• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மல்லிப் பூவே🌸11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,399
Reaction score
6,510
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰
1000001118.jpg
11

“அய்யோ… புள்ளய அடிக்காதீங்க. தாங்கமாட்டா. அதென்ன வயசுப்புள்ள மேல கை வைக்கிறது?” தாவி வந்து மகளை அணைத்துக் கொண்டார் மாரியம்மாள். அடி பொறுக்க மாட்டாமல் சுருண்டு கிடந்தாள் கல்யாணி. பிறந்ததிலிருந்து செல்லமாகக் கூட மகளை கை தொட்டு அடித்ததில்லை. நான்கு அடிக்கே சுருண்டுவிட்டாள்.

“எல்லாம் ஒன்னயச் சொல்லணும்டி. இதான் நீ பொம்பளப்புள்ளய வளக்குற லட்சணமா? உம்புள்ள மானத்தையே வாங்கிட்டு வந்து நிக்கிது.” குறுக்கே விழுந்து மரித்ததில் மாரியம்மாவிற்கும் இடுப்புவாரால் இரண்டு அடி விழுந்தது.

“இப்ப மட்டும் எம்புள்ளயா. பொம்பளப்புள்ளய தலைல தூக்கிவச்சு ஆடாதீங்கனு சொன்னப்பல்லாம் தெரியலயா?”

“இது படிச்சுக் கிழிச்சது போதும். கல்யாண ஆச வந்துருச்சுல்ல. சீக்கிரம் மாப்ள பாத்து கட்டிக் கொடுத்து அனுப்புற வழியப் பாக்கணும்.”
ஒரு பெண், ஆணோடு பழகினாலே கல்யாண ஆசை வந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் பெற்றவர்களில் இவர் மட்டும் தப்பிப்போவாரா என்ன. காதல் என்பது வேறு. கல்யாணம் என்பது பொறுப்பு. ஒரு குடும்பம், உறவுகள், சந்ததி, அதைச் சார்ந்த பொறுப்புகள் என அத்தனையும் தூக்கிப் பிடிக்கும் பக்குவம் மகளுக்கு வந்துவிட்டதா என நினைக்கவில்லை.

“ஏங்க… அவளுக்கென்ன தெரியும். அந்த வீணாப் போனவந்தான் புள்ள மனசக் கலச்சிருக்கணும். நல்லபயன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு அவன் புத்தியக் காமிச்சுட்டான். நல்லாவே இருக்கமாட்டான்.” கண்ணீரும் கம்பலையுமாக, முந்தானையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பொங்கித் தீர்த்தார் மாரியம்மாள்.

மகளை அடித்துவிட்டு மனம் தாங்காமல், கோபத்தோடு சீனியப்பன் வெளியேறிய பிறகு, "ஏன்டி இப்படி பண்ணித்தொலச்ச." மாரியம்மாள் தன் பங்கிற்கு மகளின் முதுகில் ரெண்டு மொத்த,

“நீங்கதானம்மா நல்ல பையன்னு சொன்னீங்க. எனக்குப் புடிச்சது. லவ் பண்றேனு சொன்னே. நம்ப ஆளுகளாயிருந்தா நம்பி பொண்ணக் கொடுக்கலாம்னு சொன்னீங்களே” மகளின் விபரமில்லாப் பேச்சில் மலைத்து நின்றார் மாரியம்மாள். ‘என்ன வயசாகுது. இவளே சொன்னாளாம்ல. இது தெரிஞ்சா இந்த மனுஷ கொன்டே போட்டுருவாரே.’ அடிவயிற்றில் புளியைக் கரைத்தது மாரியம்மாளுக்கு.

“அடி கூறுகெட்ட கூதரை… நம்ப சாதிப்பைய இல்லைல. ஒனக்கு என்னடி வயசாகுது. எப்ப உனக்கு பாக்கணும்னு பெத்தவகளுக்குத் தெரியாதா?” இன்னும் இரண்டு அடி சேர்த்து முதுகில் விழ, அழுதுகொண்டே படுத்துவிட்டாள் பதினைந்து வயதில் தனக்கு எதிர் பாலினத்தின் மீது வந்த ஈர்ப்பை காதல் என நம்பிக்கொண்ட கல்யாணி.

பிரசன்னா… ரெங்கநாதனின் பள்ளி மற்றும் கல்லூரித்தோழன். வீடு வரை வருமளவிற்கு நல்ல பழக்கம். நல்ல பழக்கம் என்பதையும் தாண்டி அடக்கமான, அமைதியான, அழகான பையன். அப்படித்தான் அடிக்கடி மாரியம்மாள் அவனைப் பற்றி பிள்ளைகளிடம் சிலாகிப்பார்.

