arrow_back
கனியாத்ரேயம் கனி 14
கனியாத்ரேயம் chevron_right பகுதி 14 / 17

கனி 14

visibility 8
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 14

 

குளித்துவிட்டு அறைக்குள் வந்த வெற்றி, கூலிங் கிளாஸை அணிந்துகொண்டே வந்தான்.

 

அவனைப் பார்த்த கனிக்குச் சற்றே வித்தியாசமாகத் தோன்றியது. வந்ததிலிருந்து கூலிங் கிளாஸைக் கழற்றாமல் இருக்கிறானே என்று நினைத்தவள், அவன் சாப்பிடும்போதுகூட அதைக் கழற்றாமல் இருப்பதைக் கவனித்தாள். அவளுக்குள் மெல்லச் சந்தேகம் எழுந்தது.

 

‘என்ன அத்தான், எப்பப் பார்த்தாலும் கூலிங் கிளாஸோடவே இருக்காரு?’ என்று மனதிற்குள் நினைத்தவள், அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“அத்தானு…”

 

“ம்… சொல்லு, கனி”

 

“வந்ததிலிருந்து கூலிங் கிளாஸைக் கழட்டாம இருக்கீங்க! இப்போ அதைக் கழட்டுங்க”

 

அமெரிக்காவில் இருந்தபோது கூலிங் கிளாஸ் அணிந்திருந்த பழக்கம் அப்படியே தொடர்ந்தது. கனி கூறவும், வெற்றி கூலிங் கிளாஸைக் கழற்றினான்.

 

அவனுடைய கண்களைப் பார்த்த கனிக்குச் சட்டென்று ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. அவனுடைய கருவிழிகள் அடர்ந்த தேன் நிறத்தில் இருந்தன.

 

முன்பு கருமையாக இருந்த அவனுடைய கருவிழிகள் இப்போது தேன் நிறத்தில் இருப்பதைப் பார்த்தவளுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

 

கனி அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள்.

 

“அத்தான், உங்க கண்ணு…” கனிக்குக் குழப்பமாக இருந்தது.

 

“என்னாச்சு, கனி?”

 

“உங்க கண்ணோட கருவிழி டார்க் பிரவுன் கலர்ல இருக்கே! முன்னாடி பிளாக் கலர்லதானே இருந்தது?”

 

அவனுடைய கண்களில் ஏற்பட்டிருந்த மாற்றத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தவளின் மனம் பதறியது.

 

வெற்றி அவளை நோக்கித் திரும்பினான். “எனக்கு எப்படித் தெரியும், கனி? என்னாலதான் பார்க்க முடியாதே!” அவன் சாதாரணமாகப் பதிலளித்தாலும், கனிக்கு மட்டும் ஏதோ சரியாகப்படவில்லை.

 

அவளுடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர்ந்த வெற்றி, “என்ன யோசிக்கிற, கனி?” என்று கேட்டான்.

 

“ஒண்ணுமில்லை, அத்தான். உங்க கண்ணோட கலர் மாறியிருக்கேன்னு சொன்னேன். அதான் கொஞ்சம் பயமா இருக்கு”

 

“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது, கனி. நீ முதல்ல எனக்குக் கண்ணுக்கு மருந்து போட்டுவிடு”

 

“மருந்து எங்கே இருக்கு அத்தான்?”

 

“டிரஸ்ஸிங் டேபிள் டிராவ்ல இருக்கு. சரண் வச்சிட்டுப் போனான்”

 

“சரி, அத்தான். நீங்க ஒழுங்கா உட்காருங்க. நான் மருந்து எடுத்துட்டு வாறேன்”

 

கனி மருந்தை எடுத்துவரச் சென்றதும், வெற்றி மெல்ல ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

 

மருந்துடன் திரும்பி வந்த கனி, அவனருகில் அமர்ந்தாள். மருந்தைக் கையில் எடுத்தவள், அதன் பாட்டிலைப் பார்த்துவிட்டுக் குழப்பத்துடன் வெற்றியை நோக்கினாள்.

