arrow_back
கவிதைக்கு பொய்யழகு அத்தியாயம் 1
கவிதைக்கு பொய்யழகு chevron_right பகுதி 1 / 1

அத்தியாயம் 1

visibility 183
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

OMR சாலையின் நிரந்தர இரைச்சலும், எந்நேரமும் ஓயாத வாகனங்களின் ஹாரன் சத்தமும் பின்னணி இசையைப் போல ஒலித்துக் கொண்டிருந்த அந்த மாலை நேரம். அந்த முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் குறுகிய உட்புறச் சாலையில், பத்து அடுக்குகள் கொண்ட அந்தப் பிரம்மாண்டமான கட்டிடம் வானத்தை நோக்கி எழுந்து நின்றது. சுற்றிலும் இருந்த பழைய வீடுகளுக்கும், சிறிய கட்டிடங்களுக்கும் மத்தியில், இன்னும் முழுமை பெறாத நிலையிலும் அது ராட்சசனைப் போல அந்தப் பகுதியையே ஆக்கிரமித்திருந்தது.

கட்டிடத்தின் எண்பது சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் சிமெண்ட் மூட்டைகள், துருப்பிடித்த இரும்பு கம்பிகள், பாதி செதுக்கப்பட்ட கிரானைட் கற்கள் என கட்டுமானப் பணிக்கே உரிய களேபரம் அங்கே நீக்கமற நிறைந்திருந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் முன்னணி மென்பொருள் நிறுவனத்தின் கிளை அங்கு குடியேறப் போகிறது என்ற தகவல், அந்தச் செங்கல் சுவர்களுக்கு நவீன அந்தஸ்தைத் தந்திருந்தது. அதனால் தான், பகல் இரவு என்ற வித்தியாசம் இல்லாமல் தொழிலாளர்கள் அங்கு எறும்புகளைப் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தின் மொட்டை மாடியில், அஸ்தமனத்தை நோக்கிய மாலை வெயில் தகதகவென அடித்துக் கொண்டிருந்தது. அந்தத் தகிப்பில் கண்கள் கூச, அவற்றைச் சுருக்கிக் கொண்டு தீவிரமான சிந்தனையில் நின்றிருந்தான் கௌதம். கௌதமின் வலது கையில் பழைய பித்தளை ரச மட்டமும், இடது கையில் உலோகத்திலான அளவெடுக்கும் டேப்பும் இருந்தன.

கட்டிடத்தின் ஓரத்தில் கௌதமின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருந்த அந்தப் பெரிய பிரமிட் வடிவ ஸ்ட்ரக்சர், இப்போது அவனது கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அந்தச் சரிவை அவன் தன் வசமிருந்த டேப்பை வைத்து அங்குலம் அங்குலமாக அளந்து பார்த்தான். காகிதத்தில் அவன் வரைந்து கொடுத்த டிராயிங்கிற்கும், அங்கே இரும்பால் வார்க்கப்பட்டிருந்த அந்த உருவத்திற்கும் இடையே வெறும் அரை இன்ச் தான் வித்தியாசம். ஆனால், கலைஞனாகவும், தேர்ந்த லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கௌதமுக்கு அந்த அரை இன்ச், இமயமலைச் சரிவைப் போலத் தப்பாகத் தெரிந்தது.

அருகில் வெல்டிங் மிஷினின் நீல நிறத் தீப்பொறிகள் சிதற, முகமூடி அணிந்து வேலையில் மும்முரமாக இருந்த பையனைப் பார்த்த கௌதமின் முகம் சிவந்தது. எரிச்சலும் கோபமும் சேரக் கூடிவர, அந்தப் பரபரப்பான சூழலிலும் இடியென முழங்கியது அவன் குரல்.

“டேய்… மேஸ்திரி எங்கேடா?”

