arrow_back
அன்றிலவன்(ள்) அன்றில் 13
அன்றிலவன்(ள்) chevron_right பகுதி 13 / 15

அன்றில் 13

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அன்றில் 13 

 

 

அவள், “என்னா, எரியுதா? எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு நீ சொன்ன பதில்” என்றாள். கூறியவள், சற்றும் அசராமல், அவன் அனல் தெறிக்கும் பார்வையை எதிர்கொண்டாள்.

 

அவள் கூறுவதெல்லாம் அவன் மூளைக்குள் ஏறவே இல்லை. தான் ஈடுபட்டிருந்த திட்டத்தின் முக்கியமான மீட்டிங்கில் இருந்தவர்கள் அனைவரும் இதைப் பார்த்துவிட்டார்களே என்று நினைக்க நினைக்க, அதுவே அவனுக்குப் பெரும் ஆதங்கமாக இருந்தது. கட்டுப்பாட்டை மீறிய கோபத்தில் அவனது கை பரபரக்க, அவளது கன்னத்தில் பொளீரென்று ஓர் அறை விட்டிருந்தான்.

 

கன்னத்தைச் சரித்தவள், கையை வைத்துக்கொண்டு நெற்றியில் விழுந்தாடிய கேசத்தை விரல்களால் காதுக்குப் பின்னால் ஒதுக்கி வைத்துவிட்டு, அவனையே முறைத்துப் பார்த்தாள். மறுபடியும் அவன் இதழ்களை முரட்டுத்தனமாகச் சிறையிட்டாள். காண்டானவன் அவளைத் தள்ளிவிட்டான். ஆனால், அவள் கீழே விழவில்லை.

 

வீறுகொண்ட வேங்கையாய் அவன் முன்னே நின்றிருந்தாள்.

 

“என்ன வீராதித்யன், திருப்பி அடிக்கப் போறீங்களா? அடிங்க! எனக்கு எந்தப் பிராப்ளமும் இல்ல. நானும் உங்களை அடிப்பேன், இங்க அடிப்பேன்!” என்று உதட்டை சுட்டிக்காட்டிக் கிசுகிசுப்பாகச் சொல்லி, அவனைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினாள்.

 

வீராவின் முன் இருந்த நாற்காலியைக் காலால் எட்டி உதைத்தவன், தரையில் காலை ஓங்கி அடித்தான். அவனைச் சுற்றி இருந்தவர்களோடு சேர்த்து அந்த இடமே அதிர்ந்தது.

 

“ஹோ… ஷிட்!”

 

ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்டோமே என்ற ஆத்திரம் அவனது கண்களில் செந்தணல்களைக் கக்கிக்கொண்டே இருந்தது.

 

“வீரா பாய், டாட்டா பாய்!”

 

ஒருவிதக் கிளுகிளுப்போடு அந்த இடத்தை விட்டுச் சிறகு விரிந்த பட்டாம்பூச்சியாய் வெளியே வந்தாள்.

 

உயிர்த்தோழியின் முகத்தில் கண்ட ஆனந்தத் தாண்டவத்தைத் தனது விழிகளாலேயே ஆராய்ந்தாள் வேணி.

 

“என்னடி, ரொம்பத் துள்ளிக் குதிக்கிற?”

 

கிஷோரியின் உதடுகளை உற்றுப் பார்த்த வேணி, “ஏய்! எங்கடீ பாதி லிப்ஸ்டிக் காணோம்?”

 

“மீதி பாதி அவன்கிட்ட டீ!”

 

வெட்கமேயின்றிச் சிரித்தவாறு கூறினாளே!

 

அவள் கூறியதன் உள்ளர்த்தத்தை வேணி புரிந்துகொண்டாள். தோழியின் தீவிரமான நிலையை அறிந்தவள், தலையில் கையை வைத்தாள். உள்ளே என்ன நடந்ததென்று குத்துமதிப்பாக ஊகித்துவிட்டாள்.

 

“உன்னோட லிப் சின்னது இல்லன்னு நீ ப்ரூவ் பண்ணிட்ட, அதானே?”

 

அவள் கண்கள் மின்ன, “யெஸ்! யெஸ்! ஆஃப் கோர்ஸ்!” என்றாள்.

 

வேணியோ, “நீயெல்லாம் பொண்ணாடீ?” என்று கேட்டாள். கிஷோரி தவறான பாதைக்குச் செல்கிறாளோ என்று அவள் மனம் அழுத்தியது.

 

“ஏன்டீ, உனக்கு ஏதாவது டவுட் இருந்தா சொல்லு. கிளியர் பண்ணிடுறேன்” அதையும் சிரித்தவாறே கூற, வேணிக்கு கிஷோரியை மாங்கு மாங்கென்று அடிக்கத்தான் தோன்றியது.

