arrow_back
கனியாத்ரேயம் கனி 6
கனியாத்ரேயம் chevron_right பகுதி 6 / 13

கனி 6

visibility 24
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 6 

அப்போது மித்ரனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. “கிருத்திகாவோட ரூமைப் பார்த்தியா கௌரி?”

 

“இல்ல மித்ரன்… நான் பாக்கல” என்று கௌரி சொல்லவும், மித்ரன் உடனே மேலே ஓடினான்.

 

கிருத்திகாவின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கே அவள் இல்லை. பாத்ரூம் கதவு வெளியே இருந்து லாக் செய்யப்பட்டிருந்தது.

 

“கிருத்திகா…” என்று அழைத்தபடி மித்ரன் கதவைத் திறந்தான். உள்ளே கிருத்திகா பாத்ரூம் கதவைத் தட்டிக்கொண்டே நின்றிருந்தாள்.

 

தாழ்ப்பாளை திறந்தான், “உன்னை யார் இங்க வச்சு லாக் பண்ணா?” என்று மித்ரன் பதற்றத்துடன் கேட்டான்.

 

கிருத்திகா அழுதுகொண்டே, “உன்னோட அண்ணனோட வைஃப் வீட்டு ஆளுங்கதான். கீழே ரூம்ல பேசுற சத்தம் மேல இருக்குற ரூமுக்கு கேட்டுச்சு மித்ரன். ஏதோ பரபரப்பா இருக்குற மாதிரி இருக்கவும் கீழே வந்து என்னனு எட்டி பார்த்தேன். பார்த்தது மட்டும்தான் என் கைய்ல இருக்க ஃபோனை பிடிங்கிட்டு மேல ரூம்ல வந்து என்ன லாக் பண்ணிட்டாங்க. இவ்வளோ நேரம் என்ன பண்ணுறதுனு தெரியாம அழுதுட்டிருந்தேன். ஏன் நம்ம கல்யாணம் பண்ணுறது அவங்களுக்கு விருப்பம் இல்லையா?” பயந்தவாறு கேட்டாள் அவள்.

 

“கொஞ்ச நேரம் எனக்கு ரொம்ப பதற்றமா இருந்தது மித்ரன்… என்ன பண்ணுறதுன்னே தெரியல” அழுதாள்.

 

அவளைப் பார்த்ததும் மித்ரனின் கண்கள் கலங்கின. “சரி சரி… ஒண்ணும் இல்ல. வா கீழ போகலாம்” அவர்கள் கீழே வந்ததும், கிருத்திகாவிற்கு நடந்த விஷயம் அனைவருக்கும் புரிந்தது.

 

மித்ரன் அனைவரையும் பார்த்துவிட்டு, கிருத்திகாவிடம், “அண்ணாக்கு கல்யாணம் நடக்கலன்னா நம்மளுக்கும் கல்யாணம் நடக்காது. இந்த சிட்டுவேஷனை நீ ஏத்துக்கிட்டுதான் ஆகணும். நம்ம இன்னும் ஒரு நாளைக்கு பார்த்துக்கலாம். ப்ளீஸ்… இதுக்கு மேல என்னைக் கேள்வி எதுவும் கேக்காத” என்று கூறினான்.

 

கிருத்திகா அவனைப் பார்த்து, “இல்ல மித்ரன்… எனக்கு சிட்டுவேஷன் புரியுது. நான் அக்செப்ட் பண்ணுறேன்” அந்த சூழ்நிலைக்கு பணிந்து கொண்டாள்.

 

கௌரியிடம் அந்தக் கடிதத்தை மணிமாறன் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த கௌரி, அப்படியே இடிந்து விழுந்து உட்கார்ந்தாள்.

 

அவ்வேளை திருமணத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் கிருத்திகாவின் அம்மா அப்பா உள்ளே வந்து விட்டனர்.

 

அந்தக் கடிதத்தை நைரா எழுதியிருந்தாள். “வெற்றி, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்கூட ரொம்ப அழகான வாழ்க்கை வாழணும்னு நான் நிறையக் கனவுகள் வச்சிருந்தேன். ஆனா உனக்கு ஆக்சிடென்ட்ல கண் பார்வை இழந்துட்டேன்னு தெரிஞ்சதும், இப்போ என்னோட வாழ்க்கையை நினைச்சு எனக்குப் பயமா இருக்கு.

