arrow_back
50:50 அத்தியாயம் 25
50:50 chevron_right பகுதி 25 / 25

அத்தியாயம் 25

visibility 565
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  25

 யதுநந்தன், பதட்டத்தோடு காத்திருக்க, அவனுக்கு ஆதரவாக அவன் அருகில் நின்று கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

 இத்தனை வருடக் காத்திருப்பை விட இன்றைய நொடியின் காத்திருப்பின் வலியை அதிகமாக உணர்ந்தான் யதுநந்தன். ‘ராதா அருகில் இல்லை… அது தான் காரணம்.’ என்று எண்ணினான் யதுநந்தன்.

 அவர்கள் காத்திருப்புக்கு, ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பரிசாக பெற்றனர்.

 குழந்தையைக் கையில் வாங்குவதற்கு யதுநந்தன் அச்சம் கொள்ள, ஒரு குழந்தையை மீனாட்சியும், மற்றோரு குழந்தையை சித்ராவும் பெற்றுக் கொண்டனர்.

 யதுநந்தனின் கண்கள் ராதாவை தேடியது.

 ராதா, சோர்வாகப் படுத்திருந்தாள். அவள் மடியில் மீனாட்சி குழந்தைகளை வைக்க, ராதா குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ஏய் ராதா… இப்ப எதுக்கு அழற? பச்சை உடம்பு அழக் கூடாது.” என்று சித்ரா கண்டிக்க, அனைவரும் அவளை ஆமோதித்தனர்.

 ராதாவின் கண்ணில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

“ராதா.” என்று யதுநந்தன் கண்டிப்பாக அழைத்தான். ராதா, தன் மூச்சை உள்ளித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டாள். அது ஆனந்தக் கண்ணீராக இருந்தாலும் சரி… நிம்மதியின் வெளிப்பாடாக இருந்தாலும் சரி… ராதாவிற்கு அது நல்லதில்லை என்ற எண்ணத்தோடு கண்டித்தான் யதுநந்தன்.

 அமைதியாக நின்று, அவளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுக்கு போதுமானதாக இருந்தது. ‘தன்னிடம் பேசினால் ராதா உணர்ச்சிவசப்படுவாள்…’ என்றெண்ணி ஒதுங்கி நின்றான் யதுநந்தன்.

“குழந்தை அத்தை மாதிரி இருக்கா? மாமா மாதிரி இருக்கா?” என்று குழந்தைகளை பார்த்தபடி சஞ்சனா கேட்டாள்.

“எங்களுக்கு அவ்வளவு அறிவில்லை சஞ்சனா… பெரிய மனுஷி நீங்களே சொல்லுங்க.” என்று யதுநந்தன் சஞ்சனாவுக்கு பதிலளித்தான்.

“இது நியாயமான பேச்சு.” என்று சஞ்சனா பெருமையாக கூறி குழந்தைகளை கூர்மையாகப் பார்த்தாள்.

 பல நிமிட ஆராய்ச்சிக்குப் பின், அனைவரின் முகத்தையும் நோட்டமிட்டாள்.

 இரு பக்கமும் தலை அசைத்து, “யாரை மாதிரியும் இல்லை. குழந்தைகளின் அழகு, அறிவு, துருதுருப்பு… இப்படி எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது… இரண்டு குழந்தைகளும் என்னை மாதிரி தான் இருக்காங்க.” என்று தீவிரமாக கூறினாள் சஞ்சனா.

 அங்கு ஒரு பலத்த சிரிப்பலை எழுந்தது.

“அத்தை… என்ன பெயர் யோசிச்சிருக்கீங்க?” என்று சஞ்சனா கேட்க, “உங்க மாமா கிட்ட தான் கேட்கணும்.” என்று ராதா கூற, சஞ்சனா யதுநந்தனை பார்த்தாள்.

 சஞ்சனா யதுநந்தனை கேள்வியாக பார்க்க, யதுநந்தன் தன் புருவம் உயர்த்தி ராதாவை கேள்வியாகப் பார்த்தான்.

“இத்தனை வருடத்தில் உங்க வீட்டில் மதுரையா? சிதம்பரமா? என்ன ஆட்சியென்று தெரியலியே…” என்று சித்ரா யோசனையாகக் கேட்டாள்.

“திருச்செங்கோடு.” என்று யதுநந்தனை பெருமையோடு பார்த்தாள் ராதா.

“அது தான் குடும்பம் சிறப்பாக இருக்கு.” என்று கூறி லோகநாதன் தன் மகளையும், மருமகனையும் கனிவோடு பார்த்தார்.

 சிறிது நேரம் கழித்து, அவர்களுக்குத் தனிமை கொடுத்து ராதாவின் குடும்பம் கிளம்பினர்.

 ராதா யதுநந்தனை மௌனமாகப் பார்த்தாள். யதுநந்தன், கலங்கிய தன் கண்களை மூடிக் கொண்டான்.

 ஒரு நொடியில் தன்னை நிலை படுத்திக்க கொண்டு, ராதாவின் அருகே சென்று, “குழந்தைங்க ரொம்ப குட்டியா… அழகா இருக்காங்க…” என்று உணர்ச்சி பெருக்கோடு கூறினான்.

 ராதா வார்த்தைகள் வெளி வராமல் தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள். “உன்னை மாதிரி மென்மையா இருக்காங்க.” என்று கரகரப்பான குரலில் கூறினான் யதுநந்தன்.

