arrow_back
வந்தாயே உறவாக இந்நாள்! அத்தியாயம் 5

அத்தியாயம் 5

visibility 70
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அவனைக் கண்டதும்,”ஏதாவது சாப்பிட்றீயளா?”என்று விசாரித்தான் வைரமணி. 

 

அதற்கு,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ங்க. நான் வரும் போது பலகாரம் சாப்பிட்டுட்டுத் தான் வந்தேன்”என்றுரைத்து விட்டிருந்தான் அமுதினியன். 

 

“சரிங்க. உங்களுக்குத் திடீர்னு எப்படி என் தங்கச்சியைக் கட்டிக்கனும்னு யோசனை வந்துச்சு?”எனக் கேட்கவும், 

 

அதில் அவனது கண்ணைப் பார்த்து,”எனக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசனை இருந்துச்சுங்க. அது உங்கத் தங்கச்சியாக இருந்தால் இன்னும் நல்லதாக இருக்கும்னு நினைச்சேன்! அதான், உங்ககிட்ட வந்து பொண்ணுக் கேட்டேன்”என்று அவனுக்குப் பதிலளிக்க, 

 

“அப்படியா? அப்போ உங்களுக்குக் கல்யாணம் செய்துக்க ஆசை இருந்தால் வேற யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து இருக்கலாமே? அது ஏன் என்னோட தங்கச்சியைக் கேட்டு வந்தீங்க?”என்றிருந்தான் வைரமணி. 

 

“நீங்க இப்படியானதொரு கேள்வியைக் கேட்பீங்கன்னு எனக்கு முதல்லயே தெரியும்! இதுக்கான காரணமும் எங்கிட்ட இருக்கு!”என்றவனோ, 

 

தானே மேலும் தொடர்ந்து,”எனக்குக் கல்யாணம் கட்டிக்க ஆசை வந்ததுமே எனக்கு முதல்ல ஞாவகத்துக்கு வந்ததே உங்களோட தங்கச்சித் தான்! ஏன்னா, அவங்களுக்குத் தான் என்னோட நிலைமை நல்லா தெரியும்! அதே மாதிரி எனக்கும் அவங்களோட இப்போதைய மனநிலையைப் பத்தி நல்லாவே புரியும்! அதனால் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையாக, ஆதரவாக, ஆறுதலாக வாழ்வோம்! அதனால் தான் உங்கத் தங்கச்சியைக் கட்டிக்க ஆசைப்பட்றேன்!”என்று அவனுக்கு விளக்கம் அளித்தான் அமுதினியன். 

 

உடனே அவனைக் கூர்மையானப் பார்வையால் துளைத்து,”இது மட்டும் தான் காரணமா?”எனக் கேட்டிருந்தான் வைரமணி. 

 

அதில் அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்து,”இது மட்டும் காரணம் இல்லைங்க! உங்கத் தங்கச்சியைப் புருஷனைக் காவு கொடுத்துட்டாள்! இவ ஒரு ராசியில்லாதவள்ன்னு ஊரில் இருக்கிற எல்லாருமே சொல்லிக் கரிச்சுக் கொட்றாங்க! அவங்களோட நிலைமையில் தான் நானும் இருக்கேன்! அதனால் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தால் அந்தப் பேர், பழி எல்லாமே விலகிடும்! எங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சா மாதிரியும், எங்களுக்கு ஏத்த துணைக் கிடைச்சா மாதிரியும் இருக்கும்! அதனால் தான் கேட்கிறேன்”என அவனிடம் சொல்லிப் புரிய வைக்க முயலவும்,

 

அதைக் கேட்டதுமே தனக்குள் இருந்தக் குழப்பம் மறைந்து போவதை உணர்ந்து கொண்டு,

 

“ம்ஹ்ம். நீங்க சொல்வதும் சரியாகத் தான் இருக்கு! ஆனால் இந்தக் காரணத்துக்கு எந்தங்கச்சி ஒத்துக்குவாளான்னுத் தெரியலைங்க!”என்றவனிடம், 

 

“அது எனக்கும் தெரியும்ங்க. அவங்க கிட்டே நான் இப்போ சொன்னதைப் பத்தி எடுத்துச் சொல்லிப் பாருங்க! அதுக்கப்புறமும் அவங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னா அப்படியே விட்ருங்க! அவங்களை இதுக்காக கட்டாயப்படுத்தாதீங்க!”என்று அவனுக்கு அறிவுறுத்தினான் அமுதினியன். 

