arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 21

என் வீட்டு தோட்டத்தில் 21

visibility 986
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.2/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

21

“உங்ககிட்ட சொல்லியிருந்தா என்ன சித்தப்பா முடிவெடுத்துருப்பீங்க? 

“ஏம்மா… அப்பனும் புள்ளையுமா சேந்து எந்தளவுக்கு நம்மல ஏமாத்தி இருக்காங்க. இவங்கள சும்மா விடறதா?” 

“அதான்‌ இப்ப உண்மை தெரிஞ்சுறுச்சுல்ல. என்ன பண்ணப்போறீங்க?” அவள் கேட்டவிதம் அவர்களுக்குப் புரியவில்லை. கேட்க வேண்டுமே என்பதற்காக அசட்டையாகத்தான் கேட்டாள். 

“மொதல்லயே தெரிஞ்சிருந்தா, உன் வாழ்க்கைய வீணாக்குனதுக்கு நஷ்ட ஈடா சொத்து பூராவும் உம்பேருக்கு மாத்தி வாங்கியிருக்கலாமே அபி!” சித்தப்பாக்களின் ஆவேசம் பார்த்தவளுக்கு கசந்த முறுவல் ஒன்று கணநேரம் அவள் இதழ்களில் தங்கிச் சென்றது. 

“இப்பவும் மோசம் போகல. சொத்து பூரா உம்பேர்ல எழுதி வச்சாதான் இவன் கூட வாழ்வேன்னு சொல்லு அபி!” என்றதும் இப்பொழுது உண்மையிலேயே அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை அந்த பேதைக்கு.

இவனுடன் வாழ்வதா? இவர்கள் புரிந்துதான் பேசுகிறார்களா? இப்பொழுது இவளுக்கு சித்திகளை நினைத்துதான் பரிதாபம் பிறந்தது. எப்படிப்பட்ட மகானுபாவர்களோடு குடும்பம் நடத்துகிறார்கள் என‌. 

அவளுடைய வாழ்க்கை வீணாகிப்போனதைவிட, அதற்கு ஈடாகக் கைப்பற்றியிருக்க வேண்டிய சொத்துதான் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. தங்கள் வீட்டுப் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான கோபமோ, இனிமேல் நம் பிள்ளை வாழ்க்கை என்னாவது என்ற அக்கறையோ ஊசி முனையளவுகூட இல்லை. அந்த அநீதிகூட சொத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டாகத்தான் தெரிந்தது அவர்களுக்கு.

உறவுகள் என்று நம்பியவர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக மனத்திரையில் விரிந்தன. ஒவ்வொரு முகத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. ஒவ்வொரு அக்கறைக்குப் பின்னாலும் ஒவ்வொரு கணக்கு. அவளுக்கு என்ன வேண்டும் என்று ஒருவர்கூடக் கேட்கவில்லை.

அவள் என்ன அனுபவித்தாள் என்று அறிந்துகொள்ள ஒருவர்கூட முயலவில்லை. அவளுக்கு இனி என்ன வாழ்க்கை இருக்கிறது என்று யோசிக்கவும் யாருக்கும் நேரமில்லை.

சொத்தைக் கேள். உரிமையை நிலைநாட்டு. அவனோட வாழ பேரம்பேசச் சொல்கிறார்கள். 

இவர்களைப் பார்த்தவளுக்கு மனம் கசந்துவந்தது. ஒரு வேளை அப்பா இருந்திருந்தால் இந்த நிலமை தனக்கு வந்திருக்காதோ? பத்து வயதில் இழந்த அப்பாவை வெகுவாகத் தேடியது பேதைமனம். 

“இப்ப வீட்டைவிட்டு வந்து வாழமுடியாதுன்னு சொல்றதை நீ முன்னாடியே செஞ்சிறுக்கலாம் அபி. நாங்க ஏதாவது முடிவு எடுத்திருப்போம். இப்ப பிள்ளையோட வந்திருக்க? அதுவும் யார் பிள்ளைனே தெரியாம!” சித்திகள் முகத்தில் அத்தனை சுழிப்பு. என்னவோ யாரையோ நம்பி மோசம்போய் அதன் மூலமாக வயிற்றில் குழந்தையை வாங்கிக்கொண்டு, நிர்கதியாக வந்தவள் போல் அவர்களது கண்ணோட்டம்.  

 “என் பிள்ளைக்காகன்னு இப்ப நான் துணிஞ்ச மாதிரி எனக்காகத் துணிச்சலா எங்கம்மா முடிவெடுத்திருந்தா எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது சித்தி. நாங்க இருக்கோம் அபி! நீ வான்னு அன்னைக்கி ஒரு வார்த்தை சொல்லல.” அதற்கு மேல் பேசமுடியாமல் தொண்டையடைக்க கண்கள் கலங்கி நின்றவளது பார்வை இந்துமதியை குற்றம் சாட்டியது.

சுதாகரனைப்பற்றியும், குழந்தைக்காக இவளை கருவியாகப் பயன்படுத்துவது பற்றியும் தெரிந்ததும் முதலில் அழுகையும் ஆத்திரமும் தான் பொங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. முதன்முறை மருத்துவரிடம் சென்றுவந்த அன்று, கன்னிகழிவது பற்றி அம்மாவிடம் சந்தேகம் கேட்டதற்கே ஏதோ தகாத வார்த்தை பேசியதுபோல் அவளை கோபமாகப் பார்த்தனர். இதையெல்லாம் யாரிடம் வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்க என்றும் தெரியவில்லை. நெருங்கிய நட்புகளும் இல்லை. இருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகு பெண்களுக்கு அந்த மாதிரி நட்பு நீடிப்பதில்லை. பள்ளி நட்பு பள்ளியோடு. கல்லூரி நட்பு கல்லூரியோடு. கடைசியாக தாய் முகம்தான் நினைவுக்கு வந்தது.  

