் கசக்கி வைக்கனும்“

“ப்ச்! பெரியப்பு!” சொக்கப்பன் மகன், மருமகள், பிள்ளைகள் என்று அனைவரும் திருமணத்திற்கு வந்திருக்க.கிளம்பும் நேரம் இவர்கள் இருவரையும் காணாமல் நாச்சியே அழைக்க வந்து விட்டாள்.

“ஆரு நான் உமக்குப் பெரியப்பு இல்ல ஆரோ ரோட்டுல போறவைங்க“

“கடவுளே இப்போ என்னத்துக்கு இம்புட்டுக் கோபம் கண்டு வைக்கிறீக?”

“உமக்குத் தெரியாதாக்கும், நான் செஞ்சு அழகு பார்க்க வேண்டி கொடுத்த நகையெல்லாம் திரும்பக் கொடுத்துப்புட்ட உம்ம ஆயி, அப்பனையும் எங்க கிட்ட காசு வாங்க கூடாதுன்னு சொல்லிப்புட்ட அப்போ உமக்கு நாங்க ஆரு? எங்களை நீ வேத்து ஆள பார்க்க போயித்தேன் வேணான்னு சொல்லுத“

“ஆத்தி அப்படியெல்லாம் இல்ல பெரியப்பு நமக்குத் தக்கன படித்தேன் எல்லாம் செய்யனும் அக்காளுங்களுக்கு என்னவோ அதுதேன் எமக்கும் பெரிய இடம்னு அம்புட்டும் செஞ்சு வச்சா.

அப்பனையும் ஆத்தாளையும், அக்காளுங்க பிச்சி புடிங்கி வைப்பாளுக. அம்புட்டையும் எங்களுக்கே செஞ்சா இன்னொருத்தன் இருக்கானே அவனுக்கு என்ன இருக்கும்” நாச்சி சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும்.

பிரியம் கொண்டவளுக்குச் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்தது.பேச்சி சொல்வது போல் பொன்னி, அன்னக்கிளி, அங்குலக்ஷ்மி, சுந்தரி நால்வரும் ஒருவகைத் தான் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை எட்டி பிடிக்கும் குணம்.

நாச்சி இளையவள் என்றாலும் மன முதிர்ச்சி அதிகம்.அவள் பெற்றவர்களுக்குக் கை கொடுக்க, மருதுவும் வள்ளியும் இந்தப் பெண்களைக் கரையேற்றி நின்றார்கள் இல்லையென்றால், அவர்கள் நிலை கொஞ்சம் சங்கடம் தான்.ஓர், இரு வயது இடைவெளியில் பிறந்த பிள்ளைகள் என்பதால் நாச்சி தான் உடன் பிறப்புகளை கண்டிப்பது. நாச்சியின் பொறுப்பும், ஆளுமையும், அக்காள்களைக் கொஞ்சம் பயம் கொள்ளச் செய்யும் போலும்.

அப்படியிருக்கும் நாச்சியைச் சொக்கப்பனுக்கும் அவரது மனைவிக்கு அத்தனையாகப் பிடித்தம்.இந்த பிடித்தம் வேர் ஊனி இன்று விருச்சமாக நிற்கிறது. என்ன சமாதானம் செய்தாலும் முறுக்கி கொண்டு நிற்கும் இவர்கள் மேல் செல்லம் கோபம் எழ, “பெரியப்பு இப்போ என்ன? நான் அம்புட்டையும் வாங்கிக்கிடுறேன், ஆனா பாருக இன்னும் நான் போக ரொம்பத் தொலைவு கிடக்கு

இப்பவே அம்புட்டையும் வாங்கிகிட்டா பொங்க சீரு, தீவாளி சீரு, வளைவு போடுறதுக்கு, என் மகேன் ,மகன்னு பொறப்பு அதுக்குக் காது குத்துன்னு எம்புட்டு இருக்கு.எமக்கு வேற எத்தினி புள்ளன்னு தெரியல” என்றவள் பேச்சில் அதுவரை இருந்த கோபம் மறைய சொக்கப்பன் பக்கெனச் சிரித்து விட்டார்.