 

அதில் அவன் மீது நல்ல அபிப்பிராயம் உருவாகி விடவே,”சரிங்க. நான் என் குடும்பத்து ஆளுங்க கிட்டே இதைப் பத்திப் பேசிட்டு உங்களுக்குச் சொல்றேன்”என அவனிடம் கூறி அனுப்பி வைத்து விட்டு ஆலையில் இருந்து வீட்டிற்கு விரைந்தான் வைரமணி. 

 

கணவனின் வருகையைக் கவனித்து விட்டு அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து உபசரித்து,”என்ன அவர் கிட்டே பேசிட்டீயளா?”என விசாரித்தாள் இளவரசி. 

 

“ம்ஹ்ம். பேசியாச்சும்மா”என்றதுமே,

 

“என்னச் சொன்னாரு?”என்று மகனிடம் ஆர்வத்துடன் கேட்டிருந்தார் வனக்கிளி. 

 

ஆனால் இந்த விஷயத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லாததைப் போல் இதையெல்லாம் கண்டும், காணாமல் இருந்தாள் வேதவள்ளி. 

 

அவளைக் கவனிக்காமலேயே தங்களுக்குள் இதைப் பற்றிய கலந்துரையாடலில் இறங்குவதற்கு அவளது மற்றக் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் விருப்பமில்லை. 

 

ஏனெனில் இதில் முக்கியமாக முடிவெடுக்கும் இடத்தில் வேதவள்ளி இருக்கும் போது அவளை இந்தப் பேச்சு வார்த்தையில் உள்நுழைப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்! 

 

அதனாலேயே,”வள்ளி! உன்னோட வாழ்க்கை விஷயத்தைப் பத்தி தான் நாங்கப் பேசிட்டு இருக்கோம்ன்னு உனக்குத் தெரியுது தானே? அப்பறமும் எனக்கு என்னன்னு இருந்தால் என்ன அர்த்தம்?”என்று மகளிடம் அதட்டலாக வினவினார் வனக்கிளி. 

 

அதைக் கேட்டதும்,”நான் ஒன்னும் நீங்கப் பேசுவதை எல்லாம் கேட்காமல் இல்லை! எனக்கு எல்லாமே காதில் விழுகுது தான்!”என்று அவருக்குச் சலிப்புடன் பதிலளித்தாள் வேதவள்ளி. 

 

“அப்போ எங்க கூட வந்து உட்கார்ந்து நீயும் இதுக்கு உன்னோட கருத்து என்னன்னுச் சொல்லலாம்லத்தா? இப்படியே இருந்தால் இந்த விஷயத்தில் என்னன்னு முடிவெடுக்க முடியும்?”எனத் தன்னுடைய நாத்தனாருக்கு அறிவுரை வழங்கினாள் இளவரசி. 

 

அதற்கு அவளோ,”ம்க்கும்! நான் இதில் என்னத்தச் சொல்ல அண்ணி? அதான், அவர் நம்ம ஆலைக்கு வந்து பேசிட்டுப் போன அப்போவே உங்க எல்லார் கிட்டேயும் என்னோட முடிவைச் சொல்லிட்டேனே அண்ணி? அதுக்கப்புறமும் சொல்ல என்ன இருக்கு?”என்றாள் வேண்டாவெறுப்பாக. 

 

“நீ இப்படி சலிச்சுட்டுப் பேசாத ஆத்தா! உன்னோட வாழ்க்கையையும், உன்னையும் நட்டாத்துல விட்டுட்டு எங்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் சொல்லு? அதுக்காக நீ எங்களுக்குப் பாரமாக இருக்கன்னு நாங்கச் சொல்ல வரலை! உன்னைப் புரிஞ்சிக்கிட்டு, உன்னை மாதிரியே வாழ்க்கையில் அடிபட்ட ஒருத்தர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படும் போது அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதில் தப்பு இல்லைத் தானே? நீ அதைப் பத்திக் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாமே?”என்று அவளுக்குப் புரியும் படியாகச் சொல்லிப் பார்த்தாள் இளவரசி. 

 

“நீங்கச் சொல்வது நியாயமான வார்த்தைகள் தான் அண்ணி. அவுகளுக்கு வேணும்னா என்னைக் கட்டிக்க மனசு வந்து இருக்கலாம். ஆனால் எனக்கு இதை உடனே ஏத்துக்கிறதுக்கு மனசு வரலையே! நான் என்னத்தச் செய்றதுன்னுச் சொல்லுங்க? நீங்கச் சொல்றதுக்காக நான் இதுக்குச் சம்மதிச்சா கல்யாணத்துக்கு அப்பறம் என்னால் அவரோட மனசு ஒத்துப் போய் வாழ முடியும்ன்னுத் தோனலையே!”எனத் தன் மனதில் இருந்ததை தன்னுடைய குடும்பத்தாரிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள் வேதவள்ளி. 

