அன்றில் 8
அன்றில் 8
ராஜிமா ஒரு முறை அழுத்தமாகக் கண்களை மூடித் திறக்க, கண்கள் கலங்கியிருந்தன. அதைப் பார்த்த கிஷோரியின் முகமும் அகமும் வாடின.
“ஆதி இப்பதான் அப்படி இருக்கான். ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி அவன் இருந்த லெவலே வேற. அவங்க அப்பா எப்ப எங்களை விட்டுட்டுப் போனாரோ, அப்போ இருந்துதான் அவன் இந்த மாதிரி ஆகிட்டான்”
சத்தமின்றி வாயால் மூச்சுவிட்ட கிஷோரி, வீராவின் அப்பா எப்படி இறந்தார் என்று கேட்கத் தயங்கினாள்.
“சரிம்மா, அதை விடுங்க” என்றாள் கிஷோரி.
கண்களைத் துடைத்தபடி ராஜிமா, “ஆதிகூடவே வைத்தி இருந்தார்ல” என்றார். அதற்கு ஆமெனத் தலையசைத்தாள் கிஷோரி.
“வைத்தி, ஆதி அப்பா இருக்கும்போது இன்ஸ்பெக்டரா இருந்தாரு. இப்போ, நீ போய் உன் பொழப்பைப் பாருப்பான்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான். என் பையன்கூடவே சுத்திட்டு இருக்கான் இப்போ”
கிஷோரியின் உடல் முழுவதும் அதிர்ச்சி பரவியது. ராஜிமா கூறுவதை வைத்துப் பார்த்தால், ‘வைத்தி ஐயா போலீஸ்னா, வீரா அப்பா?’ என்ற எண்ணம் தோன்றியது. கண்களை அகல விரித்தவள், இமைக்கவும் மறந்தாள்.
எடுத்த எடுப்பிலேயே, “அம்மா, அப்போ வீராவோட அப்பா போலீஸா?” என்று கேட்டாள் கிஷோரி.
“ஆமா, போலீஸ்தான். ஆதி அப்பா தவறிப்போனப்பகூட எங்க கூடவே இருந்தது வைத்தி மட்டும்தான். ஆதி அப்பாவோட போஸ்ட்டை ஆதிக்கே தரலாம்னு சொன்னாங்க. பட், ஆதிதான் மறுத்துட்டான்”
ராஜிமா கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த கிஷோரி, “வீரா ஏன் போலீஸ் ஆகல?” என்று கேட்டாள்.
“அவனுக்குப் போலீஸாக இஷ்டம் இல்லையாம். அவன் நினைச்சதெல்லாம் செய்யணும்னா போலீஸா இருக்க முடியாதாம்”
ராஜிமா கூறியது கிஷோரிக்கு அவ்வளவாகப் புரியவில்லை.
குழப்பத்தோடு ராஜிமாவைப் பார்த்து, “புரியலம்மா”
என்றாள்.
ராஜிமா தாம் கடந்து வந்த காலத்தை நினைவுகூர்ந்தார்.
வீராதித்யனின் தந்தை வீரக்பர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ராஜேஸ்வரி இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது மனங்கள் ஒன்றோடொன்று நன்றாக ஒத்துப்போயின.
இரு வீட்டினருக்கும் இடையில் ஆரம்பத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், வீரக்பர் போலீஸ் அதிகாரி என்றதும் மேலும் அச்சம் ஏற்பட்டது. ஆனால், இருவரின் மன உறுதியையும் பார்த்து, மனிதன் என்று வந்துவிட்டால் குருதியின் நிறம் சிவப்புதானே என்ற எண்ணத்தில், இரு வீட்டினரும் ஒத்துழைக்க, ஜாம் ஜாமென்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணம் முடிந்து அடுத்த பத்தே மாதங்களில் வீராதித்யன் பிறந்திருந்தான். அவன் பிறந்த நொடியிலிருந்து ராஜிமா பத்து நாட்கள் வரை கோமாவில் இருந்தார்.
பத்து நாட்களும் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அழுதுகொண்டிருந்தார் வீரக்பர். பழைய நிலையில் மனைவியைக் காண அவரது விழிகள் தவித்துப்போயிருந்தன.
