arrow_back
அன்றிலவன்(ள்) அன்றில் 10
அன்றிலவன்(ள்) chevron_right பகுதி 10 / 15

அன்றில் 10

visibility 11
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அன்றில் 10

 

 

காரின் வேகத்திற்கும் காற்றின் வேகத்திற்கும் கிஷோரியால் கண்களைத் திறக்கவே சிரமமாக இருந்தது.

 

சிறு சிறு சிமிட்டல்களுடன் கண்களை மெதுவாகத் திறந்தாள். அவனது கூர்மையான விழிகளைப் பார்க்கக்கூட முடியாமல், படபடத்த அவளது விண்மீன் விழிகளைத் தாழ்த்தியே வைத்திருந்தாள்.

 

வீரா எதுவுமே நடக்காததுபோல் கிஷோரிக்குச் சீட் பெல்ட்டை மாட்டிவிட்டான். அப்போதுதான், அவள் சீட் பெல்ட் அணிந்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காதே என்ற எண்ணம் அவளது மரமண்டைக்கு எட்டியது. மேலும், அவன் குனியச் சொன்னதைக்கூடத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நினைத்து அவளுக்குச் சற்று சங்கடமாக இருந்தது.

 

தன்னை நோக்கி வந்த அம்பை ஒரு கணம் நினைத்துப் பார்த்தபோது கிஷோரிக்குத் திக்கென்றது. அந்த அம்பு தனது உடலில் பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கவே உடல் வெடவெடத்தது.

 

அந்த நினைவுகளை ஒதுக்கிவைத்தவள், தற்போது நடக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியபடி உடலை இருக்கையோடு சேர்த்து இறுக்கமாக வைத்துக்கொண்டாள்.

 

இரண்டு மூன்று நிமிடங்கள் சாலையில் கிடைத்த சந்துபொந்துகளிலெல்லாம் புகுந்து விளையாடினான் வீரா. ஒரு கட்டத்தில் காரில் இருந்த பெட்ரோல் தீரப்போவதைக் கவனித்தவன் கிஷோரியைத் தட்டினான்.

 

“சீட் பெல்ட்டைக் கழட்டிட்டு ஓடத் தயாரா இரு. இன்னும் பத்து நிமிஷத்துல கார்ல இருக்கிற பெட்ரோல் தீர்ந்திடும்”

 

அவனது குரலில் இருந்த தீவிரம், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்தியது.

 

“என்னது?”

 

அவளது சோர்வடைந்திருந்த விழிகள் அகன்றன.

 

அவளுக்குக் கால அவகாசம் கொடுக்காமல்,

 

“ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு சொல்லுவேன். நான் காரைவிட்டு இறங்கின உடனே நீயும் இறங்கிடு” என்றான்.

 

கிஷோரி தலையைத் தலையை ஆட்டினாள்.

 

“ஒண்ணு”

 

அவன் கூறியதுமே கிஷோரியின் மனதுக்குள், ‘ஐயையோ! இன்னும் ரெண்டு செகண்ட்ல கீழே பாயணுமா?’ என்ற பதற்றம் எழுந்தது.

 

“ரெண்டு”

 

எச்சிலைச் கூட்டி விழுங்கினாள்.

 

“மூணு!”

 

என்று அவன் கூறியதும் காரை ஒரு சிறிய வழிப்பாதையை மறைத்தபடி நிறுத்தினான். அவன் இறங்கிய அடுத்த நொடியே கிஷோரியின் இடது கையைப் பற்றியிழுத்துக்கொண்டு ஓடினான்.

 

அவனோடு ஓடும்போது கிஷோரிக்குப் புயல் காற்றில் பறப்பதுபோல் இருந்தது. அவள் எவ்வளவு வேகமாக ஓட முயன்றாலும், அவன் இழுத்த இழுப்புக்கு அவளது இரு கால்களும் சக்கரங்களாக மாறியிருந்தன என்பதுதான் உண்மை.

 

வீராவைப் பிடிக்க வந்த ஆட்கள் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அவர்களை நோக்கி வீசினர். பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடிய வீரா, தன்னை நோக்கி வந்த பொருட்களைத் தவிர்த்தும் கால்களால் தட்டிவிட்டும் முன்னேறினான்.

 

கடைசியாகத் துரத்திவந்த இருவர் மீது கால்களால் மண்ணை வாரி அடித்தான்.

 

“இதுக்கு மேல என்னால ஓட முடியாது வீரா” என்று கூறும்போது கிஷோரிக்கு மூச்சு வாங்கியது.