அந்தப் பையன் கையில் இருந்த வெல்டிங் கருவியை விலக்கிவிட்டு, முகக் கவசத்தைக் கழற்றினான். வெளிச்சத்தில் கண்கள் கூச, கௌதமைப் பார்த்து இளித்தபடி, “டீ சாப்புட போயிருக்கார்ண்ணா…” என்றான்.

“மட்டம் கரெக்டா இல்லைடா… அரை இன்ச் கம்மியாவுது!” என கௌதம் கடுகடுக்க, அந்தப் பையன் பதிலேதும் சொல்லாமல் அசடு வழிந்தான்.

“நானும் அப்பவே சொன்னேண்ணா… ஆனா அவுரு ‘இன்னாப்பா நீ வேற… சும்மா வுடு, அதெல்லாம் ஒன்னும் ஆவாது’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாருண்ணா.”

“ப்ச்… என்னடா நீங்க! இந்தச் சின்ன வேலையை இப்படிச் சொதப்புறீங்க! எப்ப வருவாரு?”

“தோ… அஞ்சு நிமிஷம்ண்ணா… வந்துருவாரு.”

கௌதம் விடவில்லை. அந்தப் பிரமிட் ஸ்ட்ரக்சரின் இரும்புச் சட்டங்களை ஒருமுறை ஓங்கித் தட்டினான். “அஞ்சு நிமிஷம்னு சொல்லி அரை மணி நேரமாச்சு. இது ஒன்னும் சாதா கம்பி வேலை இல்லடா. மேல கிளாஸ் லோடு இறங்கப்போகுது. அரை இன்ச் எறங்குனா கூட லோடு தாங்காம வெடிச்சுடும். அப்புறம் யாரு பதில் சொல்றது?”

அந்தப் பையன் இப்போது கொஞ்சம் பயந்தவன் போல, “அவுரு இன்னான்னா… வேலைய சீக்கிரம் முடிக்கணும்னு பாக்குறாரு. ‘இன்னாப்பா அவன்… சின்னப் பையன்… அவனுக்கு என்னா தெரியும்? நான் சொல்றத செய்’னு என்னைய திட்டுறாருண்ணா…” என்று போட்டுக்கொடுத்தான்.

“அவருக்கு என்ன தெரியும்னு இல்லடா, எனக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியணும்…” என்று கௌதம் அவன் கையில் இருந்த டிராயிங் பேப்பரை ஆவேசமாக விரித்துக் காட்டினான்.

“இந்தச் சாய்வு கோணத்தைப் பாரு… இதுல கொஞ்சம் மாறினாலும் மேல தண்ணி தேங்கும். மழை பெய்ஞ்சா அருவி மாதிரி கொட்டும். அப்போ வருவாரா உங்க மேஸ்திரி?”

“இல்லண்ணா… நான் இப்பவே போயி இழுத்துட்டு வர்றேன்…” என்று அவன் நகர முயன்றான்.

“வேணாம்… நீ இங்கேயே இரு. வந்த உடனே முதல்ல இதைக் கழட்டச் சொல்லு. நான் வந்து பார்க்கும்போது எல்லாம் மில்லிமீட்டர் பிசிறு இல்லாம இருக்கணும். புரியுதா?”

அந்தப் பையன் தலையை வேகமாக ஆட்டினான். “புரியுதுண்ணா… அவுரு வந்தோன்னே ‘கௌதம் சார் செம கடுப்புல இருக்காரு… ஒடனே பிரிச்சாகணும்’னு சொல்லிடறேன்.”

“அடி பின்னிருவேன்! நான் கடுப்புல இருக்கேன்னு சொல்றது முக்கியம் இல்ல, வேலை தப்பா இருக்குன்னு சொல்லு!” என்று கௌதம் விரல் நீட்டி எச்சரிக்க, அவன் கைகட்டி அமைதியானான்.

“சரிண்ணா… தப்புதான். இதோ இப்பவே ரெடி பண்ணிடலாம்…” என்று அவன் மீண்டும் தன் கவசத்தை மாட்டிக் கொண்டான்.

