arrow_back
கனியாத்ரேயம் கனி 5
கனியாத்ரேயம் chevron_right பகுதி 5 / 15

கனி 5

visibility 27
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 5 

 

வெற்றி மற்றும் மித்ரனின் திருமணத்திற்காக மணிமாறன் தன் வேலைகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு, முதல் நாள் இரவே வந்தவர் தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

 

சரணுக்கு வலது கையில் ஏற்பட்டிருந்த காயங்கள் ஆறியிருந்த நிலையில், வலது கை கட்டை மருத்துவர்கள் அகற்றியிருந்தனர். வலது கை மட்டும் இப்போது கட்டின்றி இருந்தது. ஆனால் இடது கையில் ஒரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், அந்தக் கையில் மட்டும் இன்னும் கட்டு அப்படியே இருந்தது.

 

வெற்றி அவனது அறை மாடியில் இருந்ததால், கீழே இறங்கி வருவதும் மீண்டும் மேலே செல்வதும் கடினமென்றாலும், அவன் அதை மாற்றிக்கொள்ளாமல் இருந்தான். மெல்லப் படிகளின் கைப்பிடியைப் பிடித்து மெதுவாக ஏறி இறங்கப் பழகியிருந்தான். அவன் தனியாக ஏறி இறங்கினாலும், வெற்றியின் பக்கத்தில் ஒருவர் நடந்து சென்றனர்.

 

சரண் அவனுக்கு அருகிலேயே நின்றுகொண்டு வேலை சம்பந்தமான விஷயங்களைப் பேசிக்கொண்டே வந்தான்.

 

“அண்ணா… அமெரிக்காவில இருக்கிற கிளையன்ட் கிட்ட இந்த ப்ராஜெக்ட் விஷயமா பேசணும். நீங்க சொன்ன அந்த ப்ளான் சேஞ்ச் பண்ணா நல்லா இருக்கும் போல”

 

சரண் பேசிக்கொண்டிருக்க, வெற்றி எதையும் பிடிக்காமல் தனியாக மெதுவாக நடந்து வந்தான். அவனுக்கு அருகிலேயே சரண் இருந்தாலும், அவன் கையைப் பிடித்து அழைத்துச் செல்லவில்லை.

 

படிக்கட்டுகளின் அருகில் வந்த வெற்றி, கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஒவ்வொரு படியாகவும் மெதுவாக இறங்கத் தொடங்கினான்.

 

சரண் அவனுக்கு அருகிலேயே நின்று, அவன் தடுமாறாமல் இருப்பதை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தான்.

 

வெற்றி மெதுவாக கீழே இறங்கி வருவதைப் பார்த்த கலைவாணியின் மனம் வலித்தது.

 

சிறுவயதில் இருந்தே தன் கண் முன்னால் பார்த்து வளர்ந்த பையன். இன்று கண் பார்வையின்றி, ஒவ்வொரு அடியையும் தடவி தடவி எடுத்து வைப்பதைப் பார்த்ததும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

அவர் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றார், அங்கே முகத்தில் கையை வைத்துக்கொண்டு அமைதியாக அழுதுகொண்டிருந்தாள்.

 

அப்போது மணிமாறன் அங்கு வந்தார்.

 

“என்ன கலைவாணி?” என்று கேட்டபடி அருகில் வந்தார்.

 

கலைவாணி எதுவும் பேசாமல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

 

அவருக்கும் வெற்றியைப் பார்க்கும்போது மனம் கனத்துப் போனது.

 

வெற்றியின் அருகில் சென்ற மணிமாறன் எதுவுமே பேசாமல் அவனை கட்டியணைத்திருந்தார். கட்டியணைத்ததில் திடுக்கிட்டவன், கண்டுபிடித்துவிட்டான் யாரென்று.

 

“மாறன் மாமா…”

 

வெற்றி அவன் வாயால் கூற, மாறனின் உச்சி குளிர்ந்தது!

 

மணிமாறனுக்கு நடந்தது அனைத்தும் தெரிந்தவர்தான். இருப்பினும் வெற்றியிடம் துக்கம் விசாரிக்க விரும்பவில்லை. அவன் எப்போதும் போல நன்றாக இருக்கிறான் என்பதே அவர் கண்களில் தெரிந்தது.

 

சரண் அருகிலிருந்து வேலை விஷயமாக பேசிக்கொண்டு இருப்பதை அறிந்தவர்,

 

“சரி புதுமாப்பிள்ளை, உன்னோட அமெரிக்கா வேலை எல்லாம் நாளைக்கு மதியத்துக்குள்ள முடிச்சுறு. நாளைக்கு நைட் ஃப்ரீயா இருக்கணும் என புரிஞ்சுதா? விளையாட்டாய் கூறினார். வெற்றிக்கு சிறு வெட்கம் தோன்றி மறைந்தது.

