arrow_back
கனியாத்ரேயம் கனி 13
கனியாத்ரேயம் chevron_right பகுதி 13 / 15

கனி 13

visibility 9
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 13 

 

சந்திரன் வீடு செல்லும் வேளையில் எழுந்தவள், அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு, பகலவன் வரும் முன்னே அவளது கோரிக்கையை வைத்தாள்.

 

“அத்தான் சீக்கிரம் வரச் சொல்லு, சூரிய பகவானே!” எனச் சூரியனிடம் தூது அனுப்பியிருந்தாள்.

 

வழக்கம்போல மணக்க மணக்கத் தேனீரை அனைவருக்கும் கொடுக்க, கிருத்திகாவிற்கு மட்டும் பால் கொடுத்தாள்.

 

கிருத்திகா, “கனி, இன்னைக்கு மட்டும் அரை டம்ளர் டி கிடைக்குமா?” என்று கண்களைச் சுருக்கி இறைஞ்சினாள்.

 

“உங்களுக்கு ஹீமோகுளோபின் கம்மியா இருக்கு, கிருத்தியக்கா. அதனால வேணாம், ப்ளீஸ். குட்டிப் பாப்பும் நீங்களும் ஹெல்த்தியா இருக்கணும். நாளைக்கு பால்ல ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரைப் பொடி போட்டுத் தரலாம்னு இருக்கேன்” என்று கனி சொன்னவுடன், “இல்ல கனி. நான் வெறும் பாலையே குடிக்கிறேன்” என்றாள் கிருத்திகா.

 

கனி உண்மையாகவே முருங்கைக்கீரைப் பொடியைப் பாலில் கலந்து கொடுத்துவிடுவாள் என்ற பயத்தில், கனியிடமிருந்து பால் டம்ளரை வாங்கி மடமடவென்று குடித்தாள்.

 

இவர்களின் ஒற்றுமையைப் பார்த்த அமிர்தவள்ளியின் உள்ளமெல்லாம் பூரித்துப்போனது.

 

கிருத்திகா பால் குடித்த டம்ளரைக்கூடக் கீழே வைக்கவில்லை, அந்த அளவிற்கு அவளை நன்றாகப் பார்த்துக்கொண்டார் அமிர்தவள்ளி.

 

கல்லூரிக்குச் சென்ற கனி, பேராசிரியர் பிளாஸ்டிக் இதய மாதிரியை வைத்துப் பாடம் நடத்துவதைக் கவனித்துக்கொண்டே அனைத்தையும் குறிப்பெடுத்தாள். இடைவேளையின்போது தோழிகளிடமிருந்து சற்று ஓரமாக வந்தாள்.

 

வெற்றி கூறிய இரண்டு மாதங்கள் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில், தனது அலைபேசியை எடுத்தவள் வெற்றிக்கு அழைத்தாள்.

 

அவன் அழைப்பை ஏற்காமல் இருக்கவே, சரணுக்கு வீடியோ அழைப்பு செய்தாள். அப்போது வெற்றி தன் அறையில் உறங்கிக்கொண்டிருப்பதைக் காட்டினான் சரண்.

 

பிறகு, “அண்ணா, நீங்களும் அத்தானும் எப்போ ஊருக்கு வருவீங்க? இன்னும் எத்தனை நாள் ஆகும்?” என்று கேட்டாள்.

 

“இன்னும் கொஞ்ச நாள் ஆகும், கனிமா” என்று சரண் கூறினான். அதைக் கேட்ட கனியின் மனம் சற்றே சுருங்கிப்போனது. அத்தானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தவளுக்கு, இன்னும் காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகமானது.

 

கல்லூரியில் இருந்ததால் அதிக நேரம் பேச முடியாமல் அழைப்பை நிறுத்தினாள்.

 

கிருத்திகா வாந்தி, மயக்கம் எல்லாவற்றையும் கடந்து ஐந்தாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

 

பரிசோதனைகள் அனைத்தும் முடிந்ததும், தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர் உறுதியளித்தார்.

