அத்தியாயம் 1
வந்தாயே உறவாக இந்நாள் – 1
காணும் இடம் எங்கும் பச்சைப் போர்வையைப் போர்த்தியதைப் போன்று புல்வெளிகளும், மரங்கள், செடிகள், கொடிகள் என்று அந்தக் கிராமமே பசுமையின் செழிப்பில் கண்ணைப் பறித்தது.
அதேபோல், அதிகாலையில் தங்களது தூக்குச்சட்டிகளைத் தூக்கிக் கொண்டு தாங்கள் வேலை செய்யும் வயலுக்குக் கிளம்பி நடந்து கொண்டிருந்தனர் பெண்கள் கூட்டம், கூட்டமாக!
தாங்கள் வழிநெடுக நடக்கும் அந்த நேரத்திலும் கூட அந்த நடையின் வேகம் குறையக் கூடாது என்றும், காலை வெயிலின் தாக்கத்தை உணரக் கூடாது என்றும் எண்ணித் தங்களுக்குள் பேசிச், சிரித்தபடியே நடந்தனர் அவர்கள் அனைவரும்.
“அந்த வள்ளிப் பொண்ணுக்கு ஒரு நல்லது செஞ்சி வைக்கலாம் தானே அவளோட அப்பனும், அம்மையும்? எத்தனைக் காலத்துக்குத் தான் தனக்குன்னு ஒரு துணை இல்லாமல் அப்படியே பட்ட மரமாக இருப்பா! அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா அவளோட அந்தச் சோகம் வடிஞ்ச முகத்தில் கொஞ்சம் சந்தோஷம் வரும் தானே?”என்று தனது சகப் பணியாளர்களிடம் பகிர்ந்து கொண்டாள் அவர்களில் ஒருத்தியான மல்லி.
“ஆமாம் டி! ஆனால் நம்மப் பேச்சு எல்லாம் சபையில் ஏறுமா என்ன? அவுக வீட்டுப் பொண்ணுக்கு அவுகதேன் நல்லதை யோசிச்சுச் செய்யனும்! அவுகளே விட்டேத்தியாக இருக்கும் போது நாம என்னத்தச் செஞ்சிட முடியும்?”எனக் கேட்டிருந்தாள் சுகுமாரி.
“அதுவுஞ் சரித்தேன்! ஆனால் அவளுக்கு அந்தக் கோராமை நடக்கிறதுக்கு முந்தி எல்லாம் எவ்வளவு அழகாகச் சிரிப்பாள் தெரியுமா? இப்போ அந்தப் புள்ளையோட மூஞ்சியே சூம்பிப் போச்சு!”என்று தன் குரலில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டுக் கூறினாள் லட்சுமி.
“ஆமாக்கா! சின்ன வயசுப் புள்ளைக்கு இப்படி ஆகிருக்கக் கூடாது!”எனத் தானும் அவரது பேச்சை ஆமோதித்தாள் மல்லி.
“அட புள்ளைகளா! வாய்ப் பேசுனது போதும்! வேலைப் பார்க்குற இடத்துக்குப் போவனும்ல? வெரசா நடங்க!”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் ஒரு மூத்த வயதுப் பெண்மணி.
உடனே தங்களது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு நடையில் வேகத்தை அதிகரித்தார்கள் மற்றப் பெண்கள் அனைவரும்.
அவர்கள் சென்றது வேறு எந்த இடத்திற்கும் இல்லை!
அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்புப் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் எண்ணெய் ஆலைக்குத் தான்!
ஆம்! அவளது குடும்பத்திற்குச் சொந்தமாக ஒரு எண்ணெய் ஆலையும், சில நிலபுலன்களும் இருக்கிறது.
“வள்ளி ஆத்தா! இப்போ நம்ம ஆலைக்கு வேலை ஆட்கள் எல்லாம் வர ஆரம்பிச்சிருவாக! நீ கணக்கு, வழக்குகளை முடிச்சிட்டியா? இன்னைக்கு அவுகளுக்கு எல்லாம் சம்பளம் நாள்த்தா! ஞாவகம் இருக்குதா?”என்று தன்னுடைய இளைய மகளிடம் வினவினார் வனக்கிளி.
