அன்றில் 11
அன்றில் 11
தந்தை என்ன கூறப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புடன் கிஷோரி இருக்க, வீராவோ பதற்றத்தில் இருந்தான். இவள் எதை வைத்து இப்படிக் கூறுகிறாள் என்று புரியாமல் தனது மூக்கின் நுனியைத் தேய்த்துக்கொண்டிருந்தான்.
இதற்கு மேல் அங்கு இருப்பதற்கு அவனுக்குப் பொறுமை இல்லை. அதனால் கிஷோரியின் முகத்தைப் பார்த்தான். அவளோ முப்பத்திரண்டு பற்களையும் வெளியே காட்டிச் சிரித்தாள். அந்தச் சூழ்நிலையை அவனால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குக் கடுப்பானது.
வீரா, “அங்கிள் நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்றிட,
அவர் உடனே, “நான் வேணும்னா உன்னைக் டிராப் பண்ணவாப்பா?” என்று கனிவாகக் கேட்டார். அவனோ மறுத்தான்.
“சரிப்பா, பார்த்துப் பத்திரமா வீட்டுக்குப் போ. உன் அம்மாவை வீட்டுக்கு வந்து பேசச் சொல்லு”
ஏற்கெனவே குழப்பத்தில் இருந்தவனுக்குச் சுபாஸ் கூறியது புரியாமல்தான் போனது.
“என்னங்கிள், புரியல?” என்று மிக மெல்லிய குரலில் கேட்டான்.
“உங்க அம்மாவை வந்து கிஷோரியைப் பொண்ணு கேட்கச் சொல்லுப்பா” என்று வீராவிடம் அவரும் பணிவாகக் கூறினார்.
மனதுக்குள் சலித்துக்கொண்டான் வீரா.
‘இது வேறயா!’
சுபாஸ் ஒன்றும் முன்பின் தெரியாதவர்களிடம் தன் மகளை அனுப்பிவிடவில்லையே! ஐஜிபியை நன்கு அறிந்தவர். அவரது குடும்பத்தில் தன்னுடைய மகள் வாழப்போவதைப் பெருமையாகத்தான் நினைத்தார்.
வீரா கிளம்பியதும், கிஷோரி தந்தையின் அருகில் வந்தவள்,
“அப்பா, உங்களுக்கு உண்மையாவே விருப்பமா?” என்று கேட்டாள்.
ஒருவேளை தனக்காகத்தான் அவர் சரியென்றாரோ என்ற எண்ணம் அவளது உள்மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
“ஆமாம்மா, விருப்பம்தான். வீராவோட அப்பா ஐஜிபியா இருந்தப்போ நாம பெங்களூர்ல இருந்தோம். அவங்க அப்பா தவறினதுக்குப் பிறகுதான் நான் இங்க சப் இன்ஸ்பெக்டரா டிரான்ஸ்ஃபர் ஆகி வந்தேன்”
தந்தை கூறுவதற்கு முன்னரே, ராஜிமா கூறியபோது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் ஓர் ஐஜிபியின் மறைவுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்ததும், சுபாஸும் அவரது இரு பிள்ளைகளும் சென்னைக்கு வந்ததும் அவளுக்கு நினைவில் இருந்தன.
‘டாடீஸ் லிட்டில் பிரின்சஸ்’ என்பதால் அவருக்குமே ஒரு சந்தேகம் இருந்தது.
“நீ உண்மைக்குமே வீராவை லவ் பண்றியா?”
“ஆமாப்பா, வீராவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதைவிட அவங்க அம்மாவை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு பா”
கிஷோரி கூறியதைக் கேட்டு சரியென்று தலையாட்டியவர், அவளது தோளைத் தட்டிக்கொடுத்தார்.
அறைக்குள் சென்றவளுக்கு உறக்கமே இல்லை. மனம் முழுவதும் குதூகலமாக இருந்தது.
‘கண்ணை மூடுனா கனவுல அவன்தானே வருவான். வேற யாரு வருவா?’
இரவு முழுவதும் இப்படித்தான் கழிந்தது.