 

“கொஞ்ச நேரம் ஓடிவா. எங்கேயாவது நின்னுட்டுப் போகலாம்” என்றான்.

 

பின்னால் யாரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவன், வேகத்தைக் கொஞ்சம் குறைத்து ஓடினான்.

 

சிறிது தூரம் சென்றதும் ஒரு தேனீர்க் கடையைப் பார்த்தான். கிஷோரியை அங்கே அமரச் செய்துவிட்டு, தன்னைத் துரத்தி வந்தவர்கள் யாராவது வருகிறார்களா என்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

கிஷோரியோ களைப்பைப் போக்கிச் சுறுசுறுப்பைப் பெறுவதற்காகக் கடையில் தேனீர் வாங்கி மிடறு மிடறாகப் பருகினாள்.

 

பின்னர் திரும்பிக் கிஷோரியைப் பார்த்த வீரா, ‘அவ மட்டும் நல்லா டீ குடிக்கிறா!’ என்று மனதுக்குள் புழுங்கினான். அதன்பிறகுதான் தனக்கும் ஒரு தேநீர் கேட்டான்.

 

ஆசுவாசமாக மூச்சை விட்டவன், தேனீரின் நறுமணத்தை ஆசையாக நுகர்ந்து கோப்பையை வாயருகே எடுத்தான்.

 

“வீரா! வீரா! ஆளுங்க திரும்பி வாராங்க”

 

என்று பதற்றத்துடன் கூறிய கிஷோரி, அவனது கையில் இருந்த தேனீர்க் கோப்பையைத் தட்டிவிட்டாள். தேனீரின் சில துளிகள் அவன்மீது சிந்தின.

 

அவளைத் துரத்தி வந்தவர்கள் திரும்பி வருகிறார்கள் என்பதை உணர்ந்தவன், உடனே திரும்பிப் பார்த்தான். அவனது கழுகுப் பார்வை அவளது கண்களில் தெரிந்த பிம்பத்தைப் பற்றிக்கொண்டது. அடுத்த நொடியே அவளது கையைப் பிடித்து எழுந்தான்.

 

தேனீர்க் கடைக்கு அருகில் ஒரு துணிக்கடை இருந்தது. அந்த இரண்டு கடைகளுக்கும் இடையில் ஒரு சிறிய முட்டுச்சந்து இருந்தது.

 

“நீ அங்க போய் இரு. நான் வாறேன்” என்று கூறிய வீரா, அவர்களுடன் சண்டையிடத் தயாரானான்.

 

“இப்ப சண்டையெல்லாம் போட வேண்டாம் வீரா. நீயும் வா, போய் ஒளிஞ்சுக்கலாம்”

 

அவன் அதற்கு ஒத்துக்கொண்டால்தானே! கோழையாக ஒளிந்துகொள்வதெல்லாம் அவனது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.

 

“நீ போ”

 

“நான் போவேன். அப்புறம் ராஜிமாகிட்ட எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைப்பேன். இஷ்டமா?” என்று கிஷோரி கேட்க, அவனுக்கு அது கஷ்டமாக இருந்தது.

 

அந்தச் சிறிய சந்துக்குள் ஒருவர் நிற்பதே கடினம். சுவரும் கரடுமுரடாக இருந்தது.

 

கிஷோரி உள்ளே நுழைந்துவிட்டாள். வீராவுக்குத்தான் சற்று சிரமமாக இருந்தது. ஒருவழியாகத் தனது உடலை வளைத்து நெளித்து அவனும் உள்ளே நுழைந்தான். ஆனால், கிஷோரியால் அங்கே நிமிர்ந்து நிற்கக்கூட முடியவில்லை. அவள் அவனோடு சேர்ந்து நெருக்கத்தில் நசுங்கிப்போனாள்.

 

தேனீர்க் கடையில் நின்றுகொண்டிருந்தவர்கள், இவர்கள் காதல் ஜோடிகள் என்றும், இவர்களது காதலைப் பிடிக்காத உறவினர்கள் துரத்தி வருகிறார்கள் என்றும் நினைத்தனர். அதனால், அந்த முட்டுச்சந்தை ஒரு விளம்பரப் பதாகையை வைத்து மறைத்தனர்.

 

பதாகையால் அந்த இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டதும் உள்ளே இருள் சூழ்ந்தது. கிஷோரி பயத்தில் வீராவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

 

அவளது பயத்தை உணர்ந்தவன், தனது கைப்பேசியில் இருந்த மின்விளக்கை ஒளிரச் செய்தான்.

