arrow_back
கனியாத்ரேயம் கனி 24
கனியாத்ரேயம் chevron_right பகுதி 24 / 26

கனி 24

visibility 14
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 24

 

பறவைகளின் ஓசை கனியை எழுப்பும் காலை நேரம். உடலெங்கும் லேசான வலி பரவியிருக்க, வெற்றியின் இடது தோள்பட்டையில் தலையைச் சாய்த்துப் படுத்திருந்த கனி, மெல்ல விழிகளைத் திறந்தாள்.

மெல்லத் திரும்பிப் பார்த்தவள், அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வெற்றியைக் கண்டதும், நேற்றிரவின் நினைவுகள் மனதில் வந்துபோக அவளது கன்னங்கள் சிவந்தன.

பின்னர், வழக்கம்போல் எழுந்திருக்க வேண்டிய நேரம் நினைவுக்கு வர, அருகிலிருந்த கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

நேரம் ஐந்து மணி!

“ஐயோ! இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா எழுந்துட்டோமே!” என்று பதறியவள், அவசரமாக எழுந்திருக்க முயன்றாள்.

அவளது அசைவில் விழித்த வெற்றி, அவளுடைய பதற்றத்தைப் பார்த்துவிட்டு மெல்லப் புன்னகைத்தான்.

“பொண்டாட்டிக்கு இன்னைக்கு சனிக்கிழமை. காலேஜ் இல்ல. அதனால கொஞ்ச நேரம் தூங்கலாமே!” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே,

“அச்சோ, எழுந்திருங்க! நான் இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா எழுந்துட்டேன். நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் போர்வை, துணியெல்லாம் துவைச்சுப் போடணும்”

அவள் அவசரமாகப் பேசிக்கொண்டே எழ முயல, வெற்றி அவளது கையைப் பிடித்து மீண்டும் தன்னருகில் அமர வைத்தான்.

“ஏய், முதல்ல நிதானமா இரு. நீ போய்க் குளிச்சிட்டு கீழே போ. எல்லாத் துணியையும் நான் துவைச்சுப் போட்டுக்கிறேன்”

அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் கனி.

“உங்களுக்கு எதுக்கு அத்தான் சிரமம்?”

“அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காத. நீ முதல்ல உன்னைக் கவனிச்சுக்கோ. மத்ததை நான் பார்த்துக்கிறேன்”

அவனது அக்கறையான பேச்சில் மனம் நெகிழ்ந்தவள், மெல்லத் தலையசைத்தாள். பத்து நிமிடங்களில் குளித்து முடித்து, டவலைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

அவளைப் பார்த்த வெற்றியின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவளது அழகை ஒரு கணம் ரசித்தவன், அவளைத் தொந்தரவு செய்யாமல், பறக்கும் முத்தமொன்றை மனைவிக்குக் கொடுத்துவிட்டுத் துணிகளை அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

சுடிதார் அணிந்து, குங்குமம், பொட்டு வைத்துவிட்டு நேராக வாசலுக்குச் சென்றவள், அங்கு குனிந்து நிமிர முடியாமல் அமிர்தவள்ளி கோலமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“அத்தைம்மா, சாரி… கொஞ்சம் லேட்டா எழுந்துட்டேன்”

“பரவாயில்ல கனி, இன்னைக்குத்தான் காலேஜ் இல்லையே. கொஞ்சம் தூங்கியிருக்கலாம்”

“இல்ல அத்தைம்மா, மிச்ச வேலையை நான் பார்த்துக்கிறேன்”

“கொஞ்சம் ரெஸ்ட் எடு, கனி”

பேச்சுக்கு சரியென்றவள், வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் சமையலறையில் காலை உணவைத் தயாரிக்கத் தொடங்கினாள். இட்லி ஊற்றுவதற்காக மாவை இட்லித் தட்டுகளில் ஊற்றி வைத்தவள், அதற்குள் சட்னியையும் அரைத்து முடித்தாள்.

அப்போது மேலிருந்து வெற்றியின் குரல் கேட்டது.

“பொண்டாட்டி… டீ எடுத்துட்டு வா!”

அவனது குரலைக் கேட்டதும் கனி மேலே செல்லத் தயாரானாள்.

“கனி, நீ போய் அவனுக்குத் டீ கொடு. மிச்ச வேலையை நான் பார்த்துக்கிறேன்” என்றார் அமிர்தவள்ளி.

