கனி 10
கனி 10
வெற்றின் வாழ்க்கையும் கனி இன்றி சுவைக்காது. அவனுக்காகவே கனி உதித்த நாளாம் இன்று.
கனி, வெற்றி வாங்கிக் கொடுத்த பத்து சுடிதார்களில் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு கீழே வந்தாள். புதுசு சுடிதாரில் பளிச்சென்று, நீட்டாக வந்தவளைப் பார்த்த அமிர்தவள்ளி அவளை அருகில் அழைத்தார்.
“கனி… இங்கே வாம்மா”
கனி அருகில் வரவும், அமிர்தவள்ளி அவளை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டு,
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கனியா, இந்தப் புடவை உனக்குத்தான்” என்று கூறி ஒரு அழகான புடவையை அவளிடம் கொடுத்தார்.
கனி புடவையை வாங்கிக்கொண்டு,
“நன்றி அத்தைம்மா” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
அப்போது சமையலறையில் இருந்த கலைவாணியும், தன் மகளை கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தவரைப் பார்த்து லேசாகக் கலங்கி இருந்தார்.
கலைவாணிக்கு பிரசவ அறையின் நினைவுகள் மீட்டெழுந்தன. அதற்குள் இருபது வருடம் பூர்த்தியாகி இருந்தது. இப்போது ஒரு ஆண் மகனின் மனைவி. பெண்களின் வாழ்க்கையே இப்படிதானே! என ஏற்றுக்கொண்டார்.
“கனி, உனக்குப் பிடிச்ச சாப்பாடெல்லாம் இன்னைக்கு செஞ்சு வச்சிருக்கேன். வெற்றி கூட கோயிலுக்குப் போயிட்டு வா” என்றார்.
“சரிம்மா” என்று கனி சிரித்தாள்.
பின்னர் அமிர்தவள்ளி கொடுத்த புடவையை எடுத்துக்கொண்டு மேலே சென்ற கனி, அதற்குப் பொருத்தமான ஜாக்கெட் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தாள்.
எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை, ஒரு கரப்பான் பூச்சி அவளருகில் ஓடியது. அதை பயமில்லாமல் விரட்டிவிட்டாள்.
ஆனால் அதுவோ அவள் சுடிதாரின் மேல் ஏறத் தொடங்கியதும், கனி அருவருப்பில் கத்தத் தொடங்கினாள்.
“அம்மாஆஆஆ…”
உ ஆ என்று எல்லாம் சத்தம் வர,
அவள் அலறிய சத்தம் கேட்டு, கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வெற்றி திடுக்கிட்டு எழுந்தான்.
“கனி… என்னாச்சு?”
“அத்தான்… கரப்பான் பூச்சி ஓடுது! என் மேல ஓடுது!”
“எங்கே இருக்க?” எனக் காற்றில் கைகளைத் துழாவ விட்டான் வெற்றி.
“இங்க இருக்கேன் அத்தான்… என் மேலதான் இருக்கு. எனக்குப் பயமா இருக்கு. இதை எடுத்திருங்க!” என்று பதற்றத்துடன் சத்தமிட, கனி தன் உடலைத் தட்டிக்கொண்டே நின்றாள்.
வெற்றி சத்தம் வந்த திசையை நோக்கி மெதுவாக நடந்து வந்து,
“எங்கே இருக்கு கனி?”
“கழுத்துல… கழுத்துல இருக்கு அத்தான்!”
என்று அவள் சொல்லவும், வெற்றி தன் கையை அவளுடைய கழுத்தருகே கொண்டு சென்றான்.
“இங்கயா?”
“ஆமா… இப்போ கழுத்துல இருந்து கீழே போகுது!”
என்று கனி பதறிய அடுத்த நொடி, அந்தக் கரப்பான் பூச்சி அவளுடைய நெஞ்சின் மேல்பகுதியில் விழுந்தது.
கனி அலறியதும், வெற்றியும் ஒரு நொடி தடுமாறினான்.
அவள் பதற்றத்தில் துடித்துக்கொண்டிருக்க, வெற்றி தயக்கத்தைத் தாண்டி கையை நீட்டி, அவளது உடலைத் துழாவி அந்தக் கரப்பான் பூச்சியைப் பிடித்தான்.
அதைத் தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டு,
“எடுத்துட்டேன் கனி” என்றான். கனி இன்னும் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றி, “சாரி கனி… கரப்பான் பூச்சி இருந்ததால்தான் அப்படி எடுத்தேன்” என்றான்.
அவளுடைய உடலைத் தொட்டிருந்ததால், வெற்றிக்கு என்னவோ போல் இருந்தது.
