arrow_back
கனியாத்ரேயம் கனி 9
கனியாத்ரேயம் chevron_right பகுதி 9 / 13

கனி 9

visibility 11
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 9 

திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. இந்த ஒரு மாதத்திற்குள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வந்திருந்தனர். வீட்டிலும் திருமணமான இரு ஜோடிகளும் அவரவர் வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இயல்பாகப் பழகத் தொடங்கியிருந்தனர்.

 

அதே நேரத்தில், கனியின் கல்வியாண்டின் இரண்டாவது செமஸ்டரும் முடிந்திருந்தது. செமஸ்டர் தேர்வுகள் முடிந்ததால், கல்லூரியில் மூன்று வார விடுமுறை விடப்பட்டிருந்தது. மாறன் நேற்றுதான் அவருடைய வேலைக்கு கிளம்பியிருந்தார்.

 

மித்ரனுக்கு தென்னந்தோப்பில் வேலை இருப்பதால், கிருத்திகாவை எதிர்பார்க்காமல் அவன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான். அதைக் கண்ட கனி, கிருத்திகா குளித்துக்கொண்டிருப்பதை அறிந்து மித்ரனுக்கு சாப்பாடு பரிமாறினாள்.

 

“அண்ணி, அப்புறம் எங்க அண்ணா என்ன சொல்லுறான்?”

 

அவ்வேளை வெற்றியும் சரணும் படிக்கட்டுகளை இறங்கிக்கொண்டிருந்தனர்.

 

“ஏன் மித்ரன் அண்ணா, நீங்க வேற… அவரை ஒரு வழிக்குக் கொண்டு வர்றதுக்குள்ள நான் கிழவியாயிடுவேனோன்னு தோணுது” என்று நொந்துகொண்டாள்.

 

அந்த நேரத்தில் கீழே வந்த வெற்றி, சரணைப் பார்த்து,

 

“என்ன, என்னைப் பத்தி பேசுற மாதிரி இருக்கு?” என்று கேட்டான்.

 

“ஆமா, உன்னைப் பத்தித்தான் அண்ணா” என்று மித்ரன் சொல்ல,

 

“இவ என்னை கொடுமைப்படுத்துற அளவுக்கு எல்லாம், நான் அவளுக்கு ஒண்ணும் பண்ணுறது இல்ல” என்று வெற்றி கூறினான்.

 

அதைக் கேட்ட கனி கோபமாக,

 

“நான்? நான் என்ன கொடுமைப்படுத்தினேன்?” என்று கேட்டாள்.

 

“உங்கிட்ட தனியா மாட்டிக்கிட்டு முழிக்கிற எனக்குத்தானே தெரியும்!”

 

“மித்ரன் அண்ணா, இன்னைக்கு உங்க அண்ணாக்கு கொடுமைன்னா என்னன்னு காட்டுவேன்” என்று கூறிவிட்டு உதட்டை வெடிக்கொண்டாள்.

 

வெற்றிக்கும் சரணுக்கும் உணவைப் பரிமாற, சரண் சாப்பிடத் தொடங்கியிருந்தான். வெற்றிக்கு கனி உணவை ஊட்டினாள்.

 

“கௌரி, எங்க கனி?” என்று வெற்றி கேட்க,

 

“கௌரி அக்கா நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு தூங்குறாங்க அத்தான்” . எனவும் வெற்றி தலை ஆட்டினான்.

 

“அப்புறம் மித்ரன், தேங்காய்லோடு வேலை எப்போ முடியும்?”

 

“ஒரு வாரம் ஆகும் அண்ணா. இந்த முறை நிறைய தேங்காய் காய்ச்சிருக்கு அண்ணா”

 

“சரி மித்ரன், நீயும் கிருத்திகாவும் ஒரு பத்து நாள் கழிச்சு தாய்லாந்து போறதுக்கு ரெடியாகுங்க”

 

மித்ரனோ புரியாமல்,

 

“எதுக்கென்ன நாங்கள் அங்கே போறோம்?”

 

“ஹனிமூன் ஏற்பாடு பண்ணிக்கேன்”

 

“அப்போ நீங்க அண்ணா?”

