• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிர் தேடல் நீயடி 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,935
Reaction score
35,613
Location
Vellore
IMG-20200213-WA0032 (1).jpg

உயிர் தேடல் நீயடி

அத்தியாயம் 4

ஒரு வருடம் முன்பு, விபீஸ்வர் கனவும் கண்டிருக்க மாட்டான், 'அவன் ஒரு பெண்ணிற்காக கண்ணீர் சிந்துவான்' என்று.

அப்போதெல்லாம் அவன் அகராதியில் பெண்கள் என்றாலே, அவன் தோட்டத்து மலர்கள் என்று தான் நினைப்பு. தன் கவனத்தை ஈர்க்கும் மலரை எந்த சேதாரமும் இன்றி துய்த்து மகிழ்ந்தவன். மேல் நாட்டில் அவன் பயின்று வந்த வாழ்க்கை முறையின் வழிகாட்டுதல் அது.

தந்தையின் திடீர் இழப்பு, தாயின் தேற்ற இயலாத நிலை, மேலும் தான் பொறுப்பேற்று கொண்ட வியாபாரத்தினால் அவனுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் என அனைத்தையும் மறந்து உல்லாசிக்க, அவன் வகுத்து வைத்திருந்த வாழும் முறைமை அது.

தான், தனது, தன் எண்ணம், தன் விருப்பம் என்ற சிறு குழந்தையின் கண்மூடித்தனமான பிடிவாதகுணம் அவனிடம் மலிந்து இருந்தது அப்போது.

அன்றைய நாட்களில் மற்றதை உதறிவிட்டு, வெற்றிகளையும் உல்லாசங்களையும் மட்டுமே அனுபவிக்கும் பிடிவாதக்காரனாய் இருந்தான் அவன்.

சரியாக ஒரு வருடம் மூன்று மாதங்களுக்கு முன்பு...

அன்று விபீஸ்வர் சந்தோசத்தின் மிதப்பில் இருந்தான். தன் அயராத முயற்சியால் இந்த இரண்டு வருடங்களில் தந்தையின் ஆடை உற்பத்தி தொழிலை இருமடங்கு லாபத்திற்கு கொண்டு வந்ததும் அன்றி, தன் திறமைக்கான அங்கிகாரமாய் ஆடைவடிமைப்பில் பல புதுமைகளை புகுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்றிருந்தான். அதனாலேயே வெளிநாட்டு ஏற்றுமதியில் இவன் நிறுவன உற்பத்தி, வடிவமைப்பு ஆடைகளின் மதிப்பு கூடியிருக்க, பெரும் லாபத்தை ஈட்டி இருந்தான்.

அதற்கான கொண்டாட்ட விழா தான் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் பிரம்மாண்ட கூடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தன் வெற்றியை தன் வியாபார நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான் விபீஸ்வர்.

எங்கும் நீல நிற ஒளி கீற்றுகள் பரவி இருந்த அந்த அகன்ற கூடத்தில், இரவுநேர கேளிக்கை கொண்டாட்டங்கள் அமர்க்களமாய் களைக்கட்ட துவங்கி இருந்தன.

சற்று நேர இடைவெளியில், எல்லோரின் பார்வையும் ஒரே பக்கமாய் திரும்பியது.

அங்கே, கருமை நிற பேண்ட், வெள்ளை நிற முழுக்கை சட்டை, அதற்கு மேல் கையற்ற சாம்பல் நிற கோட், கருப்பு சாய்வு கோடுகள் கொண்ட வெள்ளை நிற டை அணிந்து, கச்சிதமான உடற்கட்டோடு, மிடுக்கான பார்வையும், மயக்கும் புன்னகையுமாய் சீரான வேகத்தில் நடந்து வந்தவன், தாவி மேடையில் ஏறினான்.

“ஹே ஃப்ரண்ஸ்... லெட்ஸ் ஹேவ் என்ஜாய் த பார்ட்டி...” விபீஸ்வர் குரல் உற்சாகத்தில் ஓங்கி ஒலிக்க, மற்றவர்களின், “ஹோ...” என்ற கொண்டாட்ட கூச்சலில் அந்த இடமே ஆர்பரித்தது.

மேடையிறங்கி வந்தவனிடம் ஒவ்வொருவராய் கட்டியணைத்தும் கைகுலுக்கியும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள, உற்சாகமாய் நன்றி நவின்றபடி முன்வந்தவனை ஆரத் தழுவி, அவன் கன்னத்தில் இதழொற்றி தன் வாழ்த்தை தெரிவித்தாள் ஒரு நவநாகரீக நங்கை.

