அத்தியாயம் ஒன்று
“பயணிகளின் அன்பான கவனத்திற்கு… சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் வண்டி எண் 11042 மும்பை எக்ஸ்ப்ரெஸ் இன்னும் சிறிது நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாராக இருக்கிறது…”
ஒலிபெருக்கியில் அறிவிக்கபட்டு கொண்டு இருந்தது! ஈ போல் மொய்த்த மக்களை தன்னுள்ளே உள்வாங்கி கொண்டு இருந்தது அந்த ரயில்! எத்தனை முகங்கள்! அதில் எத்தனை நிறங்கள்! எத்தனை குணங்கள்! அத்தனை பேரும் ஒரே ரயிலில் பயணிக்க போகின்றனர்! இது ஒன்று தான் இவர்களின் இப்போதைய ஒற்றுமை! இதில் நல்லவர்களும் இருக்கலாம்! வல்லவர்களும் இருக்கலாம்! அனைத்து முகங்களையும் பார்த்து கொண்டு, அத்தனைக்கும் மௌன சாட்சியாக சலனமில்லாமல் இருக்கும் மகான் இந்த ரயில் நிலையம்!
***
“அப்பா… நான் கண்டிப்பா இந்த வேலைக்கு போய்த்தான் ஆகணுமா? ஏன்ப்பா என்னை இப்படி கொடுமைப்படுத்துற?” தன் அப்பாவிடம் சிணுங்கி கொண்டிருந்தாள்!
அவள் அஞ்சலி!
இளங்கலை பொறியியல் முடித்த அழகு புயல்! அந்த இருபத்தொரு வயது புயல் மையம் கொண்டிருப்பது பெசன்ட் நகர்!
அந்த புயலின் தாக்குதலுக்கு பயந்து அவளது அப்பார்ட்மென்ட் பக்கம் இருக்கும் இளைய தளபதிகளும் வீர தமிழர்களும் இடம் பெயர்ந்து விட்டதாக கேள்வி!
“ஆள் சூப்பரா இருக்கறாங்கறதுக்காக அவ பண்ற கொடுமைய எவன் தாங்குவான்! அது பொண்ணே இல்ல பிசாசு…” என்று கூறி பின்னங்கால் இடற ஓடியவர்கள் ஏராளம்!
அந்த பிசாசை பெற்ற மகானுபாவர் தான் நம் சிவதாணு மங்களம்! இதென்ன இப்படி பெயர் என்று குழம்புபவர்கள் கவனிக்க! நம்மூர் கிராமங்களில் குழந்தை அதிகம் பிறந்து விட்டால்… ஆண் என்றால் ‘மங்களம்’ என்றும் பெண் என்றால் ‘போதும் பொண்ணு’ என்று பெயரிடுவது வழக்கம்… இயற்கை குடும்ப கட்டுப்பாடாம்! சிவதாணு ஏழாவது புத்திர செல்வம் அவரது தாய்க்கு! ஆனால் அதன் பின்னும் மங்களம் பாடாமல் ஒரு பெண் பிறந்தது வேறு விஷயம்!
“கண்டிப்பா போயே தான் ஆகணும் கண்ணா! நீ இங்க இருந்துட்டு அக்கம்பக்கத்துல வம்பிழுக்கறதும் போதும்… நாங்க பஞ்சாயத்து பேசி பேசி எங்க தொண்டை காய்ந்து போறதும் போதும்… மரியாதையா மும்பைல போய் இந்த வேலைய பாரு!”
மிக கறாராக கூறினாலும் அவருக்குமே உள்ளுக்குள் பயம் இருந்துகொண்டுதானிருந்தது… வயதுக்கு உரிய தன்மை இல்லாமல்… எப்போதும் சிறு பிள்ளைகளோடு ஜோடி சேர்ந்து கொண்டு அதக்கள படுத்தி கொண்டு… வாழ்க்கையின் நெளிவு சுளிவு அறியாத பிள்ளையாக இருக்கிறாளே என்று தினமும் மனதுக்குள் புலம்புவார்… அவரது மனைவி வாய் விட்டு புலம்புவார்… பெங்களூரில் வேலையில் சேர்ந்தாலும் உடனே அதை கடாசிவிட்டு வந்துவிடும் திறமை படைத்தவளை ரொம்பவும் யோசித்து மும்பைக்கு மூட்டை கட்டியிருந்தார் நமது மங்களம்! முன்னரே வேலை செய்யுமிடத்தையும் ஹாஸ்டலையும் பார்த்து விட்டு பூரண திருப்தியான பின்னரே அஞ்சலியை அங்கு துரத்தி கொண்டிருக்கிறார்…
“அப்பா ப்ளீஸ்… நான் உன் செல்ல புஜ்ஜிமா இல்ல… இன்னொரு தடவ திங்க் பண்ணுப்பா… நான் இனிமே அந்த ராகவ், வைஷு, ஷாஷு, மிக்கி கூட சேர மாட்டேன்ப்பா… ப்ளீஸ்ப்பா…”
சிவதாணு மங்களம் தலையில் அடித்து கொண்டார்!