 

கிருத்திகா வீட்டிற்குள் வந்ததும், அமிர்தவள்ளி அவளை அன்புடன் வரவேற்று அருகில் அமர வைத்தார். பரிசோதனையில் குழந்தை நன்றாக இருப்பதாகவும், எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கிருத்திகா தெரிவித்ததும், அமிர்தவள்ளியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. இத்தனை நாட்களாக மசக்கையில் அவதியுற்றதை எண்ணிக் கவலைப்பட்டிருந்தவருக்கு, அந்தச் செய்தி பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

 

அன்றைய தினம், வெளியாட்களை அழைக்காமல், குடும்பத்தினரும் கிருத்திகாவின் பெற்றோரும் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில், கிருத்திகாவின் ஐந்தாவது மாதச் சீருக்கான ஏற்பாடுகள் அமைதியாகச் செய்யப்பட்டிருந்தன.

 

வீட்டில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து, கிருத்திகாவுக்குப் பிடித்தமானவற்றைத் தயார் செய்து, அவளையும் வயிற்றில் வளரும் குழந்தையையும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர். ஆரவாரமோ ஆடம்பரமோ இல்லாமல், நெருக்கமான உறவுகளின் அன்பும் பாசமும் நிறைந்த அந்தச் சிறிய கொண்டாட்டம் கிருத்திகாவின் மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

 

அந்த வீட்டில், வரப்போகும் புதிய உயிரை எண்ணிய சந்தோஷம் அனைவரின் முகத்திலும் பிரதிபலித்தது.

 

******

 

வெற்றி அமெரிக்கா சென்று ஆறு மாதங்கள் கடந்தன.

 

அன்று கல்லூரியில் வழக்கமான வகுப்புகள் முடிந்ததும், இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்காகச் சிறப்பு மருத்துவத் திறன் பயிற்சி வகுப்பு நடைபெறவிருந்தது.

 

வழக்கமாகக் கல்லூரி முடியும் நேரத்திலேயே கனி வீட்டிற்கு அலைபேசியில் அழைத்து, அன்று மேலதிக வகுப்பு இருப்பதையும், மாலை ஆறு மணிக்குத்தான் முடியும் என்பதையும் தெரிவித்தாள். அவளை அழைத்துச் செல்ல ஆறு மணிக்கு வண்டி அனுப்பிவைக்குமாறு கூறிவிட்டு, வகுப்பிற்குச் சென்றாள்.

 

இதயத்தின் செயல்பாடுகள், நாடித்துடிப்பைக் கணக்கிடுதல், ரத்த அழுத்தத்தை அளவிடுதல் போன்ற அடிப்படை மருத்துவச் செயல்முறைகளைப் பயிற்சி செய்வதற்காகவே அன்றைய சிறப்புப் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதுவரை புத்தகங்களிலும் வகுப்பறைகளிலும் கற்றுக்கொண்டவற்றைத் தங்களுடைய கைகளால் தொட்டு உணர்ந்து பார்க்கும் முதல் அனுபவம் என்பதால், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தனி உற்சாகம் காணப்பட்டது. தோழர்கள் மற்றும் தோழிகளின் இதயத் துடிப்பைக் கேட்டறிந்தபோது ஏற்பட்ட வியப்பும், ரத்த அழுத்தத்தைச் சரியாக அளவிடக் கற்றுக்கொண்டபோது கிடைத்த மகிழ்ச்சியும் அவர்களுடைய முகங்களில் பிரதிபலித்தன.

 

கனியும் மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு பயிற்சியிலும் ஈடுபட்டாள். மருத்துவப் படிப்பில் தான் கற்றுக்கொண்டவற்றைச் செய்முறையாகப் பயிற்சி செய்யும்போது, மருத்துவராகும் தன்னுடைய கனவு மெல்ல மெல்ல நிஜமாகிக்கொண்டிருப்பதைப் போன்ற ஓர் உணர்வு அவளுக்குள் எழுந்தது.

 

மணமான பெண்களுக்கு அவர்களுடைய தாலி எத்தனை முக்கியமானதோ, அதேபோல மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுடைய ஸ்டெதஸ்கோப்பும் ஒரு தனிப் பெருமைக்குரியது. அதைத் தங்களுடைய கழுத்தில் அணிந்துகொள்ளும் ஒவ்வொரு முறையும், ஒருநாள் தாங்களும் மருத்துவராகி நோயாளிகளுக்குச் சேவை செய்யப்போகிறோம் என்ற பெருமிதம் அவர்களுக்குள் மலர்ந்தது.

 

வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியே வர ஆரம்பித்தனர்.

 

கல்லூரி வாசலை நோக்கி வந்த கனியின் பார்வை, அங்கே நின்றிருந்த பழக்கமான காரின் மீது விழுந்தது.

