arrow_back
அன்றிலவன்(ள்) அன்றில் 2
அன்றிலவன்(ள்) chevron_right பகுதி 2 / 15

அன்றில் 2

visibility 28
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அன்றில் 2 

 

அலாரத்தின் சத்தம் கிஷோரியை எழுப்பிவிட, சோம்பலை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு வீராவைப் பார்ப்பதற்காகவே வேகமாக எழுந்தாள். சுபாஸிடம் பாக்கெட் மணியை வாங்கிக்கொண்டு, காலை ஏழு மணிக்கு முன்னதாகவே தனது ஸ்கூட்டரில் வேணியின் வீட்டை நோக்கிப் பறந்தாள்.

 

வேணி, தந்தையிடம் அப்போதுதான் இவ்வளவு சீக்கிரமாகக் கிளம்புவதற்கான காரணத்தைக் கூறியிருந்தாள்.

 

“ஹாய் அங்கிள்!” என்றாள் கிஷோரி.

 

“வாம்மா! சாப்பிட்டியா?” என்று சிரித்தவாறே கேட்டார் ஈஸ்வர்.

 

“இல்ல அங்கிள், சீக்கிரம் வெளியே போகணும். லஞ்சுக்கு இங்கே வாறேன்” என்றவள், வேணியையும் காலை உணவைத் தியாகம் செய்ய வைத்தாள்.

 

“பசிக்குது டீ” என்று முகத்தைச் சுளித்தவாறு சொன்னாள் வேணி.

 

“வீரா வீட்டுக்குப் போய் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாமா?” என்று ஸ்கூட்டரை ஓட்டியவாறே விளையாட்டாகக் கேட்டாள் கிஷோரி.

 

“உனக்கு ஒரே குசும்புதான்!”

 

இருவரும் ஸ்கூட்டரில் இல்லையென்றால், இந்நேரம் வேணி கிஷோரியை நன்றாகக் கிள்ளியிருப்பாள்.

 

வைத்தீஸ்வரன் அனுப்பிய லெகேஷன் பார்த்து, சரியான இடத்திற்கு வந்துவிட்டாள் கிஷோரி. ஆள் நடமாட்டமே இல்லாத இடமாக இருக்க, வேணிக்குச் சற்றுப் பீதியைக் கிளப்பியது.

 

ஒருமுறை வந்த இடம் சரிதானா என்று சரிபார்த்துவிட்டு, வைத்தீஸ்வரனுக்கு அழைத்து வந்துவிட்டதைத் தெரிவித்தாள். வீட்டின் இலக்கத்தைக் கூறியதுடன், சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே வருமாறும் சொல்லியிருந்தார் வைத்தீஸ்வரன்.

 

அழைப்பு மணியை அழுத்தினாள் கிஷோரி. பயில்வான் போல ஒருவன் கதவைத் திறந்தான். அது வீடுபோலவே தோன்றவில்லை. சந்திரமுகி படத்தில் வரும் அரண்மனையைப் போலவே இருந்தது.

 

கிஷோரிக்குப் பயம் ஏற்படவில்லை. உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவளது கண்கள் துருதுருவென இருந்தன.

 

“கேட்டைப் பார்த்தாலே பயமா இருக்குடீ. இப்படியே போயிடலாம்” என்று வேணி அவளது கையைப் பிடித்து இழுக்க,

 

“வா முருகேசா, உள்ளே போகலாம்” என்று வேணியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் கிஷோரி.

 

“நீ வேற! சந்திரமுகி படத்துல வடிவேலு கூட்டிட்டுப் போற மாதிரி இருக்கு!” வேணிக்கோ பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

“வேணும்னா நாம சந்திரமுகி படத்தை மறுபடியும் எடுக்கிறோம்னு நினைச்சுக்கோ!”

 

பெரிய பங்களாவைப் பார்த்தபோது, உள்ளே என்ன நடக்குமோ என்ற எண்ணம் கிஷோரிக்கு ஒரு கணம்கூட தோன்றவில்லை.

