arrow_back
அன்றிலவன்(ள்) அன்றில் 6
அன்றிலவன்(ள்) chevron_right பகுதி 6 / 15

அன்றில் 6

visibility 18
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அன்றில் 6

 

வீராவின் அருகில் வந்தவள் சத்தமாக, “வீரா” எனக் கத்தினாள். அவனுடைய தோள்பட்டையை நோக்கி வந்த கத்தியைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒற்றைக்கையால் வேறு பக்கம் தள்ளினாள். வீராவை தாக்க வந்தவன், கிஷோரி பிடித்திருந்த கத்தியை வேகமாக உருவி இழுத்தான்.

 

“அப்பா…” என்று கத்தியிருந்தாள். கத்தியை உருவிய வேகத்தில் அவளது கை நன்றாகக் கிழிந்து, செங்குருதி சரசரவென தரையில் சொட்டியது.

 

கிஷோரியின் செய்கையைப் பார்த்தவனுக்கு, அவள் முன்பு கூற முனைந்தது இப்பொழுதுதான் புரிந்தது. தனக்கு நேர வேண்டிய தாக்குதலை இவள் கையில் வாங்கிக் கொண்டாளே என நினைக்க, வீராவின் முதுகை நோக்கி வந்த எதிரி ஏவிய அடியாள் இரும்பு ராடை எடுத்துக்கொண்டு வர, “வீரபாய்” என்று வைத்தியும் ஒரு புறம் கத்தினார்.

 

வீராவை முதுகில் குத்த வந்தவனைக் கழுத்தோடு பிடித்து, அவன் முன்பக்கமாகத் திருப்பி, அவனது அடி வயிற்றில் வீராவின் கையால் நாடி நரம்புகள் தெறிக்க ஒரே குத்து விட்டான். அவன் சர்வநாடியும் ஒடுங்கிப்போனது.

 

நடந்த கலவரத்தில் புதிதாகத் திறந்த ஷாப்பிங் மால் போர்க்களமானது. பொருத்தப்பட்ட கண்ணாடிகள் எல்லாம் சில்லறையாய் நொறுங்கின. வாடிக்கையாளர்கள் சிலர் திறந்திருக்கும் ஒவ்வொரு கடைகளுக்குள்ளும் புகுந்து ஒளிந்து கொண்டனர். மேலும் பலர் வந்த வழியே ஓடினர்.

 

தன்னுடைய அடியாட்களைச் சுற்றிப் பார்த்தவன் பற்களைக் கடித்துக் கொண்டான். ஒருவனும் தன்னிலையில் இல்லை. அவர்களையும் சேர்த்து பாதுகாக்கும் நிலையில் நின்றிருந்தான் அவன்.

 

கையில் இரத்தம் சொட்டினாலும் கிஷோரியின் பார்வை வீராவை விட்டுத் தப்பவே இல்லை. வீரா, வைத்திக்கு கண்ணைக் காட்டினான். கிஷோரியை அழைத்துச் செல்லக் கூறி, கிஷோரி ஒரு அடியேனும் நகர்ந்தாள்தானே!

 

வேணியும் மற்ற மூன்று பெண்களும் ஆளுக்கு ஒரு கடையில் ஒளிந்து கொண்டனர். வேணியின் மனம் முழுவதும் கிஷோரியின் இடத்தில்தான் இருந்தது. வேணி முடியாத பட்சத்தில் கிஷோரிக்கு அழைப்பு விடுக்க, அவளோ தனது ஹேண்ட்பேக்கை இழந்திருந்தாள்.

 

வேணி கீழே விட்ட கேமராவை கிஷோரி எடுத்து, வலது கை தூக்க முடியாத நிலையிலும் இடது கையால் நடக்கும் சண்டையை ஷூட் செய்து கொண்டிருந்தாள். வைத்தி எத்தனையோ முறை அவளை அழைத்துவிட்டார். மருத்துவமனைக்குச் செல்ல, அவள் வந்த பாடே இல்லை. தனது தோழிகள் இல்லாமல் வெளியே வரமாட்டேன் என்று ஒற்றைப் பிடியில் இருந்தாள்.