கனி அருவருப்பாக மீண்டும் குளித்துவிட்டு வெளியே வந்தாள். அதற்குள் வெற்றி மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்திருந்தான்.
கனி வெளியே வந்ததை உணர்ந்த வெற்றி அவளிடம், “கனி… நான் பால்கனிக்குப் போறேன். நீ ரெடியாகிக்கோ” என்றான்.
“சரி அத்தான்” என்று கனி சொல்லவும், வெற்றி எதுவும் பேசாமல் பால்கனிக்குச் சென்றான். அவளுக்கு கூச்சமாக இருப்பதை உணர்ந்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கனி உடை மாற்றி தயாராகி வெளியே வந்தாள்.
“அத்தான்… நான் ரெடி ஆகிட்டேன். கீழே போறேன்” என்று சொல்ல, வெற்றி அவளை அழைத்தான்.
“கனி… கொஞ்சம் நில்லு” கனி அவன் அருகில் வந்து நிற்கவும்,
“ஹேப்பி பர்த்டே கனி” என்று வெற்றி வாழ்த்தினான். அதை எதிர்பார்க்காத கனி மிகுந்த மகிழ்ச்சியுடன்,
“தேங்க்ஸ் அத்தானு” என்றாள்.
திருமணம் முடிந்த பிறகு முதல் பிறந்தநாள். அதுவும் கணவன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, அவள் மனம் ரெக்கை இன்றி பறந்தது.
வெற்றி தன் கையில் வைத்திருந்த டெபிட் கார்டை அவளிடம் கொடுத்து,
“இதை வச்சு உனக்கு புடிச்சத வாங்கிக்கோ” என்றான். கனி அந்தக் கார்டைப் பார்த்துவிட்டு, “உங்க அன்பையும் காதலையும் காசு குடுத்து வாங்க முடியாது அத்தான். அதை நீங்களே வச்சிக்கோங்க”ஸஎன்றாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றிக்கு, நைரா அவனது கார்டை எடுத்து ஷாப்பிங் செய்ததுதான் நினைவிற்கு வந்தது. கனியின் செயல், அவள் வெற்றியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதை உணர்த்தியது.
“அம்மா உங்ககூடத்தான் கோயிலுக்குப் போகச் சொன்னாங்க அத்தான்” என்றாள்.
“சரி, நீ கீழே போ. நான் ரெடியாகிட்டு வாறேன்” என்று வெற்றி கூறினான்.
கனி கீழே செல்ல, வெற்றி வேஷ்டி, சட்டையை எடுத்துக்கொண்டு தயாராகி கீழே வந்தான்.
சரண், கனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, ஒரு அழகான புடவையையும் பரிசாகக் கொடுத்தான்.
கோயிலுக்குக் கிளம்புவதற்கு முன், சரண் இருவரையும் அருகருகே நிற்க வைத்து, “ரெண்டு பேரும் கொஞ்சம் போஸ் கொடுங்க” என்றான்.
வெற்றியும் கனியும் எதுவும் பேசாமல் மிகவும் பவ்யமாக நின்றனர்.
அதைப் பார்த்த சரண், “போஸ் கொடுக்கச் சொன்னா, இப்படியா நிக்கிறீங்களே!” என்று சிரித்தபடி கூறினான்.
அடுத்த நொடி, வெற்றி கனியின் தோளில் தன் கையைப் போட, சரண் அந்த அழகான தருணத்தைப் புகைப்படமாக எடுத்துக்கொண்டான்.
அதன்பிறகு மூவரும் கோயிலுக்குப் புறப்பட்டனர்.
ஐயர் கற்பூரத்தை சுவாமிக்குக் காட்டிவிட்டு, கருவறையிலிருந்து வெளியே வந்து கனியிடம் நீட்டினார்.
கனி தன் கைகளால் தீபத்தைத் தொட்டு, முதலில் வெற்றியின் கண்களில்தான் ஒற்றினாள்.
அதைப் பார்த்த ஐயர், “குழந்தைகளுக்குத்தான் இப்படி பண்ணுவாங்கம்மா” என்றார்.
“அவரும் எனக்கு குழந்தைதான் ஐயா” என்று கனி சொல்ல, ஐயர் சிரித்துவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றார்.
அதன்பிறகு இருவரும் கோயிலின் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டனர். கனி தனது இடது கையால் வெற்றியின் இரு கண்களையும் மூடி, அவனது கண்களில் படாதபடி கவனமாக விபூதியை அவன் நெற்றியில் வைத்தாள்.