“அதுக்கு என்ன நிறைக்க பெத்து குடு தவம் கிடக்கோம்” சொக்கப்பன் உணர்ந்து சொல்ல.

“கோட்டி பேச்சு காட்டி ஏமாத்தி வைக்கிற நீ” என்ற சொர்ணம் செல்லமாக நாச்சியின் காதை திருகினாள்.

“அண்ணே! நேரத்துக்குப் போயி சேரனும்” மருது தவிப்பாகச் சொன்னதும் நடப்பை உணர்ந்தவர் அடுத்து விரைவாகச் செயல்பட்டார்.

“வா! போகலாம் மருது என்றவர் மனைவியிடம் திரும்பி புள்ளைக்கு இரட்டைவட சங்கலியாவது போட்டு வுடு புள்ள”

“சுருக்கு பையிலதேன் வச்சிருக்கேன் இருக” என்று கையில் உள்ள பைக்குள் எடுக்கப் போக அவரது கையைப் பிடித்துத் தடுத்த நாச்சி ஆத்தா தாலி கட்டும் போது போடுக இப்போ வேணாம்” என்றதும் அவள் எதற்காகச் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டவர்கள் சரி என்றார்கள்.

அதன் பின் வந்த நேரங்கள் சிட்டாகப் பறக்க.இதோ கந்தசாமியின் அருகில் மணமகளாக நாச்சி அமர்ந்திருக்க.பெண்கள் குலவை போட தலைகட்டில் மூப்பு கொண்டவர் ஒருவர் தாலியெடுத்து கொடுக்க.இதோ மங்கல நாச்சியை தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான் கந்தசாமி. அதனை கண்ணில் பெருகும் நீருடன் பார்த்து கொண்டிருந்தாள் பேச்சி.

பேச்சியின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவளது தாய்.மகளது வேதனை புரிந்தாலும் இதில் தான் செய்வது ஒன்றுமில்லை.கந்தசாமி எண்ணிருந்தால் தனது மகள் தான் வேண்டும் என்று பிடிவாதம் செய்திருந்தாள்.அவளைத் தூக்கியாவது கட்டி இருப்பான் அப்படி செய்திருந்தால் யார் அவனைத் தடுப்பாதம்,

ஆனால் அவன் எந்த வித முயற்சியும் செய்ய வில்லையே.பிடித்தம் கொண்டவன் எப்படித் தனது மகளை விட்டு கொடுப்பான் என்ற எண்ணம் தான் அவருக்கு.அதனால் தான் மகளது விருப்பத்தை அவர் கணக்கில் கொள்ளவில்லை.இப்போது இவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது.

அனைத்தும் முடிந்து மதிய விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பும் நேரம் வர.அதுவரை தைரியமாக இருந்த நாச்சியின் கண்ணில் நீர் வழிந்தது.அத்துடன் சின்னவனும் தனது அக்காளை நீங்க மறுத்து அடம் செய்து கொண்டிருந்தான்.

“இந்தாரு காளை குட்டி அக்கா போயிட்டு வெரசா ஓடியாந்து புடுவேன் என்ன?”

“வேணாம் போகாத என்றவன் அவளது கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு அழுது வைக்க, மருது அவனை பிடித்து இழுத்தார்.

“மருது வுடு அவன் புள்ள கூட இருக்கட்டும்“

“இல்லங்க” அவர் மறுத்து எதுவோ சொல்ல போக அதனைத் தடுத்த சாந்தா.

“இருக்கட்டும் இம்புட்டு பேர் கிடக்கோம்ல பார்த்துக்கிடுவோம்” என்று சொல்ல அரை மனதாகக் கிளம்பி சென்றனர்.