“உங்ககிட்ட சொன்னதுக்கு நீங்க என்னம்மா சொன்னீங்க?” என்றவள் பார்வை இப்பொழுது இந்துமதியை ஆற்றாமையோடு பார்த்தது.

அவர் என்ன செய்வார். சுதாகரன் பற்றிய உண்மை தெரிய வந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் தனக்குள்ளே முட்டிமோதி குழம்பித் தவித்தவள் அம்மாவிற்குதான் அழைத்துப் பேசினாள். தனக்கொரு கஷ்ட்டம் எனும் பொழுது மனம் தன்னால் தாய்மடி தேடுவது இயல்புதானே? அதற்கு அவர் சொன்ன பதில்தான் இவளை துணிந்து முடிவெடுக்க வைத்தது. 

இவள் சுதாகரனைப்பற்றி அவளுக்குத் தெரிந்த வகையில் மேலோட்டமாகச் சொல்ல, அடுத்த நொடி அவரிடமிருந்து வந்த பதில், அச்சோ அபி! உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே! என்ற ஆதங்கம் இல்லை. மகள் வாழ்க்கையை நினைத்து பரிதவிப்பு இல்லை. 

சட்டென அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, கைபேசியை கைவைத்து மறைத்து சன்னக்குரலில், “எங்கிட்ட சொன்னமாதிரி இதை வெளியே சொல்லிட்டிருக்காதே அபி. வெளியே தெரிஞ்சு போச்சுனு அசிங்கப்பட்டு ஆம்பளை ஏதாவது பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை என்னாகுறது? அது மட்டும்தான் வாழ்க்கையா. இப்ப நான் இல்ல. உங்க அப்பா போனப்பின்னாடி பிள்ளைகதான் முக்கியம்னு. அவங்க சொல்ற மாதிரி ஒரு பிள்ளையப் பெத்துக்கிட்டா, அது முகத்தைப் பாத்துட்டே வாழ்க்கையை ஓட்டிறலாம். ஒரு பிள்ளை பொறந்த பின்னாடி பொம்பளைக்கி என்ன வேண்டிக்கிடக்கு. குமரியில்லாம கல்யாணம் பண்ணியாச்சு. மலடில்லாம அவங்க சொல்ற மாதிரி ஒரு பிள்ளையப் பெத்துக்கோ. இப்ப இதை வெளியே சொன்னா நமக்குதான் அசிங்கம். புருஷன் உன்கூட இல்லை, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிருக்கறதா நெனச்சு பிள்ளைய வளத்திட்டு வாழ்க்கையை ஓட்டிறலாம்” என்றதுதான் பெற்றவளிடமிருந்து அவளுக்கான ஆறுதல் வார்த்தைகளாக இருந்தது. 

அதுமட்டும்தான் வாழ்க்கையா என்றால் எது மட்டும்தான் என்பதுதான் இவளுக்கு புரியவில்லை. அதில்லாமல் என்ன வாழ்க்கை என்று ஒரு பெண் பதிலுக்கு வெளிப்படையாக கேட்டுவிட முடியாது. அப்படிக் கேட்டால் அவளுக்குதான் ஆயிரம் பட்டங்கள் சூட்டப்படும்.

இங்கு ஆண் பெண் உறவையே திருமணத்திற்குப் பிறகு கணவன்தான் ஒரு பெண்ணுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதைப்பற்றிய அடிப்படை அறிவு கூட அவளுக்கு இருக்கக்கூடாது. ஒரு நாள் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா என தயங்கித் தயங்கி மறைமுகமாக கேட்டதற்கே உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று வெகுண்டுவிட்டான். அதைப்பற்றிய பரிச்சயம் இருந்தால் முன்னனுபவமும் இருக்குமோ என்ற சந்தேகம். அதன்பிறகு இதைப்பற்றி இவள் எங்கே வாய்திறக்க? அந்தரங்கம் இங்கு புனிதமானது மட்டுமல்ல மறைமுகமானதும் கூட.  இதைப்பற்றி கணவனிடமே வெளிப்படையாக பேசமுடியாத பொழுது வேறு யாரிடம் இதைப்பற்றி பேசி ஆலோசனை கேட்பாள். 

இல்லறம் நல்லறமாக அமைய தாம்பத்தியம் மட்டுமே முக்கியமில்லைதான். அன்பு, புரிதல், பரஸ்பர மரியாதை, நம்பிக்கை இது எல்லாமும் வேண்டும் தான். ஆனால், இங்குதான் அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டதே. 

தன்னுடைய குறையை மறைத்ததோடில்லாமல், குழந்தைக்காக அவளையும் பயன்படுத்திக் கொள்ள நினைத்தவனோடு ஒரே வீட்டில் மட்டுமே வாழ்வது எப்படி வாழ்க்கையாகும். 

கணவனோடு வாழ்ந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றவரும் இவளும் ஒன்றா? நானெல்லாம் புருஷனில்லாம இல்ல என்று மனசாட்சியேயில்லாமல் கேட்கிறாரே என்றுதான் இருந்தது. முப்பதுகளில் கணவனை இழந்தவர்தான். அந்த வயதில் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்புதான். ஆனாலும் ஒருவருக்கு மனைவியாக, மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக ஒரு குடும்பத்தில் அங்கமாக வாழ்ந்தவரும், தாம்பத்தியத்தின் அரிச்சுவடிகூட அரியாதவளும் ஒன்றா? இன்னும் வாழவே ஆரம்பிக்காத இளங்குறுத்தை, வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயான தன்னோடு ஒப்பிட்டு பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றுதான் புரியவில்லை. 

அவருக்கு எங்கே மகள் வீட்டோடு வந்துவிடுவாளோ என்ற பயம்‌. இது வெளியே தெரிந்து அவமானத்தில் சுதாகரன் ஏதாவது செய்து கொண்டால், மகள் எதிர்காலம் என்னாவது. இவள் வீட்டோடு வந்துவிட்டால், வீட்டில் இன்னொரு பெண் இருக்கிறாளே? அவள் எதிர்காலம் என்னாவது?