 

‘இது அத்தானோட காராச்சே!’ என்று மனதிற்குள் நினைத்தவளின் இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.

 

மனதில் எழுந்த கேள்வியுடன், வேகமாகக் காரை நோக்கிச் சென்றாள். ஓட்டுனர் இருக்கையின் அருகில் இருந்த கண்ணாடியைத் தட்டினாள்.

 

கண்ணாடியை மெதுவாக இறக்க, சரணின் முகம் பளிச்சென்று தெரிந்தது. கனி அப்படியே நின்றுவிட்டாள்

 

“அண்ணா… நீங்க… எப்போ வந்தீங்க

அத்தான் வந்துருக்காரா?”

அதிர்ச்சியில் அவளுக்கு வார்த்தைகள்கூடச் சரியாக வரவில்லை. சரணைப் பார்த்ததற்கே இத்தனை அதிர்ச்சியாக இருந்தது!

வெற்றி வீட்டில் இருப்பான் என்று நினைத்தாள்.

 

சரண் அவளுடைய முகத்திலிருந்த தவிப்பைப் பார்த்துப் புன்னகைத்தான்.

 

“வீட்டுக்குப் போய்ப் பேசலாம், கனிமா? நீ பின்னாடி ஏறு” என்று சரண் கூறவும், வெற்றி வீட்டில் இருப்பான் என்று எண்ணினாள்.

 

அந்த எண்ணமே அவளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டது.

 

அடுத்த நொடியே காரின் மறுபக்கத்திற்குச் சென்றவள், பின்பக்கக் கதவைத் திறந்தாள்.

 

அங்கே…

 

கூலிங் கிளாஸ் அணிந்தபடி, காரின் இருக்கையில் ஜம்மென்று அமர்ந்திருந்தான் அவளுடைய அத்தான்!

 

வெற்றியைப் பார்த்ததும் கனியின் கண்களில் ஆயிரம் தாமரை மொட்டுகளாக விரிந்தன. அவளால் நம்பவே முடியவில்லை. ஆறு மாதங்களாகப் பார்க்கத் துடித்த முகம், இப்போது தன் கண் முன்னே இருந்தது.

 

‘நிஜமாவே அத்தான்தானா? இல்ல… நடப்பவை எல்லாம் கனவா?’

 

தன்னுடைய கையை மெதுவாகக் கிள்ளிப் பார்த்தாள்.

 

“ஸ்…” அவளுக்கு வலித்தது.

 

அப்படியென்றால், இது கனவல்ல. அவளுடைய அத்தான் உண்மையாகவே அவள் முன்னால் அமர்ந்திருந்தான்!

 

“அத்தான்…”

 

அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. வேகமாகக் காருக்குள் ஏறியவள், அடுத்த கணமே அவளுடைய அத்தானைக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

 

ஆறு மாதங்களாகத் தன்னுள் தேக்கி வைத்திருந்த ஏக்கமெல்லாம் கண்ணீராகக் கரைபுரண்டது. அவனைப் பார்க்க வேண்டும் என்று தவித்த மனம், இப்போது அவன் அருகில் இருந்தும் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டது.

 

விம்மி விம்மி அழுதுகொண்டிருந்த கனியைப் பார்த்த வெற்றியின் மனம் கனத்துப்போனது.

 

தன் தோளில் சாய்ந்து அழும் கனியைத் தன் மனைவியாக உணர்ந்தவனுக்கு, அவளுடைய கண்ணீரும் தன்னைக் கண்டதும் அவள் அடைந்த மகிழ்ச்சியும் மனதை ஏதோ செய்தன.

 

‘தனக்காக இவ்வளவு ஏங்கியிருக்கிறாளா?’

 

அவளுடைய முகத்தைக் கையில் ஏந்தியவனுக்கு ஒருவிதமான வலி எழுந்தது. இத்தனை நாட்களாகத் தன்னுடைய வருகைக்காகக் காத்திருந்தவளின் ஏக்கத்தை உணர்ந்தபோது, அவளுக்கு இன்னும் எவ்வளவு அன்பைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

 

“கனி…”

 

மெதுவாக அழைத்தவன், அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

 

“ஏன் அத்தான், எங்கிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லல? இத்தனை நாள் உங்களுக்காகக் காத்திருந்தேன் தெரியுமா? எப்போ வருவீங்கன்னு தினமும் நினைச்சிட்டே இருந்தேன். ஃபோன் பண்ணாக்கூட ஒழுங்காகப் பேச மாட்டீங்க.” சிறு குழந்தையைப் போல அவள் குறைகூறும்போது வெற்றியின் மனம் மேலும் பாரமானது.

