அத்தியாயம் 2
அதைக் கவனித்து விட்டு மிகவும் வருத்தப்பட்டுப் போனார் தெய்வநாயகத்தைப் பரிசோதித்த மருத்துவர்.
“இதை எப்படி அவங்க கிட்ட சொல்லப் போறோம் டாக்டர்?”எனத் தானும் அவரிடம் கலக்கத்துடன் வினவினார் அவருக்கு உதவியாக இருந்த செவிலியர்.
“ம்ஹ்ம். வேற வழியில்லை சிஸ்டர். சொல்லித் தான் ஆகனும்”என்று அவரிடம் கூறி விட்டுத் தெய்வநாயகத்தின் மொத்தக் குடும்பத்தாரையும் அழைத்து அவர்களுக்கு விஷயத்தை தன்மையாகச் சொன்னார் மருத்துவர்.
அதைக் கேட்டதுமே அவர்கள் அனைவருக்கும் மொத்த உலகமும் ஸ்தம்பித்துப் போய் விட்டதைப் போன்ற உணர்வு உண்டாகி விட்டிருந்தது.
“நான் இப்போ என்னப் பண்ணுவேன்??”எனப் பெருங்குரல் எடுத்து அழுகத் தொடங்கினார் வனக்கிளி.
அதே சமயம் இந்தச் செய்தியை எப்படி வேதவள்ளியிடம் சொல்லப் போகிறோம்? என்று தெரியாமல் விழித்தார்கள் வைரமணியும், இளவரசியும்.
ஆனால்,”அவகிட்டே விஷயத்தைச் சொல்லித் தான் ஆகனும். இல்லைன்னா, மருத்துவரை வச்சு சொல்லச் சொல்லுவோம்”என்றிருந்தனர் சிவமலையின் பெற்றோரான குமரிமுத்து மற்றும் பாண்டியம்மாள்.
“அப்படின்னா டாக்டரு ஐயாவையே வள்ளி கிட்டே பேசச் சொல்லுவோம்”என்று முடிவெடுத்தவர்களின் தலையில் மற்றுமொரு இடியை இறக்கினார்கள் மருத்துவரும், செவிலியரும்.
வேதவள்ளியின் கணவன் சிவமலையும் சிகிச்சைப் பலனின்றி உயிர் நீத்து விட்டிருந்தான்.
இந்தத் தகவலையும் கனத்த மனதுடன் தான், அந்த மொத்தக் குடும்ப உறுப்பினர்களிடமும் தகவல் தெரிவித்தனர்.
அதில் மிகவும் உடைந்து போய் விட்டார்கள் அவர்கள் அனைவரும்.
சிவமலையின் பெற்றோரால் மகனின் இழப்பை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!
அதே நேரத்தில் அந்த அதிர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அதற்குக் காரணம் வேதவள்ளியின் ராசி என்று வாய் கூசாமல் தங்களது மருமகளைக் குற்றம் சாட்டினர் குமரிமுத்து மற்றும் பாண்டியம்மாள்.
அதைக் கேட்டதுமே,”ஐயோ! என்ன இப்படி எங்கப் பொண்ணை ராசியில்லாதவள்ன்னுச் சொல்லிட்டீய? அவளால் தான் இதெல்லாம் நடந்ததா? நாங்களும் எங்க வீட்டுக்குத் தூணாகத், துணையாக இருந்தவரைக் காவு கொடுத்துட்டு அதை தாங்கிக்க முடியாமல் இருக்கிற இந்த நிலையில் நீங்க எங்கப் பொண்ணை இப்படி பழிச்சுப் பேசுறது நியாயமா?”என்று தன் கணவரின் இழப்பிற்குக் கண்ணீர் வடித்தாலும் கூட அந்தச் சமயத்திலும் தனது மகளுக்காக அவளது புகுந்த வீட்டாரிடம் நியாயம் கேட்டு நின்றார் வனக்கிளி.