ஒருவழியாக, அவரின் சரிபாதியான ராஜேஸ்வரி கண்விழிக்க, நிம்மதியடைந்தார். இதற்குப் பிறகு இன்னொரு குழந்தை வேண்டாமென்று வீரக்பர் முடிவு செய்திருந்தார்.
இருவரின் விருப்பத்தோடும் வீராதித்யன் எனத் தங்கள் குழந்தைக்குப் பெயர் வைத்தனர். இன்று அவன் வளர்ந்து நிற்கும் ஒரு பனைமரம்!
வீரக்பரின் சில உறவினர்கள் துபாயில் இருந்ததால், வீரா தனது படிப்பை முடித்துவிட்டு அடிக்கடி துபாய்க்குச் சுற்றுலா சென்று வந்தான். ஒரு கட்டத்தில், ஓராண்டு காலம் அங்கேயே தங்கியிருந்து, இந்தியாவுக்கு ஒரு மாத காலம் மட்டும் வந்து மீண்டும் துபாய்க்குத் திரும்பிவிடுவான்.
“என்னங்க, உங்க பையனை என்னன்னு கேட்கவே மாட்டீங்களா? உங்க தம்பி வீட்டிலேயே இருந்தா சரியா? எல்லாம் நீங்க கொடுக்குற இடம்தான்!” என்று கணவனைக் கடிந்துகொண்டார் ராஜேஸ்வரி.
பெற்ற மகனை எத்தனை காலம்தான் பிரிந்திருக்க முடியும் என்ற கவலை அவரை வாட்டியது.
மனைவியைச் செல்லமாகப் பார்த்து, “ராஜி, இந்த வயசுல இப்படித்தான் இருப்பாங்க. அதெல்லாம் ஒரு கல்யாணம் ஆயிடுச்சுன்னா சரியாயிடும். விடு” என்று சமாளித்தார் வீரக்பர்.
“ஒரு கல்யாணமாகி ஆதி சரி வரலன்னா என்ன பண்ணுறது?”
என்று ராஜிமா குதர்க்கமாக ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டார்.
“அதுக்கு என்ன? இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதான்!”
என்று வெகுளியாகக் கூறியவர், மனைவியிடம் நான்கு அடிகளை வாங்கிக்கொண்டார்.
“ஒரே பிள்ளை, ஒரே பிள்ளைன்னு எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம்தான்!”
மனைவியைச் சமாளிக்க முடியாமல், “ராஜி, எனக்கு லேட் ஆகுது!”
என்றார் வீரக்பர்.
அவரது தொப்பியோடு முத்தத்தையும் மனைவியிடம் பெற்றுக்கொண்டுதான் தனது கடமைக்குச் செல்வார்.
கணவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து வழியனுப்பியபோது,
“இன்னைக்கு எனக்கு ப்ரமோஷன். நீ டைமுக்கு வந்துரு”
என்றார் வீரக்பர்.
அன்று வீரக்பருக்குப் போலீஸ் மா அதிபராகப் பதவியேற்பு விழா. அதை முழுவதுமாக மறந்திருந்தார் ராஜேஸ்வரி.
தனது தலையில் லேசாகத் தட்டிக்கொண்ட ராஜேஸ்வரி, கணவனைப் பார்த்து, “சுத்தமா மறந்துட்டேன். சீக்கிரம் ரெடியாகி வாறேங்க” என்றார்.
மனைவியை ஒருமுறை அணைத்துக்கொண்டார் வீரக்பர்.
“இன்னைக்கு எனக்கு ப்ரமோஷன். ஸ்பெஷலா எதுவும் இல்லையா?”
என்று வாஞ்சையாகக் கேட்டார்.
வெட்கத்தில் ராஜேஸ்வரி தலையைக் குனிந்துகொண்டு, “முதல்ல டியூட்டிக்குப் போங்க. லேட் ஆயிடுச்சு”
என்று கணவனைத் துரத்திவிட்டிருந்தார்.
வீரக்பரின் பெயரில் இருந்த வீரம் உடலோடு ஊறிப்போயிருந்தது. அவரது குணத்தில் குன்றாத நேர்மையும் வலிமையுமே அவரின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தன.