கௌதம் அந்த இரும்புப் பிரமிட் அமைப்பையே சில நிமிடங்கள் இமைக்காமல் வெறித்துப் பார்த்தான். அவனது மூளைக்குள் அந்த அரை இன்ச் பிசிறு முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது. ஒரு விஷயத்தை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவனுக்கு, தன் வேலையில் ஏற்படும் சிறு குறை கூட பெரிய பாரமாகவே தோன்றும்.

சட்டென்று நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவன், அங்கிருந்து மெல்ல நகர்ந்தான். அந்தப் பத்து மாடிக் கட்டிடத்தின் விளிம்பில், இன்னும் சிமெண்ட் பூச்சு பூசப்படாத கரடுமுரடான பேராபெட் சுவர் இருந்தது. அதன் மீது அவன் ஏறி அமர்ந்தபோது, உலர்ந்த கான்க்ரீட் கற்களின் கூர்மை அவனது பின்பக்கத்தை உறுத்தியது. ஆனால், அந்த அசௌகரியத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

நூறு அடி உயரத்தில், அந்த அந்தி சாயும் வேளையில் அவன் அமர்ந்திருந்த கோலம், நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டுத் தனியாகத் தெரிந்தது. அவன் தன் பார்வையை மெல்லத் திருப்பி கீழே தெரிந்த OMR சாலையின் மீது வீசினான். சென்னையின் நரம்பு மண்டலத்தைப் போன்ற அந்தச் சாலையில், வாகனங்கள் நீண்ட சங்கிலியைப் போல இடைவிடாது ஓடிக்கொண்டிருந்தன.

சொகுசு கார்கள், ஐடி ஊழியர்களைச் சுமந்து செல்லும் பேருந்துகள், விரைந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் என அந்தச் சாலையே பரபரப்பான நதி போலப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த உயரத்திலிருந்து பார்க்கும்போது, கீழே எழும் ஹாரன் சத்தங்களும், மனிதர்களின் கூச்சல்களும் மெல்லிய ரீங்காரமாக மட்டுமே கேட்டன. அந்தப் பிரம்மாண்டமான ஆரவாரம் அவனுக்குள் விசித்திரமான நிம்மதியைத் தந்தது. உலகின் ஓயாத இயக்கம் அவனைச் சுற்றியிருக்க, அவன் மட்டும் அமைதியான தருணத்தைப் பிடித்துக்கொண்டது போல உணர்ந்தான்.

கௌதமின் வேர்கள் இந்தச் சென்னையில்தான் ஆழமாகப் பதிந்திருந்தன. இதே தெருக்களில் விளையாடி வளர்ந்தவன் அவன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதராபாத்தில் பொறியியல் கல்லூரியில் பி.இ முடித்தான். படிப்பு முடிந்ததும் கிடைத்த ஏதோ ஒரு அலுவலக வேலையில் அவனது மனம் ஒட்டவில்லை. தனக்கிருக்கும் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் திறமையையும், விஷயத்தை அழகியலோடு உருவாக்கும் ஆர்வத்தையும் முதலீடாக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சொந்தமாக பிசினஸைத் தொடங்கினான்.

இந்தக் கட்டிடத்தின் சில முக்கியமான அலங்கார மற்றும் கட்டுமான வேலைகள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் பல சவால்களைச் சந்தித்தாலும், இப்போது நிலைக்கு வந்துவிட்டான். பல லட்சங்களைச் சம்பாதித்து கோடிகளில் புரளாவிட்டாலும், தன் காலில் உறுதியாக நிற்க முடிகிறது என்ற திருப்தி அவனுக்கு இருந்தது.

