arrow_back
கனியாத்ரேயம் கனி 4
கனியாத்ரேயம் chevron_right பகுதி 4 / 15

கனி 4

visibility 24
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 4 

 

கண்ணைத் திறந்தவன் தான் யாரைப் பார்க்கிறோம் என்றே தெரியாமல் இருந்தான். அப்போது வெற்றியின் உதடுகள் மெதுவாக அசைந்தன.

 

“அம்மா…” அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும், அமிர்தவள்ளி உடனே அவனருகில் சென்று அவனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.

 

அவளது தொடுதலை உணர்ந்த வெற்றி, தன் கையைப் பற்றியிருப்பது தன் அம்மாதான் என்பதை உணர்ந்துகொண்டான்.

 

“அம்மா…” மீண்டும் அவன் அழைக்க, அமிர்தவள்ளியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

 

“நான் இங்கதான் இருக்கேன் பா… பயப்படாத. உனக்கு ஒன்னும் இல்ல” வெற்றியின் தலையை அமிர்தவள்ளி இதமாக வருடிக்கொடுத்தார்.

 

“நைரா…” இறுகிய குரலில் நைராவின் பெயரை அழைத்தான் வெற்றி.

 

அதற்குள் நைராவும் அவனருகில் வந்து நின்றாள். வெற்றியின் மற்றொரு கையை அவள் மெதுவாகப் பற்றிக்கொண்டாள். நைராவின் தொடுகையை நன்றாக அறிந்தான் வெற்றி.

 

வெற்றியின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர், “பெயின் கில்லர் கொடுத்து இருக்கோம். மெதுவாக உட்கார வைக்கலாம். ஆனால் அதிகமாக அசைக்காதீங்க. வலி இருந்தால் உடனே படுக்க வச்சிடுங்க” என்றார்.

 

மருத்துவர் கூறியதும், அமிர்தவள்ளியும் நைராவும் வெற்றியின் இருபுறமும் நின்றுகொண்டு, அவனது கைகளுக்கு ஆதரவாகப் பிடித்தனர்.

 

மெதுவாக, மிகவும் கவனமாக அவனைப் படுக்கையிலிருந்து எழுப்பி உட்கார வைத்தனர். வெற்றி ஒருவழியாக உட்கார்ந்தான்.

 

அவனது வலது புறத்தில் நைராவும், இடது புறத்தில் அமிர்தவள்ளியும் நின்றிருந்தனர். சரணும் கனியும் சற்று தள்ளி நின்றிருந்தனர்.

 

அனைவரின் பார்வையும் வெற்றியின் மீதே இருந்தது. வெற்றியின் இதழும் தொண்டைக் குழியும் வறண்டு போயிருக்க, தாயிடம் தண்ணீர் கேட்க, அமிர்தவள்ளி தன் கையாலேயே வெற்றிக்குத் தண்ணீர் புகட்டினார்.

 

வெற்றி, “நைரா…” என்று அழைக்க,

 

அவள் மலையாளத்தில், “அத்தான்… நான் இப்போ நல்லாதான் இருக்கேன். நீ நல்லபடியா வந்தாலே போதும்” என்று கலங்கிய குரலில் கூறினாள்.

 

சரணை பற்றி வைத்திருந்த வெற்றி, தாயிடம் அவன் எப்படி இருக்கிறான் என்று கேட்டு அறிந்துகொண்டான். அத்தோடு, “அம்மா… டாக்டரை கொஞ்சம் கூப்பிட முடியுமா?” என்று கேட்டான்.

 

அமிர்தவள்ளி கனியைப் பார்க்க, கனி உடனே ஓடிச்சென்று டாக்டரை அழைத்து வந்தாள்.

 

“யெஸ் மிஸ்டர் வெற்றி, உங்களுக்கு இப்போ என்ன பண்ணுது?” என்று டாக்டர் கேட்டார்.

“டாக்டர்… என்னால யாரையும் பார்க்க முடியல. எனக்கு எல்லாம் இருட்டா தெரியுது”

 

என்ன நடந்தாலும் நம்பிக்கையைத் தளரவிடக்கூடாதென்று வெற்றி உறுதியாக இருந்தான்.

