அத்தியாயம் 6
அதனால் அவனைத் தங்களது வீட்டிற்கு வரவழைத்து,”நீ உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற இனியா? நாங்க அவ்வளவு எடுத்துச் சொல்லியும் நீ அவங்களைப் பார்க்கப் போயிருக்கிற! அதுக்கான காரணத்தை நாங்கத் தெரிஞ்சிக்கலாமா?”என அமுதினியனிடம் கோபத்தில் இரைந்தார் பாண்டியம்மாள்.
அதில் அவரை நிதானமாக ஏறிட்டுப் பார்த்து,”அது ஒரு காரணமாகத் தான் அங்கே போய் அவங்களைப் பார்த்துப் பேசிட்டு வந்திருக்கேன்”என்று அவருக்குப் பதிலளிக்கவும்,
“அப்படியா? அப்படியென்ன அவங்க கிட்ட பேசுறதுக்கு முக்கியமான விஷயம் இருக்கு?”என்று எகத்தாளமாக கேட்டிருந்தார் குமரிமுத்து.
அதற்கு,”நான் அவங்க வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றேன்! அதைப் பத்திப் பேசத் தான் போனேன்!”என்று தடாலடியாக கூறினான் அமுதினியன்.
அதைக் கேட்டதுமே அவர்கள் இருவருக்கும் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது எனலாம்!
”என்னச் சொல்றடா? உனக்கே இது அசிங்கமாகத் தோனலை? நீ எப்படிப்பட்ட காரியத்தைச் செஞ்சிட்டு வந்திருக்கிற?”என அவனிடம் கடுங்கோபத்துடன் வினவினார் பாண்டியம்மாள்.
“இதில் எனக்கு என்ன அசிங்கமாகத் தோனனும்த்தா? எனக்கு அந்தப் பொண்ணைக் கட்டிக்க உண்மையிலேயே விருப்பம் தான்! அதனால் தான் காலம் தாழ்த்தாமல் அவங்க கிட்ட போய் இதைப் பத்திப் பேசினேன்!”என்றுரைத்தான் அமுதினியன்.
“என்னது? உனக்குப் புத்திக் கெட்டுப் போச்சா என்ன? அவ உன்னோட நண்பனோட பொண்டாட்டியாக இருந்தவடா! அவளைப் போய் நீ கட்டிக்க விருப்பப்பட்றது கொஞ்சம் கூடச் சரியில்லை! இதைக் கேட்கும் போது எங்களுக்கு அருவருப்பாக இருக்கு!”என்றார் குமரிமுத்து.
“என்னப் பேசுறீய நீங்க? அருவருப்பு, அது, இதுன்னு! அவ உங்களோட பையன் அதாவது என்னோட உயிர் நண்பனோட பொண்டாட்டியாக இருந்தாள்! ஆனால் இப்போ இல்லை! இப்போ அவளுக்கு யார் கூடவும் கல்யாணம் ஆகலை! நான் கட்டிக்கனும்னு ஆசைப்பட்றேன்! அதில் என்னத்த அருவருப்பைக் கண்டுட்டீய? வார்த்தையைப் பார்த்துப் பேசுங்க!”என்று அவர்களிடம் சினம் பொங்கப் பொரிந்து தள்ளினான் அமுதினியன்.
அதில் அவர்களுக்கு மேலும் மண்டைச் சூடாகிப் போய் விடவும்,
“ஏய்! என்னடா எங்களையே இப்படி மரியாதை இல்லாமல் பேசிட்டு இருக்கிற? உனக்கு அம்புட்டுத் தைரியம் வந்துடுச்சா என்ன? அன்னக்காவடிப் பயலே!”என்று கோபத்தில் வார்த்தையை விட்டிருந்தார் பாண்டியம்மாள்.