கணவன் பதவியேற்பதைப் பார்ப்பதற்காகவே சீக்கிரமாகக் கிளம்பி வந்திருந்தார் ராஜேஸ்வரி. இப்போதும் என்னதான் கணவனின் தலையில் நரைமுடிகள் இருந்தாலும், அவரிடம் மாறாத கட்டிளங்காளையின் கம்பீரத்தைப் பார்த்துத் தூரத்திலிருந்தே நெட்டி முறித்தார்.
பதவியேற்ற நாளிலிருந்து வீரக்பருக்குத் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. அனைத்தையும் சாதுவாக எதிர்கொண்டார். மனைவியையும் தனது பார்வையிலேயே வைத்திருந்தார்.
கல்வி, தொழில்துறை, வணிகம், அரசுப் பணி என அனைத்துத் துறைகளிலும் கண்டிப்புடன் செயல்பட்டு, பல சட்டவிரோதிகளைத் தனது குழுவின் மூலம் பிடித்திருந்தார்.
அவர் பிடித்து வைத்திருந்தவர்களில் ஒரு சில பெரிய தலைகளும் உண்டு.
அன்று தனது ஐஜிபி அலுவலகத்திற்குச் சற்று தாமதமாக வந்திருந்தார் வீரக்பர். வீரக்பர் மதிய உணவைக் கொண்டுவராததால், அக்கறையுடன் ராஜேஸ்வரி தனது கையால் சமைத்த உணவைக் கணவருக்குக் கொண்டுவந்தார்.
“நீ ஏன் இந்த வெயில்ல அலையிற?”
என்று அன்பாகக் கடிந்துகொண்டார் அவர்.
“காலையில நீங்க சரியா சாப்பிடலங்க. நான் எப்படி ஒழுங்கா சாப்பிட முடியும்? அதான் சாப்பாட்டை எடுத்துட்டு வந்துட்டேன்” என்றார் ராஜேஸ்வரி.
மனைவியின் இளமை தொடங்கி முதுமையிலும் கண்களில் தேங்கி நிற்கும் முடிவில்லாக் காதலைத்தான் அவரால் பார்க்க முடிந்தது.
அன்பு மனைவியைக் கடியவும் முடியாமல், அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் வீரக்பர்.
அப்போது வீரக்பரின் அலைபேசிக்கு, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.
“ஏங்க, போன் அடிக்குது” என்ற மனைவியின் குரலுக்கு, அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் வைத்தார்.
“யாரு?” என்று தன்மையாகக் கேட்டார்.
மறுமுனையில் ஏகத்தாளமான குரல் ஒலித்தது.
“என்ன ஐஜிபி, வயசான காலத்துல வீட்டுல இருக்காம, எதுக்கு தேவையில்லாத வேலை செய்ற?”
சென்னையில் இருக்கும் பிரபல ரவுடிகளில் இவனும் ஒருவன்.
தொலைபேசி எண்ணை வைத்து அவனுடைய ஜாதகத்தையே எழுதிவிடும் அளவுக்குத் தகவல்களைத் திரட்டியிருந்தார் அக்பர்.
“வயசானவன் கிட்ட நேர்ல பேச முடியாத நீயெல்லாம் ஒரு ரவுடின்னு வெளியே சொல்லாத, ருத்ரா!” என்று கூறியவர், இயல்பாகத் தனது மீசையை முறுக்கினார். அவரது உதட்டோரத்தில் அதிகாரப் புன்னகை குடியிருந்தது.
ருத்ராட்க்ஷன்! இவனுடைய பெயரைக் கேட்டாலே சென்னை மாநகரமே நடுநடுங்கும். இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன நரகாசுரன். போதைப்பொருள் கடத்தும் மாஃபியா குழுவின் தலைவன்.
வெளிநாட்டிலிருந்து பெறப்படும் போதைப்பொருள் இவனது கைகளிலிருந்துதான் இந்தியா முழுவதும் செல்கிறது.
நேற்று இரவு அவனது தம்பி மூன்று கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தான். அந்தக் கோபத்தில்தான் ருத்ராட்க்ஷன் அழைத்திருந்தான். அக்பர் வேறு அவனை வெறுப்பேற்றும் விதமாகப் பேச, அது அவனது சினத்தை மேலும் அதிகரித்தது.
பற்களை நறநறவெனக் கடித்தவன், “என் தம்பியை மரியாதையா வீட்டுக்கு அனுப்புடா…… கிழட்டுப் பயலே!”
என்று நரகாசுரனைப் போல வார்த்தைகளைக் கொட்டினான்.
