கனி 23
காலையில் கண் விழித்த கனி, தனக்கு அருகில் குழந்தையைப் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வெற்றியைப் பார்த்தாள். அவனது முகத்தில் தெரிந்த அமைதியைக் கண்டதும், நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அவளது நினைவில் வந்து போயின. இனியும் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்று தனக்குள் உறுதி செய்துகொண்டாள்.
உறக்கத்தில் இருந்தவனின் முகத்தைக் கலைக்க மனமில்லாமல், மெதுவாக அவனது நெற்றியில் இதழ் பதித்தாள். பின்னர், அவளை அணைத்திருந்த அவனது கையை விலக்குவதற்குக்கூட மனமில்லாமல் சிறிது நேரம் தயங்கினாள். ஒருவழியாக அவனது உறக்கம் கலையாதபடி மெதுவாக எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.
குளித்துவிட்டு வந்தவள், வழக்கம்போல சூரிய நமஸ்காரம் செய்தாள்.
“என் அத்தான்கூட சந்தோஷமா வாழணும்!” என்று சூரியனிடம் மனதார வேண்டிக்கொண்டவள், பூஜையறைக்குச் சென்று விளக்கேற்றினாள். பின்னர் சமையலறைக்குள் நுழைந்து, வீட்டிலிருந்த அனைவருக்கும் தேநீர் தயாரித்தாள். கலைவாணி தற்போது அவர்களது வீட்டில் தங்கியிருந்ததால், காலையில் உணவு தயாரிக்கும் பொறுப்பையும் கனியே ஏற்றுக்கொண்டிருந்தாள்.
வெற்றிக்குப் பிடித்தமான சப்பாத்தியும் கடலைக் குருமாவும் செய்து வைத்தவள், அவனுக்கான தேநீரை ஒரு கோப்பையில் எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள்.
அப்போது வெற்றி குளித்துவிட்டு உடை மாற்றியபடி கண்ணாடி முன் நின்றிருந்தான்.
“அத்தான், எழுந்தாச்சா?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தவள், அவனுக்குத் தேனீரைக் கொடுத்தாள்.
“ம்… நீ எப்பவுமே கரெக்ட்டா அலாரம் அடிச்ச மாதிரி நாலு மணிக்கு எழுந்துருவல்ல?” என்று கேட்டவன், அவளிடமிருந்து தேனீரை வாங்கினான்.
“பழகிருச்சு அத்தான்!” அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், தேனீரைப் பருகினான்.
சிறிது நேரம் அவனருகில் நின்ற கனி, தயக்கத்துடன், “இன்னைக்கு நம்ம கல்யாண நாள் இல்லையா… காலையிலேயே கோயிலுக்குப் போயிட்டு வரலாமா?” என்று கேட்டாள்.
“இப்போ நீ காலேஜுக்குக் கிளம்பு, பொண்டாட்டி. சாயங்காலம் ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்குப் போவோம்,” என்றான் வெற்றி.
“சரி அத்தான், அப்போ சாயங்காலம் மறந்துடாதீங்க!”
“நம்ம கல்யாண நாளை நான் மறப்பேனா, பொண்டாட்டி?” என்று அவன் கேட்க, அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்தாள்.
அவனுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, காலை உணவை மேசையில் வைத்தாள். இருவரும் சேர்ந்து உணவருந்திய பிறகு, வெற்றி கனியை அவளது கல்லூரியில் விட்டுவிட்டு அலுவலகத்திற்குச் சென்றான்.
கல்லூரிக்குள் நுழைந்ததுமே, அவளது தோழிகள் சிலர் அவளைச் சூழ்ந்துகொண்டனர்.
“ஹேய் கனி! இன்னைக்கு உன்னோட கல்யாண நாள் தானே?” என்று சுவேதா கேட்க, மற்றவர்களும் அவளை வாழ்த்தத் தொடங்கினர்.
“இனிய திருமண நாள் வாழ்த்துகள், கனி!” என்று வர்ஷினி கூறினாள்.
“ரொம்ப நன்றி!” என்று புன்னகையுடன் அனைவருக்கும் பதிலளித்தாள் கனி.
“சரி, சரி! வாழ்த்து எல்லாம் சொல்லியாச்சு. அடுத்தது ட்ரீட் எங்கே?” என்று ஒரு தோழி கேட்க, மற்றவர்களும் அவளுடன் சேர்ந்து குரல் கொடுத்தனர்.
“அடிப்பாவிகளே!” என்று கனி சிரித்தாள்.