அதற்கு,”இப்போ தான் எல்லா கணக்கையும் பார்த்து முடிச்சேன்ம்மா! தோள்பட்டை ரொம்ப நோவுது!”என அவருக்குப் பதிலளித்தாள் வேதவள்ளி.
“நீ கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வெடுத்தா! நான் அவங்களுக்கு வேலைகளை எல்லாம் பிரிச்சுக் கொடுத்துட்டு வாரேன்த்தா”என்ற அன்னையிடம்,
“ம்ஹூம்! அது சரியாக வராதும்மா. இந்த நோவை எல்லாம் பார்த்தால் வேலைகளைப் பார்க்க முடியாது! இது அப்பா நமக்குக் கொடுத்துட்டுப் போனப் பொறுப்பு! நாம தான் சரியாகச் செய்யனும்!”என உறுதியாக மொழிய,
அதில் மகளைப் பெருமைப் பொங்கப் பார்த்தவரின் கண்கள் சட்டென்று வேதனையைத் தத்தெடுத்துக் கொண்டது எனலாம்.
அதைக் கண்டு கொண்டு,”ம்மா! காலையிலேயே நீங்க இப்படி உங்களோட முகத்தைச் சோகமாக வச்சுக்கிட்டால் நான் எப்படி என் வேலையை நிம்மதியாகப் பார்க்க முடியும்?”என அவரிடம் அலுத்துக் கொண்டாள் வேதவள்ளி.
“சரித்தா. நான் எப்பவும் போலவே இருக்கேன்! உன் மனசுக் கோணாமல் நடந்துக்கிறேன்”என்றுரைத்து விட்டார் வனக்கிளி.
அதற்குப் பிறகுத் தங்களது எண்ணெய் ஆலைக்குள் நுழைந்தப் பெண்களின் பெயர்ப் பட்டியலை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்று,
“எல்லாரும் வந்தாச்சா? பேர் வாசிக்கலாமா?”எனக் கேட்டிருந்தாள் வேதவள்ளி.
அதற்கு,”நாங்க எல்லாரும் வந்தாச்சுத்தா. பேரை வாசி”என்றனர் அந்தப் பெண்கள் அனைவரும்.
உடனே பெயர்ப் பட்டியலில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கவும்,
தாங்களும் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொண்டு விட,
அந்த வேலை முடிந்ததுமே,”எல்லாரும் வந்திருக்கீங்க! நல்ல விஷயம்! இப்போ வேலையைப் பாருங்க! நிலக்கடலை, எள்ளுத், தேங்காய்ன்னு மூனுப் பிரிவு இருக்கு. அதில் இன்னைக்கு உங்களுக்கு என்னப் பிரிவுன்னு நேத்தே தந்தாச்சு. அதனால் வேலையில் எந்தக் குழப்பமும் நடக்கக் கூடாது!”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டு அவர்களை அனுப்பி வைத்து விட்டாள் வேதவள்ளி.
அதற்கு இணங்கித் தாங்களும் தத்தமது பிரிவிற்குச் சென்று வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
“சம்பளப் பணத்தை எடுத்துட்டு வர்றேன்னு அண்ணே சொல்லி இருந்தாரேம்மா? அவரை இன்னும் ஆளைக் காணோம்?”என்று அறைக்குள் இருந்து கொண்டே வரப்பினைப் பார்வையிட்ட மகளிடம்,
“ஆமாம். ஆனால் அவனும், அவனையும், அவனோட பொஞ்சாதியைப் பத்தியும் தான் நமக்குத் தெரியுமே? சரியான சோம்பேறிங்க! தாமதமாகத் தான் வருவாங்க”எனச் சலித்துக் கொண்டார் வனக்கிளி.
“அவங்ககிட்ட அது ஒன்னு தான் குறைம்மா. மத்தபடி அவங்க நல்ல மனசுக்காரவக”என்று தன் அண்ணன் மற்றும் அண்ணியை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் வேதவள்ளி.