“சரிங்க அத்தைம்மா!” என்றவள், தேனீரை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.

அறைக்குள் வெற்றி அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். சட்டையை அணிந்திருந்தாலும், அதன் பட்டன்களைப் போட்டிருக்கவில்லை.

தேனீரை அவனிடம் கொடுத்தவள், அவனது சட்டைப் பட்டன்களைப் போடத் தொடங்கினாள்.

“ஏன் அத்தான், பொண்டாட்டின்னு சத்தமா கூப்பிடுறீங்க? எனக்குச் சங்கடமா இருக்கு”

“அப்படித்தான் கூப்பிடுவேன். என் பொண்டாட்டின்னு கூப்பிடுறதுக்கு எனக்கு உரிமை இருக்கு. அதனாலதான் பொண்டாட்டின்னு கூப்பிடுறேன்”

“அதுக்காக எல்லாரும் கேட்கிற மாதிரி சத்தமாவா கூப்பிடுவீங்க?”

“ஏன், பொண்டாட்டின்னு கூப்பிடுறதுல உனக்கு என்ன சங்கடம்?”

“அது… எல்லாரும் முன்னாடி அப்படிக் கூப்பிட்டா எனக்கு வெட்கமா இருக்கு”

அவளது வெட்கத்தை ரசித்தவன், மெல்லப் புன்னகைத்தான்.

“பொண்டாட்டின்னு கூப்பிட்டாத்தான் நீ என்னோடவ அப்படிங்கிற உணர்வே எனக்கு வருது. உன்னைக் கனி என்று கூப்பிடும்போது, சின்ன வயசுல நான் பார்த்த அதே கனி மாதிரிதான் தெரியுற. ஆனா, பொண்டாட்டின்னு கூப்பிடும்போது நீதான் என்னோட வாழ்க்கைங்கிற உணர்வு வருது”

அவனது வார்த்தைகளைக் கேட்டவள், ஒரு கணம் அவனது முகத்தையே பார்த்தாள்.

“சரி அத்தான், ரூமுக்குள்ள பொண்டாட்டின்னு கூப்பிட்டா பரவாயில்ல. வெளியே மட்டும் அப்படிச் சத்தமா கூப்பிடாதீங்க”

“அப்படியா? சரி, வெளியே இருக்கும்போதும் பொண்டாட்டின்னே கூப்பிடுறேன்!”

“அத்தானு!” என்று அவள் செல்லமாக முறைக்க, அவனோ அவளது கன்னத்தை மெதுவாகத் தட்டிச் சிரித்தான்.

“சரி, சரி… இனிமேல் பார்த்துக்கிறேன்”

அவனது சட்டைப் பட்டன்களைப் போட்டுவிட்டவள், மேசையில் இருந்த உணவை எடுத்து வந்தாள்.

“அத்தான், சாப்பிடுங்க”அவள் உணவை அவனிடம் கொடுக்க, வெற்றி அவளது கையைப் பிடித்தான்.

“நீ ஊட்டிவிடு”

“என்ன அத்தான், சின்னப் பிள்ளை மாதிரி?”

“ஆமா, உன் கையால சாப்பிடுறதுக்கு நான் சின்னப் பிள்ளையாவே இருந்துட்டுப் போறேன்”

அவனது குறும்பான பேச்சில் சிரித்தவள், இட்லியைச் சிறு துண்டுகளாக்கி, சட்னியில் தொட்டு அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

அவனும் அவள் ஊட்டியதை ரசித்துச் சாப்பிட்டான். இடையிடையே அவளுக்கும் ஊட்டிவிட்டு, அவளது முகத்தில் தோன்றிய வெட்கத்தை ரசித்தான்.

காலை உணவை முடித்ததும், அலுவலகத்திற்குச் செல்லத் தயாரானான் வெற்றி.

“சரி, பொண்டாட்டி… கவனமா இரு. நான் கிளம்புறேன்”

“சரிங்க அத்தான். பார்த்துப் போங்க”

அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், புன்னகையுடன் கிளம்பிச் சென்றான்.

