arrow_back
நெஞ்சமெல்லாம் காதல்…… அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5

visibility 67
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் – 5

 

காலையில் தன்னால் முடிந்த வரையில் சீக்கிரமே எழுந்து விட்டாள் சக்தி. அடுப்படி வேலைகளில் தனலெட்சுமிக்கு சில வேலைகளை செய்து கொடுத்தாள். வேணுகோபால் காலையில் சாப்பிட்டு முடித்ததும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை சக்தியே எடுத்துக் கொடுத்தாள். நேற்றை விடவும் வேணுகோபால் சற்று தெம்பாக இருந்தார். அவர் முகத்தில் ஒரு வித அமைதி நிலவியது. அவர் தன்னை நினைத்துத்தான் மகிழ்கிறார் என்பது சக்திக்குப் புரிந்தது. 

 

இத்தனை நாட்களாக நமது பெற்றோரிடம் நேரம் செலவிடாமல் இருந்து விட்டோமே என்று நினைத்தாள். எப்போதும் அசைண்ட்மெண்ட் எழுதுவதிலும், பாடங்களுக்கான நோட்ஸ் எடுப்பதிலும் பிஸியாக இருப்பாள். இதனால் அவளை ஒன்றும் கூறாமல் தனலெட்சுமியே அனைத்து வேலைகளையும் செய்வாள். அடுப்படி வேலைகளில் உதவும் பொருட்டு தாயுடன் பேசுவதும், அவள் பேசுவதைக் கேட்பதுமாய் இருந்தாள் சக்தி. அதனால் தனலெட்சுமியும் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு புன்சிரிப்புடன் இருந்தாள்.

 

சக்தி கல்லூரிக்குப் புறப்பட்டாள். எப்போதும் புறப்படும் நேரத்திற்கு ஒரு ஐந்து நிமிடம் முன்பாகவே புறப்பட்டாள். 

 

வழக்கமாக கவினுக்காக ஏதாவது நோட்ஸோ, இல்லை அசைன்ட்மெண்டோ எழுதிக் கொண்டு, ஓட்டமும் நடையுமாய் ஓடுவாள். 

 

இன்று நிதானமாக சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே மெதுவாகவே நடந்தாள். சக்திக்கே ஆச்சரியமாய் இருந்தது. தினமும் நடக்கும் தெருக்கள் தான். ஆனால் எத்தனை விஷயங்களை அவள் பார்க்கத் தவறியிருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். 

 

உலகம் எத்தனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது? எத்தனை விதமான ஜனங்கள்? சின்னஞ்சிறு குழந்தைகள் தெருக்களில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்களின் கள்ளமில்லா சிரிப்பைப் பார்த்ததும் சக்தி தன்னை அறியாமலேயே புன்னகை புரிந்தாள். 

 

கல்லூரி வளாகத்தை அடைந்ததும் முதலில் மெயின் என்ட்ரென்ட்ஸ்ஸில் இருக்கும் விநாயகர் சிலையை வணங்கினாள். கல்லூரிக்கு வந்த புதிதில் தினமும் விநாயகரை கும்பிட்டுவிட்டுத்தான் வகுப்பிற்குச் செல்வாள். ஆனால் கவின் பின்னாடி சுத்த ஆரம்பித்த பிறகு, அவளுக்கு மறந்து போன காரியங்களில் ஒன்றாக இதுவும் சேர்ந்து கொண்டது. 

 

வெகு நாட்களுக்குப் பிறகு, விநாயகர் வழிபாட்டை மீண்டும் துவக்கினாள். தேர்வுகள் நெருங்கத். துவங்கியது. 

 

வகுப்பில் எல்லோரும் நோட்ஸ் எடுப்பதிலும், புத்தகங்கள் வாங்குவதுமாய் பிஸியாக இருந்தனர்.