 

உள்வாசலுக்கும் வீட்டிற்கும் இடையில் சுமார் நூறு மீட்டர் தூரம் இருந்தது. வாசலில் முப்பதுக்கும் மேற்பட்ட வகையான ரோஜாச் செடிகள் பூத்துக் குலுங்கி மனதைக் கவர்ந்தன. ஊஞ்சல், மீன் தொட்டி என அனைத்தையும் பார்த்தவர்களுக்கு, அது மிகப் பெரிய வசதியான இடம் என்பது புரிந்தது.

 

‘ஒருவேளை அரசியல்வாதியின் பையனா இருப்பானோ?’

 

கால்கள் வீட்டை நோக்கி நடந்தாலும், கிஷோரியின் யோசனை மட்டும் பல திசைகளிலும் ஓடியது.

 

சாதாரணமாக அவனது வீட்டிற்குள் யாரும் நுழைய முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

 

ஒரு பெண், கிஷோரியையும் வேணியையும் உடலைச் சோதித்துப் பார்த்துவிட்டு, அவர்களது கைப்பைகளைத் துழாவினாள். அதன் பிறகு வைத்தீஸ்வரன் வீராவுக்கு அழைப்பு விடுத்து,

 

“வீரா பாய், சாமான் நஹி ஹை. சப்கோ அந்தர் பேஜூம் க்யா?” என்று கேட்டார்.

 

அவர்களிடம் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை என்று அவர் கூறியதும்,

 

“டீக் ஹை” என்று ஹிந்தியில் பதிலளித்தான் வீரா.

 

“கிஷோ, ஒரு பென்டிரைவைக் கொடுக்க வாறதுக்கு இவ்வளவு அலப்பறையா? இங்கிருந்து கிளம்பின பிறகு எனக்குப் பிரேக்ஃபாஸ்ட் வாங்கித் தரல. உனக்கு இருக்கு!” என்றாள் வேணி.

 

வேணிக்குக் காலை உணவு சாப்பிடவில்லை என்றால், அன்றைய நாளுக்கான வேலையே ஓடாது.

 

“சரிடீ” என்றாள் கிஷோரி. அவள் தலையில் அடித்துக்கொள்ளவில்லை, அவ்வளவுதான்!

 

அந்தக் காலத்து அரண்மனை, இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. எந்தப் பக்கம் போவது என்று இருவரும் விழித்துக்கொண்டிருக்க, ஒருவன் அவர்களை லிஃப்டில் அழைத்துச் சென்றான்.

 

வேணிக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் குப்பென்று வியர்த்துக் கொட்டிவிடும் போலிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள். அங்கிருந்த அனைத்தும் ஏதோ திரைப்படத்தில் காண்பதைப் போலவே இருந்தன.

 

இருக்கையின் கைப்பிடிகளில் சிங்கத்தின் தலை வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அந்த ராஜ சிம்மாசனம் அவனது தந்தைக்குப் பிறகு அவனுக்கு மட்டுமே உரித்தானது. அதற்காக அவர்கள் ஒன்றும் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

 

காலுக்கு மேல் கால் போட்டபடி, முழுவதும் கறுப்பு நிற உடையில் அமர்ந்திருந்தான் வீரா. சட்டையில் கடைசி இரண்டு பொத்தான்களை மட்டுமே போட்டிருந்தவன், பெண்கள் இருவரையும் கண்டதும் மேலிருந்த இரண்டு பொத்தான்களையும் நாசுக்காகப் போட்டுக்கொண்டான்.

 

அவனைச் சுற்றிப் பத்து வேலையாட்கள் நின்றுகொண்டிருந்தனர்.

 

அவனைப் பார்த்ததும் லேசாக வாயைப் பிளந்த கிஷோரி, எச்சிலை விழுங்கினாள். இவன் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறான் என்ற பொறாமை வேறு அவளுக்குத் தொற்றிக்கொண்டது.

 

பழக்கதோஷத்தில் தனது கணீர் குரலில் ஹிந்தியில் ஆரம்பித்தான் வீரா.

 

“ஆஜாவோ, பைட் ஜாவோ!”

 

அவர்களை வரவேற்று அமரச் சொன்னான். கிஷோரிக்குத்தான் ஹிந்தி புரியவில்லை என்றால், வேணி அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

‘ஹிந்திப் பட ஹீரோ மாதிரி இருக்காரே!’