அகவாழ்க்கை எப்படியிருந்தாலும் புறவாழ்க்கை ஊருக்காக மகள் கணவனோடு வாழ்கிறாள் என்றுதான் இருக்க வேண்டும். அதுதான் குடும்பத்துக்கும் பெறுமை. பெற்ற தாயே இப்படி சொன்னபிறகுதான் அபிராமி தனக்கே தனக்கென ஒரு உறவு வேண்டும். வேறு எந்த அடையாளமும் தெரியாத, தன்னுடைய அடையாளத்துடன் மட்டுமேயான ஒரு உறவுக்காகத்தான் அபிராமி துணிந்து அந்த முடிவை எடுத்தாள். 

உண்மையை மறைத்து கல்யாணம் எனும் பெயரில் தன்னை ஏமாற்றியவர்களை ஏமாற்றவும் தான்.

தான் எடுத்த முடிவு சரியா தவறா என யோசிக்கவில்லை. யோசிக்கவும் முடியவில்லை. உனக்கு நாங்க இருக்கோம் அபி! என்று அன்று ஒரு நம்பிக்தை வார்த்தை பெற்றவள் சொல்லியிருந்தால் இந்த முடிவுக்கே வந்திருக்கமாட்டாள். 

கருவை இவள் கருப்பையில் பொதிய வைத்ததிலிருந்து இது என் குழந்தை மட்டுமே என்று‌ உருப்போட்டாள். மாதம் தவறாமல் செக்கப் சென்று வந்தாள். வீட்டிலும் கவனிப்பு பலமாக இருந்தது.

சுதாகரனுக்கு தன்னை ஆணாக உலகுக்கு காட்ட ஒரு வாரிசு வரப்போகும் சந்தோஷம். தயாளனுக்கு சொத்துக்கு தங்கள் குடும்ப வாரிசே வரப்போகும் சந்தோஷம். 

இவளுக்கு ஏழாம் மாதம். அப்பொழுது ஷைலஜாவுக்கு எட்டாம் மாதம். ஷைலஜா கருத்தரித்ததிலிருந்து மசக்கை அவளைப் படுத்தியெடுக்க, ஐந்தாம் மாதமே இரத்த அழுத்தம் எகிறியது. மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் தான் இருந்தாள். எட்டாம் மாதம் தொடக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

பெரிபாட்டம் கார்டியோமிபதி (Peripartum cardiomyopathy) எனும் பிரசவ காலத்தில் ஏற்படும் இதயத் தசை பலவீனம் என சொல்லப்பட்டது. குழந்தையை உடனடியாக பிரசவிக்க வேண்டிய சூழல். குழந்தையை எடுத்த பிறகு அதிகப்படியான இரத்தப்போக்கும், இதயத்தசை சுருங்கி விரிவதில் ஏற்பட்ட பிரச்சினையாலும் ஷைலஜா உயிர்‌ பிரிந்தது. அவள் மூலமாக இவ்வுலகுக்கு ஒரு உயிர் வந்ததும் அவள் உயிர் பிரிய வேண்டும் என்பதுதான் அவளுக்கு விதிக்கப்பட்ட விதி போல‌. 

அன்றுதான் ஷைலஜாவை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு கலங்கிய கண்களோடு நின்றிருந்த குருப்பிரசாத்தை மாதாந்திர செக்கப்புக்காக மருத்துவமனை வந்த அபிராமி முதன்முறையாக பார்த்தாள். ஆப்ரேஷன் தியேட்டருக்குள் செல்லும் வரை ஷைலஜாவின் விரல்களை இறுக்கிப் பிடித்தவண்ணம் இருந்தான். அவனது கண்களில் தெரிந்த பரிதவிப்பு அவன் மனைவி மீதான காதலை பறைசாற்றியது.

அபிராமிக்கு அவனைப் பார்த்த ஒரே நாளில் அவன் முகம் மனதில் பதியக் காரணம் அந்த பழுப்புநிறக் கண்கள்தான். ஒருவரை முதன்‌ முறை‌பார்க்கும் போது அவர்களிடம் இருக்கும் ஏதோ ஒரு தனித்துவம் நம்மை கவரும். அகன்ற விழிகள், பளிச்சென்ற சிரிப்பு, எடுத்து வைத்தாற் போன்ற பல்வரிசை, செய்து வைத்ததுபோல் கூர்நாசி, முடி, புருவக்கட்டு இப்படி ஏதோ ஒன்று. அப்படித்தான் அவனது சோகம் அப்பிய கண்ணீர் நிறைந்த பழுப்பு நிற விழிகள் அபிராமி மனதில் ஆழப்பதிந்தது. அதைப்பற்றி பெரிதாக அப்பொழுது கண்டு கொள்ளவில்லை‌. அவள் முறை வர செக்கப்பிற்கு சென்றுவிட்டாள்‌. தன்னுடைய இன்னொரு உயிர் அங்கே ஜனிக்கப்போவதை அறியவில்லை. ஆனால் அவன் முகம் மட்டும் மனதில் ஒரு மூலையில் தங்கிவிட்டது. அதனால் தானோ என்னவோ அவளுக்கும் பழுப்புநிற விழிகளோடே குழந்தை பிறந்தது. 

நாட்கள் சென்றன. மசக்கை அறிகுறிகூட இல்லை அவளுக்கு. சுகப்பிரசவமே. அவளது பிள்ளை அவளை எதற்காகவும் கஷ்ட்டப்படுத்தவில்லை. தன்னுடைய அடையாளம் மட்டுமே என்ற அர்த்தத்தில் தான் சக்திபாலன் எனப் பெயரிட்டாள். 

குழந்தை பிறக்கும் வரைக்குமே சுதாகரனும், தயாளனும் நம் குடும்ப வாரிசு என்றுதான் நம்பிக் கொண்டிருந்தனர்.

