• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய வாழ்விற்கு இயற்பியல் பாடங்கள் (working title) - 1 - ஊக்கின் விதியும் இடைக்கண் முரியாமையும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Did you like this post?

  • Yes

  • May be

  • No


Results are only viewable after voting.

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,205
Location
Chennai, Tamil Nadu, India
*இன்னும் தலைப்பு வைக்கவில்லை*
அல்லது
*இனிய வாழ்விற்கு இயற்பியல் பாடங்கள்*

அறிமுகம்:

நாம் ‘தத்துவம்’ என்பதை ஆங்கிலத்தில் ‘பிலாசபி’ (Philosophy) என்பர். இந்தச் சொல்லுக்கான நேரடிப் பொருள் ‘அறிவு விழைவு’ என்பதாகும் (பிலோ - காதல், விருப்பம்; சோபியா - அறிவு; நம்மை [மனிதர்களை]க் குறிக்கும் உயிரியல் பெயரான ‘சேப்பியன்சு’ என்பதும் இவ்வேரிலிருந்து கிளைத்ததே!) இயற்பியல் என்பதும் இந்த அறிவு விழைவின், அறிவுத்தேடலின் ஒரு நீட்சியே. நம்மைச் சுற்றியுள்ள பூதவுலகின் இயல்புகளைப் பற்றிய அறிவுத்தேடல்!

இப்பேரண்டத்தின் இயங்குமுறையில் ஒரு மடக்குத்தன்மை உள்ளது. பருமையில் நுண்மையும் நுண்மையில் பருமையும் ஒன்றையொன்று எதிரொளித்துக்கொண்டு இருக்கின்றன! (மேற்படி தொடர் தமிழில் புரியவில்லை என்பவர்களுக்காக ஆங்கிலத்தில்: The macrocosmos and the microcosmos contain each other as they reflect the other in themselves!)

எனவேதான், நமக்கு வெளியே, நம்மைச் சுற்றி இருக்கும் பூதப் பேரண்டத்தின் இயல்பையும் இயக்கத்தையும் விளக்க முனையும் இயற்பியல் விதிகளே மெய்யியல் கருத்துகளாக நம் வாழ்விற்கும் பொருந்தக் கூடியவை என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் எனக்கு ஏதேனும் ஒரு திருக்குறள் நினைவிற்கு வரும், அதைப் போலவேதான் பல வேளைகளில் சில இயற்பியல் விதிகளும் நினைவிற்கு வந்துள்ளன. அவற்றையே ஒரு நூலாக, இயற்பியல் விதிகளை வாழ்க்கைச் சூழல்களோடு பொருத்திப் பார்த்து அதன் மூலம் வாழ்வை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அணுக உதவும் ஒரு கையேடாக எழுத விருப்பம்.

எங்கே தொடங்குவது என்ற முடிவில்லாத சிந்தனை அலையில் சிக்குவதைவிட, எங்கேயாவது தொடங்கிவிடுவோம் என்று தொடங்கிவிட்டேன். அவ்வப்போது நேரங்கிடைக்கும்போதும், சிந்தனையில் மின்னல் வெட்டும்போது எழுதப் போகிறேன்... பின்னர் இவற்றைத் தொகுத்துக்கொள்ளலாம்!

இயற்பியல் விதிகளைத் தத்துவமாகப் பார்த்தல் என்ற வகையில் நியூட்டனின் மூன்றாம் விதி படாத பாட்டுவிட்டது, பாவம்! கூட்ட நெரிசலில் தெரியாமல் நம் காலை மிதித்த நபர் மீண்டும் தெரியாமல் இன்னொரு காலால் மிதிபடுவது தொடங்கித் திருக்குறளின் ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்...’ ‘கர்மா’ தத்துவம்வரை இந்த நி.மூ.வி. படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல! (ஒரு திரைப்படம் கூட இருக்கிறது இந்தப் பெயரில்!)

ஒரு இயற்பியல் மாணவனாய் நான் அப்படியெல்லாம் இயற்பியல் விதிகளைப்படுத்தக் கூடாது என்றே விரும்புகிறேன். மேம்போக்காக இல்லாமல் சற்றே ஆழ இவ்விதிகளைத் தத்துவங்களாக அலசுவதே என் நோக்கம். அது நிறைவேறியதா இல்லையா என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
*******

*1. ஊக்கின் விதியும் இடைக்கண் முரியாமையும்*

இயற்பியல் அல்லது இயந்திரப் பொறியியலில் ஊக்கின் விதி (Hooke's law) என்பது பொருள்களின் மீள்திறன் (elasticity) பற்றியது.