 

“அத்தான், இந்த மருந்து வேற மாதிரி இருக்கு. ஏன் மருந்தை மாத்திக் கொடுத்திருக்காங்க?”

 

“இது அதே மருந்துதான், கனி. பிராண்ட் மட்டும்தான் வேற. அமெரிக்காவுல வாங்கினதால பிராண்ட் மாறியிருக்கு. வேற ஒண்ணுமில்லை.”

 

“ஓ… சரி, அத்தான்”

 

அவனுடைய பதிலைக் கேட்ட கனி மீண்டும் மருந்தைப் பார்த்தாள். பிறகு, அவனுடைய கண்களுக்கு மருந்தைப் போடத் தயாரானாள்.

 

“அத்தான், நாளைக்கு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மென்ட் போட்டுப் பார்க்கலாமா? உங்க கண்ணோட கலர் மாறியிருக்கே. ஏதாவது பிரச்சினையா இருக்குமோன்னு பயமா இருக்கு”

 

“வேண்டாம், கனி. நான் அடுத்த மாசம்தான் அப்பாயிண்ட்மென்ட் போட்டிருக்கேன். டாக்டரும் இப்போ ஊர்ல இல்லை”

 

அவன் சொன்னதைக் கேட்ட கனி அமைதியானாள்.

 

“சரிங்க அத்தான். ஆனா, ஏதாவது பிரச்சினைன்னா உடனே சொல்லணும். எதையும் மறைக்கக் கூடாது” என்று அக்கறையுடன் அழுத்தமாகக் கூறினாள். அவளுடைய அக்கறையை உணர்ந்த வெற்றியின் மனம் நெகிழ்ந்தது.

 

பிறகு, கனியின் பரீட்சையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

 

அடுத்த வாரம் பரீட்சை என்றும், பரீட்சை முடிந்ததும் ஒரு மாதம் விடுமுறை என்றும் அவள் கூறியதும், வெற்றியின் மனதிற்குள் ஒருவிதக் குதூகலம் பிறந்தது. அந்தச் செய்தி அவனுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

“அத்தான், எனக்குக் கொஞ்சம் படிக்க இருக்கு. நான் படிக்கிறேன். நீங்க தூங்குங்க” என்றாள் கனி.

 

பிறகு, வெற்றி கட்டிலில் படுப்பதற்குத் தேவையான விரிப்பையும் தலையணையையும் சரிசெய்து வைத்துவிட்டு, தன்னுடைய புத்தகத்துடன் கட்டிலில் அமர்ந்தாள். இரண்டு மணி நேரம் நன்றாகப் படித்தாள்.

 

நேரம் செல்லச் செல்லத் தூக்கம் அவளைத் தழுவத் தொடங்கியது. இரவு பதினொரு மணியைத் தாண்டியிருந்ததால், புத்தகத்தை மூடி ஓரமாக வைத்தாள்.

 

தனக்குத் தரையில் படுக்கை விரிக்கும்போது கட்டிலில் படுத்திருந்த வெற்றியைப் பார்த்தாள் கனி. அவன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் தெரிந்த நிம்மதியைப் பார்த்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.

 

அவனருகில் அமர்ந்தவள், அவனுடைய நெற்றியில் விழுந்திருந்த தலைமுடியை மெதுவாக ஒதுக்கினாள். அவனுடைய முகத்தையே சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவளுக்கு, அவன் அருகில் இருப்பதே மனதிற்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

அவனுடைய தலைமுடியைக் கோதிவிட்டவள், அவனுடைய மூக்கின் நுனியைத் தன் ஆள்காட்டி விரல் நுனியால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தாள்.

 

அவனருகில் இப்படி நெருக்கமாகப் பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு ஏதோ ஓர் உணர்வு தோன்ற, உணர்ச்சிவசப்பட்டவள் ஆசையாக அவனுடைய கன்னத்தில் இதழ் பதித்தாள்.