 

எப்போதும் கவினுக்காக சக்தியே நோட்ஸ் தயாரித்துக் கொடுப்பாள். இப்போதும் சக்தியே முன் வந்து கவினிடம் வழிந்து கொண்டும், நோட்ஸ் கொடுத்தும் உதவுவாள் என்று எதிர்பார்த்தான் கவின். ஆனால் சக்தி, நித்யா, தாரணி இவர்கள் மூவரும் சேர்ந்தே நோட்ஸ் எடுத்து அதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். 

 

சக்தி கவினை கண்டுகொள்ளவேயில்லை. செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி விட்டதாலும், வேறு வழி இல்லாமலும் கவின் ஒரு நாள் காரிடாரில் நின்று கொண்டிருந்த சக்தியிடம் “நோட்ஸ்லாம் எடுத்துட்டியா, எப்ப தர?” என்றான். அவன் பேசியதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றாள் சக்தி. கவினுக்கு எரிச்சல் வந்தது. இவளுக்கு எவ்வளவு திமிர்? என்று நினைத்தான். பிறகு தன்னுடைய ப்ரெண்ட்ஸ் மூலமாக நோட்ஸ்களை செராக்ஸ் எடுத்துக் கொண்டான். 

 

கவின் சக்தியிடம் நோட்ஸ் கேட்டதை நித்யாவிடம் கூறிய போது “ஏன்டி, அவன சும்மாவா விட்ட? நீ தப்பு பண்ணிட்ட, அவன லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ருக்கணும். போடி, பட்டர்” என்று கொதித்தாள். 

 

சக்தி அமைதியாக “இல்லடி, விலகணும்னு முடிவு பண்ணிட்டா, மொத்தமா விலகிடணும்ல, அதான் மெளனமா விலக முடிவு செஞ்சேன். நான் ஏதாவது பேசியிருந்தா அவன் திரும்ப பதில் பேசுவான். அவன மொத்தமா தவிர்க்கனும்னு முடிவு செஞ்சேன். அவன அவாய்ட் பண்ணிட்டு அடுத்த வேலைய பாக்கணும்ல” என்றாள்.

 

நித்யா ஏதோ சொல்ல வர தாரணி இடைமறித்தாள். “நித்து, சக்தி கரெக்டா தாண்டி சொல்றா. அவ கவின்ட்ட இருந்து மொத்தமா விலகுனாதா, படிப்புல அவளால கவனமா இருக்க முடியும். ஷீ வில் பி ஓ.கே டி” என்றாள்.

 

தேர்வுகள் நெருங்கத் துவங்கியதும் டிபார்ட்மெண்ட் சார்பில் ப்ரீ செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 

 

வழக்கமாக ப்ரீ செமஸ்டர் தேர்வுகளுக்கு ரொம்பவே மெனக்கெட மாட்டாள் சக்தி. ஆனால் இந்த செமஸ்டர் தேர்வுகளைப் பற்றி தாரணியிடம் பேசிக் கொண்டிருந்த போது ப்ரீ செமஸ்டர் தேர்வுகளுக்கு தயாராகும் படி சக்திக்கு அறிவுறுத்தினாள்.

 

சக்தி “ஏன்டி, நாம செமஸ்டர்க்குத் தான முக்கியத்துவம் கொடுக்கணும். இதுக்கு சும்மா ரெடியானா போதும்ல” என்று கேட்டாள். 

 

தாரணி லேசான புன்சிரிப்புடன் “அப்டி இல்லடி, ப்ரீ செமஸ்டருக்கு ஒழுங்கா ப்ரீ பேர் பண்ணி எழுதினோம்னா, செமஸ்டர் நமக்கு ரொம்பவே ஈஸியா இருக்கும். ஏற்கனவே நிறைய ப்ரீ செம்முக்கு படிச்சு வைச்சிருக்குறதால, செமஸ்டர் நேரத்துல இன்னும் அதிகமா படிக்க முடியும். கிட்டதட்ட சிலபஸ்ல எல்லாத்தையும் நம்ம கவர் பண்றதால நல்ல மார்க்ஸ் வாங்க முடியும். அப்ப பெர்சென்டேஜும்ஹைக் பண்ண முடியும். இப்ப புரியாதடி, ப்ரீ செம் எவ்வளவு முக்கியம்னு?” என்று கூறினாள். தாரணி கூறியதைக் கேட்ட சக்தி ஆச்சரியமடைந்தாள். 