அந்தத் திருப்தியின் அடையாளமாகத்தான், கீழே கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில், வேப்ப மரத்தின் அடர்ந்த நிழலில் அவனது சிவப்பு நிற Baleno நின்றிருந்தது. மாலை வெயிலின் எஞ்சிய ஒளி அதன் மீது பட்டுத் தெறிக்க, அந்தக் கார் அவன் கடந்த இரண்டு வருடங்களாகச் சிந்திய வியர்வையின் பலனாக அவனுக்குத் தெரிந்தது. தன் சொந்த உழைப்பில் வாங்கிய அந்த முதல் கார் அவனுக்கு நம்பிக்கையைத் தந்தது. மேஸ்திரிக்காகக் காத்திருக்கும் அந்த ஒவ்வொரு நொடியிலும், அந்தக் காரைப் பார்க்கும்போது அவனது எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போவதை அவனே உணர்ந்தான்.

சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, மொட்டை மாடிக்கு வரும் அந்த இருண்ட படிக்கட்டு வழியே உருவம் வெளிப்பட்டது. அது கணேசன் மேஸ்திரி. அவருக்குப் பின்னால் சிமெண்ட் கலவை சுமக்கும் ஒருவன் தலையைத் தொங்கப்போட்டபடி வந்து கொண்டிருந்தான். மேஸ்திரியின் குரல் அவர் மாடிக்கு வரும் முன்பே படிக்கட்டு முழுவதும் எதிரொலித்தது. கூட வந்தவனை மிக மோசமான வசவுகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். அவனுடைய குடும்பத்தாரையும், குலதெய்வத்தையும் இழுத்து அவர் வடசென்னை பாஷையில் விளாசிக்கொண்டிருந்த வேகம், மாடியில் இருந்த கௌதமுக்குத் தெளிவாகக் கேட்டது.

ஆனால், மாடியின் விளிம்பில் அமர்ந்திருந்த கௌதமைப் பார்த்த மாத்திரத்தில், கணேசனின் குரலில் இருந்த அந்த ஆக்ரோஷம் சட்டென வடிந்து போனது. தேர்ந்த நடிகனைப் போலத் தன் பாவத்தை மாற்றிக் கொண்டவர், தன் வாயின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அந்தப் புகைந்து கொண்டிருந்த பீடியைக் கையில் எடுத்தார். அதைத் தரையில் எறிந்து, கறை படிந்த தனது வெற்றுக் காலால் அழுத்தமாக மிதித்து அணைத்தார்.

கௌதமின் கறார் குணம் அவருக்குத் தெரியும் என்பதால், கொஞ்சம் மரியாதையைக் காட்ட விரும்பினார். அதுவரை முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டியிருந்த தனது அழுக்கு வேட்டியைத் தட்டிவிட்டு, கீழே கணுக்கால் வரை இறக்கி விட்டார். முகத்தில் ஒரு விதமான நமுட்டுச் சிரிப்பையும், அதே சமயம் “இவன் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கான்?” என்கிற நக்கலையும் கலந்து போலிச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.

“இன்னா சார்… அங்க போய் குந்தினுக்குற? வுழுந்துறப் போற… இந்தாண்ட வா!”

அவர் குரலில் இருந்த அந்த அசால்ட்டான நக்கல், கௌதமின் எஞ்சியிருந்த பொறுமையையும் மெல்லச் சோதிப்பதாக இருந்தது.

“ப்ச்! நக்கலுக்கு ஒன்னும் குறச்சல் இல்லை உனக்கு! வேலைல மட்டும் கோட்டை வுட்டுடுவியே!” என்று சலித்துக் கொண்ட கௌதம், சுவரில் இருந்து குதித்து அவரை நோக்கி நடந்தான். அவன் கண்கள் கோபத்தில் சிவந்திருப்பதை மேஸ்திரி கவனித்தார்.