 

“எதையுமே எடுத்தோம், கவிழ்த்தோம்ன்னு முடிவு பண்ணிடாதே ஆத்தா! நான் முதல்ல அவர் எங்கிட்ட உன்னை எதுக்காக கல்யாணம் கட்டிக்க விருப்பப்பட்றாருன்னு நான் சொல்லிட்றேன்த்தா. அதுக்கப்புறமும் உனக்கு இதில் சம்மதம் இல்லைன்னா இதை இப்படியே விட்டுடலாம்!”என்று அவளிடம் உரைக்கவும், 

 

உடனே,”சரிண்ணே”என்றுரைத்து விட்டுத் தன்னுடைய தமையன் கூறப் போவதைக் கவனமாக கேட்க ஆயத்தம் ஆகி விட்டிருந்தாள். 

 

அவளைப் போலவே தாங்கள் இருவரும் வைரமணியின் வாயிலிருந்து உதிரப் போகும் வார்த்தைகளைக் கேட்கத் தயாரானார்கள் வனக்கிளியும், இளவரசியும். 

 

உடனே தனது குரலைச் செருமிக் கொண்டுச் சிறிது நேரத்திற்கு முன்புத் தன்னிடம் அமுதினியன் கூறியவற்றை எல்லாம் தனது குடும்ப உறுப்பினர்களிடம் விரிவாக விவரித்து முடித்து விட்டிருந்தான் வைரமணி. 

 

அதைக் கேட்டவுடனேயே,”என்னப்பா சொல்ற நீயி? அந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுச்சா என்ன?”என்று அவனிடம் தன்னுடைய காதுகளில் விழுந்ததை நம்ப இயலாமல் கேட்டார் அவனது அன்னை. 

 

“ஆமாம்மா. அவர் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல் உங்க எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேன்”என்றவுடன், 

 

“அப்போ அவர் நல்லா, தெளிவாக முடிவெடுத்து தான் இந்த விஷயத்தை நம்மக்கிட்டே பேசவே வந்திருந்தார் போலவே – ங்க?”என்றிருந்தாள் இளவரசி. 

 

“அதனால் தான் நான் உங்க கிட்ட இப்பவும் இந்தச் சம்பந்தத்தை விட்டுடக் கூடாதுன்னு அறிவுறுத்திட்டு இருக்கேன்”எனக் கூறிப் பெருமூச்செறிந்தான் வைரமணி.

 

அவர்கள் மூவரும் தத்துமது கருத்துக்களைத் தெரிவித்ததைப் போல் தானும் எதையும் சொல்லாமல் தனது புருவங்களைச் சுருக்கிச் சிந்தனையில் லயித்து விட்டிருந்தாள் வேதவள்ளி. 

 

அதைக் கண்டு கொண்டு அவள் நன்றாக யோசித்து விட்டு அவளது முடிவைச் சொல்லட்டும் என்று உறுதிப் பூண்டு விட்டு,

 

“எனக்குப் பலகாரம் ஏதாவது சாப்பிடக் கொண்டு வா அரசிம்மா”எனத் தன்னுடைய மனைவியிடம் கேட்டுக் கொள்ளவும், 

 

உடனே,”சரிங்க”என்று அவனிடம் உரைத்து விட்டு அன்று மாலைச் சிற்றுண்டியாகச் செய்திருந்த ராகி அடைகளையும், அவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்காகச் செய்திருந்த தேங்காய்ச் சட்னியையும் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்து உண்ணச் செய்தாள் இளவரசி. 

 

அதை வாங்கிச் சாப்பிடத் தொடங்கி விட்டான் வைரமணி.

 

“உனக்கும் சாப்பிட எடுத்துட்டு வரவாத்தா?”என்று தன்னுடைய நாத்தனாரிடம் கேட்க,

 

“எனக்கு எதுவும் வேண்டாம் அண்ணி”என அவளிடம் பதிலளித்து விட்டு,

 

“ நான் என் அறைக்குப் போய் ஓய்வெடுக்கிறேன்”என்று மூவருக்கும் பொதுவாக அறிவித்து விட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் வேதவள்ளி. 