 

நான்கு திசையில் இருந்தும் நால்வர் வீராவை அட்டாக் செய்ய, மேலும் கிஷோரி விழிகள் அகல அதிர்ந்து வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அருகில் நால்வரும் துப்பாக்கி, கத்தி, கோடாரி என ஒவ்வொரு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரே நேரத்தில் வீராவின் அருகில் வர, அருகில் வந்த ஒருவனின் முழங்கையைத் தனது காலால் தட்டி துப்பாக்கியைக் கைப்பற்றினான். அவ்வளவுதான், இரண்டு பேர் பின்னடைந்தனர். துப்பாக்கியை லோட் செய்தவன் முன்னே வந்த இருவரையும் முட்டிக்குக் கீழே சுட்டிருந்தான்.

 

வைத்தியிடம் காரை ஸ்டார்ட் செய்யுமாறு கூறிவிட்டு கிஷோரியின் கையைப் பற்றி இழுக்க, “நான் வரல, நீங்க போங்க. என் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க.” ரத்தம் வழிந்தோட, அவள் கிறங்கிய நிலையில்தான் இருந்தாள்.

 

“அவங்க அவங்க வீட்டுக்கு பத்திரமா போய் சேருவாங்க. நீ வா” என்று கையை நீட்டி அழைக்க, அவனிடம் அவள் கையை நீட்டியவள் மயங்கி சரிந்தாள்.

 

அவனுக்கு சரிப்பட்டு வரவில்லை. நேரம் செல்லச் செல்ல அவளுக்கு நல்லது இல்லை என்று உணர்ந்தவன், அவளது இடது கையைப் பற்றியவாறு இடையோடு தனது தோளில் தூக்கி வைத்து வேகமாக ஓடிச் சென்று கிஷோரியை காரில் வைத்தான்.

 

“ஹாஸ்பிடலுக்கு ஸ்பீடா போங்க வைத்தி” என்றான் பதற்றமாக.

 

அவனுடைய கர்சிப்பை எடுத்து காயம்பட்ட கையில் கட்டினான். மயக்கத்தில் இருப்பவளைக் கன்னத்தைத் தட்டி எழுப்ப, அவள் எழும்பவே இல்லை.

 

“ஏய் கண்ணைத் தெற” பயத்தில் அவள் கண்களைத் திறந்து பார்த்தான்.

 

“கிஷோரி!” இவளுக்கு எதுமாகிடுமோ என அவனது வியர்வைத் துளிகள் சிந்தியது.

 

“இங்க பாரு, ஏய்” இவள் கண் விழிக்காமல் இருக்க, இவனுக்குக் கோபமும் பயமும் சேர்ந்து வந்தது.

 

வைத்திக்கும் கவலைதான் கிஷோரியின் நிலையைப் பார்த்து. “நம்ம பாடிகார்ட்ஸ் எல்லாம் தூக்கிட்டு புது ஆள்கள் இறக்கணும்” வண்டி செலுத்தியவாறே வைத்தி கூற,

 

“வைத்தி, இப்ப எதுவுமே பேச வேண்டாம். சீக்கிரம் ஹாஸ்பிடல் போங்க.” இப்பொழுது வீராவின் நோக்கம் கிஷோரியை வைத்தியசாலைக்குச் சேர்ப்பது மட்டும்தான்.

 

மருத்துவமனைக்கு வந்தாயிற்று. நடந்தவற்றைக் கூற, போலீஸில் கேஸ் போடச் சொல்லி இருந்தனர்.

 

“நீங்க பயம் இல்லாம ட்ரீட்மெண்ட் பாருங்க. அந்த பொண்ணோட அப்பா போலீஸ்தான்” என்று வீரா கூற, டாக்டர் பயமின்றி ட்ரீட்மெண்ட் வேலைகளை ஆரம்பித்தார்.