“ஆமாம்! உங்க மயன் மாட்டைப் பிடிக்கிறப் போட்டியில் கலந்துக்கிட்டு அதில் அடிபட்டுச் செத்துப் போனால் அதுக்கு எங்க வீட்டுப் பொண்ணைக் குத்தம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கு? உங்க மயனை நீங்க ஒழுங்காக வளர்த்து இருக்கனும்! அதை விட்டுட்டு என் நாத்தியைக் குத்தம் சொல்லாதீய!”எனத் தானும் தன்னுடைய நாத்தனாருக்காகப் பரிந்து பேசினாள் இளவரசி.
“ஏய் இந்தாம்மா! நாங்களே எங்கப் பையனை எமனுக்குக் கொடுத்துட்டு இருக்கோம்! நீ என்னவோ எகிறிக்கிட்டு வர்றியே!”என்று அவளிடம் கத்தினார் பாண்டியம்மாள்.
“அதே தான் உங்களுக்கும்! எங்க மாமாவும் தவறி இருக்காக! அந்த மனுஷனோட சாவுக்குக் கூட எங்களைக் கண்ணீர் சிந்த விடாமல் இப்படி நாக்கில் நரம்பில்லாமல் நீங்கப் பேசிட்டு இருக்கிறது நியாயமா?”என்றிருந்தான் அவளது கணவன் வைரமணி.
“அப்படித்தான் பேசுவோம்! உங்க வீட்டுப் பொண்ணோட ராசியால் தான்…”என்று ஆரம்பித்த சிவமலையின் தந்தைக் குமரிமுத்துவிடம்,
“ஐயா! உங்க ரெண்டுக் குடும்பத்திலும் இறப்பு நடந்து இருக்கு! முதல்ல அவங்களை நிம்மதியாக வழியனுப்பி வச்சிட்டு அதுக்கப்புறம் உங்க வீட்டுக்குப் போய் இதையெல்லாம் பேசித் தீர்த்துக்கோங்க! இங்கே வச்சு சண்டைப் போடாதீங்க!”என்று அறிவுறுத்தி, அமைதிப்படுத்தினார் தலைமை மருத்துவர்.
அதில் தாங்களும் அமைதி அடைந்து விட்டு வேதவள்ளிக் கண் விழிப்பதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள் இரண்டு குடும்ப உறுப்பினர்களும்.
அப்போது தான், தத்தமது வீட்டில் நிகழ்ந்த இழப்புகளை எண்ணி அழுகையில் கரையத் தொடங்கினர் அவர்கள் அனைவரும்.
சில நிமிடங்கள் கழித்து தனது இமைக்குடைகளைத் திறந்து, தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தவளோ,
அங்கேயிருந்த செவிலியரைக் கண்டு விட்டு,”நர்ஸம்மா! நான் எப்படி இங்கே? எனக்கு என்னாச்சு? என் வீட்டுக்காரர் அவசரக் கட்டத்தை தாண்டிட்டாரா?”என்று அவரிடம் பாவமாக வினவினாள் வேதவள்ளி.
அதில் அவளைப் பரிதாபமாகப் பார்த்து,”நான் போய் உங்கம்மாவைக் கூட்டிட்டு வர்றேன்ம்மா. அவங்க எல்லாத்தையும் சொல்லுவாங்க”என அவளிடம் கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினார் அந்தச் செவிலியர்.
அவர் சொல்லியதைக் கேட்டவளுக்குக் குழப்பம் உண்டானது.
ஆனால் இங்கு வெளியே வந்த அந்தச் செவிலியரோ,”உங்க வீட்டுப் பொண்ணுக் கண் முழிச்சிட்டாங்க. நீங்கப் போய்ப் பார்க்கலாம்”என்றவுடனேயே அழுகைப் பீறிட்டுக் கொண்டு வந்தது வனக்கிளிக்கு!
“அவகிட்டே நான் எப்படி இதைச் சொல்லப் போறேன்?”என அரற்றியவரை முடிந்த அளவிற்குத் தேற்றி வேதவள்ளியிடம் அழைத்துச் சென்று,
“இங்கே பாரும்மா. நாங்கச் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாக கேளு”என்றத் தன் அண்ணன் மற்றும் அண்ணியையும், சேலைத் தலைப்பால் தன்னுடைய வாயைப் பொத்திக் கொண்டிருந்த அன்னையையும் பார்த்து விட்டு,
“என்னாச்சு? ஏன் நீங்க மூனு பேரும் இப்படி பரிதவிச்சுப் போயிருக்கீய?”எனத் தானும் அவர்களிடம் பதட்டத்துடன் கேட்டாள் வேதவள்ளி.
