அன்றில் 7
அன்றில் 7
மறுநாள், கிஷோரியைத் தேடி வேணி வைத்தியசாலைக்கு வந்தாள். கிஷோரி அங்கு இல்லாததை அறிந்தவள், நேராக அவளது வீட்டிற்குச் சென்றாள். வீட்டின் வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. அங்கும் அவள் இல்லை.
வேணிக்கும் நெற்றியில் ஒரு சிறு காயம் இருந்தது.
உயிர்த் தோழியைக் காணாத அவளது கண்கள் ஏக்கத்தில் தானாகவே கலங்கின. நெற்றியைத் தேய்த்துக்கொண்டாள். கிஷோரியின் நினைவோடு சுபாஸுக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.
கிஷோரி இல்லாமல் இந்த ஹனிபீஸ் குழு எப்படி இயங்கும் என்றுகூட அவளால் யோசிக்க முடியவில்லை. ஆட்டோவில் ஏறியவள், எங்கு செல்வது என்று தெரியாமல் ஸ்டூடியோவுக்கே வந்தாள்.
மூக்கை உறிஞ்சியபடி கணினியை இயக்கி, யூடியூப்பைத் திறந்தாள். அடுத்த நொடியே அவளது கண் முன்னே தோன்றிய காணொளிகள் நெஞ்சைப் பதற வைத்தன.
கிஷோரி வீராவைக் காப்பாற்றிய தருணத்தை மையமாக வைத்து, சிலர் அவர்களைக் காதல் ஜோடிபோலச் சித்தரித்திருந்தனர். அவர்களுக்காகக் காதல் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, பின்னணியில் இணைத்து, பல குறுங்காணொளிகளைப் பதிவேற்றியிருந்தனர். அவற்றைப் பார்த்த வேணி தலையில் கைவைத்தாள்.
கிஷோரி, “வீரா…” என்று கத்துவதும், அவள் கத்தியால் வீராவைத் தாக்காமல் தாங்கிப் பிடிக்கும்போது அவளது கண்கள் கலங்குவதும், வீரா அதிர்ச்சியுடன் கிஷோரியைப் பார்ப்பதுமாகக் காட்சிகள் மாறின.
அந்தக் காட்சிகளுக்குப் பின்னணியில்,
‘மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே
நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்’
என்ற பாடலை இணைத்திருந்தனர்.
அவனைப் பார்த்துக்கொண்டே கிஷோரி ஒருவனை அடித்துத் துவைப்பதையும், வீரா தலையசைத்தும் அவள் அதே இடத்தில் நகராமல் நிற்பதையும் அடுத்த காட்சிகளாக இணைத்திருந்தனர்.
அதற்கு,
‘கூடும் காதல் கைகள் விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா!
காதல் வாழும், வாழும் அழகிய நினைவு
இலக்கண கவிதை, எழுதிய அழகே!
உருகியதே-ஏ-ஏ, என் உயிரே!
உனது இரு விழிகள்
இமைத்திடும் போதே, பகலிரவு உறைகிறதே!’
என்ற பாடலைப் பயன்படுத்தியிருந்தனர்.
இறுதியில் வீரா கிஷோரியைப் பார்த்துக் கையை நீட்டுவதும், பதிலுக்கு அவளும் கையை நீட்டி மயங்கிச் சரிவதுமாகக் காட்சிகள் தொடர்ந்தன. அதற்கும் ஒரு காதல் பாடலைப் பொருத்தியிருந்தனர்.
‘உருகுதே உந்தன்
ஆண்மை பார்த்து மயங்குதே
இந்த பாவை தான் தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க தடுக்குதே
பெண் நாணம் தான்
உருகுதே மயங்குதே
தவிக்குதே தடுக்குதே
பெண் நாணம் தான்’
என்று பாடல் ஒலித்தது.