அதன்பின் முனியசாமி வீட்டுக்குள் வந்து விளக்கேற்றிய நாச்சி தனது தம்பியை இடுப்பில் இறுக்கி கொண்டு கூடத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.உறவினர்கள் கொஞ்சமாக இருக்க, இரவு வேளைக்கு என்று ஓய்வில்லாமல் வேலைகளைத் தொடர்ந்தாள் சாந்தா.அடுத்த சில மணி நேரங்கள் புயலாகக் கடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இரவு நெருங்கும் வேளையில் நாச்சியை அறைக்குள் அனுப்ப வெகுவாகத் தயங்கி நின்ற நாச்சி முதல் முறையாகச் சாந்தாவின் முகம் பார்த்து பேசினாள், “அயித்த சின்னவனைத் தூங்க வச்சுப்புட்டேன் இராவுக்கு முழிப்பு கண்டு வச்சாக்க எம்ம உசுப்பி வைக்கிறீகளா?” என்றதும் சிறு புன்னகையுடன் அவளது கைகளை பற்றிய சாந்தா.

“அதுக்கு என்ன நான் பார்த்துக்கிடுறேன் ரொம்ப அழுதாக்க கூப்புடுறேன் நீ எதையும் எண்ணி வைக்காம சந்தோசமா உறங்கு என்ன” என்றவள் அவளது தலையில் கை வைக்க” சரியென்பது போல் சிறு புன்னகையுடன் மாடி அறைக்குச் சென்றாள்.

அங்கே அவளுக்கு முன் பேச்சி கந்தசாமியை கட்டி கொண்டு நிற்க.ஓர் நொடி அதிர்ந்தாலும் திடமாக அந்த இடம் விட்டு அசையாமல் நின்றாள்.அவளது அரவம் கேட்டு கந்தசாமி திரும்ப, கண்ணில் கூர்மையுடன் அவனைப் பார்த்து கொண்டிருந்தாள் நாச்சி.அவளது பார்வையைக் கவ்வி கொண்டே தன்னில் இருந்து பேச்சியைப் பிரித்து நிறுத்தியவன்,

“ஆத்தா!” என்று கர்ஜிக்க அவனது குரல் கேட்டு ஓர் நொடி அதிர்வு கண்டு முனியசாமியும், சாந்தாவும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.அங்கே பேச்சியைக் கண்டு நெஞ்சில் கை வைத்த சாந்தா அதிர்ந்து நிற்க.

“சாந்தா அந்தப் புள்ளையைக் கூட்டிகிட்டு கீழ போ!” பெருங்குரலில் முனியசாமி அதட்டி வைக்க.கணவன் குரலில் அதிர்ந்தவள் பேச்சியை இழுத்துக் கொண்டே.

“என்ன காரியம் பண்ண வைக்கிற பொறந்த இடத்து மானத்தைச் சந்தியில வித்துருவ போலக் கோட்டி சிறுக்கி“

“ அயித்த மாமா!”

“அவனுக்குக் கண்ணாலம் ஆகி போச்சு இனி அவேன் உமக்கு அயித்த மகேன் மட்டுந்தேன் மனசுல பதிய வை” என்றவள் பேச்சியின் பதிலை எதிர்பார்க்காமல் உறவினர் பெண்ணை அழைத்து.

“ஏய் புள்ள தமிழு இவளை அவீங்க வூட்டுல வுடு உம்மப் புருஷனை கூட்டிகிட்டு போ“

“சரிக்கா!”

“அவளை வூட்டுல விட்டுபுட்டு தகவல் சொல்லு“

“சரிக்கா என்றவள் பெரும் பாடுபட்டு தான் பேச்சியை இழுத்துக் கொண்டு சென்றாள், அண்ணன் மகளது நிலையை கண்டு வருந்தினாலும். இப்போது அவளைத் தாங்கி நின்றாள் தன்னைக் கணவன் உண்டு இல்லை ஆக்கிவிடுவார் என்ற பயத்தில் பேச்சியை முதலில் அனுப்பி வைத்தார்.

