ப்ரியங்கள் இசைக்கின்றனவே!
இசை 11
அடித்து பிடித்து எப்படியோ சென்னை வந்து சேர்ந்தவனுக்கு, அங்கிருந்து வேளச்சேரிக்கு எப்படி செல்ல என்று தான் புரியவில்லை.
இந்த மழையில் ஒரு வண்டியும் கிடைக்காது போக, தாம்பரத்தில் நின்றிருந்தான்.
வெளுத்து வாங்குகின்ற மழையால் சாலையோரம் இருந்த மரங்கள் ஆங்காங்கே கீழே விழுந்து மின்சாரம் தடைபட்டது.
ஜெகஜோதியாய் இருக்கும் சென்னை மழையினால் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய தார் சாலையில், ஆறு போல் வெள்ளம் ஓடியது.
அடுத்து இங்கிருந்து எப்படி போவது என்று கௌதம் சிந்திக்கையிலே மனைவி மூலமாக விவரம் அறிந்த வெற்றி நண்பனுக்கு அழைத்துவிட்டான்.
நண்பனின் எண்ணை திரையில் கண்டதுமே அவனுள் ஒருவகை நிம்மதி.
"மச்சான்!!!"
"வாய மூடு டா. உன்ன யாரு இப்போ கிளம்பி இங்க வர சொன்னது. நீ என்ன காதல் சுகமானது தருண் குமாரா டா, காதலிய தேடி இந்த டைம்ல வந்துருக்க. எதுக்கு டா அந்த கடவுள் ஆயிரத்து நானூறு கிராம் மூளைய மனிசனுக்கு கொடுத்திருக்கிறாரு. அதை கொஞ்சமாவது யூஸ் பண்ண என்ன கேடு. நாளைக்கு புயல் கரையை கடக்க இருக்கிற நிலையில உன்ன இப்போ யாரு இங்க வர சொன்னது கௌதம்?" வெற்றி அந்த புறத்தில் இருந்து காத்து கத்து கத்த, அமைதியாய் அனைத்தையும் கேட்டிருந்தான் கௌதம்.
"மச்சான்,நீங்க என்மேல வச்சியிருக்கிற அக்கறை எல்லாம் புரியுது டா. ஆனா இப்போ நான் அமைதியா இருக்கிற நிலையில இல்ல டா. எனக்கு ஒரு அழகான உலகத்தை காட்டினது நீங்கனா, அதை அழகாக்க வந்த தேவதைங்க டா என் ரோஷினியும் என் சஷ்வி குட்டியும். அவங்க ஒரு கஷ்டத்துல இருக்கும்போது நான் எப்படி மச்சான் அங்க நிம்மதியா இருக்க முடியும். என்னோட இடத்துல நீ இருந்திருந்தாலும் உன்னோட இடத்துல நான் இருந்திருந்தாலும் இதே தான் டா செஞ்சிருப்போம். புரிஞ்சிக்கோ மச்சான்"
"எனக்கு புரியாம இல்ல டா. ஒரு ரெண்டு நாள் வெய்ட் பண்ணியிருக்கலாம்னு தான் சொல்ல வரேன்" சொல்ல,
"வெயிட் பண்ற ஸ்டேஜ்ல நான் இல்ல டா. இந்த ரெண்டரை வருஷத்துல எத்தனையோ தடவை என் காதலை நிராகரிச்சவ, ஒரு நாளும் ஹார்ஷான வொர்ட்ஸ் யூஸ் பண்ணது கிடையாது டா. ஆனா இந்த தடவை அப்படி இல்ல மச்சான். அவ ஒரு இக்கட்டான நிலையில இருக்க போய் தான் அப்படி பேசியிருக்கணும், நான் தான் யோசிக்காம அங்க இருந்து கிளம்பி வந்துட்டேன். நான் தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் தேவதைங்க என்னைவிட்டு தூரமா போய்டுவாங்க டா" இறுதி வாக்கியத்தை சொல்லும்போதே அவன் முழுதாக உடைந்து விட்டான்.
"மச்சான்!!!" வெற்றிக்கு அடுத்து என்ன சொல்ல என்று புரியவில்லை.