“பிள்ளைனா பிரசன்னா மாதிரி இருக்கணும். நீயும் தான் இருக்கியே. இந்த வயசுலயே நல்ல பொறுப்பு. எப்படி படிக்கிறான் பாரு. நல்லா மரியாதை தெரிஞ்ச பய. வாத்தியார் மகன்ங்கறது சரியா இருக்கு. எப்படி சுத்தபத்தமா இருக்கான் பாருங்க.” சாதாரணமாக எல்லார் வீட்டிலும் தன் பிள்ளைகளோடு மற்ற பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசுவது போல் மாரியம்மாளும் அடிக்கடி பிரசன்னாவை புகழ்ந்து பேசிவைக்க, பதினைந்து வயது கல்யாணியின் ஓரப்பார்வை பிரசன்னாவை உரசிச்சென்றது.
அவனது நேர்த்தியான நடை, உடை பாவனைகளைத்தான் சுத்தபத்தம் என அவர் பாஷையில் சொன்னார்.

எப்பொழுதும் திருத்தமாக இருக்கும் பிரசன்னாவின் தோற்றம்.‌ அந்த வயதிற்கே உரிய நெடு நெடு உயரம். பளிச் தோற்றம். படித்த வாலிபனுக்குரிய வசீகரம். இது போதாதா ஒரு பெண்ணின் பார்வையை ஆணின் புறம் திருப்ப. போதாக்குறைக்கு அவரைப்பற்றிய மாரியம்மாவின் புகழ் மொழிகள்.

படிப்பில் மட்டுமல்ல, விடுமுறை நாட்களில் கூட சும்மா இருக்க மாட்டான். அப்பா அரசாங்க பள்ளியில் வாத்தியார். விடுமுறையில் மகனை இவர்களது பாத்திரக்கடையில்தான் வேலைக்குச் சேர்த்துவிடுவார்.‌ “சம்பளம் கூட வேண்டாம் சீனியப்பன். அனுபவம் தான் வேண்டும். கண்ட பயலுக கூட சுத்தி கெட்டுப்போயிருவான்” எனச் சொல்லி பள்ளி விடுமுறை நாட்களிலேயே மகனை விட்டுச்சென்றார். கல்லூரி சென்றும் அது தொடர்கிறது. ரெங்கநானும் விடுப்பில் கடையில்தான் இருப்பான். மதியம் சாப்பாடு எடுத்துச்செல்ல தினமும் இருவரும்தான் வீட்டிற்கு வருவர்.

கல்யாணியும் பத்தாவது முடித்து விடுப்பில் இருந்தாள். பதினைந்து வயது பருவச்சிட்டு.
“நம்ம வகையறாவுலயே இப்படிப் புள்ள யாருக்கும் பொறக்கல. அப்படியே எங்க அப்பத்தா மாதிரி. ஆத்தா மீனாட்சிதான் எம்புள்ள.” மாரியம்மாளின் கணவர் சீனியப்பன் தன் மகளை தலையில் தூக்கிவைத்து கொண்டாடக் காரணம் அவளது அழகு. கண்ணுல தொட்டு ஒத்திக்கலாம்னு சொல்வாங்களே அப்படியொரு முகக்கலை.

பிரசன்னாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, அம்மா அவனைப்பற்றி அடிக்கடி வீட்டில் பாராட்டி பேசியதால்… சினிமாவில் பார்க்கும், படிக்கும் கதைகளில் வரும் ஹீரோக்களைப் பார்த்து வருமே, அந்த மாதிரியான ஒருவகையான ஈர்ப்பு என்பது அப்போது புரியவில்லை.
பிரசன்னாவிற்கும் சிறுபிள்ளையில் நண்பனின் தங்கையாகத் தெரிந்தவள் பதின் வயதில் அப்படித் தெரியவில்லை. அவனும் கல்லூரி இறுதி வருடம். இவளும் பதினோராம் வகுப்பு செல்லத் தொடங்கினாள். மகளை அப்பொழுதே ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார் சீனியப்பன். அவளது ஆசைகளும், கற்பனைகளும் அதற்குத் தக்கன இருந்தது. அடிக்கடி வீடு வந்துசென்றவன் பார்வையும் அவள் மீது பட, கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்க, காதல் தீ பற்றிக் கொண்டது. பற்றிய தீ கூடிய சீக்கிரம் அங்காங்கே பரவ ஆரம்பித்தது. செல்லபாண்டி மூலமாக சீனியப்பன் காதிற்கு வர, ஒரு வயதிற்கும் மேல் மகளைத் தொட்டுக் கூடப் பேசாதவர் அன்று மகளை இடுப்பு வாரால் விளாசிவிட்டார்.
அவள் மேனி நிறத்திற்கு ஆங்காங்கே சிவந்து இரத்தம் கட்டி தடித்துவிட அழுதுகொண்டே மகளுக்கு நெல்லும் மஞ்சளும் அரைத்து பத்துப் போட்டுவிட்டார்.
“ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு. இதெல்லாம் இந்த வயசுல வர்ற வெறும் ஈர்ப்பு மட்டும் தான். நல்லது கெட்டது பிரிச்சுப் பாக்குற பக்குவம் இன்னும் உனக்கு வரல.” மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் அளவிற்கு அந்தக் கிராமத்து மனிதருக்கும் தெரியவில்லை.