இங்கு தகப்பனை சமாதானம் செய்து அனுப்பி விட்டு அறைக்குள் நுழைந்தவனை ஏற்றிட்டுப் பார்க்காமல் ஓலை பாய்யை விரித்துப் படுத்து கொண்டாள் நாச்சி.அவளது செய்கையைப் பார்த்துக் கொண்டே, தனது மேல் சட்டையைக் கழட்டியவன் அதனைக் கொக்கியில் மாட்டி விட்டு நிதானமான நடையில் அவளை நெருங்கி படுத்துக் கொண்டான்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய மெதுவாக அவளைத் திரும்பி பார்த்தவன்.கண் இமைக்கும் நேரத்தில் அவள் மேல் கவிழ்ந்து கொண்டான்.அவனது செயலில் கொஞ்சமாக அதிர்ந்தவள் அவனை எதிர்க்க தொடங்க.

“அட என்ன புள்ள ராங்கி காட்டுறவ ” என்றவன் பிடி முரட்டுத் தனமாக இருந்தாலும் பூவை முத்தி வைப்பது போல மென்மையாக அவளது நெற்றில் முத்தி வைக்க அதுவரை அவனை விலக்கி கொண்டிருந்தவள் தனது எதிர்ப்பை நிறுத்தி விட்டு அவன் முகம் பார்த்தாள்.

அவளது பார்வையை கவ்வி கொண்டே “என்ன?” என்றவன் அவளது எண்ணத்தைப் படித்தானோ என்னவோ அவள் கேட்காமலே குனிந்து அவள் மூக்கை உரசி கொண்டே மாமன் மவளை கட்டிக்கிடதேன் ஆசை, பரிசம் வரைக்கும் போயி நின்னு போச்சு.அவீங்க அண்ணன் அப்பன் எல்லாம் வம்பு செஞ்சு ரொம்ப என் அப்பனை பேசி புட்டாய்ங்க, எனக்கு என் அப்பந்தேன் உசுரு.அதேன் மனசு வலி கண்டாலும் அவளை வேணான்னு சொல்லி வச்சேன்“

“ஓ!”

“அம்புட்டு வலி கண்டு சொல்லுதேன் ஓ! போடுறவ” என்றவன் அவளது தாடையைக் காயம் செய்ய.

“ஸ்! ஸ்! சொன்னீக கேட்டுக்கிட்டேன் வேற என்ன செய்ய?” என்றவளை சில நொடிகள் பார்த்தவன் பின்பு ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு அவளில் மீண்டும் கவிழ்ந்து கொள்ள.கொஞ்சமாக திணறியே அவனது முரட்டு தனத்தை தாங்கி நின்றாள்.

இரவும், நிலவும் சாட்சியாக வைத்து மீண்டும் தன்னில் பாதியாக அவளை ஏற்றுக் கொண்டான் கந்தசாமி.கிராமத்து மக்களுக்கே உண்டான குணமும் வெகு இயல்பான பேச்சும்,உரிமை கொடுத்த நெருக்கமும், அவர்களது வாழ்க்கையின் அடுத்த நிலையை எட்டி பிடிக்க வைத்தது போலும்.

பல கேள்விகள் கேட்க படாமல், பல சங்கதிகள் விளக்க படாமல் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல் நம்பிக்கையை மட்டுமே கையில் கொண்டு தங்களது வாழ்க்கையை வாழ தொடங்கினர். இந்த புரிதல் பெரும் காதல் காவியத்தை படைக்க போகுதோ? என்னவோ?

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

கொண்டவன் கொடுத்தானடி – 4

கொண்டவன் கொடுத்தானடி – 4கந்தசாமிக்கும் - மங்கலநாச்சிக்கும் திருமணம் முடிந்து அதோ, இதோ என்று ஆறு மாத காலம் ஓடி விட்டது.மறு வீடு, அங்காளி - பங்காளி, மாமன் - மச்சான்  விருந்து என்று புதுமணத் தம்பதிகள் உண்டே சோர்ந்து விட்டார்கள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்