 

“போங்க மாமா. உங்க குசும்பு மட்டும் குறையுதே இல்ல”என்று வெற்றி பற்கள் தெரிய சிரித்தான்.

 

பெற்ற பிள்ளை சிரிப்பதைக் கண்ட அமிர்தவள்ளிக்கு அப்போதுதான் உயிர் வந்தது.

 

“மாறன் தம்பியே வரணும் என் பையனை சிரிக்க வைக்க” என்று மாறனை அமிர்தவள்ளி சிலாகித்தார்.

 

“அதான் நான் வந்துட்டேனே அக்கா. இனி வெற்றி சிரிச்சுக்கிட்டே இருப்பான்” என்றதோடு, “சரி, நான் கனியாவை காலேஜ்ல விட்டுட்டு ஓடி வந்திடுறேன்” என்றார்.

 

பைக்கில் அவளை அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு, மாலை மீண்டும் அழைத்து வருவதற்குச் சென்றார்.

 

கனியா தனது தோழிகளைப் பார்த்ததும் அவர்களிடம் நடந்த விஷயங்களைப் பற்றிக் கவலையுடன் பேசினாள்.

 

“வெற்றி அண்ணாக்கு இப்படி ஆயிடுச்சே… ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு நல்ல மனுஷனுக்கு ஏன் இப்படி நடக்கணும்?” என்று வருத்தப்பட்டாள். அவளது மனம் முழுவதும் வெற்றியின் நிலையைப் பற்றியே இருந்தது.

 

இரவு வீட்டில், சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாம் மணிமாறனின் வேலைதான்! வெற்றியோ நன்றாக சிரித்துக்கொண்டிருந்தவன், தான் பார்வை இழந்ததை மறந்திருந்தான்.

 

இரவு தூங்குவதற்கு முன் கௌரி வெற்றியின் கண்களுக்கு மருந்து போட்டிருந்தாள்.

 

அடுத்த நாள் அதிகாலையிலேயே வீடு முழுவதும் திருமணக் கோலத்தில் களைகட்டியிருந்தது.

 

எல்லாரும் தயாராகிக்கொண்டிருக்க, வாசலில் பெரிய அழகான கோலம் ஒன்றைப் போட்டிருந்தாள் கனியா. முதலில் அந்தக் கோலத்துக்குத்தான் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் என்பது போலிருந்தது.

 

கௌரி அவள் அறையில் கல்யாணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்க, கனி அவளது கைகளை சுத்தமாகக் கழுவியவள் மாடியறைக்குச் சென்றாள். வெற்றியின் கண்களுக்கு மருந்தை ஊற்றிவிட்டு கீழே இறங்கினாள்.

 

“கனியா, வீட்டு வேலை எல்லாம் செய்ய ஆளுங்க இருக்காங்க. நீ போய் புடவைய கட்டு. சீக்கிரம் போ” என்று அமிர்தவள்ளி அவளைத் துரத்திவிட,

 

“அதெல்லாம் எனக்கு கௌரியக்கா கட்டிவிடுவாங்க பெரியம்மா” என்று கௌரியின் அறைக்குள் நுழைந்தாள் கனியா.

 

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கௌரியும் கனியாவும் தயாராகி வெளியே வர, இருவரையும் பார்த்து நெட்டுமுறித்தார் அமிர்தவள்ளி. ஆனால் முதல் முறை கனியாவைப் புடவையில் பார்ப்பது ஏதோ மகாலட்சுமியைப் பார்ப்பது போல் இருந்தது.

 

சந்தன நிறப் புடவையில் தங்கநிறமும் பச்சையும் கலந்த பார்டர், தலைநிறைய மல்லிகை மொட்டுகள், கண்களில் லேசாக கோடிட்ட மை, உதட்டில் ரோஸ் வர்ண சாயம். லேசான ஒப்பனையுடன் மாலை, ஆரம், இடுப்பு சங்கிலி, வளையல் என மேலும் கனியாவை அழகாகக் காட்டியது.

 

மணப்பெண் இருவருக்கும் தேவையான முகூர்த்தப் புடவை உள்ளிட்ட அனைத்து சீர்வரிசைப் பொருட்களும் தனித்தனியாகத் தட்டுகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

 

கனியும் கௌரியும் ஒவ்வொரு தட்டாக எடுத்துக்கொண்டு, மண்டபத்திற்கு அனுப்ப வேண்டிய பொருட்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

 

சரணும் தன்னால் முடிந்த அளவிற்கு திருமண வேலைகளில் உதவி செய்துகொண்டிருந்தான். கலைவாணியும் மணிமாறனும் ஏற்கனவே மண்டபத்திற்குச் சென்றிருந்தனர்.