சந்தன நிறத்தில், பழுப்பு நிற விழிகளோடு, கருகருவென தலை கொள்ளா முடியோடிருந்த குழந்தை பொக்கை வாய் திறந்து சிரிப்பதைப் பார்ப்பவர் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொண்டான். 

இருவரைத்தவிர. அவர்களுக்கு மட்டும் குழந்தை சிரிக்கும் பொழுதெல்லாம் உள்ளம் தீயாய் காந்தியது. திருடனுக்கு தேள் கொட்டிய நிலமை. சுதாகரனுக்கு தன் குழந்தையில்லை என்பது ஊர்ஜிதமாகத் தெரிந்தது. தயாளனுக்கும் தன் குடும்ப வாரிசில்லை என்று ஊர்ஜிதம்தான். யாரைக் கேட்க முடியும்? மகனால் ஆகாதெனத் தெரிந்ததும் தன்னுடை உயிரணுக்களை பயன்படுத்திக் கொள்ள சொன்னவராயிற்றே.

சொத்துக்கு வாரிசு வேண்டும். அது மகனுடையதாக இருந்தால் என்ன? தன்னுடையதாக இருந்தால் என்ன? யாரோ ஊர்பேர் தெரியாத ஒருவனுடைய குழந்தையை பெற்றுக் கொள்வதற்கு தன்னுடையது பாதகமில்லை என்று நினைத்தார். ஆனால் இங்கே முதலுக்கே மோசம் நடந்திருப்பது குழந்தையின் கண்களைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது. 

அதுவும் குழந்தையை கொஞ்சுபவர்களும், “இந்த மாதிரி கண்ணு நம்ம வம்சத்துலயே இல்லை” என்று சிலாகித்துக் கொஞ்சும் போது நெருப்பை அள்ளி தலையில் கொட்டியதுபோலிருக்கும் இருவருக்கும்‌. 

அந்த ஆத்திரம் சுதாகரனுக்குள் ஒரு நாள் குழந்தை என்றும் பாராமல் வன்மமாக வெடித்தது. தொட்டிலில் குழந்தை கை காலை ஆட்டியபடி உங்கா சொல்லி பிதற்றிக் கொண்டிருந்தது. தொட்டிலை கடந்து சென்ற சுதாகரன் ஏதேச்சையாக குழந்தையைத் திரும்பிப் பார்த்தான். இவனைப் பார்த்ததும் கண்கள் சுருங்க பொக்கைவாய் காட்டி சிரித்தது. அந்த கண்கள். அபிராமி அடிக்கடி முத்தம் கொடுத்து கொஞ்சும் அதே கண்கள். பார்த்தவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. குளியலறையில் தண்ணீர் சத்தம். அப்பொழுதுதான் அபிராமி குளிக்க சென்றாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தையின் அலறல் வீடெங்கும் எதிரொலித்தது.

சாதாரணமாக பசிக்கு அழுவது போல் இல்லை. சூடு வைத்தது போல் வீறிடல். அவசரமாக நைட்டியை தலையோடு மாட்டிக்கொண்டே வெளியே ஓடிவந்தாள். 

தொட்டிலில் கிடந்த குழந்தையை வாரியெடுத்தாள். தாளமாட்டாத அலறல் குழந்தையிடம். உடல் விரைக்க தொண்டை கிழியக் கத்தியது. காரணம் புரியவில்லை. ஏதாவது பூச்சி கடித்திருக்கிறதா என ஆராய்ந்தாள். குழந்தை கண்களையே திறக்கவில்லை. அப்படியொரு கதறல். இதற்கு முன்பு ஒருநாளும் இப்படி அழுததில்லை. தூங்கி எழும்பொழுதுகூட, தொட்டில் விளக்கிப் பார்க்கும் வரை சிறு சத்தமிருக்காது. கை, காலை காற்றில் ஆட்டிக் கொண்டு அமைதியாகப் படுத்திருப்பான். இவளாகத் தூக்கிதான் பசியமர்த்துவாள். ஆனால் இந்த வீறிடல் ஏனென்றே தெரியவில்லை. மாடியில் துணி உலர்த்தச் சென்ற அன்னபாக்கியமும் அவசரமாக ஓடி வந்தார். 

“என்னாச்சு அபி. என்னைக்குமில்லாம இப்படி கத்துறான்?” 

“தெரியலை அத்தை!” பதறியவளிடமிருந்து குழந்தையை வாங்கியவர் அடுத்தடுத்து தும்மினார்.  

அவளுக்கும் அடுத்தடுத்து தும்மல். கார நெடி. குழந்தையின் அழுகையில் கவனத்தில் இருந்தவள், இப்பொழுது தொட்டிலை ஆராய்ந்தாள். மிளகாய்ப்பொடி தூவியிருப்பது போலிருந்தது. மயிலிறகால் வருடினாலே உறுத்தும் பூந்தளிர் தேகம். மிளகாய்ப்பொடி பட்டால் என்னாகும். எரிச்சல் தாழாமல் பிஞ்சின் கதறல் நிற்கவேயில்லை. 

அன்னபாக்கியம் உடனே பச்சைத்தண்ணீர் கொண்டு உடலைக் கழுவினார். கண்களை திறந்தால் தானே தண்ணீர் விட்டு கழுவ முடியும். பெரியவர்களா என்ன? மூச்சை அடக்கி தண்ணீரில் கண்களை முழித்துப் பார்க்க. 

“பால் கொடு அபி. அப்பவாவது அழுகை அடங்குதா பார்க்கலாம்” என்று சொல்ல, அவளும் பசியமர்த்த முயல, குழந்தை வாய் வைக்கவேயில்லை. அழுகையும் அடங்கவில்லை. அழுதே மூர்ச்சையாகியது. 

“அத்தை எம்பிள்ளை” என்று பதறியவளுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை. 

அன்னபாக்கியமும் குலுக்கிப் பார்த்தார். அசையவேயில்லை. அவசரமாக மருத்துவமனை செல்ல ஆள் தேடினார். ஆண்கள் இருவரும் வீட்டில் இல்லை. 