“அந்த பொடுசுங்க கூட சேர மாட்டேன்னு ஒவ்வொரு தடவையும் தான் சொல்ற அஞ்சு… ஆனா அத நம்பி நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்னா அவ்ளோதான்… அதுங்க கூட சேர்ந்து நீ பண்ற அதகளத்துக்கு பயந்துட்டே தான் உன்னை இப்போ அனுப்பறேன்… போம்மா தாயே… போய்… ஒழுங்கா வேலை பாரு!” மகளின் கெஞ்சலை பார்த்து மனம் இறங்கினாலும் வீட்டில் தினமும் காத்திருக்கும் பஞ்சாயத்துக்கள் அவரது நினைவில் வந்து அவரது மனதை அடக்கு அடக்கு என்று அடக்கியது.
“நான் வேணும்னா சென்னைலையே சின்சியரா வேலை பாக்குறேன்ப்பா… இங்க எத்தனை கம்பனில வொர்க் பண்ணி இருக்கேன்… ப்ளீஸ்ப்பா!” அப்பாவியாக கூறியவளை என்னதான் செய்வது என்று அவருக்கு புரியவில்லை.
“ஹாஆஆ… உன் வாயாலேயே ஒத்துகிட்டயா! ஒழுங்கா ரெண்டு மாசம் ஒரு கம்பனிக்கு போய் இருக்கியா? ஆறு மாசத்துல நாலு கம்பெனி மாறிட்ட… ஏதாவது ஒரு சாக்கு… வீட்லேயே வம்பு வளத்துட்டு இருக்கணும்! சாப்பிட்டுட்டு தூங்கிட்டு எதாச்சும் மாப்பிள்ளை வந்தா காளியாத்தா மாதிரி ஆடி வர்றவன துரத்தி விட்டுட்டு… கொஞ்ச நாள் தனியா ஹாஸ்டல இருந்தா தான் உனக்கு பொறுப்பு வரும்! மேல படின்னு சொன்னாலும் கேக்க மாட்ட… சோம்பேறி கழுதைன்னு உங்க அம்மா உன்னை திட்றதுல தப்பே இல்ல கண்ணா!… மாப்பிள்ளை பார்த்துட்டு சொல்றேன் அப்போ நீ வந்தா போதும்…” சிரித்து கொண்டே அவர் கூற அதை கேட்டு கொலைவெறியானாள் அஞ்சலி.
“அப்பா… நீ ஹாஸ்டல்ல வேணும்னா இருக்க சொல்லு… ஆனா என்னை கேக்காம எவனையாச்சும் மாப்பிள்ளையா புக் பண்ண… அப்புறம் சென்னை வரவே மாட்டேன்… மும்பைல இருந்து எஸ்கேப் ஆகிடுவேன்…” ஒற்றை விரலை உயர்த்தி அவளது தந்தையை மிரட்டி கொண்டிருப்பதை அவர்களை கடந்து செல்பவர்கள் நின்று கவனித்து விட்டு சென்றனர்… சின்ன சிரிப்போடு!
“ஷப்பா… நிம்மதி… எப்போ கண்ணா அந்த வேலைய பண்ண போற? அப்படியாச்சும் அப்பாக்கு நிம்மதிய தேடி தாடா!” என்று சிரிக்காமல் சிவதாணு சொல்ல
“அப்பாஆஆஆ… உன் கூட கா… என் கூட பேசாதப்பா!” மிகவும் எரிச்சலாக சொன்னவளிடம்.
“சரிடா குட்டி!” என்று சிரித்து கொண்டே சொன்னார்!