 

அவள் சென்றதும்,”அவ யோசிச்சுக் கண்டிப்பாக நல்ல முடிவாகச் சொல்லுவாள்ன்னு நம்புவோம்”என்று மற்ற இருவரிடமும் சொல்லிக் கொண்டார் வனக்கிளி.

 

“அவ இதுக்குச் சம்மதிச்சா அவளோட வாழ்க்கையில் இதுக்கு அப்பறம் எல்லாமே நல்லதாகவே நடக்கும்! ஆனால் அவ இதுக்கு மறுத்துட்டா அதுக்குப் பிறகும் அவளை நாமக் கட்டாயப்படுத்த முடியாது! அவளோட முடிவு தான் எல்லாமே!”என்றுரைத்து விட்டான் வைரமணி.

 

“நல்லதே நடக்கும்ன்னு நம்புவோம்” எனத் தானும் மொழிந்தாள் இளவரசி.

 

இங்கே தனது அறைக் கட்டிலில் அமர்ந்து, தனது தமையனிடம் அந்த அமுதினியன் கூறியவற்றைக் கேட்டதில் இருந்து இப்பொழுது வரைக்கும் அவனுக்குத் தன் மேல் எப்படி இப்படியானதொரு எண்ணம் தோன்றியது என்று வியந்து போனாள் வேதவள்ளி. 

 

தனக்கு மட்டும் தான் அவன் தன்னுடைய கணவனின் நண்பன் என்ற எண்ணம் இருக்கிறது! 

 

ஆனால் அவனுக்குத், தான் அவனது தோழனின் மனைவியாக இருந்துள்ளாள் என்ற எண்ணமே இல்லை போலும்! 

 

அதனால் தான், எந்தவித சங்கடமும் இன்றித் தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளான் என்று உறுதியாக நம்பினாள் பெண்ணவள். 

 

இப்பொழுது இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் பொறுப்புத் தன்னிடம் வந்துள்ளது! இதில், தான் எந்த மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்றக் குழப்பத்தில் ஆழ்ந்து போய் விட்டாள் வேதவள்ளி.

 

இதில் தனக்கு ஒருவரிடம் தான் தீர்வுக் கிடைக்கும் என்று உறுதியாக நம்பியவளோ, 

 

அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் முன்பு வந்து நின்று கொண்டு, 

 

“நான் அந்த அமுதினியன் கிட்டே நேரடியாகச் சில விஷயங்களைப் பத்திப் பேசனும்! அதுக்கப்புறம் தான் இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த மாதிரியான முடிவை எடுக்கனும்னு எனக்கு ஒரு தீர்வுக் கிடைக்கும்!”எனத் தீர்க்கமாக கூறி விட்டிருந்தாள் வேதவள்ளி. 

 

அதைக் கேட்டதுமே தாங்கள் மூவரும் தங்களை ருவரையொருவர் பார்த்து விட்டு, 

 

“நீ நெசமாகத் தான் சொல்றியா?”என்றிருந்தார் வனக்கிளி. 

 

“ஆமாம்மா. நான் நெசத்தைத் தான் சொல்றேன்! எனக்கு அவுக கிட்டே சில கேள்விகளைக் கேட்கனும்!”என்று அவருக்குப் பதிலளித்தாள் வேதவள்ளி. 

 

“அப்போ சரி. நான் நாளைக்கே இதைப் பத்தி அவர் கிட்டே சொல்லிட்டு நானே உன்னை அவர் கிட்டே பேசக் கூட்டிட்டுப் போறேன்!”என்று தங்கைக்கு வாக்களித்தான் வைரமணி. 

 

இதே நேரத்தில், வேதவள்ளியின் எண்ணெய் ஆலைக்கு அமுதினியன் போய் அவர்களிடம் பேசி விட்டு வந்திருக்கிறான் என்றத் தகவலை மூன்றாம் மனிதர் மூலமாக கேட்டறிந்து விட்டு அவன் மீது கடுங்கோபமும், ஆத்திரமும் கொண்டனர் குமரிமுத்து மற்றும் பாண்டியம்மாள். 

 

                      – தொடரும்

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 6

அதனால் அவனைத் தங்களது வீட்டிற்கு வரவழைத்து,”நீ உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற இனியா? நாங்க அவ்வளவு எடுத்துச் சொல்லியும் நீ அவங்களைப் பார்க்கப் போயிருக்கிற! அதுக்கான காரணத்தை நாங்கத் தெரிஞ்சிக்கலாமா?”என அமுதினியனிடம் கோபத்தில் இரைந்தார் பாண்டியம்மாள்.  அதில் அவரை நிதானமாக ஏறிட்டுப்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்