அக்பர் அசால்டாக, “முடியாதுடா”
என்று அழைப்பைத் துண்டித்தார்.
உடனே மீண்டும் அழைத்தான் ருத்ராட்க்ஷன்.
“ஏய் பெருசு, அழகா சொல்றேன், என் தம்பியை விட்டுரு. நாங்க இப்படித்தான் இருப்போம். மாசம் முதலாம் தேதி ஆனா உன் வீட்டுக்கு கரெக்டா தேடி வந்துரும் அமௌன்ட். எவ்வளவு எதிர்பார்க்கிறேன்னு சொல்லு?”
என்று சற்று இறங்கிவந்து பேசினான்.
சோம்பலை முறித்து, ஆசுவாசமாகக் கொட்டாவி விட்ட அக்பர், “இங்க பாரு ருத்ரா, நானும் உனக்கு அழகா சொல்றேன், கேட்டுக்கோ. நீ நினைக்கிற ஐஜிபி பாலசந்திரன் மாதிரி நான் கிடையாது. என்னோட பேசி உன் நேரத்தை நீ வீணாக்காத!”
என்று பொறுமையாகக் கூறினார்.
“டேய், டேய், டேய்! ஐஜிபி, உன் மகன் துபாய்ல இருக்கான்னு தைரியத்துல பேசுறியா? உன் பொண்டாட்டியைத் தூக்குறது எனக்கு ஜுஜூபிடா!”
என்று வீரக்பரிடம் சவால் விட்டான்.
“முடிஞ்சா தூக்குடா!”
என்றதோடு ஐஜிபி அழைப்பைத் துண்டித்துவிட்டு, சோர்வடைந்த மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
ராஜேஸ்வரியின் மனதிற்குள் பயத்தின் அலைகள் ஓடிக்கொண்டிருந்தன. தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, கணவனுக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாது என்ற சிந்தனை மட்டுமே அவரிடம் இருந்தது.
இது இப்போது மட்டுமல்ல. அவர்கள் திருமணம் முடித்த நாளிலிருந்தே இப்படித்தான் நினைப்பார்.
“என்னடா, பயமா இருக்கா?” என்று மனைவியின் நாடியைப் பிடித்துக் கேட்டார் வீரக்பர்.
இறுக்கமான புன்னகையுடன், இல்லை என்பதுபோல் தலையை மறுத்து அசைத்தார் ராஜேஸ்வரி.
“சரிங்க, நான் வீட்டுக்குக் கிளம்புறேன். நீங்க ஒழுங்கா சாப்பிடுங்க” என்றார் ராஜேஸ்வரி.
அதை மறுத்தவர், “நான் டியூட்டி முடிஞ்சு போகும்போதே உன்னையும் கூட்டிட்டுப் போறேன். வீட்டுல எந்த வேலை இருந்தாலும் அப்புறமா ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்” என்றார்.
அக்பர் கண்டிப்புடன் கூறியதால், ராஜேஸ்வரி அதன்பிறகு மறுக்கவில்லை. ஐஜிபி அலுவலகத்தில் ஓரமாக ஒரு கதிரையைப் போட்டு அமர்ந்துகொண்டார்.
அடுத்த நாள் ருத்ராட்க்ஷனின் தம்பி மாயதேவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
ஐஜிபி அக்பர் தனது காரில் வர, போலீஸ் வண்டியில் ஓர் இன்ஸ்பெக்டரும் மூன்று கான்ஸ்டபிள்களும் மாயதேவுடன் வந்தனர். ருத்ராட்க்ஷன் கடும் கோபத்தில் இருந்தான்.
அந்த வேளையில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வைத்தீஸ்வரன். அக்பரிடமிருந்து அழைப்பு வந்ததும் அவருடன் பேசிவிட்டு, தனது காரை நிறுத்தி இறங்கினார். பின்னால் வந்த போலீஸ் வண்டியும் நிறுத்தப்பட்டது.
அது ஒரு காட்டுவழி. போலீஸ் குழுவைத் தவிர அந்த இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லை.
அக்பர், மாயதேவ் பார்க்காத சந்தர்ப்பத்தில் வைத்தீஸ்வரனுக்குக் கண்ணால் ஜாடை காட்டினார்.