பின்னர் குங்குமத்தை வெற்றியின் கை விரல்களால் எடுக்க வைத்து, தனது உச்சியிலும் தாலியிலும் அவன் கையைப் பிடித்து குங்குமத்தை வைக்கச் செய்தாள். கனியின் ஒவ்வொரு செயலிலும் வெற்றி, அவளின் தூய்மையான ஸ்பரிசத்தை உணர்ந்திருந்தான்.
கோயிலில், இருவருக்கும் தெரியாமல் சரண் அவர்களின் சில அழகான தருணங்களைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்துகொண்டான்.
கோயிலைவிட்டு அவர்கள் வெளியே வரும்போது, செந்தூரனின் பார்வையும் அவர்கள் மீது விழுந்தது.
வெற்றி பார்வையில்லாமல் அவளுடன் செல்வதையும் கவனித்தவன் மனதிற்குள்,
“கண்ணு தெரியாதவனைக் கட்டி வச்சிருக்காங்க பாவம்” என்று நினைத்துக்கொண்டான். எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும், கௌரி கனிக்கு ஒரு ஸ்மார்ட் வாட்சை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தாள்.
அதன்பிறகு மித்ரனும் கிருத்திகாவும் சேர்ந்து கனிக்காக வாங்கி வைத்திருந்த தங்க மோதிரத்தைப் பரிசாகக் கொடுத்தனர்.
ஒவ்வொரு பரிசாகக் கிடைக்கக் கிடைக்க, கனி மனம் நிறைந்து மகிழ்ந்தாள்.
அப்போது கனியின் கைப்பேசிக்கு மணிமாறனிடமிருந்து அழைப்பு வந்தது. மகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“கனி… உனக்காக காசு போட்டுவிட்டிருக்கேன். உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ. செல்வம்மாமா கேக் வாங்கித் தருவாங்க. நைட்டு கேக் கட் பண்ணி சந்தோஷமா இரு” என்று மணிமாறன் அன்புடன் கூறினார்.
சில நிமிடங்கள் சந்தோஷமாகப் பேசியிருந்த கனி, பின்னர் அழைப்பைத் துண்டித்தாள்.
இரவு உணவு முடிந்ததும், திருச்செல்வம் கேக்குடன் வீட்டிற்குள் வந்தார்.
அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கனியின் பிறந்தநாளைக் கொண்டாடினர். கேக்கை வெட்டி, முதலில் கலைவாணிக்கும், அமிர்தவள்ளிக்கும், திருச்செல்வத்திற்கும் ஊட்டிய கனி, அடுத்து வெற்றிக்கும் ஊட்டினாள். வெற்றியும் கனிக்கு கேக்கை ஊட்டிவிட்டான்.
அப்போது மித்ரன்,
“அண்ணா… அண்ணிக்கு ஒரு முத்தம் கொடுங்க” என்று சொல்ல, கனியும் வெற்றியும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். கனி வெட்கத்தில் வேண்டாம் என்பதுபோல் தலையை மறுப்பாக அசைத்தாள்.
அங்கிருந்த பெரியவர்களான கலைவாணி, திருச்செல்வம், அமிர்தவள்ளி மூவரும் இளசுகள் இப்படி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ‘நம்ம எதுக்கு இங்க இருக்கணும்?’ என்று சொல்லிக்கொண்டு வாசல் பக்கம் நடந்து சென்றனர்.
வெற்றி சாதாரணமாக,
“இல்ல நான்… தனியா இருக்கும்போது கொடுத்துக்கிறேன். இப்போ வேணாம்” என்று சமாளித்தான். அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. அதைக் கேட்டதும் கனிக்குத்தான் உயிரே வந்த மாதிரி இருந்தது.
அப்போது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த வெற்றி, அருகில் கௌரி இருப்பதை உணர்ந்துகொண்டு,
“கௌரி, உன்னோட முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்ல. ஒரு வாரம் ஆகிடுச்சு. நாங்க நாளைக்கு அமெரிக்கா கிளம்புறோம். அதனால உன்னோட முடிவைத் தெரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும். நீ சரின்னு சொன்னா அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கலாம். இல்லன்னா… சரணுக்கு வேற பொண்ணு பார்க்கணும்” என்றான்.
வெற்றி இப்படித் திடீரெனக் கேட்டதும், கௌரி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெட்கத்துடன் தடுமாறினாள். அதே நேரத்தில், சரணுக்கு வேறொரு பெண்ணைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவளுக்குள் வந்தது.
குறிப்பாக கனி, வெற்றி நாளைக்கே அமெரிக்கா செல்லப் போகிறான் என்றதும் மனதிற்குள் நொந்துகொண்டாள்.