அடுத்த நாளுக்கான விடியலை எதிர்பார்த்திருந்தது வானம் மட்டுமல்ல, இந்தக் கிஷோரியும்தான். தந்தையின் கைப்பேசியிலிருந்து வேணிக்கு அழைப்பு விடுத்து, காலையிலேயே தயாராக இருக்கும்படி கூறியிருந்தாள்.
இருவரும் ஸ்டூடியோவுக்கு வந்ததும், வேணி தண்ணீர் பாட்டிலைத் திறந்தாள். அவளைத் தண்ணீர்கூடக் குடிக்க விடாமல், பாட்டிலை மூடி வைத்த கிஷோரி, கடந்த இரண்டு நாட்களில் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினாள். ராஜிமா கூறிய கதை, காரில் நடந்த சம்பவம், தந்தையிடம் கூறியது என அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சொல்லி முடித்தாள்.
வேணியோ ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கிஷோரியை முறைத்துப் பார்த்தாள்.
“சத்தியமா தெரியாமதான்டீ நடந்துச்சு. வேணும்னே பண்ணலடீ” என்று கண்களைப் பிதுக்கிப் பிதுக்கிக் கூறினாள்.
வேணியின் சந்தேகமோ அனுமான் வாலென நீண்டது.
“சத்தியமா சொல்றேன்டீ. நம்புற மாதிரியே இல்ல. அது எப்படிடீ தெரியாமக் கரெக்ட்டா லிப்புலயே கிஸ் பண்றது?”
“நம்புறதும் நம்பாததும் உன் விருப்பம் போடீ” என்று கூறிவிட்டு, கிஷோரி எடிட்டிங் வேலைகளில் மூழ்கினாள்.
வேணி அவசரமாக,
“துவாரகேஷ் மெயில் அனுப்பியிருக்கான்டீ. பாரு” என்றாள்.
“அந்தப் பரதேசி நாய் பொம்பள பொறுக்கி. எனக்கு எதுக்கு மெயில் அனுப்புது?” என்று முணுமுணுத்தவாறு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தாள்.
விமன்ஸ்வூட்டுக்காகக் கொடுத்திருந்த, ‘மதில்’ குறும்படத்தை இவள் தனது சேனலில் வெளியிட்டதற்காக, அந்த மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதெல்லாம் ஒரு விஷயமா என்று நினைத்தவள், மின்னஞ்சலை நீக்கிவிட்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.
அன்றைய நாளுக்கான படப்பிடிப்பு வேணியின் வீட்டில் நடைபெற்றது. சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய வீடு இல்லை என்றாலும், அவர்களது தேவைக்கேற்பப் படப்பிடிப்பு செய்வதற்கான எல்லா வசதிகளும் இருந்தன.
“நெக்ஸ்ட் பையன் வீட்டுக்கு வந்து, வேற எங்கேயாவது விசிட் பண்ணணும். சென்னை விட்டு அவுட்டர் போகணும்” என்று வேணியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
அப்போது வேணி தனது தொலைபேசியை எடுத்தாள்.
“அடி, சுபாஸ் அங்கிள் எனக்குப் பத்து மிஸ்டு கால் பண்ணியிருக்காரு. உனக்காகத்தான் இருக்கும். சோ, நீ பேசு” என்று தனது தொலைபேசியைக் கிஷோரியிடம் கொடுத்தாள்.
அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள், தந்தை பேசுவதற்காகக் காத்திருந்துவிட்டு,
“அப்பா, சொல்லுங்கப்பா. எதுவும் அவசரமா?” என்றாள்.
“ம்மா, மால்ல இருந்து நிறைய திங்ஸ் வந்திருக்கு மா. அதுல உன்னோட போனும் இருக்கு. சிம்மைக் கழட்டி எடுத்துட்டுப் போனைக் ரிப்பேர் பண்ணக் கொடுத்திருக்கேன் மா”
தந்தைக்கு மகளின் தொலைபேசி எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அவள் கேமராவைக் கொண்டு செல்லாத சில நேரங்களில், தேவையான காணொளிகளைத் தனது தொலைபேசியில்தான் எடுத்து வைத்திருப்பாள்.