அதைக் கேட்டுத் தன்னுடைய உடல் இறுக, முகம் சுருங்கிப் போய் அவரையும், அவரது கணவரையும் நோக்கி,
“இதோ, ‘அன்னக்காவடி!’ அப்புறம், ‘அனாதை!’ இந்த வார்த்தைகளால் தான் நாம் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவுப் பண்ணி இருக்கேன்! ஏன்னா, எம்பொஞ்சாதி இறந்ததுக்கு அப்பறமாகவும், என் நண்பனோட இறப்புக்கு அப்பறமாகவும் நான் உங்க வீட்டுக்கு வந்து போனாலும் கூட நீங்க அப்பவும், இப்பவும், எப்பவும் என்னை உங்களோட பிள்ளையோட தோழனாக கூடப் பார்க்கலைன்னுப் புரிஞ்சது! இப்படியே போனால் எனக்குன்னு ஒரு துணை இல்லாமலேயே போயிடும்! என் கடைசி வாழ்க்கை வரைக்கும் நான் தனி மரமாகவே இருந்துடுவேனோன்றப் பயம் எனக்குள்ளே வந்துடுச்சு! அதான் நான் இப்படியொரு முடிவை எடுத்து இருக்கேன்! இதுக்கு யார் ஒத்துக்கிட்டாலும், இல்லைன்னாலும் நான் அந்த வேதவள்ளியைத் தான் கல்யாணம் செஞ்சிக்கத் தான் போறேன்! அதை யாராலும் மாத்தவும், தடுக்கவும் முடியாது!”என்று அவர்களிடம் நெத்தியடிப் பதிலைக் கூறியிருந்தான் அமுதினியன்.
அதில் அவ்விருவரும் ஆடிப் போய் விட்டார்கள் என்று கூறலாம்!
“என்னடா சொல்ற? உன்னை எல்லாம் எங்கப் புள்ளையோட நண்பன்னு வீட்டுக்குள்ளே சேர்த்தோமே! எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்டா! உனக்குச் சோத்தைப் போட்டு வளர்த்ததுக்கான நன்றி விசுவாசத்தை நல்லா காமிச்சுக் கொடுத்துட்ட!”என்று வார்த்தைகளை வரைமுறையின்றி வீசி அவனது இதயத்தைச் சுக்குநூறாக உடைத்து விட்டிருந்தார் பாண்டியம்மாள்.
அவரை மிகவும் வலி மிகுந்தப் பார்வையுடன் நோக்கி,
“அப்போ நீங்க என்னை எந்த இடத்துல வச்சுப் பார்த்தீயன்னு எனக்கு இப்போ தான் நல்லா புரியுது!”என்று அவரிடம் கசந்த குரலில் கூறினான் அமுதினியன்.
ஆனால் அவனது அந்த மாற்றத்தைக் கண்டு கொள்ளாமல் அவனைத் தாங்கள் இருவரும் மாறி, மாறி வசை பாடித் தீர்த்துக் கொண்டே போனார்கள் பாண்டியம்மாள் மற்றும் குமரிமுத்து.
ஆனாலும் ஒரு கட்டத்தில் அவனால் அவர்களது பேச்சைக் கேட்க முடியாமல்,
“போதும்! நிப்பாட்டுங்க! நீங்க உங்களோட மனசுல இருந்தக் கஷ்டம், கசடை எல்லாம்நோக்கித் திட்றது மூலமாக வெளியேத்திட்டீய! இதுக்கு மேலேயும் ஒரு வார்த்தை என்னைப் பத்திக் கேவலமாகப் பேசினாலும் நடக்கிறதே வேற! அதே மாதிரி சிவம் செத்துப் போனதோட நமக்குள்ளே இருந்த உறவுமுறை முடிஞ்சிப் போச்சுன்னுப் போயிருக்கனும் நானு! அதை விட்டுட்டு உங்க மேலே இருக்கிற பாசத்தால் உங்களையே சுத்தி வந்தால் நீங்க என்னை நாயாகத் தான் பார்த்து இருக்கீயல்ல? அதுவும் சரித்தேன்! நாய் ரொம்பவே நன்றியுள்ளப் பொறப்பு! நான் அப்படியே இருந்துட்டுப் போறேன்! ஆனால் இனிமேல் என்னோட நன்றியும், விசுவாசமும் என்னோட வருங்கால பொஞ்சாதி வேதவள்ளிக்கு மட்டுந்தேன்!”என்று அவர்களுடனான தன்னுடைய சகவாசத்தை இத்துடன் முடித்துக் கொண்டு விட்டதை உறுதியாக கூறி விட்டு விருட்டென்று அங்கேயிருந்து புறப்பட்டு விட்டிருந்தான் அமுதினியன்.
அவன் சென்றதைக் கூட உணராமல் அவனுடைய சொற்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குக் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் போதும், போதுமென்று ஆகி விட்டது குமரிமுத்துவிற்கும், பாண்டியம்மாளுக்கும்!
