அத்தியாயம் 24
அத்தியாயம் 24
அந்த அறையில் மருத்துவர் எதிரே யதுநந்தன் அமர்ந்திருந்தான். மருத்துவர் யதுநந்தனுக்கு நல்ல அறிமுகமானவர் என்று அவர் பேச்சில் தெரிகிறது.
“இவ்வளவு நாள் கவனிக்காமா இருந்திருக்கீங்க?” என்று தன் பேச்சைத் தொடங்கினார் மருத்துவர். யதுநந்தன் அவரைக் குற்ற உணர்ச்சியோடு தர்மசங்கடமாக பார்த்தான். மருத்துவர் அந்தப் பேச்சை விடுத்து, ராதாவின் உடல் நிலை பற்றி பேச ஆரம்பித்தார்.
“அவங்க இப்ப மூணு மாசம்… அதுவம் இரட்டை குழந்தைகள்……” என்று கூற, யதுநந்தனின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தது.
அவன் மனநிலையைப் புரிந்து, சற்று இடைவெளி விட்டு, மேலும் தொடர்ந்தார் மருத்துவர்.
“நான் ஏற்கனவே சொல்லிருக்கேன். ராதாவுக்கு கர்ப்பப்பை பலவீனமா இருக்கு… அதனால் அவங்களைப் பத்திரமா பார்க்கணும்…” அதன் பின் அவர் பல மருத்துவ நிலவரத்தை விவரித்துக் கொண்டிருந்தார்.
அவர் பேசுவதை அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தான். யதுநந்தனுக்கு அது புரிவது போலவும், புரியாதது போலவும் இருந்தது.
அவர் பேசி முடித்து சில நொடிகள் சிந்தனைக்கு பின், “ராதா உயிர்க்கு ரிஸ்க் அப்படினா, டாக்டர் எங்களுக்கு இந்தக் குழந்தை வேண்டாம்.” என்று கூறினான் யதுநந்தன்.
“உயிருக்கு ஆபத்துன்னு நான் சொல்லலை. எதுக்கும் உங்க கிட்ட நிலவரத்தை சொல்லணும் அப்படிகிறது எங்க ரூல்ஸ்.” என்று நிதானமாகக் கூறினார் மருத்துவர்.
யதுநந்தன், அவரைக் குழப்பத்தோடு பார்க்க, “இப்ப அபார்ஷன் பண்ணினா, ராதாவின் கர்ப்பப்பை இன்னும் பலவீனப்படும்… நீங்க அதுக்கு அப்புறம் குழந்தை எதிர் பார்க்க முடியாது.” என்று மருத்துவர் பொறுமையாக கூற, “எனக்கு ராதா தான் முக்கியம்.” என்று யதுநந்தன் அழுத்தமாகக் கூறினான்.
“நீங்க இவ்வளவு பயப்பட வேண்டிய தேவை இல்லை. அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க. வலி வருவதற்கு முன் ராதாவை அட்மிட் பண்ணனும். நாள் நெருங்கும் பொழுது, சரியான நேரத்தில் செக் அப் க்கு வாங்க. அது மட்டுமில்லை, நீங்க நினைக்கிற விஷயத்திற்கு ராதா ஒத்துக்க மாட்டாங்க.” என்று மருத்துவர் நிலவரத்தைப் புரிய வைக்க முயற்சித்தார்.
‘ராதா நான் சொன்னால் கேட்பாள்.’ என்று தனக்குள் கூறிக் கொண்டு, அவரிடம் சம்மதமாக தலை அசைத்து விடை பெற்றான்.
யதுநந்தன் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.
ராதாவின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத மகிழ்ச்சி. மகிழ்ச்சியை தாண்டிய நிம்மதி. ‘யதுநந்தனின் அமைதிக்கு என்ன காரணமாக இருக்கும்?’ என்று சிந்தித்த படி, காரில் சாய்வாகக் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
இருவரும் அமைதியாக வீட்டை நோக்கிப் பயணித்தனர்.