அடுத்தடுத்த நாட்கள் அழகாக நகர்ந்தன. வெற்றிக்கும் கனிக்கும் இடையிலான இல்லற வாழ்க்கை அன்புடனும் காதலுடனும் தொடர்ந்தது. கனியின் படிப்புக்கு எந்தவிதத்திலும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதில் வெற்றி கவனமாக இருந்தான். கல்லூரி நாட்களில் அவளைத் தொந்தரவு செய்யாமல், படிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். அவளுடைய விருப்பங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு, அவளுக்கு ஏற்றவகையில் கணவனாக நடந்துகொண்டான்.

ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், மித்ரனும் கிருத்திகாவும் தங்களுடைய குழந்தை ஆராத்யாவுடன் அமிர்தவள்ளியின் வீட்டிற்குத் திரும்பினர். அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர், குழந்தையைக் கொஞ்சியும் மகிழ்ந்தனர்.

ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி, சரண்,கௌரியின் திருமண நாளும் நெருங்கி வந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கின. குடும்பத்தினர் அனைவரும் அவரவர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

சரண் மற்றும் கௌரியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கப்போகும் அந்த மகிழ்ச்சியான நாளை எதிர்பார்த்து, குடும்பத்தினர் அனைவரும் காத்திருந்தனர்.

மணிமாறனும் கலைவாணியும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அவர்களது கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கினர்.

 

 

*****

 

ஒரு வாரத்திற்குப் பிறகு…

 

அன்று வெள்ளிக்கிழமை. அதிகாலையிலிருந்தே சரண், கௌரியின் திருமணத்திற்காக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்களின் வருகையாலும் மங்கல இசையாலும் திருமண மண்டபம் களைகட்டியிருந்தது.

காலை எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் நல்ல முகூர்த்த நேரம் என்பதால், திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடந்துகொண்டிருந்தன.

மணப்பெண் அறையில் கௌரியை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

சிவப்பு நிறப் பட்டுப்புடவையில், தங்கமும் பச்சையும் கலந்த பார்டர் அவளது அழகை மேலும் மெருகூட்டியது. கழுத்தில் அழகான தங்க நகைகள், காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல்கள் என மணப்பெண்ணுக்குரிய அலங்காரங்களுடன் அமர்ந்திருந்தாள். நெற்றியில் குங்குமம், கண்களில் மை, முகத்தில் மென்மையான வெட்கம் என அவளது தோற்றமே தனி அழகாக இருந்தது.

கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கே தன் தோற்றத்தைக் கண்டு வெட்கம் வந்தது.

“கௌரி அக்கா, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க. சரண் அண்ணா பார்த்தா மயங்கிருவாறு!” என்று கனி புன்னகையுடன் சொல்ல,

“போதும் கனி!” என்று வெட்கத்துடன் தலையைக் குனிந்தாள் கௌரி.

“நிஜமாத்தான் சொல்றேன். சரண் அண்ணா உங்களைப் பார்த்ததும் என்ன செய்யப்போறாரோ!” என்று கனி கேலி செய்ய, கௌரியின் கன்னங்கள் இன்னும் சிவந்தன.

சிறிது நேரத்தில் மணப்பெண்ணை அழைத்துச் செல்லும் நேரம் வந்தது.

உறவினர்கள் புடைசூழ, கௌரி மெதுவாகத் திருமண மேடையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டாள்.

அப்போது மணமேடையில் அமர்ந்திருந்த சரண், தன்னை நோக்கி வந்த கௌரியைப் பார்த்தான்.

ஒரு கணம் அவனது பார்வை அவளிடமே நிலைத்துவிட்டது.

தனக்குப் பிடித்தவள், இன்று தன்னுடைய வாழ்க்கைத் துணையாகப் புது வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகிறாள் என்ற எண்ணமே அவனுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவளது அழகைக் கண்டு ரசித்தவன், தன் முகத்தில் மலர்ந்த புன்னகையை மறைக்கக்கூட முயற்சி செய்யவில்லை.

கௌரியும் அவனைப் பார்த்தாள். அவனது பார்வையில் தெரிந்த அன்பையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தவளின் இதயம் வேகமாகத் துடித்தது.

இருவரும் மணமேடையில் அருகருகே அமர்ந்தனர்.

சுற்றிலும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அவர்களை வாழ்த்திக்கொண்டிருக்க, ஐயர் திருமணச் சடங்குகளைத் தொடங்கினார். மங்கல இசை மண்டபம் முழுவதும் ஒலித்தது.

சரணின் மனமோ அந்த நிமிடத்தை மட்டுமே சுற்றி வந்தது.

இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கடந்து, இன்று தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்திருக்கிறாள். அவளுடன் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி அன்பைப் பொழியும் ஒரு பெரிய குடும்பமும் தனக்கிருக்கிறது என்ற எண்ணம் அவனது மனதை நிறைத்தது.

அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

ஐயர் தாலியைச் சரணின் கையில் கொடுத்துவிட்டு, முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறினார்.

“மாப்பிள்ளை, தாலியைக் கட்டுங்க!”

அந்த வார்த்தைகள் கேட்டதும், சரண் தாலியைக் கையில் எடுத்தான்.

அவன் கைகளில் சிறிதளவு நடுக்கம் இருந்தது. கௌரியின் முகத்தைப் பார்த்தான். வெட்கத்துடன் தலைகுனிந்திருந்த அவளது கண்களில் கண்ணீர் மின்னியது.

அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளப் போகும் அந்த நொடி, சரணின் கண்களையும் கலங்கச் செய்தது.

மங்கல இசை முழங்க, சரண் கௌரியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

கௌரியின் கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

சரண் மெதுவாக அவளது கையைப் பற்றினான். அவளும் அவனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

அந்தச் சிறிய தொடுதலிலேயே இருவரின் மனங்களும் பல விஷயங்களைப் பேசிக்கொண்டன.

“அத்தான், கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு!” என்று கனி வெற்றியிடம் சொல்ல, அவன் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

அமிர்தவள்ளியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். தன் குடும்பத்தில் இன்னொரு திருமணம் இனிதே முடிந்துவிட்ட மகிழ்ச்சியில், மணமக்களை மனதார வாழ்த்தினார்.

மணமக்களை வாழ்த்திய உறவினர்கள் ஒவ்வொருவராக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக அழைத்த புகைப்படக் கலைஞர், பெரிய குடும்பப் புகைப்படத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

முதலில் சரணும் கௌரியும் நடுவில் அமர்ந்துகொண்டனர். அவர்களைச் சுற்றிலும் குடும்பத்தினர் அவரவர் இடங்களில் நின்றனர்.

மித்ரன், கிருத்திகாவுடன் குழந்தை ஆராத்யாவைக் கையில் ஏந்தியபடி நின்றான். வெற்றி கனியின் அருகில் நின்று அவளது கையைப் பற்றிக்கொண்டான். அமிர்தவள்ளி திருச்செல்வத்துடன் நின்றார். மணிமாறன் கலைவாணியுடனும், யோகநாதன் மலர்விழியுடனும் இணைந்து நின்றனர். மூத்த தம்பதியினர் நாற்காலிகளில் அமர, இளைய ஜோடிகள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்தனர்.

“எல்லாரும் சிரிங்க!” என்று புகைப்படக் கலைஞர் சொல்ல, அனைவரின் முகங்களிலும் புன்னகை மலர்ந்தது.

அந்தப் புகைப்படத்தில் குடும்பத்தின் ஒற்றுமையும் அன்பும் மகிழ்ச்சியும் அழகாகப் பதிவானது.

குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, மணமக்களை வாழ்த்திவிட்டு உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெறத் தொடங்கினர். நாள் முழுவதும் நடந்த திருமணச் சடங்குகளும் கொண்டாட்டங்களும் முடிவுக்கு வந்தன.

இரவு நேரம் நெருங்கியதும், சரண் முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்குள் கௌரியின் வருகைக்காகக் காத்திருந்தான்.

கட்டிலைச் சுற்றிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அறை முழுவதும் மல்லிகை மலர்களின் நறுமணம் பரவியிருந்தது. மங்கலான விளக்கொளி அந்த அறைக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது.

அறைக்குள் வந்த கௌரி, கையில் இருந்த பால் செம்பை மேசையில் வைத்துவிட்டு, வெட்கத்துடன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்துகொண்டாள்.

அவளருகில் வந்து அமர்ந்த சரண், என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான். அவனுடைய அமைதியைப் பார்த்த கௌரி, அவனைத் திரும்பிப் பார்த்தபடி,

“என்ன சரண், இன்னைக்கும் முதல்ல நான்தான் உங்ககூடப் பேசணுமா?” என்று வெட்கத்தை விட்டு கேட்டாள்.

“இல்ல, இல்ல கௌரி… நான் பேசுவேன்!” என்று அவசரமாகப் பதிலளித்த சரண், அவளது கையைப் பற்றிக்கொண்டான்.