உடனே தன்னால் இதற்கு மேலும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டு மகளைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டே அவளிடம் விஷயத்தை தெரிவித்து விட்டிருந்தார் வனக்கிளி.
அதைக் கேட்டதும் சில கணங்களுக்கு அவளது மூளையும், உடலும் செயலிழந்து போய் விட்டது எனலாம்!
தனது அன்னையை வெறித்துப் பார்த்தவளுக்கோ தனது தந்தையும், கணவனும் ஒரே சமயத்தில் இவ்வுலகை விட்டுப் பிரிந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவே இல்லை!
தன்னுடைய சித்தம் கலங்கிப் போய் உட்கார்ந்து இருந்தவளைக் கண்டு ஆதங்கத்துடன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கரைந்தார் வனக்கிளி.
“அத்தை! இப்படி பண்ணாதீய! நாம தானே இவளுக்குத் தைரியம் சொல்லனும்? நாமளே இப்படி நிலைகுலைஞ்சுப் போனால் இவளை யார் தேத்துறது?”என்று அவரைச் சமாதானம் செய்ய முயன்றாள் இளவரசி.
அதே சமயம் தன்னுடைய கணவனும் அவனது தந்தையின் பிரிவில் இருந்து மீளாமல் துடித்துப் போயிருப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை!
அதனாலேயே தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டாரைத் தேற்றும் முயற்சியில் இறங்கினாள்.
ஆனால் அவளது அந்த முயற்சியைத் தகர்க்கும் விதமாக, அதிரடியாக அந்த அறைக்குள் நுழைந்து,
“எப்படி பகுமானமாகப் படுத்துக் கெடக்கான்னுப் பாருங்க! நீயெல்லாம் வெளங்குவியா? ராசியில்லாதவளே!”என்று வேதவள்ளியைக் கரித்துக் கொட்டினார் பாண்டியம்மாள்.
அவரைத் தொடர்ந்து,”ஆமாம்! எங்க மயனை இந்தப் பொண்ணுத் தான் கொன்னுட்டா”என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் வேதவள்ளியைக் குற்றம் சாட்டிப் பேசினார் குமரிமுத்து.
ஆனால் அந்த ஏச்சுப், பேச்சுக்களுக்கு எல்லாம் அசைந்து கொடுக்கும் நிலையில் இல்லை வேதவள்ளி!
அவள் உயிரில்லாத சவத்தைப் போல் அமர்ந்திருந்தவளை நெருங்கிய சிவமலையின் பெற்றோரின் சத்தத்தைக் கேட்டு உள்ளே வந்த தலைமை மருத்துவரும், அங்கே வேலை செய்யும் மற்றப் பணியாட்களும் இரு வீட்டாரையும் சமாதானம் செய்து வைத்து இறந்தவர்களின் உடல்களை அதற்குரிய சம்பிரதாயங்களை முடித்து வைத்து அவர்களை அங்கேயிருந்து அனுப்பி வைத்தார்கள்.
அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் சொல்லில் வடிக்க முடியாத சோகங்கள் என்று கூறலாம்!
கடைசி வரைக்கும் வேதவள்ளியை அவளது கணவன் சிவமலையின் முகத்தைக் கூடப் பார்க்க விடாமல் அவனை விண்ணுலகிற்கு வழியனுப்பி வைத்து விட்டனர் குமரிமுத்து மற்றும் பாண்டியம்மாள்.
அத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வேதவள்ளி மற்றும் அவளது வீட்டாருடனானத் தங்களது அனைத்து உறவுச் சங்கிலிகளையும் அறுத்து எறிந்து விட்டு அவர்களைத் தலை முழுகி விடவும்,
அதில் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட வெளியிடாமல் திடகாத்திரமாக இருந்து தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்குகளைத் தன்னுடைய தமையன், அண்ணி மற்றும் அன்னையுடன் சேர்ந்து நடத்தி முடித்திருந்தாள்.
அதைக் கண்டு அந்த ஊரின் மொத்த சனமும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டுப் போயினர்.