 

“வீரா, எனக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு. கொஞ்சம் பின்னாடிப் போக முடியுமா?” என்று கேட்டாள்.

 

அவன் பின்னால் நகர்ந்தால் முட்டுச்சந்துக்கு வெளியேதான் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் பதாகையும் கீழே விழுந்துவிடும்.

 

அவளுக்குப் பதில் கூறாதவன், தனது கைப்பேசியைப் பையில் வைத்துவிட்டு, சுவரோடு ஒட்டியபடி நின்றிருந்த அவளது இடையைப் பற்றித் தன்னருகே இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

 

இத்தனை நாட்களாக அவள் உணராத கூச்சத்தையெல்லாம் இப்போது ஏதோ ஒரு வகையில் அவனது விரல்கள் உணரச் செய்திருந்தன.

 

அவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டதும், தன்னைச் சமநிலைப்படுத்திக்கொள்ள அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.

 

மின்வெளிச்சத்தில் வெண்ணிலவாய்

உயர்வகை மதுரகம் விழி

வழியே வழிய, அரக்கனவன்

இவள் பார்வையில் மிரள,

அவசரமாக அனைத்தையும்

அணைத்தாள்.

 

அவனது சட்டைக் காலரைப் பற்றியிருந்தவள், தன்னைச் சமாளிக்க முடியாமல் இறுதியில் அவனை முழுவதுமாக அணைத்துக்கொண்டாள்.

 

வெளியே பேசும் சத்தமெல்லாம் உள்ளே தெளிவாகக் கேட்டது.

 

இவர்களைத் துரத்திவந்தவர்கள் தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தவர்களிடம்,

 

“இங்க ஒரு பொண்ணும் பையனும் ஓடி வந்தாங்களே, பார்த்தீங்களா?” என்று கேட்டனர்.

 

அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர்.

 

“நான் அப்படி யாரையும் பார்க்கலையே” என்று ஒருவர் கூறினார்.

 

மற்றொருவரோ,

 

“நான் அவங்களைப் பார்த்தேன்” என்றார்.

 

அவர்கள் கூறுவதையெல்லாம் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த வீரா, இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்தான்.

 

கிஷோரி ஒன்றும் பயந்தவள் இல்லை. ஆனால், ஓடுவதற்குக்கூட இடமில்லை என்று நினைத்தபோது அவளது சர்வ நாடியும் அடங்கிப்போனது.

 

“ஓ! அவங்க எங்க போனாங்க?” என்று துரத்திவந்தவன் விசாரித்தான்.

 

“இதோ, இப்படியே நேரா போற பாதையிலதான் போனாங்க” என்று அந்தப் பெரியவர் கூறினார்.

 

அடுத்த நிமிடமே அவர்கள் காட்டிய பாதையை நோக்கி அந்த ஆட்கள் ஓடினர்.

 

பின்னர் பெரியவர் பதாகையைத் தட்டி விலக்கி,

 

“அந்தத் தடி பசங்க ஓடிட்டாங்கப்பா. நீங்க வெளிய வாங்க” என்றார்.

 

வீரா தனது துப்பாக்கியை முதலில் வெளியே வைத்துவிட்டு, கிஷோரியின் இடையைச் சுற்றியிருந்த கையைத் தளர்த்தினான். பின்னர் வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து கிஷோரியும் வெளியே வந்தாள்.

 

“நன்றி தாத்தா. நாங்க கிளம்புறோம்” என்று பெரியவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, கிஷோரியின் கையைப் பிடித்துக்கொண்டான்.

 

“தம்பி, ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்று பெரியவர் அவர்களை நிறுத்தினார்.

 

அவன் கேள்வியுடன்,

 

“சொல்லுங்க தாத்தா” என்றான்.

 

அவனது குரலில் இருந்த அவசரத்தைப் புரிந்துகொண்ட பெரியவர், சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கேட்டார்.

 

“நாங்க வேணும்னா உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கட்டுமாப்பா?”

 

கிஷோரியின் வாய் முழுவதும் சிரிப்பு விரிந்தது. அவளது முப்பத்திரண்டு பற்களும் வெளியே தெரிய, வீராவின் முரட்டுப் பார்வையைக் கண்டதும் இதழ்களை மூடிப் பற்களை மறைத்துக்கொண்டாள்.