"இந்த டைம்ல கேப் கிடைக்குறது எல்லாம் கஷ்டம் டா. நீ இப்போ எங்க இருக்கன்னு சொல்லு நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன்" சொல்ல, நண்பனுக்கு ஒரு நன்றியை சொன்னவன் அவன் இருக்கும் இடத்தை சொல்லி அழைப்பை வைத்தான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் தாம்பரம் வந்தவன், நண்பனை அழைத்து கொண்டு வேளச்சேரி நோக்கி பயணித்தான்.
புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்க இருப்பதால், சென்னையில் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்த மையமாகவே இருந்தது. என்றும் இல்லாத விதமாக இந்த முறை சென்னையை இந்த புயல் சூறையாடியது.
எப்படியோ கடினப்பட்டு அந்த மழையிலும் வேளச்சேரி வந்தவர்கள், அவர்கள் அவன் வசிக்கும் நகரினுள் நுழையும்போதே அவனின் இதயம் பலமாய் அடித்து கொண்டது.
இடியின் சத்தத்தை விட இவன் இதயத்தின் சத்தம் இவனுக்கு பெரிதாய் கேட்டது போல் இருந்தது.
மனதிற்குள்,' அவளுக்கு ஒன்னும் இல்லை. நல்லா தான் இருக்கா' என்று நிமிடத்திற்கு ஒருமுறை சொல்லி கொண்டே தான் இருந்தான்.
இருப்பினும் நிஜத்தை மாற்ற முடியாது அல்லவா?
அவளது வீட்டிற்கு முன்பு வண்டியை வெற்றி நிறுத்த, கீழே இறங்கிய கௌதம் அவள் வசிக்கும் அவ்வீட்டை கண்டான்.
ஒருவாரத்திற்கு முன்பு கோவில் போல் இருந்த வீடு, இப்போதோ மையான அமைதியை தழுவி இருந்தது.
வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கவே கால்கள் நடுங்கியது. ஒவ்வொரு நொடிக்கும் இதயத்தின் துடிப்பு கூடியது.
நண்பன் காட்டும் தயக்கத்தை பார்த்த வெற்றி," போ மச்சான். எதுனாலும் சரி பண்ணலாம். நீ போய் அவங்கள பாரு" என்று தைரியப்படுத்தி அவனை உள்ளே அனுப்பி வைத்தவன் நண்பனின் வீட்டிற்கு சென்று விட்டான்.
நண்பன் கொடுத்த தைரியத்தில் ரோஷினியின் வீட்டிற்குள் சென்றான்.
அதிகாலை பொழுது என்பதாலும் அதனுடன் மின்சாரம் இல்லாததால் வீடு இருள் சூழ்ந்து காணப்பட, எது எது எங்கே இருக்கு என்று எதுவும் தெரியவில்லை.
அவன் கால் வைத்த இடமெல்லாம் எதோ ஒரு பொருள் தட்டுபட, மொபைலில் டார்ச்சை ஆன் செய்து உள்ளே சென்றான்.
வீட்டில் பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே சிதறி கிடக்கவும்," ரோஷினி!!" என பயத்துடனே அழைத்தான்.
ரோஷினியிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராது போக, ஒவ்வொரு இடமாய் தேட துவங்கினான்.
வீடு முழுவதும் தேடியவனுக்கு ரோஷினி இல்லாது போக, இறுதியில் பின்புறத்தில் இருந்த குளியலறைக்கு சென்று பார்க்க, அங்கே மயங்கிய நிலையில் தலையில் அடிப்பட்டு கீழே மயங்கி கிடந்தாள்.
ரோஷினியை அந்த நிலையில் கண்டவனுக்கு உயிரே அவனை விட்டு சென்றது போல் ஆனது.
உடனே அவளை தூக்க, உடல் தீயாய் கொதிக்க, இவனின் மனமோ அந்த வெப்பத்தில் மறுகியது.