ராதாவின் முகம் பார்த்து அவள் சந்தோஷத்தை கலைக்க விரும்பாமல் யதுநந்தன் மௌனம் காக்க, “என்னங்க… என்ன யோசனையா இருக்கீங்க?” என்று அவன் தலை கோதிக் கேட்டாள் ராதா.
ராதாவின் மடியில் முகம் புதைத்து யதுநந்தன் கண்ணீர் வடிக்க, ராதா சற்று பதறியவளாக, அவன் முகத்தைக் கையில் ஏந்தி, ‘என்ன?’ என்று வார்த்தை வெளி வராமல் கண்களால் கேட்டாள்.
மருத்துவரிடம் கூறியதை ராதாவிடம் கூற தைரியமில்லால், மறுப்பாகத் தலை அசைத்தான்.
முதல் நாள் பள்ளியில் சந்தித்த யதுநந்தன்… அவன் அலுவுலகத்தில் ராதா சந்தித்த யதுநந்தன் நினைவு வர, ராதா கேலியாக சிரித்தாள்.
“ஏன் ராதா சிரிக்கிற?” என்று யதுநந்தன் ராதாவிடம் கேட்க, “உங்கள் அன்பு… என்னைப் பலவீனமாக்கியது மட்டுமில்லை. என் அன்பு உங்களை பலவீனமாக்கிருச்சு போல.” என்று குறும்போடு கூறினாள் ராதா.
மறுப்பாகத் தலை அசைத்த யதுநந்தன், “என் அன்பு உன்னைக் குழந்தையாக மாற்றிடுச்சு. உன் அன்பு என்னை மனிதனாக மாற்றிடுச்சு ராதா.” என்று அவன் கூற தன் கண்களை சுருக்கி அவனைக் கூர்மையாக பார்த்தாள் ராதா.
சற்று தைரியத்தை வரவழைத்து யதுநந்தன், “ராதா… டாக்டர் ஏதேதோ சொல்றாங்க… இந்தக் குழந்தை… இந்தக் குழந்தை…” என்று அவன் ஆரம்பிக்க, அவன் உதடுகளை தன் கைகளால் மூடினாள் ராதா.
மறுப்பாகத் தலை அசைத்து, “எதிர்மறையா எதுவும் சொல்லாதீங்க.” என்று கண்டிப்பாக கூற, எதுவும் கூறி அவளைக் குழப்ப மனமில்லாமல் மௌனம் காத்தான் யதுநந்தன்.
“எனக்கு எதுவும் ஆகாது. அது தான் விதி என்றால்…” என்று ராதா ஆரம்பிக்க, அவளைக் கோபமாக முறைத்தான் யதுநந்தன்.
அந்தப் பேச்சை விடுத்து, “எனக்கு இந்த குழந்தைங்க கண்டிப்பா வேணும்.” என்று ராதா உறுதியாக கூறினாள்.
“எனக்கு குழந்தைகளை விட நீ முக்கியம்.” என்று யதுநந்தன் அழுத்தமாகக் கூற, “எனக்கு உங்களை அப்பான்னு கூப்பிட குழந்தைகள் வேணும்.” அவன் முகம் பார்த்து சிரித்த முகமாகக் கூறினாள்.
ராதாவின் பிடிவாதம் அறிந்து, யதுநந்தன் அவளைப் பரிதாபமாக பார்க்க, அவன் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு, “நீங்க இருக்கும் வரை ராதாவின் உயிர்த் துடிப்பு இருந்துகிட்டே இருக்கும். அதை யார் நினைத்தாலும், நிறுத்த முடியாது.” என்று ராதா அவனுக்குத் தைரியம் ஊட்டும் விதமாகக் கூறினாள்.
மேலும் ராதாவை குழப்ப விரும்பாமல், அவள் தைரியத்தை கெடுக்க விரும்பாமல், “அது உண்மை ராதா…” என்று அவள் போக்கில் பேசினான் யதுநந்தன்.