“அதெல்லாம் முடியாது. இன்னைக்கு உன்னோட கல்யாண நாள். எங்களுக்கெல்லாம் ட்ரீட் கொடுத்தே ஆகணும்!”
“சரி, சரி! நாளைக்குக் கொடுக்கிறேன். இப்போ என்னை விடுங்க. கிளாஸுக்குப் போகணும்!” என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றாள் கனி. ஆனால், அவளது தோழிகள் அவளை விடுவதாக இல்லை. அவள் செல்லும் வரை பின்னாலேயே நின்று ட்ரீட் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் குறும்பை நினைத்துச் சிரித்தபடியே வகுப்பறைக்குள் சென்றாள் கனி.
*********
அலுவலகத்தில் இருந்த வெற்றி, சிறிது நேரம் கழித்து மித்ரனுக்குத் தொலைபேசியில் அழைத்தான்.
அழைப்பை ஏற்ற மித்ரன், “அண்ணா!” என்றான்.
“இனிய திருமண நாள் வாழ்த்துகளடா, மித்ரன்! கிருத்திகாவுக்கும் வாழ்த்துகள் சொன்னதாச் சொல்லிரு.”
“நன்றிண்ணா! உங்களுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்!”
“தேங்க்ஸ்டா!” என்று வெற்றி சிரித்தான்.
சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் வெற்றி, “குட்டிமா என்ன பண்றா டா?” என்று கேட்டான்.
“இப்போ தூங்குறா அண்ணா. நைட்டுத்தான் முழிச்சிருப்பா. எப்பவும் நைட் டியூட்டிதான்” என்றான் மித்ரன்.
“குட்டிமாவைப் பார்க்கணும் போல இருக்கு. இன்னைக்கு டைம் கிடைச்சா வர்றேன் டா” என்றான் வெற்றி.
“நீ எப்ப வேணாலும் வாங்கண்ணா!”
“சரிடா, வைக்கிறேன்”
“அண்ணா, அண்ணா! ஒரு நிமிஷம்!”
“சொல்லு, மித்ரன்.”
“உங்களைப் பெரும்பாடு பட்டு பெரியப்பா ஆக்கியிருக்கேன். அட்லீஸ்ட், நீங்க என்னைச் சிம்பிளா சித்தப்பா ஆக்க வேண்டாமா?” என்று சிரித்தபடியே உரிமையுடன் கேட்டான் அவனது தம்பி. அதைக் கேட்ட வெற்றி சிரித்துவிட்டான்.
“அடேய்! அதுக்குள்ள என்ன அவசரம்? கொஞ்சம் பொறுடா!”
“என்னண்ணா, நீங்களும் இப்படிச் சொன்னா எப்படி? நான் எவ்வளவு நாள் சித்தப்பா ஆகக் காத்திருக்க?”
“சரி, சரி! கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பார்க்கலாம்”
வெற்றி அழைப்பைத் துண்டிக்க நினைத்தான். ஆனால், மித்ரனோ, “சரி, பாருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகலன்னா, நானே பால்ல மாத்திரை போட்டுக் கலந்துருவேன்!” என்று செல்லமாக மிரட்டினான்.
“டேய்! என்னடா இப்படியெல்லாம் பேசுற?” என்று வெற்றி சிரித்தபடியே எச்சரித்தான்.
“இனி அப்படித்தான்! சரி, சரி… அண்ணா, உங்க பொண்டாட்டியைக் கூட்டிட்டு கோயிலுக்குப் போங்க. நான் அப்புறம் பேசுறேன்!” என்று சொல்லிவிட்டு மித்ரன் அழைப்பைத் துண்டித்தான்.
வெற்றி சிரித்தபடியே கைப்பேசியைக் கீழே வைத்தான். தம்பியின் குறும்பான பேச்சு அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், அதன் பின்னால் இருந்த ஆசை அவனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும், சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும் என்று நினைத்தவன், அவனுடைய பொறுமை எல்லாம் இன்னும் சில மணி நேரங்களே என எண்ணிக்கொண்டான்.
******
மாலையில் கல்லூரி முடிந்து வந்த கனியை அழைத்துக்கொண்டு வெற்றி கோயிலுக்குச் சென்றான்.
கோயிலுக்குள் நுழைந்ததும், அர்ச்சகரிடம் சென்ற கனி புன்னகையுடன், “ஐயா, வெற்றி ஆத்ரேயன் கனி, ஸ்ரீ மித்ரன் கிருத்திகா. நாலு பேருக்கும் இன்னைக்கு திருமண நாள். ஸ்பெஷலா அர்ச்சனை பண்ணிக் கொடுங்க” என்றாள்.