கணேசன் தன் குரலில் போலியான சீரியஸைக் கொண்டு வந்து, “இன்னாயிப் போச்சு இப்போ? வேலைல இன்னா கொறை கண்டுக்கின நீ?” என்று கேட்டார். ஏதோ தான் உலகத்தரம் வாய்ந்த வேலையைச் செய்தது போலவும், கௌதம் தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிப்பது போலவும் அவர் பாவனை இருந்தது.

“அந்தப் பிரமிட் மட்டம் சரியில்லை கணேசன்… அரை இன்ச் டிஃபரன்ஸ் வருது!” என்று கௌதம் தன் கையில் இருந்த டேப்பை நீட்டினான்.

கணேசன் அதை ஏளனமாகப் பார்த்துவிட்டு, “ஹே… அரை இன்ச்தான சார்? சும்மா வுடு… ஒன்னும் ஆவாது! இதப் போயி பெருசு பண்ணிக்கினு…” என்று கையை வீசி அலட்சியப்படுத்தினார்.

அவரது பொறுப்பற்ற பேச்சு கௌதமுக்கு எரிச்சலைத் தந்தது. “புரியாமப் பேசாத கணேசு… அது மேல கிளாஸ் வரப்போகுது. அரை இன்ச் வித்தியாசம் இருந்தாலும் கிளாஸ் உட்காராது. லோடு இறங்கும்போது அப்படியே அமுங்கி வெடிச்சுடும்!”

கணேசன் உடனே கேலியாகச் சிரித்தார். “கிளாஸா? இதுல போயிட்டு இன்னாத்துக்கு சார் கிளாஸ்லாம் போட்டுக்கினு… அறிவு கெட்டவனுங்கோ!” என்று வாய்விட்டுச் சொன்னவர், கௌதம் தன்னை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து சட்டெனக் குரலைத் தாழ்த்தினார். “இன்னா சார்?”

“அந்த கிளாஸ் போடுற ஐடியா நான் சொன்னது!” என்று கௌதம் அழுத்தமாகச் சொன்னான்.

மேஸ்திரிக்கு இப்போது கொஞ்சம் தர்மசங்கடமாகப் போய்விட்டது. “ஓ… உன் ஐடியாதானா? இன்னாத்துக்கு கிளாஸ்லாம் போடுற இதுல நீ? சிமெண்ட் போட்டு மொளமொளன்னு பூசிட்டா ஆயுசுக்கும் நிக்கும்ல?”

“அதை உனக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது கணேசு… இந்த மாதிரி புதுசு புதுசா வேலை பண்றதுக்குத்தான் எனக்குப் பணம் தர்றாங்க. நான் சொல்ற வேலையை மட்டும் செய்… போதும்!”

“சரி வுடு… பண்ணிர்லாம் வுடு…” என்று மேஸ்திரி நழுவப் பார்த்தார்.

“எப்போ?” கௌதம் இடைமறித்துக் கேட்டான்.

“அதான் பண்ணிர்லாம்னு சொல்றேன்ல? எதுனா ஒரு நாள் வந்து முடிச்சுத் தந்துடறேன்.”

ஆனால் கௌதம் விடவில்லை. “இப்போவே பண்ணு… இன்னைக்கு நான் இங்கேயே உட்கார்ந்து பார்த்துட்டுத்தான் போறேன்.”

கௌதம் அவ்வளவு உறுதியாகச் சொன்னதும் கணேசன் மீண்டும் விசித்திரமான சிரிப்பைச் சிந்தினார். “எதுக்குச் சிரிக்கிற இப்போ?” என்று கௌதம் சற்றே எரிச்சலாகக் கேட்டான்.

“நான் பண்றேன் சார்… ஆனா நீ இங்கயே உக்காந்து பாக்கத்தான் மாட்ட…”

“ஏன்?”

“அங்க பாரு… பாப்பா வந்தினுகிது…” என்று கணேசன் ஒரு திசையைக் காட்டினார்.