 

கடுப்போடு வேணி, “உனக்குக் கிஷோரின்னு பேர் வச்சிருக்கக் கூடாதுடீ. கிறுக்கின்னு பேர் வச்சிருக்கணும்” என்று கூறியதோடு நடையைக் கட்டினாள். அவள் பின்னாலேயே கிஷோரியும் தத்தித் தாவிக்கொண்டு போனாள்.

 

வேலையாட்களின் உதவியுடன் ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கிய ராஜிமா, இறுதிப் படியில் ஒரு நிமிடம் அமர்ந்து மூச்சை வாங்கினார். மீண்டும் எழுந்து வந்தவர்,

 

“ஆதி, இங்கே என்ன நடக்குது? மேல வரைக்கும் நீ கத்துற சத்தம் கேக்குது”

 

கிஷோரி கீழே இல்லாததை உணர்ந்ததும், அவள் எதுவும் கூறாமல் சென்றது ராஜிமாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவன் அவளுக்கு ஏதாவது செய்திருப்பானோ என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.

 

ராஜிமாவின் நேர்ப் பார்வை வீராவை விட்டு அங்கும் இங்கும் அசையாமல் இருக்க, அவனோ பதிலே கூறவில்லை.

 

“ஆதி, உன்னைத்தான் கேக்குறேன். என்ன ஆச்சு?”

 

தாய் வந்தது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும், பதில் கொடுப்பதற்காக அவன் வாயைத் திறக்கவில்லை. மகனின் முகத்தைப் பார்த்த ராஜிமா, அவனிடம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தார்.

 

வைத்தியின் புறம் திரும்பிய ராஜிமா,

 

“இவன் எதுக்குப் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கான், வைத்தி?”

 

“பேய்தாம்மா! ஆனா, க்யூட்டான பேய் வீரா பாயை அறைஞ்சிட்டு!”

 

வைத்தி சிரித்தவாறே கூற, வீராவுக்குக் கோபம் கொப்பளித்தது. அவன் வைத்தியை ஒரு முறைப்புடன் பார்க்க, அதோடு அவர் வாயை மூடிக்கொண்டார்.

 

வைத்தி கூறுவது ராஜிமாவுக்குப் புரியவில்லை. வைத்தியாலும் நடந்ததைப் பெரியவரிடம் கூற முடியவில்லை.

 

ராஜிமா என்னதான் நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டார்.

 

ஆட்டோவில் வேணி வாயை மூடிக்கொண்டே வந்தாள். கிஷோரியிடம் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. வேணி இப்படிப் பேசாமல் வருவது கிஷோரிக்குச் சலிப்பாக இருந்தது.

 

கிஷோரியின் கட்டுப் போட்டிருந்த கை வேணியின் மீது தட்டுப்பட்டது.

 

“ஏய், எருமை! இவ்வளவு பண்ணிருக்க, உன் கையைப் பார்த்தியாடீ?” என்று வேணி அதட்டிக் கேட்டாள்.

 

“ஏன்டீ, எனக்கு இப்போ வலிக்கல?”

 

உண்மையாகவே, சாகசங்களைச் செய்யும்போது தனது கையில் ஒரு கட்டு இருப்பதையே மறந்துவிட்டுச் செயல்பட்டிருந்தாள்.

 

“பிளட் லீக் ஆகி இருக்குடீ! பேண்டேஜைப் பாரு!”

 

என்று வேணி அவளுக்குக் குட்டு வைத்தாள்.

 

பார்த்தபோது, காயத்திலிருந்து லேசாக உதிரம் கசிந்திருந்தது.

 

“அப்படியே ஹாஸ்பிடல் போயிட்டு, பேண்டேஜ் மாத்திட்டு போயிடலாம்” என்றாள் வேணி.

 

மருத்துவமனையில் கட்டைக் கழற்றிப் பார்த்தபோது, ஆறியிருந்த காயத்தை அவள் கையை அங்கும் இங்கும் அசைத்ததால் மீண்டும் உதிரம் கசியத் தொடங்கியிருந்தது.

 

“நர்ஸ், கட்டு போடாம ஏதாவது ஆயின்மென்ட் மாதிரி போட முடியுமா?” என்று கிஷோரி கேட்டாள்.

 

“இருக்கு” என்றதும், மருத்துவரிடம் மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மருந்தகத்தை நோக்கி வந்தனர்.

 

“மேம், பிரிஸ்கிரிப்ஷன்ல இருக்கிற ஜெல் லியா பிராண்ட்லதான் இருக்கு. தரட்டுமா?” என்று மருந்தகத்தில் வேலை செய்யும் பெண் கேட்க, கிஷோரி சரியென்று தலையசைத்தாள்.