 

“கனி, நான் முழிச்சுட்டேன்” என்று கண்களை மூடியவாறே வெற்றி பேசினான்.

 

அவன் குரலைக் கேட்டதும் வெட்கத்தில் முகம் சிவந்த கனி, நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

 

“சாரி, அத்தான். நான் தூங்கப் போறேன்” என்று சொல்லிவிட்டு நகர முயன்றாள்.

 

“என் பக்கத்துல வா, கனி” என்று அவன் அழைத்தான்.

 

அவளோ பயத்தில்,

 

“ஹூம்… மாட்டேன்!” என்றாள்.

 

“ஒண்ணும் பண்ண மாட்டேன். இங்க வா”

 

தன்னுடைய மனைவியைத் தன் அருகில் அழைத்துக்கொள்ளக்கூடிய உரிமை இல்லையா என்ற எண்ணம் வெற்றியின் மனதில் தோன்றியது.

 

கனியின் தொண்டைக்குழி இறுகியது.

 

“அத்தான், ப்ராமிஸ்!”

 

“கனி மேல ப்ராமிஸ். வா” என்றான் வெற்றி.

 

அவனுடைய வார்த்தைகளை நம்பியவள், மெதுவாக அவனருகில் வந்தாள்.

 

அவளுடைய கொலுசுச் சத்தத்தைக் கேட்ட வெற்றி,

 

“வந்துட்டியா?” என்று கேட்டான்.

 

“ம்…” என்று மெதுவாகப் பதிலளித்தாள் கனி. அவன் தன் கையை நீட்டினான்.

 

“கையைக் குடு, கனி”

 

நடுக்கத்துடன் அவள் தன்னுடைய கையை அவன் கையின் மேல் வைத்தாள்.

 

அடுத்த நொடியே, அவளுடைய கையைப் பிடித்து டக்கென்று தன்னை நோக்கி இழுத்தான்.

 

எதிர்பாராத அந்தச் செயலால் நிலைதடுமாறிய கனி, நேராக அவன் மேல் விழுந்தாள். அவன் கைகள் அவளுடைய இடையை அணைத்துக்கொள்ள, பயத்தில் நடுங்கியவள் அவனுடைய பிடியிலிருந்து விலக நெளிந்தாள்.

 

“என்னத்தான் பண்றீங்க?” கனியின் பயந்த குரல் வெளி வந்தது.

 

“நான் உன்னையக் கடிச்சு சாப்பிட மாட்டேன் டீ. என் பக்கத்துலயே தூங்க ப்ளீஸ்” என்றான் வெற்றி.

 

மெல்லிய குரலில், “ம்…” என்றவளும் அவன் அருகில் படுத்துக்கொண்டாள்.

 

வெற்றி இப்படித் தன்னிடம் நெருக்கமாக நடந்துகொள்வான் என்று எதிர்பார்க்காத கனி, வெட்கத்தில் திளைத்திருந்தாள்.

 

“இன்னைக்கு மட்டுமில்ல, டெய்லியும் என் பக்கத்துல படுத்துக்கோ” என்ற வெற்றி, அவளுடைய இடையை அணைத்தபடியே இருந்தான்.

 

அவனுடைய அணைப்பில் அடங்கிய கனி, வெட்கத்துடன் கண்களை மூடினாள். சிறிது நேரத்தில் இருவரும் உறங்கிப்போனார்கள்.

 

பரீட்சை நெருங்கிக்கொண்டிருந்ததால், வெற்றி கனியைத் தொந்தரவு செய்யாமல் படிக்க விட்டான். ஒருவழியாக அவளுடைய பரீட்சையும் முடிவடைந்தது.

 

பரீட்சை முடிந்த மறுநாள் காலையில், வழக்கம்போல விடியற்காலையிலேயே எழுந்த கனி, தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். வீட்டைச் சுத்தம் செய்து, சமையலறையில் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு, கிருத்திகாவைப் பார்க்கச் சென்றாள்.