வெளியே வந்து பார்க்க, அப்பொழுதுதான் சுகுமாரன் அவ்வழியாகச் சென்றான். அவனை அவசரமாக அழைத்தார். அதுவரை எவ்வளவு அழைத்தாலும் பெரியப்பா வீட்டுக்குள் வராதவன் இவரது பதட்டம் பார்த்து வேகமாக உள்ளே வந்தான். அபிராமி கைகளில் குழந்தை தலை துவண்டுகிடந்து. அவசரமாக அவளை எழுப்பி வெளியே அழைத்து வந்தவன் கைகளில் கார் சாவியை திணித்தார் அன்னபாக்கியம்.

சுகுமாரன் கைகளில் கார் வேகமெடுத்தது. மருத்துவமனை சென்றதும் முதலுதவி அழிக்கப்பட்டது. குழந்தை கண் திறக்கவே இல்லை‌. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது.

“ஏம்மா… குழந்தை மொளகாப்பொடி எடுத்து விளையாடற வரைக்கும் வேடிக்கையா பாத்தீங்க. குழந்தையோட கண்ணும்மா. பார்வை போச்சுனா திரும்ப வருமா? கேர்ஃபுல்லா இருக்க வேண்டாமா?” நர்ஸ் சொன்னதைத் கேட்டவள் விக்கித்துப் போனாள். தொட்டிலில் கிடந்த குழந்தைக்கு மிளகாய்ப்பொடி எப்படி? 

தொட்டிலில் சிரித்த குழந்தையைப் பார்த்தவனுக்கு, தன்னைப் பார்த்து சிரிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்தக் கண்கள் அவனது குறையைச் சுட்டிக் காட்டுவது போலவே இருந்தது. அவனது இயலாமை குழந்தை மேல் வன்மமாக மாறியது. சுகுமாரனின் புதுவண்டியை அபிராமி தடவிப் பார்த்ததுக்கே அந்த வண்டியை கண்ணாடியை உடைத்து, சீட்டைக் கிழித்து ஒச்சமாக்கியவன்.

தினமும் அவள் முத்தம் கொடுத்து கொஞ்சும் பிஞ்சின் கண்கள் அவனை கேலி செய்து சிரிப்பது போலிருக்க அவனது கண்கள் வன்மத்தைக் கக்கின. அடுக்களை சென்றவன் அங்கிருந்த மிளகாய்பொடியை கைநிறைய அள்ளிவந்து தொட்டிலில் ஊதிவிட்டு சட்டென வெளியேறிவிட்டான். காற்றில் கலந்த மிளகாய்த்தூள் கண், மூக்கு, முகமெங்கும் படிந்தது. பச்சை குழந்தை தாங்குமா? மூச்சு வாங்கி அழுதழுது மேலும் மிளகாய்ப்பொடியை நாசிவழியும், வாய்வழியும் உள் வாங்கியது. அதரங்கள் சிவந்து துடிக்கத்துடிக்க அழுத குழந்தையின் நுரையீரலும் மிளகாய்ப்பொடி படிய மூச்சுக்காற்றுக்குத் திணற குழந்தை மூர்ச்சையானது. 

கண்களில் கண்ணீர் வழிய வெளியே காத்திருந்தாள். தனக்கே தனக்கென அவள் உருவாக்கிய ஒரு உறவு. அதுவும் இப்பொழுது தனக்கு நிலைக்காதோ என்ற அச்சம் அவளை ஆட்கொண்டது. 

அவளிடம் கைபேசி நம்பர் வாங்கி சித்தப்பாக்களுக்கு அழைத்து சொன்னது சுகுமாரன் தான். அவசரமாக வந்து சேர்ந்தனர். 

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது. 

“கவனமா இருக்க வேண்டாமா அபி?” என்ற சித்திகளை ஏறிட்டுப் பார்த்தாள். தவழும் குழந்தையோ, நடக்கும் குழந்தையோ இல்லை. இப்பொழுது தான் குப்புற விழ ஆரம்பித்திருக்கும் குழந்தை. 

கண், முகமெல்லாம் சிவந்து, வீங்கி படுக்கையில் கிடந்த குழந்தையைப் பார்க்க பார்க்க பெற்றவள் மனம் துடித்தது.

குழந்தையின் கண்களாயிற்றே. கண்பார்வைக்கு ஏதும் பாதிப்பும் ஏற்பட்டிருக்குமோ என மனம் தவதாயப்பட்டது. பயந்து தவித்தது. 

இரண்டு நாட்களாயிற்று குழந்தை சரியாக கண்விழிக்க. அப்பொழுதும் கண் திறக்க முடியாமல் கூசிற்று. சூடாக இதமாக விழிகளில் இதழ் பதித்தவள் விழிகள் கரையுடைத்தது. 

அதுவரை தனக்காக எந்த முடிவும் எடுக்கத் துணியாதவள் தன் பிள்ளைக்கொரு ஆபத்து என்றதும் துணிந்து முடிவெடுத்தாள். இனி தன்னால் அந்த வீட்டில் வாழமுடியாதென‌. 

குழந்தை குணமாகி சித்தப்பாக்களுக்கு உண்மை தெரிய வர, அபியோடு மருத்துவமனையிலிருந்து அனைவரும் தயாளன் வீடு வந்தனர். 

குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நியாயாம் கேட்பார்கள் என்று நினைத்தால், உண்மையை முன்பே சொல்லியிருந்தால் அதை வைத்து சொத்தை உன் பெயருக்கு எழுதி வாங்கியிருக்காலாமே என்பதுதான் அவர்களது தலையாயக் கவலையாக இருந்தது. 

உண்மை தெரிந்த அன்னபாக்கியம் தான், “என்னடா சுதா இதெல்லாம்? பச்சப்பிள்ளைனு கூடப் பாக்காம அரக்கத்தனமா நடந்திருக்க?” என்று பதறினார்.‌

“சுதான்னு கூப்புடாதீங்கனு எத்தனை தடவை சொல்றது” என்றவன் கண்கள் சிவக்க கையில் கிடைத்ததெல்லாம் தூக்கி எறிந்தான். அன்னபாக்கியமே ஒரு கணம் மிரண்டுவிட்டார் மகனின் அவதாரத்தில்.