 

தங்களுடைய சூழ்நிலை என்னவென்று அந்தப் பெரியவரிடம் விளக்கிச் சொல்லும் அளவுக்கு வீராவுக்கு நேரமில்லை.

 

“இல்ல தாத்தா, இவளோட அப்பா வீட்டுல எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நாங்க அங்க போயிடுறோம். ரொம்ப நன்றி தாத்தா” என்று சிரித்த முகத்தோடு கூறினான்.

 

பின்னர் கிஷோரியைப் பற்றியிழுத்துக்கொண்டு திரும்பி, பாதையிலேயே ஓடினான்.

 

மாலை ஆறு மணியாகியிருந்தது. காரில் பெட்ரோல் இல்லாததால், அங்கிருந்து ஒரு வாடகைக் காரை முன்பதிவு செய்தான். அதில் கிஷோரியின் வீட்டுக்கு வந்தான்.

 

வீடு பூட்டியிருந்தது. சாவியும் கையில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக்கொண்டிருந்தான்.

 

கிஷோரியோ தனது தலையில் சொருகியிருந்த ஹேர்பின்னைக் கழற்றி, அதைக் கொண்டு பூட்டைத் திறந்தாள்.

 

அவள் செய்வதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.

 

அவனது பார்வையைக் கவனித்தவள், அசட்டுப் புன்னகையுடன்,

 

“எனக்குப் பழகிருச்சு” என்றாள்.

 

அதைக் கேட்டவன் சலித்துக்கொண்டான்.

 

அவள் வீட்டைத் திறந்ததும் வாசலில் நின்றபடியே வீரா,

 

“நான் வீட்டுக்குக் கிளம்புறேன். நீ சேஃபா இரு” என்றான்.

 

ஆனால், அவளோ அவனிடம் வா, போ என்று உரிமையுடன் பேசத் தொடங்கியிருந்தாள்.

 

“இல்ல, இல்ல. வீட்டுக்குள்ள வந்துட்டுப் போ வீரா” என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அவனது கையைப் பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு வந்தாள்.

 

சோஃபாவில் அவனை அமரச் செய்துவிட்டு, முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தாள்.

 

“ஃபர்ஸ்ட் நீ உன் கையைப் பாரு” என்று வீரா எவ்வளவோ கூறியும் அவள் கேட்டால்தானே!

 

“கை ரொம்ப வலிக்கல. ஓரளவுக்கு ஓகே” என்றாள்.

 

அதன்பிறகு அவனது நெற்றி, கழுத்து, முழங்கை ஆகிய இடங்களில் இருந்த சிறு சிறு காயங்களுக்கு மருந்தைச் சிறு பஞ்சில் நனைத்துத் தொட்டுத் தொட்டு வைத்தாள்.

 

எரிச்சலைத் தாங்க முடியாமல்,

 

“ஸ்… மெதுவா” என்று முனகினான்.

 

“பேருதான் ரௌடி. இதைக்கூடத் தாங்க முடியல” என்று கிஷோரி கூறினாள். அவன் எதுவும் கூறவில்லை.

 

மருந்து வைக்கும் எரிச்சலில் முகத்தை மறுபடியும் திருப்பிக்கொண்டவன், பற்களைக் கடித்தான்.

 

இவன் இப்படிச் சிறுபிள்ளையைப் போல நடந்துகொள்வதைப் பார்த்தபோது, ‘யானையின் உருவம்தான் பெரியது, அதன் மனது சிறியது’ என்று சும்மாவா கூறினார்கள் என்று கிஷோரிக்குத் தோன்றியது.

 

அதேபோலத்தான் இவனும்! பார்ப்பதற்குப் பெரிய பந்தா காட்டும் ரௌடியைப் போல இருந்தாலும், ஒரு சிறிய வலியைக்கூடத் தாங்க முடியவில்லையே!

 

“ஹலோ, மூஞ்சியை அந்தப் பக்கம் வச்சிருந்தா நான் எப்படி மருந்து போடுறதாம்?” என்று நெற்றியில் இருந்த காயத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.

 

“மருந்து போடுன்னு நான் கேட்டேனா?” இந்தக் காயங்களெல்லாம் அவனுக்குப் பழகியவை. இதற்காக மருந்து போடுவதற்குக்கூட அவன் விரும்பியதில்லை.

 

“ஹாஸ்பிடல் போயிட்டு ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்” என்று கிஷோரி கூறினாள்.

 

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றான் வீரா.