 

கிருத்திகா அறையில் அமர்ந்திருந்தாள்.

 

“கிருத்தி அக்கா, என்ன பண்றீங்க?” என்று கேட்டபடியே அவளருகில் சென்ற கனி, கிருத்திகாவின் முகத்தைப் பார்த்தாள்.

 

“ஒண்ணுமில்லை, கனி. சும்மாதான் இருக்கேன்”

 

“அப்படியா? சரி, கிருத்தி அக்கா. காலேஜ்ல பிராக்டிஸ் பண்ணச் சொன்னாங்க, அதான்!” என்றவள், தான் கொண்டு வந்திருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்தாள்.

 

“கிருத்தி அக்கா, கொஞ்ச நேரம் இப்படியே இருங்க. நான் உங்களுக்கு ஹார்ட் பீட் செக் பண்ணிப் பார்க்கிறேன்”

 

அவளுடைய பேச்சைக் கேட்டுக் கிருத்திகா சிரிக்க, கனி ஸ்டெதஸ்கோப்பைத் தன் காதுகளில் மாட்டிக்கொண்டு, அதன் மறுமுனையை அவளுடைய மார்பில் வைத்துக் கவனமாகக் கேட்டாள்.

 

சில நொடிகள் அமைதியாக இருந்தவளின் முகம் மாறியது. கிருத்திகாவின் இதயத்துடிப்பைக் கவனித்தவள், மீண்டும் ஒருமுறை ஸ்டெதஸ்கோப்பைச் சரியாக வைத்துக் கேட்டாள்.

 

கனி முழிப்பதைப் பார்த்த கிருத்திகா,

 

“என்ன கனி, என் ஹார்ட் துடிக்குதா இல்லையா?” என்று கேட்டாள்.

 

“துடிக்குது, துடிக்குது… மித்ரன் அண்ணா பேரைச் சொல்லி!” என்று நக்கலாகக் கூறினாள் கனி.

 

“கனி, உனக்குச் சரியான கொழுப்பு!” என்று கிருத்திகாவும் சிரித்தாள்.

 

“சரி, அக்கா. நான் கௌரி அக்காவுக்குப் பார்த்துட்டு வாறேன்”

 

“சரண் பேரைச் சொல்லித் துடிக்குதான்னு பார்த்துக்க போறியா!” என்று கிருத்திகா கேலியாகக் கூறினாள்.

 

“ஆமாமா, நான் பார்த்துக்கிறேன்!” என்று சிரித்தபடியே பதிலளித்த கனி, அறையை விட்டு குடுகுடுவென வெளியே வந்தாள். அவசரத்தில் வந்தவள், எதிரே வந்த வெற்றியின் மீது மோதி நின்றாள்.

 

“அத்தான், சாரி! தெரியாம இடிச்சுட்டேன்”

 

“பரவாயில்ல, கனி. நம்ம ரெண்டு பேரும் தேங்காய்த் தோட்டத்துக்குப் போயிட்டு வரலாமா?” என்று கேட்டான் வெற்றி.

 

“சரி அத்தான்” என்றவள், ஸ்டெதஸ்கோப்பைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

 

தென்னந்தோப்புக்கு கனியும் வெற்றியும் வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த மித்ரன், தன் அண்ணனும் அண்ணியும் ஒன்றாக வருவதைக் கண்டு மகிழ்ந்தான்.

 

“என்ன அண்ணா, வீட்ல போர் அடிக்குதா?” என்று மித்ரன் கேட்கத் தொடங்கியதும், கனி நீர் குடிக்கச் சென்றாள்.

 

“ஆமாடா”

 

“எங்களை மட்டும் ஹனிமூனுக்கு அனுப்பி வச்ச, நீங்க ரெண்டு பேரும் எப்போ போறீங்க?”

 

“கொஞ்ச நாள் போகட்டுமே. ஏன்டா, நீ வேற!” என்று வெற்றி தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான்.