சிறிது சிறிதாகத் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு,”என்னங்க இவன் இப்படி கத்திட்டுப் போறியான்? நம்ம மேல் கொஞ்சங் கூட மட்டு, மருவாதி இல்லாமல் பேசிப்புட்டானே? உங்களுக்கு இதனால் எவ்வளவு பெரிய அவமானம் ஆயிடுச்சு! இவனுக்குப் பாவம் பார்த்ததுக்கு, இவன் நம்மளைப் பதம் பார்த்துட்டானே! அதுவும் இல்லாமல் கடைசியாகச் சொல்லிட்டுப் போனதைக் கேட்டீயளா?”என்றத் தன்னுடைய மனைவியிடம்,
“ம்ஹ்ம். அவம் பேசின எல்லாமே எங்காதிலேயும் நல்லாவே விழுந்துச்சுடி! அவனுக்கு எவ்வளவு தகிரியம் பாரேன்! அந்த வேதவள்ளியைத் தான் கட்டிக்கப் போறேன்னு நம்மக்கிட்டேயே சொல்லிட்டுப் போறியானே! அவேன் அதை எப்படி நடத்துறியான்னு நானும் பார்க்குதேன்!”என்று வஞ்சத்துடன் மொழிந்தார் கணவர்.
மறுநாள் காலையில் தன்னுடைய எண்ணெய் ஆலைக்குள் நுழைந்து அங்கு எண்ணெயை அளந்து ஒவ்வொரு கடைகளுக்கும் கொடுத்து அனுப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்தான் அமுதினியன்.
அப்போது,”ஐயா! உங்களைப் பார்க்கிறதுக்காகப் பக்கத்து ஆலைக்காரர் வைரமணியும், அவரோட தங்கச்சியும் வந்திருக்காவ!”என்றுரைத்தார் அவனது பணியாளர்.
அதைக் கேட்டதுமே வியப்படைந்தாலும் கூட,”அவுகளை இங்கே கூட்டிட்டு வா”எனக் கூறி அனுப்பி விட்டான் அமுதினியன்.
உடனே அவனது கட்டளைக்கு இணங்கி வைரமணி மற்றும் வேதவள்ளியை அவனிடத்தில் அழைத்து வந்து விட்டு அங்கேயிருந்து ஒதுங்கிச் சென்று விட்டார் அந்தப் பணியாளர்.
தன்னைப் பார்க்க வந்த அந்த அண்ணன், தங்கை இருவரையும்,”வாங்க! வணக்கம்”என மெலிதானப் புன்னகையுடன் வரவேற்றான் அமுதினியன்.
உடனே தாங்களும்,“வணக்கம்”என்று அவனிடம் கூறினர் வைரமணியும், வேதவள்ளியும்.
“எல்லாம் சரியாகத் தானே போயிட்டு இருக்குது? யாரும், எம் மேலே எதுவும் பிராது கொடுத்து இருக்காவளா? அதைப் பத்தி விசாரிக்க வந்து இருக்கீயளா?”எனக் கேட்டவனின் ஆராய்ச்சியானப் பார்வை வேதவள்ளியிடம் நிலைத்து இருந்தது.
அதை உணர்ந்து கொண்ட பெண்ணவளும் தன்னுடைய தமையனிடம் பேசுமாறு கண்ணைக் காண்பிக்க,
அதைப் புரிந்து கொண்டு,”உங்களைப் பத்தி யாரும், எந்தப் பிராதும் கொடுக்கலை! எந்தங்கச்சித் தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயமாகப் பேசனும்னுச் சொன்னாள். அதான் கூட்டிட்டு வந்தேன்!”என்று அவனுக்குப் பதிலளித்தான் வைரமணி.
“ஓஹ்! இங்கே எண்ணெய் அளந்துக் கடை, கண்ணிகளுக்குக் கொடுக்கிற வேலை நடந்துட்டு இருக்கு! நீங்களும் எதுக்கு இங்கே கால் கடுக்க நிற்கனும்! அறைக்குள்ளே போய் உட்காருங்க! நான் கொஞ்ச நேரத்தில் வேலையை முடிச்சிட்டு வந்துட்றேன்”என அவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்,
“அது சரி! உங்களோட வியாபாரத் தந்திரத்தை எல்லாம் நாங்கப் பார்த்துக் கத்துக்கிடுவோம்ன்னு தானே எங்களை உள்ளே போகச் சொல்றீய?”என்று அவனிடம் கலகலப்பாக கேட்டான் வைரமணி.