 

“இப்போதைக்கு ஐடியா இல்லடா. கனிக்கு பாஸ்போர்ட் எடுக்கணும். இப்ப நீங்க போயிட்டு வாங்க” கனிக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்று வெற்றி கூற, கனியின் உள்ளம் பூத்துக் குலுங்கியது.

 

“சரி அண்ணா, எனக்கு வேலை இருக்கு. நான் தோட்டத்துக்குக் கிளம்புறேன்”

 

“இருடா, நானும் வாறேன்” என்று பாதி உணவோடு வெற்றி கூறிவிட்டு தோட்டத்திற்குச் சென்றான். சரணும் அவர்களுடன் இணைந்தான்.

 

தோட்டத்துக்கு வந்ததும் மித்ரன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்க, வெற்றியும் அவனுடன் நின்றுகொண்டிருந்தான். சரணும் அருகிலேயே இருந்தான்.

 

தோட்டத்தில் உரித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை எல்லாம் மித்ரன் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு லாரி வந்து நிற்க, ஆட்கள் தேங்காய்களை லாரியில் ஏற்றத் தொடங்கினர். அவர்கள் ஏற்றும் தேங்காய்களை மித்ரன் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தச் சத்தங்கள் அனைத்தும் வெற்றியின் காதுகளுக்கும் கேட்டுக்கொண்டிருந்தன.

 

சரணும் அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அப்போது,

 

“அண்ணா… இளநீ குடிக்கிறீங்களா?” என்று மித்ரன் கேட்க,

 

“சரி” என்று வெற்றி சொல்லவும், சரண் மூன்று இளநீர்களை சீவச் சொல்லி வாங்கினான்.

 

மூன்று பேரும் இளநீர் குடித்துக்கொண்டிருந்தனர்.

 

அப்போது சரண் மெதுவாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து, தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றான்.

 

மித்ரன் வெற்றியைப் பார்த்து,

 

“அண்ணா… இன்னும் நைராவை நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா?” என்று கேட்டான்.

 

“அந்தக் குப்பையெல்லாம் நான் எப்பவோ தூக்கிப் போட்டுட்டேன் டா” என்று வெற்றி சொல்ல, மித்ரன் சிரித்தான்.

 

பிறகு மித்ரன் விடாமல்,

 

“அப்புறம் என்னண்ணா? அண்ணி உங்களைப் பார்த்துக்குற விதமே வேற. நீங்களும் அவங்களைப் புரிஞ்சுக்கணும். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தள்ளி வைக்கப் போறீங்க?” என்று கேட்டான்.

 

“அவ இன்னும் சின்னப் பொண்ணுடா. பார்வை இல்லாமல் அவளை நெருங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

 

“சின்னப் பொண்ணா? கனிக்கு அடுத்த வாரம் பிறந்தநாளோட இருபது வயசு. உங்க பொண்டாட்டிதானே! ரொம்ப நாளைக்கெல்லாம் பிரிஞ்சு வாழாதீங்கண்ணா. சேர்ந்து வாழப் பாருங்க. அந்தப் பொண்ணும் பாவம். நம்ம வீட்டுல வளர்ந்த பொண்ணு. அவங்களை இப்படிப் பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்குண்ணா” என்றான் மித்ரன்.

 

“இல்லடா… அவ படிக்கிறா. அவ படிக்கிறதாலேயே நான் ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு. அடுத்த வாரம் உங்களை தாய்லாந்துக்கு கிளப்பிவிட்டுட்டு, நான் அமெரிக்கா போற பிளான்ல இருக்கேன். அவ கொஞ்சம் படிக்கட்டும். ஒரு வருஷம் போகட்டும். அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்”

 

வெற்றி எதை கூறி சமாளித்தாலும், மித்ரன் விடுவதாக இல்லை.