 

வீட்டிலிருந்த ராஜேஸ்வரி டிவியில் ஓடும் நியூஸைப் பார்த்து கதி கலங்கிப் போயிருந்தார். மகனுக்கு என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ என மனம் துடித்தது.

 

வைத்திக்கு அழைப்பு விடுத்து நடந்தவற்றையெல்லாம் கூற, ராஜிமா தனது மகனுக்கு எதுவும் நடக்கவில்லை என்று நிதானம் ஆனாலும், யார் பெற்ற பிள்ளையோ தன் பிள்ளையைக் காப்பாற்றி இருக்கிறாள். நேரில் சென்று பார்க்க வேண்டுமென்று ஒற்றைப் பிடிவாதத்தில் அவரது வேலையாட்களோடு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தார்.

 

அவ்வேளை வீரா மட்டும் தனியே அவசர விஷயமாக வெளியே சென்று இருந்தான்.

 

மகளின் நிலை கேள்விப்பட்டு சுபாஸ் அலறி அடித்து மருத்துவமனைக்கு வந்திருந்தார். பொறுமை இழந்தவர் சிகிச்சை நடக்கும் அறைக்குள் காவல் உடையோடு சென்றார்.

 

மருத்துவர் கிஷோரிக்கு அதிக இரத்த இழப்பும், கத்தி சற்று ஆழமாகப் பதிந்திருந்ததையும் கூறினார். மற்றபடி கிஷோரிக்கு ஒன்றுமில்லை. இரண்டு வாரங்களில் தேறிடுவாளென சுபாஸிடம் கூறினார்.

 

மருத்துவர் கொஞ்சம் நல்லவிதமாகக் கூறும் வரை சுபாஸிடம் உயிரே இருக்கவில்லை. நிம்மதியானவர், மருத்துவரிடம் சம்பவம் நடந்த இடத்தைக் காண வேண்டுமெனக் கூறி அவசரமாகக் கிளம்பி இருந்தார்.

 

வெளியே சென்ற வீரா மீண்டும் மருத்துவமனைக்கு வர, தாயைக் கண்டவனுக்குத் திகைப்பு. எல்லாம் இவருடைய வேலைதானே என்று வைத்தியை ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்தான்.

 

ராஜேஸ்வரிக்கு இருக்கும் கோபமோ வீராவைக் கன்னத்தில் அறையும் அளவிற்கு.

 

கிஷோரி இப்போது பார்க்குமாறு நர்ஸ் வெளியே வந்து கூற, வீரா அசைந்தபாடில்லை. தாயின் முறைப்பிற்காக அவன் மட்டும் உள்ளேச் சென்றான்.

 

கிஷோரி கண்விழித்ததே வீராவின் முகத்தில்தான். அவளுக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தாலும் வீராவைப் பார்த்து, “உங்களுக்கு ஒன்னும் ஆகலையே வீரா?” என்று கேட்க,

 

தன்னால்தான் அவளுக்கு இந்த நிலைமை என்று, “உன்னை யாரு என்னைய காப்பாத்த சொன்னா?” என்று அதட்டிக் கேட்டிருந்தான்.

 

“புடிக்கலைன்னா உங்கள வெட்டி இருப்பாங்க வீரா, அதான்” அவள் பொறுமையாகக் கூற, இவனுக்குத்தான் அது இல்லாமலே இருந்தது.

 

“வெட்டினா வெட்டிட்டுப் போறான் உனக்கு என்ன? உன் வேலைய பார்த்துட்டு நீ போயிருக்கணும். உனக்கு இப்ப இது தேவைதான்!” அவன் பேசுவது சத்தமாகவே வெளியே கேட்டது.

 

ராஜிமா வைத்தியின் உதவியுடன் உள்ளே வந்தார். கிஷோரியைப் பார்த்த மறுகணம் கையெடுத்து கும்பிட்டிருந்தார். அத்தோடு மகனைப் பார்த்து முறைத்தவர், “நீ இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின அவ்வளவுதான்!” என்று எச்சரித்திருந்தார்.