அவளுக்கான பதில் முத்தத்தை சிதறாமல் தந்தவன், “ஹே பேப், யூ லுக் சோ பியூட்டிபுல்” என்றான் தன் ஒற்றை கைவளைவில் அவளை நிறுத்தி மேலிருந்து கீழாக தன் பார்வையை ஓட்டி. “யூ டூ செம ஹாட் மச்சி” என்றாள் அவளும் கண்களில் குறும்பு மின்ன.

கசியும் நீலவண்ண ஒளியில், மிதமான துள்ளலிசையில் அதற்கேற்ற உடலசைவுகளோடும் மதுவின் தள்ளாட்டத்தோடும் ஆண், பெண் பேதமின்றி விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

செல்வத்தின் செழிப்பும், மேலை கலாச்சாரத்தின் உச்சமும், தனிமனித இச்சைகளின் விகசரிப்பும், பண்பாட்டின் வீழ்ச்சியும் அங்கே மிக அழகாய் அரங்கேறிக் கொண்டிருந்தது.

கைகளில் ஏந்திய பூங்கொத்தோடு புதுமலராய் புன்னகை மிளிர, மிரளும் விழிகள் விரிய அந்த கூடத்தை பார்வையால் அலசியபடி ஒய்யார நடையிட்டு வந்தவளை கண்ணுற்ற விபீஸ்வர் நெற்றி சுருங்க, ஒற்றை புருவம் மேலேறி இறங்கியது மெச்சலாய்.

வாழ்த்து சொன்ன நண்பரிடம் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த அழகியிடம் பார்வை பதித்தபடி நகர்ந்தவனை மற்றொரு ஆரதழுவல், இதழொற்றல் பரிமாற்றம் என அவனின் மறு தோள் தொற்றிக் கொண்டாள் மற்றொரு நாகரீக யுவதி.

“சோ சேட் விபி, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றவள் சிணுங்க, “மீ டூ பேப்” என்றவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி, “நௌ லிட்டில் பிஸி செர்ரி, என்ஜாய் த பார்டி” என்று நழுவிக் கொண்டவனின் பார்வை, வெண்ணையில் தோய்த்த மெழுகு சிலையாய் அங்கே நின்ற புதிய அழகியை ரசித்திருந்தது.

“ரிக்கி” ஒற்றை அழைப்புக்கு, “எஸ் பாஸ்” என்று எங்கோ இருந்து ஓடி வந்து நின்றான் ரிக்கி.

விபீஸ்வரிடம் பதில் வராமல் போகவே அவனின் பார்வை சென்ற திக்கை தொடர்ந்தவனின் கண்கள் அகல விரிந்தன. 'செம்ம ஃபிகர் பா, எப்படி தான் இவர் கண்ணுல மட்டும் தானா வந்து சிக்குறாங்களோ?' என்ற ஆதங்கமான முணுமுணுப்பு ரிக்கியிடம்.

“ஹு இஸ் தட்?” விபீஸ்வரின் கேள்விக்கு, “ஃபியூ மினிட்ஸ் பாஸ்” என்று அகன்றவன், அடுத்த ஐந்து நிமிடங்களில் மீண்டும் அவன் முன் வந்து நின்றான்.

“பேரு ரிது. நியூ மாடல். சுவீட்டியோட ஃபிரண்ட், இப்ப ஃபீரியான்னு கேட்டதுக்கு என்னை கேவலமா லுக் விட்டாங்க பாஸ்” ரிக்கி முகம் சுருங்கி சொல்ல, சட்டென சிதறவிட்ட சிரிப்போடு இதழ் சுழித்தவனின் கால்கள் சுவீட்டியிடம் சென்றன. ரிதுவும் அவளுடன் தான் ஏதோ பருகியபடி கதையளந்து கொண்டிருந்தாள்.

“ஹாய் சுவீட்டி” என்ற அழைப்பில் கண்கள் மின்ன, “ஹே விபிஷ், கங்க்ராட்ஸ்” என்று ஒரு ஹக்குடன் விலகியவள், “மீட் மை பெஸ்டி ரிது” என தன் தோழியை அறிமுகம் செய்ய, ரிதுவும் சினேக முறுவலோடு அவனிடம் பூங்கொத்தை நீட்டினாள்.