அவர்களைப் போலவே, சிவமலையின் இறப்பிற்கு வந்து,
“நீங்க அந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு அநியாயத்தைச் செய்து இருக்கக் கூடாதும்மா! ப்பா!”என்று தோழனின் பெற்றோருக்குப் புத்திமதி கூறினான் அமுதினியன்.
அதைக் கேட்டு,”நீயும் அவுகளுக்கு ஏத்துக்கிட்டுப் பேசுறதா இருந்தால் இந்த வீட்டுப் படியை மிதிக்காதேடா! வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சாமல் அமைதியாக இரு!”என அவனைக் கடிந்து கொண்டார்கள் குமரிமுத்துவும், பாண்டியம்மாளும்.
அதற்குப் பிறகும் அவர்களை மீறித் தன்னால் ஒரு வார்த்தைப் பேச முடியாது என்பது புரிந்து விடவும் அமைதியாக அங்கிருந்து அவர்களுக்கு ஒத்தாசை செய்யத் தொடங்கி விட்டான் அமுதினியன்.
ஆனாலும் வேதவள்ளிப் படும் பாட்டின் ஆழத்தை தானும் தனிப்பட்ட முறையில் ஒரு காலத்தில் எதிர்கொண்டு இருந்து இருக்கிறோம் என்ற உணர்வில் ஆட்கொண்டுப் போயிருந்தான்.
ஒரு வருடத்திற்கு முன்பு அவனும் அவனது மனைவியின் இழப்பைக் கண்கூடாகப் பார்த்து இருந்ததாலும், இப்பொழுது அதே நிலையில் தான் வேதவள்ளியும் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறாள் என்றெண்ணி அவள் மீது பரிதாபம் ஏற்பட்டது அவனுக்கு!
ஆனால் அதை யாரும் அறியாமல் தனது நெஞ்சிலேயே பூட்டி வைத்துக் கொண்டான் அமுதினியன்.
தனது நண்பன் சிவமலையும், அவனது குடும்பமும் தனக்குச் செய்த ஆரம்பக்கட்ட உதவிகளை அவ்வப்போது நினைத்துப் பார்த்து, அதற்குத் தானும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் வேதவள்ளியின் பக்கம் இருந்த நியாயத்தைச் சிவமலையின் பெற்றோரிடம் எடுத்துக் கூறாமல் விட்டு விட்டிருந்தான்.
அதற்குப் பிறகு சிவமலை மற்றும் வேதவள்ளியின் வீட்டாரும் தத்தமது இழப்புகளில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு எழுந்து தங்களது அன்றாட வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்கி விட்டிருந்த போதிலும் கூட வேதவள்ளியைப் பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வு ஏற்படத் தொடங்கி விடுவதை அமுதினியனால் தவிர்க்கவே முடியவில்லை!
ஆனால் சிவமலையைத் திருமணம் செய்ததில் இருந்து அவன் இறந்ததற்குப் பிறகும் கூட அமுதினியனிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசியது இல்லை வேதவள்ளி.
அதனாலேயே அவனும் அவளிடம் ஒரு வித ஒதுக்கத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்துக், கண்ணியமாக நடந்து கொண்டான்.
அமுதினியனும் வசதிக் குறைந்தவன் இல்லை! அவனிடமும் சிவமலை மற்றும் வேதவள்ளிக்கு இணையாக எண்ணெய் ஆலைகள் இருந்தது!
அதனால் தான் அவனிடம் தங்களது மகன் நட்புப் பாராட்டுவதை தடுக்காமல் இருந்தனர் குமரிமுத்து மற்றும் பாண்டியம்மாள்.
இப்பொழுதும் கூட அவர்களின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று அவ்விருவரையும் பார்த்துப் பேசி விட்டு வருவான் அமுதினியன்.
அவர்களுக்கு வேதவள்ளி மற்றும் அவளது வீட்டாரின் மீதிருந்த வன்மமும், கோபமும் மட்டும் குறைந்தபாடில்லை!
அவர்களது பொருமலைப் பொறுமையாக கேட்டு விட்டு அதற்கும் தனியாக ஆறுதல் உரைத்து விட்டு அங்கேயிருந்து கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டான் அமுதினியன்.
– தொடரும்






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!