“அப்பா… அங்க இட்லியே கிடைக்காதுப்பா… வர வரன்னு அந்த சப்பாத்திய எப்படிப்பா சாப்பிடுவேன்?” மூக்கை சிந்தியவளை பார்க்கும் போதே சிரிப்பு வந்தது அவருக்கு.
“ஓ… சென்டிமென்டலா தாக்குறியா? இதுக்கெல்லாம் அசர மாட்டேன்டா! இதெல்லாம் ஒரு பிரச்சனையா… எல்லாத்தையும் சமாளிச்சு பழகுடா… பொண்ணுங்களுக்கு எல்லா பிரச்சனையும் சமாளிக்க தெரியணும்… கொஞ்ச நாள் இந்த அனுபவம் உனக்கு வேணும் புஜ்ஜிம்மா… தைரியம் வேணும்…”
“அப்பா… எனக்கு தைரியம் எல்லாம் நிறைய இருக்குப்பா…” விரைவாக வந்து விழுந்தன வார்த்தைகள்!
“ஆமா… இல்லைன்னு யாரு அஞ்சு சொன்னது? அந்த வானர படையோட சேர்ந்து கிரிகெட் ஆடி அக்கம் பக்கத்து வீட்டு ஜன்னல எல்லாம் உடைக்கறதுல இருந்தே தெரியாதா? அன்னைக்கு பக்கத்து பிளாட் சேஷகோபாலனோட மண்டைய உடைச்ச வீராங்கனையாச்சே நீ…” அவளது வீர தீர பராக்கிரமங்களை பட்டியலிட ஆரம்பித்தார்.
“அப்பா அந்த ஆள் ஒரு லூசுப்பா… இத்தனை வயசாகியும் சைட் அடிச்சுகிட்டு பராக்கு பாத்துகிட்டு வந்தா பால் படாம என்னப்பா ஆகும்?” ஆஹா இவளல்லவா நியாயவாதி!
“சரி… அந்த கார்னர் பிளாட் பையன் கார்த்திக்க கண்ண கட்டி எல்லாருமா சேத்துல தள்ளி விட்டீங்களே அது என்ன தங்கம்… இப்படியெல்லாம் நீ ரவுடிதனம் பண்றதுக்கு முடியாதுன்னு தானே மும்பை போக மாட்டேங்கற?” அவளது உள்மன கிடக்கையை அலட்டாமல் வெளிப்படுத்திய தந்தையை பரிதாபப்பார்வை பார்த்து.
“அப்பா… அந்த பேக்கு என் கிட்ட ஐ லவ் யூ சொன்னான்பா… அதான் அந்த ட்ரீட்மென்ட்… அம்மா கிட்ட சொல்லிடாதப்பா… ப்ளீஸ்” என்றாள் ரகசிய குரலில்!
“அட கடவுளே… இதுக்கு தான் நான் உன்னை மும்பை அனுப்பறதே… இப்படி சின்ன பொண்ணாவே இருக்கியே அஞ்சலி! நீ இழுத்து வெச்ச ஏழரையெல்லாம் போதும்… ஒழுங்கா மும்பைய பார்த்து போ” என்று கறாராக சிவதாணு சொல்லவும்
“நீ என் அப்பாவே இல்லப்பா… நான் உன்னை டைவர்ஸ் பண்ணிட்டேன்… இனிமே என் கிட்ட பேசவே பேசாத…” என்று எரிச்சலாக சொல்லி விட்டு வெடுக்கென்று பையை பிடுங்கி கொண்டு போனாள்…
தினம் தன்னை பத்து முறை டைவர்ஸ் செய்வது அவளது வாடிக்கை என்பதால் அவளின் அந்த சிறுபிள்ளைதனத்தை நினைத்து சிரித்து கொண்டார்… எப்படி இருந்தாலும் முயல்குட்டி போல் தன் பெற்றோரையே சுற்றி வரும் அஞ்சலியை பார்க்கும் போது பாசம் மேலிட்டாலும் இவள் இப்படியே இருந்தால் உலக அனுபவம் பெறுவதெப்படி? நல்ல வரனாக பார்த்து தான் திருமணம் செய்து வைப்போம் என்றாலும் அவளே சுயமாக நிற்க தெரிய வேண்டாமா? நாளை கணவன் வீட்டில் ஏதாவது கஷ்டம் என்றாலும் சமாளிக்கும் திறமை வேண்டுமே… மின்சார வாரியத்தில் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தன்னால் முடிந்த அளவு தானே செய்ய முடியும்… தன் பேத்தியை மும்பை அனுப்பவே மாட்டேன் என்று அடம் பிடித்த தாயையும் தன் மனைவியையும் சமாளித்து இதோ இங்கே வந்து விட்டார்!