“சரிப்பா, ரிப்பேர் பண்ணதுக்குப் பிறகு சொல்லுங்க. நானே போய் எடுத்துக்கிறேன்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
“வேணி, ராஜிமாவோட கொஞ்சம் பேசணும். இதிலேயே கால் பண்ணிக்கிறேன்” என்றாள் கிஷோரி.
“சரி, நீ பேசிட்டு இரு. நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்றாள் வேணி.
ராஜிமாவுக்கு அழைத்தவள், அவர் கூறப்போகும் பதிலை ஆசையோடு எதிர்பார்த்துக் கைப்பேசியைக் காதில் வைத்துக்கொண்டு காத்திருந்தாள்.
ராஜிமாவுடன் பேசப் பேச, வீராதித்யன் இதைப் பற்றி எதுவுமே கூறவில்லை என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.
கிஷோரியின் நினைவெல்லாம் காரில் திடீரென நடந்த சம்பவத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒருவேளை அவன் நீண்ட காலமாகத் துபாயில் இருந்ததால், இதெல்லாம் அவனுக்குச் சர்வசாதாரணமாக இருக்குமோ என்று யோசிக்கவும் தோன்றியது.
ஒரே ஒரு இதழ் ஒற்றலுக்கு ஏன் தான் இவ்வளவு யோசிக்க வேண்டுமோ? அதுமட்டுமா, அவன்மீது இருந்த ஈர்ப்பு எப்போது காதலாக மாறியது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. குழப்பமான மனம் அவளைக் கும்மியடித்தது.
இன்றைய காலத்து நாகரிகத்தை அறிந்து வளர்ந்தவள்தான். பிரபலமான யூடியூபரும்தான். ஆனாலும், ஓர் இதழ் ஒற்றலை அவளால் சாதாரணமாக விட்டுத்தள்ள முடியவில்லை. ஏனோ அவன்தான், அவன் மட்டும்தான், அவனை மட்டும்தான் தனது கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்கும் அவளது பாலாய்ப்போன மனதை வெட்டிக் கூறுபோடத் தோன்றியது அவளுக்கு.
பெருமூச்சு விட்டாள்.
“அம்மா, இதுக்கு மேல உங்ககூட நான் நேர்ல வந்து பேசுறேன்மா” என்றாள்.
அவன் பார்வையிலும், அவன் செயலிலும், அவன் தொடுகையிலும் அவள் உணர்ந்ததெல்லாம் காதல் இல்லையா?
வீராவிடம் ஒரு வார்த்தையேனும் கேட்டிருக்கவில்லையே என்று தன்னிடமிருந்த ஒரு பிழையை உணர்ந்தாள்.
அவனிடம் எப்படியாவது இதைக் கேட்டாக வேண்டும். அதற்கு முன் ராஜிமாவைச் சந்திக்க வேண்டும்.
வேணி வந்தவுடன் அவளையும் அழைத்துக்கொண்டு தாமதிக்காமல் ஓர் ஆட்டோவைப் பிடித்தாள். முதலில் தொலைபேசியைச் சரிபார்க்கக் கொடுத்திருந்த கடைக்குச் சென்றவள், தனது கைப்பேசியைச் சரிசெய்து தருமாறு கேட்டாள். அங்கேயே காத்திருந்து கைப்பேசியைப் பெற்றுக்கொண்ட பிறகு, வீராவின் வீட்டை நோக்கிப் பயணித்தனர் இருவரும்.
ஆட்டோவில் ஏறியவள் தனியாக முணுமுணுப்பதைப் பார்த்த வேணி,
“உனக்கு என்னடீ ஆச்சு? பைத்தியக்காரி மாதிரி தனியா பேசிக்கிட்டு வர?” என்று கேட்டாள்.
கடுப்பில் வேணி கிஷோரியின் தலையில் தட்டினாள்.