 

“இல்லை, நான் உங்களை அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்”

 

“இப்போ நீ இதையே பேசிட்டு இருந்தா, நான் வீட்டுக்குக் கிளம்பிருவேன்” என்று வெற்றி கூறினான்.

 

அப்போதுதான் மித்ரனுக்கு நினைவுக்கு வந்தது.

 

“சரி சரி, இரு அண்ணா. அண்ணி உனக்காக வேண்டிக்கிட்டு நம்ம ஊர் திருவிழாவுல பூ மிதிச்சாங்க. நீ பெரியப்பா ஆனதைச் சொன்னேன். இதைச் சொல்ல மறந்துட்டேன்” என்றான் மித்ரன். அன்று சந்தோஷத்தில் நிறைந்திருந்ததால் இதைக் கூற மறந்திருந்தான்.

 

“என்னடா, சொல்ற!” என்றான் வெற்றி.

 

“நம்ம ஊர் திருவிழாவுல அண்ணி உனக்காக வேண்டிக்கிட்டு பூ மிதிச்சாங்க”

 

“கேக்கும்போதே பயமா இருக்கு, மித்ரன்!” கனி பூ மிதிப்பதை வெற்றி கற்பனை செய்யக்கூட பயந்தான்.

 

“ஆமாண்ணா. உன்னோட பார்வை திரும்பி வரணும்னு வேண்டிக்கிட்டு, உனக்காகப் பூ மிதிச்சாங்க”

 

“இது எப்ப நடந்துச்சு?” என்று கேட்டான் வெற்றி.

 

“ஒரு மூணு, நாலு மாசம் இருக்கும்ண்ணா”

 

“சரி, கனியைக் கூப்பிடு, மித்ரன்”

 

வெற்றியின் முகம் இறுகியது. அவனுக்குள் கோபம் எழுந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாக நின்றான்.

 

வெற்றி அருகில் கனி வந்து நிற்க, “சரிண்ணா, எனக்குத் தோட்டத்துல வேலை இருக்கு. நீங்க பேசிட்டு இருங்க” என்று சொல்லிவிட்டு மித்ரன் அங்கிருந்து சென்றான்.

 

மித்ரன் சென்றதும், வெற்றி கனியின் பக்கம் திரும்பினான்.

 

“ஏன்டீ, உனக்கு என்ன தேவையில்லாத வேலை?” என்று கேட்டான்.

 

“என்ன அத்தான், தேவையில்லாத வேலை?” அவளுக்கு உண்மையாகவே தெரியவில்லை.

 

“நீ எதுக்கு இந்த மாதிரியெல்லாம் செய்யணும்? இனிமேல் தீமிதிக்கிறது, தீச்சட்டி தூக்குறதுன்னு எதுவும் செய்யக் கூடாது”

 

“உங்களுக்கு யார் சொன்னா?”

வெற்றியின் குரல் உயர்ந்ததைக் கேட்டு அவள் பயந்தாள்.

 

“மித்ரன் சொன்னான். இதுக்கு மேல, இனிமேல் இந்த மாதிரி நீ எதுவும் பண்ணேன்னு என் காதுக்கு வந்துச்சு, பார்த்துக்கோ!” என்று அவளுக்கு நேராக நின்று மிரட்டினான்.

 

“அதெல்லாம் என்னால முடியாது, அத்தான். அது என்னோட நம்பிக்கை. எனக்கு உங்க பார்வை திரும்பி வரணும். அதுக்காக நான் வேண்டிக்கிட்டேன். அதுல என்ன தப்பு?”

 

“கனி, உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்?” என்று வெற்றி ஆத்திரத்தோடு கேட்டான்.

 

“பயபக்தியோட செஞ்சா ஒண்ணும் ஆகாது, அத்தான்” என்று கனி இறைஞ்சினாள்.

 

“உன்னையெல்லாம் திருத்த முடியாது டீ!” என்று சலித்துக்கொண்ட வெற்றி விறுவிறுவென முன்னால் நடந்தான்.