எப்படித்தான் இந்த இருவரையும் வைத்து வித்தை காட்டி, ஒரு காதல் ஜோடியின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்களோ இந்த யூடியூப் ஆட்கள்!
கிஷோரி எங்கே இருக்கிறாளென்று தெரியாமல் வேணி யோசித்துக்கொண்டிருந்தாள். அப்போது சுபாஸ் தனது கைப்பேசியைப் பார்த்துவிட்டு வேணிக்கு அழைப்பு விடுத்தார்.
படக்கென்று அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“அங்கிள், கிஷோரி எங்க இருக்கா?”
சுபாஸ் அவள் வீராவின் வீட்டில் இருப்பதாகக் கூறியதும் வேணி வாயைப் பிளந்தாள். ஒரு நிமிடம், அங்கே என்ன நடக்கிறது என்றே அவளுக்குப் புரியவில்லை.
யூடியூப் ஸ்டூடியோவை மூடிவிட்டு வீராவின் வீட்டுக்கு விரைந்து வந்தாள். கண்காணிப்புக் கேமரா வழியாக வேணியைப் பார்த்த வீரா, எந்தவிதச் சோதனையும் இன்றி அவளை உள்ளே அனுமதிக்குமாறு கூறியிருந்தான்.
அவன் இருந்த மண்டபத்துக்கு விரைந்த வேணி, அவனிடம் என்ன கேட்பதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள். அவளது தவிப்பைப் பார்த்த வீரா, கிஷோரி இருக்கும் அறையைத் தன் கையால் சுட்டிக்காட்டினான்.
கதவைக்கூடத் தட்டாமல் திறந்துகொண்டு உள்ளே சென்றாள் வேணி.
கிஷோரி முதுகைக் காட்டியவாறு அமர்ந்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்த்த அடுத்த நொடியே, வேணி அவளைக் கட்டி அணைத்துக்கொண்டாள். அருகில் வீராவின் தாயும் அமர்ந்திருந்தார்.
கிஷோரி தனது இடது கையால் தோழியை அணைத்துக்கொண்டாள். இருவருக்குமிடையிலான ஆழமான நட்பைப் பார்த்த ராஜேஸ்வரிக்கு அவர்களது பிணைப்பு புரிந்தது.
“ஒரு நாள் ஃபுல்லா உன்னைப் பார்க்காம சுத்தமா முடியலடீ”
ஏக்கத்துடன் பார்த்த வேணியின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் சிந்தியது.
“என்னை விட்டா யாருடீ இருக்கா உன்னை டார்ச்சர் பண்ண? அவ்வளவு சீக்கிரமா போகமாட்டேன் டீ உன்னை விட்டுட்டு”கிஷோரியின் இயல்பான கேலியைக் கேட்டதும் வேணியின் உள்ளம் குளிர்ந்துபோனது.
கிஷோரி, ராஜேஸ்வரியிடம் தனது தோழியை அறிமுகப்படுத்தி வைத்தாள். பின்னர் இருவரும் பேசுவதற்காகப் பால்கனிக்கு வந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குக் காபி வந்தது.
“ஏன்டீ இங்க வந்து இருக்க? நாங்க உன்னைப் பார்த்துக்க மாட்டோமா?”
என்று விசனத்துடன் கேட்டாள் வேணி.
நடந்தவற்றையெல்லாம் கிஷோரி அவளிடம் கூறினாள்.
“ஒரு நாளாவது நான் இங்க இருந்துட்டுத்தான் வருவேன். இங்கிருந்து நான் சில விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்!”
ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி தீவிரமாகக் கூறினாள் கிஷோரி.
“என்ன விஷயம்டீ?” என்று வேணி ஆர்வமாகக் கேட்டாள்.
“கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்”
என்று கிஷோரி முடிவாகக் கூறினாள்.
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? மால்ல நடந்த சம்பவத்துல உன்னையும் வீராவையும் சேர்த்து நிறைய சாங்ஸ் போட்டு, யூடியூப்ல நிறைய ஷார்ட்ஸ் போட்டுருக்காங்க”
என்று கூறிய வேணி, இனி அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் புருவத்தை ஆட்டினாள்.