ராதாவின் வீட்டில் விஷயம் தெரிவிக்கப்பட, சென்ற முறை இருந்த ஆர்ப்பாட்டம் இந்த முறை இல்லை. மீனாட்சி, லோகநாதன் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
“ஐந்தாறு மாசம் போகட்டும் மீனாட்சி… அப்புறம் எல்லார் கிட்டயும் சொல்லுவோம்.” என்று லோகநாதன் அவர் கண்ணாடியை துடைத்தபடியே கூற, மீனாட்சி சம்மதமாக தலை அசைத்தார்.
ராதாவின் வீட்டிலிருந்து, அனைவரும் வந்து ராதவை பார்த்துவிட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்ற பின், “ராதா உங்க வீட்டுக்கு போறியா ராதா. அங்க அத்தை, சித்ரா எல்லாரும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க.” என்று யதுநந்தன் பயத்தோடு கேட்க, ராதா அவனைக் கோபமாக முறைத்தாள்.
ராதாவின் முறைப்பை ரசித்துக் கொண்டு, “சரி… சரி… உங்க அம்மா வீட்டுக்கு போறியா?” என்று புன்னகையோடு கேட்டான் யதுநந்தன்.
யதுநந்தனின் புன்னகையை உள்வாங்கிக் கொண்டு, “என்னை மூட்டை கட்டுறதிலையே குறியா இருக்கீங்க. நான் இல்லாமல் ஒரு மாசம் ஜாலியா இருந்தீங்களோ?” என்று கோபப்பார்வையோடு நக்கல் தொனித்த குரலில் ராதா கேட்டாள்.
“உன் இஷ்டம் ராதா…” என்று யதுநந்தன் கூற, “நான் இங்க தான் இருப்பேன்… ஒன்பதாவது மாசம் வரை… அப்புறம் தான் எங்க வீட்டுக்குப் போவேன்.” என்று பெருமையாக கூறினாள் ராதா.
‘பெண்கள் எங்க வீடுன்னு சொல்லலாம். ஆனால், நாம உங்க வீடுன்னு சொன்னால் சண்டைக்கு வந்துருவாங்க.” என்று யதுநந்தன் பொதுவாக யோசித்தான்.
யதுநந்தனின் எண்ணப் போக்கு அவன் கண்களில் தெரிய ராதா அவனிடம் சண்டைக்கு தயாரானாள்.
அதை அறிந்த யதுநந்தன், “ராதும்மா… இந்த நேரத்தில்… வன்முறை கூடாது… அப்புறம் குழந்தைகளும் வன்முறை கத்துப்பாங்க.” என்று அவளைச் சமாதானப்படுத்த ராதா உணர்ச்சி பொங்க அவனைப் பார்த்தாள்.
கர்ப்ப காலம் எத்தனை இனிமையானது. தன் வயிற்றைத் தொட்டு பார்த்தாள் ராதா. ‘எனக்குள் இரண்டு உயிர்.’ இந்த எண்ணம் ராதாவை மெய் சிலிர்க்க வைத்தது.
“இந்த தடவை எல்லாம் நல்ல படியா இருக்குமில்லை.” என்று ராதா கலக்கத்தோடு சந்தேகமாக யதுநந்தனிடம் கேட்டாள்.
அங்கு நீந்திக் கொண்டிருந்த மீன்களை ராதாவிடம் காட்டி, “அங்குப் பார்.” என்று கூறினான் யதுநந்தன். இரு குட்டி மீன்கள் வேகமாக நீந்திக் கொண்டிருந்தது.
ராதா நம்பிக்கையோடு தலை அசைத்தாள்.
“இந்த மாதிரி நேரத்தில் நல்லதே யோசிக்கணும். எதிர்மறையான சிந்தனைகள் கூடாது. பயப்படக் கூடாது. என் ராதும்மா… எப்பொழுதும் போல் தைரியமா இருக்கனும்.” என்று அவளை தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டு கூறினான் யதுநந்தன்.