 

அவன் தடுமாறி விழுந்துவிடுவானோ என்ற பயத்தில், கனி அவனுக்குப் பின்னால் ஓடிச் சென்றாள்.

 

வீட்டுக்கு வந்ததும், வெற்றி அறைக்குள் வேகமாகச் சென்று கதவைப் பட்டென்று சாத்தினான்.

 

அவனுடைய கோபத்தைப் பார்த்த கனி பயந்துபோனாள். அவன் பின்னாலேயே அறைக்குள் சென்றவள், கட்டிலில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தாள். கோபத்தில் அவனுடைய கண்கள் சிவந்திருந்தன.

 

“அத்தான்…” என்று தயக்கத்துடன் அழைத்தாள்.

 

வெற்றி அவளைக் கண்டுகொள்ளாமல் திரும்பி நின்றான்.

 

“கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு. கோபப்படாதீங்க, அத்தான். ப்ளீஸ்…”

 

அவள் அவனருகில் சென்று அவனுடைய தோளில் கையை வைக்க, வெற்றி அவளுடைய கையைத் தட்டிவிட்டான்.

 

அவனுடைய அந்தச் செயல் கனியை மேலும் கலங்கச் செய்தது. அவள் மெதுவாக அவனருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

 

“அத்தான்,  நான் உங்களைத் துன்பப்படுத்தணும்னு அப்படிச் செய்யல. உங்களோட பார்வை திரும்பி வரணும்னுதான் அப்படியெல்லாம் செய்தேன். நீங்க மறுபடியும் நல்லபடியா பார்க்க ஆரம்பிச்சிடுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால்தான் வேண்டிக்கிட்டேன். என்னைப் புரிஞ்சுக்கோங்க, அத்தான்” அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.

 

வெற்றி அவளை நோக்கித் திரும்பினான். அவனுடைய முகத்தில் கோபம் இருந்தாலும், அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அவனுடைய கண்கள் கலங்கின.

 

“அத்தான்… நீங்க அழுறீங்களா?” என்று கனி பதறிப்போனாள்.

 

அடுத்த நொடியே வெற்றி அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

 

கனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் திடீரென்று இப்படித் தன்னை அணைத்துக்கொண்டதும் அவளுடைய கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

 

“கனி… எனக்காக நீ வேண்டிக்கிட்டது பரவாயில்லை. ஏதாவது பண்ணணும்னா அதை நான் பண்றேன். ப்ளீஸ்! இனிமேல் இதுபோல எதுவும் செய்யாதே. உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு”

 

அவனுடைய குரலில் தெரிந்த தவிப்பைக் கேட்ட கனியின் மனம் நெகிழ்ந்தது.

 

அவள் அவனை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டாள்.

 

“அத்தான், எனக்கு ஒண்ணும் ஆகாது. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க”

 

சிறிது நேரம் அவளை அணைத்தபடியே இருந்த வெற்றி, அவளைத் தன் மடியில் அமர வைத்தான்.

 

“கனி, ஒரு விஷயம் கேட்கட்டுமா?”

 

“ம்… கேளுங்க, அத்தான்”

 

“ஒருவேளை… எனக்கு வாழ்க்கை முழுக்கக் கண் பார்வையே திரும்பி வரலைன்னா, நீ என்னடி பண்ணுவ?” அவள் என்ன பதில் கூறுவாளென எதிர்பார்த்திருந்தான்.

 

அந்தக் கேள்வியைக் கேட்ட கனி ஒரு கணம் அவனையே பார்த்தாள்.

 

“உங்களுக்குப் பார்வை திரும்பி வரலைன்னா என்ன? நான் உங்ககூடத்தானே இருப்பேன். யார் உங்களை விட்டுட்டுப் போனாலும், நான் உங்களை விட்டுப் போக மாட்டேன். கடைசி வரைக்கும் உங்ககூடவே இருப்பேன். உங்களை நல்லபடியாப் பார்த்துக்குவேன். நீங்க எதையும் நினைச்சுக் கவலைப்படாதீங்க, அத்தான். நான் இருக்கேன்”

 

அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் வெற்றியின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது.