அவளது உற்சாகத்தைப் பார்த்த வெற்றி புன்னகைத்தான்.
இருவரும் இறைவனை வழிபட்டு, தங்களது வாழ்க்கை என்றும் இப்படியே அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தொடர வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். தங்களுக்குள் இருக்கும் அன்பு எந்தச் சூழ்நிலையிலும் குறையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கனி கண்களை மூடி நின்றாள்.
அர்ச்சனை முடிந்து கண்களைத் திறந்தவள், வெற்றி தன் கையில் வைத்திருந்த சிறிய பெட்டியைத் திறந்து காட்டினான். அதற்குள் அழகான தாலிச் செயின் இருந்தது.
அதைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் அவனை நோக்கினாள்.
“என்ன அத்தான்?” என்று கேட்டவளின் வார்த்தைகள், அவனது அடுத்த செயலைக் கண்டு தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டன.
வெற்றி அவளுக்கு அருகில் வந்து, அவளது கழுத்தில் அந்தத் தாலிச் செயினைப் பூட்டினான். எதிர்பாராத அந்த அன்பளிப்பில் அவளது கண்கள் கலங்கின. கழுத்தில் புதிதாகத் தவழ்ந்த செயினை விரல்களால் தொட்டுப் பார்த்தவள், நெகிழ்ச்சியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டதுக்கு வேணாம்னு சொன்ன. சரி, கல்யாணம்தான் பண்ணிக்க முடியல. இதையாவது மறுக்காத, ப்ளீஸ்!” என்றான் அவளது கண்களைப் பார்த்தபடி.
அவனது அன்பில் மனம் நெகிழ்ந்த கனி, அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“தேங்க்ஸ், அத்தான்!” என்று கூறியவளின் முகத்தில் சந்தோஷம் ததும்பியது.
அவளது மகிழ்ச்சியைப் பார்த்த வெற்றி, அவளது தலையை மெதுவாக வருடினான்.
கோயிலிலிருந்து வெளியே வந்ததும், இருவரும் அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்று உணவருந்தினர். பின்னர் வீட்டிற்குத் திரும்பினர்.
வீட்டிலிருந்த பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். அவர்களின் திருமண நாளை நினைவுகூர்ந்து பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
கனி சிறிது நேரம் கௌரியுடன் பேசிவிட்டு, புடவை மாற்றுவதற்காக அறைக்குள் நுழைந்தாள்.
அடுத்த நொடியே அவளது கால்கள் அப்படியே நின்றுவிட்டன.
அறை முழுவதும் மெல்லிய நறுமணம் பரவியிருந்தது. ஆங்காங்கே எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளி, அறைக்கு இதமான அழகைக் கொடுத்தது. கட்டிலைச் சுற்றிலும் பூக்களால் அலங்கரித்திருந்தான்.
மெத்தை மீது பூக்களால், ‘ஹேப்பி வெட்டிங் அனிவர்சரி, பொண்டாட்டி!’ என்று அலங்கரித்திருந்தான்.
அதைப் பார்த்த கனி வியப்புடன் அறையைச் சுற்றிலும் பார்த்தாள்.
‘என்ன இது? இன்னைக்கு ரூம் இப்படி வித்தியாசமா இருக்கு? இவ்வளவு ஏற்பாடெல்லாம்’ என்று யோசித்தவளுக்கு, அடுத்த நொடியே வெற்றியின் நினைவுதான் வந்தது.
அவளது உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது. அதே நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்குப் படபடப்பும் மனதுக்குள் எழுந்தது.
‘இவரு வேற எதுவுமே சொல்லலையே! ஆனா, இவ்வளவு ஏற்பாடும் செஞ்சிருக்காரு’ என்று நினைத்தாள்.
அப்போது குளியலறைக்குள் இருந்து வெளியே வந்த வெற்றி, வேஷ்டி சட்டையில் அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.
அவனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் கனி ஒரு கணம் திகைத்தாள். அவனோ எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
வெற்றியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலைகுனிந்தாள். அவனது அமைதியே அவளுக்குள் இன்னும் அதிகமான படபடப்பை ஏற்படுத்தியது.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் மெல்லிய புன்னகையுடன்,
“பால் காய்ச்சிட்டு வர்றியா, பொண்டாட்டி?” என்று கேட்டான்.
அவ்வளவுதான்!
அவன் எதற்காக இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறான் என்பது கனிக்குப் புரிந்துவிட்டது.
அவளது கன்னங்கள் சிவந்தன. அதே நேரத்தில், அவளிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்த அவன் மீது செல்லமான கோபமும் வந்தது.