 

பென்டிரைவில் பார்த்த புகைப்படங்களை விட நேரில் மிகவும் அழகாக இருந்தவனைப் பார்த்து வாயைப் பிளந்திருந்தாள் வேணி.

 

கிஷோரிக்கு ஹிந்தி தெரியவில்லை என்பதற்காகப் பின்வாங்க விருப்பமில்லை.

 

“கேன் யூ ஸ்பீக் இங்கிலீஷ்?” என்று மலர்ந்த முகத்துடன் கேட்டாள்.

 

“யெஸ், ஐ கேன். நீங்க தமிழா?” என்று அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் வீரா.

 

“ஆமா” என்றாள் கிஷோரி.

 

“உட்காருங்க” என்றவன், அவர்களுக்கான இருக்கையைக் காட்டினான். இருவரும் அமர்ந்துகொண்டனர்.

 

பென்டிரைவை எடுத்து அவனிடம் நீட்டினாள் கிஷோரி.

 

“அன்னைக்கு ட்ரெயின்ல இடிச்சப்போ உங்க பென்டிரைவை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க”

 

அவள் கூறியதும் தலையை ஆமென அசைத்தான்.

 

“தேங்க்யூ… மிஸ், உங்க பேரு?” என்று கேட்டான் வீரா. அவனது முகத்தில் சிரிப்பே இல்லை.

 

“கிஷோரி, வேணி” என்று தன்னைச் சுட்டிக்காட்டியவள், வேணியையும் அறிமுகப்படுத்தினாள்.

 

கிஷோரியின் பென்டிரைவும் வீராவின் பென்டிரைவும் ஒரே மாதிரியானவை.

 

“தேங்க்ஸ், மிஸ் கிஷோரி அண்ட் வேணி. யூ ஆர் சச் போல்ட் கேர்ள்ஸ்” என்று பாராட்டினான் வீரா.

 

வேணி வீராவைப் பார்த்துப் புன்னகைக்க, கிஷோரி,

 

“தேங்க்ஸ், மிஸ்டர் வீரா” என்றாள்.

 

தனது பெயரை அவள் கூறியதும் கோபப்படாமல் ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான் வீரா. அவனைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவன் கண்ணிமைத்ததும் அவர்கள் அமைதியானார்கள்.

 

“என்னோட பென்டிரைவை ஆன் பண்ணினீங்களா?”

 

அதில் சேமித்து வைத்திருந்த ரகசியங்களை இவர்கள் பார்த்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில்தான் கேட்டிருந்தான்.

 

“பென்டிரைவை ஆன் பண்ணினதும், அது என்னோட பென்டிரைவ் இல்லன்னு புரிஞ்சிடுச்சு. வைத்தீஸ்வரன் ஐயாவோட நம்பரை எடுத்துட்டு, அப்படியே ஆஃப் பண்ணிட்டேன். அடுத்தவங்களோட பர்சனல் விஷயங்களை நோண்டுறது அநாகரிகம்”

 

அவன் முன்னிலையில் கிஷோரி பேசும் வார்த்தைகள் வேணியின் காதில் விழாமல் இருக்குமா? வேணி அந்த நேரத்தில் கிஷோரியை ஒரு பார்வை பார்த்தாள்.

 

அவனுடைய எத்தனை புகைப்படங்களைப் பார்த்து ரசித்தாள்! எத்தனை கருத்துகளை வாய்விட்டுக் கூறினாள்!

 

‘அடிப்பாவி!’

 

வேணி லேசாகக் கிஷோரியைப் பார்த்து இருமினாள். அதைக் கவனித்த வீரா, தனது வேலையாட்களுக்குத் தண்ணீர் கொண்டு வருமாறு கண்ணைக் காட்டினான்.

 

கிஷோரி தயங்கித் தயங்கி,

 

“நீங்க என்ன பண்றீங்க?” என்று ஒருவழியாகக் கேட்டுவிட்டாள்.

 

அதற்குள் வேலையாட்கள் பெரிய தட்டில் தண்ணீர், காஃபி, பிளாக் காஃபி, டீ, ஜூஸ் என வரிசையாக அடுக்கி இருவருக்கும் நீட்டினர்.