கணேசன் சுட்டிக்காட்டிய திசையில் கௌதம் பார்வையைத் திருப்பினான். OMR சாலையிலிருந்து பிரிந்து வந்த அந்த உட்புறச் சாலையில், தனது ஸ்கூட்டியில் திவ்யா வந்து கொண்டிருந்தாள். இந்தக் கதையின் நாயகி! மிதமான வேகத்தில் வந்தவள், கட்டிடத்தின் முன்னே வண்டியை நிறுத்திவிட்டு ஸ்டாண்ட் போட்டாள்.

“இன்னா சார்… இப்பவும் இங்கயே குந்துனியா? இல்ல கிளம்புறியா?” கணேசன் கண்ணடித்தபடி கேட்டார்.

“பேசாம வேலையை பாரு கணேசு… நான் ஒன்னும் அவசரப்படல…” என்று கௌதம் சமாளிக்க முயன்றான்.

“சும்மா வுடு சார்… கண்ணு அங்கயே தான் இருக்கு… பொண்ணு கீழ வெயிட் பண்ணுது, நீ இங்க இரும்பு மட்டத்தை பாத்துனு இருக்கப்போறியா இன்னா?”

“அவ வருவான்னு எனக்குத் தெரியும்… அதுக்காக வேலையை விட முடியாது.”

“அடப் போ சார்… நீ இன்னாத்துக்கு வெயிட்டு காட்டுறன்னு எனக்குத் தெரியும். பாப்பா கீழ நிக்கிறப்போ இங்க நின்னு இன்னாத்த சாதிக்கப்போற?”

கௌதம் தன் சட்டையைச் சரி செய்துகொண்டே, “சரி… காலைல வந்து பாப்பேன். இதே மட்டம் பிசிறு தட்டுச்சுன்னா அப்புறம் என்கிட்ட பேச்சு வச்சுக்காத…” என்றான்.

கணேசன் சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் நைட்டோட நைட்டா தட்டி மினுக்கி வச்சிடறேன்… நீ போயினு காலைல வா… ஜாலியா இரு சார்!” என்றார்.

“நீ ரொம்பப் பேசுற கணேசு… அந்தப் பையன்கிட்ட சொல்லு, அந்த கார்னர் வெல்டிங்க கட் பண்ணச் சொல்லு…” என்று கௌதம் கடைசியாக உத்தரவைப் போட்டுவிட்டு நகர்ந்தான்.

“சரி சார்… நான் பாத்துக்கிறேன்… நாளைக்கு நீ வரும்போது இது கண்ணாடியாட்டம் மின்னும்…” என்று மேஸ்திரி மீண்டும் அந்த வஞ்சப்புகழ்ச்சிச் சிரிப்போடு வழியனுப்பி வைத்தார்.

கௌதம் படிக்கட்டில் இறங்கத் தொடங்கியபோது மேஸ்திரி தன் உதவியாளனிடம், “பாத்தியா? லவ்வு பண்றப்பவே எப்பிடி பறக்கறான் பையன்… கல்யாணம் ஆயிடுச்சுன்னா இந்தாண்ட பக்கமே வரமாட்டான் போல!” என்று முணுமுணுத்தது அவனுக்கு மெலிதாகக் கேட்டது.

அவன் புன்னகைத்துக் கொண்டான்.

அங்கிருந்து நகரும்போது கணேசன் மேஸ்திரியின் நக்கலான பார்வை அவன் முதுகில் குத்துவது போல இருந்தது. அரைகுறையாகச் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளில் கவனமாக இறங்கத் தொடங்கியவன், சட்டைப் பையிலிருந்த செல்போனை எடுத்து திவ்யாவின் எண்ணைத் தட்டினான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்ட அடுத்த நொடி, கௌதம் “ஹலோ” என்று தன் வாயைத் திறப்பதற்குள்ளேயே திவ்யாவின் குரல் முந்திக்கொண்டது. அதுவரை இல்லாத அதீத சோகத்தையும், களைப்பையும் தன் குரலில் குழைத்து அவள் பேசத் தொடங்கினாள்.