ஒரு நொடி கூட தாமதிக்க விரும்பாத கௌதம் உடனே நண்பனை வர வழைத்தவன், ரோஷினியை இருவருமாக சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
உடனே அவளுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
ஒருபக்கம் இரத்த பரிசோதனை எடுத்து செல்ல, மற்றொரு புறம் தலையில் அடிப்பட்ட காயத்திற்கு மருந்திட்டனர்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் பரிசோதனையின் முடிவு வந்துவிட, அதில் டெங்குவுடன் டைபாய்டும் இருப்பதாலும் மயக்க நிலையில் இருப்பதாலும் அவளை அப்சர்வேஷனில் வைத்தனர். விவரம் அறிந்த கௌதம் வீட்டினர் அடுத்த இரண்டு நாட்களில் மகனுக்கு துணையாய் அங்கு வந்துவிட்டனர்.
அடுத்த ஒரு வாரத்தில் மழையின் தாக்கம் குறைந்து, சென்னை மக்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தனர்.
பத்து நாள் மருத்துவ வாசனைக்கு பின் ரோஷினி வீடு திரும்பினாள்.
அந்த பத்து நாட்களுமே காந்திமதியும் இனியாவும் தான் அவளை கவனித்து கொண்டனர்.
முதலில் அவர்களின் உதவியை வேண்டாம் என மறுத்தவள், கௌதமின் திட்டலுக்கு பிறகு அமைதியாய் ஏற்றுக்கொண்டாளே தவிர அவர்களிடம் ஒருவார்த்தை பேசவில்லை. ஏதோ ஒரு சிந்தனையிலே தான் இருந்தாள்.
அத்தனையையும் அனைவரும் கவனித்தாலும் அவளிடம் கேட்கவில்லை.
வீடு வந்த ரோஷினி உடனடியாக பையை தூக்கி கொண்டு வெளிவருவதை கண்ட இனியா,
"என்ன பண்ற ரோ, எதுக்கு இப்போ பையை எடுத்துட்டு வர?" என கேள்வியாய் வினவ,
அவள் எதுவும் பேசாமல் எதனையோ தீவிரமாய் தேட, இனியாவிற்கு அவளின் இந்த செயலில் கடுப்பாய் வந்தது.
"உன்கிட்ட தான கேட்கிறேன் வாயை திறந்து என்ன பண்றன்னு சொல்றியா?" சிறிது காட்டமாய் அவள் பேச, அப்போது அங்கே வந்த கௌதமிற்கு இது காதில் விழவும் உடனே உள்ளே சென்றான்.
கௌதம் வந்ததை பார்த்த இனியா," அண்ணா இங்க இவ என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாரு" ரோஷினியை காட்டி பெண் புகார் வாசிக்க, கௌதம் ரோஷினியை பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.
கௌதமின் அமைதியை கண்டு," அண்ணா, என்ன அமைதியா இருக்க? ஏதாவது பேசு" இனியா அவனை பேச சொன்னாலும் கௌதம் அமைதியாய் ரோஷினியை பார்த்தப்படி தான் இருந்தான்.
ரோஷினிக்கு கௌதமின் இந்த அமைதி அவளை ஏதோ செய்தது. வாயோயாமல் பேசும் கௌதம், இன்று அமைதியாய் இருப்பது ரோஷினியின் மனதை வருந்த செய்தாலும், மனதை கல்லாக்கி கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.
ஊருக்கு சென்றால் அங்கு என்ன நடக்கும் என்ன தெரிந்தவளுக்கு, கௌதமை பார்க்கும் தைரியமற்றவளாய் அவனை கடந்து செல்ல, இனியாவாள் தான் இதனை எல்லாம் பார்க்க முடியவில்லை வெளியேறிவிட்டாள்.
தனக்கு தேவையான அனைத்தையும் எடுத்து கொண்டவள் வெளியேற, அவளின் கால்கள் கௌதமை கடக்கையில் ஒரு நொடி நின்று பின் நகர்ந்தது.
கௌதம் எதுவும் பேசவில்லை. அதுவரையிலுமே அமைதியாக தான் இருந்தான்.
அவனிற்கு ரோஷினியின் நிலை புரிந்தது. என்று அவளை அப்படி ஒரு நிலையில் கண்டானோ, அன்றே அவன் உயிர் இருந்தும் இல்லாதவனிற்கு சமமாகிவிட்டான்.