மகள் காதலிக்கிறாள்.‌ அதுவும் அடுத்த சாதிப் பையனை காதலிக்கிறாள் எனத் தெரிந்தவுடன், குடும்ப மானம், மரியாதை, கௌரவம், சாதிசனம் முன் நிற்க, மகள் பின்னுக்குத் தள்ளப்பட்டாள்.

அடுத்து கல்யாண ஏற்பாடுதான் என சீனியப்பன் கோபத்தில் சொல்லிச் செல்ல, எங்கே அப்பா வேறு ஒருவருக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவாரோ என்ற பயத்தில், வயதுக் கோளாறால், விடலைப் பருவத்தில் விபரமில்லாமல் இருவரும் எடுத்த அவசர முடிவுதான் அவசரக் கல்யாணத்தில் கொண்டுவந்து நிறுத்தியது.

முன் யோசனையின்றி ஊரைவிட்டு ஓடியவர்களை, ஆளும் பேருமாக சல்லடை போட்டுத் தேடியதில், கையும் களவுமாக பஸ்ஸில் வைத்துப்பிடித்தனர். தேடிவந்தவர்கள் அங்கேயே பிரசன்னாவைப் புரட்டியெடுக்க, கல்யாணி வழக்கம் போல் வீட்டுச் சிறையில்.

செல்லப்பாண்டிதான் கணபதியை சிபாரிசு செய்தது. “நம்ப சாதிக்காரப் பய. சாதிக்காக உசுரையும் கொடுப்பான்.‌ வெளிய தெரியாம காதும் காதும் வச்சமாதிரி ஒரு வாரத்துல கல்யாணத்த முடிச்சுருவோம் சித்தப்பா. என்ன… முன்ன பின்ன எதிர்பாப்பாங்க. நம்ப புள்ளயும் தப்பு பண்ணிருச்சுல்ல. ஊரே தெரிஞ்சு போச்சு” என சாவி கொடுக்க, சாதிவிட்டு சாதி கல்யாணம்பண்ணி ஊரார் முன்னும், சொந்த பந்தங்கள் முன்னும் அசிங்கப்படுவதைவிட, சீர் அதிகமாகச் செய்தாவது குடும்ப மானத்தைக் காப்பாற்ற நினைத்தார் சீனியப்பன். வழக்கம் போல் ஆண்கள் மத்தியில் மாரியம்மாள் பேச்சு அம்பலம் ஏறவில்லை. ரெங்கநாதனுக்கும் சிறுவயது. அப்பாவை எதிர்த்துப் பேசும் துணிவில்லை.

வெளியே தெரியாமல் கோவிலில் வைத்து கல்யாணத்தை முடித்துவிட்டனர். கல்யாணம் வரைக்குமே கணபதி சொந்தத்தில் கூட விஷயம் வெளியே கசியவில்லை. தெரிந்தால் மருமகன்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என கனகம் கமுக்கமாக காரியத்தை முடித்துவிட்டார்.

சீனியப்பன் வீடும், அம்மையப்பன் வீடும் மூன்றாம் பங்காளி முறைதான். அவருக்கே விஷயம் தெரியாது.
பதினாறின் தொடக்கத்தில் வயதிற்கு மீறிய வளர்ச்சியில் கல்யாணி இருந்தாலும், ஓங்குதாங்கான இருபத்து ஐந்து வயது கணபதிக்குப் பக்கத்தில் பொம்மை மாதிரிதான் இருந்தாள். முறுக்கிய மீசையோடு, கருப்பு நிறத்தில், வாட்டசாட்டமாக இருந்தான் கணபதி. கையில் வீச்சறிவாள் ஒன்றுதான் பாக்கி. முதல் பார்வையிலேயே, அரசனைக்கண்டவளுக்குப் புருஷனைப் பிடிக்கவில்லை.
பிரசன்னாவை காணாப் பிணமாக்கி விடுவதாக கல்யாணியை மிரட்டிதான் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.