நடப்பதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தயாளனிடம், “நீங்க ஏன் ஒன்னுமே பேசாம இருக்கீங்க?” என்றாள்‌. 

பரந்தாமன், “அவர என்னத்துக்கு அபி பேசச்சொல்ற? சொத்து பூராவும் இப்பவே உன்னை கார்டியனா போட்டு, பேரன் பேருல எழுதி வைக்கச்சொல்லு. எவ்வளவு பெரிய உண்மையை மறச்சு கல்யாணம் பண்ணிருக்காங்க?” என்று வெகுண்டெழ, 

“எதை மறச்சாங்க அபி!” பதறிய அன்னபாக்கியத்தை பரிதாபமாகப் பார்த்தாள். என்னவோ தன்னைவிட பாவப்பட்ட ஜீவன்போல் இப்பொழுது அவர்தான் தெரிந்தார் இவள் கண்களுக்கு. பெற்ற மகனைப் பற்றிய உண்மைகூட தெரியாமல் இந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறார். இப்பொழுது இவரிடம் விளக்கி சொல்லும் நிலையில் அவளும் இல்லை. 

தயாளனை உறுத்துப் பார்த்தாள். அவரோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தார். பிள்ளையே தங்கள் வீட்டு வாரிசு இல்லை என்ற உண்மையை வெளியே சொல்லமுடியாத ஆத்திரத்தில் அவர் இருக்க, இதில் சித்தப்பாக்கள் அந்த குழந்தை பெயரிலேயே சொத்து எழுதி வைக்கச் சொன்னால் உள்ளம் கொதிக்காதா?

“யார் பிள்ளைக்கு யார் சொத்து எழுதி வைக்கிறது?” என்றார் அடக்கிய குரலில். 

“உங்க பேரனுக்குதான்‌. எவ்வளவு பெரிய உண்மையை மறச்சுருக்கீங்க. எங்க பிள்ளை வாழ்கைக்கு நீங்க நஷ்ட ஈடு கொடுத்துதான் ஆகணும்!” 

“பிள்ளைக்கு அப்பா யாரோ அவன்கிட்டப் போய் சொத்து கேளுங்க!” என்றதும், 

“என்னங்க சொல்றீங்க. அது நம்ம சுதா குழந்தைங்க” பதறினார் அன்னபாக்கியம். 

“இல்ல…” என்றார் இறுகிய குரலில்.

அந்த ஒற்றை வார்த்தை சித்தப்பாக்களுக்கும் அதிர்ச்சியே. ஏதோ வைத்தியம் பார்த்து செயற்கை முறையில் சுதாகரன் குழந்தையைத்தான்‌ அபிராமி கருவுற்றிருக்கிறாள் என்றுதான் நினைத்திருந்தனர். 

நடுங்கிய குரலில், “அப்ப யார் குழந்தை?” என்று கேட்டவர், அதிர்ச்சியோடு அபிராமியைப் பார்த்தார். 

“அவரோட குழந்தையோ என்னவோ அத்தை” என்றதும் நெஞ்சில் கைவைத்தார் அன்னபாக்கியம். எப்படி என்ற கேள்வி அவருக்குள். சித்தப்பாக்கள் பேச்சும், தயாளன் பதிலும், அபிராமி வார்த்தைகளும் சுத்தமாகப் புரியவில்லை. எண்ணங்கள் தாருமாறாக ஓடியது. மனிதமனம் தானே? ஒரு கணம் கண்டபடி யோசித்தது. 

தயாளனை நேருக்கு நேராகப் பார்த்தவள், “இந்த குழந்தை உங்களை எப்படி கூப்பிடணும். தாத்தான்னா, இல்ல அப்பான்னா? மொதல்ல நான் உங்களை எப்படி கூப்பிடணும். மாமன்னா… இல்ல..” என்று நிறுத்தியவளுக்கு அந்த வார்த்தையை சொல்லக்கூட நா கூசியது. 

“இப்ப அத்தைக்கு நான் மருமகளா இல்ல சக்களாத்தியா? உங்க மகனுக்கு பொண்டாட்டியா இல்ல சித்தியா?” அடுத்தடுத்து அவள் கேள்விகளை அடுக்க, அன்னபாக்கியத்திற்கு அவமானத்தால் தலை தட்டாமலை சுற்றியது. 

அப்பொழுதும் அசராமல் தயாளன், “ஏய்… என்ன ஓவரா பேசுற?” என்று எகிறினார். 

“கேக்கவே நாராசமா இருக்குல்ல?” என்றாள் விரக்தியாக.

“அதான் அது நடக்கலைல. ஊர் பேர் தெரியாதவன் பிள்ளையத்தானே பெத்துருக்க. எங்க சொத்துக்கு எங்க ரெத்தத்துல உருவாகுற வாரிசுதான் வேணும்னு நெனச்சுது தப்பா?”

“அதுக்குன்னு உங்க குழந்தையை பெத்துக்கச் சொல்லுவீங்களா? அசிங்கமாயில்ல? நினைக்கவே உடம்பெல்லாம் கூசுது. மக மாதிரி பாக்க வேண்டிய பொண்ண… ச்ச்சீஈஈ… நீங்க எல்லாம் மனுஷனா?” முதன் முறையாக அந்த வீட்டில் அன்னபாக்கியம் குரல் ஆங்காரமாய் வெடித்தது‌.

“ஏய், நீ என்னடீ? நானென்னமோ தப்பா நடந்துக்கிட்ட மாதிரி பேசுற. வேற எவன் குழந்தையவோ பெத்துக்கிட்டா எப்படி அது நம்ம வீட்டு வாரிசாகும்? அந்த ஹாஸ்பிடல்ல காச வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க!” என்று பொங்கியவரை அற்பமாகப் பார்த்தாள் அபிராமி. இவர் மட்டும்தான் மற்றவர்களை ஏமாற்ற வேண்டுமா? இவரை ஏமாற்றக்கூடாதா? 