 

கிஷோரி முதலில் கேட்ட கேள்வி அப்படியே காற்றில் கரைந்தது.

 

இருவரும் தங்களுக்குப் பிடித்தமானவற்றை எடுத்துக்கொண்டனர்.

 

கிஷோரி காஃபியைப் பருகியவாறே,

 

“நாங்க யூடியூப் சேனல் வச்சிருக்கோம்” என்றாள்.

 

ஹனிபீஸ் யூடியூப் சேனல் மக்களிடம் பிரபலமானது என்பதைச் சொல்லாமல் சொன்னவள்,

 

“எங்க சேனலுக்கு ஒரு இன்டர்வியூ கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள்.

 

எங்கு சென்றாலும் உள்ளடக்கத்தைத் தேடுவதுதான் அவளது நோக்கம்.

 

வீராவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்க முயன்றான். ஆனாலும் முடியவில்லை. நன்றாகவே புன்னகைத்தான். வைத்தீஸ்வரனுக்குமே சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

 

“அம்மா, நீங்க நினைக்கிற மாதிரி ஆளு எங்க வீரா பாய் இல்ல. நாங்க பண்றது வேற மாதிரி வேலை!”

 

வைத்தீஸ்வரன் கூறிய பதில் தெளிவற்றதாகத் தோன்றியது.

 

“நிறைய சேனல்ல பாய் இன்டர்வியூ கேட்டு இருக்காங்க. பாய் இதுவரைக்கும் ஒரு சேனலுக்குக்கூட இன்டர்வியூ கொடுத்ததே கிடையாது”

 

“அங்கிள், ஏன் அப்படி?” என்று குழப்பத்துடன் கேட்டாள் கிஷோரி.

 

“ஏன்னா, நாங்க பண்றது சட்டத்துக்கோ போலீஸுக்கோ பிடிக்காது”

 

வைத்தீஸ்வரன் இப்படிக் கூறியதும்தான் கிஷோரிக்குப் பட்டென்று புரிந்தது. ரௌடித்தனம் செய்வதை இப்படியெல்லாம் சுற்றி வளைத்துக் கூறுகிறார் என்று நினைத்துக்கொண்டாள்.

 

கிஷோரி புரிந்துகொண்டதை வீராவும் உணர்ந்தான்.

 

தனது தனிப்பட்ட கைபேசி எண்ணைக் கொண்ட விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான். எதற்காகக் கொடுக்கிறான் என்பது புரியாமல் அவனைப் பார்த்தாள் கிஷோரி. ஒரு நிமிடம், துவாரகேஷைப் போலத்தான் இவனும் இருக்கிறானோ என்று நினைக்கத் தோன்றியது.

 

“கேர்ள்ஸ்க்கு ஏதாவது ப்ராப்ளம்னா எனக்குக் கால் பண்ணுங்க. நான் அந்த இடத்துல கண்டிப்பா நிப்பேன்”

 

வீரா இதைக் கூறிய பிறகுதான் அவளது மனம் லேசானது.

 

அவனது தோற்றத்தால் பெண்களின் மனதில் ஆழமாகப் பதிந்தவன், இப்போது அவன் கூறிய வார்த்தைகளால் மேலும் வேரூன்றினான். இம்மியளவுகூடத் தயங்காமல் விசிட்டிங் கார்டை எடுத்துக்கொண்டாள் கிஷோரி.

 

வேணியும் கிஷோரியும் அங்கிருந்து ஸ்டூடியோவுக்குக் கிளம்பத் தயாரானார்கள்.

 

“எனிவேஸ், தேங்க்ஸ்! எங்க வீரா பாய் யாருன்னு தெரியாம பென்டிரைவ் கொடுக்க வந்ததுக்கு” என்றான் வைத்தீஸ்வரன்.

 

அவரைப் பார்த்து இரு பெண்களும் சிரித்தனர்.

 

கிஷோரியின் மனதிலோ,

 

‘உங்க வீரா பாய் யாருன்னு தெரிஞ்சுக்கத்தானே நான் இங்கே வந்ததே!’