 

என்று கூறியதும், அமிர்தவள்ளி அங்கே மருத்துவர் இருப்பதையும் மறந்து கதறி அழ ஆரம்பித்தார்.

 

“ஏன்… ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் நடக்குது?” என்று நைராவாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்கிப் போனாள். ஆனால் கனியும் சரணும் மட்டும் ஓரளவு தைரியமாக இருந்தனர்.

 

“நீங்க இருபத்துநான்கு மணி நேரத்துக்கு மேல கண்ணை மூடி இருந்ததாலதான் உங்க கண்கள் சிவந்து இருக்கும்னு நினைச்சேன். ஆனால் உங்களுக்கு கண்ணில் ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு இப்போ டவுட் வருது, மிஸ்டர் வெற்றி. இப்போ நான் இந்த பேனாவை எந்தப் பக்கம் அசைக்கிறேன்னு பாருங்க”

 

என்று மருத்துவர் கூறியபடி பேனாவை வெற்றியின் வலது பக்கமும் இடது பக்கமும் அசைத்தார்.

 

ஆனால் வெற்றியோ, மருத்துவர் அசைத்த பேனாவைப் பார்க்காமல், தன் கருவிழிகளை அசைக்காமலேயே வைத்திருந்தான்.

 

அந்த நேரத்தில் கடைக்குப் போய்விட்டு வந்த திருச்செல்வம், மருத்துவமனை அறைக்குள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் மேலும் பயந்துபோனார்.

 

‘ஏன் என் மகனுக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனையா வந்துகிட்டே இருக்கு? அவனுக்கு ஒரு விடிவு காலமே வராதா?’ என்று அந்தத் தந்தை கடவுளிடம் மன்றாடிக் கெஞ்சினார்.

 

மருத்துவர் மீண்டும் வெற்றியின் அருகில் சென்று, “உங்களுக்கு கண்ணுல என்ன மாதிரி ஃபீல் இருக்கு?” என்று கேட்டார்.

 

சில நொடிகள் அமைதியாக இருந்த வெற்றி, “லைட்டா எரிகிற மாதிரி இருக்கு டாக்டர்… கண் இமைக்கும்போது சுல் சுல்லுனு வலிக்குது. கஷ்டமா இருக்கு டாக்ட” 

 

வெற்றி கூறியதைக் கேட்ட மருத்துவரின் முகம் சட்டென்று மாறியது. அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக, “இப்போவே ஒரு ஐ ஸ்பெசலிஸ்ட் டாக்டர்க்கு அரெஞ் பண்ணுறேன்”

 

என்று கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக வெளியேறினார்.

 

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, கண் சிறப்பு மருத்துவர் வெற்றியைப் பரிசோதிப்பதற்காக வந்தார்.

 

அவனது கண்களை முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்தவர், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

 

“வெற்றியோட கண்களுக்குள்ள கண்ணாடித் தூள்கள் சிக்கியிருக்கு. உடனடியாக ஆபரேஷன் செய்து அதை கிளியர் பண்ணியாகணும்” என்றார்.

 

அதைக் கேட்டதும் அனைவரும் பதற்றமடைந்தனர். உடனடியாக வெற்றியை அறுவைச் சிகிச்சைக்காக அறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

ஆபரேஷன் அறைக்கு வெளியே அனைவரும் காத்திருக்க, மித்ரனும் கௌரியும் வந்து சேர்ந்தனர். சரணுக்கும் வெற்றிக்கும் நைராவுக்கும் தேவையான உணவுகளைச் செய்து எடுத்துக்கொண்டு வந்திருந்த கௌரி, சரணை சாப்பிட அழைக்க, அவன், “வேண்டாம்” என்று மறுத்தான்.

 

உடனே அமிர்தவள்ளி , “இல்ல சரண், நீ சாப்பிட்டு மாத்திரை போடணும். அதனால சாப்பிட்டு வா பா. கனி, கௌரி ரெண்டு பேரும் உன்னைப் பார்த்துப்பாங்க” என்றார்.

 

அமிர்தவள்ளி கூறியதும், “சரிம்மா” என்று தலையை அசைத்தவன், உணவருந்தச் செல்ல, கனி நைராவையும் கையோடு அழைத்து வந்து, அவளுக்கும் உணவு கொடுக்கச் செய்தாள்.