தன் மீது ஒரு துளியேனு நம்பிக்கை இருந்திருந்தால் தன்னை ஒதுக்க நினைத்திருக்க மாட்டாள். அந்த நம்பிக்கையை கொடுக்க தவறிய தனக்கு அவளை தடுக்கும் உரிமை இல்லை என நினைத்து கையையும் மனதையும் கட்டி போட்டு நின்றான்.
ஆனால் அது எல்லாம் அவனின் அன்னைக்கு இல்லை என்பதால் அவளை தடுத்து நிறுத்தினார்.
"நீ போறதுக்கு முன்னாடி நாங்க கொஞ்சம் உன்கிட்ட பேசணும். பேசலாமா?" என அவளை தடுத்தார் போல் நிற்க, அவருக்கு பின் அவரின் மொத்த குடும்பமும் நின்றது.
அனைவரையும் ஒருமுறை பார்த்தவளுக்கு மனது பாரமாகிவிட, அமைதியாய் அப்படியே நின்றாள்.
அவளின் அமைதியை தனக்கு பதிலாக எடுத்து கொண்ட காந்திமதி, அவளின் கையைபிடித்து உள்ளே அழைத்து வந்தவர் கௌதமின் முன்பு நிறுத்தினார்.
கௌதம் அப்போதும் எதுவும் பேசவில்லை. கண்கள் மட்டும் இரத்த நிறத்திற்கு மாறியிருந்தது.
"இவனை கொஞ்சம் பாரு மா ரோஷினி. எப்படி இருந்த பையன் இப்போ எப்படி இருக்கான்னு பாரு" என ரோஷினியை கௌதமை பார்க்க சொல்ல, கௌதமை பார்க்கும் திராணியற்றவளாய் நின்றாள்.
"அவன் உனக்கு என்ன மா செஞ்சான்னு அவனை இப்படி நோகடிக்கிற? சிரிச்ச முகமா இருக்கிற பையன் முகத்துல இப்போ சிரிப்பையே பார்க்க முடியல மா. பித்து பிடிச்சவன் போல இருக்கான். அவன் என்ன தப்பு பண்ணான்னு இந்த தண்டனை அவனுக்கு நீ கொடுக்கிற?"
"....."
"அவன் இப்போ ஊருக்கு வந்தப்போ எந்த நிலையில இருந்தான் தெரியுமா, அவனை நான் பத்து மாசம் சுமந்து பெத்துக்கலன்னாலும், அவன் என்னோட பையன் மா. ஏதோ பெருசா இழந்திட்ட மாதிரி அவனையே மறந்த நிலையில இருந்தான். ஒரு அம்மாவா மகன் படுற கஷ்டத்தை என்னால பார்க்க முடியல"
"எனக்கு உன்னோட கவலை தவிப்பு எல்லாமே புரியுது. நானும் ஒரு பொண்ண பெத்தவ தான். உனக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னா தானே மா, உனக்கு நாங்க உதவி பண்ண முடியும். நீ இப்படி எதுவும் சொல்லாமல், அவனையும் தண்டிச்சு, எங்களையும் தண்டிக்கிற ரோஷினி."
"ஆண்டி..." பதறிவிட்டாள்.
"அவனை பாரு ரோஷினி. இந்த ரெண்டு வருஷமா உங்க ரெண்டு பேருக்காக தான் வாழ்றான் மா. அவனோட வாழ்க்கையை நரகமாக்கிட்டு போய்டாத மா. ஒரு அம்மாவா உன் முன்னாடி மன்றாடி நிக்கிறேன்" என அவள் முன் கண்கலங்கிய நிலையில் கையேந்தி நிற்க, ரோஷினி பதறி அவர் கையை கீழே இறக்கி விட்டாள்.
"என்னை மன்னிச்சிடுங்க ஆண்டி. நான்... நான்... கிளம்பணும் ஆண்டி. பாப்புக்கிட்ட நான் போகனும்." என்று பையை தூக்கி கொண்டு கிளம்ப எத்தனிக்க, அதுவரையிலும் அமைதியாக நின்றிருந்த கௌதம் பேசத் துவங்கினான்.