 

நான் கூட வாழ்றதைத் தவிர்த்து, எனக்குனு இருக்கிற கனவுகளை நான் தொலைச்சிருவேனோன்னு பயமா இருக்கு. நான் கண்ட கனவுகளெல்லாம் இப்படியே போயிடுமோ? உனக்கு சேவை செஞ்சே என் காலம் முழுவதும் போயிடுமோன்னு எனக்கு இன்னும் பயமா இருக்கு.

 

அந்த மாதிரி வாழ்க்கையை நான் வாழ விரும்பல வெற்றி. நீ என்னை மன்னிச்சிடு. ஆனா நான் உன்னை உண்மையா காதலிச்சேன்.” திருமணப் பெண்ணை அழைத்துக்கொண்டு வரச் சொல்லி ரொம்ப நேரம் ஆகியும், நைரா வராததால் மண்டபத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் அரசல் புரசலாகப் பேச ஆரம்பித்தனர்.

 

“கண்ணு தெரியாதவனுக்கு யார் பொண்ணு கொடுப்பா? பொண்ணு ஓடிப் போயிட்டாப்போல இருக்கு” என்று ஒருவர் கூறினார்.

 

“இதே நானா இருந்தா, ஏன் பொண்ணு கொடுப்பேனா? பார்வை இல்லாதவனுக்கு என் பொண்ணை நானா கொடுக்க மாட்டேன்?” என்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியது வெற்றியின் காதிலும் விழுந்தது.

 

வெற்றி மனம் உடைந்துபோனான். “ஐயா… வீட்டாளுங்க யாராவது பக்கத்துல இருக்காங்களா?” என்று ஐயரிடம் கேட்டான் வெற்றி. ஐயர் சுற்றிப் பார்த்தார். அப்போது வெற்றியின் அருகில் யாரும் இல்லை.

 

அந்த நேரத்தில் சரண் அங்கு வந்தான். கடிதத்தைப் பார்த்ததும் நடந்தது என்னவென்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

 

வெற்றியின் அருகில் யாரும் இல்லாததை நினைத்தவன், மணமேடைக்கு விரைந்தான். வெற்றி மெதுவாக மணமேடையிலிருந்து எழுந்தான்.

“தம்பி… நீ உட்காரு. நீ தடுமாறி விழுந்துருவ” என்று ஐயர் கூற,

“இல்ல ஐயா… நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியபடி வெற்றி எழுந்து நின்றான்.

 

அப்போது சரண் அவன் கையைப் பிடித்துக்கொண்டான். “அண்ணா… நான் இங்கதான் இருக்கேன்” என்றான்.

 

“சரண்… நைரா எங்க இருக்காளோ, என்னை அங்க கூட்டிட்டு போ” என்று வெற்றி வேதனையுடன் கூறினான்.

 

“சரி அண்ணா… வாங்க” என்று கூறிய சரண், வெற்றியிடம் எதுவுமே கூறாமல் அமிர்தவள்ளியிடம் அவனை அழைத்துச் சென்றான்.

 

வெற்றியைக் கண்டவுடன் அமிர்தவள்ளி, “வெற்றி!” என்று அவனைக் கட்டியணைத்துக்கொண்டார்.

 

“அம்மா… ஏம்மா… நைராவுக்கு எதுவும் உடம்பு சரியில்லையாம்மா? காலையில் மாத்திரை எல்லாம் சரியா போட்டாளா?” என்று அவன் அக்கறையோடு கேட்டான்.

 

சம்பவத்தைப் பார்த்த கிருத்திகாவின் அம்மா அப்பா வார்த்தைகள் அற்று மணவறைக்கு முன்னே மீண்டும் வந்து அமர்ந்தனர்.

 

அமிர்தவள்ளி, ‘இப்படி ஒருவனைதான் வேண்டாமென்றாளா பாவி’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.

 

“அம்மா… ப்ளீஸ், என்ன பயமுறுத்தாதீங்க” என்று வெற்றி கூறிக்கொண்டிருக்க, கௌரி வந்து அவன் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்தாள்.