 

கிஷோரி, இவர்தான் வீராவின் தாய் என்பதைப் புரிந்து கொண்டாள்.

 

கண்கள் கலங்கிய நிலையில் கிஷோரியின் தலையை வருடிய ராஜிமா, “ரொம்ப வலிக்குதாம்மா?” என்று கேட்டது மட்டும்தான், கிஷோரியின் கண்களும் கலங்கியது.

 

“இல்லமா” என்றாள் அவள்.

 

“என் உசுரையே காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றிமா” என்று ராஜிமா மனமுருகிக் கூற, கிஷோரி வீராவைப் பார்த்தாள். அவன் எந்தவித உணர்வும் அற்று இருந்தான்.

 

மீண்டும் ராஜிமா, “உனக்கு சரியாகற வரைக்கும் நான் உன்னை பார்த்துக்கிறேன். எங்க வீட்டுக்கு நீ வந்துரு” என்றிட, கிஷோரிக்கு பதிலே வரவில்லை. என்ன கூறுவதென விழித்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் அமைதியாய் இருப்பதைப் பார்த்து, “உங்க அம்மா அப்பா விட மாட்டாங்கன்னு யோசிக்கிறியா? நான் வேணும்னா அம்மா அப்பாக்கிட்ட பேசவா?”

 

ராஜிமாவின் அக்கறையில் இளகியவள், “அப்பா மட்டும்தான் இருக்காங்க. விட மாட்டாங்க அம்மா” தன்னுடைய தாயும் இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது.

 

இதனைக் கேட்ட ராஜிமாவிற்கு மேலும் வருத்தமானது. வீரா கிஷோரின் தகவல்களை முன்னதாகவே அறிந்திருந்தான். அதனால் இப்பொழுது எந்தவித உணர்வையும் வெளிக்காட்டவில்லை.

 

“அம்மா கிளம்பலாமா?” என்று வீரா கேட்க,

 

ராஜிமாவோ பற்களைக் கடித்துக்கொண்டு வீராவை முறைத்தார். தன்னால் இவளுக்கு இப்படி நேர்ந்ததென்று கவலையே இல்லாமல் இருக்கிறானே என்று இருந்தது.

 

“உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா நீ கௌளம்பு. நான் வைத்தியோட வரேன்.” பட்டென்று கூற, வீராவால் எதுவும் செய்ய முடியவில்லை.

 

கிஷோரிக்கு கையில் கட்டு போட்டிருக்க, ராஜிமா தனக்கு நிற்க முடியாத நிலையிலும் எழுந்து நின்று கிஷோரிக்கு உணவை ஊட்டி விட, அந்த நேரத்தில் சரியாக சுபாஸ் உள்ளே வந்தார்.

 

கிஷோரியை ராஜிமா கவனித்துக் கொள்வதைப் பார்த்து, அவரின் மனைவி ராகவி இருந்தால் இப்படித்தானே கவனித்து இருப்பாளென நினைக்கும்போது கவலையானது.

 

வீட்டுக்கு மகளை அழைத்து வந்தாலும் அவளைப் பராமரிக்க யாரும் இல்லை என்றொரு கவலை அவர் மனதைத் தொற்றிக் கொண்டே இருந்தது. பெண் பிள்ளை வேறு, எவ்வளவு சிரமங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தந்தையிடம் கூற முடியுமா? கூற முடியாததைக் கூட அவள் கூறி இருந்தாலே, அவள் பூப்பெய்தியதைக் கூட முதலில் தந்தையிடம்தான் கூறினாள்.

 

மகிழ்வான தருணம் என்றாலும் மகளுக்கு எப்படி புத்திமதி கூற வேண்டுமெனக் கூட தெரியாத நிலையில் தடுமாறினார் மனிதர். அனைத்தையும் நினைத்துப் பார்க்கையில் இப்பொழுதும் சுபாஸின் கண்கள் மிரண்டது.