 

“பட், கேர்ள்ஸ் தனியா வெளியே போறதை அவாய்ட் பண்ணுங்க”

 

இதிலிருந்தே அவன் பெண்களிடம் குழைந்து குழைந்து பேசும் சுபாவம் கொண்டவன் அல்ல என்பது இருவருக்கும் நன்றாகவே புரிந்தது.

 

“வீரா, யூ ஆர் கரெக்ட். பட், நான் எதுக்கும் பயப்படுறதில்ல” என்று முகத்தை இறுக்கிக்கொண்டு, வார்த்தைகளைக் கொஞ்சம் தீவிரப்படுத்திக் கூறினாள் கிஷோரி.

 

வேறு எதுவும் கூறாமல், ‘ம்’ என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான் வீரா.

 

அவள் செல்லும் பாதையையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோரி தன்னைத் திரும்பிப் பார்க்கிறாளா இல்லையா என்பதையும் கவனித்துக்கொண்டிருந்தான்.

 

கிஷோரியின் அழகும், துணிச்சலும், துருதுருப்பான பேச்சும் அவனைச் சற்றே இலகுவாக்கியிருந்தன.

 

‘அழகை விட, திமிரும் கொழுப்பும் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு!’

 

இருவரும் செல்வதைப் பார்த்தவாறு தலையசைத்த வீரா,

 

“ப்ச்!” என்று முணுமுணுத்தான்.

 

வீராவின் செயலை வைத்தீஸ்வரன் நன்றாகவே கவனித்துக்கொண்டிருந்தார்.

 

“வீரா பாய், ஆப்கே பாஸ் கொய் ஐடியா ஹை? முஜே பதாவ். மே ராஜிமா சே பாத் கரூங்கா” என்று கிஷோரியை அவன் பார்த்த விதத்தை வைத்துத் தனது எண்ணத்தை ஹிந்தியில் கேட்டார் வைத்தீஸ்வரன். வீராவின் தாயிடம் பேசலாமா என்பதுதான் அவர் கேட்க வந்த விஷயம்.

 

தனது குழுவினருடன் பெரும்பாலும் ஹிந்தியில்தான் பேசுவான் வீரா.

 

“வைத்தி, ஆப் பீனா” என்று பதிலளித்தான்.

 

‘வைத்தி, நீங்க வேற!’ என்று சொல்வதைப்போல, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறியிருந்தான்.

 

 

******

 

ஹனிபீஸ் ஸ்டூடியோவில், வேணியின் தந்தை ஈஸ்வர் அவர்களுக்கான மதிய உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.

 

வேணி ஸ்கிரிப்ட் டைப் செய்வதற்காகப் பென்டிரைவை எடுத்து மடிக்கணினியில் செருகினாள். அடுத்த நொடியே அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

 

“அடியே கிஷோரி! மறுபடியும் வீராவோட பென்டிரைவ் நம்மகிட்ட இருக்கு!” என்று பற்களைக் கடித்துக்கொண்டு கூறினாள் வேணி.

 

“அச்சோ! என்னடீ சொல்ற?” என்று தலையில் கைவைத்தாள் கிஷோரி.

 

“நீ வேணும்னே பண்ணிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும். திரும்பவும் அவன் வீட்டுக்கு என்னைக் கூப்பிடாத. நான் வரமாட்டேன்” என்று முடிவாகக் கூறிய வேணி, தனது கைபேசியில் ஸ்கிரிப்டைப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

 

கிஷோரி ஒவ்வொரு காட்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க, வேணி அவற்றைக் கைபேசியில் தட்டச்சு செய்தாள்.

 

மாலை வேளையில் படப்பிடிப்பில் நடிப்பதற்கான ஆட்களும் வந்திருந்தனர். அவர்களை அழைத்துக்கொண்டு ஸ்டூடியோவுக்கு அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்குச் சென்றாள் கிஷோரி.

 

கேமராவை எடுத்துக்கொண்டு வளைந்து நெளிந்து காட்சிகளைப் பதிவு செய்யும் கிஷோரியை வேடிக்கை பார்த்த ஆண்களுக்குக்கூடப் பொறாமையாக இருந்தது.