 

“ஒரு வருஷம்லாம் கூடண்ணா… நீங்க பண்றது மோசம். அந்தப் பிள்ளைக்கும் ஒரு மனசு இருக்கும்லையா?” என்று மித்ரன் கேட்க,

 

“படிக்கிற புள்ளா குழந்தையெல்லாம் பெத்துக்கிட்டு யோசிக்கும்போதே கஷ்டமா இருக்குடா” என்று வெற்றி கூறினான். மித்ரன் அவனுக்கு அருகில் சென்று, குரலைத் தாழ்த்தி, கிசுகிசுப்பாகச் சொன்னான்.

 

“டேய்… எனக்கு இதெல்லாம் தெரியும்டா. இருந்தாலும் அப்படியெல்லாம் எனக்கு விருப்பம் இல்லடா” என்று வெற்றி கூறினான்.

 

சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றி, மனமுடைந்த குரலில்,

 

“இதெல்லாத்தையும் விட முதல்ல எனக்கு கண் பார்வை வரட்டும்டா. ஒரு சின்னப் பொண்ணோட வாழ்க்கையை நான் வீணாக்குறேன்னு தோணுது. எனக்கு பார்வை இல்லாமல் குழந்தையை வளர்ப்பது எல்லாம் நினைக்கும்போதே கஷ்டமா இருக்கு”

என்றான்.

 

அதைக் கேட்ட மித்ரன்,

 

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்காதீங்கண்ணா. டோனர் கிடைச்சா சரியாயிடும்ண்ணா. நாங்கள்லாம் உங்களை அப்படியே விட்டுற மாட்டோம்” என்று ஆதரவாகக் கூறினான்.

 

“ஒருவேளை எனக்கு கண் பார்வை திருப்பி வரலன்னா, கண்டிப்பா கனிக்கு டிவோர்ஸ் கொடுத்துருவேன்டா. அவளாவது நல்லா இருக்கட்டும்” என்றான் வெற்றி.

 

அண்ணன் கூறுவதைக் கேட்ட மித்ரனுக்கு, வெற்றி கண்பார்வை இல்லாத நிலையை வைத்தே ஒவ்வொரு காரணத்தையும் சொல்லி கனியைத் தட்டிக்கழிக்கிறான் என்பது நன்றாகப் புரிந்தது.

 

அப்போது சரண் மீண்டும் அவர்கள் இருவரும் நின்றுகொண்டிருந்த இடத்திற்கே வந்தான். அவனும் மனதில் இருந்ததை எப்படி சொல்வது என்று தடுமாறிக்கொண்டிருந்தான்.

 

அவனைப் பார்த்த வெற்றி,

 

“சரண்… தோட்டம் எல்லாம் எப்படி இருக்கு? நல்லா பார்த்தியா?” என்று கேட்டான்.

 

“ஆமா அண்ணா… நல்லா இருக்கு, இங்க இருந்து போகவே பிடிக்கல. உங்க குடும்பத்தையும் சேர்த்துதான்” என்று சரண் கூறினான்.

 

“நீ இந்தியாவுக்கு வாறப்போ இங்கேயே வந்து இருந்துக்கோ சரண். யாரும் உன்னைய எதுவும் கேக்க மாட்டாங்க” என்று அவனும் வீட்டில் ஒரு பிள்ளையென உரிமையாகக் கூறினான் வெற்றி.

 

“எனக்கும் உங்க குடும்பத்தோடேயே இருக்கத்தான் ஆசையா இருக்கு. பார்க்கலாம் அண்ணா” என்று தனக்கென்று யாரும் இல்லாததால் தயக்கத்துடன் கூறினான்.

 

“ஏன் சரண்… நீ பார்க்கலாம்னு சொல்ற?” என்று அவன் குரலில் இருந்த வெறுமையை அறிந்த வெற்றி கேட்டான்.

 

“அது வந்து…” என்று சரண் தயங்க,

 

“என்ன சரண்? உன் முகத்துல ஏதோ வித்தியாசம் தெரியுது. ஏன் சரண், என்னாச்சு?” என்று மித்ரன் கேட்டான்.

 

“அது எப்படி கேக்குறதுன்னு தெரியல மித்ரன்” இருவருக்கும் ஒரே வயது.

 

“எதுவா இருந்தாலும் கேளுடா” என்றான் மித்ரன்.