“கங்க்ராட்ஸ் விபிஷ், நைஸ் டூ மீட் யூ” என்றவளிடம் பூங்கொத்தை பெற்றுக் கொண்டவன், “தேங்க்ஸ் பேப்” என்று அவளை ஹக் செய்தவன், “யூ லுக் சோ கார்ஜியஸ் பேப்” என்று அவள் காதருகே கிசுகிசுத்து விடுவித்தான்.

அவள் திருதிருத்து விழிக்க, “லெட்ஸ் டேன்ஸ் ரிது” அவள் முன் கைநீட்ட, ரிது சுவீட்டியின் முகம் பார்த்தாள். அவளும் கண்ணசைவில் ஆமோதிக்க விபியின் கை சேர்த்து அவனோடு நடனமாட தொடங்கினாள்.

மினுமினுக்கும் மயங்கிய விளக்கொளியில், துள்ளி விழும் இசையில் அங்கே பல ஜோடிகள் இணைந்து தாளம் தப்பி ஆடி கொண்டிருந்தனர்.

அந்த இரவு நேர கேளிக்கையாட்டத்தில் விபி, ரிது இருவருக்கிடையேயான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்க, விழா முடியும் மட்டும் அவன் கைவளைவிலேயே தொற்றிக் கொண்டிருந்தவளை அந்த ஓட்டலில் தனக்கான அறைக்குள் அழைத்துச் சென்றான்.

போதை ஏற்றும் அந்த கணங்கள் ஒவ்வொன்றும் அவனை பொறுத்தவரை தேன் தெளிக்கும் நிமிடங்கள்.

பித்தம் கொண்டு பித்தம் தெளிய வைக்கும் ஆனந்த களியாட்டங்கள் இரவு முழுவதும் நீண்டன அவனுக்கும் அவளுக்குமாய்.


***

காவ்யதர்ஷினி, சாதாரண குடும்பத்தில் மூத்த பெண்ணாய் பிறந்தவள். அவளின் அப்பா இருந்த வரையில் கவலைகளின்றி, எளிமையும் சந்தோசமுமாய் சென்று கொண்டிருந்த குடும்பத்தில், அவரின் இழப்பு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டு போயிருந்தது.

கோவிந்தன் பார்த்து கொண்டிருந்த சாதாரண வேலைக்கு அவர் சம்பளம் வரவுக்கும் செலவுக்கும் மட்டுமே என்றிருந்தது. சிறிய ஒண்டு குடித்தன வீட்டு வாடகை, தன் மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு என குடும்பத்தை நகர்த்திக் கொண்டு வந்தவர், விஷ காய்ச்சல் வந்து இரண்டு வாரங்களில் பலியானார்.

தன் கணவனின் இழப்பில் அதிர்ந்து உடைந்து போனார் பார்கவி. அதைவிட தன்முன் வளர்ந்து நிற்கும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் அவரை மேலும் கவலைக்கொள்ள செய்திருந்தது.

கல்லூரி படிப்பை அப்போது தான் முடித்திருந்த காவ்யாவிற்கு தன் குடும்ப நிலையும் தன் கடமையும் நன்றாகவே புரிந்திருந்தது. தன் அம்மா, தம்பி, தங்கை அனைவரின் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டாள்.

அப்போதிற்கு பகுதி நேர வேலைகளை செய்தபடி, தன் படிப்பிற்கேற்ற வேலையையும் தேடிக் கொண்டு இருந்தாள்.

ஆறு மாதங்கள் தொடர் முயற்சியில் சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் காவ்யாவிற்கு கிடைத்தப்பாடில்லை.

அப்போதைய குடும்ப தேவைகள் அவளை மூச்சுமுட்ட வைத்துக் கொண்டிருந்தன. அவளின் சொற்ப வருமானத்தால் அனைத்தையும் அவளால் சமாளிக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் தான் விபி குரூப்ஸ் நிறுவனத்தின் நேர்முக தேர்வில் பங்குபெற அவள் வந்திருந்தாள். அங்கே அவளை முதலில் மிரட்டியது, அங்கு வந்திருந்தவர்களில் பெண்களின் நாகரீக உடையும் தோற்றமும் தான்.

தனது சாதாரண உடையும் எளிமையான தோற்றமும் அங்கே பொருந்தாதைப் போல ஒருவித பதற்றம் அவளுள் பரவத்தான் செய்தது.