 

ஒவ்வொரு முக்கியமான காட்சியையும் எடுப்பதற்காக ஓடிக்கொண்டும் துள்ளிக் குதித்துக்கொண்டும் இருப்பாள். சில நேரங்களில் தரையில் அமர்ந்துகூட நேர்த்தியாகப் படம்பிடிப்பாள்.

 

ஒரு காட்சி அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால், பத்துக்கும் மேற்பட்ட முறை எடுக்கத் தயங்கமாட்டாள்.

 

இப்போதும் அப்படித்தான் நடந்தது.

 

“கதிர் அண்ணா, உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்”

 

தேவைப்பட்டால் அவ்வப்போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவாள் கிஷோரி.

 

பதினைந்து முறைகளுக்கும் மேலாகப் படம்பிடித்த பிறகுதான் அந்தக் காட்சியை முடித்திருந்தாள்.

 

“அண்ணா, ஒரு கேர்ளை சைட் அடிச்சுக்கிட்டே, அப்படியே ஒரு குட்டி ரொமான்டிக் லுக் கொடுக்கணும். அவளைத்தான் பார்க்கணும். ஆனா, அவ உங்களைப் பார்க்கும்போது, நீங்க அவளைப் பார்க்காத மாதிரி இருக்கணும். அப்படி ஒரு லுக் வேணும்”

 

கிஷோரி,

 

“ஓகே, டேக்!” என்று கூறினாள்.

 

கதிர் அவள் சொன்னதைப் போலவே நடித்தான்.

 

இடையில் கிஷோரி,

 

“வேணி!” என்று சத்தமிட்டாள்.

 

ஏற்கெனவே பேசி வைத்திருந்தபடி, அந்தக் காட்சியின் நடுவில் நந்தியைப் போல ஒரு பாட்டி குறுக்கே வந்து சிரிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தாள். அதேபோல அந்தப் பாட்டியும் நடித்து அசத்தியிருந்தார்.

 

அந்தக் காட்சி பிரமாதமாகப் படமாக்கப்பட்டது.

 

கோயிலில் சுவாமியை வணங்கிக்கொண்டிருந்த பெண்ணை ஓர் ஆண்மகன் காதல் உணர்வோடு பார்த்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வழியில் குறுக்கே வந்த வயதான மூதாட்டி, தன்னிடமிருந்த ஓரிரு பற்களைக் காட்டிச் சிரித்தார்.

 

அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தவர்கள்கூட வாய்விட்டுச் சிரித்துவிட்டுச் சென்றனர்.

 

அன்றைய நாளுக்கான படப்பிடிப்பு முடிந்தது.

 

சுபாஸின் தங்கையும், கிஷோரியின் அத்தையுமான அமுதா, கிஷோரியைக் கண்டதும் அவளுடன் பேசுவதற்காகக் காத்திருந்தார்.

 

அவரை அடையாளம் கண்டுகொண்ட கிஷோரி,

 

“ஹாய், அமுதா ஆன்ட்டி!” என்றாள்.

 

தெரிந்தவர்களைப் பார்த்தும் பேசவில்லை என்றால் அதற்கும் குறை சொல்வார்களே! அதனால் யாரைக் கண்டாலும் பேசிவிடுவாள்.

 

“அப்புறம், எப்படி இருக்கம்மா?” என்று அவர் நலம் விசாரிக்க, பதிலுக்கு இவளும் விசாரித்தாள்.

 

“அப்புறம், எப்போம்மா?” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டார் அமுதா.

 

அவரையே உற்றுப் பார்த்தாள் கிஷோரி.

 

“என்ன கேக்குறீங்க? எனக்குப் புரியல” என்று தீவிரமானாள்.

 

“அதான்மா, அது எப்போ?” என்று அமுதா லேசாகச் சிரித்துக் கிசுகிசுப்பாகக் கேட்டார்.

 

“எதை ஆன்ட்டி சொல்றீங்க?” என்று கேட்டவளுக்கு எரிச்சலாகிவிட்டது.

 

“என்னம்மா நீ! இருபத்தைஞ்சு வயசு ஆகுது. உங்க அப்பா கல்யாணம் எதுவும் பேசலையா? எப்போ கல்யாணம்?”