வேற்று சாதிக்காரனுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாமல், மணமேடையில் வைத்து பெண்ணைப் பார்க்க, கணபதி சொக்கித்தான் போனான். க்ளீன் போல்ட்.

விஷயம் தெரிந்து, அம்மையப்பன் மூத்த மருமகனை மதித்து எதுவும் முன்கூட்டியே தனக்கு சொல்லவில்லை என, கல்யாணத்திற்கு வரமறுத்து முறுக்கிக் கொள்ள, தாமரைதான் பிறந்த வீட்டு உறவு வேண்டுமே என, “இனிமேலாவது அவன் கட்சி, கூட்டம்னு கண்ட காவாலிப் பயலுகளோட சுத்தாம பொறுப்பா இருக்கட்டும்ங்க. உங்க பேச்சத்தான் கொஞ்சம் கேப்பான். நம்மலும் போகலைனா அவனுக்கு பொண்ணெடுத்த வீட்ல என்ன மரியாதை கிடைக்கும் ” என அழுது, நயந்து பேசி கணவனை மலையிறக்கி கல்யாணத்திற்கு அழைத்து வந்தார்.

சின்ன மாமனை விட, பெரிய மாமனை கணபதிக்குப் பிடிக்கும். அம்மையப்பன் சொல்லுக்கு மட்டும்தான் சற்றே செவி சாய்ப்பான் கணபதி. சின்ன மாமனை அறவே பிடிக்காது. வித்யாவோடு பாதி நாள் இங்குதான் இருப்பான். ஆடு, மாடு, தோட்டமென விவசாயக் குடும்பம் தங்கை வித்யாவதியை கட்டிக் கொடுத்த குடும்பம். இன்னும் அண்ணன், தம்பிகள் கூட்டுப் பண்ணையம்தான். உடம்பு வளையாது வித்யாவதிக்கும் அவள் புருஷன் சென்றாயனுக்கும். அவளுக்கும் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. மாமியார் வீட்டு சொகுசில் பாதிநாள் சென்றாயன் இங்குதான்.

கல்யாணத்திற்கு வந்த பிறகுதான் பெண்ணிற்கு சிறுவயது என்பதும், தனது பங்காளி வகையறாதான் என்பதும் அம்மையப்பனுக்குத் தெரியும். பெண் வேற்று சாதிக்காரனோடு ஓடிப்போனதால் தான் இந்த ரகசியக் கல்யாணம் என்பதும் ‌அரசல் புரசலாக அம்மையப்பன் காதிற்கும் எட்டியது. இதெற்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்தது செல்லப்பாண்டி தான் எனப் புரிந்தது. பஸ் வாங்கிக் கொடுப்பார்கள், ஒரே பொண்ணு, வேணும்ங்கறளவுக்கு சீர் செய்வார்கள் என கனகத்திற்கு ஆசைகாட்டி பேசி முடித்திருந்தார்.

கணபதி குடும்பம், பேரு பெத்த பேரு… நீளு தாகலேம் எனும்படி பேரு போன குடும்பம். காலி பெருங்காய டப்பா மாதிரி வாசனை மட்டும் குறையவில்லை. ஊருக்கே முதன்மைக் குடும்பம். சாமி கும்பிடு, ஊருக்குள் முக்கிய நிலவரம் எதுவாக இருந்தாலும் கணபதியின் அப்பாவைத்தான் தேடிவருவர். அந்தக் கெத்தை விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வார் கனகாம்பாள். இருந்ததை வைத்து மகள்களை பெரிய இடத்தில் மணமுடித்துக் கொடுத்துவிட்டு கணபதி தகப்பனார் இறையடி சேர்ந்துவிட்டார். அவருக்குப் பின் இப்பொழுது எல்லாம் கணபதிதான்.

“எல்லாம் நீங்க சொன்னா சரிதான்” என ஒருவனை ஊரே தூக்கி தலையில் வைத்தாலே,‌ அவன் ஒழிந்தான் என அர்த்தம்.‌ அதிகார போதை, அந்தஸ்த்து போதையை விட மிக மோசமான‌ போதை வெட்டி கௌரவ போதை. அந்த கௌரவ போதை அடுத்து எதையும் சிந்திக்கவிடாது. தன் ஊருக்காக, சாதிக்காக என்றுதான் மனம் ஓடும். என்னமோ தான் ஒருவனால் தான் ஊரை கொண்டு செலுத்த முடியும் என்ற எண்ணம். சாதிக்கு ஒருத்தர் இப்படி இருப்பாங்க.
வசதி முன்னபின்ன என்றாலும் கணபதி குடும்ப பாரம்பரியம் தான் சீனியப்பனை சம்மதிக்க வைத்தது.