“சரித்தேன்! நீ அவங்களுக்கு எப்பவுமே ஏத்துக்கிட்டுத் தானே பேசுவ!”என்றவரோ,
அவளுக்குத் துணையாக அந்த அறையிலேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டிருந்தார் வனக்கிளி.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த ஆலைக்கு வந்து சேர்ந்தார்கள் வைரமணியும், இளவரசியும்.
அவர்களைப் பார்த்ததுமே,”இந்தா வந்துட்டாங்க மூத்தவரும், அவரோட சம்சாரமும்! எவ்வளவு நகை, நட்டைப் போட்டுப் பம்மாத்துக் காட்டிக்கிட்டு வர்றாகப் பாரு! இவளை விட இளையவ மூளியாக இருக்கும் போது இவ மட்டும் இப்படி மினுக்கிட்டு வந்தால் இவளோட நாத்தனாருக்கு மனசு சுணங்கும் தானே?”என்று தங்களது மனதில் இருந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாள் லட்சுமி.
“ஆமாம் டி! அதுவும் இல்லாமல் புருஷனோட சோடிப் போட்டுட்டு அவ முன்னாடியே வளைய வர்றாள் பாரு! அது தான் எனக்குமே மனசுக் கேட்கலை”என்று தெரிவித்தாள் சுகுமாரி.
ஆம்!
வேதவள்ளி ஒரு இளம் விதவை!
அவளுக்கு இருபது வயதிலேயே திருமணம் நடத்தி வைத்து விட்டிருந்தனர் அவளது பெற்றோரான தெய்வநாயகம் மற்றும் வனக்கிளி.
வேதவள்ளியின் கணவன் சிவமலைக்கு மாடு அடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில் அதிக விருப்பம் இருந்தது என்று கூறுவதை விடவும்,
அதில் அவனுக்கு ஒரு போதை மற்றும் வெறி இருந்தது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்!
அந்தளவிற்கு அந்தப் பொழுதுபோக்கில் மிகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான் சிவமலை.
ஆனால் அதுவே அவனைக் காவு வாங்கும் என்று அவனது மனைவியும், மற்றக் குடும்ப உறுப்பினர்களும் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறலாம்!
ஒரு நாள் தன்னுடைய மனைவியான வேதவள்ளியிடம்,”இன்னைக்குப் பெரியப் போட்டி ஒன்னுல கலந்துக்கப் பொறேன் புள்ள! அதனால் எனக்கு ஆரத்தி எடுத்துப் பொட்டு வச்சு அனுப்பி வுடு!”என்று புன்னகையுடன் அறிவுறுத்தினான் சிவமலை.
அதைக் கேட்டுத் தனக்குள் சஞ்சலமும், நடுக்கமும் உருவாகுவதை உணர்ந்து கொண்டவளோ,”பெரியப் போட்டின்னா மாட்டையும் கடுமையாகத் தயார் செஞ்சி வச்சிருப்பாக தானங்க? நீங்க அதுக்குக் கண்டிப்பாகப் போயே ஆகனுமா? கொஞ்சம் பொறுமையாக யோசிச்சு முடிவெடுங்க”எனக் கணவனிடம் கலக்கத்துடன் தெரிவித்தாள் வேதவள்ளி.
அதைக் கேட்டதுமே,”என்னப் புள்ள எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னுப் பயப்பட்றியோ? உனக்கே என் மேல் நம்பிக்கை இல்லைப் போலவே! நான் இது வரைக்கும் எத்தனைப் போட்டியில் கலந்துக்கிட்டு என் திறமையைக் காட்டி இருக்கேன்! அதுக்கு அப்பறமும் உனக்கு இந்தப் பயம் வருதுன்னா நான் இன்னும் உங்கிட்ட என்னோட பலத்தைச் சரியாக நிரூபிக்கலைன்னு அர்த்தம்! அதனால் நான் கண்டிப்பாக இந்தப் போட்டியில் கலந்துக்கத் தான் போறேன்! நீ ஆரத்தி எடுப்பியா? மாட்டியா?”என்றவனைச் சமாதானம் செய்து ஆரத்திச் சுற்றிப் பொட்டு வைத்து அவனை நன்றாக ஊக்கப்படுத்தி அந்தப் போட்டிக்கு அனுப்பி வைத்தவளுக்கு,
அடுத்தச் சில மணி நேரங்களில் அவளது கணவன் மாட்டின் கொம்பு அவனது வயிற்றைத் தாறுமாறாக குத்திக், கிழித்துப் பறக்க விட்டிருப்பதாகவும்,
அதன் காரணமாக அவன் தற்போது குற்றுயிராக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்தது!