“டேய் குட்டி… கோபத்துல கம்பார்ட்மென்ட் மாறி ஏறிடாத? ஏசி டூ டையர் டா… 2A16”
“ம்ம்ம்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… என்னை நாடு கடத்துற இல்ல… போ… உன் கட்சி கா…”
தலையை சிலுப்பி கொண்டு அந்த பெட்டியில் ஏறினாள்! ஏன் இன்னும் அவன் வரவில்லை என்று கவலையாக வழியை பார்த்து கொண்டிருந்தார் சிவதாணு… இன்னமும் ஐந்து நிமிடங்கள் தானே இருக்கிறது… அதற்குள் வர வேண்டுமே என்று கடிகாரத்தையும் பயணிகள் வரும் வழியையும் பார்த்து கொண்டே இருக்க… இவை அனைத்தையும் மௌன சிரிப்போடு பார்த்து ரசித்து கொண்டிருந்தன இரண்டு கண்கள்!
***
ரயில் கிளம்பும் முன் தன் உதவியாளரிடம் பேசி கொண்டு இருந்தான் அர்ஜுன்!
அர்ஜுன் வானமாமலை!
உள்நாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிகம் என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து இருக்கும் விக்டரி க்ரூப்ஸ் எம்டி! இவர்கள் தொட்டு பார்க்காத துறையோ உயரமோ இல்லை எனலாம்… மளிகையில் இருந்து கம்ப்யுட்டர் வரை… ஹோட்டல்கள்… மருத்துவமனைகள் இப்போது புதியதாக செல்பேசி சேவை வரை! மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் யூனிட்களை குறைந்த விலையில் வாங்கி அதை மிகவும் லாபகரமாக மாற்றி அதை நூறு பங்கு லாபத்துக்கு விற்பது இவர்களின் கை வந்த கலை… தன் தந்தை ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டை மிகவும் ரசித்து செய்பவன்!
ஓய்வே இல்லாமல் உழைப்பதில் தன் தந்தையை கொண்டிருக்கும் இவனுக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணங்கள்! வேலை பளு அழுத்தும் போது மற்றவர்கள் வேறு எதையெல்லாமோ தேர்ந்தெடுக்க இவன் தேர்ந்தெடுப்பது நீண்ட ரயில் பயணத்தைதான்… தன் தந்தை வானமாமலையிடம் பொறுப்புக்களை ஒப்புவித்து விட்டு எந்த பிக்கல் பிடுங்கலும் வைத்து கொள்ளாமல் அமைதியாக செல்லும் இந்த பயணங்களை மிகவும் ரசிக்கும் எளிமை விரும்பி! இப்போது செல்வது மும்பையில் இருக்கும் தனது செல்பேசி சேவை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு! ஜீன்ஸ் டி சர்ட்டில் கலக்கலாக இருந்தவனை பார்க்காத பெண்கள் குறைவு! வயது இருபத்து எட்டு! ஆறடி உயரம் அதற்கேற்ற பருமன்! அவனது கட்டான உடல் அவனது தினசரி பயிற்சியை கூற… அவனது மாநிறம் ஒரு விதமான வசீகரத்தை கொடுத்தது! கண்களில் கூர்மை ப்ளஸ் குறும்பு! இதழ்களில் எப்போதும் ஒட்டிகொண்டிருக்கும் சிறு புன்னகை.
“சார்… ஆனா பர்ஸ்ட் ஏசி கிடைக்கல… டூ டயர்ல தான் கன்பார்ம் ஆகி இருக்கு…” தயக்கமாக அர்ஜுனின் நேரடி உதவியாளரான கௌஷிக் கூற.
“பரவால்ல கௌஷிக்… இட்ஸ் ஓகே… நான் பார்த்துக்கறேன்!” அலட்டலே இல்லாத குரலில் இயல்பாக கூறியவனை வியப்பாக பார்த்தான் கௌஷிக்… அவன் புதியதாக உதவியாளராகி இருப்பவன்… ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் பெரிய அளவில் அலட்டி கொள்வதை பார்த்தவன்… அர்ஜுனின் தன்மையான இயல்பு அவனை வசீகரித்தது!