 

அன்றிரவு படுக்கையில் படுத்தபடி தாரணி கூறியதை நினைத்துப் பார்த்தாள். தாரணி எவ்வளவு நிதானமாய் ஒவ்வொரு காரியத்தையும் கையாளுகிறாள். அவள் சக்திக்கு தெரியாத விஷயங்களை மெதுவாகவும், புரியும் படியும் அதே நேரத்தில் புன்சிரிப்புடனும் கூறி புரிய வைக்கிறாள். அவளிடம் தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணை எப்பவும் இருந்ததில்லை. இவையெல்லாம் தாரணியிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டியவை என்று நினைத்தாள்.

 

அதே நேரத்தில் மற்றொரு விஷயமும் அவளுக்கு நினைவிற்கு வந்தது.

 

கவின் எப்போதும் ப்ரீ செமஸ்டர் தேர்வுகளுக்கு கொஞ்ச நாட்கள் முன்பாகவே நோட்ஸ் கேட்டு நச்சரிப்பான். அதனால் தான் அவனால் நல்ல மார்க்ஸ் வாங்க முடியுது. சக்தியிடம் நோட்ஸ் எல்லாம் கேட்டு வாங்குவானே தவிர, தாரணியைப் போல் அவளுக்கு எப்படி பாடங்களைப் பிரித்து படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது இல்லை. அவனுக்கு தேவை சக்தி ப்ரீபேர் பண்ணிக்கொடுக்கும் நோட்ஸ் மட்டுமே. அவனுடைய தேவைக்காக சக்தியை தேவையான அளவிற்கு பயன்படுத்தியுள்ளான். 

 

இதையெல்லாம் நினைத்த போது சக்திக்கு மனசு ரொம்பவே சங்கடமாகியது. இதைப் பற்றி நினைத்ததால் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அப்போது தாரணி கூறியது மீண்டும் நினைவிற்கு வந்தது. 

 

தாரணி பர்செண்ட்டேஜ் ஹைக் பண்ணுவது எப்படி என்று கூறியதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் இரவில் நெடு நேரம் வரையிலும் உறக்கமே வருவதில்லை. அந்த நேரத்தில் சும்மா படுத்து புரண்டு கொண்டிருப்பதை விடவும், இனி அந்த நேரத்தில் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். மறுநாளிலிருந்து தினமும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக நேரம் ஒதுக்கி படிக்கத் துவங்கினாள்.

 

ஒரு நாள் மூவரும் கேன்டீனில் அமர்ந்து இருக்கும் போது முந்தைய நாள் படித்ததை அவர்களுடன் பகிர்ந்து கொண்டாள் சக்தி. அப்போது நித்யா “தினமும் நீ படிப்பதை சிம்பிள் நோட்ஸ்ஸா மாத்திக்கோடி. மூணு பேரும் வேற வேற டாபிக் பத்தி படிச்சிட்டு வந்து நமக்குள்ள சிம்பிள் நோட்ஸ்ஸை ஷேர் பண்ணிக்கலாம், என்ன ஓ.கே. வா?” என்றாள்.

 

நித்யாவின் ஐடியாவிற்கு தாரணியும் ஒப்புக்கொண்டாள். மூவரும் தங்களுக்குள் தனித்தனி டாபிக் பிரித்துக் கொண்டார்கள். சக்தி அக்கறையாக படிப்பதைப் பார்த்த அவளது பெற்றோர்களும் மனத்திற்குள் மகிழ்ந்தார்கள்.

 

சக்தி இரண்டாம் வருடத்தின் இரண்டாவது செமஸ்ட்டரை தன்னால் முடிந்த வரையில் நன்றாகவே எழுதியிருந்தார். ஆங்கில மொழிப் பாடத்திலும், பிஸினஸ் மேத்ஸிலும் கொஞ்சம் தடுமாறினாள். மொழிப் பாடங்கள் இந்த வருடத்தோடு முடிவடைவதில் நிம்மதி அடைந்தாள். 