 

‘லியா’ என்ற பெயர் அவளுக்கு நினைவுக்கு வர, லியா யார் என்று யோசிக்கத் தொடங்கினாள்.

 

வேணி இரவு உணவைக் கிஷோரிக்கு ஊட்டிவிட்டு, அவளுக்கு அந்த ஆயின்மென்ட்டைப் போட்டுவிட்ட பிறகு தனது வீட்டுக்குக் கிளம்பினாள்.

 

இந்த மனதிற்கு இரக்கமே இல்லையா? இரவு பகலாக அவன் நினைவுகளை மட்டுமே அள்ளிக் கொடுத்த ஏழு வண்ண வானவில்லின் நிறங்களைப் போல, அவன் நினைவுகளை மட்டுமே கிஷோரிக்கு வழங்கிக்கொண்டே இருந்தது அவளது மனம்.

 

“லியாங்கிற கேரக்டர் வீராவோட லைஃப்ல தப்பான கேரக்டரா மட்டும் இருக்கவே கூடாது” என்று மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தாள்.

 

லியாவைப் பற்றி ராஜிமாவுக்குத் தெரிந்திருக்குமா? அப்படி இல்லையென்றால், வைத்திக்காவது தெரிந்திருக்குமா? யாரிடம் இதைப் பற்றிய விளக்கம் கேட்டுக்கொள்வது?

 

அடுத்த முறை ராஜிமாவைப் பார்க்கச் செல்லும்போது, இந்த லியாவைப் பற்றி அறிந்தே ஆக வேண்டும் என்று மனதில் உறுதி செய்துகொண்டாள்.

 

வீட்டுக்கு வந்த தந்தையுடன் கலகலவென்று பேசிவிட்டு, அவர் கலந்து கொடுத்த காஃபியைப் பருகிவிட்டு, தனது அறைக்கு வந்தாள். தொலைபேசியை எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினாள்.

 

யூடியூப் டிரெண்டிங்கைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்குப் போர் அடிக்க, இன்ஸ்டாகிராமுக்குச் சென்றாள். நிறைய காதல் கவிதைகளுடன் கூடிய புகைப்படங்களைப் பார்த்தவளுக்கு வீராவின் நினைவு மீண்டது.

 

தொலைவேன் என்று அறிவாள். ஆனால், அவனுக்குள் மொத்தமாக இப்படி தொலைந்துபோவாள் என்று அவள் அறிந்திருக்கவில்லை.

 

அருகில் இருந்தபோது அவனை அணைத்து மகிழ்ந்தவள், இப்போது தொலைவில் இருப்பதால் அவனை நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்.

 

தனக்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்ததென்று அவளுக்கே தெரியவில்லை. அவனது சட்டைக் காலரைப் பற்றியிழுத்து முத்தமிட்டது அவளுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது.

 

“நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேனோ?”

 

என்று எண்ணியவள், அடுத்த நொடியே தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

 

“ப்ச்… பரவால்ல! அவன் எல்லாம் என்ன ரௌடி? ஒரு நிமிஷம் கிஸ் பண்ணதுக்கே மூச்சு வாங்க ஆரம்பிச்சுட்டான். ஸ்ட்ரெந்த்தே இல்ல!” மெத்தையில் உருண்டாள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அவனது படத்தை முத்தமிட்டாள்.

 

“நான்தான் வேணும், நான் மட்டும்தான் வேணும்னு சொல்ற அளவுக்கு நான் உன்னை டார்ச்சர் பண்ணப் போறேன்” என்று அவனுடைய படத்தைப் பார்த்து, தனது குண்டு விழிகளை உருட்டி உருட்டி மிரட்டினாள்.

 

அதன் பிறகு, அவனுடைய பக்கத்தில் லியாவைப் பற்றி ஒரு சிறு துரும்பாவது கிடைக்குமா என்று தேடினாள்.

 

மொத்தம் இரண்டாயிரம் பதிவுகள் இருந்தன. துபாயில் இருந்தபோது போட்ட பதிவுகள் ஏராளம். ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தாள். ஒரு தகவலும் சிக்கவில்லை.

 

அவனது முகநூல் பக்கத்தையும் தோண்ட ஆரம்பித்தாள். இன்ஸ்டாகிராமில் இருந்த பதிவுகள்தான் முகநூலிலும் இருந்தன.