“என்ன பொண்டாட்டி? பால் காய்ச்சிட்டு வர்றியா?” என்று அவன் மீண்டும் கேட்க,
“ம்…” என்றவள், வெட்கத்தை மறைக்க முடியாமல் குடுகுடுவென்று கீழே இறங்கிச் சென்றாள்.
நேற்று இருவரும் பேசிக்கொண்டதை நினைத்துப் பார்த்ததும், அவளது இதயம் படபடவெனத் துடித்தது. வழக்கமாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் அவளால், இப்போது அந்தத் துடிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பாலை நன்றாகக் காய்ச்சி, பின்னர் ஆறவைத்து ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள் கனி. அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் அமர்ந்திருந்த வெற்றியைப் பார்த்ததும் சற்றுத் தயங்கினாள்.
அவனோ அவளைப் பார்த்தபடி புன்னகைத்தான்.
“என்ன பொண்டாட்டி, அங்கேயே நின்னுட்ட? இங்கே வா!” என்று தன் அருகில் அமரும்படி அழைத்தான்.
கனி எதுவும் பேசாமல் அவனருகில் சென்று அமர்ந்தாள். அவள் கையிலிருந்த பால் டம்ளரை வாங்கிய வெற்றி, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுக்குக் கொஞ்சம் பால் கொடுத்தவன், மீதியைத் தானும் பருகி முடித்தான்.
பின்னர் டம்ளரை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு கனியைப் பார்த்தான். அவளோ தலைகுனிந்தபடி தனது விரல்களைப் பிசைந்துகொண்டிருந்தாள்.
அவளுக்கு அருகில் நெருங்கி அமர்ந்தவன், அவளது கையைப் பற்றிக்கொண்டான்.
“பொண்டாட்டி!”
“ம்…” என்றவள், அவனை நிமிர்ந்து பார்க்காமல் பதிலளித்தாள்.
“உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்”
அவள் மெல்லத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சொல்லுங்க அத்தான்?”
அவளது கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்ட வெற்றி, அவளது கண்களை நேராகப் பார்த்தான்.
“நம்ம வாழ்க்கைல இனி என்ன நடந்தாலும், உனக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். உன்னோட விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது. சரியா?”
அவனது வார்த்தைகளைக் கேட்ட கனி அமைதியாக அவனையே பார்த்தாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. வெட்கத்தில் முகம் சிவக்க, மீண்டும் தலைகுனிந்துகொண்டாள்.
அவளது மௌனத்தைக் கண்ட வெற்றி, மெல்ல அவளது முகத்தைப் பார்க்க முயன்றான்.
அவள் பதில் சொல்லாமல் சிரித்தபடியே அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.
அவளது செயல் அவனுக்குப் புரிந்திருந்தாலும், அவளது வாயிலிருந்தே பதிலைக் கேட்க விரும்பினான்.
“பொண்டாட்டி, உனக்கு விருப்பமா?”
அவள் மெல்லத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனது கண்களில் தெரிந்த அன்பைக் கண்டதும், அவளது வெட்கம் இன்னும் அதிகமானது.
மீண்டும் தலைகுனிந்தவள், “ம்…” என்று தலையசைத்தாள்.
அதைக் கேட்ட வெற்றியின் முகம் மலர்ந்தது. இருந்தாலும், அவளது வாயிலிருந்து அந்த வார்த்தையைக் கேட்க விரும்பினான்.
“நேத்து எல்லாம் எவ்வளவோ பேசுன, இப்போ கொஞ்சம் பேசு பொண்டாட்டி!”
“ஐ லவ் யூ அத்தான்!” என்று வெட்கத்தில் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.
“ப்ளீஸ்! இன்னொரு முறை சொல்லு டீ!” என்று உரிமையோடு கேட்க, அவளது கைகளுக்குள் இருந்து சத்தம் மட்டும் வந்தது.
“ஐ லவ் யூ சோ மச் அத்தானு!”
“ஐ லவ் யூ பொண்டாட்டி!”
கைகளை மெதுவாக விலக்கியவன், தன்னவள் வெட்கத்தைச் சற்றும் கலைக்காமல் பொறுமையாக ரசித்தான். அவளது இமை தாழ்ந்த விழிகளில் தெரிந்த தயக்கமும், கன்னங்களில் படர்ந்த சிவப்பும் அவனுக்குள் சொல்லொண்ணாக் காதலைக் கிளர்ந்தெழச் செய்தன.