 

சரணின் இரு கைகளும் கட்டுப்போடப்பட்டிருக்க, விவரம் தெரிந்த பிறகு யாரும் தனக்கு உணவு ஊட்டியதாக அவனுக்கு ஞாபகமே இல்லை.

 

மறுபுறம், நைராவுக்கு கனி உணவை ஒரு தட்டில் வைத்துக் கொடுக்க, அவள் உணவே வேண்டாம் என்று மறுத்திருந்தாள். அவ்வேளை நைராவின் தாயும் தந்தையும் வந்திருக்க, ஒருவழியாகக் கெஞ்சி இரண்டு மூன்று வாய்களை நைராவின் தாய் அவளுக்கு ஊட்டிவிட்டிருந்தாள்.

 

நேரத்திற்கு அருந்த வேண்டிய மாத்திரைகளை சரணுக்கும் நைராவுக்கும் எடுத்துக்கொடுத்திருந்தாள் கனியா.

 

சில மணி நேரங்களுக்குப் பிறகு, அறுவைச் சிகிச்சை முடிந்து வெற்றியை மீண்டும் அறைக்கு அழைத்து வந்தனர்.

 

“கண்ணுக்குள் இருந்த கண்ணாடித் தூள்களை கிளியர் பண்ணிட்டோம். ஆனால் ரெண்டு கண்களையும் ரொம்ப பாதிச்சு இருக்கு. கருவிழி அறுபது வீதம் டேமெஜ் ஆகிருக்கு”

 

மருத்துவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் மித்ரன், திருச்செல்வம், அமிர்தவள்ளி ஆகியோரின் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்தன.

 

“இப்போதே எதையும் உறுதியாக சொல்ல முடியாது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். ஆனால் வெற்றிக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா என்பது உறுதியில்லை. ஒருவேளை பார்வை முழுமையாக இல்லாமலேயே போய்விடும் வாய்ப்பும் இருக்கு”

 

அமிர்தவள்ளியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“அப்போ… என் பையன் இனிமேல் உலகத்தையே பார்க்க முடியாதா டாக்டர்?” என்று நடுங்கிய குரலில் கேட்டார்.

 

மருத்துவர் மெதுவாகப் பெருமூச்சு விட்டபடி, “இப்போ அதைப் பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. கடவுளை வேண்டிக்கோங்க. மருத்துவ ரீதியாக எங்களால் முடிந்த முயற்சியை நாங்கள் செய்றோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

 

தினமும் நான்கு வேளை கண்களுக்கு ஊற்றுவதற்கான மருந்தையும், மாதத்தில் இருமுறை ஸ்கேன் செய்வதற்கான ஏற்பாடுகளையும் டாக்டர் எழுதி கொடுத்திருந்தார்.

 

கண் மருத்துவருடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு மித்ரன் சென்றிருந்தான்.

 

நைரா மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை அமிர்தவள்ளி அருகில் சென்று தன் தோளோடு சாய்த்துக்கொண்டார்.

 

சரணுக்கும் நைராவுக்கும் சிகிச்சைகள் முடிந்திருந்ததால், இருவரையும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.

 

அவர்களுடன் கௌரியும் கனியும் வீட்டிற்குச் செல்லும்படி அமிர்தவள்ளி கூறினார். கடந்த சில நாட்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருந்த கனிக்கும் ஓய்வு தேவைப்பட்டதால், அவளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

மருத்துவமனை அறையில் வெற்றியுடன் திருச்செல்வம், அமிர்தவள்ளி மற்றும் மித்ரன் மட்டுமே இருந்தனர்.

 

சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெற்றி மெதுவாகச் சுயநினைவுக்கு வந்தான்.

 

படுக்கையில் இருந்தபடியே தன் கையை மெதுவாகத் தடவியவன், அருகில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றான்.

 

“என் பக்கத்துல யாரு இருக்கீங்க?” வெற்றியின் அந்தக் கேள்வியைக் கேட்டதும், அமிர்தவள்ளியின் மனம் நொறுங்கிப் போனது. பெற்ற மகன் இப்படியொரு நிலையில் இருப்பதை நினைத்து, சத்தம் எழுப்பாமல் தன் வாயைப் பொத்தியபடி கண்ணீரை அடக்கிக்கொண்டார்.