கிஷோரிக்கு முதலில் வந்த யோசனை, இதையெல்லாம் தந்தை பார்த்தால் என்ன நினைப்பார் என்பதுதான். அடுத்ததாக, சமூகத்திலிருந்து வந்த பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்கெனவே கடந்துவிட்டாள். இனி இந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ள அவளது மனம் தயாராக இருந்தது.
வேணியோ கிஷோரியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு,
“சரிடீ, இனி ஒரு வாரத்துக்கு அப்புறம் வேலை எல்லாம் ஆரம்பிக்கலாம்”
என்றாள். ஆனால் கிஷோரியோ,
“ஹா, ஒரு வாரமா! நாளைக்கே ஷூட்டிங் ஸ்டார்ட். நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு இடம் பாரு”
என்றாள்.
அடுத்த பதிவுக்கான கதைக்களத்தைக் கூறி முடித்ததும் வேணி கிளம்பத் தயாரானாள்.
புதிய இடத்தில் தங்கியிருந்ததால், கிஷோரிக்கு உறக்கம் வரவில்லை. அதிகாலையிலேயே விழித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள். வீரா உட்பட வீட்டிலிருந்த அனைவரும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர்.
தூர தேசக் காதல் ஒத்துப்போகாமல், தவமிருந்து காரிருளை அள்ளிச் சுமந்த காலை வேளையில், கதிரவன் கன்னியின் பார்வையில் கண் திறக்க, தன்னை மறந்து பனித்துளி உயிரை விட்டதுவே! இது காதலா, காமமா?
அப்போதுதான் சூரியன் மலர்களின் மீது தனது பார்வையைப் பதிக்கத் தொடங்கியிருந்தான். அந்த ரம்மியமான பொழுதை ஒற்றைக் கையால் படம் பிடிக்க எண்ணினாள் கிஷோரி.
தன் வெட்கத்தை மறைக்கத் தோழி பனித்துளிக்குத் தன்னிடம் இடம் கொடுக்க, செங்கதிரவனைக் கண்ட பனித்துளியும், உன்னவன் வந்துவிட்டான் என்று விலகிச் சென்றதோ? தன்னவனைக் கண்ட மஞ்சள் நிற ரோஜாவும் செக்கச் சிவந்ததே!
ஆசை ஆசையாய் எத்தனை புகைப்படங்கள் எடுத்தும் அவளுக்குப் போதவில்லை. இறுதியாக ஒரு புகைப்படம் எடுப்பதற்காகப் படியின் விளிம்பில் நின்றிருந்ததை மறந்துவிட்டாள்.
‘இன்னுமொரு ஸ்டெப் பின்னுக்கு வந்து க்ளிக் பண்ணா சரியா இருக்கும்’ என்று நினைத்தவள், ஓர் அடி பின்னால் எடுத்து வைத்தாள்.
கீழே விழப்போனவளை வீராவின் வலிய இடக்கரம் தாங்கிப் பிடித்தது.
சரியாக அவனது மார்புக்கு நேரே அவளது முகம் இருந்தது. அவன் பூசியிருந்த ஜவ்வாது வாசனை குபீரென அவளது நாசியைத் தழுவியது. அந்த வாசனையை ஆழமாக நுகர்ந்தவள், மூச்சை வெளியே விடாமல் அடக்கிக்கொண்டாள்.
அவள் கீழே விழுந்தாலும் பரவாயில்லை என்பதுபோல, தனது கேமராவை மட்டும் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். அவளைப் பார்த்த வீரா,
“ஃபர்ஸ்ட் நீ உன்னை ஒழுங்காப் பிடிச்சுக்கோ. அப்புறம் கேமராவைப் பிடிச்சுக்கலாம்” என்றான்.