 

அவனுடைய கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

கனி அவனுடைய கண்ணீரைக் கண்டதும் பதறிப்போனாள்.

 

“அத்தான்… ப்ளீஸ், அழாதீங்க!” என்று கூறியபடி அவனுடைய கண்களைத் துடைத்துவிட, வெற்றி அவளை மீண்டும் தன்னோடு அணைத்துக்கொண்டான். அவனுடைய தலைமுடியை வருடியபடியே சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

 

அவனுடைய மனதில் என்னென்ன உணர்வுகள் அலைமோதின என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அவளுடைய அன்பும், தன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்ற உறுதியும் அவனுடைய இதயத்தை முழுவதுமாக நிறைத்தன.

 

அவளுடைய காதருகில் வெற்றியின் மூச்சுக்காற்று வெப்பமாக இதமாகப் பரவிட, அவனுடைய மிடுக்கான மீசை அவள் கன்னத்தில் கோலமிட, மெல்லிய குரலில், “ஐ லவ் யூ கனி” என்றான்.

 

அந்த வார்த்தைகளைக் கேட்ட கனி அப்படியே உறைந்துபோனாள்.

 

அவன் தன்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டிருக்க, அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது.

 

“அத்தான்…” என்று தடுமாறியவள், அவனுடைய முகத்தைப் பார்க்க முயன்றாள். 

 

 

வெற்றி அவளுடைய முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான். “ஐ லவ் யூ… லவ் யூ சோ மச், கனி!”

 

அவனுடைய குரலில் இருந்த உண்மையான அன்பைக் கேட்ட கனியின் கண்களில் கண்ணீர் பெருகியது. “அத்தான்… நீங்க… நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?” என்று கண்ணீருடன் கேட்டாள்.

 

“ஆமா, பொண்டாட்டி. ஐ லவ் யூ.”

 

அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவளுடைய உதடுகள் நடுங்கின. இத்தனை நாட்களாகத் தன் மனதிற்குள் சுமந்துகொண்டிருந்த ஏக்கம், தவிப்பு, ஆசை என எல்லாமும் ஒரே நேரத்தில் அவளை ஆட்கொண்டன.

 

அவள் அவனுடைய மார்பில் முகம் புதைந்து அழுதாள்.

 

வெற்றி தன்னவளை அணைத்தபடியே அவளுடைய பிறை நுதலில் முதல் முறையாக இதழ் பதித்தான். அந்த நொடி, இருவருக்குமே வார்த்தைகள் அற்றுப்போனது.

 

அவர்களுடைய இதயங்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தன.

 

இந்த இரு சிட்டுக்களின் மோன நிலையை ஆந்திராவில் இருந்து வருகை தந்த மணிமாறனின் குரல் கலைத்தது.

 

“மாமா வந்திருக்காங்க, பொண்டாட்டி. கீழே போகலாம். முகத்தைக் கழுவிட்டு வா” என்று செல்லம் கொஞ்சியபடி அவளை அனுப்பினான்.

 

அவள் முகத்தைக் கழுவிவிட்டு, வெற்றியின் முகத்தையும் ஈரத் துணியால் துடைத்துவிட்டாள்.

 

 

*****

 

அடுத்த அத்தியாயம்

கனி 15

கனி 15 கனி வெற்றியின் கையோடு கை கோர்த்துப் படியிறங்குவதைப் பார்த்த மணிமாறன், இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருப்பதைப் போல உணர்ந்தார். அவருடைய மனம் மேலும் சந்தோஷத்தில் நிறைந்தது. “அப்பா!” என்று அவரை அணைத்துக்கொள்ள, மகளின் அன்பில் திளைத்தார் மணிமாறன். “மாப்பிள்ளை, எப்படி இருக்க?” என்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்