 

“நான் கேட்குறது பிடிக்கலன்னா, பிடிக்கலன்னு சொல்லணும். அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து என்ன அடிச்சிரக் கூடாது”

 

“ஓகே, சீரியஸான விஷயம்னு புரியுது. விஷயத்த சொல்லு, நான் அடிக்க மாட்டேன்” என்று வெற்றி திடமாகக் கூறினான்.

 

“எனக்கு கௌரியைப் பிடிச்சிருக்கு அண்ணா. அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்”

எடுத்த எடுப்பிலேயே சரண் அப்படிக் கேட்டதும், அண்ணனும் தம்பியும் அதிர்ந்தனர்.

 

“இதைப் பத்தி நீ கௌரிகிட்ட பேசினியா?” என்று வெற்றி கேட்டான்.

 

“இல்ல அண்ணா. நான் அவங்கிட்ட எதுவுமே பேசல. உங்ககிட்ட ரெண்டு பேர்கிட்டயும்தான் முதல்ல பேசுறேன்” என்றான் சரண்.

 

“ஓகே சரண், நான் அம்மா அப்பாகிட்ட பேசிப் பார்க்கிறேன். கௌரிக்குப் பிடிச்சிருந்தா மட்டும்தான் கல்யாணம் பண்ணி வைப்போம். மித்ரன், நீ என்ன சொல்ற?” என்று இருவரிடமும் ஒரே நேரத்தில் பேசினான் வெற்றி.

 

“நீங்க சொல்றதேதான் அண்ணா. கௌரிக்குப் பிடிச்சிருந்தா ஓகே” என மித்ரனுக்கும் அப்படித்தான் தோன்றியது. 

 

“சரண், நீ மனசுல ரொம்ப எதையும் போட்டு குழப்பிக்காத, சரியா?” என்று என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்ற அர்த்தத்தில் வெற்றி கூறினான்.

 

“சரி சரி அண்ணா”

 

அமிர்தவள்ளியும் திருச்செல்வமும் வீட்டிற்கு வந்தபோது, சோபாவில் வெற்றியும் மித்ரனும் அமர்ந்திருந்தனர்.

 

அவர்களைப் பார்த்த அமிர்தவள்ளி,

 

“உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசலாம்னு தான் இருந்தேன். நீங்களே இங்க இருக்கீங்க. நல்லதாப் போச்சு” என்று களைப்புடன் கூறினார்.

 

“சரி மா, முதல்ல நீங்களும் அப்பாவும் உட்காருங்க. பேசலாம்” என்று மித்ரன் கூறினான்.

 

“என்ன விஷயம்மா? சொல்லுங்கம்மா” என்று வெற்றி கேட்டான்.

 

அதற்கு திருச்செல்வம்,

 

“வேற என்ன? கௌரி கல்யாண விஷயம்தான்” என்றார்.

 

“அதைப் பத்தி பேசத்தான் அப்பா, நாங்களும் உட்கார்ந்து இருக்கோம்” என்றான் வெற்றி.

 

படிக்கட்டில் கிருத்திகா அமர்ந்து, அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அப்போது அமிர்தவள்ளி,

 

“கலைவாணி” என்று அழைத்தார்.

 

“அத்தைம்மா, கலைவாணியம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க” என்று கிருத்திகா கூறினாள்.

 

“கனியும் எங்கமா?” என்று அமிர்தவள்ளி கேட்டார்.

 

“கனி மேல ரூம்ல தூங்கிட்டு இருக்கா அத்தைம்மா” என்றாள் கிருத்திகா.

 

“கிருத்திகா, கொஞ்சம் டீ போட்டுத் தாரியாம்மா” என்று அமிர்தவள்ளி கேட்டார்.

 

“சரியத்தை” என்று கூறிவிட்டு கிருத்திகா சமையலறைக்குச் சென்றாள்.

 

அப்போது மித்ரன்,

 

“கௌரி எங்க இருக்கா?” என்று கேட்டுவிட்டு, அவளை அழைக்கச் சென்றான்.

 

“கௌரி… கொஞ்சம் வெளியே வா” என்று அறைக்கு வெளியே நின்று அழைத்தான்.