“கௌதம்… இப்பதான் வீட்டுக்குள்ளேயே நுழையறேன்டா செல்லம்… இன்னைக்கு ஆபீஸ்ல செம ஒர்க். ரொம்ப லேட் ஆயிடுச்சு… உடம்பெல்லாம் அப்படியே வலிக்குது, பயங்கர டயர்டா இருக்குடா. அதான் யோசிச்சேன்… இன்னைக்கு என்னால அங்க வர முடியாதுன்னு நினைக்கிறேன். நாம நாளைக்கு மீட் பண்ணலாமா? ம்ம்? கோவிச்சுக்க மாட்டியே? ஓகேவா?”

அவள் குரலில் வழிந்த அந்தச் செயற்கையான கெஞ்சலும், ‘செல்லம்’ என்கிற அந்த ஒற்றை வார்த்தையில் அவள் காட்டிய போலிப் பாசமும் கௌதமுக்கு எரிச்சலைத் தந்தது. அவள் எப்போதுமே இப்படித்தான்; நேரில் வந்து ஆச்சரியப்படுத்தப் போகிறேன் என்கிற பெயரில் ஏதாவது குட்டிக்கதையைச் சொல்லி அவனைச் சோதிப்பாள்.

கௌதம் எரிச்சலுடன் செல்போனை காதில் இருந்து எடுத்துத் திரையைப் பார்த்தான். அதில் ‘திவ்யா’ என்கிற பெயருக்குக் கீழே, அவள் வெண்பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இப்போதும் அவனைக் கிண்டல் செய்வது போலவே இருந்தது.

‘திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா?’ என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவன், மீண்டும் போனை காதில் கொடுத்தான்.

“லூசு! நீ வண்டியில வந்து இறங்குனதை… மேல இருந்து நான் பார்த்துட்டேன்!” என்றான், தன் குரலில் இருந்த எரிச்சலைச் சற்றே அடக்கிக் கொண்டு.

மறுமுனையில் நிசப்தம் நிலவியது. அதுவரை சோகமாக ஒலித்த திவ்யாவின் குரல், அடுத்த நொடியே ஏமாற்றத்தில் சட்டென மாறியது. “ஓ… பார்த்துட்டியா? ச்சே… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு திடுதிப்புன்னு உன் முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பிளான் பண்ணேன். எல்லாம் போச்சு! நீ எதுக்குடா எப்போ பாத்தாலும் கீழேவே பார்த்துட்டு இருக்க?”

அவளது அந்தச் சிறுபிள்ளைத்தனமான ஆதங்கத்தில், கௌதமின் கோபம் மெல்லக் கரையத் தொடங்கியது. இருப்பினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், படிக்கட்டுகளில் வேகமாய் இறங்கினான்.

படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டே மொபைலை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான். அவளது இந்த விளையாட்டுப் புத்தி அவனுக்குப் புதிதல்ல என்றாலும், நேரத்தின் அருமை தெரியாமல் அவள் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவனுக்குள் மெல்லிய எரிச்சலைத் தூண்டத் தவறுவதில்லை.

“அதுசரி… அஞ்சு மணிக்கெல்லாம் வந்து நிக்கிற? ஆறு மணிக்குத்தான வருவேன்னு சொன்ன?” என்று கௌதம் கேட்க, மறுமுனையில் திவ்யாவின் குறும்புத்தனமான சிரிப்பு எதிரொலித்தது.

“ஹஹா… அது சும்மா பொய் சொன்னேன்…”

அவள் மிகச் சாதாரணமாகச் சொன்ன அந்தப் பதில் கௌதமை இன்னும் உசுப்பியது. “எதெதுக்குத்தான் பொய் சொல்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா உனக்கு? தேவையில்லாம அந்த மேஸ்திரி முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறதே உனக்கு வேலையாப் போச்சு. இப்போ கூட அவரு உன்னை காட்டிதான் கிண்டல் பண்றாரு…” என்றான் கௌதம் சற்றே கோபமான குரலில்.