“இல்லடீ, அப்பா வீராகிட்ட அம்மாவை வந்து பொண்ணு கேட்கச் சொல்லியிருக்காரு. இவன் அதைப் பத்தி ஒரு வார்த்தைகூட ராஜிமாகிட்ட பேசவே இல்லடீ. இல்லன்னா, நான் இவ்வளவு நேரம் பேசினதுக்கு ராஜிமா எங்கிட்ட எவ்வளவு கேள்வி கேட்டிருப்பாங்க! அப்பாகிட்ட சொன்னப் பிறகு ரொம்பப் பயமா இருக்கு”
“லவ் பண்ணி ரெண்டு நாள் கூட இல்ல. அதுக்குள்ள என்ன இவ்வளவு டென்ஷன் உனக்கு? இப்ப நீ ரிலாக்ஸாகு. கண்டிப்பா ராஜிமாகூட பேசினா நீ தெளிவாகிடுவன்னு நம்புறேன்” என்று கூறிக் கிஷோரியைத் தேற்றினாள் வேணி.
“கண்டிப்பாடீ” என்று சோர்வாகக் கூறினாள் கிஷோரி.
“அடி, இங்க பாரு. இந்த மாதிரி சோகமா மூஞ்சை வச்சுக்கிட்டு இருக்காம, நீ எப்பவும் போலத் துறுதுறுன்னு இருப்பல்ல? அதே மாதிரி இரு” என்றாள் வேணி.
இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கிஷோரி கேட்டில் தட்டினாள். கதவின் சிறிய வழியே எட்டிப் பார்த்த அடியாள்,
“உங்களை வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு வீராபாய் சொல்லியிருக்காரு” என்று கூறிவிட்டு, அந்தச் சிறிய கதவை மூடினான்.
“என்னது?” என்று அதிர்ந்தவள், மீண்டும் பலமாகக் கதவைத் தட்டினாள்.
வைத்தீஸ்வரன் கதவைத் திறந்தார்.
“வைத்தி அங்கிள், நான் உள்ள வரணும்” என்றாள் கிஷோரி.
அவளது குரலின் தொனியைக் கவனித்தவர், அவள் கோபத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எதுவும் கூறாமல் கதவை மூடிவிட்டு, ராஜிமாவைத் தொடர்புகொள்ளுமாறு அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.
அதுவும் கிஷோரிக்குச் சரியென்றே பட்டது.
“பார்த்தியா, இவன் என்ன வேலை பண்ணியிருக்கான்னு?” என்று வேணியிடம் குமுறினாள்.
பின்னர் ராஜிமாவுக்கு அழைப்பு விடுத்தாள். அவரிடம் பேசிய பிறகுதான் அடுத்ததாக என்ன செய்வது என்று முடிவெடுத்து, உள்ளே வருவதற்கு அனுமதி கேட்டாள்.
“இதுக்கு முன்னாடியெல்லாம் நீ எப்படி உள்ள வந்த?” என்று குழப்பத்துடன் வினவினார் ராஜிமா.
“இதுக்கு முன்னாடியெல்லாம் ஆளுங்க உள்ள விட்டிருக்காங்க. இன்னைக்கு உங்க மகன் என்னை உள்ள விட வேண்டாம்னு சொல்லியிருக்காரு. அதனாலதான் விட மாட்டேங்கிறாங்க” என்று வீராவை மாட்டிவிட்டாள்.
மகன்மீது ராஜிமாவுக்குக் கோபம் வந்தது.
அதன்பிறகு ராஜிமாவின் கட்டளையின்படி இருவரும் உள்ளே வந்தனர். வேண்டுமென்றே வீராவின் கண்ணில் படுமாறு சென்று அவன் முன்னால் நின்றாள் கிஷோரி.
சிசிடிவி கேமராவின் காட்சிகளை இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்த வீரா, யாரோ உள்ளே வந்து தன்முன் நிற்பதைப் பார்த்துத் திரும்பினான்.
அது அவள்தான்!
இவளை யார் உள்ளே அனுமதித்தது என்ற கோபத்தில் அவனது குருதி கொந்தளித்தது.
“நீ எப்படி உள்ள வந்த?”
அவனது கோபத்தால் கழுத்தில் பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன.
அவனது கணீரென்ற கர்ஜனைக் குரலில் வேணியே மிரண்டுவிட்டாள். ஆனால், கிஷோரி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனையே முறைத்துப் பார்த்தாள்.
******
உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள் 🙏💓






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!