யதுநந்தன் கூறியதை காட்டிலும், அவன் குரலில் இருந்த சந்தோசம் ராதாவை கவர்ந்தது. ‘என் நந்தனின் ஏக்கத்திற்கு… என் உயிரைக் கொடுத்தேனும் முற்றுப் புள்ளி வைக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடு இறைவா.’ என்று மனதார வேண்டிக்கொண்டாள் ராதா.
அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக, “ராதும்மா…” என்று மெலிதாக அழைத்தான் யதுநந்தன். “ம்… சொல்லுங்க…” என்று ராதா அவனை விட மெலிதாக கூறினாள்.
“என்னை ஒரு முறை நந்தன்னு கூப்பிடு ராதா.” என்று அவன் கெஞ்சுதலாக கூற, ராதா ஓர் குறும்புப் புன்னகையோடு மறுப்பாகத் தலை அசைத்தாள்.
நாட்கள், மாதங்களாக மாறின.
மசக்கை ராதாவை படுத்த, ராதா அதை ரசித்து அனுபவித்தாள். யதுநந்தன் அவளைப் பாவமாக பார்த்தபடி அவளோடு சுற்றினான்.
ராதா வேலைக்குச் செல்லவில்லை. யதுநந்தன் தாமதமாக சென்று விரைவாக வீடு திரும்பினான்.
கர்ப்ப கால அவஸ்தைகள் ஒரு பெண்ணுக்கு சுகம். அதுவும் அவளை உருகி உருகிக் கவனிக்க கணவனும், உற்றாரும் இருக்க அது ஓர் பொற்காலம். காத்திருந்து பிள்ளை வரம் கிடைக்கும் பொழுது அந்த காலத்தின் மகிமையை வார்த்தைகளால் சொல்ல முடியுமா?
ராதா அதை முழுமையாக அனுபவித்தாள். யதுநந்தன் அவளோடு துணை நின்றான்.
யதுநந்தனின் தொண்டைக்கும், மனதிற்கும் இடையில் ராதாவை எண்ணி பயம் பந்தாக உருண்டோடியது. அதை வெளியே சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தான். அது ராதாவிற்கு தெரியாமலும் மறைத்தான்.
ராதாவின் வயிறு மேடிட்டு அழகாகக் காட்சி அளித்தது.
ராதா வயிற்றைத் தடவியபடி கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தாள்.
“ராதா… அத்தை அப்படிப் பார்க்க கூடாது. திருஷ்டி ஆகிருமுன்னு சொன்னாங்க.” என்று யதுநந்தன் கூற, “நீங்க எப்பொழுதிலிருந்து இதெல்லாம் நம்ப ஆரம்பித்தீங்க?” என்று ராதா கேலியாக கேட்டாள்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.” என்று யதுநந்தன் தீவிரமாக கூற, “க்ளுக்…” என்ற துள்ளலோடு ராதாவின் வயிறு ஒரு பக்கமாக சற்று வீங்கித் தெரிந்தது.
ராதா ஆனந்த கூச்சலோடு, யதுநந்தனின் கையை பற்றி அவள் வயிற்றின் மீது வைத்தாள்.
யதுநந்தனின் கைகள் சில்லிட்டு நடுங்கியது. ராதாவின் வயிற்றில் தெரிந்த அசைவை யதுநந்தன் உணர்ந்தான்.
யதுநந்தனின் நடுக்கத்தைக் குறைத்து, அவனை வேறு உலகத்திற்குச் சஞ்சரிக்க செய்தது அந்த அசைவு. யதுநந்தனின் பயம் மறைந்து, எதிர்பார்ப்பு கூடியது.
50:50 சரிபாதியாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் உலகத்தில், இன்னும் இரு ஜீவன்கள் வரப்போவதை அவனுக்கு உணர்த்தியது அந்த அசைவு.
“தேங்க்ஸ் ராதா.” என்று உணர்ச்சி பொங்க கூறினான் யதுநந்தன்.
“அது சரி… உங்க தேங்க்ஸ் நீங்களே வச்சிக்கோங்க. இரண்டு பையன் பெயர். இரண்டு பெண் பெயர் செலக்ட் பண்ணனும்.” என்று ராதா கூறினாள்.