ஒருவழியாக திருமணமும் முடிந்து, இதுதான் நம் விதி என பல்லைக் கடித்துதான் வாழ்க்கையைத் தொடங்கினாள் கல்யாணி. இருந்தாலும் செல்லமாக வளர்ந்தவளிடம் வாய்த்துடுக்க அதிகம். யார் எவரென பார்க்காமல் மனதில் பட்டதை பட்டென கூறிவிடுவாள்.

அந்த வீட்டில் அவளுக்குப் பிடித்தது முதல் நாளே அத்தையின் கையை ஓடிவந்து பாசமாகப் பிடித்துக் கொண்ட இளவேந்தனைத்தான். அவள் வயதிற்கு கணபதியோடு ஒட்ட முடியவில்லை.
வர்றியா… வா. போறியா… போ. விருப்புமில்லை. வெறுப்புமில்லை. தண்ணீரும் எண்ணெயும்‌போல ஒரே பாத்திரத்தில் ஊற்றி வைத்தாலும் ஒட்டாத்தன்மை தான்.‌ வந்தா சாப்பாடு எடுத்து வைப்பது, தண்ணீர் கொடுப்பது போன்ற சவரட்டனை எல்லாம் நடக்கும் என்பதைவிட... கனகம் செய்ய வைத்தார்.

ஆனால் கணபதி அப்படியில்லை. கொஞ்சும் கிளி போல் மனைவி வந்தபிறகு வெளியே‌ அதிகம் செல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தாமரை சொன்னது போல், எடுப்பார் கைப்பிள்ளையான கணபதியை அம்மாவும், தங்கையும் ஆட்டி வைப்பது போல், சற்று சூதுவாது தெரிந்த பெண்ணாக இருந்திருந்தால் தன் மீது பித்துப்பிடித்து பின்னாலே சுற்றும் ஆறடி ஆண்மகனை கண்டு கொண்டு, சுருட்டி தன் கைவளைக்குள் பெட்டிப்பாம்பாய் அடக்கும் சாமர்த்தியம் இல்லை கல்யாணிக்கு.
கழுத்தளவு மனைவி மீதிருக்கும் ஆசையை கண்ணில் காட்டத் தெரியவில்லை கணபதிக்கும்.
அவனுக்குத் தெரிந்த வகையில் மனைவி மீதிருக்கும் ஆசையைக் காட்ட,‌ எல்லா கணவன் மனைவி போல சராசரி வாழ்க்கை தொடங்கிவிட்டது போற போக்கில்.

வந்த முதல் மாதமே கரு தங்கிவிட, சிறு பிள்ளைக்கு மசக்கை படுத்தி எடுக்க, நாம் கதைகள், சினிமாவில் பார்க்கும் கற்பனை கணவன் போல மனைவியைத் தாங்கவில்லை கணபதி. தெரியவுமில்லை. அவன் பார்த்த ஆண்கள் யாரும் அப்படி இல்லை. ஊரு உலகத்துல கல்யாணமானா குழந்தை பிறப்பது சகஜம்தானே எனும் வெகு சராசரி மனிதன்.

லேசாக காய்ச்சல் என கேள்விப்பட்டாலே ஏதாவது அண்ணனிடம் வாங்க வருவது போல் வீடு வந்து அனுசரணையாக விசாரிக்கும் பிரசன்னா கண்முன் வந்து போனான்.

பஸ் ஓட்டும்போது மட்டும்தான் கணபதி பேன்ட், சட்டை அணிவது.‌ அதுவும் காக்கியில். மற்ற நேரங்களில் தொடை தெரிய மடித்துக் கட்டிய வேட்டி,‌ முழங்கைக்கு மேல் மடித்து ஏற்றிவிடப்பட்ட சட்டை எனத் திரியும் கணபதியை அடிக்கடி பிரசன்னாவின் தோற்றத்தோடு ஒப்பிட்டது சிறுபெண் மனது.
கணபதி வளத்தி அப்படி.‌ நெப்பொலியன் மாதிரி தொடை தெரியத்தான் வேட்டி கட்டமுடியும். தனியாக ஆர்டர் செய்து நெசவு செய்தால்தான் உண்டு.
கல்யாணிக்கு விதியே என ஒட்டவும் முடியவில்லை. வெட்டவும் முடியவில்லை. கடனே என வாழ்ந்தாள். இதில் அடிக்கடி வந்து டேரா போடும் சின்ன நாத்தனார் குடும்பம் வேறு. “கட்சிக் கொடி மாதிரிடி உங்க அண்ணனும், அண்ண பொண்டாட்டியும்” என இவள் காதுபடவே சென்றாயனின் நக்கல் வேறு.