 

சுபாஸை ராஜிமாவைப் பார்த்து சிரித்துவிட்டு, “கிஷோமா, டாக்டர் உன்னை டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. பட் நான் உன்னைய ஒரு ரெண்டு நாளைக்கு ஹாஸ்பிடலையே வச்சு பார்க்கலாமான்னு கேட்டு இருக்கேன்.”

 

“சரிப்பா” என்றாள். மறுவார்த்தை எதுவுமே பேசவில்லை.

 

உடனே ராஜிமா, “தம்பி, உங்க நிலைம நல்லாவே புரியுது. பிள்ளை குணமாகுற வரைக்கும் எங்க வீட்ல வச்சு பார்த்துக்கட்டுமா? என்னை நம்பி அனுப்பி வைப்பீங்களா?” கோரிக்கையாகத்தான் கேட்டிருந்தார் ராஜிமா.

 

இப்படி கேட்பார்களென சுபாஸ் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லையே. வீராவின் முகத்தைப் பார்க்க, “அங்கிள், உங்க வீட்டுக்கு எங்க அம்மாவ அனுப்புறதா இருந்தாலும் எனக்கு ஓகேதான்” என்று வீராவும் கூற, ராஜிமாவோ எதுவாக இருந்தாலும் சரி என்றிருந்தார்.

 

“இல்லப்பா, நீங்களே அழச்சிட்டு போங்க. ரெண்டு நாள்ல நான் வந்து கூட்டிப்போறேன்.” சுபாஸ் இரண்டு விஷயங்களை மட்டுமே யோசித்தார். ஒன்று, ராஜிமாவிற்கு கால் இயலாத நிலையிலும் கிஷோரியை தனியாக எப்படி பார்த்துக் கொள்ள முடியும்?

 

அடுத்து ஒன்று, வீராவின் வரலாற்றை நன்கு அறிந்தவர் சுபாஸ். அப்படி இருக்க, எந்நேரத்திலாவது ராஜிமாவிற்கு ஆபத்து என்று நேர்ந்தால், சுபாஸின் வீட்டில் இரு பெண்கள் தனியாக இருப்பது சரியில்லையென எண்ணி வீராவின் வீட்டிற்கு அனுப்ப சம்மதித்தார்.

 

தந்தை இப்படி கூறுவார் என்று கிஷோரி கனவிலும் நினைக்கவில்லை. இதில் ஏதோ மர்மமான விஷயம் இருக்கும் என்பதை உணர முடிந்தது. அந்த மர்மத்தையும் அறிய ஆவல் ஆனது.

 

வீராவின் மனநிலையோ, இரு பெண்கள் சேர்ந்தால் அவன் தலைதான் உருளும். இது நிச்சயம் நடந்தே தீரும். அனைத்திற்கும் தயாரானான்.

 

கிஷோரியோ, ‘சும்மாவே கெத்தா இருப்பான். இவன் வீட்ல போய் நான் இருந்தா எப்படி பிகு பண்ணுவான்னு தெரியவில்லையே?’ இப்போதே எச்சிலை சேர்த்து விழுங்கினாள்.

 

சுபாஷ் கையில் இருந்த பணத்தை கிஷோரியிடம் கொடுத்துவிட்டு, கிஷோரி வீராவின் ஜீப்பில் ஏறும் வரை இருந்துவிட்டு அவர் டியூட்டிக்குச் சென்றார்.

 

இனி நடப்பவை எல்லாம் வீராவின் வீட்டில்.

 

******

படித்துவிட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் பதிவிடுங்கள் அன்பர்களே 🙏❤️

அடுத்த அத்தியாயம்

அன்றில் 7

அன்றில் 7  மறுநாள், கிஷோரியைத் தேடி வேணி வைத்தியசாலைக்கு வந்தாள். கிஷோரி அங்கு இல்லாததை அறிந்தவள், நேராக அவளது வீட்டிற்குச் சென்றாள். வீட்டின் வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. அங்கும் அவள் இல்லை. வேணிக்கும் நெற்றியில் ஒரு சிறு காயம் இருந்தது. உயிர்த் தோழியைக் காணாத அவளது கண்கள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்