இது சுதாகரனுக்கும் புதிய தகவல் தான். அவனும் அதிர்ந்து தான் அப்பாவைப் பார்த்தான். அவன் குழந்தை இல்லை என்பது குழந்தை ஜாடை வைத்தே புரிந்தது. அதற்கு வாய்ப்பு கம்மி எனத்தெரிந்து வேறொருவருடையதை பயன்படுத்தியிருக்கலாம் என்பதுதான் அவனது கணிப்பும்கூட. ஆனால் தந்தையே அதை முன்னெடுத்திருப்பார் என அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவன் தயாளனைப் பார்த்த பார்வை ஏதோ சரியில்லை என்றது. 

அபிராமி தடவிப்பார்த்த சுகுமாரன் வண்டியை நொறுக்கியவன், குழந்தை என்றும் பாராமல் அவள் முத்தம் கொடுத்துக் கொஞ்சும் குழந்தையின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவியவன், நினைத்துப் பார்க்கவே முடியாத அருவருப்பான கேடுகெட்ட செயலை செய்யத்துணிந்த தகப்பனை என்ன செய்வானோ? 

“காட்டுல வாழ்ற மிருகங்கள் முதல் தெருவுல திரியுற நாய் வரைக்கும், தன்னோட இணையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி ஏதோ ஒரு வகையில தன்னோட வலிமையையோ, திறமையையோ நிரூபிக்குது. ஆனா, மனுஷன் மட்டும் தான் ஆம்பளைங்கிற ஒரேயொரு தகுதியை மட்டுமே வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிறான். உங்க மகனுக்கு அந்த தகுதிகூட இல்ல. அது இயற்கையிலேயே வந்திருந்தா கூட, பிறவிக்குறைபாடா நெனச்சு பரிதாபப் படலாம். ஆனா, போதைக்கு அடிமையானதால வந்த குறைபாடு. போதை மறுவாழ்வு மையத்துல இவர் திருமண வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர்னு சர்டிஃபிகேட்டே கொடுத்துருக்காங்க. அதை மறச்சுதான் கல்யாணமே பண்ணிருக்கீங்க.” 

“…”

“நிலத்துல விதைக்கிற விதை வீரியமானதா இருக்கணும். ஒன்னுக்கும் ஆகாத பதற விதைச்சு ஒரு லாபமும் இல்லைங்கறதால தான் என் வயித்துல இந்த வீட்டு வாரிசு வளறக்கூடாதுன்னு நானே முடிவெடுத்தேன். என் குழந்தைக்கு அப்பா யாருன்னு எனக்கே தெரியக்கூடாது. அவன் என் குழந்தையா மட்டும்தான் இருக்கணும். உங்களுக்கு பணம் பேசியிருக்கலாம். ஆனா அநாதைக்கு ஆண்டவன் தான் துணைங்கிற மாதிரி எனக்காகவும் நல்லவங்க இருந்தாங்க!” என்றவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அங்கிருந்தவர்களை சாட்டையாய் விளாசியது.

இத்தனை நாட்களாக மனதுக்குள் புதைந்து கிடந்த ஆத்திரமும், கோபமும், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற வலியும் ஒன்றாகச் சேர்ந்து ஆவேசமாக அவளது குரலில் வெடித்தன.

தயாளனை நேருக்கு நேராகப் பார்த்தாள் அபிராமி. இப்பொழுது அவளது கண்களில் கண்ணீர் இல்லை. குற்றம்சாட்டும் குத்தீட்டி பார்வை மட்டுமே. அவள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், தாடையை இறுக்கிக்கொண்டு அவளையே பார்த்திருந்தார் தயாளன்.

“எனக்கு இனிமேல் இங்கே எந்த வேலையும் இல்லை. எனக்கு என் பிள்ளைதான் முக்கியம். இங்கே இருந்தா, என்னைக்காவது என் பிள்ளையோட உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துக்கிட்டே இருக்கணும். அவனோட கண்பார்வை திரும்ப வருமான்னு தெரியாம, அவன் முகத்தையே பார்த்து நான் தவிச்ச தவிப்பு போதும்!” என்றவள் தொண்டையடைத்து குரல் தளுதளுத்தது. 

ஒரு கணம், மருத்துவமனையில் சுயநினைவின்றி மயங்கிக்கிடந்த தன் பிஞ்சின் முகம் மனக்கண்ணில் வந்து மறைந்தது. அந்தச் சிறிய உடல் மூச்சுக்காகப் போராடிய காட்சி நினைவில் எழுந்ததும், அவளது நெஞ்சுக்குள் மீண்டும் வலி பரவியது. பிள்ளையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தபடி விறுவிறுவென வெளியேறிவிட்டாள். 

சித்தப்பாக்களுக்கும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திய பிறகு பேசிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அபிராமி அவர்களுக்கு அதற்கான அவகாசம் கொடுக்கவில்லை.

வீட்டுக்கு வந்த கையோடு சுதாகரனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாள்.

இந்த முறை இந்துமதியிடமோ, சித்தப்பாக்களிடமோ, சித்திகளிடமோ ஒரு வார்த்தைகூட ஆலோசனை கேட்கவில்லை.

இத்தனை காலமும் உறவுகளின் விருப்பங்களுக்கும் குடும்பத்தின் கௌரவத்துக்கும் இடம் கொடுத்தது போதும். தனக்காகத் துணிந்து நிற்கத் துணியாதவள், தன் பிள்ளைக்காகத் துணிந்து நின்றாள்.

அடுத்தடுத்து வந்த வழக்கு விசாரணைகளுக்கு சுதாகரனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை. தனது குறைபாடு தெரிந்த சுதாகரனுக்கு வழக்கு நிற்காது எனத்தெரியும். அதன் விளைவாக அபிராமிக்கு விவாகரத்து எளிதாகக் கிடைத்தது.