 

அமிர்தவள்ளி மட்டும் இன்னும் வீட்டிலேயே இருந்தார். வெற்றியை அழைத்துக்கொண்டு மெதுவாக மண்டபத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

 

வெற்றியை மித்ரன் தயார்படுத்தியிருந்தான். பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளையாய் காரில் ஏறி அமர்ந்தான்.

 

அதன் பிறகு கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்ற மித்ரன், அங்கு நைராவின் வீட்டினரை கிளப்பிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தான் தயாராகி, திருமண மண்டபத்தை வந்தடைந்தான்.

 

மணமேடையில் ஐயரோடு வெற்றியும் அமர்ந்திருந்தான். பக்கத்தில் சரண் நின்றுகொண்டிருந்தான்.

 

அவனது கண்கள் கட்டப்பட்டிருந்தன. ஹோமத்தில் இருந்து எழுந்த புகையாலும், கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாலும், கண்களைச் சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது.

 

நைராவைப் பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவருக்கும் மனதில் இருந்த பதற்றம் கொஞ்சம் குறைந்து, நிம்மதி பிறந்தது. ஏற்கனவே ஒரு திருமணம் தோல்வியடைந்த நிலையில், வெற்றியின் இரண்டாவது திருமணம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருந்தது.

 

குறிப்பாக அமிர்தவள்ளிக்கு தாலி கட்டினால் போதும் என்றிருந்தது. நைரா வந்துவிட்டதைப் பார்த்ததும் சற்று அமைதியானார்.

 

ஆனால் கனியாவுக்கும் கௌரிக்கும் அளவில்லாத சந்தோஷம். சிறு வயதிலிருந்தே வெற்றி பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்தவர்கள் அவர்கள். அவனுடைய முதல் திருமணம் முறிந்தபோது, கனியா சிறுமியாக இருந்தாலும், கௌரி ஓரளவிற்கு பெரிய பெண்ணாக இருந்தாள். அந்தக் காலத்தில் வெற்றி பட்ட வேதனைகள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 

அதனால்தான், இப்போது அவனுடைய இரண்டாவது திருமணம் நல்லபடியாக நடைபெறப் போகிறது என்ற எண்ணமே இருவருக்கும் மனநிறைவைத் தந்திருந்தது.

 

கனியாவோ, திருமணம் நல்லபடியாக முடிந்ததும் குடும்பமாக குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து, வெற்றியின் வாழ்க்கை இனிமேல் எந்தத் தடையும் இல்லாமல் நல்லபடியாக அமைய வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டிருந்தாள்.

 

அதன் பிறகு திருமண மண்டபத்தில் முதல் சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறத் தொடங்கின.

 

கனி, தாலியைத் தொட்டு கும்பிட்டுவிட்டு அட்சதைத் தட்டை எடுத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்தவர்களிடம் கொடுக்கச் சென்றாள்.

 

ஒவ்வொருவராக அட்சதையைக் கொடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தவள், “என்ன பாக்குறீங்க? கல்யாணத்தை எவ்வளோ நேரம் வெளிய இருந்து பாக்கப் போறீங்க? உள்ள வந்து உட்காருங்க. அப்படியே அட்சதை எடுங்க. அடா உங்களதான் சொல்றேங்க. முதல்ல படிக்கிறத நிறுத்திட்டு அட்சதை எடுங்க” என்று வாசகர்களையும் அன்போடு அழைத்தாள்.

 

முகூர்த்தப் புடவையை மாற்றுவதற்காக நைரா சென்றிருந்தாள்.

 

அரை மணி நேரத்திற்குப் பிறகு, முகூர்த்த நேரம் நெருங்கியதும் ஐயர்,

 

ஐயர், “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று கூறினார்.

 

முகூர்த்தத்துக்கு நேரமாகிக்கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்த அனைவரின் கவனமும் மணமேடையின் பக்கமே இருந்தது.

 

அருகில் இன்னும் ஒரு ஐயர் மித்ரனின் மணவறைக்கு நேராக யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார். அண்ணன் திருமணம் முடிந்த பிறகு அடுத்த முகூர்த்தத்தில் தம்பி திருமணம் என்று இருந்ததால் கிருத்திக்காவின் குடும்பத்தினரும் அவர்களது உற்றார் உறவினர்களும் கிருத்தகக்காவிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது கௌரி, நைராவை அழைத்து வருவதற்காக அவள் சென்றிருந்த அறைக்குச் சென்றாள். சிறிது நேரத்திலேயே பதற்றத்துடன் திரும்பி வந்தவள், நேராக அமிர்தவள்ளியிடம் ஓடி வந்தாள்.