கல்யாணத்தன்றே, “அமாவாசையும், பௌர்ணமியும் மாதிரி இருக்கு.” மாரியம்மாள் மகளின் அருகில் கணபதியைப் பார்த்துவிட்டு மனம் பொறுக்க மாட்டாமல் அங்கலாய்க்க, கல்யாணி மனதில் கணபதி தடம் பதியவே இல்லை.

“நானெல்லாம் பதிமூனு வயசுல சமஞ்சு, பதினாலு வயசுல தாலி கட்டி வந்தேன். இப்ப மாதிரி கேஸ் ஸ்டவ்வா, மிக்சியா, கிரைண்டரா. எல்லாம் அம்மியும், ஆட்டு ஒரலும்தான். இப்ப இருக்கறவளுகளுக்கு வெள்ளன எந்திரிச்சு வீட்டு வேல செய்ய மேலருந்து கீழ வரைக்கும் நோவுது.” மசக்கையில் சற்று நேரம் சேர்த்து தூங்கி எழுந்துவந்தால் கல்யாணி காலையிலேயே கேட்கும் கனகத்தின் பள்ளியெழுச்சி இதுதான்.

இதே வாய் தான், “பதினாறு வயசுலயே புருஷன் தேடத் தெரியுது. கட்டுனவன் வந்தா சோறு போடணும்னு தெரியாதா?” எனவும் ஊசியாய்க் குத்தும்.
வீட்டில் மகளை ஒரு வேலை செய்ய விட்டதில்லை சீனியப்பன். உனக்கு என்ன வேலை என்றுதான் மனைவியிடம் கேட்பார்.

‘நானாவது பதினாறு வயசு. நீயெல்லாம் பதினாலு வயசுலயே. ஒரே வித்தியாசம் உனக்கு கல்யாணம்னு பெரியவங்க முடிச்சு வச்சாங்க.’ புற்றீசல் போல மனதிற்குள் முண்டும் வார்த்தைகளை கனகம் முகம் பார்த்தே முழுங்கி விடுவாள்.

“விடும்மா… சின்னபுள்ள தான. போகப்போக பழகிக்குவா.” கணபதி புது பொண்டாட்டிக்கு பரிந்து வர,

“என்னடா இது… புது வெளக்குமாறு பவுசு காட்டுதோ? இப்பல்லாம் அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் எடங் கொடுத்தா தலையில மொளகா அறச்சுருவாளுக.” மகனை அதட்ட, அதன் பிறகு அம்மாவிடம் மனைவிக்காக பரிந்து பேசியதில்லை.‌ எத்தனை வீடுகளில் பார்த்திருக்கிறார் மாமியார் மருமகள் பிரச்சினையை. இதுவும் அதுபோல் பத்தோடு பதினொன்னு கணபதிக்கு. ஆண்கள் தலையிட்டால் இன்னும் பெரிதாகும் என.

கல்யாணமான புதிதில்,‌ தனக்கு பழக்கமில்லாத சூழலில் வாழ வரும் ஒரு பெண்ணிற்கு எல்லா வகையிலும் நெருக்கமான ஒரே உறவு கணவன் மட்டும் தான். ஆரம்பத்தில் ஒரு மனைவியின் மனதில் எப்படி பதிகிறோமோ அதுதான் கடைசிவரை கொண்டு செலுத்தும் எனத் தெரியவில்லை. எத்தனை வருடமானாலும், “அன்னைக்கே உங்கம்மா பேசும்போது பாத்துட்டு தான இருந்த?” என கன்னி வெடி மாதிரி கால் வைக்கும் பொழுதெல்லாம் வெடிக்கும்.

குறைந்த பட்சம் ஐந்தாறு வருடங்கள் கழித்து நம்ம மனைவி, நம்ம கணவன் என உரிமை வந்த பிறகு, அதுவும் இருவருக்கும் இணைப்பு பாலமாக குழந்தை வந்த பிறகு, இது தான் நம் இடம் என மனதில் ஸ்திரமாக வேரூன்றிய பிறகு, எது பேசினாலும் என்னைக்கும் கண்ட குருநாதன் தானே என போய்விடும். இங்கு தான் ஆரம்பமே அதகளப்படுதே.