 

அதைக் கவனித்த மித்ரன் உடனே வெற்றியின் கையைப் பற்றிக்கொண்டான்.

 

“அண்ணா… நான் பக்கத்துலதானா இருக்கேன். அம்மா அப்பாவும் இருக்காங்க” என்று அவனது கையைப் பிடித்துக்கொண்டான்.

 

சிறிது நேரம் அமைதியாக இருந்த மித்ரன், “அண்ணா… இன்னொரு மூணு மாசத்துக்கு அப்புறம் கல்யாணம் வச்சுக்கலாம். நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன்” என்றான்.

 

“இல்லடா… அடுத்த முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று வெற்றி உறுதியாகக் கூறினான்.

 

அவன் சொன்னதைக் கேட்டதும் அமிர்தவள்ளியும் திருச்செல்வமும் அதிர்ந்து போனார்கள்.

 

“என்னடா வெற்றி… இந்த நிலையில எப்படி கல்யாணம்? உன்னால இப்போ எழுந்து நடக்கக்கூட முடியல. வயித்துல வேற காயம் இருக்கு. அது கொஞ்சம் ஆறட்டும் பா” என்று அமிர்தவள்ளி கண்ணீருடன் கூறினார்.

 

“இல்லம்மா… எனக்கு நல்லா பெயின்கில்லர் கொடுத்திருக்காங்க. பெருசா எதுவும் தெரியல. கல்யாணம் நடந்தே ஆகணும்” என்று வெற்றி பிடிவாதமாகக் கூறினான். “வெற்றி…” என்று அமிர்தவள்ளி மீண்டும் அழைக்க,

 

“எனக்கு கல்யாணம் நடந்தே ஆகணும் மா. அதுல எந்த மாற்றமும் வேண்டாம் என்று வெற்றி உறுதியாகக் கூறினான்.

 

அவனது மனதிற்குள் நைராவைப் பிரிந்துவிடுவோமோ என்ற பயம் ஆழமாகப் பதிந்திருந்தது. தன்னுடைய கல்யாணத்திற்கும் தனக்கும் இடையே ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்று தடையாக வந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

 

கடவுள் ஏன் தனக்கு இப்படியெல்லாம் சோதனை கொடுக்கிறார் என்ற வேதனையும் அவனுக்குள் இருந்தது.

 

அதனால்தான், இனியும் எதையாவது காரணமாக வைத்து கல்யாணம் தள்ளிப்போகக் கூடாது என்பதில் வெற்றி பிடிவாதமாக இருந்தான்.

 

மகன் இவ்வளவு உறுதியாகக் கேட்கும்போது, அவனது மனதை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அமிர்தவள்ளியும் திருச்செல்வமும் அமைதியாக இருந்தனர்.

 

உணவு, பழங்கள் மற்றும் மாத்திரைகளை சரியான வேளையில் எடுத்துக் கொண்ட வெற்றிக்கு உடல்நிலை ஒரு வாரத்தில் சற்று தேறியிருந்தது. மருத்துவமனையில் அவன் இருந்த அறைக்குள் மாத்திரம் அவன் தனியாக நடக்க கற்றுக் கொண்டான். வெளியில் சென்றால் கண்டிப்பாக இன்னொருவரின் துணை தேவையாக இருந்தது.

 

டாக்டரிடம் அறிவுறுத்தலைக் கேட்டு மித்ரனும் அமிர்தவள்ளியும் சேர்ந்து வெற்றியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

 

அடுத்த முகூர்த்தத்திலேயே வெற்றிக்கும் மித்ரனுக்கும் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

******

 

அடுத்த அத்தியாயம்

கனி 5

கனி 5  வெற்றி மற்றும் மித்ரனின் திருமணத்திற்காக மணிமாறன் தன் வேலைகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு, முதல் நாள் இரவே வந்தவர் தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். சரணுக்கு வலது கையில் ஏற்பட்டிருந்த காயங்கள் ஆறியிருந்த நிலையில், வலது கை கட்டை மருத்துவர்கள் அகற்றியிருந்தனர். வலது கை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்