 

ஏனென்றால், வீராவுக்கு ஊசி என்றாலே பயம்!

 

மருந்து போட்டு, காயங்களுக்குப் பிளாஸ்திரி ஒட்டி முடித்தாயிற்று.

 

“ஓகே வீரா, ரிலாக்ஸா இரு. காஃபி போட்டுட்டு வாறேன்” என்றாள் கிஷோரி.

 

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். நான் கிளம்புறேன்” என்று கூறியபடி வீரா வாசல்வரை வந்தான்.

 

அப்போது சுபாஸ் வந்து நின்றார்.

 

வாசலில் வீராவைப் பார்த்ததும், தனது மகள் வீட்டுக்குள் இருப்பதைப் புரிந்துகொண்டார். வீராவைப் பார்த்து,

 

“என்னப்பா ஆச்சு? காயமா இருக்கு?” என்று கேட்டார்.

 

“அது ஒண்ணுமில்ல அங்கிள். சின்ன அடிதான்” என்றவன் அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

 

ஆனால், கிஷோரியின் தந்தை விட்டால்தானே!

 

“சரிப்பா, சரிப்பா. உள்ள வா” என்று வீராவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

 

‘அப்பாவும் புள்ளையும் கையைப் பிடிச்சு இழுக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்காங்களோ?’ என்று அவனது மனதில் எண்ணம் தோன்றி மறைந்தது.

 

சுபாஸ் முதலில் மகளின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். பின்னர் வீராவைப் பார்த்து,

 

“வீராவுக்குக் காஃபி கொடுத்தியா மா?” என்று கேட்டார்.

 

கிஷோரி இல்லை என்று தலையாட்டினாள்.

 

உடனே சுபாஸே காஃபி கலந்து வீராவுக்குக் கொடுத்தார்.

 

இன்று காலையில் தொடங்கி நடந்த அனைத்தையும் கிஷோரி தனது தந்தையிடம் கூறுவதைப் பார்த்த வீரா, ஆ என்று வாயைப் பிளந்தான்.

 

இப்படியே எல்லாவற்றையும் கூறிவிடுவாளோ என்று அவனுக்குத் தோன்றியது.

 

“அப்புறம் அப்பா, காருக்குள்ள…” என்று கிஷோரி கூறத் தொடங்கியதும் வீராவின் விழிகள் மாறின.

 

தனது மானம் இப்படிக் கப்பலேறுவதை அவன் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

 

“என்னம்மா, சொல்லு” என்றார் சுபாஸ்.

 

தயங்கிக்கொண்டிருந்த கிஷோரிக்கு எப்படிக் கூறுவதென்று தெரியவில்லை. தலை குனிந்தபடியே,

 

“நானும் வீராவும் லவ் பண்றோம்ப்பா” என்றாள்.

 

வீரா காபியை ஒரு மிடறு பருகியிருந்தான். அவளது வார்த்தைகளைக் கேட்டதும் காபி புரையேறி வெளியே தெறித்தது.

 

‘எது? நான் எப்போ உன்னைக் காதலிச்சேன்? நீ எப்போ என்னைக் காதலிச்ச?’ என்று அவனது மனம் அலறியது.

 

ஒருவேளை இது கனவாக இருக்குமோ என்று நினைத்தவன் தன்னையே கிள்ளிப் பார்த்தான்.

 

அந்த நொடி, கடலலைகள் அசைவதை நிறுத்தின. காற்றில் ஆடும் தென்னை மரங்களும் அப்படியே நின்றுவிட்டன. வானில் பறந்துகொண்டிருந்த பறவைகள்கூட அசைவற்று நின்றன.

 

உலகத்தின் அத்தனை இயக்கங்களும் ஸ்தம்பித்துப்போனதைப் போலிருந்தது வீராவுக்கு.

 

சுபாஸ் இதை எதிர்பார்த்திருந்தார். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக மகள் கூறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், மகளை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

 

*****

 

அடுத்த அத்தியாயம்

அன்றில் 11

அன்றில் 11 தந்தை என்ன கூறப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புடன் கிஷோரி இருக்க, வீராவோ பதற்றத்தில் இருந்தான். இவள் எதை வைத்து இப்படிக் கூறுகிறாள் என்று புரியாமல் தனது மூக்கின் நுனியைத் தேய்த்துக்கொண்டிருந்தான். இதற்கு மேல் அங்கு இருப்பதற்கு அவனுக்குப் பொறுமை இல்லை. அதனால் கிஷோரியின்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்