சிறுபிள்ளை என மாரியம்மாளும் ஏழாம் மாதமே மகளை வளைகாப்பு போட்டு அழைத்துக் கொள்ள, தாய் வீட்டு சொகுசை எண்ணி சந்தோஷமாகக் கிளம்பிவிட்டாள் கல்யாணி.‌

அவளது உடல் பலவீனமோ, சிறுவயதோ ஏதோ ஒன்று எட்டாம் மாதமே, பனிக்குடம் உடைந்துவிட்டது.
மருத்துவமனை அழைத்துச் செல்ல, சுகப் பிரசவத்தில் எடை குறைவில் குழந்தையும் பிறந்துவிட்டது. பிறந்த பிறகு கல்யாணிக்கு இரத்தப் போக்கு அதிகமாக மறு பிழைப்பென பிழைத்து வந்தாள்.

இரண்டு பேருந்து மட்டும்தான் என்பதால் கணபதியே ஒரு பேருந்திற்கு ஓட்டுனராகச் செல்வார்.‌ அன்றும் ஓட்டுனராக மதுரை ட்ரிப்பிற்கு சென்றிருந்தார். நிலக்கோட்டையிலேயே பஸ்ஸை மரித்து தகவல் கொடுக்கப்பட்டது. மகளைப் பார்க்க மனம் பரபரத்தது. பாதியில் இறங்கவும் முடியாது.

குழந்தை பிறந்த தகவலறிந்து பார்க்க வந்த கனகம் மற்றும் வித்யாவின் முகம் அவ்வளவு சுரத்தையாக இல்லை. சீனிவாசனுக்கு பேத்தி பிறந்த சந்தோஷம். இனிப்போடு சம்மந்தியை வரவேற்க, "பிள்ளையப் பாத்துட்டு எடுத்துக்கறோம்.” சுதாரிப்பின்றி தொண்டையைத் தாண்டவில்லை குரல்.

“குழந்தைய இன்குபேட்டர்ல வச்சுருக்காங்க.‌ இப்ப பாக்கமுடியாதும்மா.” சந்தோஷமாகவே சொன்னார்.

“எம்மகன் சாடை தெரியுதான்னு பாக்கணும். ஓடிப்போனானு தானே சொன்னீங்க. வயித்துலயும் வாங்கிட்டு வந்திருப்பா போலயே" சலிப்பாக விஷம் தடவி வந்தன வார்த்தைகள். எட்டாம் மாதமே குழந்தை பிறந்துவிட கல்யாணத்திற்கு முன்னமே தவறியிருப்பாளோ எனும் சந்தேகம்.

அதிர்ச்சியில் சீனியப்பன் உறைந்து நின்றுவிட்டார். இந்த மாதிரி பேச்சுக்கள் புதிது. மாரியம்மாள் திகைத்து நின்றது ஒரு கணம் தான். அடுத்த கணமே கணவனைப் பிடித்துக் கொண்டார். இவர்கள் துணைக்கு வந்த செல்வராணியும் அங்குதான் இருந்தார்.

“எல்லாம் உங்க அவசரப் புத்தியாலதான். நம்ம முன்னாடியே இப்படி பேசுறாங்களே.‌ எம்மகள‌ என்ன பாடு படுத்தி வச்சாங்களோ தெரியலியே. எம்மக மறு பொழப்பு பொழச்சு படுத்திருக்கா. அவ கண்ணு முழிக்கனுமேனு நான் வேண்டாத சாமியில்ல.‌ வைக்காத வேண்டுதலில்ல. பெத்த வயிறு பத்தி எரியுது. எம்மக என்ன சீந்துவார் அத்துப்போயா வருஷக்கணக்குல வீட்ல இருந்தா. இல்ல கட்டிக் கொடுத்து வருஷமாகியும் ஒவ்வொருத்திய மாதிரி வயிறு தொறக்காம போனாளா? கண்டவ எல்லாம் நாக்கு மேல பல்லுப் போட்டு எம்புள்ளய பேசுற மாதிரி ஆகிப்போச்சு நீங்க பண்ணுன காரியத்தால.” என ஆத்திரத்தில் அடை மழையென கொட்டித் தீர்த்துவிட்டார் மாரியம்மாள்.‌

செவ்வாய் தோஷமென ரொம்ப நாட்களாக திருமணமாகாமல், திருமணமாகியும் இன்னும் குழந்தை இல்லாமல் இருக்கும் வித்யாவைத்தான் மாரியம்மாள் சாடை பேசினார்.‌

தன்‌ மகளைப் பேச கனகத்திற்கும் ரோஷம் வர,
“முட்டுத் துணி ஒதுக்கிப் பழகுங்குள்ள முட்டுச் சந்துல ஒதுங்குனவ உம்மக. அவளோட எம்மகள இணை சேக்குறியா?” என‌ பதிலுக்கு பதில் பெண்கள் பேச, வார்த்தைகள் தடிக்க, கோபமாகப் பேத்தியைப் பார்க்காமலே கிளம்பிவிட்டனர்.