 

அவளுடைய கண்ணீரை மீண்டும் துடைத்துவிட்டவன்,

 

“சரி, கனி. நான் வந்துட்டேன்ல? இனி அழாதே” என்று கூறியபடி அவளைத் தன்னுடைய தோளில் சாய்த்துக்கொண்டான்.

 

அவனுடைய அணைப்பில் இன்னும் நெருங்கிச் சாய்ந்த கனி, அவன் தோளில் முகம் புதைத்தபடி அழுகையை மெதுவாக அடக்க முயன்றாள். ஆனால், முடியவில்லை.

 

“மறுபடியும் என்னை விட்டு போகாதீங்க, அத்தான்” என்று அவள் கூறியபோது, அவளுடைய மூச்சுக்காற்று விசும்பலானது.

 

“அண்ணா, வீட்டுக்குப் போகலாமா?” என்று சரண் கேட்கவும்,

 

சரண் அருகில் இருக்க, வெற்றியின் தோளில் சாய்ந்திருந்த கனி சட்டென்று விலகி அமர்ந்தாள். அப்போதுதான் இவ்வளவு நேரமாக அவன் தோளில் சாய்ந்துகொண்டிருந்ததை உணர்ந்தவளுக்குக் கூச்சமாக இருந்தது. வெட்கத்தில் தலைகுனிந்து தன்னுடைய விரல்களோடு விளையாடத் தொடங்கினாள்.

 

“ஆமா, சரண். போகலாம்” என்று வெற்றி கூறினான்.

 

கார் கிளம்பியதும் கனி மீண்டும் வெற்றியின் பக்கம் திரும்பினாள்.

 

“அத்தான், நீங்க எப்போ வந்தீங்க?”

 

“பகலேயே வந்துட்டேன், கனி.”

 

“அப்புறம் ஏன் எங்கிட்ட சொல்லல?”

 

“நீ காலேஜ்ல இருக்கன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னாங்க. அதான், உன்னை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்”

 

அவன் சாதாரணமாகப் பதிலளித்தான்.

 

“நீங்க வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்திருக்கலாமே, அத்தான்! இரண்டு நாள் பயணம் செஞ்சுட்டு வந்திருக்கீங்க. உடம்பெல்லாம் எவ்வளவு டயர்டா இருக்கும்!”

வெற்றியின் மனம் அவளுடைய அக்கறையில் நெகிழ்ந்தது.

 

“பகல்ல கொஞ்சம் தூங்கினேன், கனி. அதான், உன்னைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்”

 

“இருந்தாலும், வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்திருக்கலாம்தானே, அத்தான்! நான் வீட்டுக்குத்தானே வருவேன்?”

 

அவள் மீண்டும் அதையே கூறவும், வெற்றி அவளுடைய முகத்தை நோக்கித் திரும்பினான்.

 

“என்னால உன்னைப் பார்க்கத்தான் முடியல. உன்னோட குரலையாவது கேட்கலாம்னுதான் வந்தேன்”

 

வெற்றி அதைச் சாதாரணமாகத்தான் கூறினான். ஆனால், கனியின் துடித்துக் கொண்டிருந்த இதயம் தன் இயல்பை மறந்தது.

 

‘அத்தானுக்கும் என் நினைப்பு இருக்கா? என் குரலைக் கேட்கணும்னு ஆசைப்பட்டு வந்திருக்காரா?’

அவளுடைய மனம் சந்தோஷத்தில் துள்ளியது. உதடுகளில் வெட்கம் கலந்த புன்னகை மலர்ந்தது.

 

அவளுடைய முகத்தில் தோன்றிய அந்த மாற்றத்தை வெற்றி உணர்ந்தான். அவளுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிய அவனுக்கு ஆசையாக இருந்தது.

 

“நான் வரப்போறேன்னு ஒரு வாரம் முன்னாடியே சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப, கனி?” என்று கேட்டான்.

 

அதைக் கேட்டதும் கனி தயக்கமில்லாமல் பதிலளித்தாள்.

 

“உங்களைப் பார்க்க ஏர்போர்ட்டுக்கே ஓடி வந்திருப்பேன், அத்தானு!”