ஒரு சுருள்வில்லை (spring) அதன் இயல்பான நீளத்திலிருந்து நீட்டினாலோ அழுத்தினாலோ அதனை எதிர்த்து ஒரு விசை எழும். நாம் எத்தனைக்கெத்தனை நீட்ட/அழுத்த முனைகிறோமோ அந்த விசையும் அத்தனைக்கத்தனை வலுவுள்ளதாக அந்நீட்சி/அமுக்கத்தை எதிர்த்தெழும். இதுதான் ஊக்கின் விதி. அச்சுருள்வில்லை நீட்ட/அமுக்க முயலும் நம் முனைப்பை நாம் விட்டதும் அது தன் இயல்புநீளத்திற்குத் திரும்பிவிடும், இதற்கு அந்த எதிர்விசையே காரணம்!

சுருள்வில் மட்டுமல்ல, பொதுவாகவே எல்லாப் பொருளுக்கும் ஒரு மீள்திறன் உண்டு. ஒரு கம்பையோ குச்சியையோ எடுத்து வளைத்தால் அதன் மீள்திறனை நாம் உணரலாம். ‘வில்’ என்ற பண்டைய ஆயுதத்தின் அடிப்படையே இதுதான்! இந்த மீள்திறன் அடிப்படையில் இரண்டு அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பினால் உண்டாவது. திடப்பொருள்களில் உள்ள அணுக்கள் அவற்றுக்கிடையிலான விசைகளின் பயனாய் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் (திசை & தொலைவு) அமைந்திருக்கும். ஒரு திடப்பொருளை நாம் இழுத்தாலோ அமுக்கினாலோ வளைத்தாலோ முறுக்கினாலோ இந்த அணுவமைப்பை மாற்ற முனைகிறோம், அதனை அந்த அணுக்களுக்கிடையிலான விசைகள் எதிர்ப்பதன் ஒட்டுமொத்தமே அப்பொருளின் மீள்திறன் / எதிர்விசை!

ஆனால் இந்த மீள்திறன் / எதிர்விசைக்கும் ஓர் எல்லை உண்டு! எந்தப் பொருளானாலும், அதனால் ஓரளவு விசையைத்தான் எதிர்த்து நிற்கவோ மீளவோ இயலும். அப்பொருளின் மீது செலுத்தப்படும் விசை (இழுவை/அமுக்கம்/முறுக்கு) ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் அந்தப் பொருள் ‘இற்று’விடும் (இதனை ’குழைமத் திரிவு’ Plastic deformation என்பர்!)

’அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழியை ஓரளவு இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், திருவள்ளுவர் இதனை இரண்டு குறட்பாக்களில் அழகாகச் சொல்கிறார்:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் [473]

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் [475]

-பொருட்பால்/அரசியல்/வலியறிதல்

’தனது வலிமையை உணராமல் ஊக்கமிகுதியால் ஒரு கடினச் செயலில் ஈடுபட்டு அதனை முடிக்க இயலாமல் இடையிலேயே ‘உடைந்தவர்’ (முரிந்தார்) பலர்’ என்கிறார் [473].

திருவள்ளுவர் இங்கே ‘முரிந்தார்’ என்று கையாண்டுள்ளது எப்போதுமே என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு சொல்லாட்சி!

’மயிலிறகாகவே (பீலி) இருந்தாலும் அதனை அளவுகடந்து ஏற்றினால் வண்டியின் அச்சு உடையும் (இறும்)’ [475] என்ற குறட்பாவிலும் திருவள்ளுவர் ஊக்கின் விதியை அப்படியே சொல்வதாகவே தோன்றுகிறது எனக்கு!

இவற்றால் நாம் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம் ஒன்றுதான்:

//எந்த ஒரு செயலையும் எவ்வளவு தொலைவு ’இழுக்கலாம்’ என்று அறிந்து செயல்பட வேண்டும்//

பொருள்களைப் போல காரியங்களுக்கும் ஒரு ‘மீள்திறன்’ இருப்பதாகக் கருதிக்கொள்ள வேண்டும். அந்த மீள்திறன் என்ன/எவ்வளவு என்று அறிந்துகொள்ளும் திறனைப் பெற்றவர்கள் வாழ்வில் எதையும் எளிதாகக் கையாள்வர்!

முதல் எடுத்துக்காட்டாக ஓர் உறவுமுறைச் சிக்கலைக் கொள்வோம்:

ஒரு நண்பரோடோ உறவினரோடோ ஏன் காதலன்/காதலியோடோ ஒரு ஊடல் என்று வைத்துக்கொள்க.

இந்த ஊடலை எவ்வளவு தொலைவு நீளவிடலாம்?
எந்த அளவுவரை அந்த நண்பர்/உறவினர்/காதலர் நம் செயலை மன்னித்து நம்மோடு மீண்டும் இணக்கமாவர்?

அதுதான் அந்த உறவின் ‘மீள்திறன்’! அதைத் துல்லியமாக அறிந்துகொண்டால் அந்த ஊடலை நாம் சிக்கலின்றிக் கையாள்வோம்!