அதில் இதழ்களில் புன்னகைத் தவழ,”விராபாரத் தந்திரம்ன்னு எங்கிட்ட எதுவும் இல்லீங்க! நீங்க அப்படி நினைச்சா தாராளமாக இங்கேயே நின்னு அதைக் கண்டுக்கிடலாம்! ஏன்னா, கல்யாணத்துக்கு அப்பறமாக நானும், உங்கத் தங்கச்சியும் தானே எல்லாத்தையும் சரிக்குச், சமமாகப் பார்த்துக்கிடப் போறோம்? அதனால் நீங்க ரெண்டு பேரும் இங்கே நிற்கிறதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைங்க!”என்று அவனுக்குப் பதிலளித்தான் அமுதினியன்.
அதைக் கேட்டு விட்டு,”அண்ணே! நாம இங்கே வந்த விஷயத்தைப் பத்தி மட்டும் பேசுவோமா?”என்று தனது தமையனுக்கு அறிவுறுத்தினாள் வேதவள்ளி.
“சரித்தா!”என்று அவளிடம் சொல்லி விட்டு,
“நாங்க உள்ளே போய்க் காத்திருக்கோம்ங்க. நீங்க இதையெல்லாம் முடிச்சிட்டு வாங்க”என்று அமுதினியனிடம் கூறவும்,
உடனே அவனும்,“சரிங்க”என்றுரைத்து விட்டு வேதவள்ளியிடம் நிலைத்திருந்த தன் பார்வையை விலக்கி வேலையில் கவனத்தைப் பதிக்க,
அவனிடமிருந்து விலகி நடந்து அலுவலக அறையில் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு அவனது வரவை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அண்ணனும், தங்கையும்.
இங்கே எப்பொழுதும் போலவே தன்னுடைய அன்றாட வேலையைச் சிரத்தையுடன் பார்த்து முடித்து,
“ஒவ்வொரு கடைகளுக்கும் போற எண்ணெய் அளவுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் கூடவோ, குறையவோ கூடாது! அதை மனசுல வச்சுக்கிட்டுச் சரியாக வேலைப் பார்க்கனும்!”என்று வேலையாட்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டு விட்டுத் தன் கரங்களை நன்றாக கழுவி விட்டு அலுவலக அறைக்குள் நுழைந்து,
தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு,”இப்போ எங்கிட்ட நீங்க எதுவாக இருந்தாலும் பேசலாம்”எனத் தனக்கு எதிராக உட்கார்ந்து இருந்த அந்த உடன்பிறப்புகளிடம் கூறினான் அமுதினியன்.
“எனக்கு உங்க கிட்ட பேச எதுவும் இல்லைங்க! வள்ளி தான் பேச வந்திருக்கிறாள்!”எனத் தன் தங்கையைக் காட்டிச் சொன்னான் வைரமணி.
“அப்படின்னா பேசலாமே? ஏன் இவங்க அமைதியாகவே இருக்காங்க? ஒருவேளை எங்கிட்டே பேச இவங்களுக்குப் பயமா? பதட்டமா? தயக்கமா? சங்கட்டமா?”என்று பெண்ணவளிடம் தன் நெற்றிப் புருவத்தை உயர்த்திக் கேட்கவும்,
அதில் தனது தன்மானம் சீண்டப் பட்டதை உணர்ந்து,”அப்படியெல்லாம் எதுவுமே இல்லை! நான் உங்க கிட்ட பேசத் தயாராக இருக்கேன்!”என அவனுக்குத் தைரியமாகப் பதில் கூறினாள் வேதவள்ளி.
அதில் அவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு,”அப்போ பேசுங்க! ஏன் பூச்சாண்டியைப் பார்த்த மாதிரிப் பயந்து போயிருக்கீய?”என்று கிண்டலாக வினவவும்,
உடனே,”அண்ணே! நீங்க கொஞ்சம் வெளியே இருக்க முடியுமா? நான் இவர் கிட்டே பேசிட்டு வர்றேன்”என்று தமையனிடம் அறிவுறுத்த,
அதற்குத் தானும் உடன்பட்டு அவ்வறையை விட்டு வெளியேறினான் வைரமணி.
– தொடரும்






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!