நேர்முக தேர்வு ஆரம்பிக்க, 'இந்த வேலை மட்டும் கிடைத்தால் போதும், தன் குடும்ப தேவைகள் அனைத்தும் தீர்ந்து விடும்' என அவள் மனதிற்குள் நப்பாசைகள் கிளைவிட்டன.

அவளின் முறை வரவும், 'எப்படியாவது இந்த வேலை கிடைக்கணும் பிள்ளையாரப்பா... உனக்கு கொழுக்கட்டையும் கொண்டகடலை சுண்டலும் செஞ்சு தருவேனாம் ப்ளீஸ், ப்ளீஸ்...' என்று மனதில் வேண்டியபடியே, தன் மூக்கு கண்ணாடியை ஒற்றை விரலால் சரி செய்துகொண்டு, அனுமதிகேட்டு அறைக்குள் சென்றாள்.

அங்கே நடுநாயகமாக ஓர் இளைஞனும், பக்கவாட்டில் நடுத்தர வயதை கடந்தவர் ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

விபீஸ்வர் பார்வையில் முதலில் பதிந்தது அவளின் எளிமையான தோற்றம் தான். வெகு சாதாரணமான காட்டன் சுடிதாரில் வந்திருந்தாள் அவள். மற்ற தேர்வர்களின் தோற்றத்தை ஒப்பிடும்போது இவள் தோற்றம் பூஜ்யம் தான். எனினும் அந்த உடை அவளின் மெல்லிய தேகத்தில் பாந்தமாக பொருந்தி இருந்தது. அவள் கண்களில் அணிந்திருந்த சாதாரண கண்கண்ணாடி ஏனோ அவள் முகத்துக்கு அத்தனை எடுப்பாக இல்லாதது போல் தெரிந்தது இவனுக்கு.

அவள் தயக்கத்துடன் அமர, அவள் முகத்தை ஊன்றி பார்த்தவனுக்கு அவளின் கண்கண்ணாடியைத் தாண்டி, கண்களில் இருந்த பரிதவிப்பை நன்றாகவே உணர முடிந்தது.

அவன் கண்ணசைவில் கம்பெனி மேலாளர் ரங்கராஜன் வழக்கமான கேள்விகளை காவ்யாவிடம் கேட்க தொடங்கினார்.

காவ்யா அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாகவே பதில் தந்து கொண்டிருக்க, விபீஸ்வர் பார்வை எதிர் இருந்தவளை எடைப்போட்டு கொண்டிருந்தது. இது அவனது பழக்கதோசம் தான்.

அவனை சுற்றும் நாகரீக அழகிகளுக்கு மத்தியில் இவளால் நிற்க கூட முடியாது. அந்த ஆண்மகனை கவரும் எந்தவித கவர்ச்சியும் வசீகரமும் அவளிடம் இருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ, எந்த ஆடம்பர அலங்காரமும் அற்ற அவளின் இயல்பான அழகு, முதல் பார்வையிலேயே அவனுக்குள் நல்லுணர்வை ஏற்படுத்தி இருந்தது.

அதுவும் மேலாளரின் கேள்விகளுக்கு அவள் சிரத்தையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தவறுதலாக கூட அவள் பார்வை அவன் பக்கம் திரும்பவில்லை.

தன்னிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் தவிக்கும் இளம் பெண்களுக்கு இடையே இவளின் மனக்கட்டுப்பாடு சற்று சுவாரஸ்யமாகவும் தோன்றியது அவனுக்கு.

மேலாளரின் கேள்விகள் முடிய, “ஓகே மிஸ் காவ்யதர்ஷினி, இன்னும் ஒன் வீக்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். ஆல் த பெஸ்ட்” என்று விபீஸ்வர் முடித்துவிட, ஏனோ அவள் கண்களில் ஏமாற்றத்துடன் கூடிய கண்ணீர் திரையிட்டது.

அதனை வெளிக்காட்டாமல் இமைத்து கொண்டவள், முயன்று புன்னகைத்து, “தேங்க் யூ சர்” என்று விடைபெற்று சென்றாள்.

அவள் முகத்தை கவனித்திருந்த விபீஸ்வருக்கு அவளின் கலக்கத்தின் காரணம் புரியவில்லை, அலட்சியமாய் தோளை குலுக்கி கொண்டான்.

நேர்முகத்தேர்வு முடிவடைய, வந்தவர்களில் சிறந்த ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் விவரங்களை ரங்கராஜன் விபீஸ்வரிடம் கொடுத்தார்.

ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு வந்தவனின் பார்வையில் காவ்யாவின் விவரமும் இருக்க, “இந்த கேன்டிடேட் கூடவா?” என்று சந்தேகமாய் கேட்டான்.

“எஸ் விபி, ஷி இஸ் சோ டேலன்டட். பட், முன் அனுபவம் மட்டும் தான் இல்ல” என்று பதில் தந்தார். விபியை குழந்தையில் இருந்தே அவருக்கு தெரியுமாதலால் முதலாளி என்பதை தாண்டி அவனிடம் மனதால் நெருங்கி இருந்தார் ரங்கராஜன்.

யோசனையுடன் தலையசைத்தவனின் நினைவில் அவளின்‌ கலங்கிய முகம் வந்து போனது. 'இந்த சின்ன வயதில் அவளுக்கு அப்படி என்ன பிரச்சனை இருக்கக்கூடும்?' என்று எண்ணிக் கொண்டான்.

ரவிக்கு போன் செய்து, ஐந்து தேர்வர்கள் பற்றிய விவரங்களை தந்து, அவர்களைப் பற்றிய தகவல்கள் வேண்டும் என்றான். அதோடு அதில் காவ்யதர்ஷினி பற்றிய முழு தகவல்களும் வேண்டும் என்றான்.

மூன்று நாட்கள் கழித்து ரவி, காவ்யா பற்றிய விவரங்களை அலைப்பேசியில் விபியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“கீழ்மட்ட நடுத்தர குடும்பம் சர்.”

“ம்ம்.”

“வீட்டுக்கு மூத்த பொண்ணு, ஒரு தம்பி சிவா, காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறான். தங்கை மஞ்சரி லெவன்த் படிக்கிறாங்க.”

“ம்ம்.”

“ஏழு மாசத்துக்கு முன்னதான் அவங்க அப்பா தவறி இருக்காங்க, அவங்க அம்மா வீட்டோட டெய்லர் வேலை செய்றாங்க, காவ்யதர்ஷினி காலைல கம்யூட்டர் சென்டர்ல வேலை செஞ்சுட்டு, சாயந்திரம் ஒரு கிஃப்ட் ஷாப்ல சேல்ஸ் கேர்ளா இருக்காங்க, ஃபினான்ஷியலா கஷ்டத்தில இருக்க ஃபேமிலி தான் சர்.”

“காவ்யாவோட கேரக்டர் எப்படி?”

“பியூர் சர்.”

“ஓகே, தேங்க் யூ ரவி” என்று தொடர்பை துண்டித்தவன் முகத்தில் ஏதோ யோசனை பரவியது.

சில வருடங்கள் முன்பு தன் தந்தையின் திடீர் இழப்பால் தனக்கு ஏற்பட்ட வேதனை... அதனையும் தூர நிறுத்திய தனக்கான குடும்ப, தொழில் பொறுப்புகள், கடமைகள்... அந்த இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து வந்த நாட்கள்... இவை தானாக வீபீஸ்வரின் நினைவலையில் வந்து போயின.

தன்னை போலவே தந்தையை இழந்து ஒரு சிறு பெண் தன் குடும்பத்திற்காக அல்லல்படுகிறாள் என்பதே அவனுக்கு அவள் மேல் இரக்கத்தை தோற்றுவித்திருந்தது.


***

(கவி 💞 விபி)

(நன்றி ஃபிரண்ட்ஸ் ❤❤❤ அடுத்த பதிவு திங்கள் அன்று...)
 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
172
Reaction score
731
Location
Ullagaram
தந்தையை இழந்த மிகச் சாதாரண குடும்பத்து சுமாரான சின்னப் பொண்ணு தான். அதுக்காக அவளுக்கு வேலையை கொடுத்தான் சரி.
அப்புறம் எப்படி அவளுக்கு மனசையும் கொடுத்து, மனைவி என்னும் அந்தஸ்தையும் கொடுத்தான்னு தான் தெரியலையே...???
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,935
Reaction score
35,613
Location
Vellore
தந்தையை இழந்த மிகச் சாதாரண குடும்பத்து சுமாரான சின்னப் பொண்ணு தான். அதுக்காக அவளுக்கு வேலையை கொடுத்தான் சரி.
அப்புறம் எப்படி அவளுக்கு மனசையும் கொடுத்து, மனைவி என்னும் அந்தஸ்தையும் கொடுத்தான்னு தான் தெரியலையே...???
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
அதுவும் விரைவில் தெரிய வரும்மா😀 நன்றி 😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top