அவளது நாடியை மென்மையாகப் பிடித்து நிமிர்த்தினான். அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவள் விழிகளைத் தாழ்த்திக்கொள்ள, அவளது வெட்கத்தைக் கண்டு அவன் இதழ்கள் மெல்லப் புன்னகைத்தன.
நெற்றியில் ஆடிய முடிகளை விரல்களால் ஒதுக்கினான். அந்தச் சிறு ஸ்பரிசத்திலேயே அவளது இதயம் வேகமெடுக்க, அவனது அருகாமை அவளுக்குள் இனம்புரியாத சிலிர்ப்பை விதைத்தது. இதழோடு இதழ் பூட்ட, அவளது இதழ்களின் மென்மையில் தன்னை மறந்தான்.
அவனது முத்தத்தில் அவள் கொண்டிருந்த தயக்கம் மெல்லக் கரைய, அவனை இன்னும் நெருங்க வேண்டுமென்ற ஏக்கம் அவளுக்குள் மௌனமாகத் துளிர்த்தது. சறுக்கிய இதழைக் கடக்கவே இயலவில்லை அவனால்.
கைவிரல்கள் உடலைத் தழுவி ஊர்வலம் செல்ல, கொஞ்சமாக மேலாடையைக் கலைத்தான். அவளுக்கு வெட்கம் அதற்கு மேலாக மூடிக்கொள்ளத் தூண்டியது. அவளது விரல்கள் தன்னை மறைக்க முயல, அவளது தயக்கத்தையும் வெட்கத்தையும் காதலோடு ரசித்தான்.
மஞ்சத்தின் போர்வையால் தன் உடலை மறைத்துக்கொண்டாள். அவன் அதன் மேல் தாவி அணைக்க, பின் தழுவலில் சிக்கினாள். அவனது அணைப்புக்குள் அவள் அடங்கிய அந்த நொடி, இருவரின் வெப்பமான மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று போட்டியிட்டன.
அவன் தன் ஆடைகளைக் கலைத்துவிட்டு, போர்வைக்குள் புதையல் தேட ஆரம்பித்தான். அந்தப் இருவரின் உலகமே போர்வைக்குள் சுருங்கிவிட்டது. அவனது ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் அவளது வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காதலுக்கு வழிவிட்டது.
அவள் காதோரம் குத்தும் மீசை முத்தத்தில், தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் தொலைத்துக்கொண்டிருந்தாள். அந்தக் குறுகுறுப்பில் அவள் உடல் சிலிர்க்க, வெட்கத்துடன் அவனது மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள்.
அவளது ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவன், அவன் காட்டிய காதலும் அவளது மனதில் இருந்த கடைசித் தயக்கத்தையும் கரைத்தன.
அவனிடம் தன்னை இழப்பதில் அவளுக்கு அச்சமில்லை. மாறாக, அவனது காதலுக்குள் முழுமையாகத் தொலைந்துவிட வேண்டும் என்ற இனிய ஏக்கமே அவளுள் நிறைந்திருந்தது.
முழுவதுமாய் அவள் மேனியில் இவன் படர, மோகத்தில் உச்சம் பிடிக்க, அவனது நெருக்கத்தில் காதலும் ஏக்கமும் ஒன்றாகக் கலந்தன. அந்த உணர்வைத் தாங்க முடியாமல், “அத்தானு!” என்றவள் சிணுங்கி, விழிகள் கலங்கிட, அவளது குரலில் இருந்த காதலும் அவனை மேலும் உருகச் செய்தன. அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டவன், அவளது உணர்வுகளைத் தன் காதலால் தாங்கிக்கொண்டான்.
வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகள் பார்வையிலும் வெளிப்பட, இருவரும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பேரின்பத்தில் அவஸ்தைகளோடு விழைந்தனர்.
அந்தக் கணத்தில், காதல் என்பது ஒருவரையொருவர் நெருங்குவது மட்டுமல்ல, மனதையும் உயிரையும் ஒருவரிடம் ஒருவர் ஒப்படைப்பது என்பதையும் உணர்ந்தனர்.
காதலின் மிச்ச சொச்சங்கள் எல்லாம் ஒரே இரவில் தேடிட முடியாமல் களைத்தனர். உடல் களைப்பும், உள்ளூர உழன்ற மன அழுத்தமும், அயர்ச்சியும் இன்னும் பிற உணர்ச்சிகளை ஆற்றுப்படுத்தும் அருமருந்தான அணைப்போடு, அவன் அளித்த ஆழமான நெற்றி முத்தம், இன்றிரவிற்கு இது போதுமென்று முடிவடைய வைத்தது.
******






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!