இல்லாவிட்டால், அளவுக்கதிகமாக அவ்வூடலை நீளவிட்டு அவ்வுறவை ‘இற்று’விடச் செய்து கையாலாகமல் புலம்பிக்கொண்டிருப்போம்!

ஓர் சூழலோ உறவோ தனது மீள்திறன் எல்லையை நெருங்குகிறது என்று உணரும் வேளையில் நாம் உடனடியாக விட்டுக்கொடுத்துப் போக வேண்டும்.

(திருக்குறள் 1327வது குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை மிக நுட்பமான ஒரு உளவியலைச் சொல்லியிருக்கிறார் பாருங்கள், காதலுக்கு மட்டுமின்றி அதைப் பிற உறவுகளுக்கும் கொள்ள இடமுண்டு!)

இரண்டாவது எடுத்துக்காட்டாக ஒரு குறிக்கோளைக் கொள்வோம்:

ஒரு பொருள்/இடம்/நிலையை அடைய வேண்டுமென்ற குறிக்கோளோடு செயல்படுபவர் அதுகுறித்த *தனது* ‘மீள்திறன்’ என்ன என்பதை அறிந்திருத்தல் வேண்டும்.

(இந்தக் கருத்தைத்தான் மேற்சுட்டிய 473வது குறட்பா சுட்டுகிறது!)

இந்த மீள்திறனைத்தான் திருவள்ளுவ நாயனார் ‘உடைத்தம் வலி’ என்கிறார்.

ஒரு குறிக்கோளை நோக்கி எவ்வளவுவரை முயலலாம்? அதற்காக நமது நேரத்தையும் உழைப்பையும் பொருளையும் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதில் ஒரு தெளிவு தேவை. ‘முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவரே சொல்லியிருந்தாலும், அம்முயற்சியில் ஒரு வரையறையும் தெளிவும் வேண்டும்.

அஃதின்றிக் கண்மூடித்தனமாக முனைவதைத்தான் வள்ளுவப் பேராசான் ‘ஊக்கத்தின் ஊக்கி’ என்கிறார்! அது கூடாது!

இன்று மேலாண்மைக் கல்வியில் ‘சுவாட்டு அனாலிசிசு’ (SWOT Analysis: S - strength, W - weakness, O - oppurtunities, and T - threats) என்ற அலசல் முறையை முன்வைக்கிறார்கள்.

ஒரு செயலைச் செய்யப் புகுமுன் அதனைச் செய்வதற்கான நமது பலம் (S), பலவீனம் (W), வாய்ப்புகள் (O), & இடர்கள் (T) என்னென்ன என்பதைச் சிந்தித்துப் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். பின் அவற்றை சீர்தூக்கிப் பார்த்து அச்செயலை நாம் செய்யப் புகுதல் கூடுமா கூடாதா என்று துணிய வேண்டும் (’எண்ணித் துணிக கருமம்’ என்றாரே!)

நம் பலவீனங்களைப் பலமாக்க வாய்ப்புகளையும், இடர்களை வாய்ப்புகளாக்க பலத்தையும் பயன்கொள்ள இயலுமா என்று ஆராய வேண்டும். இத்தனை ஆராய்ச்சிக்குப் பின்னும் அச்செயல் நமக்குக் கூடாது என்று தெரிந்தால் அதனை மேற்கொள்ளாது கைவிட வேண்டும். அதுவே அறிவு!

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் [471]

-பொருட்பால்/அரசியல்/வலியறிதல்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் [504]

-பொருட்பால்/அரசியல்/தெரிந்துதெளிதல்

என்ற குறட்பாக்கள் இந்த ‘சுவாட்டு அனாலிசி’சைத்தான் செயல்களுக்கும் [471] மனிதர்களுக்குமாகச் [504] சொல்கிறது என்று நான் கருதுகிறேன்.

471 = SWOT: தன்வலி - பலம், வினைவலி - தனது பலவீனம், மாற்றன் வலி - இடர், துணைவலி - வாய்ப்பு

’தூக்கிச் செயல்’ என்ற சொல்லாட்சியும் வியப்பானது! ‘தூக்கி’ என்பது அலசி ஆராய்ந்து (analyse) என்ற பொருளின் வருகிறது. ஆனால் இதன் நேரடிப் பொருள் ‘துலாத் தட்டில் பண்டங்களை வைத்துத் தூக்கி நிறுத்து எடைபோடுவதை’ப் போல ‘தூக்கி’ச் செயல் என்பதாம்!

(சும்மாவா பாராட்டினார்கள் ‘குறுகத் தரித்த குறள்’ என்று!)