அப்போதுதான் அவள் தன் பாதுகாப்பைவிடத் தனது கேமராவைப் பற்றியே கவலைப்படுகிறாள் என்பதை வீரா உணர்ந்தான்.
இதழில் அசட்டுப் புன்னகை நெளிய, அவள் கேட்டாள்.
“நீங்க என்னை ஒழுங்காப் பிடிச்சதுக்கு தேங்க்ஸ். ஆமா, நான் கீழ விழப்போறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
என்று புருவத்தைச் சுருக்கியபடி சந்தேகத்துடன் கேட்டாள்.
அவளது கேள்விக்குப் பதிலாக, கண்காணிப்புக் கேமராவைச் சுட்டிக்காட்டினான் வீரா.
‘அட, நம்ம இதை மறந்துட்டோமே!’
என்று நினைத்தாள் கிஷோரி.
அவளை ‘வா, போ’ என்று அழைப்பதற்கான காரணம் இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. இருந்தாலும், இதைப் பற்றி அவனிடம் கேட்கப்போய் வேறு ஏதாவது கூறிவிடுவானோ என்று நினைத்தவள், எதுவும் கேட்கவில்லை.
“வீரா, அப்படி ரெண்டு மூணு போஸ் குடுங்களேன். எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்”
என்று குறும்பாகக் கேட்டாள்.
கிஷோரியின் கேள்விக்குப் பதிலாக அவன் முறைப்பை மட்டுமே கொடுத்தான். அக்கணமே அவளுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தாக வேண்டும் என்பதற்காக,
“வீரா, அம்மா எழுந்துட்டாங்களா?” என்று கேட்டாள்.
“ம்” என்பதோடு அவன் நிறுத்திக்கொண்டான்.
படிகளில் இறங்கும்போதே கிஷோரி சிரித்துக்கொண்டே வந்தாள். அவனைச் சீண்டிப் பார்க்கும்போது அவளது உள்ளத்தில் அத்தனை மகிழ்ச்சி!
ராஜிமாவின் அறையில் கிஷோரியும் ராஜிமாவும் சிரித்துக் குலுங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த வீரா, எத்தனை நாள்களுக்குப் பிறகு தனது அன்னையின் முகத்தில் இவ்வளவு ஆனந்தத்தைப் பார்க்கிறான் என்று நினைத்தான். அதுவே அவனுக்குத் திருப்தியாக இருந்தது.
அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே நகர்ந்துவிட்டான்.
கிஷோரி கட்டிலில் அமர்ந்திருக்க, ராஜிமா அவளது தலைமுடியைச் சீவி, பொட்டு வைத்து அழகு பார்த்தார்.
“இப்பதான் முகமே லட்சணமா இருக்கு” என்று கூறியபடி நெட்டி முறித்தார்.
ராஜிமாவின் தூய்மையான அன்பையும் மென்மையான ஸ்பரிசத்தையும் கிஷோரி உணர்ந்தாள்.
ஷூட்டிங்குக்கு அழைத்துச் செல்ல வேணி வந்தாள். ஆனால் ராஜிமா கிஷோரியை வெளியே அனுப்பவே இல்லை. கிஷோரி கொஞ்சிப் பார்த்தாள், கெஞ்சியும் பார்த்தாள். எதுவும் ராஜிமாவிடம் பலிக்கவில்லை.
“உனக்கு ஷூட்டிங் தானே பண்ணணும்? மாடில பண்ணிக்கோ. பின்னாடித் தோட்டம் இருக்கு, அங்க பண்ணிக்கோ. முன்னாடி இடமும் இருக்கு. வெளியே மட்டும் போக வேண்டாம்” என்று உறுதியாகக் கூறினார்.
வெளிப்படையாகச் சாதாரணமாக இருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ சாதித்துவிட்டது போன்ற உணர்வு கிஷோரிக்கு ஏற்பட்டது. முதன்முதலாக வீராவின் வீட்டுக்கு வந்தபோது, இந்த இடத்தில் ஷூட்டிங் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தாள். இப்போது அந்த எண்ணம் நிறைவேறியிருந்தது.