“சார்… ஒய் டோன்ட் யூ டேக் பிளைட்?”
“இட்ஸ் போரிங் கௌஷிக்… பார் அ சேஞ்ச் ட்ரெயின்ல போலாமே… இட் வில் பீ பெட்டர்” தோள்களை குலுக்கி கொண்டான்!
“ஓகே சார்! டேக் கேர்…” கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தான் கௌஷிக்!
“ஓகே கௌஷிக்… மும்பை போயிட்டு உனக்கு கால் பண்றேன்… அங்க ராஜேஷ் பாலோ பண்ணிக்குவார்… பை… சீ யூ…” அவனது முதுகில் ஆதரவாக தட்டி கொடுத்து விட்டு கிளம்பினான்!
“ஓகே சார்… பை!”
கௌஷிக்கிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அவனது கண்கள் அஞ்சலியை அளவெடுத்து கொண்டிருக்க அவள் தனது தந்தையிடம் நடத்தி கொண்டிருந்த வாக்குவாதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது! ரசனையாக பார்த்து கொண்டிருந்தவன் அவளும் அதே பெட்டியில் சிவதானுவிடம் கோபித்து கொண்டு ஏற அர்ஜுன் அவளை தொடர்ந்தான்!
***
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு சசி… கொஞ்ச நாள் வெயிட் பண்ணி இருக்கலாமோன்னு தோணுது…”
சசிதரனிடம் புலம்பி கொண்டு இருந்தவள் மேகா! சென்னையில் முக்கியமான தொழிலதிபர் கணபதியின் ஒரே செல்ல மகள்! அவரது அனைத்து சொத்திற்கும் வாரிசான பத்தொன்பது வயது பனி சிற்பம்! கடல் போல் சொத்துக்கள் இருந்தாலும் சென்னையின் நவீனங்களில் உள்செல்ல விரும்பாத அவளது தன்மை அவளை தனிதன்மையோடு காட்ட… அதிகம் பேசாத தன்மை நட்புக்களை அளவோடு நிறுத்தியது!
பொறியியல் இரண்டாமாண்டில் படிக்கும் போது சசிதரனிடம் மனதை பறிகொடுக்க… அதை தனது வீட்டில் சொல்வதற்கு பயந்து கொண்டு இருந்தபோது சசிதரனின் நண்பர்கள் குடுத்த யோசனை தான் இது!
சசிதரன் மும்பையை சேர்ந்தவன்! இருவரும் அங்கே போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நண்பர் குழாம் யோசனை கூற மிகவும் தயங்கினாள்! ஆனால் சசியின் பெற்றோரே அவளிடம் பேசி இருவரையும் மும்பை வர சொல்ல… மனதில் தைரியம் பிறந்தது… ஆக இதோ கிளம்பி விட்டாள்! ஆனாலும் அவளுக்கு மனது உறுத்தாமல் இல்லை!
பெற்றோரை விட்டு தனியே இப்படி திருமணம் செய்ய வந்துதிருப்பது எவ்வளவு தூரம் சரி என்று கூறமுடியவில்லை! ஆனாலும் என்ன செய்வது? வீட்டில் தாயோ தந்தையோ இருந்துதிருந்தால் ஏதாவது பேசி இருக்கலாமோ? தொழில் என்று ஓடும் தந்தை… கிளப், சமூக சேவை என்று ஓடும் தாய்! இருவரும் சேர்ந்து இருந்தால் தானே? தான் உறங்கிய பின் தான் அவர்களுக்கு விடியும்… பார்ட்டி களைகட்டும்! ஆனால் பாட்டியிடம் வளர்ந்த மேகாவுக்கு அவைகளில் நாட்டம் இல்லை!
அப்போது அறிமுகமானவன் தான் சசிதரன்!
அவனது தந்தைக்கும் இவளது தந்தைக்கும் வியாபாரத்தில் ஏதோ தொடர்பு… பார்ட்டியில் பிரியமே இல்லாமல் அமர்ந்து இருந்தவளுக்கு துணையாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்… பின்னர் பழக பழக நட்பு காதலானது வெறும் இரண்டே மாதத்தில்! அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கி கொண்டிருந்த மனதுக்கு பாலைவனத்தில் கற்பக விருட்சமாக சசிதரன் தெரிந்தான்! கடவுள் தன்னை எப்போதும் கைவிட மாட்டார் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தாள்!