திடப்பொருள்களின் மீள்திறனை அளப்பது எளிது! சதுரமீட்டருக்கு இத்தனை நியூட்டன் (N/m^2) என்றோ சதுரவங்குலத்திற்கு இத்தனை பவுண்டு (psi - pounds per square inch) என்றோ ஓர் எண்ணாகச் சொல்லிவிடலாம்!

’என் மனைவியின் மீள்திறன் இவ்வளவு’ என்று சொல்ல இயலாதே!

இங்குதான் இயற்பியல் விதி வாழ்க்கைத் தத்துவமாக மாறுகிறது!

ஆனால், இதையும் இயற்பியல் வாயிலாகவே அணுகும் வாய்ப்பும் உள்ளது.

இயந்திரப் பொறியியலில் பொருள்களின் வலிமையை அறியும் சோதனைகளைப் பொதுவில் இரண்டாக வகைப்படுத்துவர்:
1. அழி சோதனை (Destructive testing)
2. அழிக்காச் சோதனை (Non-destructive testing / NDT)


ஒரு மாழையின் (உலோகம்) மீள்திறன் எல்லையை அறிய வேண்டுமானால் அதனை ஒரு கம்பி/உருளை வடிவில் எடுத்துக்கொண்டு, அதன்மீது கொஞ்சம் கொஞ்சமாக இழுவிசையைச் செலுத்த வேண்டும். விசையைச் செலுத்தச் செலுத்த அக்கம்பி/உருளை அடையும் நீட்சியைக் கண்காணித்துக்கொண்டே வந்து, அது முற்றாக இற்றுப்போகும் புள்ளியை (அதற்கான இழுவிசையை) குறித்துக்கொள்ள வேண்டும்.

இது அழி சோதனை - அப்பொருளின் வலிமையை அறியும் முயற்சியில் அப்பொருளையே நாம் அழித்துவிடுகிறோம்!

வாழ்வின் எல்லா சூழலுக்கும் இது போன்ற ஒரு அணுகுமுறையை நம்மால் கைக்கொள்ள இயலாது!

என்னால் எத்தனை மணித்துளிகள் மூச்சை அடக்கியிருக்க முடிகிறது என்று சோதிக்க முனைந்து உயிரை விட்டுவிடக் கூடாதல்லவா?

அல்லது, காதலியோ/காதலனோ எவ்வளவு தொலைவு நம் பிழைகளைப் பொறுப்பார்கள் பார்ப்போம் என்ற சோதனையில் இறங்கி முற்றாக உறவை முறித்துக்கொள்ளக் கூடாதே!

இது போன்ற சூழல்களில்தான் நாம் பிறரின் பிழைகளிலிருந்து பாடம் கற்கக் கற்க வேண்டும்!

அழிக்காச் சோதனைகளில் மீயொலி (ultrasound) ஊடுகதிர் (x-ray) முதலியவற்றைக் கொண்டு பொருளை அலசி அதன் பலம்/பலவீனங்களை அறிவர்.

அப்படி நாமும் செயல்/சூழல்/மனிதர்களின் உட்கிடக்கையைத் துய்ப்பு (அனுபவம்) & அறிவு ஆகியவற்றைக் கருவிகளாகக் கொண்டு அழிக்காச் சோதனையாக அவற்றின் மீள்திறனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

’சொல்லுதல் யார்க்கும் எளிய’ என்பதற்கேற்ப இக்கருத்தை நான் எளிதாக முன்வைத்துவிட்டேன், இதனை வாழ்வில் சரியாகக் கையாள்தல் ஒரு சவால்தான் என்பதையும் நன்கு அறிவேன்!

விதயங்களை அவற்றின் மீள்திறன் மூலம் கையாளுதல் என்ற விதயத்துக்குமே ஒரு மீள்திறன் உண்டு, ஓர் எல்லை உண்டு! :giggle::giggle:

மெய்ப்பொருள் காண்க! :)(y)

நன்றி! :)

(C) Vijayanarasimhan, July, 2021. All rights reserved. No part of this work may be reproduced or redistributed in any form other than as a direct or embedded link to this original post. Any such violation will attract strict legal actions under copyright laws.
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,249
Location
Trichy
ஊக்கின் விதி நல்லா இருக்கு ஆத்தரே ஆனா அதிலும் மனைவிமார்களை மட்டும் இழுத்திருக்கிறீங்களே😔😔 கொஞ்சம் கணவன்மார்களையும் இழுத்து விடுங்க😜😜( எவ்வளவு நாளைக்கு தான் நாங்களே இழுப்பட்டு இருக்கிறது😝😝😝)
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,527
Reaction score
45,011
Location
India
சத்தம் இல்லாமல் இயற்பியல் class வந்து இருக்கீங்களே சகி😏😏
Athu vanthu guha baby இயற்பியல் வாத்தியார் லேட்டா வந்தா முட்டிக்கால் போட சொல்வாராம், 100 தோப்புக்கரணம் போட சொல்வாராம் அதான் he he
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top