தனக்காக அன்னை கையேந்தி நிற்பதை கண்ட பிறகும் அமைதியாய் இருப்பது சரியில்லை என்று தோன்றவும் வாயை திறந்தான்.
"இந்த ரெண்டு வருஷத்துல, என்மேல ஒரு துளி கூட காதல் வரலையா ரோஷினி?" உடைந்து போன குரலில் கௌதம் இதனை கேட்க, மௌனமே பதிலாய் அவள் கொடுக்கவும் அவனிற்கு அவள் மனது புரிந்தது.
"நான் பல தடவை என் காதலை உன்கிட்ட சொல்லியிருக்கேன். அத நீ எப்படி எடுத்துக்கிட்டன்னு தெரியல ரோஷினி. பட், நீங்க ரெண்டு பேரும் தான் என் உலகமே. நான் பிறந்ததுமே என்னை என் பெத்தவங்க நான் வேண்டாம்னு குப்பைத்தொட்டில போட்டுட்டு போய்ட்டாங்க. வளர்ந்தது எல்லாமே ஆசிர்மத்துல தான். எனக்குன்னு யாருமே இருந்ததில்லை. தனியாவே இருந்தேன். படிப்பு, அதுக்கூட வேலைன்னு இப்படியே தான் என்னோட நாட்கள் போச்சி. நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிற பணத்தை கூட செலவு செய்ய எனக்குன்னு யாருமே கிடையாது ரோஷினி.
இது தான் நமக்கு கிடைச்ச வாழ்க்கைன்னு இருந்த போது தான் வெற்றியோட அறிமுகம். அவனோட அறிமுகம் என்னோட இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சத்தை உருவாக்குச்சின்னா, அத வண்ணமையமாக்கியது என் சஷ்வி குட்டி தான். அவ என்னை முதன் முதல்ல அப்பான்னு சொல்லி கூப்பிட்டப்ப, நான் எப்படி உணர்ந்தேன்னு வார்த்தையால சொல்லிட முடியாது ரோஷினி.
அந்த உணர்வு தான் என்னை உன் பக்கம் திருப்பியது. உங்களுக்காக நான் இருக்கனும்னு என்ன நினைக்க வச்சது ரோஷினி. அந்த நினைப்பு வந்த நொடில இருந்து இப்போ வரைக்கும் உங்களுக்காக நான் வாழ்ந்திட்டு இருக்கேன். இனிமேலும் அப்படி தான் இருப்பேன். என்னோட உயிர் பிரியும் நேரத்துல கூட என் எண்ணம் நீங்களா தான் இருப்பீங்க" என்று முடிக்கும் தருவாயில் அவனின் வாயை தன் கரம் கொண்டு மறைத்தவளின் கண்கள் அவனிடம் யாசகமிட்டது.
"அப்படி சொல்லாதீங்க கௌதம். என்னால தாங்க முடியாது. நான் இதுவரைக்கும் இழந்ததே போதும். உங்களையும் இழக்க தயாராயில்லை. ப்ளிஸ் இப்படி பேசாதீங்க கௌதம்" என்று இதுவரையிலும் மௌனமே விடையென இருந்த ரோஷினி பேசத் துவங்கினாள்.
அவளின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களை குழப்ப நிலைக்கு தள்ள, அவளின் கடந்த கால வாழ்க்கை பற்றி ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த இனியாவிற்கு வேதனையாக இருந்தது.
"ரோஷினி!!!" கௌதமின் அந்த ஒற்றை அழைப்பு அவளுக்கு போதுமாய் இருந்தது. அவனிடம் முழுதாய் சரணடைந்தவள், மடைதிறந்த வெள்ளமாய் அழுது தீர்த்தாள்.
அவள் அழுது முடிக்கும் வரை தாயாய் மடி தாங்கினான் கௌதம்.
சிறிது நேரத்தில் அவனை விட்டு விலகிய ரோஷினி கண்களை துடைத்து விட்டு கௌதமை ஏறிட்டவள், இன்று வரை மறைத்து வைத்திருந்த அவளின் கடந்த கால வாழ்க்கையை சொல்லத் துவங்கினாள்.