சிறிது நேரம் தயங்கிய கௌரி,
“எனக்கு சரண் பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு இப்பவே கல்யாணம் வேண்டாம். இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும்” என்றாள். அதைக் கேட்ட வெற்றி, “சரண்… நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டான்.
சரண் முகத்தில் புன்னகையுடன், “எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லண்ணா” என்றான்.
கௌரிக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டதும், சரணின் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது.
அதன் பிறகு பெரியவர்களை அழைத்து அவர்களிடமும் விஷயத்தைக் கூற, அவர்களும் மகிழ்ந்தனர்.
அனைவரும் உறங்கச் சென்ற பிறகு, வெற்றி தன் அறைக்குள் வந்து இரவு உடையை எடுத்துக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தான். கையை நேராக நீட்டியபடி மெதுவாக நடந்து வந்து, டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் இருந்த இடத்தில் நின்றான்.
ஷர்ட்டை எடுத்துப் பட்டன்களைப் பூட்டிவிட்டு, சீப்பை எடுத்து தலையைச் சீவினான்.
அப்போது கனி அறைக்குள் வந்தாள்.
“அத்தான்…”
“ம்…”
“அத்தானு…” கனி ராகம் இழுத்து அழைக்கவும், வெற்றிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“என்ன கனி?” என்று கேட்டான்.
“இருங்க அத்தான்… நான் உங்ககிட்ட வாறேன்” என்று கூறிய கனி, டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் அவன் பக்கம் வந்து நின்றாள்.
அவள் தன் கையை வெற்றியின் ஷர்ட் காலரில் வைத்ததும், வெற்றி பதறிப் போனான்.
“கனி… நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன். அவங்க கிண்டல் பண்ணினதால தனியா இருக்கும்போது முத்தம் தாறேன்னு சொன்னேன். சும்மாதான் சொன்னேன் கனி. ப்ளீஸ்! நீ சீரியஸா எடுத்துக்காத” என்று அவசரமாகக் கூறினான்.
“ஐயோ அத்தான்… கொஞ்சம் இருங்க அத்தான். பேசாம இருங்க” என்று கூறியபடி கனி ஷர்ட்டின் இரண்டு பட்டன்களைக் கழற்றினாள்.
“என்னடீ பண்ற?” என்று பதற்றத்தில் கேட்ட வெற்றி, அவளை உரிமையாக “டீ” என்று அழைத்திருந்தான். அதை கவனிக்காமல் இல்லை கனி.
“உங்கள ரேப் பண்ற அளவுக்கெல்லாம் எனக்கு தெம்பில்ல அத்தானு” என்று வேண்டுமென்றே வம்படியாகத் தன்னவனைச் சீண்ட ஆரம்பித்தாள்.
“என்னடீ சொல்ற?” வெற்றியின் காதுகளில் அந்த வார்த்தை தவறாக விழுந்தது.
அவன் காதருகில் சென்ற கனி, “அதுவா… உங்கள கற்பழிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தெம்பில்லைன்னு சொன்னேன் அத்தான்” என்று கிசுகிசுத்தாள்.
“உன்னைய சின்னப் பிள்ளைன்னு நினைச்சேன். பட், நீ பேசுறதெல்லாம் பார்க்கும்போது அப்படி தெரியலடீ” என்று வெற்றி கூறினான்.
“இல்ல அத்தான்… நீங்க உங்க ஷர்ட்டை பட்டன் மேலையும் கீழையும் ஒழுங்கா போட்டிருக்கல. அதனாலதான் சரியா போட்டுவிட்டேன். அவ்வளவுதான்” என்று கனி சிரித்தபடி கூறினாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்,
“இன்னொரு விஷயம் அத்தான்… இவ்வளவு நேரம் நீங்க என்னை உரிமையா டீ போட்டுக் கூப்பிட்டீங்க இல்லையா? அதுக்காக உங்களுக்கொரு…”
என்று கூறியவள், அடுத்த நொடி வெற்றியின் கன்னத்தில் நச்சென்று முத்தமிட்டாள்.
வெற்றிக்கு ஒரு நொடி என்ன செய்வதென்றே தெரியாமல் வாய் பிளந்துபோனது.
அதற்கு மேல் அங்கே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்தவன், எதுவும் பேசாமல் கைகளால் துழாவிக்கொண்டு பால்கனிக்குச் சென்று அமர்ந்துகொண்டான்.
கணவனுக்கு முதல் முத்தம் கொடுத்ததை எண்ணி, இரு கைகளிலும் முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டாள்.
********
நம் கதைக்கு, உங்கள் ஆதரவை வழங்குங்கள் உறவுகளே! நன்றி❤️🙏






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!