 

அமிர்தவள்ளியை தனியாக அழைத்துச் சென்று, “அம்மா… நைராவை காணோம்” என்று தவிப்போடு கூறினாள்.

 

அதைக் கேட்டதும் அமிர்தவள்ளியின் முகம் மாறியது.

 

“என்ன சொல்ற கௌரி? நல்லா பார்த்தியா?” அகல விரிந்த கண்களில் குளம் கட்டின.

 

“பார்த்தேன் அம்மா… ரூம், பாத்ரூம், மொட்டைமாடி. எங்கயுமே இல்ல” என்று கீழ் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டாள் கௌரி.

 

மணமேடைக்கு அருகில் சரண் இருக்க, ஐயர் தண்ணீர் கேட்டிருக்கா அதை எடுப்பதற்கு உள்ளே வந்திருந்தான்.

 

கௌரியும் அமிர்தவள்ளியும் பதற்றமாக இருப்பதைப் பார்த்து.“என்னாச்சுமா?” சரண் கேட்டான்.

 

“நைராவை காணோம்னு கௌரி சொல்றா சரண்” என்ற அமிர்தவள்ளியின் முகம் இருண்டது.

கௌரி சரணைப் பார்த்து,

 

“சரண் அண்ணா, நீங்க போய் நல்லா தேடிப் பாருங்க. நைராவோட அம்மா அப்பா எங்க இருக்காங்கன்னும் பாருங்க” என்றாள்.

 

சரணும் உடனே தண்ணீர் பாட்டலை ஐயருக்கு கொடுத்துவிட்டு, நைராவின் தாய் தந்தையை தேடினான்.

 

மண்டபத்தின் ஒவ்வொரு இடத்திலும் தேடியும் நைராவைக் காணவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு சரண் பதற்றத்துடன் வந்து,

 

“அம்மா… இவ்வளவு நேரம் முன்னாடிதான் அவங்கள எல்லாரும் இருந்தாங்க. இப்போ யாரையுமே காணோம்” என்றவன், பின்வாசல் பக்கம் இருந்த ஒரு கொலுசை மட்டும் எடுத்துக்காட்டி, “மண்டபத்து பின்வாசல்ல இந்த ஒரு கொலுசு மட்டும் இருந்துச்சுமா” என்று அமிர்தவள்ளியிடம் காட்ட, அது நைராவின் கொலுசு என்பதை உணர்ந்து அமிர்தவள்ளி தலையில் அடித்துக்கொண்டார்.

 

ஐயர் மீண்டும் மணப்பெண்ணை அழைக்க, கனியா, கலைவாணியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அவர்களின் பின்னே மணிமாறனும் திருச்செல்வமும் வந்து சேர்ந்தனர்.

 

“கௌரி அக்கா, நைரா அண்ணியை அழைச்சிட்டு வரச் சொல்றாங்க”

 

அழுகையை அடக்கியிருந்த கௌரி, “நைராவ காணோம் கனி” என்று சத்தமாக அழத் தொடங்கினாள்.

 

அந்த வார்த்தையைக் கேட்கும்பொழுதே அமிர்தவள்ளிக்கு செத்துவிடலாம் என்று இருந்தது.

 

மித்ரனும் மணமேடையில் இருந்தவன், அம்மா அப்பா கௌரி என யாருமே அங்கு இல்லாததால் அவனும் எழுந்து வந்தான்.

 

கௌரி, மித்ரனிடமும் விஷயத்தைக் கூற, அவன் கதி கலங்கிப்போனான்.

 

திருச்செல்வத்தின் மனதில் அப்படி எல்லாம் நடக்காது என்ற ஒரு எண்ணம் இருக்க, திருச்செல்வமும் மணிமாறனும் மீண்டும் ஒருமுறை மண்டபம் முழுவதையும் துழாவ, அவர்களுக்கு மணப்பெண் அலங்கார அறையில் இருந்த முகூர்த்தப் புடவைத் தட்டில் இருந்து ஒரு கடிதம் மட்டும் கிடைத்தது.

 

*****

 

அடுத்த அத்தியாயம்

கனி 6

கனி 6 அப்போது மித்ரனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. “கிருத்திகாவோட ரூமைப் பார்த்தியா கௌரி?” “இல்ல மித்ரன்… நான் பாக்கல” என்று கௌரி சொல்லவும், மித்ரன் உடனே மேலே ஓடினான். கிருத்திகாவின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கே அவள் இல்லை. பாத்ரூம் கதவு வெளியே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்