 

“அண்ணா… லெட்டர் எழுதி வச்சுட்டு அவங்க போயிட்டாங்க” என்று கௌரி அதை வெற்றியின் கைகளில் கொடுத்தாள்.

 

வெற்றி அந்தக் கடிதத்தின் பின்புறத்தை தொட்டுப் பார்த்தான். நைராவின் கையெழுத்து என்பதை அவன் உணர்ந்ததும், அந்தக் காகிதத்தை கையில் கசக்கிப் பிடித்தான்.

 

‘உண்மையாகவே அவள் என்னை விட்டு சென்றாளா? கடவுளே… ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் பண்ற?’

 

இப்போதுதான் அவன் எதற்காக தன் பார்வையை இழந்து நிற்கிறேன் என நினைக்கும்போது, மனம் விஷமுட்களால் குத்திக் கிழித்தது.

 

வெற்றியின் கால்கள் பின் செல்ல, தடுமாறிச் செல்ல, மித்ரன் வெற்றியைத் தாங்கிக்கொண்டான். வெற்றியை நினைத்து கிருத்திகாவே அழுதுவிட்டாள்.

 

அமிர்தவள்ளி மகனின் நிலையைக் காண முடியாமல் மயங்கி சரிந்தார். “அம்மா..!” என்று கௌரி சத்தமிட,

 

“கௌரி, அம்மாக்கு என்னாச்சு?” எனப் பதறிய வெற்றி, காற்றில் கைகளைத் துழாவ, அவன் நிலையோ பரிதாபமானது.

 

“ஒன்னுமில்லைண்ணா, அம்மாவுக்கு கொஞ்சம் தலசுத்தா இருக்கு. அம்மாவைப் பார்த்துக்க ஆளுங்க இருக்காங்க. நீ ஒண்ணும் யோசிக்காத அண்ணா”

 

“மித்ரன், நான் எல்லாருக்கும் பாரமா இருக்கேனாடா?” என்று சொல்ல, துயரத்தில் துவண்டுபோனான் அவன்.

 

“டேய் அண்ணா! உனக்கு கை நீட்ட கூடாதுன்னு நினைக்கிறேன். உங்கூட வாழத் தெரியாதவளுங்கள நினைச்சி நீ எதுக்கு கவலைப்பட்டுற? உனக்கு நாங்கள் இருக்கோம்”

 

அமிர்தவள்ளிக்கு மணமகள் அறையில் வைத்து அவர்களுக்கு முதலுதவி எல்லாம் செய்து தண்ணீர் கொடுத்து மெதுவாக அமர வைத்தனர்.

 

அந்த நேரத்தில் கனியாவும் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள். “இங்க நடப்பதை எல்லாம் மாற்றமுடியாத கடவுளே!” மனம் கொதித்தது.

 

நேரம் இல்லாததால், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்காமல் உடனே, கலைவாணியையும் மணிமாறனையும் கனியா தனியே அழைத்துச் சென்றாள்.

 

“அப்பா… வெற்றி அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” என்று அழுதுகொண்டே கேட்டாள். அதைக் கேட்ட மணிமாறன் ஒரு நொடி அமைதியாக நின்றார். பிறகு வெற்றியின் அருகில் சென்று, “வெற்றி… நீ மணமேடையில் வந்து உட்காரு” என்றார்.

 

வெற்றி குழப்பத்துடன், “நைரா போயிட்டாளே… அதுக்கப்புறம் என்ன மாமா பண்ணுறது?” என்று கலங்கிய குரலில் வெற்றி கூற,

 

“நீ கனியைக் கல்யாணம் பண்ணிக்கோ வெற்றி” என்று வெற்றியிடம் கூறிவிட்டு, அமிர்தவள்ளி, திருச்செல்வத்திடமும் கூறினார்.

 

வெற்றி திக்கென்றான். “மாமா… விளையாடாதீங்க. கௌரி எப்படியோ அதே போலதான் கனிய பார்க்குறேன்” என்று வெற்றி வேதனையுடன் விளம்பினான்.