“மாயா, நீ தப்பிச்சுப் போறதா இருந்தா, அதுக்குத்தான் இங்க நிறுத்தியிருக்கோம். நீ போறதா இருந்தா இப்படியே போயிரு” என்று வைத்தீஸ்வரன் கூற, மாயதேவ் உஷாரானான்.
மாயதேவ் விழிகளைக் கழுகாக்கியவன், “என்ன இன்ஸு, என்னைப் போட்டுத்தள்ளணும்னு பார்க்கிறியா?” என்று ஏகத்தாளமாகக் கேட்டான்.
அவனது பேச்சில் அக்பருக்குக் கோபம் முறுக்கேறியது.
வைத்தீஸ்வரன் கூலாக, “ஹேய் மாயா, நீ இதுக்கு முன்னாடியும் எங்கிட்ட இருந்து தப்பிச்சுப் போயிருக்க. அதை மறந்துட்டியா?” என்றார்.
“உன் மேல நம்பிக்கை இருக்கு, இன்ஸு. இந்தப் பெருசு மேல நம்பிக்கை இல்ல”
இதற்கு முன்னர் ஒருமுறை வைத்தீஸ்வரனிடமிருந்து மாயதேவ் தப்பித்துச் சென்றிருந்தான். அதாவது, அவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேளையில் வைத்தீஸ்வரனின் மகளை ருத்ராட்க்ஷன் கடத்தி, வைத்தீஸ்வரனுக்கு ஒரு பாடம் புகட்டியிருந்தான்.
மாயதேவுக்கு அங்கிருந்து செல்லலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது.
ருத்ராட்க்ஷன் அக்பருக்கு அழைப்பு விடுக்க, அதைக் கேட்ட அக்பர் வைத்தீஸ்வரனுக்கும் மாயதேவுக்கும் அதைக் காட்டினார்.
“ருத்ராதான் எனக்குக் கால் பண்றான், வைத்தி. நீங்க இவனை அனுப்பி வச்சிட்டு வாங்க. நான் முன்னாடிப் போறேன்” என்று கூறிய அக்பர், தனது காரை நோக்கி நடந்தார்.
“என்ன, இந்தப் பெருசும் எங்க அண்ணன் கிட்ட விலை போயிட்டானா?”
என்று ஏகத்தாளமாக மாயதேவ் வைத்தீஸ்வரனிடம் கேட்டான். அதற்கு வைத்தீஸ்வரன் ஒன்றும் கூறவில்லை.
அக்பர் காரின் கதவைத் திறக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்த மாயதேவ், “சரி, நான் கிளம்புறேன், இன்ஸு” என்றான்.
அவன் ஓடவில்லை. பதற்றத்துடன் வேகமாக நடந்து சென்றான்.
காரின் கதவைச் சத்தமின்றி மூடிய அக்பர், வைத்தீஸ்வரனின் அருகில் வந்து அவரது துப்பாக்கியை எடுத்துத் தன்னைச் சுடுமாறு கூறினார். வைத்தீஸ்வரன் மறுத்துவிட்டார்.
நேரம் கடத்தினால் மாயதேவ் வெகுதூரம் சென்றுவிடுவான் என்பதால், வைத்தீஸ்வரனின் துப்பாக்கியைப் பலவந்தமாகப் பெற்று, தனது இடக்கரத்தில் சத்தமின்றிச் சுட்டுக்கொண்டார். வலியை வெளியே காட்டாமல் பல்லைக் கடித்துக்கொண்டு, வலது கையால் துப்பாக்கியை ஏந்தியபடி மாயதேவின் பின்னால் ஓடினார்.
ஓடிவரும் சத்தம் கேட்டு மாயதேவ் திரும்பிப் பார்த்த அந்த நொடியே, அவனை ஓடவிடாமல் காலில் சுட்டார். வலியில் சத்தமிட்டுத் துடித்த மாயதேவ், ஒற்றைக் காலால் எக்கி எக்கி ஓட முயன்றான்.
ருத்ராட்க்ஷன் மீது இருந்த கோபத்தையும் சேர்த்து, மாயதேவின் இடது மார்பில் நாயைச் சுடுவதுபோலக் கொடூரமாகச் சுட்டார் அக்பர். அவன் சரிந்து விழும் சமயத்தில் வேகமாகக் காலால் உதைத்துத் தள்ளினார்.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!