திருமண வாழ்க்கையிலிருந்து அவள் விடுபட்டுவிட்டாள். சித்தப்பாக்களுக்கு இப்போது வேறொரு கவலை முளைத்தது. அப்பா பெயர் தெரியாத குழந்தையை வைத்துக்கொண்டு, அவளுடைய எதிர்காலத்தை எப்படித் தீர்மானிப்பது?

காலம் கடந்தது. மெல்ல மெல்ல சித்திகளின் பேச்சிலும், செயலிலும் மாற்றம் தெரியத்துவங்கியது. அப்பா யாரெனத் தெரியாத குழந்தையென சாடைமாடையாகப் பேசினர். 

சாமர்த்தியமாக இவளை இந்துமதி இடத்திற்கு நகர்த்துவது புரிந்தது.  அவள்தான் உறவுகளின் உண்மை சொரூபம் அறிந்தவளாயிற்றே. அரவிந்தனும் படிப்பு காரணமாக சென்னை வர, மூன்று வயது குழந்தையோடு அவளும் சென்னை வந்துவிட்டாள். இத்தனை வருடங்களாக பிறந்து வளர்ந்த ஊரைவிட அடிக்கடி மருத்துவமனை வந்து சென்ற சென்னை அவளை இருகரம் விரித்து ஆதரித்துக்கொண்டது.

*****

பழைய நினைவுகளை அசைபோட்டதில் அவளது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. எதிரில் இருந்தவன் முகமும் இறுகிக் கசங்கியிருந்தது. அவளுக்கும் அவனுக்கும் வேண்டுமானால் சம்பந்தம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அன்று வேதனை அனுபவித்த பிஞ்சுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கிறதே. இத்தனை வருடங்கள் கழித்தும் நடந்ததை அவள் வாய்வழி கேட்டவனுக்கே நெஞ்சு கொதித்தது. நேரில் அனுபவித்தவளுக்கு எப்படி இருந்திருக்கும்.

மருத்துவமனை கேன்டீனில்தான் குருவும், அபிராமியும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். 

அவளது கை மீது இவனது கை ஆதரவாக படிந்திருந்தது. எப்பொழுது ஆதரவாகப் பற்றினான் என அவனுக்கே தெரியவில்லை. 

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளது கட்டுப்பாட்டையும் மீறி சில இடங்களில் அவள் உடைந்த பொழுதா, இல்லை… இத்தனை உறவுகள் இருந்தும் ஆதரவின்றி தவித்திருக்கிறாளே என இவன் உணர்ந்த பொழுதா எனத் தெரியவில்லை. வெறும் வார்த்தைகளில் அவளது வலிகளுக்கு மருந்திட முடியாதே! 

அப்பொழுது அபிராமி கை பேசி அழைக்க கைகைளை இயல்பாக விலக்கிக் கொணடான். அவன் ஆதரவாகப்பற்றியதையோ விலக்கிக்கொண்டதையோ உணரும் நிலையில் அவளில்லை. கைபேசி அழைப்புதான் அவளை நிகழ்வுக்கு கொண்டுவந்தது. முகத்தை அழுந்தத் துடைத்தவள், அழைப்பை ஏற்றாள். அரவிந்தன் தான் அழைத்திருந்தான். 

“அக்கா எங்க இருக்க. சக்திய நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க!” என்றதும்,

“இதோ வர்றோம்டா!” என்றவள், எழுந்து கொண்டாள்.

பிரணவுக்கான ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை முடிந்திருந்தது. சக்தியும், பிரணவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தனர். இன்றுதான் சக்தியை மட்டும் நார்மல் வார்டுக்கு மாற்றியுள்ளனர். இன்னும் பிரணவ் மருத்துவ கண்காணிப்பில் தீவிரசிகிச்சை பிரிவில் தான் இருக்கிறான். 

“சக்திய நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்களாம்!” என்றாள் அவனிடமும். 

தலையசைத்துவிட்டு அவளோடு எழுந்து கொண்டான்.

 

 

 

 

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 9

  1. Chitra Srinivasanபொதுக் கருத்துChitra Srinivasan

    முன்பே நினைத்ததுதான். ஆனாலும் படிக்கும் போதே நெஞ்சம் கணக்கிறது. அபி நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறாள். இப்போது operation உம் ஆகிவிட்டது. இனியாவது நன்றாக இருக்க வேண்டும்.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      இனிமேல் எல்லாம் நலம்தான் என நம்புவோம்...
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  2. Manju Mohanபொதுக் கருத்துManju Mohan

    Excellent..apadiye unarvagulain urukam, ...apadiye Adhuku ezhuthu kodutheetinga ..ipdiyum sila manidha jenmangal...enna sola.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      சில நேரங்களில் சில மனிதர்கள்
      சுயநலம் பிடித்தவர்கள்
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  3. Uma Raviபொதுக் கருத்துUma Ravi

    மேடம் அந்த சுதாகரனையும் திறனையும் சும்மா விடாதீர்கள்.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      கண்டிப்பா ஏதாவது செய்வோம்மா...
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  4. KAMSY_777பொதுக் கருத்துKAMSY_777

    kulanthaiku mela milakai podi podura alavuku yarala mudiyum. vasikave pathattama iruku. abi thuninchu mudivu eduththathu sari. avanga amma athuku apramavathu abi koda vanthu kulanthaya pathurukalame? inum en anga irukanum? athan puriyala. thayalan paka iruntha velaya ninachale asingama iruku. intha episode nan over ah unarchuvasapatuten. excellent writting

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      அது உண்மையிலேயே மருமகளுக சண்டையில நடந்ததும்மா...

      தொட்டில தூங்கிட்டிருந்த குழந்தை கண்ல மிளகாய்ப்பொடி போட்டாங்க. அந்தளவுக்கு வன்மம் புடிச்சவங்க இருக்காங்க...

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்