 

சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து கௌரி வெளியே வந்தாள்.

 

“வா, இங்க உட்காரு” என்று மித்ரன் கூற, கௌரியும் வந்து அமர்ந்தாள்.

 

அனைவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்த கௌரி,

 

“என்ன, சட்டசபை ஆரம்பிச்ச மாதிரி இருக்கு” என்று கேலியாகச் சொன்னாள்.

 

அதற்கு மித்ரன்,

 

“ஆமா, நீதான் சபாநாயகர். ஆளுங்கட்சியா, எதிர்க்கட்சியான்னு பார்க்கலாம். வந்து உக்காரு” என்றான்.

 

ஐந்து நிமிடங்களில் கிருத்திகா அனைவருக்கும் தேனீர் கொண்டு வந்தாள்.

 

“கிருத்திகா, நீயும் உட்காரும்மா” என்று அமிர்தவள்ளி கூறினார்.

 

“இல்ல அத்தைம்மா, பெரியவங்க பேசுறீங்க. நான் உள்ளே போறேன்” என்றாள் கிருத்திகா.

 

“அப்படி இல்லம்மா. எங்களுக்குப் பிறகு இந்தக் குடும்பத்தை நீயும் கனியும் கொண்டு போகணும். அதனால நீயும் உட்காரு” என்று அமிர்தவள்ளி கூறினார்.

 

அதைக் கேட்ட கிருத்திகாவும் அங்கேயே அமர்ந்தாள்.

 

அப்போது மித்ரன் கௌரியைப் பார்த்து,

“கௌரி… சரண் உன்னை விரும்புறேன்னு சொல்லியிருக்கான். இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறன்னு சொல்லு” என்றான்.

 

அதைக் கேட்ட கௌரி அதிர்ச்சியுடன்,

“என்ன?” என்று டக்கென்று கேட்டாள்.

 

சரண் தங்களை விட்டுப் பிரிந்து செல்லாமல், தங்களுடனேயே இருக்கப் போகிறான் என்பதில் அமிர்தவள்ளிக்கும் திருச்செல்வத்துக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

‘சரண் நல்ல பையன். அவன் நம்ம கூடவே இருந்துக்கட்டும். நம்ம பொண்ணையும் அவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்’ என்று திருச்செல்வம் மனதுக்குள் நினைத்தார். ஆனால் கௌரிக்கோ, சரண் தன்னை விரும்புவதாகக் கேள்விப்பட்டதே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

அமிர்தவள்ளி அவளைப் பார்த்து,

“கௌரி… உனக்கு சரணைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டார்.

 

கௌரி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் யோசிச்சு சொல்றேன்” என்றாள்.

 

அவ்வளவுதான் சொல்லிவிட்டு, கௌரி குடுகுடுவென தன் அறைக்குள் ஓடிவிட்டாள்.

 

திருச்செல்வமோ அமிர்தவள்ளியைப் பார்த்து,

 

“நம்ம கொண்டு வந்த ஃபோட்டோஸுக்கு இனிமேல் வேலை இல்லன்னு நினைக்கிறேன்” என்றார்.

 

“நானும் அதைத்தான் நினைச்சேன்” என்று அமிர்தவள்ளியும் கூற, இருவரும் சிரித்தனர்.

 

*****

அன்பான உறவுகளே உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் மறக்காமல் பதிவிடுங்கள்.🎊

 

நான் இந்த கதையை முழுசா எழுதி முடிச்சிட்டேன் அதனால உடனே கூட நான் அப்டேட் வந்துகிட்டே இருக்கும். நன்றி 🙏

அடுத்த அத்தியாயம்

கனி 10

கனி 10  வெற்றின் வாழ்க்கையும் கனி இன்றி சுவைக்காது. அவனுக்காகவே கனி உதித்த நாளாம் இன்று. கனி, வெற்றி வாங்கிக் கொடுத்த பத்து சுடிதார்களில் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு கீழே வந்தாள். புதுசு சுடிதாரில் பளிச்சென்று, நீட்டாக வந்தவளைப் பார்த்த அமிர்தவள்ளி அவளை அருகில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்