 

இதை முதலிலேயே கேட்டிருக்கலாமே!

 

‘பூமர் ஆன்ட்டி!’

 

கிஷோரியின் மனதில் எழுந்த எரிச்சலின் வாசனை வேணியின் மூக்கைக்கூடச் சென்றடைந்தது.

 

“இல்ல ஆன்ட்டி, எங்க அப்பாவுக்குச் செகண்ட் மேரேஜ் பண்ணிக்க விருப்பம் இல்ல” என்று வேண்டுமென்றே நக்கலாகக் கூறினாள் கிஷோரி.

 

அமுதா அவளை ஒருமுறை முறைத்துவிட்டு,

 

“நான் உன்னைக் கேட்டேன்” என்று சலிப்புடன் கூறினார்.

 

“அதைப் பத்தி நான் இன்னும் யோசிக்கல ஆன்ட்டி. நான் பண்றதுக்கு இன்னும் நிறைய அச்சீவ்மென்ட்ஸ் இருக்கு”

 

அவரிடமிருந்து நழுவினால் போதும் என்றிருந்தது கிஷோரிக்கு.

 

ஆனால், அமுதா அவளை விடுவதாக இல்லை.

 

“இப்படியே இருந்தா அறுபதாம் கல்யாணம்தான் நடக்கும். எங்கிட்ட அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடான்னு ரகம் ரகமா வெளிநாட்டு மாப்பிள்ளைங்க இருக்காங்க. நீ ஊன்னு சொன்னா, அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை வச்சிடலாம். நீ கேமராவைத் தூக்கிட்டு சுத்த வேண்டாம். கை நிறைய சம்பாதிக்கிறாங்க. கழுத்து வரைக்கும் நகை போட்டுக்கலாம்!”

 

அவரது கண்கள் மின்னுவதற்குக் காரணம், கிடைக்கப்போகும் தரகர் பணம்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

 

“அப்படியா ஆன்ட்டி? ரொம்ப சந்தோஷம். உங்க பொண்ணுக்கே நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருங்க” என்று முகத்துக்கு நேராகப் பேசிவிட்டு நடையைக் கட்டினாள் கிஷோரி.

 

முழுவதையும் வேடிக்கை பார்த்த வேணி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

 

“சிரிக்காதடீ! கோபமா வருது. அவங்க பேசும்போது கொஞ்சம்கூட எனக்குச் சப்போர்ட் பண்ணவே இல்ல”

 

“எதுக்கு? உனக்கு அமெரிக்கா மாப்பிள்ளையைப் பேசிட்டு, எனக்குக் கொரியா மாப்பிள்ளையைப் பேசவா?”

 

வேணி கூற, கிஷோரியின் இதழ்களிலும் புன்னகை மலர்ந்தது.

 

ஊபர் வாகனத்தில் ஏறியதும், வீரா கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்தாள் கிஷோரி. அதிலிருந்த அவனது கைபேசி எண்ணை, அவனுடைய பெயரிலேயே பதிவு செய்தாள்.

 

அடுத்த நொடியே அவனது எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

 

தனது திட்டமெல்லாம் நடக்கிறது என்று நினைத்தவளுக்கு, அவனது அழைப்பை ஏற்றுக் காதில் வைத்ததும் இதயம் படபடத்தது.

 

என்ன கேட்பானோ?

 

********

 

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் அன்பர்களே 🙏❤️

அடுத்த அத்தியாயம்

அன்றில் 3

அன்றில் – 03 இதழைச் சரிசெய்துவிட்டு, தொண்டையைச் செருமி அழைப்பை அழுத்திக் காதில் வைத்தாள். “கிஷோரி!” என்றான் அவன் பதற்றத்துடன். வேண்டுமென்றே அவள், “யாரு?” என்றுவிட்டு, உதட்டோரம் கள்ளச்சிரிப்புடன் நுனி நாக்கைக் கடித்துக்கொண்டு ஒற்றைக் கண்ணை மூடி வெட்கித்தாள். வீரா தன்னைத்தானே யாரிடமும் அறிமுகப்படுத்தியதே இல்லை. இதுதான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்