மூன்று மணி நேரம் தனக்கு விருப்பமானபடி ஷூட்டிங் செய்தாள். இலவசமாகக் கிடைத்த இடம் என்பதால், தனது குழுவினரைப் பல மணி நேரம் அங்கே வைத்திருக்க வேண்டாம் என்று நினைத்தவள், படப்பிடிப்பை முடித்ததும் அவர்களை அனுப்பிவைத்தாள்.
இலேசான இளந்தென்றல் இதழ்களைத் தீண்டித் தீண்டிச் செல்ல, மேகத்தில் ஒளிந்திருக்கும் நிலவைக் காணாமல் காத்திருந்த ரோஜாக்கள், மாலைப்பொழுதின் மயக்கத்தில் சற்றே வாடியிருந்த தருணம் அது.
முன்புறம் இருந்த பெரிய ஊஞ்சலில் ராஜிமா அமர்ந்திருக்க, அவரோடு இணைந்து கிஷோரியும் அமர்ந்திருந்தாள். சுடச்சுடத் தேனீரும் சுவையான நெய் பிஸ்கட்டும் அவர்களுக்கு முன்னால் இருந்தன.
ராஜிமா தேனீரைப் பருகிப் பிஸ்கட்டைச் சுவைக்க, கிஷோரியோ குழந்தையைப் போலத் தேனீரில் பிஸ்கட்டை நனைத்து உண்டாள்.
“ம்மா, இந்த ரோஸ் எல்லாம் சீசன் இல்லாம எப்படி இவ்வளவு அழகா பூக்குது?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“இங்க நிறைய வகையான ரோஜாச் செடிகள் இருக்கு. எல்லா ரோஜாவுமே ஒவ்வொரு சீசன்ல பூக்கும். அதனால எப்பவுமே ஒரு ஐந்து வகை ரோஜா பூத்துக்கிட்டே இருக்கும். ஆதி ஊர்ல இல்லாத சமயம் இதுகளோடதான் பேசிட்டு இருப்பேன். அப்படியே நேரம் ஓடிரும்” என்று ராஜிமா விளக்கினார்.
பூந்தோட்டப் பராமரிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சில நிமிடங்கள் கடந்தன. ஒருவிதத் தயக்கத்துடன் கிஷோரி,
“ம்மா” என்றாள்.
“என்னம்மா?” என்று கேட்டார் ராஜிமா.
“அம்மா, உங்ககிட்ட நான் ஒண்ணு கேக்கணும். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா கேட்பேன்”
என்று கூறியவள், மனதிற்குள் ஆயிரம் பிரார்த்தனைகளுடன் ராஜிமாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
“எங்கிட்ட ஏன் தயங்கிட்டு இருக்க? கேளு” என்று அவள் என்ன கேட்கப்போகிறாள் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலுடன் கூறினார் ராஜிமா.
“உங்க பையனை ஏன்மா இப்படி இருக்கான்?” கேட்க வேண்டியதைப் பட்டென்று கேட்டுவிட வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால், ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.
ராஜிமாவின் மனதிலோ, ‘என் பையனுக்கு என்ன குறை? ராஜா மாதிரி இருக்கானே!’ என்ற எண்ணம் ஓடியது.
புருவங்களைச் சுருக்கிய ராஜிமா, அவளிடமே கேட்டார்.
“எப்படி இருக்கான்?”
“ரௌடி மாதிரி”
என்று தயக்கத்துடன் கூறிவிட்டாள் கிஷோரி.
அதற்கு மேல் அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. ராஜிமா அவளை வியப்புடன் பார்க்க, கிஷோரி எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.
*******
உறவுகளே பிடித்திருந்தால் விருப்பங்களை தெரிவியுங்கள்.
பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் 🙏❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!