 

கடைசி தேர்வான எக்கனாமிக்ஸ் முடிவடைந்ததும் நித்யாவுடனும், தாரணியுடனும் கொஞ்சம் நேரம் செலவிட நினைத்தாள் சக்தி. இதை அவர்களிடம் கூறிய போது நித்யா “சக்தி, காலேஜ் கேன்டீன் க்ளாஸ்டுடி. வேற எங்க போறது?” என்றாள்.

 

தாரணி “எடி, மெயின்ரோட்ல இருக்குற பேக்கரிக்கு போகலாம்டி. கேக்கும், கட்லெட்டும் சாப்பிட்டு விட்டு, சூடா ஒரு காபியும் குடிச்சிட்டு வீட்டுக்குப் போக வேண்டியது தான்” என்றாள்.

 

மூவரும் மெயின் ரோட்டிற்கு பேசிக் கொண்டே நடந்து பேக்கரியை அடைந்தார்கள். நித்யா மூவருக்கும் கேக் ஆர்டர் செய்து விட்டு வந்து அமர்ந்தாள். 

 

சக்தி தாரணியுடன் பேக்கரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டே திரும்ப பில் கவுண்டரில் நின்று கொண்டிருந்த நபர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். தன் கண்களையே நம்ப முடியாமல் திரும்ப திரும்ப பார்த்தாள். அங்கே தன் அத்தை பூமாரியின் மகன் செல்வம் நின்று கொண்டிருந்தான். அவன் தோளில் ஆபிஸ் பேக் தொங்கிக் கொண்டிருந்தது. செல்வம் இந்நேரம் ஆபிஸ் முடிந்து வீடு திரும்பும் நேரம் இல்லையே, என்று நினைத்தாள். ஆனால் அவனின் அருகில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது வெறுமன அலுவலக நட்பு என்பதோடு முடிக்க முடிய வில்லை சக்தியால். செல்வம் பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு, கேக்குகளும், ஸ்நாக்ஸீம் அடங்கிய கேரிபேக்கை வாங்கிக் கொண்டான். பிறகு அந்தப் பெண்ணுடன் பேசி சிரித்த படியே பேக்கரியை விட்டு வெளியே நடந்து சென்றான். 

 

சக்தி கண்ணாடி ஜன்னல் வழியே அவர்கள் வெளியேறி போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பேக்கரியின் வெளியே தாழ்வாரத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கின் அருகில் சென்றதும் கையில் வைத்திருந்த கேரி பேக்கை அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்தான். அந்தப் பெண் எவ்வித தயக்கமும் இன்றி பைக்கின் பின் சீட்டில் ஏறி அமர்ந்ததை சக்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதைப் பார்க்கும் போது, அவர்களுக்குள் நல்ல புரிதல் இருப்பது தெரிந்தது. 

 

ஒரு வேளை இருவரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பலாம். அவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் அப்படித்தான் சக்தியால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

சக்தி இப்படியும், அப்படியும் திரும்பிக் கொண்டிருப்பதையும், வெளியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருப்பதையும் கவனித்த தாரணி “என்னாச்சுடி?” என்றாள். சக்தி “அது வந்து, அங்க நின்னது எங்க அத்த பையன் மாதிரி இருந்துச்சு. அதான் பாத்தேன் டி” என்றாள்.

 

நித்யா “சரி, அதெல்லாம் விடுடி, உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் பேசணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்கு இப்போ தான் சரியான சந்தர்ப்பம் அமைச்சிருக்கு. பேசலாம் தானே டி” என்றாள்.

 

நித்யாவின் பீடிகைகள் பலமாக இருந்ததினால, அவள் என்ன கூறப் போகிறாளோ என்று நினைத்த சக்தி திருதிருவென முழித்த படி அமர்ந்திருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்