“அப்புறம் பார்த்துக்கலாம் ராதா.” என்று யதுநந்தன் பொறுமையாக கூறினான்.
மாதங்கள் உருண்டோடின… ராதாவை சரியான நேரத்தில் செக் அப் அழைத்துச் சென்றான் யதுநந்தன்.
ராதா தூக்கத்தில் விழித்து, எழுந்து அமர, “என்னாச்சு ராதும்மா?” என்று அக்கறையாக விசாரித்தான் யதுநந்தன்.
“குழந்தைங்க அம்மா மாதிரி இல்லை. அப்பா மாதிரி சேட்டை… வயிற்றுக்குள் பூட் பால் விளையாடுவது போல் இருக்கு.” என்று ராதா பெருமிதத்தோடு கூற யதுநந்தன் பெருமையாக சிரித்தான்.
இரவில் படுக்க முடியாமல், ராதா தூக்கம் கலைந்து சிரமப்பட யதுநந்தனும் விழித்திருந்தான்.
“ஏங்க… நான் முழித்திருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கு. நீங்க ஏன் முழிச்சிருக்கீங்க?” என்று யதுநந்தனின் முகம் பார்த்து சோர்வாகக் கேட்டாள் ராதா.
யதுநந்தன் ராதவை பார்த்து,
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
என்று குறும்பு கொப்பளிக்க பாடினான்.
“எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்… குழந்தைங்க வந்த உடன்… நீங்க ஆளை மாத்திருவீங்க…” என்று போலி கோபத்தோடு ராதா கூற, யதுநந்தன் தலை அசைத்துப் புன்னகைத்தான்.
ராதா ஆசையாக எதிர்பார்த்த, வளைகாப்பு நாளும் வந்தது. ராதாவின் ஆசைப்படி, யதுநந்தன் அவளுக்காக விமரிசையாக வளைகாப்பு ஏற்பாடு செய்திருந்தான்.
இரு கன்னத்திலும் சந்தனத்தோடும், மேடிட்ட வயிரோடும்… பட்டு சேலை உடுத்தி… அனைவரும் அணிந்த வளையல்களோடு அமர்ந்திருந்த ராதாவை யதுநந்தன் கண் அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ராதா அவனைப் புன்னகையோடு பெருமிதமாக பார்க்க, அவர்கள் கடந்து வந்த கடினமான பாதை அவர்கள் இருவருக்கும் நினைவில்லை. வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்து அனைவரும் கிளம்பினர்.
ராதவை அவள் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராகும் பொழுது, ராதாவின் முகம் சுருங்கியது.
அவள் முகமாற்றத்தை கவனித்து அனைவரும் அருகே செல்ல, “அம்மா… ஏதோ ஒரு மாதிரி இருக்கு.” என்று ராதா கூற, “இன்னும் நாள் இருக்கே…” என்று யோசனையாக சித்ரா கூறினாள்.
‘வலி வருவதற்கு முன் அட்மிட் செய்ய வேண்டும். ‘ என்று மருத்துவர் கூறியது நினைவு வர யதுநந்தனின் பதட்டம் அதிகரித்தது.
ராதாவின் முகத்தில் வலிக்கான அறிகுறிகள் தெரிய, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ராதாவை உள்ளே அழைத்துச் சென்றனர். ராதாவின் வலி அதிகரிக்க, ராதா சுற்றுப்புற நினைவுகளை மறந்து வேறு உலகத்திற்குச் சஞ்சரித்து கொண்டிருந்தாள்.
சற்று பயத்தோடும் அதீத ஆர்வத்தோடும் ராதாவின் குடும்பம் காத்திருந்தது.
யதுநந்தனின் சந்தோசம், அவன் எதிர்பார்ப்பு அத்தனையும் மறைந்து ராதாவின் வலி நிறைந்த முகம் அவனை மனதை ஆக்கிரமித்தது. அவன் பயம் அதிகரித்தது.
அவன் உள்ளம் ராதாவிற்காக வேண்டிக் கொண்டது.