பஸ்ஸை விட்டு இறங்கி காக்கி உடையிலேயே ஆர்வமாக வந்தார் மகளைப் பார்க்க கணபதி.‌
வந்தவுடன் அவர் அம்மா, தங்கை பேசியதைச் சொல்லி, மாரியம்மாள் குழந்தையைக் காட்ட மறுக்க, முதன் முதலாக தகப்பன் எனும் உரிமை தலை தூக்கியது.‌ மனைவி மீது வராத உரிமை மகள் மீது வந்தது.

“எம்புள்ளயப் பாக்க நீங்க என்ன வேணாம்னு சொல்றது?” என ஆத்திரமாகக் கேட்க,

“இத உங்க அம்மா, தங்கச்சிகிட்ட சொல்லி அவங்களையும் கூட்டிவாங்க. இல்லைனா‌ எம்பிள்ளைக்கு கட்டை காடுபோய்ச் சேர்ற வரைக்கும் இந்தப் பேச்சு ஓயாது.” ஒரேடியாக குழந்தையைக் காட்ட மறுத்துவிட்டார் சீனியப்பன்.‌

வீட்டிற்கு கோபமாக வந்த கணபதி, “நீங்க அவங்கள அசிங்கப் படுத்தறதா நெனச்சு, தேடிப்போயி என்னைய அசிங்கப்படுத்திட்டு வந்துருக்கீங்க.” முதன் முறையாக தன் மகளுக்காக அம்மாவை எதிர்த்துப் பேசினார் கணபதி.
*****

ஒரே வயிற்றில் பிறந்த தாயாதிகளான அண்ணன் தம்பிகள் உடன் பங்காளிகள்.
பெரியப்பா, சித்தப்பா மகன்கள் இரண்டாம் பங்காளி.
பெரிய தாத்தா, சின்ன தாத்தா பேரன்கள் மூன்றாம் பங்காளிகள்.
இதற்கடுத்து பிரியும் கிளைகள் பொதுவாக பங்காளி எனும் வட்டத்திற்குள் வருவர். இப்படி கிளை பிரிவதால் தான் இவர்கள் எல்லாருக்கும் ஒரே குலதெய்வம்தான்.

பெரியம்மா மகன்கள், சித்தி மகன்கள் அண்ணன் தம்பி என உறவுமுறைக்குள் வந்தாலும் பங்காளி வகையறாவில் வராது. இப்ப எதுக்கு இந்த விளக்கம்னா இனிமேல் உடன் பங்காளிகளே அடுத்த தலைமுறையினருக்கு அரிதான ஒன்றாகிப்போனதால், இரண்டாம் பங்காளி, மூன்றாம் பங்காளி என்பதெல்லாம் எங்கருந்து தெரியப் போகுது.

*****
முட்டுத் துணி - தீட்டுத் துணி. மாதவிலக்கின் போது பெண்கள் பயன்படுத்துவது.

(கல்யாணி ஃப்ளாஷ் பேக்க ரத்தினச் சுருக்கமா முடிச்சர்லாம்னு பாத்தா, ரத்தினக் கம்பளம்‌ மாதிரி விரியுது. நீ ஃப்ளாஷ் பேக் போனாலே அம்புட்டு சீக்கிரம் கதைக்கு வர மாட்டியேங்கற ரீடர்ஸ் மைன்ட் வாய்ஸும் கேக்குது🙈🙈🙈😌😌)

இதுவரை கதைக்கு தாங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி நண்பர்களே!!!!! இன்னும் ஊர் திரும்பல. வந்துட்டு எல்லாருக்கும் ரிப்ளை போடுறேன் 🙏🏼🙏🏼🙏🏼🍫🍫




 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,598
Reaction score
7,777
Location
Coimbatore
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு
சீனியப்பன் செஞ்ச காரியம்
இப்படி வந்து நிக்குது
 




amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
535
Reaction score
750
Location
Kamuthi
யாரை சொல்லி நோகனு தெரியல...ஆனா கல்யாணி மட்டும் கஷ்டப்படுறா
 




Sindhu siva

மண்டலாதிபதி
Joined
May 10, 2023
Messages
133
Reaction score
105
Location
Trichy
என்ன சொல்ல பேசி பேசியே மொத்தமா கணபதி கல்யாணி வாழ்க்கையை முடிச்சுவிட்டுட்டாங்க.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top