“அப்போ பேசுங்க, கேட்குறேன்!” என்று புன்னகையுடன் அவனைப் பார்த்தாள் கௌரி.

“என்ன பேசுறதுன்னே தெரியல, கௌரி. உங்கூட எத்தனையோ தடவை பேசியிருக்கேன். ஆனா, இன்னைக்கு மட்டும் ஏதோ வித்தியாசமா இருக்கு”

“ஏன், இன்னைக்கு மட்டும் என்ன வித்தியாசம்?” என்று அவள் குறும்பாகக் கேட்டாள்.

“இத்தனை நாளும் நீ எனக்குப் பிடிச்சவளா இருந்த. ஆனா, இன்னைக்கு நீதான் என்னோட மனைவி. இனிமேல் என் வாழ்க்கை முழுவதும் உன்னோடதான் இருக்கப்போறேன்னு நினைப்பு வரும்போது, என்ன பேசுறதுன்னே தெரியல.”

அவனது வார்த்தைகளைக் கேட்ட கௌரி, வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.

“எனக்கும் கொஞ்சம் வெட்கமாத்தான் இருக்கு, சரண். ஆனா, உங்களை நினைச்சுப் பயப்படல. நீங்க எனக்குப் புதுசானவரும் இல்லையே!” என்றாள்.

அவளது பதிலைக் கேட்ட சரணின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“எப்பவும் இப்படியே என் கூடச் சிரிச்சுப் பேசணும், கௌரி. உன் முகத்துல இந்தச் சிரிப்பைப் பார்க்கும்போது, எனக்கு வேற எதுவுமே வேண்டாம்னு தோணுது”

“அப்போ எப்பவும் என்னைச் சிரிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று அவள் செல்லமாகச் சொல்ல, சரண் சிரித்தான்.

“சரிம்மா, அந்தப் பொறுப்பை நான் சந்தோஷமா ஏத்துக்கிறேன்.”

அவளது கையை மென்மையாகப் பற்றிக்கொண்டவன், அவளது முகத்தைப் பார்த்தான். அவனது பார்வையில் தெரிந்த அன்பைக் கண்ட கௌரி, மெல்ல அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

அந்த நெருக்கம் இருவருக்குமே மனநிறைவைக் கொடுத்தது. சரண் அவளது தலையை மென்மையாகத் தடவிக்கொடுத்தான்.

சிறிது நேரம் கழித்து, அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன், அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். எதிர்பாராத அந்த அன்பில் கௌரி கண்களை மூடிக்கொண்டாள். அவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.

அவளது வெட்கத்தை ரசித்தவன், கன்னத்தில் முத்தமிட்டான். கௌரி அவனை நிமிர்ந்து பார்த்தபோது, அவனது விழிகளில் தெரிந்த காதல் அவளது மனதை நெகிழச் செய்தது.

சரண் அவளது கையைப் பற்றியபடியே, “கௌரி, நீ சந்தோஷமா இருக்கியா?” என்று மென்மையாகக் கேட்டான்.

அவள் புன்னகையுடன் தலையசைத்தாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டவன், அவளை அன்புடன் அணைத்துக்கொண்டான். கௌரியும் அவனது அணைப்புக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டாள்.

பிறகு அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், அவளது சம்மதத்தை உணர்ந்த பிறகே இதழ்களில் முத்தமிட்டான். அவனது நெருக்கத்தில் கௌரி வெட்கத்துடன் கண்களை மூடிக்கொண்டாள். அவளும் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டபோது, இருவருக்குமிடையே இருந்த தயக்கங்கள் மெல்ல மறைந்தன.

அந்த இரவு, அவர்களின் வாழ்க்கையில் காதலும் நம்பிக்கையும் நெருக்கமும் நிறைந்த புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.

*******

 

இன்னும் இரண்டு பதிவுகள் மட்டும் அன்பர்களே ❤️

அடுத்த அத்தியாயம்

கனி 25

கனி 25  மூன்று மாதங்களுக்குப் பிறகு, காலையில் வழக்கம்போலக் கல்லூரிக்குக் கிளம்பிய கனியை வெற்றியே காரில் அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு, அவள் கல்லூரிக்குள் செல்வதைப் பார்த்துவிட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குக் கிளம்பினான்.அவனுடைய நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்