அதை அறிந்ததுமே வேதவள்ளியும், அவளது மற்றும் அவளது கணவனின் குடும்பத்தாரும் அடித்துப், பிடித்துக் கொண்டு அவனைக் காண மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த தனது கணவன் சிவமலையின் நிலையை மருத்துவரின் வாயிலாக கேட்டறிந்த அடுத்த கணமே மயஙகிச் சரிந்து போய் விட்டிருந்தாள் வேதவள்ளி.
அவளையும் ஒரு அறையில் வைத்து அவளுக்கு உயர் இரத்த அழுத்த்திற்கானச் சிகிச்சை அளிக்கப்படத் தொடங்கியது.
இதையெல்லாம் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் நொடிந்து போய் விட்டார்கள் சிவமலை மற்றும் வேதவள்ளியின் பெற்றோர்கள்.
அதிலும்,”எனக்கு மனசு ரொம்பக் கெடந்து தவிச்சுத், துடிக்குதே! நெஞ்சு வேற ஒரு மாதிரி வலிக்குது!”என்று கலங்கிப் போய், வியர்த்து வழிந்து கொண்டிருந்தார் வேதவள்ளியின் தந்தையான தெய்வநாயகம்.
தனது கணவனின் நிலையைக் கண்டதும் பரிதவித்துப் போய்,
“என்னமாவது செய்டா வைரா! என்னால் முடியலை! உங்க அப்பாவுக்கும் முடியாமல் போயிடுமோன்னுப் பயமாக இருக்கு!”என்று தன்னுடைய மூத்த மகனிடம் அரற்றினார் வனக்கிளி.
அவனும் செய்வதறியாது நின்று கொண்டு இருந்ததால் அடுத்து என்னப் பண்ண வேண்டும் என்பதை மறந்து போயிருக்க,
இப்போது தனது அன்னையின் இந்த வேண்டுகோளைக் கேட்டவுடன் தான் ஸ்மரனை வந்து,“சரிம்மா! நீங்க முதல்லப் பதட்டப்படாதீங்க! யாருக்கும், எதுவும் ஆகாது!”என்று அவருக்குத் தைரியம் அளித்து விட்டுத் தன் தந்தையின் நிலையை மருத்துவரிடம் தெரிவிக்கச் சென்று விட்டான் வைரமணி.
அதேபோல் தன்னுடைய மாமியாருக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு நம்பிக்கையூட்டத் தொடங்கினாள் இளவரசி.
தெய்வநாயகத்தைப் பரிசோதித்து விட்டு,”இவருக்கு ரொம்பவே மன அழுத்தம் வந்திருக்கு! அதனால் தான் நெஞ்சு வலிக்குது! இவரையும் கொஞ்சம் சிரத்தை எடுத்துப் பார்த்துக்கோங்க! இன்னைக்கு ராத்திரி வரைக்கும் பார்ப்போம்!”என்று கையை விரித்து விட்டார் மருத்துவர்.
ஒரு அறையில் சிவமலைத் தனது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, இன்னொரு அறையில் உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது அவனது மனைவியான வேதவள்ளிக்கு.
இவர்கள் இருவரைப் பற்றிய கவலையில் மூழ்கி இருந்ததாலேயே தெய்வநாயகத்திற்கு நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டுப் போனதை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை!
அதனால் அன்றிரவு அவர்கள் அனைவரும் எதிர்பாராத விதமாக அவரது உயிர் அவரின் உடலை விட்டுப் பிரிந்து மேல் உலகம் சென்று விட்டிருந்தது!
- தொடரும்