“சரி சரி… ஆரம்பிச்சுடாத… லெக்சர் எடுக்க இது ஒன்னும் காலேஜ் இல்ல. இனிமே பொய் சொல்ல மாட்டேன்… போதுமா?” என அவனை லாவகமாகச் சாந்தப்படுத்தினாள் திவ்யா. அவளது குரலில் இருந்த அந்த நெகிழ்வுத்தன்மை எப்போதுமே கௌதமின் கோபத்தை மழுங்கச் செய்துவிடும்.

“சரி கீழேயே இரு… இதோ வர்றேன்…”

“பரவாயில்லை கௌதம்… நானே மேல வர்றேன்… அந்த வியூ எப்படி இருக்குன்னு எனக்கும் பார்க்கணும்ல?” என்றாள் உற்சாகமாக.

“ப்ச்… தேவையில்லாம எதுக்கு பத்து மாடி ஏறுற? நான் கால் பண்ணினதே அதுக்குத்தான்… கீழேயே வெயிட் பண்ணு… வந்துக்கிட்டே இருக்குறேன்!” என்று கௌதம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மொபைலில் அவளது மூச்சிரைக்கும் சத்தம் மெல்லியதாகக் கேட்கத் தொடங்கியது.

“ஏற்கனவே ரெண்டாவது மாடி வந்துட்டேன் கௌதம்… லிப்ட் வேற இல்லையா இந்த பில்டிங்ல?”

“இன்னும் லிப்ட் கனெக்ஷன் கொடுக்கலன்னு உனக்குத் தெரியாதா? அறிவு இருக்கா உனக்கு? மூச்சு வாங்குது பாரு… ஒழுங்கா கீழ போ!”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா… நீ வர்ற வரைக்கும் என்னால அங்க கீழ தனியா நிக்க முடியாது. இந்த ஏரியாவே ஒரு மாதிரி இருக்கு.”

“லூசு மாதிரி பேசாத திவ்யா. இன்னும் பூச்சு வேலை கூட முடியாத படிக்கட்டு அது. இருட்டா இருக்கும், கால் தடுக்கி விழுந்துடப் போற.”

“நீ இருக்க பயம் எதுக்கு? இதோ நாலாவது மாடி… சீக்கிரம் வா!”

“திவ்யா… நான் சொல்றத கேளு. அங்க மேல இன்னும் ஏகப்பட்ட கம்பிங்க நீட்டிட்டு இருக்கும். சும்மா அடம் பிடிக்காம அங்கேயே நில்லு, இதோ நான் வந்துட்டேன்.”

“சரிப்பா… பயப்படாத… இதோ இந்த விண்டோ வழியா கீழ பார்க்கிறேன்… செமயா இருக்குல?”

“உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கு… அந்த மேஸ்திரி வேற அங்கேயே தான் நிக்குறாரு. அப்புறம் தேவையில்லாம ஏதாவது பேசுவாரு.”

“பேசட்டுமே… அவருக்குத் தெரியாதா நான் யாருன்னு? நீ வா முதல்ல!”

அவளது பிடிவாதத்தை மாற்ற முடியாது என்று புரிந்த கௌதம், வேகமாகப் படிகளில் இறங்கினான். ஐந்தாவது மாடித் திருப்பத்தில், கையில் ஹெல்மெட்டைப் பிடித்துக்கொண்டு, வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்த திவ்யாவைக் கண்டதும் அவனது எரிச்சல் எங்கோ மறைந்து போனது. அவளது முகத்தில் தெரிந்த அந்தச் சின்னஞ்சிறு வெற்றிப் புன்னகை, அவன் சொல்ல வந்த அத்தனை வசவுகளையும் விழுங்கச் செய்தது.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்