 

“இல்ல வெற்றி. நான் உண்மையாதான் சொல்றேன். என் பொண்ணை நான் உனக்கு தாறேன். நீ என்னை மாமானேதானே கூப்பிடுற? அப்ப என் பொண்ணை நீ கட்டிக்கோ வெற்றி” இந்த நிலையில் கூட நான் இதை செய்யவில்லை என்றால் நானெல்லாம் என்ன மனிதன் என்று அவர் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டார்.

 

“சின்னப் பிள்ளை வாழ்க்கையையே வீணாக்காதீங்க மாமா” கனியை அவனின் மனைவியாக நினைக்க முடியவில்லை. வெற்றி மறுத்தான்.

 

“நீ என் பேச்சைக் கேட்ப! என்னை நீ மதிக்கிறதா இருந்தா, நீ இப்ப கனிக்கு தாலி கட்டுற” ஒரு முடிவாக மணிமாறன் உரக்கக் கூற,

 

சில வினாடிகள் செல்ல உணர்ச்சிகள் அற்ற குரலில், “சரி மாமா” என்றவன் தன் கையில் கசுக்கி வைத்திருந்த கடிதத்தை கீழே விட்டான்.

 

வெற்றி மணமேடையில் வந்து அமர்ந்தான். அவனுக்குப் பின்னால் கனியாவும் வந்து அமர்ந்ததும், ஐயர் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தார்.

 

மணமேடைக்கு வந்த பெண் வேறு, இப்போது மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண் வேறு என்பதால், என்ன செய்வதென்று புரியாமல் ஐயர் மட்டும் இல்லை, மண்டபத்தில் இருப்பவர்களும் கனியாவையும் வெற்றியையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

அப்போது மித்ரன், “என்ன ஐயரே பார்க்குறீங்க? தாலியை எடுத்துக்கிடுங்க” என்றான்.

 

உடனே ஐயர் தாலியை எடுத்துக்கொடுத்து, “மாங்கல்யம் தந்துநானே…” என்று கூறத்தொடங்க,

 

அடுத்த நொடி வெற்றி அமிர்தவள்ளியின் உதவியுடன் கனியின் பொன்கழுத்தில் தாலியைக் கட்டினான்.

 

அந்தக் காட்சியைப் பார்த்த அனைவரின் கண்களும் கலங்கின. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் வெற்றிக்கு நல்லபடியாக திருமணம் நடந்துவிட்டதே என்ற நிம்மதி அனைவரின் மனதிலும் நிறைந்தது.

 

அமிர்தவள்ளி, திருச்செல்வம், மணிமாறன், கலைவாணி, கௌரி இந்த ஐவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீரை மட்டுமே பார்க்க முடிந்தது.

 

மணிமாறன் கலைவாணியின் முகத்தைப் பார்க்க, கலைவாணி கண்களைத் துடைத்துக்கொண்டு மணிமாறனின் தோளில் ஆறுதலாக சாய்ந்துகொண்டார்.

 

வெற்றிக்கு உணர்ச்சிகள் இன்றியும், கனியின் நிலையோ, இனி வெற்றி அண்ணாவின் திருமணத்தைப் பற்றி கவலை இல்லை என உள்ளுக்குள் நிம்மதி அடைந்தாலும், அவள் மனசாட்சி, ‘வெற்றி அண்ணன் இல்லடி. இனி உனக்கு அத்தான்’ என கனியின் மூளையைத் தட்டிவிட்டுச் சென்றது.

 

அரை மணி நேரத்திற்குப் பிறகு, மித்ரனுக்கும் கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. பத்து வருட காதல் மனைவியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

 

திருமண சடங்குகள், உணவு உபசரிப்பு அனைத்தும் முடிய வீட்டிற்கு எல்லோரும் கிளம்பினர்.

 

***** 

 

 

அடுத்த அத்தியாயம்

கனி 7

கனி 7  திருமணம் முடிந்த இரண்டு ஜோடிகளும் வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்காக ஏற்கனவே ஆரத்தி தயாராக இருந்தது. அமிர்தவள்ளி, கலைவாணி, கிருத்திகாவின் அம்மா மலர்விழி மூவரும் சேர்ந்து இரண்டு புதுமணத் தம்பதிகளுக்கும் ஆரத்தி எடுத்து, அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். வீட்டிற்குள் வந்ததும் இரண்டு மருமகள்களையும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்