“ஹேய்… ஏன் மேகி இப்படி நினைக்கிற? நமக்கு கல்யாணம் ஆகிட்டா உங்க அப்பாவால ஒன்னும் பண்ண முடியாது… அதுக்கு தானே இப்போ மும்பை போறோம்… நம்ம அம்மா அப்பா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்கடா… டோன்ட் வொர்ரி! ஓகே பேபி!” கன்னத்தை தட்டி அவன் கூற
“இல்ல சசி… அப்பா கிட்ட ஒரு தடவையாவது டிஸ்கஸ் பண்ணி இருக்கலாமோன்னு தோணுது! இப்போவும் ஒன்னும் கெட்டு போய்டல… வாங்க சசி நாம திரும்பி போய்டலாம்…” கண்களில் கலக்கமும் கண்ணீரும் சூழ அவனிடம் கெஞ்சினாள் மேகா!
“நீ இப்போ திரும்பி போறதுக்கு என்னோட காதலையும் சேர்ந்து மறந்துட்டு போய்டு…” கல்லாக இறுகிய குரலில் அவன் கூற
“ஏன் சசி இப்படி சொல்றீங்க…” மேகாவின் குரல் கம்மியது.
“பின்ன என்ன மேகி… இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தாச்சு… முடிவுன்னு ஒன்னு எடுத்தாச்சு… அதுல ஸ்ட்ராங்கா நிற்காம… இப்படி பயந்துட்டு இருந்தா எப்படி செல்லம்?” வார்த்தைகள் செல்லம் கொஞ்சினாலும் குரலில் இறுக்கம் சூழ்ந்திருந்தது!
“சரி… நீங்க சொல்ற மாதிரியே செய்வோம்…” கடவுளை வேண்டியபடியே அவனிடம் தெரிவிக்க
“குட் கேர்ள்… எங்க சிரி…” தாடையை பற்றி செல்லமாக ஆட்டியபடியே அவன் சிரிக்க… அவளும் மிகவும் சிரமப்பட்டு புன்னகைக்க முயன்றான்!
“இப்போ தான் நீ என் மேகி… ஓகே கெட் இன் டு த ட்ரெயின்… நம்ம சீட் 2A 15 அன்ட் 2A 17!”
***
அவசர அவசரமாக ஓடி வந்து ஏறினான் அந்த நெடியவன்! நல்ல உயரம்… அதற்கேற்ற உடலமைப்பு… அவனது நிறமும் பிரெஞ்சு தாடியும் அவனது கவர்ச்சியை தூக்கி காட்ட… பெர்முடாசும் டீ சர்ட்டும் அணிந்திருந்த விதம் அவனை மற்ற பெண்கள் திரும்பி பார்க்க வைத்தது! உடன் வந்த நண்பனிடம் கை குடுத்து
“பை டா மச்சி… மும்பை போனவுடனே போன் பண்றேன்…” அவசரமாக மொழிந்து விட்டு ட்ரெயினில் ஏறினான்!
“ஓகே பை… டேக் கேர் டா…” கையசைத்து விட்டு அந்த நண்பன் கிளம்பவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது!
அவசராமாக ஓடி வந்து ஏறியவன்… நம் நாயகன் கௌதம்!
மாடலிங் கோஆர்டினேட்டர்! மாடல் அழகிகளை மேடையில் பூனை நடை நடக்க வைப்பவன்! எதை பற்றியும் கவலை படாமல் தன் வாழ்க்கையையும் தனது தொழிலையும் மிகவும் நேசிப்பவன்! யதார்த்தவாதி! வயது இருபத்து எட்டு… வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன்! காதலில் நம்பிக்கை இல்லாததால் திருமணத்தை பற்றி சிறிதும் நினைத்து பார்க்காத… அழகை ஆராதிக்கும் மாடர்ன் ஞானி!
தன்னுடைய 2A 18 தேடி கண்டு பிடித்து அமரும் போது இரண்டு குரல்கள்!
“ஹேய்… கௌதம்!”
“டேய்… கௌதம் அண்ணா…”