 

*****

 

யாருடைய முகத்தையும் பார்க்க முடியாமல், தனது அறையில் மடிக்கணினியை நோண்டிக்கொண்டிருந்தான் வீரா. கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளில், கிஷோரி அவனை இழுத்து முத்தமிட்ட காட்சியைப் பலமுறை பார்த்துவிட்டான். அவனுக்கே ஒரு நிமிடம் உடல் சிலிர்த்தது.

 

அது பொல்லாத நேரம்! அறையில் அவன் தனியாக இருக்க, நேரமும் கடகடவென்று நகர்ந்தது. நள்ளிரவில் அவனைப் பைத்தியம் பிடித்தவனைப் போலத் தனக்குத்தானே பேசவும் வைத்தது.

 

அவனுக்குள் இருந்த மனசாட்சி வெளியே வந்தது.

 

வீராவோ, ‘இது வேறயா?’

 

அவனுடைய தோற்றத்தையே கொண்டிருந்தது அந்த உருவம். ஆனால், குணத்தில் சற்றுச் சிறந்ததாக இருந்தது.

 

“என்ன ஆதி, அவளை லவ் பண்றியான்னு உனக்கே சந்தேகமா இருக்கா?” என்று கேட்டது.

 

“நானே ஏற்கெனவே குழம்பிப்போயிருக்கேன். நீ பேசாம உள்ளே போயிரு” என்று வீரா தனது மனசாட்சியையே மிரட்டினான்.

 

“என்னப்பா, உனக்கு இவ்வளவு கோபம் வருது? இதெல்லாம் ஆகாது. கல்யாணத்துக்குப் பிறகு ரொம்பக் கஷ்டப்படுவ. பேசாம இருக்கிறதுக்குத்தான் நான் உனக்குள்ளிருந்து வந்தேனா? குழம்பியிருக்கிற உனக்குக் கொஞ்சம் நல்ல புத்தி சொல்லலாம்னு வந்தேன். நீ என்னன்னா என்னை விரட்டுற!”

 

என்று அவனது மனசாட்சி புலம்பியது.

 

“இங்க பாரு, இதெல்லாம் கேட்கிற மைண்ட்செட் நான் இல்ல. எங்கிட்ட எதுவும் செல்லாது” என்று கோபமாகச் சொன்னான் வீராதித்யன்.

 

அவன் அமைதியாக இருக்க, அவனது மனசாட்சி மீண்டும் தொடர்ந்தது.

 

“அவ மேல ஃபீலிங்ஸ் இல்லாமதான் அன்னைக்கு சந்துல அவளோட இடுப்பை இறுக்கிப் பிடிச்சிருந்தியா?”

 

மனசாட்சி என்றால் சும்மாவா? அவன் மனதையே பிடித்து உலுக்கிவிட்டது.

 

“அந்தச் சூழ்நிலை வேற. யாரா இருந்தாலும் என்னால யாரும் பாதிக்கப்படக் கூடாது. ஃபர்ஸ்ட் நீ அதைப் புரிஞ்சுக்கோ” என்று கோபமாகக் கூறினான்.

 

“இல்ல ஆதி, உன்னோட கோபத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோ. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு. உன்னோட கேரக்டருக்கு எல்லாம் இந்த மாதிரி நல்ல பொண்ணு கிடைக்கவே மாட்டா. சோ, கிடைக்கிற வாய்ப்பை விடாத!”

 

என்று அவனுக்குப் புத்திமதி சொல்ல,

 

“ஐயோ!”

 

என்று கத்தினான் வீரா. அவன் கத்தும் சத்தம் பிடிக்காமல், அவனுக்குள் வந்த மனசாட்சியும் மீண்டும் உள்ளே சென்று ஒளிந்துகொண்டது.

 

அவள்மீது தனக்கு இருப்பது வெறும் ஈர்ப்பா, காதலா என்று அவனுக்கே கூறத் தெரியவில்லை. குழப்பத்தில் நிலைகுலைந்து போனான்.

 

ஒரு சமயம் அவள் பயங்கரமான அழகு! சில சமயம் அவள் அழகான பயங்கரம்!

 

*****

 

கதையின் ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதனை சொல்லுங்கள் வாசகநெஞ்சங்களே! 🙏❤️

அடுத்த அத்தியாயம்

அன்றில் 14

அன்றில் 14 இரண்டு வாரங்களுக்குப் பிறகு, குளிர்ந்த காற்றின் வேகம் குறைய, மேகம் மூடிய வானம் சூரியனின் முகத்தைக் காட்டத் துடிக்க, ராஜிமாவின் உதட்டில் ஒட்டியிருந்த கள்ளச் சிரிப்போடு தொடங்கியது இந்த இனிமையான காலைப் பொழுது. கண்களைக் கவரும் வகையில் நன்கு பூத்துக் குலுங்கிய…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்