“உங்களை விடவா?” என்று ராதாவின் உதடுகள் கேட்க தவறிய கேள்வியை அவள் கண்கள் கேட்டது.

ராதாவின் மனதைப் புரிந்து கொண்டு, மெலிதாக சிரித்தான் யதுநந்தன்.

“நான் ரொம்ப பயந்துட்டேன் ராதும்மா.” என்று கலங்கிய குரலில் கூறினான் யதுநந்தன்.

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

 

இடது விழியில் தூசி விழுந்தால்

வலது விழியும் கலங்கி விடுமே

இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்

நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

 

ராதா மெலிதான குரலில் உணர்ந்து பாட, “ராதா… நீ என்னை மாதிரி ஆகிட்ட…” என்று அவள் பாடிய பாடலின் தாக்கத்தோடு கூறினான் யதுநந்தன்.

“அவ்வளவு சீக்கிரம் உங்களை நிம்மதியா விட்டுவிடுவேனா?” என்று ராதா கேலியாக கேட்டு அவனை சகஜ நிலைக்கு அழைத்து வந்தாள் ராதா.

“அது தானே.” என்று யதுநந்தன் குறும்பு கொப்பளிக்கக் கூறினான்.

“நந்தன்…” என்று மென்மையாக அழைத்தாள் ராதா.

 யதுநந்தன், அவளை ஆனந்தமான ஆச்சரியத்தோடு பார்க்க, “குழந்தையைப் பரிசாக கொடுத்து இப்படி கூப்பிடணும்னு நினைத்தேன். ஆனால் உங்களை இத்தனை வருஷம் காக்க வைப்பேன்னு எனக்கு தெரியாம போச்சு.” என்று ராதா உணர்ச்சி பொங்க கூறினாள்.

“காத்திருந்து கிடைக்கும் குழந்தை வரமும் ஒரு சுகம் தான் ராதா. ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பை மட்டுமே பிடிமானமாக வைத்து வாழும் தம்பதியர் நாம தானே…” என்று யதுநந்தன் கூற, அப்பொழுது உள்ளே நுழைந்த ஸ்ரீதர், “நீங்க ரெண்டு பெரும் ஒருவருக்காக ஒருவர் பிறந்தவர்கள்…” என்று அவர்களைப் பாராட்டும் விதமாகக் கூறினான்.

 இருவரும் மறுப்பாகத் தலை அசைத்து, “நாங்க இரண்டு பெரும் ஒருவருக்காக ஒருவர் பிறந்தது போல் வாழ்கிறோம்….” என்று கூறி கண் சிமிட்டி குறும்பாகச் சிரித்தனர்.

 

பத்து வருடங்கள் கழித்து…

 மீன் தொட்டியில் மீன்கள் அழகாக நீந்திக் கொண்டிருந்தது. கூஜாக்கள் அழகாகக் காட்சி அளித்தது.

 நந்தன் ராதாவின் மகனும், மகளும் தீவிர ஆலோசனையில் இருந்தனர். இவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தனர் ராதாவும்… யதுநந்தனும்…

“என்னடா பண்றது. என் நண்பர்கள்  சிலர் வீட்டில்… அம்மா சொன்னால் நடக்குது… இல்லை அப்பா சொன்னால் நடக்குது… யாரோ ஒருவரைச் சரி செய்தால் போதும்.” என்று அவர்களின் மகள் சோகமாக கூற, அவர்களின் மகன் ஆமோதிப்பது போல் தலை அசைத்தான்.

“இங்கு அம்மா கிட்ட கேட்டால்… அம்மா அப்பா முகத்தை பார்ப்பாங்க. அப்பா கிட்ட கேட்டால், அப்பா அம்மா முகத்தை பார்ப்பாங்க. அம்மா கிட்ட சொன்னால், அப்பாக்கு தெரிந்துவிடும்… அப்பா கிட்ட சொன்னால் அம்மாவுக்குத் தெரிந்துவிடும்.” என்று சோகமாக கூறினான் அவர்கள் மகன்.

“ஒருவேளை… அவங்க அப்படி இருப்பதால் தான் நாம எல்லா விஷயத்திலும் பெஸ்ட்  ஆக இருக்குமோ?” என்று கேள்வியாக நிறுத்தினாள் அவர்களின் மகள்.

“அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?” என்று கம்பீரமாக கேட்டுக்கொண்டே யதுநந்தன் அங்கு வர, இருவரும் அகப்பட்டுக் கொண்டவர்களாக திரு திருவென்று முழித்தனர்.

“நான் சொல்வது சரி தானே ராதும்மா?” என்று யதுநந்தன் கேட்க அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் ராதா.

 ராதாவின் தலை அசைப்பை எதிர்பார்த்து இரு குழந்தைகளும் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்துவிட்டு ஓடினர்.

 குழந்தைகளின் குறும்பை இருவரும் ரசித்துச் சிரித்தனர்.

 

 50:50 – வாழ்வில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் சரியான மதிப்பு கொடுத்து சரி பாதியாக வாழும் பொழுது… அன்பு மேலோங்கிப் புரிதல் மலர்ந்து நம் வாழ்வு மட்டுமின்றி நம் சந்ததியினரின் வாழும் சிறப்பாக அமையும்.

 50:50 வாழ்வின் ஓட்டம் வெற்றியாக அமையும்

 என்ற எண்ணத்தோடு

 அகிலா கண்ணன்

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்