வெற்றியின் மனம் ஒருகணம் நெகிழ்ந்துபோனது. அவளுடைய அன்பின் ஆழத்தை உணர்ந்தவனுக்கு, அவள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.

 

ஆனால், தன்னுடைய மனதிற்குள் எழுந்த உணர்வுகளை வெளிக்காட்டாமல், அவளுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்தான்.

 

சிறிது நேரத்தில் கார் வீட்டை வந்தடைந்தது.

 

“பார்த்து இறங்குங்க, அத்தான்” என்று கூறியபடி அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள்.

 

அவளுடைய அக்கறையை உணர்ந்த வெற்றி, அவளுடைய கையை மெதுவாகப் பற்றிக்கொண்டான்.

 

இருவரும் ஜோடியாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

 

அமிர்தவள்ளி, கலைவாணி, திருச்செல்வம் என வீட்டிலிருந்த மூவரும் இவர்கள் ஜோடியாக வருவதைப் பார்த்துப் பூரித்துப்போனார்கள்.

 

உள்ளே வந்த வெற்றி சோபாவை தொட்டு பார்த்து அமர்ந்தான்.

அவனருகே வந்த கனி, ஒரு டம்ளர் தண்ணீரைக் வாய் அருகில் வைக்க

டம்ளரை வாங்கிக் குடித்த வெற்றி, டம்ளரை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.

 

அப்போது அமிர்தவள்ளி அவனருகே வந்து அமர்ந்தார்.

 

“வெற்றி, இனிமேல் நீ வெளியூருக்குப் போறதா இருந்தா, தயவுசெய்து கனியையும் உன்னோட கூட்டிட்டுப் போயிடு. அவளை இங்கே விட்டுட்டுப் போகாத. இத்தனை நாள் உன்னைப் பிரிஞ்சு அவள் ஏங்கினதை எங்களால பார்க்கவே முடியல. அவளைத் தனியா பார்க்கிறப்போ எங்களுக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு. எப்பவும் உன்னைப் பற்றியே நினைச்சிட்டு இருந்தா. இனிமேல் அவளை இப்படி ஏங்கவிடாதப்பா” என்றார் அமிர்தவள்ளி.

 

அவருடைய வார்த்தைகளைக் கேட்ட வெற்றி, கனியை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அமிர்தவள்ளியை நோக்கினான்.

 

“இல்லம்மா, இனிமேல் எனக்கு அமெரிக்காவுல வேலை இல்லை. நான் இங்கேயே ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கான ஏற்பாடுகளையும் செய்யணும். இனிமேல் நான் இங்கேதான் இருக்கப்போறேன்” என்றான் வெற்றி.

 

அவன் சொன்னதைக் கேட்டதும் அமிர்தவள்ளியின் முகம் மலர்ந்தது.

 

“என்னப்பா சொல்ற? இனிமேல் நீ இங்கேயேதான் இருக்கப்போறியா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.

 

“ஆமாம்மா. இனிமேல் இங்கேதான் என்னோட வேலை எல்லாமே”

 

அதைக் கேட்ட திருச்செல்வமும் கலைவாணியும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டனர்.

 

இத்தனை நாட்களாக வெற்றியும் கனியும் பிரிந்து இருப்பதைப் பார்த்துக் கவலைப்பட்டவர்களுக்கு, இனிமேல் இருவரும் ஒன்றாகவே இருக்கப்போகிறார்கள் என்ற செய்தி பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

 

கனிக்கோ வெற்றியின் வார்த்தைகளைக் கேட்டதும் மனதிற்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி பிறந்தது. இனிமேல் அத்தான் தன்னைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்ற எண்ணமே அவளுடைய மனதை நிறைத்தது.

 

 

*******

 

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் அன்பர்களே! பிழைகள் இருப்பினும் சுட்டிக்காட்டுங்க🙏❤️

அடுத்த அத்தியாயம்

கனி 14

கனி 14 குளித்துவிட்டு அறைக்குள் வந்த வெற்றி, கூலிங் கிளாஸை அணிந்துகொண்டே வந்தான். அவனைப் பார்த்த கனிக்குச் சற்றே வித்தியாசமாகத் தோன்றியது. வந்ததிலிருந்து கூலிங் கிளாஸைக் கழற்றாமல் இருக்கிறானே என்று நினைத்தவள், அவன் சாப்பிடும்போதுகூட அதைக் கழற்றாமல் இருப்பதைக் கவனித்தாள். அவளுக்குள் மெல்லச் சந்தேகம்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்